World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The Iraqi oppositionists and US plans for "regime change" in Baghdad

ஈராக்கிய ஆட்சியின் எதிர்ப்பாளர்களும் பாக்தாதில் "ஆட்சி மாற்றத்திற்கான" அமெரிக்க திட்டங்களும்

பகுதி I | பகுதி II

By Peter Symonds
30 September 2002

Back to screen version

கீழே ஈராக்கிய ஆட்சியின் எதிர்ப்பாளர் தொடர்பான இரண்டு பிரிவுகளான கட்டுரையின் முதல் பகுதியை வெளியிடுகின்றோம். இரண்டாவது பகுதி தொடரும்.

புஷ்ஷின் நிர்வாகம் ஈராக் மீதான ஆக்கிரமிப்பும், சதாம் ஹூசைனை அகற்றுவதும் விடுதலையை உறுதிப்படுத்தும் நடவடிக்கை எனவும், நீண்டகாலமாக துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் ஈராக்கிய மக்களுக்கான அமைதிக்கும், ஜனநாயகத்திற்குமான ஒரு புதிய காலகட்டத்திற்கு இட்டுச்செல்லும் என விவாதிக்கின்றனர். அமெரிக்க அதிகாரிகள் தற்போது ஈராக்கிய அரசாங்கத்தை மாற்றுவதற்கான நோக்கத்திற்காக வெளிநாடுகளில் வாழும் ஈராக்கியர்கள் மத்தியில் விரைவான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் பாக்தாதில் அமெரிக்கா சார்பான ஆட்சி ஒன்றினை நிறுவுவதில் எவ்விதமான ஜனநாயகத்தன்மையும் இல்லை. வாஷிங்டன் ஆப்கானிஸ்தானில் செய்தது போன்று, பாகிஸ்தானில் மறைந்திருந்த CIA இன் நீண்டகால சொத்தான ஹமீத் காஸாய் இனை ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாகியது போல் ஒரு புதிய தலைவர், ஈராக்கிய மக்கள் மீது திணிக்கப்படுவார். காபூலில் இருக்கும் அரசாங்கத்தைப்போல், பாக்தாதில் புதிய நிர்வாகமானது கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களால் நிரப்பப்படும். சிலவேளை ஈராக் வடிவிலான லோயா ஜிர்கா (loya jirga - காபூலின் பாரிய எதிர்ப்புக்குழுக்களின் மேடை) போல் உருவாக்கப்படும் ஒன்றிற்கு சட்டபூர்வத்தன்மை வழங்கப்படும்.

இந்த நடவடிக்கைகள் தற்போது ஆரம்பித்துவிட்டது. பாதுகாப்பு அமைச்சரான டொனால்ட் ரம்ஸ்பெல்ட், அவரது உதவியாளரான பெளல் வொல்வோவிட்ஸ், அமெரிக்க பாதுகாப்பு கொள்கை குழுவின் தலைவரான றிச்சாட் பேர்ல் போன்ற புஷ் நிர்வாகத்தின் கடும்போக்காளர்கள், ஹூசைனை பதவி கவிழ்ப்பதற்காக ஈராக்கின் எதிர்க்கட்சியினருக்கு ஆயுதம் வழங்குவதில் நீண்டகாலத்திற்கு முன்னரே வெற்றிபெற்றுள்ளனர். புஷ் பதவி ஏற்றதன் பின்னர், ஈராக்கிய எதிர்க்கட்சியினருக்கு வழங்கப்படும் நிதியுதவியானது குறிப்பிடத்தக்களவு அதிகரித்து வந்துள்ளது.

பத்தாண்டுகளுக்கு மேலாக ஈராக்கிலுள்ளான இரகசிய திட்டங்களுக்கான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு உதவும் ஈராக் தேசிய காங்கிரஸ் (Iraqi National Congress-INC) அவர்களுக்கு மிகவும் விருப்பமானவர்கள் ஆவர். இவ்வமைப்பானது தற்போது இலண்டனில் உள்ள காரியாலயத்தில் இருந்து இயங்குகின்றனர். அவர்களின் தலைவரான அகமத் ஷலாபி (Ahmad Chalabi) ஜோர்டானில் பாரிய ஏமாற்றுகளுக்காக குற்றம் சாட்டப்பட்ட மோசமான செல்வந்தராவர். இத்துடன் இவர் வாஷிங்டனின் நன்கு அறியப்பட்டவரும், றிச்சாட் பேர்ல் போன்றவர்கள் இவரது அமெரிக்க நண்பர்களில் உள்ளடங்குவார்.

கடந்த சிலமாதங்களாக CIA, அரசதிணைக்கள மற்றும் ஏனைய கையாட்களும் புஷ்ஷின் யுத்தத் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு பலவிதமான ஈராக்கிய ஆட்சியின் எதிர்ப்புக்குழுக்களை பயமுறுத்தியும், இலஞ்சம் கொடுத்தும் மற்றும் வசப்படுத்தவும் முனைகின்றனர். அவர்களின் நோக்கமானது ஒரு ஒன்றிணைந்த குழு ஒன்றை உருவாக்குவதும், ஆகக்குறைந்தது மேலெழுந்தவாரியான ஹூசேனுக்கு எதிரான ஒரு நம்பத்தக்க, ஒன்றிணைந்த மாற்றீட்டை உருவாக்குவதாகும். அத்துடன் அமெரிக்காவிற்கு ஈராக்கினுள் தனது ஆக்கிரமிப்பிற்கான திட்டமிடலுக்கும், வசதிகளுக்குமான உளவு, இராணுவ குழுக்கள், தளங்கள் போன்றவையும் தேவையாக உள்ளது.

ஏப்பிரல் மாதம் CIA இரண்டு குர்திஸ்தான் குழுக்களான, குர்திஸ்தான் ஜனநாயக கட்சி (Kurdistan Democratic Party -KDP) மற்றும் குர்திஸ்தான் தேசபக்தி யூனியன் (Patriotic Union of Kurdistan -PUK) போன்றவற்றை சந்தித்து, வடக்கு ஈராக்கின் இரண்டு நகரங்களில் தளங்களை நிறுவுவதற்கான அனுமதியை வேண்டியுள்ளது. பிரித்தானிய பத்திரிகையான Guardian இன் அறிக்கைகளில், கடந்த காலத்தில் CIA இந்த இரண்டு பிரிவினரையும் காட்டிக்கொடுத்ததால் இரண்டு குழுவும் ஐயுறவுடன் இருப்பதாக குறிப்பிட்டது. 1991 இல் இருந்து இவ்விரண்டு குர்திஸ்தான் இராணுவ குழுக்களும் கட்டுப்படுத்திவரும் வடக்கு ஈராக்கானது கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவின் சதிகளுக்கான முக்கிய இடமாகும்.

கடந்த ஜூன் மாதம், வெளிநாட்டு திணைக்களமானது வாஷிங்டனில் ஷியைட் (Shiite) இனரை அடித்தளமாக கொண்ட ஈராக்கின் இஸ்லாமிய புரட்சிக்கான அதியுயர்குழுவுடன் (Supreme Council for the Islamic Revolution in Iraq -SCIRI) தனது முதலாவது உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தையை நடாத்தியது. ஈராக்கின் இஸ்லாமிய புரட்சிக்கான அதியுயர்குழு, ஈராக்கின் ஷியைட் பெரும்பான்மையினரின் அமைப்புகளில் ஒன்றாகும். இது அதனது தலைவரான பக்கீர் ஹாகிம் தங்கியுள்ள ஈரானுடன் தொடர்புகளை வைத்திருக்கின்றது. ஆரம்பத்தில் ஈராக் மீதான அமெரிக்காவின் படையெடுப்பு தொடர்பாக கவனமாக இருந்தபோதிலும், தற்போது வாஷிங்டனின் ஹூசேன் எதிர்ப்பு முகாமில் இணைந்துகொண்டுள்ளது போல் தெரிகின்றது.

ஆகஸ்ட் 10ம் திகதி வெள்ளை மாளிகையில் மிக முக்கியமான கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இது 6 குழுக்களை சதாம் ஹூசேனிற்கு பின்னான அரசாங்கம் தொடர்பான அமெரிக்காவின் முக்கிய திட்டம் தொடர்பாக பெளல், ரம்ஸ்பெல்ட், உதவி ஜனாதிபதி டிக் ஷென்னி உட்பட புஷ்ஷின் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலுக்கு அழைத்திருந்தது. பாதுகாப்பு, வெளிநாட்டு அமைச்சகத்தாலும் மற்றம் CIA, தேசிய பாதுகாப்பு குழு போன்றவற்றால் கூட்டாக ஒழுங்கமைக்கப்பட்ட இக்கூட்டத்தில் ''ஒரு சுதந்திர ஈராக்கிற்காக'' இணைந்து இயங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

அகமத் ஷலாபி தலைமையிலான ஈராக் தேசிய காங்கிரஸ், குர்திஸ்தான் ஜனநாயக கட்சி, குர்திஸ்தான் தேசபக்தி யூனியன், ஈராக்கின் இஸ்லாமிய புரட்சிக்கான அதியுயர்குழு போன்றவற்றுடன், வெளிநாடுகளில் இயங்கும் இரண்டு அமைப்புகளான ஈராக்கிய தேசிய உடன்பாடு (Iraqi National Accord -INA) ம் அரசாட்சிக்கான அரசியலமைப்பு இயக்கமான (Constitutional Monarchy Movement -CMM) போன்றவையும் அதனுள் இணைக்கப்பட்டிருந்தன. ஈராக்கிய தேசிய உடன்பாடு என்பது சதாம் ஹூசேனின் பாத் கட்சியிலிருந்தும், ஈராக்கிய இராணுவத்திலிருந்தும், பாதுகாப்பு அமைப்பில் இருந்தும் முரண்பட்டு சென்ற ஒரு நிழல் குழுவாகும். இது CIA , பிரித்தானியாவின் M16 மற்றும் சவுதி அராபியாவின் உளவுத்துறையுடனும் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கின்றது. இதற்கு இலண்டனிலும், மற்றும் மத்திய கிழக்கிலும் அலுவலகங்கள் உள்ளன. அரசாட்சிக்கான அரசியலமைப்பு இயக்கம், ஈராக்கின் அரசராக ஷெரிப் அலி பின் அல் ஹூசேனை (Sharif Ali Bin Al-Hussein) மீண்டும் இருத்த விரும்புகின்றது.

வெள்ளை மாளிகை கூட்டத்தின் பின்னர் இத் தயாரிப்புக்கள் தீவிரமடைந்துள்ளன. ஒரு வாரத்தின் பின்னர், Sunday Times பத்திரிகையானது, ஈராக்கினுள் இரகசிய தகவல்களை சேகரிக்கவும், உயர்மட்டத்திலான கைவிட்டு ஓடும் நடவடிக்களையும் தூண்டுவதற்காக ஈராக்கிய எதிர்க்கட்சியினர் மறைமுகமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அமெரிக்கா மேலதிக நிதி உதவிவழங்க முனைவதாக குறிப்பட்டது. ஜூலையில் Guardian பத்திரிகையால் ''சிறிய, நிதி உதவி குறைந்த, ஆள்பலமற்ற அலுவலகம்'' என குறிப்பிடப்பட்ட இந்த வெளிநாட்டு அமைச்சின் ''ஈராக் திட்டத்தின் எதிர்காலத்திற்காக'' 6 தொழிற்படும் குழுக்கள், காளான்கள் போல் உருவாகி உள்ளதுடன் அமெரிக்காவிலும், பிரித்தானியாவிலும் கூட்டங்களை நடாத்த ஆரம்பித்துள்ளது. புஷ் நிர்வாகம் 10,000 பேர் அடங்கிய ஈராக்கிய எதிர்ப்புகுழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்குவதற்கு காங்கிரசில் அனுமதி வாங்கவதற்காக தயாரிப்பு செய்வதாக கடந்த வாரம் அமெரிக்க செய்தி ஸ்தாபனங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

வளைகுடா யுத்தத்தின் பின்னர்

இராணுவத்தை விட்டோடியவர்களும், ஐயுறவிற்குரிய வியாபாரிகளும், மன்னராட்சியை விரும்புவர்களையும், அரசியல் சந்தர்ப்பவாதிகளையும், குண்டர்களையும் உள்ளடக்கியுள்ள ஈராக்கிய எதிர்க்குழுவின் கூட்டானது, அமெரிக்கா பாக்தாதில் நிறுவ விரும்பும் அரசாங்கத்தின் ஊழல்மிக்க தன்மையை தெளிவாக காட்ட போதுமானதாகும்.

இவர்கள் அனைவரும், 1990-91 வளைகுடா யுத்தத்தில் இருந்து ஏதோவொரு விதத்தில் வாஷிங்டனுடன் இணைந்தும், சதிசெய்துமுள்ளனர். இவர்களின் பலர் வாஷிங்டனின் சம்பளப் பட்டியலில் நேரடியாக உள்ளடங்கியுள்ளதுடன், கடந்த காலத்தில் ஹூசேனை வெளியேற்ற முயன்று தோல்வியடைந்த அமெரிக்காவின் சதிகளில் பங்குபற்றியிருந்தனர். ஏனைய ஷியைட்டுக்களையும், குர்திஸ்தான் அமைப்புகளையும் பொறுத்தவரையில் யுத்தத்திற்கு பின்னர் உருவாகிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தமக்கு ஓரளவு சுயாதீனத்தை ஸ்தாபித்துக்கொண்டு அமெரிக்காவிற்கும் மற்றும் அப்பிரதேசத்தின் மற்றைய போட்டி சக்திகளுக்கிடையில் கொடுக்கல் வாங்கல்களை நடாத்திவருகின்றன.

வாஷிங்டனோ அல்லது அதனது ஈராக்கிய ஆதரவாளர்களோ ஒரு பரந்த கிளர்ச்சியையோ அல்லது ஜனநாயகம் தொடர்பான உண்மையான வெளிப்பாட்டையோ விரும்பவில்லை. இவ்விரண்டும் ஈராக்கையும், அப்பிராந்தியத்தையும் முக்கியமாக உறுதியற்றதாக மாற்றும். வளைகுடா யுத்தத்தின் மத்தியில் 1991 பெப்பிரவரியில், முன்னாள் ஜோர்ஜ் புஷ், ஹூசேனுக்கு எதிரான கிளர்ச்சிக்கு அழைப்புவிட்டார். ஆனால் பின்னர் தெற்கில் உள்ள ஷியைட்டுக்களும், வடக்கிலுள்ள குர்திஸ்களும் கிளர்ந்து எழுந்தவுடன் அதனை உடனடியாக பின்வாங்கிக்கொண்டார். ஹூசேயினின் விஷேட குடியரசுப் படையினர் (Republican Guards) கிளர்ச்சியாளர்களை கொலைசெய்ததையும், எல்லையை நோக்கி ஒரு தொகை அகதிகளையும் அனுப்பியபோது அமெரிக்க இராணுவம் ஒன்றும் செய்யாது பார்த்துக்கொண்டு இருந்தது.

குர்திஸ்தானியர்களின் சுதந்திரத்திற்கான கோரிக்கைக்கு அல்லது நாட்டின் 60% ஆன மக்களான ஷியைட்டுக்கள் அரசியலில் ஆதிக்கத்தை பெறுவதற்கு ஏதாவது சலுகைகளை வழங்குவதோ அமெரிக்காவின் நோக்கமல்ல. அமெரிக்காவின் கூட்டான துருக்கியோ அல்லது சிரியாவும் ஈரானும் அவர்களது முக்கியமான குர்திஸ்தானிய சிறுபான்மையினர் பலமடைவது தொடர்பாக மிகவும் கவனமாகவுள்ளனர். ஷியைட்டுக்கள் தொடர்பாக அமெரிக்கா சவுதி அராபியாவுடன் இணைந்து அப்பிரதேசத்தில் ஈரானிய ஷியைட்டுக்கள் ஆதிக்கம் பெறுவதற்கான நிலைக்கான எந்தவொரு அடியையும் எதிர்க்கின்றது.

பிரித்தானியாவுடன் இணைந்து அமெரிக்கா ஷியைட்டுக்களினதும், குர்திஸ்தானியர்களினது பரிதாபத்தையும் சுரண்டிக்கொண்டு, ஒருதலைப்பட்சமாக ஈராக்கின் வடபிரதேசத்தை 1991 ஏப்பிரலில் இருந்தும், தெற்கை 1992 ஆகஸ்டிலிருந்தும் ''பாதுகாப்பான சுவர்க்கமாகவும்'', ''பறக்க முடியாத'' பிராந்தியமாகவும் திணித்தது. இராணுவம் அற்ற இப்பிராந்தியங்களானது நாட்டை 3 பிரிவுகளாக பிரிக்கவும், இராணுவ நிலைகளை தாக்குவதற்கு யுத்த விமானங்கள் கண்காணிப்பது என்ற சாட்டின் கீழ் ஈராக்கின் மீது பறப்பதற்கு வழியமைத்தது.

1991 இல் பாக்தாதின் மீதான முழு அளவிலான தாக்குதலை நிறுத்தி, புஷ் நிர்வாகமானது ஹூசேனை உள்சதிகள் மூலமும், இராணுவ கவிழ்ப்புக்களாலும் பதவியகற்ற முனைந்தது. 1992 ஜூனில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் இடம்பபெற்ற ஈராக் தேசிய காங்கிரசின் மாநாட்டை நிறுவுவதில் வாஷிங்டன் முக்கிய காரணியாகும். ஈராக் தேசிய காங்கிரஸ், ஹூசேன் எதிர்ப்பு அமைப்புகளுக்கான ஒரு தாய் (குடை) அமைப்பாகவும் ஈராக்கினுள் இரகசிய நடவடிக்கைளுக்கான முன்னணியுமாகும்.

ஈராக் தேசிய காங்கிரசும் அதனது CIA ஆலோசகர்களும் ஈராக்கின் வடக்கில் முக்கிய குர்திஸ் நகரங்கள் உள்ளடங்கிய, பறக்க தடைசெய்யப்பட்ட 36கு அகலக்கோட்டு பிரதேசத்தில் உள்ள இர்புல் நகரத்தில் தமது நடவடிக்கைளுக்கான தளத்தை நிறுவியுள்ளனர். இரண்டு குர்திஸ்தான் அமைப்புகளான குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சியும், குர்திஸ்தான் தேசபக்தி யூனியனும் இராணுவமற்ற பிரதேசங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நடைமுறையில் ஒரு குர்திஸ்தான் சுயாட்சி பிரதேசத்தை உருவாக்கியுள்ளன. ஒரு குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கத்திற்கான தேர்தல்கள் 1992 இல் நடைபெற்று, குர்திஸ்தான் ஜனநாயக கட்சியின் தலைவரான மசூத் பார்ஸானிக்கும், குர்திஸ்தான் தேசபக்தி யூனியனின் தலைவரான ஜலால் தல்பானிக்கும் இடையில் ஒரு அமைதியற்ற அதிகாரப்பகிர்வு உடன்பாட்டில் முடிவடைந்தது.

கடந்த வருடங்களில் குர்திஸ்தானியர்களினதும், ஷியைட்டுக்களினதும் கிளர்ச்சிகளினது கசப்பான அனுபவங்களின் மத்தியிலும் குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சியும், குர்திஸ்தான் தேசபக்தி யூனியனும் ஈராக் தேசிய காங்கிரசுடன் இணைந்துள்ளன. 1992 இல் வடக்கு ஈராக்கில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ஸ்ராலினிச ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சியும், ஈராக்கின் இஸ்லாமிய புரட்சிக்கான அதியுயர் குழுவின் முன்னோடி கட்சியான, இஸ்லாமிய அடிப்படைவாத அல் தாவா கட்சியும் (Al Daawa party) ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

1990 இன் ஆரம்பத்தில் ஈராக்கிய எதிர்ப்பு குழுக்களின் நடவடிக்கைகளுக்கு நிதிஉதவி வழங்குவதற்காக அமெரிக்கா 100 மில்லியன் டொலர் செலவிட திட்டமிட்டிருந்தது. இதில் கூடியளவு பிரச்சாரத்திற்கும், பொதுஜன உறவுகளுக்குமாக செலவிட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் பாக்தாதிற்கு எதிராக ஒரு கிளர்ச்சியை உருவாக்கும் CIA இனது முயற்சிகள் துன்பகரமாக தோல்வியடைந்தது. 1992 இலும் 1993 இலும் சதிமுயற்சிகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இவை இரண்டும் கைதுகளிலும், மரண தண்டனைகளிலும் முடிவடைந்ததுடன், ஹூசேனின் பாதுகாப்பு அமைப்பை மேலும் பலமடையவே செய்தது.

மேலும், ஈராக் தேசிய காங்கிரசினுள் இணைந்திருந்த எதிர்ப்புக் குழுக்களின் பலமற்ற கூட்டானது விரைவாக உடைந்துபோனது. ஐக்கிய நாடுகளினது ஈராக் மீதான பொருளாதாரத் தடையால் உருவாகிய இலாபகரமான கடத்தல் தொழிலினால் கிடைத்த வருமானத்தை பங்கீடு செய்வதில் இரண்டு குர்திஸ்தான் குழுக்களும் முரண்பட்டுக்கொண்டன. துருக்கியிலிருந்து ஈராக்கிற்கு பொருட்களை சுமந்துவரும் பார வண்டிகள் வடக்கிலுள்ள பறக்கமுடியாத பிரதேசத்தை ஒவ்வொரு நாளும் கடந்து செல்வதுடன், திரும்பி வரும்போது மலிவான எண்ணெயையும், மற்றும் எண்ணெய் உற்பத்திப் பொருட்களையும் நிரப்பிவந்தன. ஆனால் குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சியின் பிரதேசத்தை கடந்து வரும் பாதையில் கிடைக்கும் பாரிய சுங்கவரி வருமானத்தை பார்ஸானி, குர்திஸ்தான் தேசபக்தி யூனியனுடன் பகிர்ந்துகொள்ள மறுத்தார்.

1993 இல் இருந்து இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்று வருவதுடன், இது தொடர்ந்து அதிகரிக்கின்றது. ஒவ்வொரொவரும் மற்றவருக்கு எதிராக சதிகளில் ஈடுபடுவதுடன், பிராந்திய சக்திகளான ஈரான், சிரியா, துருக்கி, ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியாவின் ஆதரவை பெற்றுக்கொள்ள முனைகின்றன. இம்முரண்பாடு ஈராக் தேசிய காங்கிரசை உறுதியற்றதாக்கியதுடன், ஷியைட் அமைப்புக்களினதும், ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினதும் உள்ளடங்கலான ஏனைய குழுக்களின் வெளியேற்றத்திற்கு காரணமானது.

இதேவேளை 1990 இல் பிரித்தானிய M16 இனதும், சவுதி அரேபியாவினதும் உளவுப்படையினதும் உதவியுடன் உருவாக்கப்பட்ட ஈராக்கிய தேசிய உடன்பாடு (INA) இனது நடவடிக்கைகளை நோக்கி CIA இனது கவனம் கூடுதலாக திரும்பியுள்ளது. ஈராக்கிய தேசிய உடன்பாடு, பாக்தாதில் ஒரு இரகசிய இராணுவ வலைப்பின்னலை உருவாக்க விரும்பும் நோக்கத்துடன், ஈராக் தேசிய காங்கிரஸ் இனது கட்டுப்பாடற்ற மற்றும் அதிகரித்தளவில் உறுதியற்றதாகிவரும் முன்னணி அமைப்பான ஈராக் தேசிய காங்கிரஸ் இனை விட CIA இனது நோக்கங்களுடன் கூடுதலாக ஒத்துப்போவதாக உள்ளது.

ஹூசேனின் கட்டுப்பாட்டிலுள்ள ஈராக்கின் பகுதிகளினுள்ளும், ஈராக்கிய தேசிய உடன்பாடும், ஈராக் தேசிய காங்கிரசும் அடித்தளத்தை கொண்ட இர்புல் (Irbul) பகுதியிலும் 1995 மார்ச் மாதத்தில் CIA இனது நடவடிக்கைகள் தீவிரமடைந்ததாக காணப்பட்டது. கிடைத்த தகவல்களின்படி இத்திட்டத்தில் வடக்கில் ஒரு இராணுவத் தாக்குதலுடன், பாக்தாதில் ஆட்சியை கவிழ்த்தலும் அடங்கியிருந்தது. ஈராக் தேசிய உடன்பாடு உடனும், ஏனைய தொடர்புகளுடனும் தலைநகரில் சதிசெய்ய CIA இரகசிய திட்டமிட்டிருந்தது.

இதேவேளை அமெரிக்கா, ஆகாயம் மூலமான பாதுகாப்பை தரும் பட்சத்தில் வடக்கின் பறக்க தடைசெய்யப்பட்ட பிரதேசத்தில் உள்ள குர்திஸ் நகரங்களான கிர்குக், மோசோல் போன்றவற்றை கைப்பற்ற குர்திஸ்தான் இராணுவக் குழுக்களுக்கு தனது ஒத்துழைப்பை தருவதாக ஷலாபி குறிப்பிட்டார். குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சியும் (KDP), குர்திஸ்தான் தேசபக்தி யூனியனும் (PUK) குறிப்பாக கிர்குக் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டவர விருப்பமுடையனவையாக உள்ளன. ஏனெனில் இது வடக்கு ஈராக்கின் வழமான எண்ணெய், நிலவாயு பிரதேசத்தின் மத்தியில் உள்ளது. ஈராக்கிய இராணுவத்துடன் போரிட பயிற்சியளிக்கப்படாத மற்றும் பலமற்ற ஆயுதம் தரித்த ஆயிரக்கணக்கான இராணுவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பாக்தாதில் சதியும், வடக்கின் இராணுவ நடவடிக்கைகயும் பரிதாபகரமாக தோல்வியடைந்ததுடன், முழுவிடயமும் சகல பக்கத்திலும் கசப்பானதும் மற்றும் தொடர்ச்சியானதுமான ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டுதலுக்கும் இட்டுச்செல்கின்றது. அமெரிக்காவினதும், பிரித்தானியாவினதும் உளவுத்துறையினதும் உதவியுடன், ஈராக்கிய தேசிய உடன்பாடு தனது நடவடிக்கைகளை 1996 இல் மீளஆரம்பித்திருந்ததுடன், ஜோர்டானை தளமாக பயன்படுத்தவும் அனுமதிபெற்றது. எவ்வாறிருந்த போதிலும் அதனது வலைப்பின்னல் ஈராக்கிய உளவுப்பிரிவால் ஊடுருவப்பட்டு பாரிய விளைவுகளை சந்தித்தது. 1996 ஜூன் இல் ஈராக்கிய தேசிய உடன்பாட்டினது 100 இற்கு மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் சுற்றிவளைக்கப்பட்டபோது, ஆகக்குறைந்தது அவர்களின் 30 பேராவது ஒன்றாக கொலைசெய்யப்பட்டனர்.

வடக்கு ஈராக்கில் CIA இற்கும் அதனது ஆதரவாளர்களினதும் நிலைமை, சட்டியிலிருந்து நெருப்பிற்குள் வீழ்ந்தது போலானது. 1996 இல், குர்திஸ்தான் ஜனநாயக கட்சிக்கும் (KDP), குர்திஸ்தான் தேசபக்தி யூனியனுக்கும் (PUK) இடையிலான மோதல் அதியுயர் கட்டத்தை அடைந்தது. ஈரானிய இராணுவத்தால் தனது போட்டியாளர்கள் ஆதரவளிக்கப்படுவதாகவும், குர்திஸ்தான் தேசபக்தி யூனியனியனிடம் இருந்து இர்புல் நகரினை மீண்டும் கைப்பற்ற குர்திஸ் பிரதேசங்களுக்கு ஈராக்கினது இராணுவத்தை பார்ஸானி வரவேற்றார். ஈராக்கிய பாதுகாப்பு படையினர் அந்நகரத்தை மட்டும் கைப்பற்றவில்லை, அத்துடன் ஈராக்கிய ஆட்சியின் எதிர்ப்பாளர்களையும் ஒடுக்கும் சந்தர்ப்பமாக அதனை பயன்படுத்திக்கொண்டனர்.

இதன் விளைவானது, CIA இற்கும், ஈராக்கிய தேசிய உடன்பாட்டிற்கும், ஈராக் தேசிய காங்கிரசுக்கும் முற்றுமுழுதான அழிவுகரமானதாக இருந்தது. ஒரு மதிப்பீட்டின்படி ஈராக்கிய இராணுவத்தால் 200 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 2,000 பேருக்கு அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்னும் 650 பேர், இவர்களில் அதிகமானோர் ஈராக் தேசிய காங்கிரசை சேர்ந்தவர்கள் அவர்களின் CIA இன் பயிற்சியாளர்களுடன் சேர்ந்து தப்பியோடி அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். ஒரு தாய் அமைப்பாக இருந்த ஈராக் தேசிய காங்கிரஸ் துண்டுகளாக உடைந்துபோனது. ஒரு வருட இடைவேளையின் பின்னர், ஈராக்கிய தேசிய உடன்பாடு பாக்தாதிலுள்ள தனது வலைப்பின்னலையும், வட ஈராக்கிலுள்ள தனது நடவடிக்கைக்கான தளத்தையும் இழந்தது.

தொடரும்...........


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved