World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Interview with a member of the Ligue Communiste Révolutionnaire of France, and comment by David Walsh

பிரான்சின் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக அங்கத்தவருடனான நேர்காணலும் டேவிட் வோல்ஷின் குறிப்புகளும்

By David Walsh
14 May 2002

Use this version to print | Send this link by email | Email the author

பாரிசிலிருந்து 85 மைல்களுக்கு அப்பாலுள்ள தொழில்துறை நகரமான அமியனில் (Amiens), பிரெஞ்சு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக (French Ligue Communiste Revolutionnaire -LCR) அங்கத்தவர் ஒருவருடன் மே 4ம் திகதி பெற்றுக் கொண்ட நேர்காணலை நாம் கீழே பிரசுரித்துள்ளோம். பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றின் பின்னர் உருவான அரசியல் நெருக்கடி தொடர்பான உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) தலையீட்டின் ஒரு பாகமாக அதன் நிருபர்கள் பிரெஞ்சு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக அங்கத்தவர் பிரான்சிஸ் டொலேயுடன் (Francis Dollé) உரையாடினார்கள். இந்த செவ்வியை அடுத்து ஒரு சுருக்கமான ஆய்வு தொடர்கின்றது.

ஏப்பிரல் 21 வாக்கெடுப்பு, தேசிய முன்னணியின் அதிதீவிர வலதுசாரி வேட்பாளரான ஜோன் மரி லு பென் ஏறத்தாழ 17 சதவீத வாக்குகளைப் பெற்று கோலிச வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ஜாக் சிராக்கிற்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தை வகிப்பதை காட்டுகிறது. லு பென் சோசலிச கட்சி பிரதமரும் ஜனாதிபதி வேட்பாளருமான லியொனல் ஜொஸ்பனை தேர்தலின் இரண்டாவது சுற்றில் போட்டி இடமுடியாமல் அகற்றி விட்டு முன்னணியில் இருக்கும் அதே வேளை பிரெஞ்சு அரசியல் மற்றும் செய்தி ஊடக ஸ்தாபனங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

முதலாவது சுற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர், பேரினவாத மற்றும் குடிவரவாளர் விரோத கட்சியின் தலைவரான லு பென் மே 5ம் திகதி இரண்டாவது சுற்றுத் தேர்தலில் முன்னணி வகிப்பதற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கியதன் மூலம் பிரதிபலித்தார்கள். தீவிர வலதுசாரித்தனத்துக்கும் அதன் கொள்கைகளுக்கும் எதிராக பிரான்சின் மாநகரங்களிலும் நகரங்களிலும் இரண்டு மில்லியன் மக்கள் மே தினத்தன்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

எதிர்ப்புகள் வெடிக்கத் தொடங்கியது தான் தாமதம், சோசலிச கட்சி, கம்யூனிசக் கட்சி, பசுமைக் கட்சி போன்ற அரசாங்க இடதுசாரி கட்சிகளும் (பன்மை இடதுகள்), அதேபோல் பலவித எதிர்ப்பியக்கங்களும் செய்தி ஊடகங்களின் பிரதான பகுதிகளும் இந்த பாசிச எதிர்ப்பு இயக்கங்களை சிராக்குக்கு சார்பான திசையில் திருப்பிவிடுவதற்காக, பிற்போக்கான மதிப்பிழந்த ஜனாதிபதிக்கு வாக்களிப்பதைத் தவிர வேறு தேர்வுகள் கிடையாது என விளம்பரம் செய்வதன் மூலம் ஒரு உக்கிரமான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டன.

பாராளுமன்றத்திற்கு பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல்கள் இரு கட்டங்களாக ஜூன் 9ம், 16ம் திகதிகளில் இடம்பெறவுள்ளன; முதல் சுற்றில் 12.5 சதவீத வாக்குகளைப் பெறும் எந்தவொரு வேட்பாளருக்கும் இரண்டாவது சுற்றுக்கு அனுமதி உண்டு. பிரான்சிய பெரு வர்த்தகர்களது அபிமானத்துக்குரிய வேட்பாளரான சிராக், புதிய பிரதமரான ஜோன் பியர் ரஃபரனின் தலைமையில் ஒரு இடைக்கால மத்திய அரசாங்கத்தை நியமித்துள்ளதோடு, ஜனாதிபதி தேர்தலில் தாம் பெற்ற வெற்றியை பாராளுமன்றத்தில் ஒரு வலதுசாரிப் பெரும்பான்மையாக மாற்றுவதற்கு எண்ணிக்கொண்டுள்ளார்.

அலன் கிறிவின் (Alain Krivine) தலைமையிலான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (LCR) பிரான்சின் அரசியலில் "தீவிர இடதுசாரிகள்" என அழைக்கப்படும் அமைப்புக்களில் ஒன்றாகும். தங்களை ட்ரொட்ஸ்கிஸ்டுகளாக அழைத்துக்கொள்ளும் எல்.சி.ஆர், லூற் ஊவ்றியேர் (Lutte Ouveriere-LO) பார்ட்டி டெ தறவையெர் (Parti des Travailleurs- தொழிலாளர் கட்சி PT) போன்ற கட்சிகளும் முதற்கட்ட ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளர்களை நிறுத்தியிருந்ததோடு மொத்தமாக 3 மில்லியன் வாக்குகளை -அளிக்கப்பட்ட வாக்குகளில் கிட்டத்தட்ட 10 சதவீதம்- பெற்றிருந்தன. பல தசாப்தங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தனது சுய வேட்பாளரை நிறுத்தியிருந்தது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக வேட்பாளரான பெசன்செனொ (Besancenot) 1.2 மில்லியன் வாக்குகளைப் பெற்றார். முதல்சுற்றுத் தேர்தல் முடிவுகளால் தோற்றுவிக்கப்பட்ட வெடித்துச்சிதறும் அரசியல் பிரச்சினைகளான, லு பென்னின் தேர்தல் வெற்றியும் ஒப்பீட்டளவில் அது பெற்ற வாக்குகளின் பெரிய அளவும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை நெருக்கடிக்குள் தள்ளியது.

உலக சோசலிச வலைத் தளம்: சிராக்குக்கும் லு பென்னுக்கும் இடையிலான மே 5ம் திகதிய ஜனாதிபதி தேர்தலில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழத்தின் நிலைப்பாடு பற்றி நீங்கள் கருதுவது என்ன?

டொலே: சந்தேகத்துக்கிடமின்றி அது சற்று நிச்சயமில்லாதது. எவ்வாறெனினும் நாம் சிராக்கிற்கு வாக்களிக்குமாறு கோரப் போவதில்லை. எல்.சி.ஆர். உள்ளேயான விவாதம் இரண்டில் எதையும் தீர்மானிக்கவில்லை. லு பென்னுக்கு எதிரான ஒரே தடையாக சிராக் மாத்திரமே இருப்பதால் அவருக்கு வாக்களிக்குமாறு சிலர் கூறுகின்றார்கள். என்னைப் பொறுத்த மட்டில், தனிப்பட்டமுறையில், நான் சிராக்கிற்கு வாக்களிக்க மாட்டேன். பன்மை இடதுகள் சிராக்கிற்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுக்கின்றனர். நாம் அதைச் செய்யவில்லை, எல்லாம் ஒன்றுதான். நாம் சிராக்கிற்கு வாக்களிக்கும்படி கோரமாட்டோம்.

உ.சோ.வ.த: எவ்வாறாயினும் எல்.சி.ஆர். சிராக்கிற்கு வாக்களிக்க அழைப்புவிடுப்பதாகவே மக்கள் கருதுகின்றனர். எல்.சி.ஆர். வெளியிட்ட ஒரு துண்டுப்பிரசுரத்திலிருந்து நான் சுட்டிக் காட்டுகிறேன்: "நாம் வீதிகளிலும் வாக்குப் பெட்டிகளிலும் லு பென்னை தடுத்து நிறுத்துவோம்." இது சிராக்கிற்கு வாக்களிக்க அழைப்புவிடுப்பதாக இல்லையா?

டொலே: இதற்கு பதிலளிப்பது எனக்கு சற்று சிரமமானதாக உள்ளது, ஏனெனில், உண்மையில் எல்.சி.ஆர் இன் உள்ளே தற்போது நடைபெறும் விவாதமும் இதுவேயாகும். நாம் இதனுடன் உடன்பட முடியாது. எனது மனைவியும் எல்.சி.ஆரில் உள்ளார். நாம் ஒவ்வொரு நாளும் விவாதிக்கின்றோம். ஏனெனில் அவர் என்னிடம் கூறுவதாவது: "நான் உனக்காக சிராக்கிற்கு வக்களிப்பதால் எனது கைகளை அசுத்தமாக்கிக் கொள்ளப்போகிறேன்." நான் அந்த விவாதத்தை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. நான் வாக்களிக்காதிருப்பது அவர் தன் கைகளை எனக்காக அசுத்தமாக்குவதாக பொருள்படாது. அத்துடன் லு பென் அதனை பெறமாட்டார் என்பதால் அவருக்கு நன்றி கூறலாம்.

நான் இந்த விடயத்தில் உங்களுடைய கட்டுரையுடன் [பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலைத் தொழிலாள வர்க்கம் புறக்கணிப்பதற்காக சிராக்கையும் லு பென்னையும் நிராகரி! லூற் ஊவ்றியேர், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், பார்ட்டி டெ தறவையெர் ஆகியோருக்கு ஒரு பகிரங்கக் கடிதம்.] உடன்படுகிறேன்: இவற்றில் லு பென்னுக்கு அப்படி ஒன்றும் பெருமளவான ஆதரவுகள் கிடையாது. உண்மையில் அதில் எதுவும் இல்லாமல் இல்லை, ஆனால் அது பெரும்பான்மையிலிருந்து தொலைவில் உள்ளது. அவர் ஒரு போதும் அதனைப் பெறமாட்டார் என நான் நினைக்கிறேன். அப்படி அவர் பெற்றாலும் கூட, இப்போதுபோல் பிரெஞ்சு மக்கள் பிரதிபலிப்பார்கள் என நான் நினைக்கிறேன். தொழிலாள வர்க்கத்தின் ஒரு பிரிவினர் லு பென்னுக்கு வாக்களித்துள்ளது உண்மை. தெளிவாக நோக்குமிடத்து தொழிலாளர் வர்க்கம் குறைந்த அரசியற் கல்வியையும், அரசியல் புரிந்துணர்வையும் கொண்டிருப்பதை நீங்கள் கண்டுகொள்ளலாம். இடதுசாரிகள் பல தசாப்தங்களாக பயிற்சியையும் கல்வியறிவையும் அலட்சியப் படுத்திவிட்டார்கள்.

உ.சோ.வ.த: தொழிலாள வர்க்கத்துக்கு கல்வியூட்டுவது என்பது உண்மையில் ஒரு புரட்சிகர கட்சியின் பணி அல்லவா? ஒரு பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுப்பதானது, அது தனக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு இடைவெளியை தோற்றுவிக்கும் என எல்.சி.ஆர். அஞ்சுகிறதா?

டொலே: எல்.ஒ.வைப் போல், எல்.சி.ஆர். தேர்தலில் பங்குபற்றவில்லை. எல்.சி.ஆர். எல்லாப் போராட்டத்திலும் அடி மட்டத்திலிருந்தே பங்குபற்றியுள்ளது. அந்த வகையில் நாம் செயற்பட்டு வருவதோடு தகவல்களையும் வழங்கி வருகின்றோம்.

இடதுசாரிகள், "நாம் பதவிக்கு வந்தால் அரசியல் யாப்பை மாற்றுவோம்" என எப்போதும் கூறிவருகின்றனர். மித்திரோன் பதவிக்கு வந்த போதிலும், அவர் அதை தொடவேயில்லை. அவர் குடியரசின் கைப்பாவையாகவே அவர் செயற்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது கூட டு கோலின் அரசியல் யாப்பை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வாதங்களை முன்வைத்துள்ளது.

உ.சோ.வ.த: மூன்று மில்லியன் மக்கள் எல்.சி.ஆர், எல்.ஓ, பி.டி ஆகியவற்றுக்கு வாக்களித்துள்ளார்களே?

டொலே: நாம் சிராக்குக்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுக்கவில்லை. நாம் முடிவுகள் வெளிவந்த உடன் நாளை மாலை 9.30 மணிக்கு கூடவுள்ளோம். நாம் தேர்தல் முடிவுகளைப் பற்றி கவலைப்படவில்லை. லு பென் வெற்றிபெற மாட்டார் என்பதை நாம் தெளிவாக அறிவோம். நாம் ஏற்கனவே மக்களை வீதியில் அணிசேருமாறு அழைப்பு விடுத்துள்ளோம்.

நாம் விரைவில் பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ளோம் என்பது உண்மைதான். உண்மையில் கடந்த வாரத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் எல்.சி.ஆர். உடன் இணைவதற்கு வந்தார்கள். அவர்கள் புரட்சியாளர்களாக இல்லாவிட்டாலும் சரி, முதலில் நாம் இந்த மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்கள் சோசலிச கட்சியிலிருந்தும் மற்றும் கம்யூனிச கட்சியிலிருந்தும் விரக்தியடைந்துள்ளனர். அவர்கள் தமது ஓய்வூதியம் போன்றவற்றுக்காக போராடவேண்டியுள்ளது.

உ.சோ.வ.த: இளைஞர்கள் பாசிசத்துக்கு எதிராக போராட விரும்புகின்றனர். பன்மை இடதுகள் இந்த இயக்கங்களை நேரடியாக ஜொஸ்பனின் அரசியலுக்கு திசைதிருப்புகின்றனர். அவர்கள் பன்மை இடதுகளின் அரசாங்கத்தை விமர்சிப்பதையும் முன்நோக்குகள் சம்பந்தமான கலந்துரையாடல்களை தவிர்ப்பதற்காகவும் லு பென்னை ஓர் பேய்மனிதனாக பயன்படுத்தி வருகின்றனர். எல்.சீ.ஆர், "லு பென்னுக்கு வழியைமைத்த அமைப்பு முறையை நிராகரிப்போம்" எனக் கூறவில்லை. தனிப்பட்ட முறையில் பங்குகொள்ளாமைக்கும் இந்தத் தேர்தல்களை புறக்கணிக்க தெளிவாக அழைப்பு விடுப்பதற்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. இவை கேலிக் கூத்தானவையாகும். ஒரு சக்திவாய்ந்த பிரச்சாரமானது தொழிலாள வர்கத்தினரிடம் இருந்து வெளித்தோன்றல்களை பிரதிபலிக்கும்.

டொலே: நான் இந்தக் குறிப்புக்களையும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஆரம்பம் முதல், திங்கட்கிழமை காலையிலிருந்தே (ஏப்பிரல் 22) நாம் ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொண்டோம். உயர் பாடசாலை மாணவர்கள், "தமக்கு அரசியல் கட்சிகள் அதிகம் அவசியமில்லை" என எம்மிடம் தெரிவித்தனர். இது சுலபமானதல்ல. கம்யூனிஸ்ட் கட்சியும், சோசலிஸ்ட் கட்சியும் என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்யவில்லை. சரியாக திங்கள் காலையிலிருந்து, அவர்கள் சிராக்குக்கு வாக்களிக்குமாறு கோரியதன் மூலம் எல்லா அரசியல் கலந்துரையாடல்களுக்கும் அரசியல் ஆய்வுகளுக்கும் முடிவுகட்டினர். நான் சுயாதீனமாகவே கம்யூனிஸ்ட் கட்சியிடம் நம்பிக்கை வைக்கவில்லை. அவர்கள் அரசாங்கத்தில் பங்குகொண்டிருக்கக்கூடாது. கேய்சொட் (Gayssot) (கம்யூனிஸ்ட் கட்சியின் போக்குவரத்து அமைச்சர் ஜோன்-குளோட்), எயர் பிரான்ஸ் விமான சேவையை மூலதனத்துக்கு திறந்துவிடுவதை ஆதரித்து பேசியதை நான் கேட்டேன். இனிமேலும் நீங்கள் அவர்களிடம் எந்த நம்பிக்கையும் வைக்கமுடியாது. அவர்கள் ஒரு போதும் இதிலிருந்து மீள மாட்டார்கள்.

என்னைப் பொறுத்தவரை சட்ட சபை தேர்தலுக்காக பன்மை இடதுகளுடன் எதுவித கூட்டுக்கும் வழி கிடையாது. சோசலிஸ்டுகள் இன்னமும் பன்மை இடதுகளின் "சாதகமான நிலைச்சான்றை" பேணிவருகின்றனர். அவர்கள் பொய்யர்கள். அவர்களை நம்பமுடியாது.

சனிக்கிழமை ஊர்வலத்தின் போது, எல்.சி.ஆர்.க்கு சிறந்த மக்கள் கூட்டத்தை கொண்டிருந்தது. நாம் தொழிலாளர்களது கோரிக்கைகளுக்காக அநேகமான போராடும் சுலோகங்களை கோஷிக்க முயற்சித்தோம். எங்களுக்கு வெறுமனே லு பென்னுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஐக்கிய வலதுகளும் சரி இடதுகளும் சரி எந்தவொரு நல்லதையும் செய்யவில்லை. எல்லா அரசாங்கங்களும் அதே வழியிலேயே இயங்குகின்றன. அது மத்தியவாத அரசியலாகும். உங்களால் அவ்வாறு நிர்வகிக்க முடியாது.

நெருங்கி வரும் பாராளுமன்ற தேர்தல் எங்களை கவலைக்குள் ஆழ்த்தியுள்ளது. எல்.ஓ.வுடனான எமது உறவு அவ்வளவு சிறப்பாக இல்லை. நாம் செவ்வாய்க் கிழமை அவர்களை சந்திக்கவுள்ளோம். பாராளுமன்றத் தேர்தல் ஒரு செய்தியை தெரிவிக்கவுள்ளது. அது மிகவும் குறுகிய பிரச்சாரத்தையே கொண்டிருக்கும். மற்றவர்களைப் போல் நாம் அதேயளவு வளங்களை கொண்டிருப்பவர்களல்ல. அது தந்திரமானது. பேசுவதற்கு சந்தர்ப்பமுள்ள போதும், அதே சமயம் விரைவான பிளவுகளும், ஊடகங்களுடனான விவாதங்களும் இருந்து கொண்டுள்ளன. அது சுலபமானதும் அல்ல. நான் சோசலிஸ்ட் கட்சியினதும் கம்யூனிஸ்ட் கட்சியினதும் நிச்சயமற்ற தன்மையும் பிரெஞ்சு சமுதாயத்தில் அவர்கள் வகிக்கும் இடத்தையுமிட்டு கவலை கொண்டுள்ளேன்.

உ.சோ.வ.த: அவர்கள் ஏற்கனவே லு பென்னுக்கு எதிரான தமது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனரே?

டொலே: நான் சிராக்கிற்கு வாக்களிக்க மாட்டேன் எனக் கூறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் விமர்சனத்துக்கு ஆளாகிறேன்.

உ.சோ.வ.த: மக்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி, ஒரு புரட்சிகர கட்சியின் பணி உண்மையைக் கூறுவதாகும். நாம் தொழிலாளர் வர்க்கத்தின் வர்க்க நனவை அபிவிருத்தி செய்யவும் குழப்பநிலைக் கெதிராகவும் போராடவேண்டும். இதுதான் ட்ரொட்ஸ்கியின் விதிமுறையாகும். நாம் பிரபல்யமற்ற நிலைப்பாடுகளை எப்படி கையாள வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். அது ஒரு தனிப்பட்ட வீரம் சம்பந்தமான விடயமல்ல. ஆனால் ஒரு முன்நோக்கு சம்பந்தமானதாகும்.

டொலே: நாம் ஒரு குறுகிய காலப்பகுதியில் செயற்பட வேண்டும் என எல்.சி.ஆரில் உள்ள எனது தோழர்களிடம் கூறிவருகிறேன். நாம் மற்ற நாடுகளைப் பற்றிப் பேசுவதில்லை. அங்கு நீண்டகாலத் தொலை நோக்கு கிடையாது. சோசலிச கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் இதை தவிர்ப்பதற்காக அனைத்தையும் செய்வார்கள். அது பாராளுமன்றத் தேர்தலில் எவ்வாறு இருக்கும் என்பதை நான் அறிவேன். அடுத்தது என்ன, நானும் ஒரு வேட்பாளனாக இருக்கப் போகிறேன்."

உ.சோ.வ.த: இளைஞர்கள் வரலாற்றுப் படிப்பினைகளை விளங்கிக் கொள்ள தாகம் கொண்டுள்ளனர். இது ஒரு சோசலிச முன்நோக்கை நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தப்பட வேண்டும்.

டொலே: பன்மை இடதுகளுடன் ஒரு உடன்படிக்கைக்கு வராததையிட்டு எம்மை விமர்சிப்பவர்களும் உள்ளனர். அது ஒரு நகைச்சுவையாகும்.

உ.சோ.வ.த: பிகாரோவில், கிறிவின் (எல்.சி.ஆர். தலைவர் அலன்) சோசலிச கட்சியை சந்திக்க இணங்கியதாக அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். கிறிவின் ஒரு புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்திருப்பாரானால் அது மாபெரும் தாக்கத்தை தோற்றுவித்திருக்கும்.

டொலே: நான் நீண்ட காலம் எல்.சி.ஆரில் இருக்கவில்லை. எல்.சி.ஆர். இப்பிரச்சினையை கையாள்வதற்கும், ஒரு தாக்கத்துக்குரிய தெளிவான விதத்தில் பிரச்சினைகளுக்கு எதிர்வினை ஆற்றுவதற்கும் இலாயக்கற்றிருந்தது போல் தோன்றுகிறது. அது உண்மையானது. கடந்த வாரம் முதல் அமியனில், நாம் சந்திக்க முடியாதிருந்தது. எப்பொழுதும் மிகவும் தெளிவற்றதாகவும் சில சந்தர்ப்பங்களில் மிகவும் சின்டிகல்வாத நிலைப்பாடுகள் இருந்ததையும் நான் புரிந்து கொண்டிருந்தேன். அதேசமயம் பெருந்தொகையான மக்கள் இணைவதற்கு வருகிறார்கள். எல்.சி.ஆரின் தலைமைக்கு இந்த நிலைமையைப் பற்றிக்கொள்ள முடியாதுள்ளது. இது எமது வழியை எம்மால் தெளிவாக காணமுடியாதுள்ளது என்பதையே அர்த்தப்படுத்துகிறது. எல்.சி.ஆரின் நிலைப்பாடு தெளிவற்றது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நாம் குறுகிய காலத்துக்கு அப்பால் ஒரு ஆய்வினையை மேற்கொள்ள உள்ளோம்.

உ.சோ.வ.த: எல்.சி.ஆர். தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரான ஒரு பொறிக்கிடங்கான 'மக்கள் முன்னணி' யில் பங்கு பற்றும் ஆபத்து இருந்துகொண்டுள்ளது.

* * *

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமானது ஐக்கிய செயலகத்தின் ஒரு பகுதியாகும். மைக்கல் பப்லோ (Michel Pablo), ஏர்னெஸ்ட் மன்டேல் (Ernest Mandel), பியர் பிராங்க் (Pierre Frank) தலைமையிலான ஐக்கிய செயலகம், 1950களின் முற்பகுதியில் சோசலிச புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்பும் போராட்டத்தைக் கைவிட்டதோடு ஸ்ராலினிசத்துக்கும் சமூக ஜனநாயகத்துக்கும் முதலாளித்துவ தேசியவாதத்துக்கும் அரசியல் ரீதியில் கீழ்ப்படிந்தது.

ஏப்பிரல் பிற்பகுதியிலும் மே முற்பகுதியிலும் இடம்பெற்ற சம்பவங்களை உற்று நோக்குகையில் எல்.சி.ஆரின் தீவிரவாத வார்த்தைஜாலங்கள் யதார்த்தமற்றவை என்பது நிரூபிக்கப்பட்டது. இந்த அமைப்பு ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்றில் சிராக் சார்பு முகாமுக்குப் பின்னால் அணிசேர்ந்து கொண்டு தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை பேணுவதிலிருந்தும் தொலைவில் நின்றுகொண்டுள்ளது. அது நிலவும் சமூக அரசியல் ஒழுங்கமைப்பில் தன்னை ஒரு "இடதுசாரி" கட்சியாக உறுதிப்படுத்தியது. இரண்டு வேட்பாளர்கள் மாத்திரமே போட்டியிடும் ஒரு தேர்தல் சூழ்நிலையில் "மே 5ம் திகதி லு பென்னுக்கு எதிராக வாக்களிப்போம்" என்ற கோஷத்துடனான அதனது போராட்டமானது, சிராக்கின் வெற்றியை ஈடுசெய்வதாக விளங்கியது. உண்மையில், இக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பெசன்ஸ்சனோ, தாம் தற்போது பதவியிலிருக்கும் ஜனாதிபதிக்கே வாக்களிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

எல்.சி.ஆர். நீண்டகாலமாக பிரான்சின் உத்தியோகபூர்வ அரசியல் வாழ்க்கையின் இடதுசாரி கன்னைக்கான இடத்தை வகித்துள்ளது. அது பல தீவிரமயப்டுத்தப்பட்ட தட்டுக்களுடன் தமது நம்பகத் தன்மையை பேணிக்கொள்வதற்காக சமூக ஜனநாயகவாதிகளையும் ஸ்ராலினிஸ்டுகளையும் விமர்சித்து வந்தபோதிலும் இடதுசாரி அரசாங்கங்களுடன் தன்னை ஆயிரக்கணக்கான நூல்களில் பிணைத்துக்கொண்டுள்ளது. லு பிகாரோ பத்திரிகைக்கு ஏப்பிரல் 30ம் திகதி வழங்கிய பேட்டியில் எல்.சி.ஆர். தலைவர் அலன் கிறிவின், கம்யூனிஸ்ட கட்சியும் பசுமைக் கட்சியும் குறிப்பிட்ட மட்டத்தில் சில அரசியல் ஒத்துழைப்புகளுக்கான சாத்தியங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக தனது கட்சிக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார். இது "இயற்கையாகவே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அழைப்பிதழாகும்."

எல்.சி.ஆர், சோசலிஸ்ட் கட்சியினதும் கம்யூனிஸ்ட் கட்சிகளதும் உத்தியோக பூர்வமான அல்லது உத்தியோகபூர்வமற்ற ஆதரவைப்பெறும் எதிர்ப்பியக்கங்களிலும், தீவிரவாத இயக்கங்களிலும் பங்குபற்றுகின்றது. உதாரணமாக, எல்.சி.ஆரின் அரசியல் குழு உறுப்பினரான கிறிஸ்டோப் அஹிரொன்னுடன் (Christophe Aguiton), ஜொஸ்பனின் ஆதரவைப் பெற்ற, பூகோளமயமாக்கத்திற்கு எதிரான அமைப்பான "அட்டக்கின்" (ATTAC) ஸ்தாபக அங்கத்தவராவார். எல்.ஓ.எஸ் ராசிசம் (SOS Racisme), ரா லு' புறொன் (Ras l'front), மற்றும் "சொன் பப்பியே" (Sans papiers) போன்ற இயக்கங்களுடனும் எல்.சீ.ஆர் இயங்கி வந்துள்ளது. உண்மையில் இச் சகல அமைப்புகளும் அவற்றின் பெருந்தொகையான மத்தியதர வர்க்க ஆதரவாளரும் மே 5ம் திகதி வாக்கெடுப்பில் சிராக்குக்கு ஆதரவளித்தார்கள்.

ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது சுற்றில் சிராக்குக்கு பின்னால் அணிதிரள்வதன் மூலம் தம்மையும் பிரான்சின் அந்தஸ்த்தையும் பாதுகாக்க வழிதேடிய இடதுசாரி அமைப்புகள், அதில் "அதிதீவிர இடதுசாரி" அமைப்பாக எல்.சி.ஆரையும் உள்ளடக்கிக் கொண்டன. கிறிவினின் குழு இந்த அழுத்தத்தை மிகவும் பலமாக உணர்ந்ததோடு, இந்த முழு இழிவான எதிர்ப் புரட்சி தட்டுக்களுடனான பிணைப்பை முழுமையாக துண்டித்துக் கொள்வதற்கு இலாயக்கற்றுள்ளது.

எல்.சி.ஆர், தொழிலாளர் வர்க்கத்துக்கும் இளைஞர்களுக்கும் எதிரான இன்னுமொரு பொறிக்கிடங்குக்கு சேவையாற்றும் மதிப்பிழந்து போன சோசலிஸ்ட் கட்சியினதும் கம்யூனிஸ்ட் கட்சியினதும் புதிய அரசியல் ஒழுங்கமைப்பில் பங்குவகிக்க பயிற்சியளிப்பதோடு தாமும் பயிற்சி பெறுகிறது. கிறிவின் இந்த உத்தேசிக்கப்பட்டுள்ள மீள்குழுவாக்கத்தை, "தற்போதைய அதிதீவிர இடதுசாரியத்துக்கு மட்டுப்படாத, புதிய பெண்நிலைவாத, சூழ்நிலைவாத, முதலாளித்துவ விரோதக் கட்சியாக" விபரித்துள்ளார்.

பிரான்சிஸ் டொலேயுடனான கலந்துரையாடல், எல்.சி.ஆர். போன்ற இடதுசாரிக் குழுக்கள் இன்று எந்த இடத்துக்கு வந்துள்ளன என்பதையும், அவர்கள் நடைமுறைக்கிடும் மத்தியவாத, சந்தர்ப்பவாத கொள்கைகளில் தொக்கிநிற்கின்ற உண்மைகளையும் புரிந்துகொள்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியது. அவர், உள் முரண்பாடுகளால் பிளவுண்ட, கணிசமானளவு சீர்குலைந்த, எல்லாவற்றுக்கும் மேலாக ஏப்பிரல் 21 வாக்கெடுப்பின் பின்னர் எதிர்கொள்ள வேண்டியிருந்த அரசியல் பொறுப்புகளுக்கு தயாரற்ற நிலையில் இருந்த ஒரு கட்சியைப் பற்றியே விபரித்துள்ளார். டொலே இது பற்றி முழுமையாக அறிந்திருந்தாரோ இல்லையோ, "எல்.சி.ஆரின் தலைமைக்கு இந்த நிலைமையைப் பற்றிக்கொள்ள முடியாதுள்ளது" என்ற அவரது குறிப்பானது, இந்த அமைப்பு பற்றிய ஒரு குற்றச்சாட்டாகும்.

டொலே ஆழமான அரசியல் ஆய்விலும், தெளிவிலும், அடிப்படை அரசியல் வேலைத்திட்டத்திலும் எல்.சீ.ஆர். பலவீனமாக இருப்பதை அங்கீகரித்த அதேவேளை, தனது கட்சி பலவித ஆர்ப்பாட்டங்களில் போராளிக் குணத்துடன் பங்கேற்பதையும் மக்கள் எதிர்ப்புக்கு அழைப்பு விடுப்பதையும் சுட்டிக் காட்டினார். இவை தனது அமைப்பின் அரசியல் தோல்விகளை ஏதாவதொரு வகையில் ஈடுசெய்வதற்கான சாதகமான அம்சங்களாக விளங்கும் என அவர் சிந்தித்தார். இந்த வகையிலான எதிர்ப்பு அரசியலானது அந்த அமைப்பின் சந்தர்ப்பவாதத்தின் விசேடமான குறியை எடுத்துக் காட்டுகின்றது. எல்.சி.ஆர். பலதசாப்தங்களாக இருந்துகொண்டுள்ள தொழிலாளர் அதிகாரத்துவங்களுக்கும் இடதுசாரி முதலாளித்துவத்துக்கும் தமது அடிபணிவை "மக்கள் நடவடிக்கையின்" புகைமண்டலத்தின் பின்னால் மறைத்துக்கொண்டிருந்தது.

டொலே விபரித்த உட் கட்சி நிலைமையானது பெரும் சம்பவங்களில் சிக்குண்ட ஒரு மத்தியவாத இயக்கத்தின் தலைவிதியைப் பற்றிய ஒரு சூத்திரம் நிறைந்த உதாரணமாகும். அவ்வாறான ஒரு கட்சி, தாமாகவே தொழிலாளர் வர்க்கத்தின் அவசியங்களையும் அனைத்துலக மார்க்சிசவாத இயக்கத்தின் வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு அரசியல் பிடிப்பிலும் அடிப்படையான வழக்கங்களில் தம்மை நோக்குநிலைப் படுத்தமாட்டா. மாறாக பலம்வாய்ந்த வர்க்க சக்திகளால் அது சந்தர்ப்பவாத திக்கினுள் இயக்கப்படும். குழப்ப நிலையும் தயாரற்ற தன்மையும் புறநிலையான அரசியல் தொடுவரையின் அகநிலையான வெளிக்காட்டலாகும். அமைப்பானது உள்ளக ஒழுங்கீனத்தினதும் கொள்கை ரீதியான அரசியல் விடயங்களைத் தவிர்ப்பதிலும், அதன் மூலம் உத்தியோகபூர்வ பொதுஜன அபிப்பிராயத்தின் ஆதிக்கத் தாக்கத்துக்கு -இங்கு சிராக் ஆதரவு முகாம்- அடிபணிவதற்கான நிபந்தனைகளைத் தோற்றுவிக்கும்.

எல்.சி.ஆர் தன்னை புரட்சிகர இயக்கம் என்பதை ஆழமாகப் புரிந்துகொள்ளவில்லை என டொலே தன்னையறியாமலே உறுதிப்படுத்தியுள்ளார். கட்சி ஒரு மில்லியன் வாக்குகளுக்கு மேல் பெற்றிருக்கும் ஒரு சூழ்நிலையில், தொழிலாளர் வர்க்கத்துக்கு அரசியல் தலைமை வழங்கும் பணிக்கு முகம்கொடுக்கும்போது, எல்.சி.ஆர், மூழ்கிப்போகிறது, தட்டிக்கழிக்கின்றது, இறுதியில் அடிபணிகின்றது. எல்.சி.ஆர், எப்பொழுதும் நான்காம் அகிலத்தின் வரலாற்றுப் பணியான தொழிலாள வர்க்கத்துக்கு புரட்சிகரத் தலைமையை வழங்கும் வரலாற்றுப் பொறுப்பை நிராகரித்து வந்துள்ளதோடு, அதற்குப் பதிலாக அந்தப் பணியை மார்க்சிய எதிர்ப்பு சக்திகளுக்கு ஒப்படைக்கின்றது.

See Also :

Lutte Ouvrière தலைவர் ஆர்லட் லாகியேயுடன் ஒரு நேர்காணலும் பீட்டர் சுவார்ட்ஸால் வழங்கப்பட்ட குறிப்பும்

பிரான்சின் ஜனாதிபதி தேர்தலில் சிராக் 82 வீத வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளார்

பிரான்சில் மேதினம்: நவபாசிச லு பெனுக்கு எதிராக பதினைந்து இலட்சம் பேர் அணிவகுப்பு

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலை தொழிலாள வர்க்கம் புறக்கணிப்பதற்காக சிராக்கையும் லு பென்னையும் நிராகரி!

பிரான்சின் தேர்தலை பகிஸ்கரி--
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் அறிக்கை

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல் மே2002 (முழு உள்ளடக்கல்)

Top of page