World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

September 11 hearings begin: Bush, Congress seek whitewash of government role

செப்டம்பர் 11 விசாரணை தொடக்கம்; புஷ், காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்கை மூடி மறைக்க முயற்சி

By the Editorial Board
5 June 2002

Use this version to print | Send this link by email | Email the author

ஜூன் 4 அன்று அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் புலனாய்வுக் குழுக்களின் கூட்டு அமர்வு இரகசியமாக சாட்சியங்களை விசாரிக்க ஆரம்பித்தன. இவை உலக வர்த்தக மையக் கட்டிடம் மற்றும் பென்டகன் மீதான செப்டம்பர் 11 தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு இட்டுச்சென்ற காலகட்டத்தில் அமெரிக்க உளவு நிறுவனங்களின் செயல்முறை பற்றி விசாரிக்க ஆரம்பித்தன.

ஆனால் இந்த விசாரணைகள் ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை. சாட்சியங்கள், வாக்குமூலங்கள் இவற்றுடன் இவை பெரும்பாலான அளவு இரகசியமாக நடத்தப்படுகின்றன. விசாரணை முடிவுகள் கூட இரகசியமாக வைக்கப்படும். விசாரணைகளை நடத்தும் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர், செப்டம்பர்11 பற்றி குவிந்த வண்ணம் உள்ள பதிலளிக்கப்படாத கேள்விகளை விசாரிப்பதை வெகுநாளாகவே தீவிரமாக எதிர்த்து வந்தனர். பதிலாக இவர்கள் இந்த விசாரணைகளை எப்.பி.ஐ மற்றும் சி.ஐ.ஏ-வின் உளவுபார்க்கும் அதிகாரங்களை மேலும் அதிகமாக்கும் நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கு பயன்படுத்த நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்க காங்கிரஸ், விசாரணைகளின் முன்முயற்சியை பல மாதங்களாக தடுத்து நிறுத்தியது. இதற்கு சிறிதளவில் வெள்ளைமாளிகை, பென்டகன், சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ ஆகியன எதிர்த்ததே காரணமாகும். இவை பத்திரங்களை சமர்ப்பிப்பதற்கு எதிர்த்தன அல்லது சான்றளிக்க சாட்சிகளை அளிக்கவில்லை. சிறிதளவில் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் உண்மையாகவே காரணத்துடனேயே பயந்தனர். ஒரு தீவிர விசாரணை அரசுக்கூற்றை பொய்யாக்கும், அதாவது முற்றிலும் எதிர்பாராத முறையில் செப்டம்பர்11 தாக்குதல் நடந்தது என்ற அமெரிக்க அரசாங்கத்தின் பாசாங்கைத் தகர்க்கும் என்பதேயாகும்.

நீண்டகால தாமதமே பெரும் அரசியல் மூடிமறைப்பு நடந்து கொண்டிருக்கிறது என்பதை குறிகாட்டுகிறது. உலக வர்த்தக மையக் கட்டிடம் அழிக்கப்பட்டபின் அந்த இடிபாடுகளை அப்புறப்படுத்த ஆன காலத்தைவிட செப்டம்பர்11 பற்றி உத்தியோக ரீதியான காங்கிரசின் விசாரணையை நடத்துவதற்கு அது நீண்டகாலத்தை எடுத்திருக்கிறது.

அமெரிக்க காங்கிரஸ் கமிட்டிகள் தீர்மானித்த பின்னர் புஷ் நிர்வாகமானது தன் நிலையை மாற்றிக்கொண்டு விசாரணையுடன் ஒத்துழைக்க ஆரம்பித்தது. உளவுத் துறைகளோடு நெடுநாள் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள காங்கிரஸ் கமிட்டிகளை கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் சுலபமாக இருக்கும். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோன் எப். கென்னடி இறந்தபோது, அதை விசாரிக்க இரு கட்சி வாரன் கமிஷன் (Warren Commission) அமைக்கப்பட்டது போன்ற மாதிரியில் இரு கட்சி கமிஷன் அமைப்பதை வெள்ளை மாளிகை வெகு உறுதியாக தொடர்ச்சியாக எதிர்த்தது. அது கமிஷன் விசாரணை அதிக அரசியல் அபாயகரமானதாக இருக்கும் என உணருகின்றது.

செவ்வாயன்று முதல் விசாரணை அமர்வுக்கு முன்னால் புஷ் தலையிட்டார், கடந்த செப்டம்பர் நிகழ்ச்சிகளில் அமெரிக்க அரசாங்கத்தின் பங்கு பற்றிய எந்தவிதமான தீவிர விசாரணைக்கும் எதிராக அச்சுறுத்துவதற்காகவும், எச்சரிக்கைவிடுக்கவும் அவர் தலையிட்டார். தேசிய பாதுகாப்பு முகவாண்மைக்கு (National Security Agency) விஜயம் செய்தபோது ஒரு சுதந்திரமான விசாரணை கமிஷன் அமைப்பது குறித்த முன்மொழிவுகளை அவர் கடுமையாகத் தாக்கினார்.

தேசிய முகவாண்மை என்பது மிக இரகசியமான, தொலைத்தொடர்பு தகவல்களை இடைமறித்து ஆய்வு செய்யும் உளவுத் துறையின் கிளை அமைப்பு ஆகும். 3,000 க்கும் மேற்பட்டோரை கொன்ற பயங்கரவாதிகளின் தாக்குதலை முன்பே தெரிந்துகொண்டு அமெரிக்க அரசாங்கம் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்பதை புஷ் நேரடியாக மறுத்தார். செப்டம்பர்11 பற்றிய குறித்த அளவுக்கு அதிகமான விரிவான விசாரணை இடையூறானதாக இருக்கும் என அவர் எச்சரித்தார்.

"நான் கவனம் திசை திருப்பப்படுவதைப் பற்றி கவலைப்படுகிறேன்" என்றார் அவர். "நான் காங்கிரஸ் புலன் விசாரிப்பதை வரவேற்கிறேன். ஆனால் ஒரு குழு மட்டும் விசாரிப்பதை விரும்புகிறேன். பல குழுக்கள் விசாரிக்கக்கூடாது. நாம் இப்போது பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்திற்கு போராட முயற்சிக்கும் பொழுது, இப்போது எங்கள் குழுவை கட்டிப்போடுவதை நான் விரும்பவில்லை. ஆகையால் எமது மக்கள் கவனம் திசைதிருப்பப்படுவதை நான் விரும்பவில்லை." உளவுபார்க்கும் குழுக்களின் விசாரணை தவிர வேறு எந்த முறைகாண் ஆயமும் விசாரணை செய்வது "நமது உளவுத்தகவல் திரட்டும் திறமையை பாதிக்கும்" என்றார் அவர்.

முன்னெச்சரிக்கைகள் பற்றிய தகவல்கள்

ஆயினும், சமீப வாரங்களில், வெளிவந்துள்ள சான்றானது சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ செப்டம்பர் 11 தீவிரவாத தாக்குதலைத் தடுக்கத் தவறிவிட்டது அவர்களிடம் போதிய ஆதாரங்கள் இல்லாததன் காரணமாக அல்ல, மாறாக இரண்டு உளவு நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் குறுக்கிட்டு தற்கொலை தீவிரவாதிகளை பாதுகாத்ததன் காரணமாக என்று கருத்துத் தெரிவிக்கிறது. அமெரிக்க காங்கிரஸ் விசாரணைகள், செப்டம்பர்11 தாக்குதலைக் குறித்து அமெரிக்க உளவுத் துறையினர் கணிசமான அளவு முன்னெச்சரிக்கை மற்றும் உள் தகவல்களை அறிந்திருந்தனர் என்று விளக்கும் நிறைய அறிக்கைகளின் நடுவே தொடங்கிற்று. இவற்றில் சென்றவாரம் வெளியான முக்கிய தகவல்கள் பின்வருமாறு:

ஜனவரி 2000 ஆரம்பத்திலேயே சி.ஐ.ஏ ஆனது நவாப் அல்ஹாஜ்மி (Nawaf Alhazmi) மற்றும் காலித் அல்மிதார் (Khalid Almidhar) என்ற இரண்டு எதிர்கால தற்கொலைப் படையினரை அடையாளம் கண்டு கொண்டிருந்தது என நியூஸ் வீக் இதழ் செய்தி வெளியிட்டது. சி.ஐ.ஏ இவ்விரு சவூதி ஆட்களையும் அல் கொய்தா மற்றும் ஒசாமா பின்லேடனுடன் சம்பந்தப்படுத்தியது. மேலும் அது அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைந்ததை அறிந்திருந்தது, ஆனால் 13 மாதங்களாக அவர்களைக் கைது செய்ய உஷார்ப்படுத்தவோ அல்லது விசாரிக்கவோ இல்லை.

சி.ஐ.ஏ வட்டாரங்களை மேற்கோள் காட்டி, எப்.பி.ஐ-க்கு அல்ஹாஜ்மி மற்றும் அல்மிதார் ஆகியோரின் அடையாளங்கள் ஜனவரி 2000 முதலே தெரிந்திருந்தது என்று ஜூன் 4 அன்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டது. ஆனால் இவர்களைப் பற்றிய தகவல்கள் ஆகஸ்டு 2001 அன்றுதான், அதுவும் சி.ஐ.ஏ அறிக்கை மூலம்தான் தெரியும் என எப்.பி.ஐ கூறுகிறது.

USA Today ஜூன் 4 அன்று பின்வருமாறு தகவல் வெளியிட்டது. சி.ஐ.ஏ-ஆல் 3,50,000 பக்கங்கள் கொண்ட தஸ்தாவேஜுக்கள் அமெரிக்க காங்கிரஸ் விசாரணைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அல்கொய்தா அமெரிக்காவின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதைப் பற்றி முன்கூட்டியே தகவல் தெரிந்துள்ள குறிப்பு; விமானங்களின் மூலம் தற்கொலை படையினர் தாக்குதல்கள், பென்டகன், உலக வர்த்தக மையம் மற்றும் பல இலக்குகள் மீது சாத்தியமான தாக்குதல், செப்டம்பர்10 அன்று அல்கொய்தா உறுப்பினர் வரப்போகும் தாக்குதலைப் பற்றிய விவாதங்களை மின்னணுக் கருவிகள் மூலம் முன்கூட்டியே இடைமறித்துக் கேட்டது போன்றவற்றை விவரிக்கும் அறிக்கைகள் ஆகியன இவற்றுள் அடங்கும். அமெரிக்க இயக்கிகள் அல்கொய்தா மற்றும் தலிபான் இவற்றுள் ஊடுருவியதாக இந்த நாளிதழ் மேலும் தெரிவித்தது.

எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் நியூயோர்க் டைம்ஸூக்கு ஜூன் 4 அன்று அளித்த பேட்டியில் பின்வருமாறு கூறினார். எகிப்தின் உளவுத்துறை முகவர்கள், அல்கொய்தாவை ஊடுருவி, அமெரிக்கா மீது ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதல் நடத்தப்போவது பற்றி இன்னதென்று குறிப்பிடப்படாத திட்டங்கள் தீட்டப்பட்டதை கண்டறிந்தனர். எகிப்து தனது உளவாளிகள் மூலமாக கிடைத்த இந்த செய்தியை செப்டம்பர்11 க்கு ஒரு வாரம் முன்பே அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியது.

அல்ஹாஜ்மி மற்றும் அல்மிதார் பற்றிய விவகாரம் செப்டம்பர் 11 சதித்திட்டத்தின் தன்மை பற்றிய அடிப்படைக் கேள்விகளை எழுப்புகிறது. அமெரிக்க உளவு நிறுவனங்கள் மலேசியாவில் நடைபெற்ற அல்கொய்தா மாநாட்டிற்குப் பிறகு இவ்விரண்டு நபர்களும் அமெரிக்காவுக்குள் நுழைந்தனர் என்பதை அறிந்திருந்தன, அடுத்த 18 மாதங்களுக்கு எந்தவித இடையூறுமின்றி அவர்கள் செயல்பட அனுமதி அளித்துள்ளன.

இவ்விரண்டு பயங்கரவாதிகளும் அவர்களது உண்மையான பெயர்களைப் பயன்படுத்தி தனி அறைகளை வாடகைக்கு எடுத்தனர். வங்கிக் கணக்குகளை திறந்தனர்; கடன்வசதி அட்டைகளை வாங்கினர்; ஓட்டுநர் உரிமங்களை எடுத்தனர்; விமானம் ஓட்டுவதற்கான பயிற்சி எடுத்தனர். இந்த 18 மாத இடைவெளியில் அல்ஹாஜ்மி மற்றும் அல்மிதார் இருவரும் எதிர்கால செப்டம்பர் 11 விமானக் கடத்தல்காரர்களில் குறைந்த பட்சம் 6 பேரையாவது சந்தித்தனர். இவற்றில் சதிக்கும்பல் தலைவர் எனக் கூறப்படும் முகமது அட்டா, பென்டகனைத் தாக்கியதாகக் கூறப்படும் விமான ஓட்டி ஹனி ஹான்ஜோர் ஆகியோர் அடங்குவர். அல்மிதார் அமெரிக்காவை விட்டு மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றுக்கு பயணம் செய்தார். தனது விசா காலாவதியானவுடன் அதனைப் புதிப்பித்தார். ஜூலை 4, 2001 அன்று வெற்றிகரமாக அமெரிக்கா திரும்பினார். யாரும் அவரை ஒன்றும் கேட்கவில்லை.

இந்தக் கால கட்டத்தில், அல்ஹாஜ்மி மற்றும் அல்மிதார் ஆகியோரின் நடத்தைகள் அவர்கள் நன்கு பாதுகாக்கப்பட்டனர் என்பதை உறுதியாகக் கூறுகின்றது. அவ்வாறு இல்லையாயின் எவ்வாறு அமெரிக்க அரசாங்கத்தை அழிப்பதற்கு கங்கணம் கட்டிய ஒரு பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள், கவலையின்றி நடமாடுவார்கள்? அவர்கள் தங்கள் இருப்பிடங்களை மறைக்க முயற்சிக்கவில்லை. போலீஸ் கண்காணிப்பு, மாட்டிக்கொள்வதைப் பற்றி அச்சப்படுபவர்கள் போல் அவர்கள் நடந்துகொள்ளவில்லை.

இந்த வெளிப்படுத்தல்களை செய்தி ஊடகங்கள் அறிவித்ததில், அமெரிக்க காங்கிரசின் உறுப்பினர்களான ஜனநாயகவாதிகள் மற்றும் குடியரசுக்கட்சியினர் செப்டம்பர் 11 தாக்குதல் உளவு ஸ்தாபனங்களின் மகத்தான தோல்வி என்கின்றனர். ஆனால் அலைஅலையாய் வரும் புதிய தகவல்கள் உத்தியோகபூர்வ வாஷிங்டனின் சாக்குப்போக்கு சொல்லுதல் மற்றும் உண்மையை ஒப்புக்கொள்ளாது நழுவுதலைத் தகர்த்தெறிகின்றன. தீவிரவாதிகள் "பிளவுகள் வழியே நழுவுதல்" அல்லது உளவு நிறுவனங்கள் "புள்ளிகளை இணைக்கத் தவறின" என்ற கூற்றுகள் உண்மையல்ல.

ஒரு சில செப்டம்பர் 11 பயங்கரவாதிகளுக்கும் அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கும் தொடர்பு இருந்தது என்பதற்கு நம்பத்தகுந்த காரணம் உள்ளது. அவர்கள் கவனக்குறைவால் தப்பவில்லை. அவர்கள் பாதுகாக்கப்பட்டனர்.

நேர்மையற்ற புலன்விசாரணை

மேற்கூறப்பட்ட எந்த பிரச்சனைகளும் செப்டம்பர் 11 தாக்குதலை விசாரிக்கும் அமெரிக்க காங்கிரஸ் கூட்டு விசாரணைக் குழு முன்பு எழுப்பப்படமாட்டாது. இந்தக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் பயன்படுத்தப் போகும் நடைமுறைகள், அமெரிக்க காங்கிரஸில் உள்ள இரு கட்சியினரும், வெள்ளை மாளிகையும் மற்ற அனைவரும் CIA, FBI மற்றும் ஏனைய உளவு நிறுவனங்களின் அதிகாரத்தையும் பொறுப்பையும் பாதுகாக்க விழைகிறார்கள் என்பதை விளக்கிக் காட்டுகின்றன.

கமிட்டி உறுப்பினர்கள் பலர் அதன் முதல் பணியாள் இயக்குனரான முன்னாள் CIA Inspector General மற்றும் தற்போதைய சி.ஐ.ஏ இயக்குனரான ஜோர்ஜ் டெனெட்டின் நீண்ட நாளைய நண்பருமான எல். பிரிட் ஸ்நைடரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஸ்நைடர் சென்ற மாதம் இக்கட்டான சூழ்நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். புதிய இயக்குனரான எலினோர் ஹில் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். முன்பு கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்தபோது பாதுகாப்பு அமைச்சராக வில்லியம் கோகன் இருந்தார். அவரின் கீழ் இயங்கிய பெண்டகனுக்கு ஆலோசகராக ஹில் இருந்தார்.

குழுவின் இணைத்தலைவரான குடியரசுக் கட்சியாளரான போர்ட்டர் கோஸ் என்பவர் புளோரிடா காங்கிரஸ் உறுப்பினர். இவர் ஒரு சி.ஐ.ஏ உளவாளி. இவர் இராணுவ உளவுத்துறையில் இரண்டாண்டு காலம் பணிபுரிந்தார். பத்தாண்டுகள் சி.ஐ.ஏ-ன் கள்ளத்தனமாக செய்யும் பணிக்கு அலுவலராக இருந்தார். உடல் நலமின்மை காரணமாக ஓய்வு பெற்றார். அதில் இருந்து அரசியல் பணியைத் தொடர்ந்தார். அவரது ஆரம்பகால அரசியலை ஆதரித்து ஊக்கியோருள் அப்போதைய கவர்னராக இருந்த ஜனநாயகக் கட்சிக்காரர் போப் கிரஹாமும் ஒருவர். அவர் கோஸை, உள்ளூர் அரசியல் அலுவலகத்திற்கு நியமித்தார். கிரஹாம் இப்பொழுது அமெரிக்க செனட்டர் ஆக இருக்கிறார். அவர் செனெட் உளவுக்குழுவின் தலைவர் மற்றும் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் ஆவார்.

கோஸின் காங்கிரஸ் இணைய தளத்தின்படி, அவர் "மத்திய அமெரிக்காவில் நீண்டகால அனுபவமும் அதில் தொழில்சார் அனுபவமும்" கொண்டிருக்கிறார். அதேபோல ஹைத்தியில் ஈடுபாடு கொண்டிருந்தவர். 1962-71-ல் கோஸ் சி.ஐ.ஏ-வின் இயக்கியாக இருந்த கால கட்டத்தில் இந்த நாடுகள் அமெரிக்க ஆதரவுபெற்ற கொடுமையான சர்வாதிகாரர்களால் ஆளப்பட்டன. நிகராகுவாவில் Anastasio Somoza வும், ஹைத்தியில் Francois Duvalier- ம் சர்வாதிகார ஆட்சி புரிந்தனர்.

வாரத்திற்கு இரு முறை கமிட்டி விசாரணை அநேகமாக ரகசியமாக நடத்தப்படும். அது ஒரு பூட்டப்பட்ட, ஒலி ஊடுருவாத அறையில் நடைபெறும். ஆனால் உயர்மட்ட அதிகாரிகளான எப்.பி.ஐ இயக்குநர் றொபர்ட் வில்லியம்ஸ் மற்றும் சி.ஐ.ஏ இயக்குநர் ஜோர்ஜ் டெனெட் சாட்சி சொல்லும்போது விதிவிலக்கு அளிக்கப்படும். சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ கொடுத்த பல தஸ்தாவேஜூக்கள் தொடர்ந்து வகைப்படுத்தப்பட இருக்கின்றன. விசாரணை முடிந்தவுடன் கமிட்டியின் கடைசி அறிக்கையும் இரகசியமாக வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடைமுறை - இரகசிய சாட்சியம், இரகசிய ஆதாரம், இரகசிய கண்டுபிடிப்புக்கள் - ஜனநாயகக் கோட்பாடுகளைக் கேலிக்கூத்தாக ஆக்குகின்றன, ஆனால் இரகசிய உளவு நிறுவனங்களுக்கு இது வழக்கமான வேலை ஆகும். அடுத்த வாரம் அமெரிக்க கீழ்சபையும் செனட்டும் உளவு பார்ப்பதற்காக ஆகும் செலவினங்களை அங்கீகரிக்கும் மசோதாவை பரீசீலனைக்கு எடுத்துக்கொள்ளவிருக்கிறது. அமெரிக்க பிரதிநிதிகள்சபை விதிமுறைகளின்படி உறுப்பினர்கள் பட்ஜெட்டை நிறைவேற்றுவர். அதன் விவரங்களையோ அல்லது அதன் உள்ளடக்கத்தையோ பற்றி உறுப்பினர்கள் அறிவதற்கு அனுமதிக்கப்படாமலே அவர்கள் வாக்களிப்பார்கள். சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ ஆகியவற்றினால் அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டும் எதற்கு அவர்கள் வாக்களிக்கிறார்கள் என அறிவிக்கப்படுவார்கள்.

அமெரிக்க செய்தி நிறுவனங்களும் மற்றும் பல முக்கிய செனெட்டர்களும் இந்த காங்கிரஸ் புலன் விசாரணை ஒரு பித்தலாட்டம் என்று அறிவார்கள். இதனை செப்டம்பர் 11 தாக்குதலில் அமெரிக்க உளவு நிறுவனங்களின் மறைமுக பங்கை மூடி மறைப்பதற்கான ஒரு முயற்சி என அறிவார்கள். ஆனால் அவர்கள் திருப்பித் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தினாலோ அல்லது அரசு எந்திரத்துக்கு விசுவாசத்தினாலோ இதை வெளிப்படுத்த விரும்பவில்லை. இவர்களின் செய்கை அமெரிக்க அரசு தனது குடிமக்களுக்கு எதிராக இழைக்கும் கிரிமினல் குற்றத்தை ஆதரிக்குமாறு செய்துள்ளது.

ஒரு தொகுதி பொய்களுக்குப் பின்னர் அடுத்த தொகுதியாக பொய்கள் தகர்க்கப்படினும் அமெரிக்க செய்தி நிறுவனங்கள், வெள்ளை மாளிகை, சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ-ன் நம்பகத்தன்மையை பற்றி முடிவுக்கு வராதிருக்கின்றன. மேலும் கீழ்ப்படிந்து புஷ் நிர்வாகத்தின் நம்பகத்தன்மையை இழந்தவர்கள் பதிலீடு செய்யப்படுவார்கள் என்ற பொய்த் தகவல்களை பிரசுரிக்கின்றன. செய்தி ஊடகமானது அபத்தமான பொய்ச் செய்திகளை வெளியிடுகிறது: எப்.பி.ஐ உளவாளிகள் மின்னஞ்சலைப் பார்க்க முடியாது அல்லது இணைய தளத்தை அணுகுவதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது ஜனநாயக உரிமைகளை மீறுகிறார்கள் என்பது பற்றிய அதிகமான நெருக்கடியின் காரணமாக தங்களின் புலனாய்வில் வழக்கம்போல விரக்தி அடைகின்றார்கள் என்று.

ஜூன் 3ம் தேதி நியூயோர்க் டைம்ஸ், செய்திதாளின் தொழில்நுட்ப பகுதி மேற்கூறிய புனை கதைகளை மறுக்கிறது. இக்கட்டுரை அமெரிக்க நீதிமன்றங்களின் நிர்வாக அலுவலகம் வெளியிட்டுள்ள தொலைபேசி ஒட்டுக்கேட்டல் அறிக்கையை எடுத்துக்காட்டாகக் கொண்டு மேற்கோள்காட்டுகிறது. 2001-ல் 1491 அமெரிக்க போலீஸாருக்கு ஒட்டுக்கேட்க அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. 1991-லிருந்து, பத்தாண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட 12,661 ஒட்டுகேட்க கோருதல் மனுக்கள் மீது நீதிமன்றமானது மூன்றைத் தவிர மற்றவற்றிற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஜக்காரியாஸ் மொஸ்ஸூவி விசாரணை அமுக்கப்பட்டது பற்றி அதிகமான கூற்றுக்கள் இருக்கின்றன. ஏனென்றால் புலனாய்வு உளவறிதலை அலசிக் கொண்டிருக்கும் தனி அமெரிக்க நீதிமன்றம் இதை எதிர்க்கும் என்று அனைவரும் பயந்தனர். அவர்களின் அளவுகோல் வழக்கமான மற்ற நீதிமன்றங்களைவிட தனி அமெரிக்க நீதிமன்றம் குறைவாகக் கட்டுப்பாடு உடையனவாக இருக்கவேண்டும் என்பதாகும்.

காங்கிரஸ் விசாரணையோ, முன்மொழியப்பட்ட இருதரப்பு கமிஷனோ அல்லது கார்ப்பொரேட்டுகளது ஆதிக்கத்தில் உள்ள செய்தி ஊடகமோ செப்டம்பர் 11 துன்பியல் பற்றி அக்கறையுடன் விசாரணை செய்யும் அல்லது பயங்கரவாதத் தாக்குதலை நியாயப்படுத்திக் காட்டி, புஷ் நிர்வாகம் மேற்கொண்டிருக்கிற ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான கடும் தாக்குதல்களை அக்கறையுடன் எதிர்க்கும் என்றோ அவற்றின் மீது நம்பிக்கை வைக்க முடியாது. அத்தகைய அம்பலமாதல், அமெரிக்க ஐக்கிய அரசுகளிலும் மற்றும் சர்வதேச ரீதியாகவும் தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான அரசியல் அணிதிரளலின் மூலம் மட்டுமே வெளிவரும்.

See Also :

சதியும் மூடி மறைப்பும்: புஷ் நிர்வாகமும் செப்டம்பர் 11ம்

சர்வாதிகாரத்தின் நிழல்: செப்டம்பர் 11க்குப் பின்னர் புஷ் இரகசிய அரசாங்கத்தை நிறுவினார்

Zacarias Moussaoui இன் வித்தியாசமான வழக்கு: செப்டம்பர் 11ம் திகதி தாக்குதலுக்கு பொறுப்பானவர் மீதான விசாரணையை FBI மறுத்துள்ளது

Top of page