World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

Sri Lankan government reaches deal with the chauvinist JVP

இலங்கை அரசாங்கம் பேரினவாத ஜே.வி.பி.யுடன் ஒரு கொடுக்கல் வாங்கலுக்கு சென்றுள்ளது

By K. Ratnayake
5 September 2001

Use this version to print

தனது ஆட்டங்கண்ட அரசாங்கத்தை காக்கும் ஒரு இறுதிக் கட்ட முயற்சியாக இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஜே.வி.பி.யுடன் (ஜனதா விமுக்தி பெரமுன) ஒரு உடன்படிக்கை செய்து கொண்டுள்ளார். இக்கட்சி அனைத்துலக, தேசிய பத்திரிகைகளில் "மார்க்சிஸ்ட்" கட்சியாக குறிப்பிடப்படுவது வழக்கமாக இருந்து வந்த போதிலும் உண்மையில் இது சிங்கள பேரினவாதத்துள் அடியோடு ஆழ வேரூன்றிய ஒரு அமைப்பாகும். இந்த ஏற்பாடுகளின் ஒரு பாகமாக ஆளும் பொதுஜன முன்னணி (PA), அதிகாரப் பரவலாக்கல் பொதியையும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுடனான (LTTE) பேச்சுவார்த்தை திட்டங்களையும் ஓராண்டு பின்தள்ளிப் போட இணங்கிக் கொண்டுள்ளது.

கடந்த யூலையில் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் (SLMC) ஆளும் கூட்டரசாங்கத்தில் இருந்து பிரிந்து சென்றதால் பொதுஜன முன்னணி தனது பாராளுமன்றப் பெரும்பான்மையை இழந்தது. பாராளுமன்றத்தில் தோல்வி நிச்சயமாகிவிட்ட ஒரு நிலையில் குமாரதுங்க யூலை 10ம் திகதி பாராளுமன்றத்தை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைத்ததோடு அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக ஒரு தெளிவற்ற கருத்துக் கணிப்பை நடாத்துவதாகவும் அறிவித்தார். பெரும் வர்த்தக சமூகத்தின் சில பகுதியினர் பொதுஜன முன்னணி வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) சேர்ந்து தேசிய ஐக்கியத்துக்கான அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனக் கோரினர். நீண்ட உள்நாட்டு யுத்தத்துக்கு முடிவு கட்டவும் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலைத் திணிக்கவும் இது அவசியம் எனக் கண்டனர்.

எவ்வாறெனினும் யூ.என்.பி.யுடனான பேச்சுவார்த்தைகள் ஆகஸ்ட் 28ம் திகதி முடிவடைந்தது. செப்டம்பர் 7ம் திகதி பாராளுமன்றத்தை கூட்டும் நிலையிலும் எதிர்க் கட்சியினரின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர் கொண்டுள்ள நிலையிலும் அரசாங்கம் தனது பாராளுமன்ற அந்தஸ்துக்கு முட்டுக் கொடுக்கும் விதத்தில் ஜே.வி.பி.யுடன் ஒரு ஏற்பாட்டை செய்து கொண்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 50 வது ஆண்டு நிறைவு விழா கூட்டத்தில் பேசிய குமாரதுங்க நாட்டுக்கு உழைக்கும் பொருட்டு பேயுடன் உடன்படிக்கை செய்து கொள்ளவும் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஒரு நான்கு மணித்தியால நீண்ட பேச்சுவார்த்தையில் உடன்படிக்கைக்கான அடிப்படைகள் பேசித் தீர்மானிக்கப்பட்டன. பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயக ஜே.வி.பி.யின் ஓராண்டு கால "தகுதிகாண் அரசாங்கத்துக்கான" பிரேரணையை கொள்கை ரீதியில் ஏற்றுக் கொண்டார். குமாரதுங்க ஞாயிறு நள்ளிரவில் ஜே.வி.பி. நிபந்தனைகளின் பேரில் தனது பிளவுபட்ட அமைச்சரவையினதும் பாராளுமன்ற குழுவினதும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டார்.

ஜே.வி.பி.யின் நிபந்தனைகளுள் அரசியலமைப்பு கருத்துக் கணிப்பை இரத்துச் செய்வதும் அடங்கும். இதனை முன்னர் குமாரதுங்க அக்டோபர் 18ம் திகதிக்கு ஒத்திப் போட்டிருந்தார். பாராளுமன்றத்தை முன் கூட்டி கூட்டும் நடவடிக்கை இப்போது செப்டம்பர் 7ம் திகதியன்றி செப்டம்பர் 6ல் இடம்பெறவுள்ளது.

பத்திரிகை அறிக்கைகளின்படி அரசாங்கமும் ஜே.வி.பி. தலைவர்களும் இப்போது புரிந்துணர்வு அறிக்கையை (MOU) தயார் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இது ஜே.வி.பி.யின் கோரிக்கைகள் பலதையும் உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் அதிகாரப் பகிர்வு பொதியை ஓராண்டுக்கு ஒதுக்கித் தள்ளுதல் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையை கைவிடுதல் என்பனவும் அடங்கும். இத்துடன் அரசாங்க கல்வியை தனியார்மயமாக்கும் திட்டத்தை ஓராண்டில் தள்ளிப் போடுவதும் அடங்கிக் கொண்டுள்ளது. அத்துடன் ஜே.வி.பி. பொலிஸ், அரசாங்க சேவை, நீதித்துறை, தொடர்புச் சாதனங்கள் என்பவற்றை கண்காணிப்பதற்கான ஐந்து சுதந்திர ஆணைக்குழுக்களை நியமனம் செய்யும்படியும் கோரியுள்ளது. அமைச்சரவையின் எண்ணிக்கையை 20 அமைச்சர்களால் கட்டுப்படுத்துவதும் இவற்றில் அடங்கும்.

இந்த உடன்படிக்கை எந்த ஒரு கணத்திலும் சிதறுண்டு போகக் கூடிய ஒரு தற்காலிக ஏற்பாடாகும். சமீபகாலம் வரை ஜே.வி.பி, குமாரதுங்க நாட்டை விடுதலைப் புலிகளிடம் காட்டிக் கொடுத்து வருவதாக குற்றம் சாட்டி வந்தது. ஊழலையும் வேலையின்மையையும் விலைவாசி உயர்வையும் ஏற்படுத்துவதாகவும் பன்நாட்டு கம்பனிகளிடம் "நாட்டை விற்றுத்தள்ளுவதாகவும்" குற்றம் சாட்டியது. மறுபுறத்தில் பொதுஜன முன்னணி ஜே.வி.பி.யின் கடந்த கால கொலைகார நடவடிக்கைகளுக்காக அதைக் கண்டனம் செய்தது. குமாரதுங்கவின் கணவரான விஜய குமாரதுங்க உட்பட பலரின் கொலைகளுக்காக ஜே.வி.பி.யை அது குற்றம் சாட்டியது.

ஜே.வி.பி.யுடனான உடன்படிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (LTTE) சமாதானப் பேச்சுவார்த்தை நடாத்தும்படியும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கோரிக்கைகளை அமுல் செய்யும்படியும் கோரும் பெரும் வர்த்தக நிறுவனங்களதும் பெரும் வல்லரசுகளதும் கோரிக்கைகளை நேராக ஊடறுத்துச் செல்வது பெரிதும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆண்டில் ச.நா.நி.யின் உடன்படிக்கையின் கீழ் கைச்சாத்தான உடன்பாட்டு சரத்துக்களின் கீழ் அரசாங்கம் 275 மில்லியன் டொலர்களாக கடனை அதிகரிக்க தனியார்மயத்தில் இறங்கியாக வேண்டும். இந்த வாக்குறுதியை அமுல் செய்வதில் காட்டப்படும் எந்த ஒரு தவறும் ச.நா.நி. கடனில் எஞ்சியுள்ள 253 மில்லியன் டொலர்களையும் அரசாங்க நிதி நிலைமையையும் பெரிதும் பாதிக்கும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) ஒரு பகுதியினர் ஜே.வி.பி.யுடனான உடன்படிக்கையை எதிர்ப்பதோடு யூ.என்.பி.யுடனான ஒழுங்குகளை ஆதரிக்கின்றனர். கட்சியின் பொதுச் செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான எஸ்.பி.திசாநாயக்கவும் ஏனைய அமைச்சரவை உறுப்பினர்களும் -ஜீ.எல்.பீரிஸ், மகிந்த விஜேசேகர- ஸ்ரீ.ல.சு.க. ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களை பகிஷ்கரித்தனர். மற்றொரு அமைச்சரான ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே பொதுஜன முன்னணி பாராளுமன்ற குழு கூட்டத்தை பகிஷ்கரிப்பதில் இவர்களுடன் சேர்ந்து கொண்டார். யூ.என்.பி. மனமுறிவுகண்ட ஸ்ரீ.ல.சு.க. தலைவர்களில் சிலரை வெற்றி கொள்ள முண்டியடித்துக் கொண்டுள்ளது. பாராளுமன்றம் மீளக் கூடும் போது தனது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றிவிட இவர்கள் துடிக்கின்றனர். எதிர்க்கட்சியினர் தாம் ஐந்து அமைச்சர்கள் உட்பட 15 அரசாங்க கட்சி அங்கத்தவர்களின் செல்வாக்கை கொண்டுள்ளதாக கூறிக் கொள்கின்றனர். இது ஜே.வி.பி.யின் 10 பாராளுமன்ற எம்.பீ.க்கள் இல்லாமலே பாராளுமன்ற பெரும்பான்மையை வழங்கும்.

எதிர்க் கட்சியுடன் வர்த்தக சமூக தலைவர்களும் தொழில்சார் நிபுணர்கள் சங்கமும் நடாத்திய ஒரு கூட்டத்தில் ஒரு ஜே.வி.பி. ஆதரவுடன் கூடிய அரசாங்கத்தின் பேரிலான தமது தயக்கங்களை ஏற்கனவே காட்டிக் கொண்டுள்ளனர். திங்கட்கிழமை வெளியான 'ஐலன்ட்' (Island) பத்திரிகையின் ஆசிரியத் தலையங்கத்தில் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரின் மனப்பான்மை தொகுத்துக் கூறப்பட்டு இருந்தது: "நாடு இருந்துகொண்டுள்ள குழப்ப நிலையில் எம்மை வெளியேற்றுவதில் இந்த தகுதிகாண் அரசாங்கம் என்ன நம்பிக்கை கொண்டுள்ளது? இந்த மார்க்சிச ஜே.வி.பி. சர்வதேச நாணய நிதியத்தினதும் உலக வங்கியினதும் நிபந்தனைகளை நிராகரிக்கின்றது. பொருளாதார உதவிக்கான எமது முக்கிய உதவி வழங்கும் நாடுகளாக உள்ள மேற்கத்தைய நாடுகளினால் பலமாக ஊக்குவிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (LTTE) பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ள இது விரும்பவில்லை..."

ஜே.வி.பி. இன் பரிணாமம்

ஜே.வி.பி, அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே சூழ்ச்சிகள் செய்வதன் மூலம் அரசியல் நிலைமையை தனது சொந்த அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கின்றது. இந்த சிங்கள தீவிரவாத அமைப்பானது இன்றைய நெருக்கடி நிலைமையில் முதலாளித்துவ ஆட்சிக்கு முண்டுகொடுக்க நம்பிக்கை வைக்க இலாயக்கானது என ஆளும் வர்க்கத்துக்கு நிரூபிக்க முயற்சிக்கின்றது.

கடந்த வாரம் வரையில் ஜே.வி.பி. எதிர்க்கட்சி கோரிக்கைகளான பாராளுமன்றத்தை காலதாமதமின்றி கூட்டுவது, கருத்துக் கணிப்பை ரத்துச் செய்வது, அரசாங்கத்துக்கு எதிரான ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றுவது என்பவற்றுக்கு ஆதரவு வழங்கியது. மறுபுறத்தில் யூ.என்.பி. பொதுஜன முன்னணி பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திவந்த வேளையிலும் கூட ஜே.வி.பி. ஆகஸ்டு 26ம் திகதி குமாரதுங்கவுடன் ஒரு கலந்துரையாடலை நடாத்தியது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதை தடை செய்வதே தமது முக்கிய அக்கறைக்குரிய விடயம் என வலியுறுத்தும் பொருட்டே அதை நடாத்தியது.

ஜே.வி.பி. ஆகஸ்டு 13ம் திகதி அமெரிக்க தூதரகத்துக்கு விஜயம் செய்து அரசியல் விவகாரச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடாத்தியது. அதைத் தொடர்ந்து தமது நிலைப்பாட்டை விளக்கும் பொருட்டு கொழும்பில் உள்ள ஜப்பானிய, அவுஸ்திரேலிய தூதரகங்களுக்கும் விஜயம் செய்தது. ஜே.வி.பி. கட்சி தலைவர்கள் தமது உள்நோக்கத்தை ஊர்ஜிதம் செய்யும் பொருட்டு பெரும் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்தனர்.

ஜே.வி.பி. 1960பதுகளில் மாஓவாதம், காஸ்ட்ரோவாதம், சிங்கள பேரினவாதம் என்பவற்றில் இருந்து பொறுக்கி எடுத்த கலவையைக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டதோடு முக்கியமாக தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக நெறிப்படுத்தப்பட்டது. 1971ல் இந்த அமைப்பு ஆயுதக் கிளர்ச்சி சாகசத்தை நடாத்தியது. இது ஸ்ரீ.ல.சு.க. -சமசமாஜ- கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கத்தினால் படுகொடூரமான முறையில் நசுக்கப்பட்டது. குமாரதுங்கவின் தாயாரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இக்கூட்டரசாங்கத்தின் தலைவியாக விளங்கினார். சுமார் 20,000 கிராமப்புற இளைஞர்கள் ஆயுதப்படைகளால் படுகொலை செய்யப்பட்டதோடு ஜே.வி.பி. தலைவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர்.

1983ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் வெடிப்புடன் ஜே.வி.பி. அதனது மார்க்சிச வார்த்தை ஜாலங்களை அதிகரித்த அளவில் குழிதோண்டிப் புதைத்தது. பேரினவாத சுலோகங்களுக்கு வெளிவெளியாக இயைந்து போயிற்று. 1987ல் தமிழீழ விடுதலைப் புலிகளை கட்டுப்பாட்டுக்குள் கொணரும் பொருட்டு யூ.என்.பி. அரசாங்கம் இந்திய சமாதானப் படைகளை தருவிக்கும் பொருட்டு இந்திய-இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. ஜே.வி.பி. இந்த உடன்படிக்கையை ஒரு காட்டிக்கொடுப்பு எனக் கண்டனம் செய்ததோடு சிங்கள நாட்டை பிளவுண்டு போகச் செய்யும் எனவும் கூறியது.

1988-1990க்கும் இடையேயான சீக்கிரம் மாற்றம் அடைந்து செல்லக் கூடிய அரசியல் நிலைமையில் ஜே.வி.பி. யூ.என்.பி. ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவுடன் ஒரு இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதோடு நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள், தொழிற்சங்க அலுவலர்கள், அரசியல் தலைவர்களையும் படுகொலை செய்தது. இவர்கள் தாய்நாட்டின் தேசாபிமான பாதுகாப்பு பிரச்சாரத்தை எதிர்த்தவர்கள் என ஜே.வி.பி. கூறியது. தொழிலாளர் வர்க்க எதிர்ப்பை நசுக்க யூ.என்.பி. ஆட்சியாளர்களுக்கு உதவிய ஜே.வி.பி. பிரேமதாசவுடன் ஒரு கூட்டு அமைக்க முயன்றது. ஜே.வி.பி.யை மட்டுமன்றி தெற்கு கிராமப்புறங்களில் இருந்த சகல எதிர்ப்பையும் நசுக்குவதை இலக்காகக் கொண்ட ஈவிரக்கமற்ற பிரச்சாரத்தில் பாதுகாப்புப் படைகள் சுமார் 60,000 இளைஞர்களை படுகொலை செய்தன.

எவ்வாறெனினும் 1994ல் குமாரதுங்க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜே.வி.பி. சட்டரீதியாக்கப்பட்டு, பிரதான அரசியல் நீரோட்டத்தினுள் மீண்டும் பிரவேசிக்க உதவி செய்யப்பட்டது. கடந்த அக்டோபரில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் இது பொதுஜன முன்னணியுடனும் யூ.என்.பி.யுடனுமான மக்களின் பரந்தளவிலான விரக்தியைப் பயன்படுத்தி இது 10 பாராளுமன்ற ஆசனங்களை வெற்றி கொள்ள முடிந்தது. நீண்ட காலத்துக்கு முன்னரே மார்க்சிசத்தின் பேரிலான நடிப்புக்களை கைவிட்ட ஜே.வி.பி. தற்சமயம் ஒரு பெரிதும் ஈடாட்டம் கண்ட அரசியல் நிலைமையினை ஸ்திரப்படுத்துவதில் ஆளும் வர்க்கத்துக்கு ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றது.

ஜே.வி.பி.யின் ஆதரவுடன் பொதுஜன முன்னணி அரசாங்கம் உயிர் பிழைக்குமா அல்லது பிழைக்காதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். பெரும் வர்த்தக நிறுவனங்களும் பெரும் வல்லரசுகளும் யூ.என்.பி.க்கும் பொதுஜன முன்னணிக்கும் இடையேயான ஒரு தேசிய அரசாங்கத்தையே பெரிதும் விரும்புகின்றனர். ஆகஸ்ட் 20ம் திகதி யூ.என்.பி. கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க வர்த்தக, கைத்தொழில் அதிபர்களின் ஒரு கூட்டத்தில் குமாரதுங்கவுடனான உடன்படிக்கையை எதிர்த்தார். அமெரிக்க தூதுவர் அஸ்லி வில்ஸ் இலங்கையில் ஒரு "உறுதியான ஆட்சி" க்கான அழைப்புடன் இருதரப்பையும் இணைத்து வைக்க தனிப்பட்ட கோதாவில் தலையிட்டார்.

யூ.என்.பி.க்கும் பொதுஜன முன்னணிக்கும் இடையேயான ஆகஸ்டு 28ம் திகதிய பேச்சுவார்த்தைகள் உடன்பாடு இல்லாமல் ஆளையாள் திட்டுவதுடன் ஏற்பட்ட இடைவெளியோடு முறிவு கண்டது. ஜனாதிபதி பிரதமரோடு "கூட்டாக" செயற்பட வேண்டும் என்ற யூ.என்.பி. பிரேரணையை பொதுஜன முன்னணி ஏற்றுக் கொள்ளவில்லை. இது யூ.என்.பி. தலைவர் விக்கிரமசிங்கவுக்கு பெருமளவிலான அதிகாரங்களை வழங்குவதாக விளங்கும். யூ.என்.பி. இரத்னசிரி விக்கிரமநாயக்கவினால் நிரப்பப்படும் உதவி-ஜனாதிபதி பதவியை சிருஷ்டிக்கும் பொதுஜன முன்னணி பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இது யூ.என்.பி. தலைவரை ஒரு துணைப் பாத்திரத்தில் இருத்துவதாக விளங்கியிருக்கும்.

பொதுஜன முன்னணி -ஜே.வி.பி. கொடுக்கல் வாங்கல்களை பெரும் வர்த்தக நிறுவனங்களின் சக்தி வாய்ந்த பகுதியினர் எதிர்த்த போதுலும் இது நாளைய பாராளுமன்ற அமர்வில் உயிர் பிழைக்குமா என்பது எதுவிதத்திலும் நிச்சயமாகவில்லை. யூ.என்.பி. நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றிக் கொள்ளப் போதுமான வாக்குகள் ஆளும் கூட்டரசாங்கத்தில் இருந்து வெற்றி பெறுமேயானால் இன்றைய அரசியல் நெருக்கடி பிரமாண்டமான விதத்தில் மோசமடையும். குமாரதுங்க அரசாங்கம் உயிர்பிழைத்து நின்றாலும் கூட அரசியல் ஸ்திரமற்ற நிலை தொடர்ந்து வளர்ச்சி பெறுவது நிச்சயம்.