World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Washington relies on a network of paid warlords in Afghanistan

வாஷிங்டன் ஆப்கானிஸ்தானில் பணம் பெறும் யுத்த பிரபுக்களின் வலைப்பின்னலின் மீது நம்பிக்கை கொண்டு சார்ந்திருக்கிறது

By Peter Symonds
2 August 2002

Use this version to print | Send this link by email | Email the author

சர்வதேச ஊடகத்தில் ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல் மற்றும் சமூக குழப்பங்கள் பற்றி விவரிக்கும் செய்தி அறிக்கைகளுக்கு குறைவில்லை. நாட்டில் அராஜக சூழ்நிலைக்கு குறிக்கப்படும் பொதுவிடமாக அது இருக்கிறது, அங்கு ஓயாது சண்டையிடும் யுத்தப் பிரபுக்கள், குடிப்படை கொமாண்டர்கள் (Militia commanders) மற்றும் மலைவாழ் மக்களின் தலைவர்கள்(Tribal chiefs ) இவர்களின் படையணிகள், காபூலுக்கு பெயரளவிலான ஆதரவுடன், பெரிதும் சிறிதுமாய் தங்களின் சொந்த ஆதிக்கத்தை தங்களின் போட்டியாளர்களின் செலவில் நிறுவுதற்கு விருப்புக்கொண்டிருக்கின்றன.

சர்வதேச உதவி பற்றாக்குறையின் விளைவாக பத்துலட்சக்கணக்கான ஆப்கானியர்கள் எதிர்கொள்ளும் திகைப்பூட்டும் சமூக நிலைமைகளை குறைவான கட்டுரைகளே குறித்தன. இந் நாடானது ஏற்கனவே உலகில் உள்ள மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது, அது இரு தசாப்தகால யுத்தங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது, அது ஆப்கானிஸ்தானின் விவசாயத்தின் பெரும் பகுதியை அழித்து விட்டிருக்கிறது மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பையும் அழித்துவிட்டிருக்கிறது. நூறாயிரக்கணக்கான மக்கள் அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறை காரணமாகவோ அல்லது பல்வேறு குடிப்படைக் குழுக்களால் துன்புறுத்துப்படுவதன் காரணமாகவோ உள்நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர். சுகாதாரம், கல்வி மற்றும் ஏனைய அடிப்படை சேவைகள் சீர்குலைந்திருக்கின்றன.

வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ, இந்த நிலைக்காக தரப்படும் ஒரே விளக்கம்,- 1980களில் காபூலில் சோவியத் ஆதரவு ஆட்சியை எதிர்த்துப் போராடிய பல்வேறு முஜாஹைதீன் குடிப்படைக் குழுக்களுக்கு சி.ஐ.ஏவின் பெரும் நிதி உதவி உட்பட, திட்டவட்டமான வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் வெளிப்பாடாக இருப்பதைக் காட்டிலும், யுத்தப் பிரபுக்கள், வறுமை மற்றும் உள்நாட்டு யுத்தம் என்பன தேசிய மனோநிலையில் உள்ளூன்றிவிட்டதாக, ஆப்கான் மக்கள் குற்றம் சாட்டப்படவிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானுக்கு திரும்புகையில், அமெரிக்கா எங்கு கைவிட்டதோ அதனை மேற் தொடர்ந்திருக்கிறது.

பிரிட்டிஷைத் தளமாகக் கொண்ட ஒப்சேர்வர் செய்தித்தாளில், ஜூலை 21ல் இடம் பெற்ற கட்டுரை, தற்போதைய குழப்பத்தின் பெரும் பகுதி பிராந்திய யுத்தப் பிரபுக்களின் வலைப்பின்னலுக்கு நிதி உதவும் அமெரிக்கக் கொள்கையால் என்றும் நீடித்திருக்க செய்யப்பட்டு வருகின்றது என்பதைத் தெளிவாக்கியது. "வரிசையில் ஒழுங்காய் நிற்பதற்கு மேற்குநாடுகள் யுத்தப் பிரபுக்களுக்கு பணம் கொடுக்கின்றன" என்று தலைப்பிடப்பட்ட கட்டுரை அமெரிக்க தலையீட்டிலிருந்து சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சிப்போக்கை சுட்டிக் காட்டுகிறது. தலிபான் ஆட்சியின் வீழ்ச்சிக்கு முன்னும் பின்னுமான சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்புப் படைப்பிரிவுகளின் மறைவான நடவடிக்கைகள், பல செய்தி அறிக்கைகளில், போகிறபோக்கில் குறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒப்சேர்வர் நடந்து கொண்டிருக்கும் நடவடிக்கையின் அளவு பற்றிய முதல் குறிகாட்டலை வழங்குகிறது.

"மூட்டை நிறைய அமெரிக்க டாலர்கள், பிரதமர் ஹமித் கர்ஜாய்க்கு தொந்திரவை விளைவிக்கும் முக்கிய பிராந்திய அதிகார பேரம் செய்பவர்களுக்கு கொடுக்கப்படுவதற்கு, சில நேரங்களில் RAF விமானங்களில் ஆப்கானிஸ்தானுக்கு பாய்ந்திருக்கின்றன. தெற்கு மாகாண காந்தஹாரின் கவர்னர் குல் அக்ஹா ஷெர்ஜாய், கிழக்கு மாகாண நானாகாஹரில் உள்ள கொமாண்டர் ஹஜ்ரத் அலி மற்றும் ஏனையோர், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறையினரால் தலையிட்டு பேரம் செய்யப்பட்டதில் பத்துலட்சக் கணக்கான டாலர்கள் பணம் 'கைக்கூலி கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டு' இருக்கின்றனர்" என ஒப்சேர்வர் அறிய வந்திருப்பதாக" அக்கட்டுரை விவரித்தது.

பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலக தகவல் வட்டாரம், பணம் முக்கிய ஆப்கான் யுத்தப் பிரபுக்களுக்கு "விநியோகிக்கப்பட்டது" என உறுதிப்படுத்தியது மற்றும் அதில் சம்பந்தப்பட்டுள்ள ஆபத்து நேர்வு பற்றியும் எச்சரித்தது. "எந்தவிதத்திலும் நீங்கள் ஆப்கானிஸ்தானில் யுத்தப் பிரபுக்களை விலைக்கு வாங்கவில்லை: நீங்கள் அவர்களை சில காலத்திற்கு "வாடகைக்கு" எடுத்து இருக்கிறீர்கள். அவர்களின் செலவில் ரஷ்யர்கள் இதனைக் கண்டுபிடித்து விட்டனர். அவர்கள் யுத்தப் பிரபுக்களை விலைக்கு வாங்கலாம் மற்றும் சில நாட்களுக்குப் பிறகு அவர் திரும்பவும் வந்து அவர்களிடம் பின்வருமாறு கூறலாம்: "எனது ஆட்கள் இனிமேல் இந்த ஒழுங்கைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் எனக்கு இன்னும் நிறையப் பணம் கொடுக்க வேண்டும், அல்லது நாங்கள் உங்களைத் தாக்குவதற்கு திரும்பிச் செல்வோம்'."

இதில் கணிசமான அளவு பணத் தொகை சம்பந்தப்பட்டிருக்கிறது. கடந்த நவம்பரில், கோஸ்ட் பகுதியில் உள்ள வட்டார கொமாண்டர் ஆன, பச்சா கான் ஜர்தானுக்கு அவரது போராளிகளுக்கு பயிற்சிகொடுக்கவும் பாக்கிஸ்தானுடனான எல்லையை கண்காணிக்க அவரது படைகளை ஆயுதமயப்படுத்தவும் மதிப்பிடப்படும் 400,000 டாலர்களை அமெரிக்கா கொடுத்தது. கர்ஜாய் எதிராளி ஒருவரை இப்பிராந்தியத்தின் கவர்னராக நியமித்தபொழுது இந்த ஏற்பாடு பிளவுற்றது மற்றும் இருவருக்கும் இடையில் ஆயுத மோதல்களை வெடித்தெழவைத்தது. ஒப்சேர்வரின் படி, கோஸ்ட் பகுதியில் உள்ள உள்ளூர் குடிப்படைக் கொமாண்டர்கள், -அவர்கள் தலிபான் அல்லது அல்கொய்தா நபர்களை கொன்றிருப்பதாக நிரூபித்தால்" உள்ளூர் அந்தஸ்தின் அடையாளமான- "40,000 டாலர்கள் அளவிலுள்ள ஏற்றிச்செல்லும் டிரக்கை (pick-up truck)" பெறுவதற்கு ஒருவரை ஒருவர் மேலோங்க முனைகின்றனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட யுத்தப் பிரபுக்கள் மீது பத்துலட்சக்கணக்கான டாலர்கள் ஊதாரித்தனமாக செலவிடப்படுகிற அதேவேளை, அடிப்படை உள்கட்டமைப்பிற்கு மற்றும் சேவைகளுக்கான உறுதி கொடுக்கப்பட்ட பணம், வேண்டும்போது கொணரப்படும் நிலையில் இல்லை. "ஆப்கானிஸ்தானில் உள்ள நிவாரணப் பணியாளர்கள் தேவையானோருக்குப் பணம் கொடுப்பதை விமர்சிக்கின்றனர் ஏனெனில் அவசர உதவிக்கான நிதிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் புனரமைப்பு திட்டப் பணிகளுக்கான நிதிகள் தாழ்நிலையில் போய்க்கொண்டிருக்கையில் அவை வருகின்றன. சாலைக் கட்டுமானம், நீர்ப்பாசனம் மற்றும் மின் திட்டப்பணிகள் 2003 க்கு முன்னால் கூட நிறைவேறாது போலிருக்கிறது, மற்றும் நாட்டை மீளக் கட்டி எழுப்புவதற்காகத் தேவைப்படுவதாய் மதிப்பிடப்பட்ட 10 பில்லியன் பவுண்டுகளில் 3 பில்லியன் பவுண்டுகள் (4.8 பில்லியன் டாலர்கள்) மட்டுமே இதுவரை வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது " என ஒப்சேர்வர் குறிப்பிட்டது.

அமெரிக்காவானது உள்ளூர் யுத்தப் பிரபுக்களையும் குடிப்படைக் குழுக்களின் கொமாண்டர்களையும் பல்வேறு காரணங்களுக்காக விலைகொடுத்து வாங்குகிறது. ஆரம்பத்தில் அந்நோக்கமானது தலிபான் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காய் இருந்தது மற்றும் பின்னர் நடந்து கொண்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவுவதாய் இருக்கிறது. இருப்பினும், அதிகரித்த அளவில், அது கர்ஜாய் நிர்வாகத்திற்கு எதிர்ப்பினை மட்டுமல்லாமல் அமெரிக்க ஆக்கிரமிப்பு தன்னுக்கும் எதிரான எதிர்ப்பை அடக்கிவைப்பதற்கான ஒரு கருவியாக இருக்கிறது. அமெரிக்க குண்டுவீச்சுக்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் மிகவும் உக்கிரமாக இருக்கும், தெற்கு மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பஷ்துன் மலைவாழ் மக்கள் பகுதிகளில் அதிருப்தியும் கோபமும் பல மாதங்களாக அபிவிருத்தி அடைந்து வருகின்றன.

புதன்கிழமை அன்று ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் குழுவின் நிகழ்ச்சியான வெளிநாட்டு தொடர்பாளர் நேர்காணல் நிகழ்ச்சியில், டைம் இதழின் செய்தியாளர் மைக்கல் வேர் குறிப்பிட்டதாவது: "தெற்கில் அலையானது பெருமளவு திரும்பி இருக்கிறது. சில அடிப்படை இல்லாதிருக்கின்ற போதிலும், மிகவும் பொதுவான ஒரு கூற்றை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன், அது மிகவும் இதய பூர்வமானதாக இருக்கிறது. 'ரஷ்யர்களின் கீழ் சிறப்பாக இருந்தோம்' என்று மக்கள் சொல்வதை நீங்கள் மேலும் மேலும் கேட்கலாம். ஆப்கானியர்கள் என்னிடம் கூறியது போல், 'முதல் 12 மாதங்களில், ரஷ்யர்கள் எமது குடும்பங்களின் மீது குண்டுகளை வீசவில்லை.... ஆயினும், அமெரிக்கர்கள் செய்துகொண்டிருப்பது அதைத்தான்.' அதேநேரத்தில், மனிதாபிமான உதவிக்கான அல்லது சாலைகள் மற்றும் பாலங்கள் மற்றும் கல்விக்கூடங்களுக்கான அறிகுறி அங்கு இல்லை. ஆகையால் அவர்கள் அமெரிக்கக் குண்டுகளைத் தவிர சர்வதேச சமுதாயத்திடமிருந்து ஒன்றையும் பார்க்கவில்லை."

பலவீனமான மத்திய (நடுவண்) அரசாங்கம்

வளர்ந்து வரும் எதிர்ப்பை நசுக்குதற்கு, அமெரிக்காவானது, காபூலுக்கு வெளியே பல பகுதிகளில் அதிகாரமே இல்லாத அல்லது குறைவான அதிகாரமுடைய, கர்ஜாயின் இடைக்கால நிர்வாகத்தை ஆதிரிப்பதைக் காட்டிலும், யுத்தப்பிரபுக்கள் மற்றும் குடிப்படைக் கொமாண்டர்களின் மீது, மற்றும் அவர்களின் வழக்கமான கொடூரமான வழிமுறைகளில் தங்கி நின்று கொண்டிருக்கிறது. கடந்த நவம்பர் பிற்பகுதியில், புஷ் நிர்வாகத்தின் சில பகுதியினர், அத்தகைய சூழ்நிலை ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நலன்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்யும் என்று விவாதித்துக் கொண்டிருந்தனர்.

எடுத்துக்காட்டாக, வாஷிங்டன் போஸ்ட், அமெரிக்க அரசு துணை செயலாளர் ரிச்சர்ட் அர்மிட்டேஜ், மலைவாழ் மக்கள் மற்றும் இனக்குழுத் தலைவர்களுக்கு "மிகவும் அதிக அளவிலான வட்டார சுயாட்சியை" வழங்குதற்கான முன்மொழிவின் பகுதியாக, "மிகக் குறைவான மைய அதிகாரத்துடன் கூடிய மிகவும் தொளதொளத்த நடுவண் அரசாங்கத்தை" ஆதரித்தார் என்று செய்தி வெளியிட்டது. இதனை நியாயப்படுத்தும் விதமாக, நிர்வாகத்தின் இன்னொரு மூத்த அதிகாரி செய்தித்தாளிடம் பினவருமாறு குறிப்பிட்டார்: "சமமானதில் காபூல் முதலாவதாக இருக்கும் என்று வரலாறு பலமாய்க் கருத்துரைக்கிறது, ஆனால் மேலாதிக்கம் செய்யும் பலமான நடுவண் அரசாங்கத்தை நீங்கள் பெற்றிருக்க வேண்டியதில்லை."

அர்மிடேஜின் முன்மொழிவு சம்பிரதாயபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதோ இல்லையோ, "மிகவும் தொளதொளப்பான ஒரு அரசாங்கம்" ஆப்கானிஸ்தானில் உருவாக்கப்பட்டிருக்கிறது. உயர்ந்த அளவில் பிளவுபட்டிருக்கும் தற்போதைய இராணுவம் மற்றும் போலீஸ் படையினர் பிராந்திய யுத்தப் பிரபுக்களை சவால் செய்ய இயலா நிலையில் உள்ளனர். அமெரிக்க மற்றும் பிரிட்டனால் பயிற்றுவிக்கப்பட்டு வரும் ஒப்பீட்டளவில் சிறிதான தேசிய இராணுவமும் எதிர்காலத்தில் அவ்வாறு செய்ய இயலாது. புஷ் நிர்வாகமானது, காபூலுக்கு அப்பால் சர்வதேச அமைதி காக்கும் படையை விஸ்தரிப்பதற்கு- அந்த நகர்வானது யுத்தப் பிரபுக்களின் செல்வாக்கை கீழறுக்கும்- குறிப்பாக ஐரோப்பாவால் விடுக்கப்படும் அழைப்புக்களை திரும்பத்திரும்ப எதிர்த்து வந்திருக்கின்றது.

அவரது முன்மொழிவுக்கான காரணங்களை அர்மிட்டேஜ் தெளிவாகக் கூறாத அதேவேளை, தற்போதைய பெருங்குழப்பம் வாஷிங்டனுக்கு சந்தேகத்திற்கிடமில்லாவாறு லாபத்தைக் கொண்டிருக்கிறது. செயலூக்கமான நடுவண் நிர்வாகமின்றி, நாட்டுப்புறமானது அமெரிக்காவால் பணம் கொடுக்கப்படும் கூலிப்படையினரால் மேலாதிக்கம் செய்யப்படும் மற்றும் நேரடியாக அமெரிக்கக் கட்டுப்பாட்டில் உள்ள, தங்களது செல்வாக்கை சவால் செய்யமுடியாதபடி செயல்முனைவிக்கும் மற்றும் விருப்பம் போல் சுற்றித் திரியும் அமெரிக்க இராணுவப் படைகள் மற்றும் சி.ஐ.ஏ தவிர்ந்த, காபூலுக்கு வெளியிலான சர்வதேசப்படைகளால் அல்ல. மேலும், நிலையற்ற சூழ்நிலையானது நீண்ட கால அமெரிக்க இராணுவ நிலைகொள்ளலுக்கான கூடுதல் நியாயப்படுத்தலை வழங்கி இருக்கிறது- அனைத்துமே "அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை" மற்றும் தலிபான் மற்றும் அல்கொய்தா திரும்பிவரலைத் தடுக்கின்ற தேவை என்ற பெயரில் ஆகும்.

ஏபிசி-க்கு அளித்த அவரது பேட்டியில், மைக்கல் வேர் அமெரிக்க இராணுவம் ஏற்கனவே தன்னை வலிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது என சுட்டிக்காட்டினார். "தலிபான் வீழ்ச்சிக்குப் பின்னர் குறுகியகாலத்தில் கடற்படையின் நிலப்படைப்பிரிவு டிசம்பரில் முதலில் வந்த சேர்ந்தபொழுது நான் காந்தஹாரில் இருந்தேன். அந்த நேரம் கடற்படையின் நிலப்படைப் பிரிவினர் கூறிக் கொண்டிருந்தனர், 'இது மிகவும் குறுகியகாலப் பணி' என்று -இருப்பினும் இப்பொழுது 82வது வான்வழி இறக்கும் படைப் பிரிவினர் காந்தஹாரைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை நீங்கள் காணலாம், நிரந்தர வசதிவாய்ப்புக்கள் அங்கே கட்டப்பட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம். காரையினால் (காங்கிரீட்) நிலப் பதுங்கு அறைகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன, குளிர்வசதி செய்யப்பட்ட தடுப்பரண்கள் கட்டுமானப் பணியில் இருக்கின்றன, விமான தள ஓடுபாதைக்கு மேலும் மேலும் வேலை தேவைப்படுகிறது, அமெரிக்க வசதிவாய்ப்பாக.... நிலையான அமெரிக்க வசதிவாய்ப்பாக அது ஆகி வருகிறது. மற்றும் மூன்று வாரங்களுக்கு முன்னே, (காபூலுக்கு வடக்கே உள்ள) பாக்ராம் விமானதளத்தில் உள்ள அமெரிக்க சார்பில் குரல் தரவல்ல அதிகாரிகள், 18 மாதங்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கும் இடையிலான காலத்திற்கு இங்கு தங்கி இருப்பதை நாம் எதிர்பார்க்கிறோம் என்றனர். ஆகையால் ஆப்கான் பணிக்கான கால வரையறையில் அங்கு குறிப்பிடத்தக்க அளவு நகர்வு இருக்கிறது."

ஆப்கானிஸ்தானில் நிலவும் அராஜக சூழ்நிலைகளில், இந்தப் பிராந்தியத்திற்குள்ளே அதன் அபிலாஷைகளுக்கான இராணுவ மேடையாக நாட்டை மாற்றும் வாஷிங்டனின் உருமாற்றத்தினை எதிர்க்கும் நிலையில் காபூலிலோ அல்லது வேறெங்குமோ ஒருவரும் இல்லை. இருப்பினும், அதன் விளைபயன்கள் அழிவுகரமாக இருக்கின்றன. பத்துலட்சக் கணக்கான ஆப்கானியர்கள் அடிப்படை வசதிகள் பெற முடியாமல், அல்லது பல விஷயங்களில் போதுமான உணவு, உடை மற்றும் இருப்பிடம் இல்லாமல், தங்களது ஈவிரக்கமற்ற தன்மைக்கும் கொடூரத்திற்கும் பெயர்பெற்ற, அமெரிக்காவினால் பணம் கொடுக்கப்படும் குண்டர்களின் கீழ், ஏழ்மைச் சூழ்நிலையில் வாழ்கின்றனர்.

இவை அனைத்தும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலையீட்டின் நோக்கம் ஆப்கான் மக்களுக்கு "அமைதியையும் முன்னேற்றத்தையும்" ஒருபோதும் கொண்டுவருவதற்கல்ல என்பதை விளக்கிக்காட்டுகிறது. அது இந்தப் பிராந்தியத்தில் -குறிப்பாக மத்திய ஆசியாவின் பரந்த எண்ணெய் மற்றும் எரிவாயு சேர்ம இருப்புக்கள் மீது- மூலோபாய மேலாதிக்கத்திற்கான அமெரிக்கத் திட்டங்களை - முன்னெடுப்பதாக இருந்தது.

Top of page