World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இந்தியா

Indian Ruling Coalition in Disarray Over Communal Campaign

மத வகுப்புவாத பிரச்சாரம் மீதாக இந்திய ஆளும் கூட்டணியில் குழப்பம்

By K. Ratnayake
30 March 2002

Use this version to print | Send this link by email | Email the author

மத வகுப்புவாத விஸ்வ இந்து பரிஷத்தினால் இந்து கடவுளான ராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டுவதற்காக நடத்தப்பட்டுவரும் பிரச்சாரம் இந்தியாவில் ஆட்சி செலுத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) ஒற்றுமையற்ற குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. அதேவேளை மார்ச் 22- அன்று பிரதம மந்திரி அடல் பிகாரி வாஜ்பாயி கூட்டணி அங்கத்தினர்களுடன் ஒரு நெருக்கடி மிகுந்த கூட்டத்தில் ஒரு சமரச முயற்சியில் ஈடுபட்டார். அவரது ஸ்திரமில்லாத அரசாங்கத்தின் எதிர்காலம் கேள்விக் குறியாகவே உள்ளது.

வாஜ்பாயின் சொந்த பாரதீய ஜனதா கட்சி (BJP) கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்காக அவர் 22 சிறிய பிராந்திய கட்சிகளின் ஆதரவில் தங்கி உள்ளார். இந்த கட்சிகள் NDA-வில் ஒரு நிபந்தனையின் பேரில் சேர்ந்தன. BJP-ன் முக்கியமான இந்து பேரினவாத வேலைத் திட்டங்கள் அரசாங்கத்தில் பங்கு பெறக்கூடாது என்பதே அது. இதில் அயோத்தியா பிரச்சனையும் அடங்கும். அயோத்தியாவில் இந்து மத வெறியர்கள் ஒரு முஸ்லீம் மசூதியை 1992-ல் இடித்தனர்.

சென்ற வார கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் (JD-U) சமதா கட்சி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் உட்பட்ட பல ழிஞிகி கூட்டணி உறுப்பினர்கள் பி.ஜே.பி-ஐ விஸ்வ இந்து பரிஷத்தையும் மற்றும் இந்து தீவிரவாதிகளையும் கட்டுப்படுத்துமாறு கோரின. விஸ்வ இந்து பரிஷத் பிரச்சனையை உருவாக்கக்கூடிய திட்டம் ஒன்றை அறிவித்தது. இது மார்ச் மாதத்தில் குஜராத் மாநிலத்தில் கோத்ராவில் முஸ்லிம்கள் என்று கூறப்படும் கும்பலால் இரயில் வண்டியை தாக்கி தீ வைக்கப்பட்டதில் கொல்லப்பட்ட விஸ்வ இந்து பரிஷத்தின் சில ஆதரவாளர்களின் அஸ்தி நிறைந்த கலசங்களை ஒரு ஊர்வலமாக எடுத்துச்செல்லும் திட்டமாகும்.

இந்த நிகழ்ச்சி குஜராத் மாநிலத்தில் மதவாத வன்முறையை தூண்டிவிட்டது. இதில் நூற்றுக்கணக்காணவர்கள், முக்கியமாக முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்த சாவுக்களில் பிஜேபி-க்கு நேரடி சம்பந்தமிருக்கிறது. பி.ஜே.பி ஆட்சி செய்யும் குஜராத் அரசாங்கத்தை இந்த சாவுகளை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. பி.ஜே.பி-ன் முன்னணி உறுப்பினர்கள் இப்படுகொலைகளில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்று செய்தி அறிவிக்கப்படுகிறது.

விஸ்வ இந்து பரிஷத்தால் நடத்தப்பட்டுவரும் இப்போராட்டம் கூட்டணி உடைவை அச்சுறுத்தியது. பல பி.ஜே.பி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாகவே இந்த ஊர்வலத்தை ஆதரித்து வருகின்றனர். ஆனால் பி.ஜே.பி-ன் கூட்டணிப் பங்காளர்கள், விஸ்வ இந்து பரிஷத்தின் செயல்கள் மற்றுமொரு வன்முறை மோதல்களை தூண்டிவிடும் அரசியல் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் மற்றும் அரசாங்கத்தின் நிலையற்ற வாக்காளர் தளத்தினைப் பாதிக்கும் என கவலை தெரிவித்திருக்கின்றனர்.

வாஜ்பாயி எப்படியாவது பிரச்சனையை தீர்க்கும் ஆற்றொணா நிலையில் உள்ளார். மார்ச் 15 - அன்று இராமர் கோயிலைக் கட்ட விஸ்வ இந்து பரிஷத் தீர்மானித்திருந்தது. இதை நிறுத்தி வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். கடைசி நேர முடிவாக, விஸ்வ இந்து பரிஷத்தும் அதனை சார்ந்த இராம ஜென்மபூமி அறக்கட்டளையும் வெளியே ஒரு பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டன. ஆனால் இடிக்கப்பட்ட மசூதியின் நிலத்தில் பூஜை செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இந்த ஏற்பாட்டை பல தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் குறை கூறின. ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, தெலுகு தேசம் கட்சி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணிக்கு ஆதரவு தருவதை மறுபரிசீலனை செய்வோம் என எச்சரித்தன.

சென்ற வார தேசிய ஜனநாயக முன்னணி கூட்டத்தில் இந்த கருத்து வேற்றுமைகள் வெளிவந்தன. இது வாஜ்பாயிக்கு முக்கிய சோதனையாக இருந்தது. சமதா கட்சி தலைவர் ரகுநாத் ஜா தன் கட்சியானது அரசாங்கத்துடன் தொடர்பை முறித்துக்கொள்ள தயங்காது என எச்சரித்தார். ஐக்கிய ஜனதாதளத் தலைவர் தேவேந்திர பிரசாத் யாதவ், ``காவி அணிந்து`` இந்து மதகுருக்கள் தான் நாட்டில் பதட்டத்தை உண்டாக்குவதாகக் குற்றம் சாட்டினார்.

கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக ஜம்மு மற்றும் காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சியானது (NC) மேலும் ஒரு படி முன்னேறி, அரசாங்கம் தீவிரவாதிகளுக்கு எதிராக கொண்டு வந்த பொடோ (POTO) சட்டத்தை எதிர்த்து பாராளுமன்றத்தின் மேல் சபையில் வாக்களித்தது. தேசிய மாநாட்டுக் கட்சியின் இந்த வாக்களிப்பு இரு நோக்கங்களுக்கு சேவை செய்தது. முதலில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் மக்கள் ஆதரவு பெறமுடியாத மற்றும் காஷ்மீர் பிரிவினைவாத ஆதரவாளர்கள் என்று கூறப்படுவோருக்கு எதிராக பயன்படுத்தப்படும் பொடோ சட்டத்திலிருந்து தன்னைத் தூர நிறுத்திக் கொள்வது. இரண்டாவதாக, NDA-வைவிட்டு தேசிய மாநாட்டுக் கட்சி விலகுவதாக BJPக்கு ஒரு எச்சரிக்கை விடுப்பது.

ழிஞிகி கூட்டத்தில், அரசாங்கம் ``மதசார்பற்ற`` நிகழ்ச்சிநிரலைக் கடைப்பிடிக்கும் என்று வாஜ்பாயி தனது கூட்டணி கட்சிகளுக்கு உறுதிமொழி அளிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். தனது ஊர்வலத் திட்டத்தைக் கைவிடுமாறு விஸ்வ இந்து பரிஷத்தை ஒப்புக் கொள்ளச் செய்வதில் பொறுப்பு ஏற்றுக் கொண்டிருந்தார். பிரதம மந்திரி குஜராத்திலுள்ள பி.ஜே.பி தலைமையிலான அரசாங்கத்தை பொடோ சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என கட்டளையிட்டார். பொடோ டிசம்பரிலிருந்து ஒரு ஜனாதிபதியின் மேல்நிலை ஆணயாக இருந்து வருகிறது.

குஜராத் மாநில அராங்கம் பொடோவை மத வகுப்புவாத முறையில் செயல்படுத்திற்று. ரயில் வண்டியை முதலில் தாக்கிய முஸ்லிம்களை கைது செய்தது. ஆனால் அதற்கு பின் நடந்த முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறையை தூண்டிவிட்ட இந்து தலைவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இதற்கு பதிலாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் செவ்வாய்கிழமை அன்று பார்லிமெண்டின் இரு அவைகளும் அரிதாக கூடும் கூட்டு அமர்வில் பொடோ சட்டமியற்றல் வைக்கப்படும்போது அதனை ஆதரித்து வாக்களிப்பதாக உறுதி அளித்தனர். இந்த கூட்டு கூட்டம் நாடு 1947-ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து மூன்றே மூன்று முறைதான் கூட்டப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாத மேல் சபையில் எதிர்க் கட்சியினரை சூழ்ச்சியுடன் வெல்வதற்காக வாஜ்பாயி இந்தக் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டினார். இந்த கொடுமையான மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. விசாரணை இல்லாமலே கைதிகளை நீண்டகாலம் சிறைவைக்க இந்த பொடோ சட்டம் வழிவகுக்கிறது.

பி.ஜே.பி கூட்டணியினர் அடுத்த பாராளுமன்றத் தேர்தல்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அதுவரை ஒருவரை ஒருவர் வெறுப்புக் கொண்டு வெளிப்படையாக விமர்சிப்பதை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொண்டனர். இதன் பின்னுள்ள பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாது இருக்கின்றன. இருப்பினும், இந்த அமைதி குலைவிக்கும் அமைதியானது நெடுநாள் நீடிக்காது போகலாம்.

உறுதியற்ற கூட்டணி

சென்றவாரம் அடையப்பட்ட நிலையற்ற சமாதானத்தை குறித்து இந்திய செய்தி பத்திரிகைகள் விமர்சித்தன. திங்கட்கிழமையன்று இந்து ஆங்கில பத்திரிகையின் தலையங்கம், பி.ஜே.பி வாக்குறுதிகளை, ``ஒரு சம்பிரதாயமான சடங்கு, அது ஒரு பொய்; இல்லை எனில், மறைத்துவைக்கப்பட்ட கருத்து வேறுபாடுகள் ஒவ்வொரு முறையும் வெடித்து வெளிப்படுகின்றன`` என கூறிற்று. "இந்து" நாளேட்டின் அரசியல் ஆய்வாளர் கே.கே.கத்யால் தேசிய ஜனநாயகக் கூட்டணியை "அதிகாரபசை" தற்போதைக்கு ஒன்றாகப் பிணைத்திருக்கிறது என்றும், ஆனால் எதிர்காலத்தில் பி.ஜே.பி கூட்டணி உறுப்பினர்கள் தங்கள் நிலைகளை மறுபரிசீலனை செய்யக்கூடும் என்றும் கூறினார்.

காங்கிரஸ் அரசாங்கங்களின் மீது மக்களுக்கு இருந்த பரவலான அதிருப்திக்கு இந்து பேரினவாதத்தின் அடிப்படையில் வேண்டுதல் விடுத்து 1998-ல் பி.ஜே.பி பதவிக்கு வந்தது. பதவிக்கு வந்த பின் வாஜ்பாயி காங்கிரஸின் கீழ் தொடங்கப்பட்ட பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தினார். இது சமூக துருவமுனைப்படலை ஆழப்படுத்தியது. பி.ஜே.பி ஆதரவு தளத்தின் மத்தியில் அந்நியப்படல் உணர்வை வளர்த்தது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சமீபத்திய நெருக்கடியின் பின்னால் தங்களது தேர்தல் வெற்றிகள் குறித்து எல்லா கட்சிகளிடையேயும் பதட்டம் நிலவுகிறது. பி.ஜே.பி மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் மாநிலங்களுக்காக நடத்தப்பட்ட சமீப தேர்தல்களில் படுதோல்வியடைந்தன. பி.ஜே.பிக்கு முன்பு பத்திரமான தளம் எனக் கருதப்பட்ட உத்திரப் பிரதேசத்தில் கூட இவை தோல்வியடைந்தன.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் நாடு தழுவிய தேர்தல்கள் நடத்துமாறு வலியுறுத்தவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பங்காளர்களையும் தன்பக்கம் அழைத்துக்கொள்ள ஊக்கப்படுத்தவில்லை. இதன் காரணங்கள் தெளிவாகத் தெரிந்ததே. பி.ஜே,பி தேர்தலில் தோல்வி அடைந்தது காங்கிரசுக்கு கணிசமான ஆதரவு கிடைப்பதை விளைவிக்கவில்லை. உத்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் இரண்டு பிராந்திய கட்சிகள் மற்றும் பி.ஜ.பி இவற்றுக்குப் பின்னால் நான்காவது இடத்தையே கைப்பற்றியது.

சர்வதேச பத்திரிகைகள் இந்து தீவிரவாதத்தை ஊக்குவித்து தன் நிலையை பலப்படுத்தவேண்டாம் என பி.ஜே.பி-ஐ எச்சரித்து உள்ளன. Economist பத்திரிக்கை பின்வருமாறு கூறியது: ``விரிவடையும் அரசியல் பிளவுகளும், அதிகரித்துவரும் மத வன்முறையும் இந்தியா மற்றொரு கவலைக்கிடமான காலக்கட்டத்திற்குள் நுழைந்திருப்பதை அர்த்தப்படுத்துகிறது``. Far Eastern Economic Review அரசியல் ஸ்திரமற்ற தன்மை ஏற்படும் அபாயங்கள் உள்ளன எனத் தன் அச்சங்களை வெளியிட்டது மற்றும் அரசாங்கத்தை, 'இந்து தீவிரவாதிகளின் கோரிக்கைகளை நிராகரிக்கும்படி' கோரியது.

மேற்கண்ட குறிப்புக்கள் மதவாத அரசியல் இந்திய துணைக்கண்டத்தில் அரசியல் ஸ்திரத்தன்மையை வெகுவாக பாதிக்கும் என்ற சர்வதேச ஆளும் வட்டங்களின் அச்சங்களைப் பிரதிபலிக்கின்றன. மற்றொரு கவலை என்னவென்றால் பி.ஜே.பி கூட்டணி வீழ்ச்சி அடைந்தால் வேறு தெளிவான மாற்றீடு இல்லை என்பதாகும். பெரும்பான்மையினர் நம்பிக்கை இழந்த காங்கிரஸ் கட்சி தனது சொந்த பலத்தில் ஆட்சி செய்யும் நிலையில் இல்லை. முடிவாக ஸ்திரத்தன்மையற்ற பல கூட்டணி அரசுகள் இந்தியாவில் அமையக்கூடும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கோரும், சந்தைப் பொருளாதார சீர் திருத்தங்களை இந்த அரசாங்கங்களால் செயல்முறைப்படுத்த முடியாது.

குறுகிய காலத்தில் பி.ஜே.பி மற்ற கூட்டணிகளை இப்போதே தேட ஆரம்பித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க- வை அது அனுகியுள்ளது. அ.இ.அ.தி.மு.கவுக்கு பாராளுமன்றத்தில் தி.மு.கவை விட அதிக எம்.பி.க்கள் உள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் மாநில பி.ஜே.பி-யுடன் தி.மு.க ஒத்துழைக்காது என அறிவித்தது.

ஆனால் பி.ஜே.பி-ன் எல்லா கூட்டணிகளும், அதன் சொந்த அணியில் உள்ள இந்து தீவிரவாதிகள் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் போன்ற அதனோடு தொடர்புடைய அமைப்புக்களின் செயல்களால் எளிதாக ஒரு இயலா நிலைக்கு கொண்டுவரக்கூடும். விஸ்வ இந்து பரிஷத் இராமர் கோயில் கட்டும் பணிக்கு ஆதரவு திரட்டுவதற்கான திட்டங்களை ஏற்கனவே அறிவித்துள்ளது.

ராஷ்டிரிய சுய சேவக் சங்க் (RSS) பி.ஜே.பி யுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு பாசிச அமைப்பு. இரு வாரங்களுக்கு முன்பு இது தன் மாநாட்டில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இது மதவாத பதட்டங்களை மேலும் அதிகரிக்கும். முஸ்லிம்கள் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கவேண்டுமென்றால் நாட்டின் இந்து பெரும்பான்மையினரின் நல்லெண்ணத்தைப் பெறவேண்டும் என்று அது அறிவித்தது. வாஜ்பாயி மற்றும் மூத்த பி.ஜே.பி தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ்-ன் நெடுநாளைய உறுப்பினர்கள் ஆவர்.

முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை தொடர்கிறது. தேசிய மனித உரிமைக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ் வர்மா குஜராத் முஸ்லிம்களிடம் ``பாதுகாப்பு இல்லாத உணர்வு`` தென்படுகிறது என ஒரு பத்திரிகை நிருபர் கூட்டத்தில் கூறினார். ஆனால் முதலமைச்சர் நரேந்திர மோடி குஜராத்தில் நிலைமை கட்டுக்குள் அடங்கியிருப்பதாக கூறுகிறார். மோடி ஒரு பி.ஜே.பி உறுப்பினர், மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் ஆவார்.

இந்த வாரம் குஜராத்தில் பல நகரங்கள் ஊரடங்கு உத்தரவின் கீழ் இருந்தன. பரோடா, வட்காம், மோடசா, கால்பூர், ஷாப்பூர், ஹிம்மத் நகர், கோத்ரா மற்றும் பஞ்ச் மஹால் மாவட்டத்தில் உள்ள ஏனைய பல இடங்கள் பதட்டமாக இருந்தன. பரோடாவில் இருவர் குத்திக் கொல்லப்பட்டனர் மற்றும் ஆமதாபாத்தில் அறுவர் கொல்லப்பட்டனர்.

மற்ற மாநிலங்களுக்கும் மதவாத வன்முறை பரவியுள்ளது. மார்ச் 16 அன்று பல இந்து தீவிரவாதிகள் ராமர் கோயில் கோஷங்களை எழுப்பிக்கொண்டு ஒரிசா மாநில சட்டமன்றக் கட்டிடத்தை சூறையாடினர். ஹரியாணாவில் ஹிந்து தீவிரவாதிகள் முஸ்லிம் வீடுகளுக்கும் ஒரு மசூதிக்கும் தீ வைத்தனர். மார்ச் 25 அன்று இந்து வகுப்புவாதிகள் ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் இருந்து 90கி.மீற்றர் தூரத்தில் உள்ள முஹரம் என்ற இடத்தில் முஸ்லிம் ஊர்வலத்தை வழிமறித்தனர். கலவரத்தில் ஒருவர் இறந்துவிட்டார், காலால் மிதிக்கப்பட்டோ, அல்லது போலீஸ் துப்பாக்கி சூட்டினாலோ அவர் உயிர் இழந்தார்.

See Also :

இந்தியாவின் ஆளும் கட்சி வகுப்புவாத படுகொலையைத் தூண்டிவிடுகிறது

இந்தியா: அயோத்தி பிரச்சாரம் வகுப்புவாத மோதல் மற்றும் யுத்த மோதல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது