World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரான்ஸ்

No to Chirac and Le Pen! For a working class boycott of the French election

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலை தொழிலாள வர்க்கம் புறக்கணிப்பதற்காக சிராக்கையும் லு பென்னையும் நிராகரி!

Lutte Ouvrière, Ligue Communiste Révolutionnaire, and Parti des Travailleurs ஆகியோருக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

By the World Socialist Web Site Editorial Board
29 April 2002

Use this version to print | Send this link by email | Email the author

Lutte Ouvrière (LO), Ligue Communiste Révolutionnaire (LCR), Parti des Travailleurs (PT) ஆகிய கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களே, 2002 பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல் மாபெரும் அரசியல் பொறுப்பினை உங்கள் முன்வைக்கின்றது. முதலாவது சுற்றில் முப்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உங்களது வேட்பாளர்களுக்கு எதிர்பார்த்திராத அளவில் வாக்குகளை வழங்கியுள்ளனர். ஆனால் முதலாவது சுற்றும் கூட பாசிச வேட்பாளர் லு பென் இரண்டாவதாக வந்தடைந்ததுடன், மே5 இறுதிப் போட்டியில் ஜனாதிபதி சிராக்கை எதிர் கொள்ளும் நிலையுடன் தேசிய முன்னணியால் சாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டது.

உங்களது வேட்பாளர்களுக்கு வாக்களித்தவர்கள், அரசியல் நெருக்கடி பற்றி சக்தி மிக்க வகையிலும் தெளிவாகவும் நீங்கள் பேசும்படி உங்களைப் பார்க்கிறார்கள். தற்போது முன்வைக்கப்பட்டு இருக்கின்ற மற்றும் கட்டாயம் பதிலளிக்கப்பட வேண்டிய கேள்வி என்னவெனில்: மே5 வாக்குப் பதிவில் உங்களது இயக்கங்கள் எங்கே நிற்கின்றன? தங்களது சமூக நலன்களைப் பாதுகாப்பதற்கும் பாசிச ஆபத்துக்களைத் தோற்கடிப்பதற்கும் பிரெஞ்சுத் தொழிலாளர்களும் இளைஞர்களும் எப்படிப் போராட்டத்தை முன்னெடுப்பது? என்பதாகும்.

தொழிலாள வர்க்கத்தைப் பாதுகாக்க விழைகின்ற எல்லா இயக்கத்தையும் மே5 ஜனாதிபதி வாக்கெடுப்பைப் புறக்கணிக்க செயல் முனைப்புடன் பிரச்சாரத்தைச் செய்யுமாறு உலக சோசலிச வலை தளம் வேண்டிக் கேட்டுக்கொள்கின்றது. லு பென்னுக்கோ அல்லது சிராக்கிற்கோ அரசியல் ஆதரவு தராதீர்கள்! பிரெஞ்சுத் தொழிலாள மக்களையும் இளைஞர்களையும் இந்தப் போலியான மற்றும் ஜனநாயக விரோத "தேர்வுக்கு" எதிராக அணிதிரட்டுங்கள்.

உங்களது மூன்று கட்சிகளுக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கும் இடையில், நாம் மறைப்பதற்கு விரும்பாத, நன்கு அறியப்பட்ட வரலாற்று மற்றும் அரசியல் வேறுபாடுகள் இருப்பினும், இந்தப் பிரச்சாரத்தை முன்மொழிவதும் அதற்கான அரசியல் அடிப்படையை விளக்குவதும் அத்தியாவசியமானது என்று நாம் உணர்கின்றோம்.

தேர்தல் புறக்கணிப்பு ஏன்? ஏனெனில் இந்த தேர்தல் மோசடிக்கு உள்ள எந்தவிதமான சட்ட பூர்வத் தன்மையையும் மறுப்பது அவசியமானதாக இருக்கிறது; ஏனெனில் தொழிலாள வர்க்கத்திற்கான சுயாதீனமான அரசியல் நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டியது அவசியமானதாக இருக்கின்றது; ஏனெனில் செயலூக்கமான மற்றும் ஆக்ரோஷமான தேர்தல் புறக்கணிப்பு தேர்தலுக்குப் பின்னே எழவிருக்கும் அரசியற் போராட்டத்திற்கான சிறந்த சூழ்நிலைமைகளை உருவாக்கும்.

உங்களது மூன்று கட்சிகளாலும் ஆக்ரோஷத்துடன் முன்னெடுக்கப்படும் தேர்தல் பகிஸ்கரிப்பிற்கான பிரச்சாரமும் மற்றும் அழைப்பும், தனி நபர்கள் வாக்களிக்காது விடுவதை விட அதிகம் வேறுபட்ட பண்பினைக் கொண்டிருக்கும். அது வெகு ஜனங்களையும், சிறப்பாக முதல் சுற்றில் லு பென்னின் வெற்றி அதிர்ச்சியால் இயங்கத் தொடங்கி இருக்கும் இளைஞர்களை அரசியல் ரீதியாக அறிவூட்ட சேவை செய்யும்.

இந்த புதிய சக்திகள் முக்கிய அரசியல் படிப்பினையை கட்டாயமாகப் பெறவேண்டும். அவர்கள் இதன்மூலமாக வலது மற்றும் இடது அரசாங்கங்கள், அதேபோல செய்தி ஊடகங்களினதும் ஒட்டு மொத்த முதலாளித்துவ அரசியல் அமைப்பினதும் கருத்தான சிராக்கிற்கு அளிக்கப்படும் வாக்கு ஜனநாயகத்தைப் பாதுகாத்தலை, பிரெஞ்சு "கெளரவத்தை" மீட்டலை, "பாசிச எதிர்ப்பு முன்னணி" உருவாக்கலையும் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் பொய்களை இவற்றின் வழியாகப் பார்க்க கட்டாயம் கற்றுக் கொள்வார்கள்.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அல்லது பாசிசத்தை எதிர்ப்பதற்கு தொழிலாள வர்க்கமானது ஊழல் மிக்க மற்றும் பிற்போக்கு பிரெஞ்சு முதலாளித்துவத்தின் மீது நம்பி நிற்க முடியாது. லு பென்னின் ஒட்டு மொத்த சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றிய வாய்ச்சவடால்களை தனதாக ஏற்றுக்கொள்ளும் சிராக்கின் சொந்தப் பிரச்சாரம் இந்த உண்மை பற்றிய தெளிவான எடுத்துக்காட்டு ஆகும்.

சிலர் மே5 வாக்களிப்பைப் புறக்கணித்தல் லு பென் மற்றும் அவரது பாசிச இயக்கத்தைப் பலப்படுத்தும் என்று வாதிடலாம். நாம் அத்தகைய கூற்றுக்களை முழுமையாக நிராகரிக்கிறோம். அரசியல் என்பது எண்கணிதம் அல்ல, மற்றும் லு பென்னை எதிர்ப்பதற்கு சிராக்கை ஆதரிப்பது அவசியமற்றது. மாறாக, அது சிராக்கிற்கான உத்தியோக ரீதியான பிரச்சாரமான, வலது அரசாங்கத்தையும் இடது அரசாங்கத்தையும் ஒன்றிணைத்தலாக இருப்பதுடன், அது லு பென்னின் முழுவதும் பொய்யான மற்றும் வாய்ச்சவடால் கூற்றான தான் மட்டுமே அரசியல் அமைப்பிற்கு பரந்த எதிர்ப்பைக் குரல் கொடுப்பதாகக் கூறுவதை மேலும் வலுவூட்டுகின்றது.

மே 5க்கு எதிர்ப்பு மற்றும் பரந்த அளவிலான புறக்கணிப்பு ஆனது, சோசலிச இடதுகளால் கூர்மையாக முன்னெடுக்கப்படுவதும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் லு பென் மற்றும் சிராக் ஆகிய இருவருக்கும் எதிராக அணிதிரட்டுவதும், லு பென்னின் போலி நடிப்புக்களைத் இல்லாமல் செய்வதுடன், தற்போதுள்ள அரசியல் ஒழுங்கமைப்பை சவால் செய்யும் முற்போக்கான சமூக சக்தி ஒன்று இருக்கின்றது என்பதை பரந்துபட்ட மக்களுக்கு எடுத்துக்காட்டும்.

சிராக்கிற்காக வாக்களிப்பை தந்திரோபாயமாக ஏற்றுக்காட்டும் Lutte Ouvrière மற்றும் LCR பிரதிநிதிகளின் நிலைப்பாட்டிற்கு நாம் வெளிப்படையாக இந்த விஷயத்தை கட்டாயம் விளக்க வேண்டும். Lutte Ouvrière "இரண்டாவது சுற்றில் வாக்களிப்பதைத் தவிர்க்க தொழிலாளர்களை அழைப்பதில்லை", என Lutte Ouvrière இன் ஜனாதிபதி வேட்பாளர் லாகியே (Laguiller) கூறுகிறார். LCR ன் அரசியல் குழுவின் அறிக்கை "மே 5ல் லு பென் சாத்தியமான வகையில் மிகச்குறைந்த வாக்குகளைப் பெற LCR பிரச்சாரம் செய்கிறது. லு பென்னை எதிர்க்க சிராக்கிற்கு வாக்காளர்கள் வாக்குகளை அளிப்பர் எனபதை நாம் புரிந்து கொள்கிறோம், ஆனால் அதி வலதுகளின் புதிய உதயத்திற்கு எதிரான காப்பு அரணாக சிராக் இருக்க முடியும் என நாம் நினைக்கவில்லை" என அறிவிக்கிறது.

முதலாவது சுற்றில் பிரச்சாரத்தின்போது, உங்களது கட்சிகள் சிராக் ஜனாதிபதி பதவியின் வலதுசாரி பண்பியல்பை ஆக்ரோஷத்துடன் கண்டனம் செய்தன, மற்றும் சிராக்கை சரியான வகையில் ஊழல் மிக்க முதலாளித்துவ பிரதிபலிப்பின் உருவாக்கமாகப் படம்பிடித்துக் காட்டியது. சிராக்கிற்கு வாக்களிப்பது அனுமதிக்கத்தக்கது, புரிந்து கொள்ளத்தக்கது அல்லது பேணத்தக்கது என்று எப்படி உங்களால் இப்பொழுது கூற முடியும்? உங்களது கடந்தகால அறிக்கைகள் மற்றும் எச்சரிக்கைகள் அக்கறையுடன் கூடிய கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா?

LCR இன் அறிக்கையின் மொழியானது இரண்டாவது சுற்றில் சிராக்கிற்காக வாக்களிக்க கோரும் விவாதங்கள் எப்படியோ பதில் கூற முடியாதது என்று கூறுகின்றது, அல்லது சிராக் மற்றும் லு பென்னைத் தேர்வு செய்வதைப் புறக்கணித்தலை வெகுஜனங்களால் புரிந்து கொள்ளப்பட முடியாது என்கிறது. இது மொத்தமாக தற்போதைய சூழ்நிலையில் உள்ள அரசியல் சாத்தியங்களை குறைத்து மதிப்பிடுகின்றது.

லு பென்னின் வெற்றிக்கு யார் பொறுப்பு?

தேசிய முன்னணி தொடர்பான ஆபத்தைக் குறைத்து மதிப்பிடாது, முசோலினி அல்லது ஹிட்லர் மாதிரியிலான பாசிச இயக்கத்தின் தோற்றத்தை கொண்டிராத லு பென்னிற்கான வாக்கு பிரான்சில் பாசிச வேலைத் திட்டத்திற்கான பரந்த ஆதரவை பிரதிநிதித்துவப்படுத்தாது. லி பென்னின் சொந்த வாக்காளர்கள் மத்தியில் தன்னும், ஒரு சிறு பகுதிதான் உண்மையில் அவரது சமூக வேலைத்திட்டத்துக்கும் வலதுசாரி சர்வாதிகார ஆட்சியை நிறுவுதலுக்கும் ஆதரவு தருகின்றது.

எதிர்பார்ப்புக்கு மாறாக, லு பென் ஜனாதிபதி வாக்கெடுப்பில் வென்றாலும் அவரால் பிரெஞ்சு மக்களை சர்வாதிகாரத்துக்கு கீழ்ப்படுத்த முடியாது. அரசியல் நிறுவனம் மற்றும் செய்தி ஊடகத்தால் சிராக்கிற்கு ஆதரவாக செய்யப்படும் பிரச்சாரத்தில், லு பென்னால் முன்வைக்கப்படும் உடனடி அச்சுறுத்தல் பற்றியதன் பொருந்தாத கற்பனைக் கூறு கொண்ட மிகைப்படுத்தலின் அம்சம் இருக்கிறது, அதன் நோக்கம் வர்க்கக் கூட்டுக் கொள்கைக்கு ஆதரவளிக்க தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்துவதாகும். லு பென்னை எதிர்த்துப் போராட, அவர் பண்புருப்படுத்தும் அரசியல் நோயின் காரணியை நாம் கட்டாயமாக சரியான முறையில் அறிதல் வேண்டும். இந்த உடல் நலக் குறைவின் நோக்கம் முதலாளித்துவ அரசியலுக்கு எதிரான எவ்விதமான சோசலிச மாற்றீட்டையும் மூடி விடுவதாகும்.

தொழிலாள வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்ட கட்சிகளால் தொழிலாள வர்க்கமும் அதன் நலன்களும் கைவிடப்பட்டமையிலிருந்து அரசியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் லு பென் இலாபம் அடைந்திருக்கிறார். ஜொஸ்பன் தனது பிரச்சாரத்தில் தனது கட்சி தன்னை "சோசலிஸ்ட்" என்று அழைத்துக் கொள்ளலாம், ஆனால் தனது வேலைத் திட்டம் "சோசலிசம் அல்ல" என ஒப்புக்கொண்டுள்ளார். சோசலிசக் கட்சியானது முதலாளித்துவ வாதிகளின் சார்பாக, நிர்வகித்து வரும் நலம்சார் அரசு நலத்திட்டங்களை தொடர்ந்தும் வழங்குவதில்லை, ஆனால் அதற்கு மாறாக, தொழிலாளர்களின் சமூக நிலைமைகளையும் வாழ்க்கைத் தரங்களையும் தொடர்ந்து குறைத்து வருகின்றன. ஐரோப்பிய நாணய அமைப்பை நிறுவுதலுக்கும் யூரோவை வெளியிடுவதற்கும் நிபந்தனையாகத் தேவைப்பட்ட, வேலைகளிலும் சமூக வேலைத்திட்டங்களிலும் அனைத்துவிதமான தியாகங்களையும் திணித்தற்கான பொறுப்பு ஜொஸ்பனின் அரசாங்கத்தையே சாரும்.

கம்யூனிஸ்டுக் கட்சியைப் பொறுத்த மட்டில், பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்துக்குள் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் பிரதான தூணாக இருந்தது. மிக சமீப காலகட்டத்தில், இந்த ஸ்ராலினிச அமைப்பு தொழிலாள வர்க்கத்துக்குள் குடிபெயர்ந்தோர் விரோத நஞ்சை அறிமுகப் படுத்தியதற்கான பிரதான பொறுப்பைக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான Robert Hue இருபதாண்டுகளுக்கு முன்னர் பாரிஸ் புறநகர்ப்பகுதியின் மேயராக முதல் தடவையாக முதன்மை நிலைக்கு வந்தார். அவர் புலம்பெயர்ந்த தொழிலாள வர்க்கம் பற்றிய பீதியையும் வெறுப்பையும் தூண்டி விட்டார். இந்த வழியில் அவர் தொழிலாள வர்க்க புறநகர்ப்பகுதிகளிலும் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையான வடக்கிலும் லு பென்னுக்கு வழி அமைத்துக்கொடுத்தார்.

கடந்த 20 ஆண்டுகளாக இடதுசாரிக் கட்சிகள் என்று கூறப்படுவனவற்றால் பின்பற்றப்பட்ட வலதுசாரி கொள்கைகளின் காரணமாக லு பென் பெரும்பான்மை பலத்தை ஈட்டிக் கொண்டார். இது உண்டுபண்ணிய அந்நியப்படல் மற்றும் ஊக்கமின்மை மனநிலையை தேசிய முன்னணி சுரண்டிக் கொண்டது. இந்த அதே திவாலான சமூக ஜனநாயக அரசியல்வாதிகளின் படி பாசிசத்தின் சவாலுக்கு தீர்வு மேலும் வலது பக்கம் நகருதலும், மே 5ல் சிராக்கை அரவணைத்துக் கொள்வதும் தான்.

ஜொஸ்பன், ஒலண்ட், செவன்மோ போன்றோருக்கு சிராக்கிற்கு வாக்களிக்குமாறு அழைப்பது இயல்பானதாக இருக்கிறது. அவர்களைப் பொறுத்தமட்டில் அதற்கு பெரும் மறு நோக்குநிலைப்படுத்தல் தேவைப்படவில்லை, ஏனெனில் அவர்கள் அதே அரசியற் கட்டமைப்பைத்தான் பகிர்ந்து கொள்கிறார்கள். ஐந்தாண்டுகள் கூட்டு வாழ்க்கை மூலம் அவர்கள் சிராக்குடன் நெருக்கமாக வேலை செய்துள்ளனர், பிற்போக்குத்தனமான உள்நாட்டுக் கொள்கைக்கு மட்டுமல்லாமல், பொஸ்னியா மற்றும் கொசோவா முதல் ஆப்கானிஸ்தான் வரையில் தொடரான ஏகாதிபத்திய இராணுவத் தலையீடுகளில் பிரான்சின் தலையீட்டிற்கும் கூட ஆதரவளித்தனர்.

ஜொஸ்பனின் கூட்டின் கருத்தான "இடதுசாரிகளின் பிளவு" லு பென் வெற்றியை விளைவிக்கும் என்று கூறப்படும் வாதமானது, Lutte Ouvrière, Ligue Communiste Révolutionnaire ஆகியவற்றின் ஜனாதிபதிப் பிரச்சாரத்துக்கு எதிரானது மட்டுமல்ல, முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து சுதந்திரமாக தொழிலாள வர்க்கத்தின் எந்த அரசியல் அமைப்பும் இருப்பதற்கு எதிராகவும் இருக்கின்றது. அதன் தர்க்கவியலானது சோசலிஸ்ட் என்று கூறிக் கொள்ளும் அனைத்து அரசியல் போக்குகளும் மிக வலதுசாரி சக்திகளால் வகுக்கப்படும் அரசியல் நிலைப்பாட்டின் பரந்த நீரோட்டத்திற்குள் கலைக்கப்பட வேண்டும் என்பதாகும். இது ஐக்கிய அமெரிக்க அரசுகளில் வெள்ளை மாளிகையில் ஜோர்ஜ். டபிள். யு. புஷ்- ஐ இருத்தி வைப்பதை இறுதி விளைவாக வைத்திருந்த அமெரிக்க ஜனநாயக் கட்சியின் நிலையை போன்றதாகும்.

லு பென்னின் தடை உடைத்து வெற்றி பெற்றமைக்கு இடது சோசலிஸ்டுகளைக் குற்றம் சாட்டும் -- ஜொஸ்பன் மற்றும் சோசலிசக் கட்சி, மற்றும் அவருக்கு வக்காலத்து வாங்கும் Daniel Cohn-Bendit ஆகியோரின் சுயலாபக் கூற்றை இகழ்ச்சியுடன் நாம் நிராகரிக்கிறோம். தொழிலாள வர்க்கத்தின் குறிப்பிட்ட அளவு வீதாச்சாரத்தினர் தங்களின் மிகக் கசப்பான எதிரிக்கு வாக்களித்தமை அனைத்து உண்மையான சோசலிஸ்டுகளுக்கும் பெரும் கவனத்திற்கு உரியதாக இருக்கிறது. ஆனால் இந்த ஆபத்தான அபிவிருத்திக்கு பொறுப்பு பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்தை திட்டமிட்டவகையில் காட்டிக் கொடுத்தவர்களையே சார்கின்றது.

சர்வதேசப் பரிமாணம்

முதலாவது சுற்றில் தேர்தல் பிரச்சாரம் தொழிலாள வர்க்கம் எதிர் கொண்டிருக்கும் நெருக்கடியின் சர்வதேசப் பரிமாணங்கள் பெரிதும் அலட்சியப்படுத்தப்பட்டன. லு பென்னும் மெக்ரெட்டும் தங்களை புரூஸெல்சின் (Brussels) எதிராளிகளாய் முன்நிறுத்திக் கொண்டதன் மூலம், வேலையின்மையின் வளர்ச்சிக்கும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களில் சீரழிவிற்கும் ஐரோப்பிய ஒருங்கிணைப்பின் மீதும் யூரோ அறிமுகப்படுத்தப்பட்டதன் மீதும் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதும் குற்றம் சாட்டுவதன் மூலம் ஆதாயம் அடைந்தனர் என்பதில் கேள்விக்கே இடமில்லை.

முதலாளித்துவ பூகோளமயமாக்கலுக்கு தொழிலாள வர்க்கம் பின்னோக்கிப் பார்க்கும் மாற்றீட்டைக் காட்டிலும் முன்னோக்கிப் பார்க்கும் மாற்றீட்டை கட்டாயமாக வழங்க வேண்டும். அது பேரினவாத மற்றும் புலம்பெயர்ந்தோர் விரோத வாய்ச்சவடாலை சோசலிச சர்வதேசியத்தின் மீது அடித்தளமாக கொண்டிருக்கும் வேலைத்திட்டத்தால் எதிர் கொள்ளவேண்டும். முதலாளித்துவ பூகோளமயமாக்கல் நிறுவனங்களின் அதிபர்களுக்கு மட்டும் "எல்லைகள் இல்லாத ஐரோப்பாவை" அர்த்தப்படுத்துகிறது, அதேவேளை தொழிலாளர்கள் தேசிய எல்லைகளுக்குள் தொடர்ந்து அடக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதாகும். 20 ஆண்டுகளுக்கு முன்பே மித்திரோன் இன் கீழ் கூட சாத்தியமற்றதாக இருந்த, பிரெஞ்சு தேசியவாத வேலைத்திட்டத்திற்கு திரும்புதல் என்ற பிற்போக்கு கற்பனாவாதத்தை நாம் நிராகரிக்கிறோம். சகல இனத்தையும், தேசியத்தையும் சார்ந்த தொழிலாளர்கள் தாங்கள் விரும்பும் இடங்களில் வசிக்க, தொழில் புரிய மற்றும் விரும்பும் இடங்களுக்குப் பயணம் செய்வதற்கான முழு சுதந்திரத்துடன் கூடிய ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக நாம் போராடுகிறோம்.

சோசலிசத்தன் சாரம் சர்வதேசியம் ஆகும். பிரெஞ்சுத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நலன்களை பாதுகாப்பதற்கான போராட்டம் ஏகாதிபத்தியத்திற்கு-- அமெரிக்க வகை மட்டுமல்லாது பிரெஞ்சு, பிரித்தானிய, ஜேர்மன் மற்றும் ஜப்பான் வகைகளுக்கும் எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாக இருக்கிறது. சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டரசாங்கத்தின் மாபெரும் குற்றம் ஆபிரிக்காவில், மத்திய கிழக்கில், பால்கனில் மிக அண்மையில் ஆப்கானிஸ்தானில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்துக்காக அதன் ஆதரவை அளித்ததாகும். முன்னாள் அல்ஜீரிய பாராசூட் படைவீரரும் சித்திரவதையாளருமான லு பென் இருக்கும் அதே முகாமில் ஜொஸ்பன் இவ்வாறு தன்னையும் வைத்துள்ளார்.

பிரான்சுக்குள்ளே ஜனநாயகத்தைப் பாதுகாத்தல் என்பதன் பேரில் சிராக்கிற்கு வாக்களிக்க அழைப்பு விடுப்பவர் இந்தத் தீர்க்கமான சர்வதேசப் பிரச்சினைகளுக்கு முதுகைத் திருப்பிக் கொள்கிறார்கள் (பாராமுகமாக இருக்கிறார்கள்). சிராக்கிற்கு வாக்களிப்பது ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க யுத்தத்தில் பங்கேற்க ஏற்கனவே தன்னை ஒப்படைத்திருக்கும் அரசாங்கத்திற்கான அரசியல் பொறுப்பினை எடுப்பதாகும். அந்த ஏகாதிபத்தியத் தலையீடானது முழு மத்திய கிழக்குப் பகுதியையும் சீர்குலையச் செய்வதுடன் இன்னும் பொதுவான ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான யுத்தத்திற்கு வழிவகுக்க கூடியது.

வரலாற்றின் படிப்பினைகள்

"ஜனநாயகத்தைப் பாதுகாத்தல்" என்ற பெயரில் பிற்போக்கு சிராக்கிற்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுவது இடதுகளைப் பொறுத்தவரை சட்டப்பூர்வமானதாக இருந்தால், பின்னர் அவரது அரசாங்கம் பதவி ஏற்றதும், அவரது அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு வாக்களிப்பது சட்டப்பூர்வமானது, மற்றும் அவரது அரசாங்கத்தில் சட்ட மன்ற உறுப்பினராகவோ அல்லது கபினட் அமைச்சராகவோ சேர்வது கூட சட்டப்பூர்வமானதுதான். அத்தகைய சந்தர்ப்பவாத அரசியல் பிரெஞ்சுத் தொழிலாளர் இயக்கத்தில் நீண்ட துன்பகரமான வரலாற்றைக் கொண்டிருக்கிறது, நூற்றாண்டுகளுக்கு முன்னர் முதலாளித்துவ அரசாங்கத்தில் சேர்ந்த முதலாவது சோசலிஸ்ட் அரசியல்வாதியான, இழிபுகழ் பெற்ற Alexandre Millerrand த் திரும்பிப் பார்ப்போம். Millerrand டும் கூட Dreyfusards விரோத அதி வலதுசாரி அச்சுறுத்தலுக்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாத்தலின் தேவையால் செயல் நோக்கங் கொண்டதாகக் கூறிக் கொண்டார். அவர் சேர்ந்த அரசாங்கம் இறுதியில் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களின் இரத்தம் தோய்ந்த படுகொலைகளில் ஈடுபட்டது.

1936ல் பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் முதலாளித்துவ தீவிர சோசலிஸ்டுகள் கொண்ட கூட்டணியான, மக்கள் முன்னணியை அமைப்பதற்காக அதே மாதிரி கூற்றுக்கள் கூறப்பட்டன. மக்கள் முன்னணி அரசாங்கமானது தொழிலாள வர்க்கத்தின் ஆதரவின் மூலம் அதிகாரத்துக்குக் கொண்டு வரப்பட்டது, பரந்த பொது வேலைநிறுத்தத்தில் வெடித்துக் கிளம்பிய புரட்சிகர இயக்கத்தை செறிவற்றதாகச் செய்யவும் பிரெஞ்சு முதலாளித்துவத்தைக் காப்பாற்றவும் சோம்பலின்றி வேலை செய்தது. தொழிலாள வர்க்கத்தைக் கட்டுப்படுத்தும், காட்டிக் கொடுக்கும் மற்றும் சோர்வுறச்செய்யும் அதன் வேலைகளை முடித்ததும், 1940ன் பொறிவிற்கும் பாசிச ஆதரவு விக்கி ஆட்சியை நிறுவவும் மேடையை அமைத்துக் கொடுத்ததுடன், அது வலதுசாரிகளுக்கு அதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுத்தது.

சில வட்டாரங்களில், குறிப்பாக ஜேர்மனியில் ஹிட்லர் அதிகாரத்துக்கு வரும் ஆண்டுகளில், ஸ்ராலினிச "மூன்றாவது காலகட்டத்தின்" அதி-இடது கொள்கைகளுக்கு எதிரான லியோன் ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தை மேற்கோள்காட்டுவதன் மூலம் சிராக்கிற்கு வாக்களிப்பதை நியாயப்படுத்தும் போலியான மற்றும் சிடுமூஞ்சித்தனமான முயற்சிகள் இருந்து வருகின்றன. அப்போது ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிசத் தலைமையால் பின்பற்றப்பட்ட சமூக ஜனநாயகக் கட்சியை பாசிசத்துடன் இனங்காட்டிக் கொண்டு மற்றும் நாஜி அச்சுறுத்தலைத் தோற்கடிக்க தொழிலாள வர்க்க இயக்கங்களுடன் எந்த விதமான கூட்டையும் நிராகரிக்கும் கொள்கையை ட்ரொட்ஸ்கி எதிர்த்தார்.

எவ்வாறாயினும், தொழிலாள வர்க்கத்தின் ஐக்கிய முன்னணி போராட்டத்திற்கான ட்ரொட்ஸ்கியின் பிரச்சாரமானது, ஸ்ராலினிஸ்டுகள் அடுத்து மக்கள் முன்னணி நோக்கி வலதுசாரித் திருப்பத்தை எடுத்ததுடன் பொதுவான ஒன்றையும் கொண்டிருந்ததில்லை. மக்கள் முன்னணியானது "ஜனநாயகத்தைப் பாதுகாத்தல்" என்ற பேரில் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவக் கட்சிகளுக்குக் கீழ்ப்படுத்தியது. இந்தக் கொள்கைதான் ஸ்பானியப் புரட்சியை அழித்தது மற்றும் பிரான்சில், சிலியில் மற்றும் டசின் கணக்கான நாடுகளில் பேரழிவுகளுக்கு வழிவகுத்தது, அதுதான் சிராக்கிற்கான பிரச்சாரத்தில் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

2002ல் உள்ள பிரான்சை 1932ல் இருந்த ஜேர்மனியின் நிலையுடன், அல்லது லு பென்னை ஹிட்லருடன் எந்திர ரீதியில் இனம்காணல் தவறாக இருக்கும். தேசிய முன்னணிக்கும் நாஜிக்களுக்கும் இடையிலான அரசியில் மற்றும் கருத்தியல் ரீதியான ஒத்த தன்மைகள் என்னென்ன இருப்பினும், லு பென்னின் இயக்கம் இந்தக் கட்டத்தில் மிகப் பலவீனமாகவே உள்ளது. அதன் வெற்றிகள், முதலாளித்துவத்தின் பூகோள ரீதியான பொறிவினது பாதிப்பின் கீழ் அழுகிப்போன குட்டி முதலாளித்துவப் பகுதிகள் பரந்த ரீதியில் தீவிரமயமாதலின் விளைவாக இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் தொழிலாள வர்க்கத்தின் பழைய கட்சிகளின் திவால் மற்றும் நீண்ட சீரழிவு இவற்றால் உருவாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் திசைவழி விலகலில் இருந்தே பெரும்பாலும் அவை மூலமாகக் கொண்டு தோன்றி இருக்கின்றன.

இருந்த பொழுதும் வரலாற்று ரீதியான ஒத்ததன்மைகள் படிப்பினைகளைக் கொண்டுள்ளன. "லு பென்னைத் தடுத்து நிறுத்த" சிராக்கிற்கு வாக்களிக்குமாறு வாதம் புரிவோர் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியினரின் அடியைப் பின்பற்றி நடக்கிறார்கள், அவர்கள் 1932ல், ஜேர்மன் ஜனாதிபதி தேர்தலில் "ஹிட்லரைத் தடுத்து நிறுத்துவதற்காக" பிற்போக்கு இராணுவவாத ஹிண்டன்பேர்க்கை ஆதரித்தனர். 1933 ஜனவரியில், ஒரு ஜனாதிபதி என்ற முறையில், ஹிட்லரை ஜேர்மனியின் சான்செலராக அதிகாரத்திற்கு வருமாறு அழைத்தது ஹிண்டன்பேரக் தான். ஜேர்மன் பேரழிவுகள் முழுவதும், சமூக ஜனநாயகமானது முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் முதலாளித்துவ அரசின் முன்னால் நெடுஞ்சாண் கிடையாகத் தொடர்ந்து கிடந்தது, பாசிசத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுதந்திரமாக அணிதிரட்டுவதற்கான எந்த முயற்சியையும் எதிர்த்தது.

சிராக், லு பென்னிடமிருந்து கொள்கை ரீதியான அரசியல் வேறுபாட்டைக் கொண்டிருக்கவில்லை. எதிர்காலத்தில், அவர் அரசியல் ரீதியான தக்க சூழ்நிலையைக் கண்டால், முட்டுக் கொடுப்பதற்கு லு பென்னை நன்றாகவே அழைக்கக்கூடும் அல்லது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தனது கரத்தைப் பலப்படுத்தும் பொருட்டு அவரை தனது அரசாங்கத்தில் சேருவதற்குக் கூட அழைப்பு விடுக்கக்கூடும்.

முக்கியமான வரலாற்றுப் பிரச்சினை என்னவென்றால் தொழிலாள வர்க்கம் சுதந்திரமான அரசியல் நிலைப்பாட்டை தனதாக்கிக் கொள்வது மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டம் பற்றிய கொழுந்து விட்டு எரியும் பிரச்சினைகள் உட்பட, ஒவ்வொரு அரசியல் பிரச்சினை மீதும் தனது சுதந்திரமான பலத்தை அபிவிருத்தி செய்து கொள்வது ஆகியவற்றின் அவசியம் ஆகும். இறுதி ஆய்வில், முதலாளித்துவ அரசின் கட்சிகள் மற்றும் நிறுவனங்கள் அல்ல - தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான அரசியல் பலம் மட்டுமே ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.

இன்று முன்னேறுவதற்கான பாதை

இரண்டாவது சுற்று தேர்தலைப் புறக்கணிப்பதற்கான ஆக்ரோஷமான பிரச்சாரமானது எந்த வேட்பாளர் ஜனாதிபதி பதவியை வென்றாலும் அவருக்கு எதிரான போராட்டத்தைக் கூட்டுதற்கு தொழிலாள வர்க்கத்திற்கான சிறந்த தயாரிப்பாக இருக்கும். சிராக்கிற்காக வாக்களிக்குமாறு அழைப்பு விடுபவர்கள், அரசியலானது மே5ல் தொடங்கி மற்றும் அன்றே முடிவடைந்து விடுகிறாற் போன்று செயல்படுகிறார்கள், வாக்குப் பதிவிற்குப் பின்னர் தவிர்க்க முடியாதபடி அபிவிருத்தி அடைந்தே தீரும் வர்க்க மற்றும் சமூகப் போர்களில் தலையிடாது செய்ய விடுவது ஒரு புறம் இருக்கட்டும், அவர்கள் பின்வரும் மாதத்தில் பாராளுமன்றத் தேர்தல்களிலும் கூட ஏற்படப் போகும் சிராக் ஆதரவு பிரச்சாரத்தின் பாதிப்புக்களை அலட்சியப் படுத்துகின்றனர்.

கடந்த முறை சிராக், பிரான்சின் ஜனாதிபதியாய் தேர்ந்து எடுக்கப்பட்டபோது என்ன நிகழ்ந்தது என்பதை நாம் நினைவு கூருவோம். எலிசே அரண்மணையில் அவர் நுழைந்து ஆறு மாதங்களுக்குள்ளே, பிரான்சானது 1968 மே-ஜூனுக்குப் பின்னர், வேலை நிறுத்தங்கள் மற்றும் மாணவர் எதிர்ப்புக்களின் சக்தி மிக்க அலைகளால் அதிர்ந்தது. ஓய்வூதியங்கள் மற்றும் ஏனைய சமூக நலன்கள் மீதான யூப்பே அரசாங்கத்தின் தாக்குதல்களால் தூண்டி விடப்பட்ட, 1995 நவம்பர்-டிசம்பர் போராட்டங்களானது, பிரெஞ்சு முதலாளித்துவத்தை தள்ளாட வைத்தது, யூப்பே அரசாங்கத்தைக் கீழறுத்தது, கோலிஸ்டுகளின் தோல்விக்கான மற்றும் ஜொஸ்பன் தன்னும் உத்தியோகரீதியான இடதுகளின் தலைவர்களும் முற்றிலும் வியக்கும் வண்ணம் சோசலிஸ்டுகள் தலைமையிலான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான நிலைமைகளை உண்டு பண்ணியது.

இந்த வரலாற்றை எண்ணத்தில் இருத்திக் கொண்டு, "சிராக்கிற்கு 100 சதவீத வாக்கு" என்ற தற்போதைய பிரச்சாரமானது, 1995ம் வருடத்தினதுக்கும் அப்பாலான பரிமாணங்களைக் கட்டாயமாக மேற்கொள்ளும் போராட்டங்களை அரசியல் ரீதியாக முன்னெடுக்கும் தொழிலாள வர்க்கத்தை அங்கிங்கும் அசையமுடியாது இறுக்க முயற்சிப்பதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. சிராக்கிற்கு பெருவாரியான வாக்களிப்பின் விளைவானது அவரது அரசியல் பொறுப்பை, ஒரு அரைப் பொனபாட்டிச உருவாக, பெரிய அளவில் முனைப்புடையதாக்கும். தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு எதிராக ஈவிரக்கமற்ற வகையில் இந்தப் பொறுப்பினை அவர் பயன்படுத்துவார்.

சோசலிஸ்ட் கட்சி மற்றும் "அரசாங்கத்துக்குரிய இடதுகள்"-ன் ஏனைய அமைப்புக்களின் தலைவர்கள் இந்த நோக்கம் பற்றி முழுவதும் நனவுடன் இருக்கின்றனர் என்பது பற்றிய பல அறிகுறிகள் தென்படுகின்றன. எதிர்ப்புக்கள் தேர்தலுக்குப் பிந்திய கால கட்டத்தில் தனியார்மயமாக்கல், வேலை நிலைமைகளை அழித்தல், வேலைகளையும் சம்பளங்களையும் வெட்டல் ஆகிய வலதுசாரி வேலைத்திட்டத்தை மேற்கொள்ளுவதற்கு மிகக் கடினமன சூழ்நிலைமைகளை உண்டு பண்ணலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, இவ்வாறு அவர்கள் லு பென்னுக்கு எதிரான பரந்த ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றனர்.

கடந்த கால் நூற்றாண்டின் மாபெரும் படிப்பினை யாதெனில், ஒரு சமயம் தொழிலாள வர்க்கத்திற்காகப் பேசிய பழைய, காலாவதியாகிப்போன, புதைவடிவமாகிவிட்ட அமைப்புக்களின் பிற்போக்கு அரசியல் செல்வாக்கினை எதிர்த்துப் போராடுவது அத்தியாவசியமாகும். இந்த அமைப்புக்கள் இன்று அதிகாரத்துவ சுய நலன்கள் மற்றும் அரசு மானியங்களால் ஒன்றாய்ப் பிடித்து வைக்கப்பட்டு, காலியாகிப்போன ஓடுகளுக்கும் சிறிது அதிகமாகி விட்டன.

ஜொஸ்பனின் சொந்த அரசியல் வளைவரையை (Trajectory) இந்த பழைய அமைப்புக்களை பலதசாப்தங்களாக தனதாக்கிக் கொண்ட அழிவுண்டாக்கக் கூடிய விளைபயன்களில் காணமுடியும். சந்தர்ப்பவாதத்துக்கு மூடு திரையாக லியோன் ட்ரொட்ஸ்கியின் அரசியற் கோட்பாடுகள் மற்றும் வரலாற்று உயர்மதிப்பைப் பயன்படுத்திக் கொள்ள நாடும் ஒருவருக்கு பாடநூல் வடிவிலான ஒரு உதாரணத்தை அவர் வழங்குகிறார். அவர் தனது அரசியற் பணியை அவமானப்படத்தக்க வகையில் முடித்துக் கொண்டார், சரியாகச் சொன்னால் பிரெஞ்சுத் தொழிலாளர்கள் ஆபத்தான நிலைகளை எதிர்கொள்ளும் கட்டத்தில் அரசியல் பொறுப்பினைக் கைவிட்டார்.

பிரெஞ்சு அரசியலும் உலக அரசியலும் ஒரு வரலாற்றுத் திருப்பு முனையில் இருக்கின்றன. நீண்ட காலத்திற்கு முன்னரே ட்ரொட்ஸ்கி விளக்கியவாறு, எல்லாம் "அகநிலைக் காரணிகளை" அதாவது, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவையும் புரட்சிகரத் தலைமையையும் சார்ந்து இருக்கின்றன. முதலாளித்துவப் பொதுக்கருத்தால் மனோவசியப்படாத தலைமை எடுத்துக் கொள்ளுமாயின் தொழிலாள வர்க்கத்தின் மீதும் அதன் அரசியல் பலத்தின் மீதும் நம்பிக்கை வைக்குமாயின், ஜோஸ்பன் மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் நெருக்கடி சோசலிச மற்றும் சர்வதேச வேலைத் திட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான பரந்த அரசியல் இயக்கத்தின் அபிவிருத்திக்கான வழியைத் திறக்கும்.

ஏப்பிரல் 21 அன்று எல் ஓ, எல் சி ஆர் மற்றும் பி .டி ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் உண்மையான உணர்வுகள் வெளிறிய எதிரொலிப்பை மட்டுமே கண்டன. இந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் வெளிப்படையாகப் பேசுவது அவசியமானது: உங்களது தலைவர்களின் நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகளின் அடிப்படையில், உங்களது அமைப்புக்கள் அவர்கள் முன் இப்போது வைக்கப்பட்டிருக்கும் அக்கறையுடன் கூடிய கவனமான பொறுப்பினைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை இந்நாள்வரை எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். தற்போதைய நெருக்கடியில் தெளிவான வகையில் தலைமை கொடுக்குமாறு நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். இதன் அர்த்தம் ஸ்தூலமாக மே5 ஜனாதிபதிக்கான வாக்குப் பதிவைப் புறக்கணிப்பதற்கான அழைப்பை முன்னெடுங்கள் என்பதாகும். உலக சோசலிச வலை தளமானது பிரான்சிலுள்ள அனைத்து சோசலிஸ்டுகளையும் இந்தக் கோரிக்கையை எழுப்பவும் அதற்காகப் போராவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

See Also :

பிரான்சின் தேர்தலை பகிஸ்கரி--
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் அறிக்கை

ஜனாதிபதி தேர்தலில் நவ-பாசிச லு பென் கோலிச சிராக்கை எதிர்கொள்ளகின்றார்
தேசிய முன்னணியின் தலைவருக்கு வழங்கப்பட்ட வாக்குக்கள் பிரான்சின் அரசியல் நெருக்கடியை தீவிரமாக்குகின்றது