World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரான்ஸ்

The French presidential election: What the figures reveal

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்: புள்ளிவிவரங்கள் என்ன கூறுகின்றன

By Peter Schwarz and Patrick Martin
27 April 2002

Use this version to print | Send this link by email | Email the author

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் முதலாவது சுற்று வாக்கெடுப்பின் பின்னர் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பு மதிப்பீடுகள், முடிவின் மிகவும் துல்லியமான ஆய்வை சாத்தியமாக்கி உள்ளது, அது நவபாசிச தேசிய முன்னணி தலைவர் ஜோன்-மேரி லூ பென், தற்போதைய பிரெஞ்சு ஜனாதிபதி கோலிஸ்ட் ஜாக் சிராக்கிற்கு இரண்டாவது சுற்றில் எதிர்த்துப் போட்டியிடக் கூடியவராக உருவெடுத்துள்ளார் என அனுமதிக்கிறது.

ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொண்டால், தேர்தல் முடிவானது பிரெஞ்சு சமூகத்தின் பெரும் துருவமுனைப்படலை வெளிப்படுத்துகிறது. இரண்டு பிரதான முதலாளித்துவ முகாம்கள் பெரும் எண்ணிக்கையில் வாக்குகளை இழந்தன. 1995ல் ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது சுற்று வாக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், ஜாக் சிராக்கின் வலதுசாரி முகாம் சுமார் நாற்பது இலட்சம் வாக்குகளை இழந்தது, அதேவேளை பிரதமர் லியோனல் ஜோஸ்பன் (சோசலிசக் கட்சி) உடைய "பன்மை இடதுகள்" பதினைந்து இலட்சம் வாக்குகளை இழந்தது.

ஜோஸ்பன் தன்னும் 1995ல் பெற்றதைவிட 25 இலட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளார், ஆனால் இந்தச் சரிவில் பெரும்பகுதி ஜோன்-பியர் செவன்மோ (Republican Pole) மற்றும் கிறிஸ்டியன் டபுரா (இடது தீவிரவாதிகள்) ஆகியோரின் தனித்த வேட்பாளர் நிலைகளுக்கு சேர்ந்தது, இருவரும் இணைந்து 21 இலட்சம் வாக்குகளைப் பெற்றனர். ஒவ்வொருவரும் 1995ல் சோசலிசக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இருந்தனர். ஜோஸ்பனின் இன்னொரு கூட்டணி பங்காளரான பசுமைக் கட்சியினர் (Greens) அதன் வாக்குகள் ஐந்து இலட்சம் அளவில் அதிகரிக்கக் கண்டது. கம்யூனிஸ்ட் கட்சியானது வரலாற்றுப் பொறிவால் பாதிக்கப்பட்டது, 1995ஐ ஒப்பு நோக்குகையில் 16,40,000 வாக்குகளை இழந்து, அரைப்பகுதிக்கும் அதிகமாக இழந்தது.

சோசலிசக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு ஒட்டு மொத்த இழப்பானது அதி இடது கட்சிகளால் ஈட்டப்பட்ட வெற்றிகளுக்கு கிட்டத்தட்ட சமப்படுத்தியது. அவர்களுக்கு 1995ஐ ஒப்பிடுகையில் 12 இலட்சம் வாக்குகள் பதிவாகியது. அந்த ஆண்டு மட்டுமே Lutte Ouvriére பேச்சாளர் ஆர்லெட் லாகியேர் தேர்தலில் நின்றார். இந்த ஆண்டு அப்பெண்மனி டிராட்ஸ்கிஸ்டுகள் என்று கூறிக்கொள்ளும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தைச் சேர்ந்த (Ligue Communiste Révolutionnaire) Olivier Besancenot மற்றும் Parti des Travailleurs கட்சியின் டேனியல் குலுக்ஸ்டெய்ன் ஏனைய இரு வேட்பாளர்களுடனும் சேர்ந்து கொண்டார். இவர்கள் மூவரும் சேர்ந்து 30இலட்சம் வாக்குகளைப் பெற்றனர்.

அதிவலதுசாரி கட்சிகள் தங்களின் வாக்குகளில் 900,000 வாக்குகளுக்குமேல் அதிகரிப்பைக் காட்டினர். லூ பென்னின் இரண்டாவது இடம் முடிவு அரசியல் அதிர்ச்சி அலைகளை விளைவித்தது, ஆனால் உண்மையில் அவரது மொத்த வாக்குகள் 1995ஐ ஒப்பிடுகையில் 2,50,000 அளவில் மட்டும் அதிகரித்தன. அவரது முன்னாள் கூட்டாளியும் 1991ல் தேசிய முன்னணியில் இருந்து உடைத்துக் கொண்டு வந்தவரும் ஜனதிபதி பதவிக்கு முதல் முறையாகப் போட்டி இடுபவருமான புருனோ மேக்ரே 6,70,000 வாக்குகளைப் பெற்றார்.

அதிவலதுசாரி கட்சிகள் இவ்வாறு பாரம்பரிய வலதுகளால் இழக்கப்பட்ட ஒன்றேகால் பகுதியை மட்டுமே ஈட்ட முடிந்தது. பெரும் அதிகரிப்பு வாக்களிக்கச் செல்லாத, பதிவு செய்யப்பட்ட வாக்களிக்காத மக்களில் இருந்தது. அவர்களது எண்ணிக்கை 1995ஐ ஒப்பிடுகையில் முப்பது இட்சம் அளவில் அதிகரித்தது. வாக்களிக்கச் சென்ற வாக்காளர்களின் எண்ணிக்கையில் கூட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தது மற்றும் 16 வேட்பாளர்களில் எவரையும் தேர்ந்தெடுக்க மறுத்து, வெற்றுச்சீட்டாக வாக்களித்த அல்லது வாக்குச்சீட்டை நாசப்படுத்தியவர்களும் அதிகரித்த அளவில் இருந்தனர்.

சமூக ஜனநாயகக் கட்சி சார்புடைய பத்திரிகையான விடுதலை (Liberation)-JTM ஒரு ஆய்வாளர் சுட்டிக் காட்டுகிறவாறு, வாக்களிப்பானது, ஒவ்வொன்றும் 90 இலட்சம் முதல் ஒருகோடி வரையிலான வாக்குகளுடன், கிட்டத்தட்ட மூன்று சமமான முகாம்களாக பிரான்ஸ் பிரிந்துள்ளதைக் காட்டுகிறது: பிரதமர் ஜோஸ்பனின் "இடது" முகாம்; ஜனாதிபதி சிராக்கின் "வலது" முகாம்; மற்றும் நவபாசிச வலதுகளுக்கோ அல்லது அதி இடதுகளுக்கோ வாக்களித்த அரசாங்கத்திற்கு எதிரான முகாம். வாக்களிக்காத அல்லது வாக்குச்சீட்டை நாசப்படுத்திய நபர்கள் சுமார் 12 இலட்சம் அளவில் பெரிய முகாமாகக் கூட இருந்தனர்.

வாக்களித்தலுக்கான சமூகப் பின்னணி

விடுதலை இதழும் லூயி ஹாரிஸ் நிறுவனமும் தேர்தல் நாளன்று 2,175 பேர்களின் தொலைபேசி வாக்களிப்புக்கள் பற்றி கணக்கெடுப்பை மேற்கொண்டன. புள்ளிவிவரங்கள் தவிர்க்க முடியாதபடி தற்காலிகமானவையாக இருக்கின்றன, ஆனால் அவை பல்வேறு கட்சிகளுக்கான ஆதரவின் சமூகச் சேர்க்கை பற்றி சில முடிவுகளைக் கூறுகின்றன.

ஜோஸ்பனின் சோசலிசக் கட்சி நடுத்தர வர்க்கக் கட்சி, தொழிலாளர்களினது அல்ல. விடுதலை இதழின் மதிப்பீட்டின் படி, ஜோஸ்பன் ஆதரவு வாக்காளர் பின்வரும் பண்போவியக் குறிப்பை உறுதிப்படுத்துகின்றனர்: ஆண் 25லிருந்து 34 வயது வரையிலான பொதுத்துறைகளில் பணிபுரியும் நடுத்தர அல்லது உயர் பதவியில் உள்ள மேற்பார்வையாளர்கள் அல்லது எழுத்தர் (clerical) பதவியில் உள்ளவர்கள். அவர் உயர்நிலைப் பள்ளியில் மற்றும் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றிருப்பவராக இருப்பதுடன், மாதந்தோறும் 1500க்கும் 3000க்கும் இடையிலான யூரோக்களை சம்பாதிப்பவராக இருக்கிறனர். வாக்களிக்காமை வீதமானதும் கூட இந்த வகையினத்தில் உயர்வாக உள்ளது.

இதற்கு மாறாக, ஜோஸ்பன் குறைந்த படிப்பு படித்த மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களின் மத்தியில் மற்றும் பொதுவாக தொழிலாளர்கள் மத்தியில் சிறிதளவே வாக்குளைப் பெற்றார். 1995ல் 25 சதவீத தொழிலாளர்கள் இன்னும் ஜோஸ்பனுக்கு வாக்களித்தனர். இம்முறை அது 12 சதவீதமாக இருந்தது. அடிமட்டத்து சமூகத் தட்டினர் சோசலிசக் கட்சிக்கும் அதன் ஆளும் கூட்டணிக்கும் தங்களது முதுகைத் திருப்பிக் கொண்டனர்.

சிராக்கிற்கு வாக்களித்தவர்கள் குறிப்பாக பாரிஸ் மற்றும் மிகவும் முன்னேற்றமடைந்த பிரான்சின் மேற்குப் பாதியில் உள்ள வயதானவர்கள், மிகவும் பழமைவாதிகள் பெருந்தொகையாய் இருந்தனர். சிராக் மற்றும் ஜோஸ்பனின் ஆளும் கூட்டணி மொத்தவாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை நாட்டில் வெல்லமுடிந்த ஒரே இடம் பாரிஸ் தான். நாட்டின் தலை நகரத்தில் லூ பென் மற்றும் அதிஇடதுகள் ஆகிய இருவருக்கும் மிகக்குறைவான வாக்குகளைப் பெற்றனர் .

சிராக், 65 வயதுக்கு மேற்பட்ட 31 சதவீதம் பேரிடமிருந்தும், ஆனால் 25 வயதுக்கு கீழானவர்களிடமிருந்து சுமார் 16 சதவீம் பேரிடமிருந்தும் வாக்குகளை வென்றார். கடைசி விவரம் ஊழல் மிக்க பிற்போக்கு ஜனாதிபதிக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் நம்பிக்கையின்னமை இருப்பதைக் காட்டுகிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், சிராக்கால் 29 சதவீத இளைஞர்களின் வாக்குகளை வெல்ல முடிந்திருந்தது.

பொதுவில், வயதானவர்களால் கிடைத்த வாக்குகளைப் பகுத்துப் பார்த்தால் சில கவனிக்கத்தக்க மாறுபாடுகளைத் தருகிறது: மே5ல் போட்டியில் உள்ள, சிராக் மற்றும் லூ பென் இரு வேட்பாளர்களும் வயதானோரில்50 சதவீத வாக்குகளை வென்றனர், ஆனால் இளைஞர்களில் 25 சதவீத வாக்குகளையே பெற்றனர். செய்தி ஊடகங்களும் முதலாளித்துவக் கட்சிகளும் வீதிக் குற்றங்கள் பற்றிய அச்சத்தை ஊதிப் பெருக்கிக் காட்டும் மற்றும் இளைஞர்களையும் புலம்பெயந்தோரையும் பூதமாகப் பெருப்பித்துக் காட்டும் அவர்களின் முயற்சியை எடுத்துக் கொண்டால், இது வியப்பூட்டாது.

லு பென்னுக்கு வாக்களித்தோர் யார்?

லு பென்னுக்கான வாக்காளர்கள் பிரதானமாக, சமூக ரீதியாகவும் புவி இயல் ரீதியாகவும் சமுதாயத்தின் வேறுபட்ட இரு பகுதிகளைச் சேர்ந்தவர்களிடமிருந்து வருகிறது. அவரால் பின்தங்கிய கிராமப்புற பகுதிகளில் இருந்து, குறிப்பாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு பிரான்சில் உள்ள குட்டி முதலாளித்துவ தட்டினரின் ஆதரவை வெல்ல முடிந்தது. அங்கு 1950களில் பியர் பூஜாட் (Pierre Poujade) பிரச்சாரங்களுக்கு திரும்பிச் சென்றால் வலதுசாரி ஜனரஞ்சகவாதத்தின் நீண்ட மரபு இருப்பதைப் பார்க்கலாம் (லு பென் அவரது அரசியல் பணியை பூஜாட்டிஸ்ட் பாராளுமன்ற அங்கத்தவராக ஆரம்பித்தார்). லு பென்னிற்கு கிடைத்த வாக்குகளுக்கான இன்னொரு பிரதான மூலம் கடந்த தசாப்தத்தில் அளவொவ்வாத வகையில் சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடலால் பாதிக்கப்பட்ட வெறுப்பு அடைந்த உடலுழைப்புத் தொழிலாளர்கள், முதன்மையாக வடக்கு மற்றும் வடகிழக்கில் உள்ள வயதான தட்டினர். கையால் வேலை செய்யும் நான்கு தொழிலாளியில் ஒருவரும் (26 சதவீதம்) மாதச்சம்பளமாக 1500க்கு கீழ் வாங்கும் 23 சதவீத வாக்காளர்களும் லு பென்னிற்கு வாக்களித்தனர். ஒரு கணக்கெடுப்பின்படி: "தேசிய முன்னணிக்கு சாதாரண மற்றும் வயதான வாக்காளர்களால் அழுத்தப்பட்ட இந்த சொடுக்கிதான் அக்கட்சியின் தேர்தல் முடிவுக்கான முக்கிய திறவுகோலாக இருந்தது."

லு பென் சிறு வர்த்தகர்கள் மற்றும் கைவினைஞர்களின் 32 சதவீத வாக்குகளையும் கூட பெற்றார். அவர்களில் பெரும்பாலோர், ஐரோப்பிய ஒருங்கிணைப்பு மீதாக கோலிஸ்டுகளுடன் முறித்துக் கொண்ட மற்றும் ஐரோப்பிய நிதி ஒன்றியத்தை உருவாக்கிய மாஸ்ட்ரிச் உடன்படிக்கையை நிராகரிக்கப் பிரச்சாரம் செய்த, சிராக்கின் முன்னாள் விசுவாசியான பிற்போக்கு பிலிப் டு வில்லியே க்கு 1995ல் வாக்களித்தவர்கள். டு வில்லியே இந்த ஆண்டு போட்டியிடாதது, ஐரோப்பிய ஒருங்கிணைப்பின் விளைபயன்கள் மீதான மக்களின் சீற்றத்திலிருந்து லு பென் ஆதாயம் அடையும்படி பெரும் வாய்ப்பெல்லை கொள்ள அனுமதித்தது. (வலது இடது சேர்ந்த அரசாங்கத்திற்கு எதிரான வாக்குகள் மாஸ்ட்ரிச் பொது வாக்கெடுப்புக்கு எதிரான வாக்கெடுப்புடன் மிக நெருக்கமாக ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கிறது.)

லு பென் சமூகப் பிரச்சினைகளால் தொல்லைக்கு ஆளான தொழிலாள வர்க்க மற்றும் கீழ்நிலையில் உள்ள நடுத்தர வர்க்க புறநகர்ப்பகுதிகளில் வசிப்பவரிடமிருந்தும் கூட அவரது வாக்குகளை அதிகரித்துக் கொண்டார். அத்தகைய பல பகுதிகளில் லு பென் சிராக் மற்றும் ஜொஸ்பனை முந்திக் கொண்டு முதலாவதாக வந்தார்.

25 வயதுக்கு உட்பட்ட அனைத்து வாக்காளர்களின் 12 சதவீதம் மட்டும் லு பென்னுக்கு ஆதரவு தந்ததுடன், ஒப்பீட்டளவில் இளையோரிடமிருந்து சில வாக்குகளே அவருக்காக கிடைத்தன. இதற்கு மாறாக, 65 வயதிற்கு மேற்பட்டோர் மத்தியில் அவர் பெற்ற வாக்குகளின் சதவீதம், 9 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக உயர்ந்து இரண்டு மடங்கிற்கும் அதிகமாகின.

லு பென்னுக்கு வாக்களிக்க எந்த விஷயம் அவர்களை முன்னுக்குக் கொண்டு வந்திருந்தது என்று வாக்காளர்கள் கேட்கப் பட்டனர். 73 சதவீதத்தினரைப் பொறுத்தவரையில் அது சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக இருந்தது. 30 சதவீதத்தினரைப் பொறுத்தவரையில் அது குடிவரவு பற்றியதாக இருந்தது. 16 சதவீதத்தினரைப் பொருத்தவரை அது வரி விதிப்பு, முதியோர் ஓய்வுதியம் மற்றும் வேலையின்மைப் பிரச்சினையாக இருந்தது. கேள்வி கேட்கப்பட்ட அவர்கள் அனைவருள்ளும் மூன்றில் ஒரு பங்கினர் ஜனாதிபதி அல்லது பிரதமருடனான தங்களின் மயக்கம் அகற்றலை வெளிப்படுத்தும் பொருட்டே தாங்கள் லு பென்னுக்கு வாக்களித்ததாகக் கூறினர்.

பிரெஞ்சு ஸ்ராலினிசத்தின் நெருக்கடி

ஏப்பிரல் 21 முடிவுகள் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த மட்டில் நெருக்கடி வாய்ந்ததாகும். பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி 1995ல் பெற்ற 8.6 சதவீதத்திலிருந்து கீழிறங்கி 3.4 சதவீதம் மட்டுமே பெற்றது. அதன் வாக்குகள் இரண்டு கோடியே அறுபது இலட்சத்திலிருந்து 9,60,000 வாக்குகளாக வீழ்ச்சி அடைந்ததுடன், ஒட்டு மொத்தம் மற்றும் சதவீதம் ஆகிய இரு அர்த்தங்களிலும், எந்தக் கட்சியையும் விட மிக அதிகமான வீழ்ச்சியைப் பெற்றது. அளவுக் குறியான 5 சதவீதத்திற்கும் கீழே அதன் வாக்கு சதவீதம் குறைந்ததன் மூலம், ஸ்ராலினிஸ்டுகள் தேர்தல் பிரச்சார செலவுக்கான அரசு மானிய உதவிகளைப் பெறுவதற்கான தகுதியை இழந்தனர் மற்றும் பெருத்த நிதிப் பற்றாக்குறையை எதிர் கொண்டுள்ளனர்.

எல் சி ஆர் மற்றும் எல் ஓ நான்காம் அகிலத்தின் புரட்சிகர வேலைத் திட்டத்துடன் எந்தவிதமான உண்மையான பற்று உறுதியையும் நீண்ட காலத்துக்கு முன்பே கைவிட்டுவிட்ட போதிலும், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று கூறிக் கொள்ளும் இவர்கள், ஒவ்வொருவரும் ஸ்ராலினிஸ்டுகளை விடவும் அதிக வாக்குகள் பெற்றமை முக்கியத்துவம் வாய்ந்தது. ட்ரொட்ஸ்கியுடன் பகிரங்கமாக இனம் காட்டிக் கொண்ட இந்த மூன்று கட்சிகளும்- 20 ஆண்டுகளுக்கு முன்பே மிக அரசியல் ரீதியாக செயலூக்கம் கொண்ட தொழிலாள விசுவாசிகளை கட்டுப்பாட்டில் கொண்டிருந்த கட்சியான, ஸ்ராலினை அடிமைத்தனமாகப் பேணிய கட்சியைக் காட்டிலும் மூன்று மடங்கு பெற்றனர்.

பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியால் நீண்டகாலமாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த தொழிலாள வர்க்க புறநகர்ப் பகுதிகளிலும் பல மாநகரங்களிலும், ஏப்பிரல் 21 வாக்களிப்பில் முன்னணியில் நின்ற கட்சி தேசிய முன்னணியாக இருந்தது. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மேயருடன் இருந்த பெரிய நகரமான கலே மற்றும் பாரிஸைச் சுற்றி உள்ள "இடது ஆதரவு" புறநகர்ப் பகுதிகளிலும் இது நிகழ்ந்தது. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் றொபர்ட் ஹியூ, இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், ஒரு புறநகர்ப் பகுதியின் மேயராக முதன் முறையாக முக்கியத்துவம் பெற்ற பொழுது, அவர் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விடுதியை, குற்றத்தின் மூலவளமாக இருப்பதாகக் கூறி, அமைதி காப்புக்குழு தலைமையிலிருந்து தாக்கினார். ஸ்ராலினிஸ்டுகள் இவ்வாறு குற்றம் சம்பந்தமான பிரச்சினைகளிலும் குடிவரவு தொடர்பானதிலும் பிரெஞ்சுத் தொழிலாள வர்க்கத்தை திசைவழிவிலகச் செய்தனர். அவர்களின் பாராளுமன்ற நிலையை அழிப்பதற்கு இப்பொழுது அதே பிரச்சினைகளை லு பென் பயன்படுத்தி இருக்கிறார்.

"அதி இடது"-க்கு வாக்களித்தவர்கள், லு பென்னின் ஆதரவாளர்களில் சில பகுதியினர் போல, சுரங்கத் தொழில், துணி ஆலைத் தொழில் மற்றும் ஏனைய தொழில் துறைப் பகுதிகளில் வீழ்ச்சியால் சிறப்பாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான தொழிற்துறைப் பகுதிகளில் செறிந்து காணப்படுகிறார்கள். கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிசக் கட்சிகளின் பழைய கோட்டைகளில் பல வாக்காளர்கள் மிக அதி இடது மற்றும் வலது கட்சிகளுக்கு வாக்குச் சீட்டை அளித்து தங்களின் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

தொழிலாள வர்க்கம் எதிர் கொள்ளும் நெருக்கடி

விடுதலை நாழிதழ் (Libération ) பாரிசுக்கு அருகே உள்ள சிட்ரோன் கார் தொழிற்சாலையின் வாயிலில் எந்தப் பிரச்சினைகள் தங்களை வாக்களிப்பதற்கு தூண்டின என்று தொழிலாளர்களைக் கேட்டது. கிட்டத்தட்ட அனைவரும் ஜோஸ்பனின் வாக்குறுதிகள் போதும் போதும் என்றாகி விட்டது என்று கூறிக் கொண்டு, ஜோஸ்பன் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினர். வாரம் 35 மணிநேர வேலை சுரண்டலை உக்கிரப்படுத்த வழிவகுத்திருப்பதாக அவர்கள் கூறினர். வருமானங்கள் சரிந்து விட்டன அதேவேளை நெகிழ்ச்சியான வேலை நிலைமைகள் மற்றும் பாதுகாப்பின்மை அதிகரித்திருக்கிறது. நேர்காணல் செய்த ஒன்றாகக் கூடித் திரிந்த மூன்று தொழிலாளர்களில், ஒருவர் லு பென்னுக்கும், மற்றவர் லாகியேக்கும் இன்னுமொருவர் சிராக்கிற்கும் வாக்களித்திருந்தனர்.

கிழக்கு பிரான்சில், வோஜ் மலைகளில் உள்ள, கார் தொழிற்சாலைக்கு பாகங்கள் வழங்கும் நிறுவனத்தில், ஒரு தொழிலாளி தான் ஜோஸ்பனுடன் உள்ள வெறுப்பில் லாகியேக்கு வாக்களித்ததாகக் கூறினார். இருப்பினும், அப் பெண்ணுடன் உடன் பணிபுரியும் 52 வயதான தொழிலாளி லு பென்னுக்கு சிறிது காலமாக வாக்களித்து வந்ததாகக் கூறினார். அப்பெண்மணி "இடதுகள் எங்களது பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவில்லை" என்றார். "இன்று அவர்கள் தலைமையில் உள்ளவர்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இனியும் நாம் அவர்களைக் கணக்கில் எடுக்கப் போவதில்லை" என்றார்.

இந்த எடுத்துக்காட்டுக்கள் மட்டுப்படுத்தப்பட்டனவாக இருக்கலாம், ஆனால் இவை தேர்தல் முடிவானது தவறாகப் புரிந்துள்ளதையோ அல்லது ஒரு வகை குருட்டு வழக்கையோ அடிப்படையாகக் கொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றன. புறநகர்ப் பகுதிகளிலும் பாழாகிப் போய்விட்டதொழில் துறைப் பகுதிகளிலும் சகிக்க முடியாத நிலைமைகளாக வெளிப்பாட்டைக் காணும் சமூக நிலைமைகள், அவை இனியும் பாரம்பரிய அரசியல் இயங்குமுறைகளின் கட்டமைப்புக்குள்ளே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உக்கிரப்படுத்தப்பட்டுள்ளன. பழைய கட்சிகளும் முதலாளித்துவ நிறுவனங்களும் மக்களின் பரந்த தட்டினரின் தேவைகளை இனியும் அவர்களால் வெளிப்படுத்த முடியாது, அல்லது அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாது.

தேர்தல் முடிவில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் முதலாளித்துவ ஜனநாயக நிறுவனங்களின் நெருக்கடிக்கு இரண்டு சாத்தியமான தீர்வுகளே உள்ளன, ஒன்று லு பென்னால் பண்புருப்படுத்திக் காட்டப்பட்டிருக்கும் வலதுசாரி, பாசிச வெளிப்பாடு, அல்லது இடது சாரி, சோசலிச ஒன்று, அதன் அர்த்தம் சமுதாயத்தில் தொழிலாள வர்க்கம் மேலாதிக்கம் செய்யும் சக்தியாக ஆவதற்கு முன்முயற்சி எடுப்பது ஆகும்.

பல தொழிலாளர்கள் இந்நிறுவனத்திற்கு எதிரான தமது எதிர்ப்பை லு பென்னுக்கு வாக்களிப்பதன் மூலம் வெளிப்படுத்தி இருப்பது, மையப் பிரச்சினை தொழிலாள வர்க்கத்திற்குள் உள்ள தலைமை நெருக்கடி மற்றும் அரசியல் முன்னோக்கு நெருக்கடி என்பதை எடுத்துக் காட்டுகிறது. தொழிலாளர் இயக்கம் சமூக ஜனநாயகவாதிகளாலும் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களாலும் நீண்ட தசாப்தங்களாக மேலாதிக்கம் செய்யப்பட்டமை தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவைக் கீழறுத்துள்ளது. சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் சுதந்திரமான ஒரு கட்சியைக் கட்டி எழுப்புவதே இந்த நெருக்கடியை வெற்றி கொள்வதற்கான ஒரே வழியாகும்.

See Also :

ஜனாதிபதி தேர்தலில் நவ-பாசிச லு பென் கோலிச சிராக்கை எதிர்கொள்ளகின்றார்
தேசிய முன்னணியின் தலைவருக்கு வழங்கப்பட்ட வாக்குக்கள் பிரான்சின் அரசியல் நெருக்கடியை தீவிரமாக்குகின்றது