World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Oppose US war against Iraq!
Build an international movement against imperialism!

ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போரை எதிர்!

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சர்வதேச இயக்கத்தைக் கட்டி எழுப்பு!

Statement of the World Socialist Web Site Editorial Board
9 September 2002

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத் தளம் ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போர் முன்னெடுப்பை கண்டனம் செய்கிறது மற்றும் புஷ், ஜனநாயகக் கட்சியினர் அத்தோடு அமெரிக்க கோர்ப்பொரேட்டுகளது அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் அரசியல் தட்டினருக்கும் எதிர்ப்பாக, அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து உழைக்கும் மக்களையும் இளைஞர்களையும் இராணுவ வாதத்திற்கு எதிரானவர்களையும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான ஒரு வெகுஜன இயக்கத்தை ஆரம்பிக்குமாறு அழைக்கின்றது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஆன பூகோளப் போரை நோக்கிய மாபெரும் வரலாற்று நிகழ்ச்சியான முன்யோசனை அற்ற முன்னெடுப்பை மதிப்பீடு செய்கையில், விடயங்களை அவற்றின் சரியான பெயர்களில் அழைப்பது அவசியமானதுடன், அது வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றிலிருந்து எழுந்து பரவும், அமெரிக்க செய்தி ஊடகத்தின் மூலம் ஊதிப்பெருக்கப்படும் பிரச்சார வெள்ளத்தினால் திசை திருப்பப்பட்டுவிடக்கூடாது அல்லது அள்ளுப்பட்டுப் போய்விடக் கூடாது.

புஷ் முன்மொழிவதும், மற்றும் காங்கிரஸ் அங்கீகாரத்திற்கு தயாரிப்பதும், உலகின் மிகவும் சக்திமிக்க நாடொன்றால் மிகப் பலவீமான நாடுகளுள் ஒன்றுக்கு எதிராக நடத்தப்படும் சூறையாடும் போர் ஆகும். ஈராக், எந்த நாட்டையும் விட இரண்டாவது பெரிய எண்ணெய் சேர்ம இருப்புக்களுடன், எக்சோன் மொபில் (Exxon Mobil), வெரோன் டெக்சாகோ (ChevronTexaco) மற்றும் எஞ்சியுள்ள அமெரிக்கக் கோர்ப்பொரேட்டுகளுக்கு மதிப்பு மிக்க (பெறுமதி மிக்க) பரிசாகும். புஷ் "ஆட்சி மாற்றத்தை" பற்றிப் பேசும்பொழுது அவர் சுதந்திர ஈராக், ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக அமெரிக்கா நியமித்த, ஹமித் கர்ஜாய் (Hamid Karzai) போன்ற அமெரிக்க கால்வருடியால் தலைமை தாங்கப்படும், அரைக் காலனித்துவ ஆட்சியால் பதிலீடு செய்வதை அர்த்தப்படுத்துகிறார். அது நாட்டின் வளங்களை அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நலன்களுக்கு வழங்கக் கூடியதாக சக்திமிக்க வகையில் கட்டுப்படுத்தும்.

சதாம் ஹூசைனை எவ்விதமான வார்த்தைகளாலும் தூசித்தாலும் அது ஈராக், ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு எதிரான குறிப்பிடத்தக்க அளவு மூலோபாய அச்சுறுத்தலாக மாற்ற முடியும் என்று அர்த்தப்படாது. ஐக்கிய அமெரிக்க அரசுகளை, ஈராக் இரசாயன, உயிரி அல்லது அணு ஆயுதங்களால் தாக்குவது உடனடியானது எனக் கூறுவது --புஷ், உதவி ஜனாதிபதி செனி மற்றும் நிர்வாகத்திற்கான ஏனைய பேச்சாளர்களால் விடுக்கப்படும் ஊழிக்காலப் பேரழிவு பற்றிய எச்சரிக்கைகள்-- அமெரிக்கப் பொதுமக்கள் மீது தமது கருத்தைத் திணிப்பதற்கான சிடுமூஞ்சித்தனமான முயற்சி ஆகும். இந்தக் கூற்றுக்கள் பொய்யானவை, மேலும் புஷ்ஷும், செனி மற்றும் அவர் குழாமும் அவை பொய்கள் என்பதை அறிவர், ஆனால் அவை ஊழல் மிக்க அமெரிக்க செய்தி ஊடகம் அல்லது ஜனநாயகக் கட்சியால் சவால் செய்யப்படாது என்பதை அவர்கள் அறிவார்கள்.

ஈராக்கிற்கு எதிரான போரானது மேலும் கூடிய மற்றும் இரத்தம் தோய்ந்த மோதல்களுக்கான களத்தை அமைத்துக்கொடுக்கிறது, அது முன்னர் என்றுமிராத அளவிலான இறப்பு மற்றும் அழிவு பற்றி அச்சுறுத்துகின்றது. வாஷிங்டன் போஸ்டின் அண்மைய கருத்துரையில், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜ்பிக்னீவ் பிரிஜேஜின்ஸ்கி (Zbigniew Brzezinski), ஈராக் மீதான முன்னரே தாக்கித் தனதாக்கிக் கொள்ளும் (Preemptive attack) தாக்குதல் சர்வதேச உறவுகளின் முழுக் கட்டமைப்பு மீதும் ஆழமாய் சீர்குலைவை ஏற்படுத்தும் பாதிப்பைக் கொண்டிருக்கும் என எச்சரித்தார். ஐக்கிய அமெரிக்க அரசுகளின் பகைவர்கள் அதனை "பூகோள குண்டர் கும்பல்" என உருப்படுத்திக் காட்டுவர், எனவும் அவர் எச்சரித்தார். வார்த்தைப் பதமானது சொல்ல எண்ணி இருக்கக் கூடியதிலும் பார்க்க அதிகமாய் வெளிப்படுத்துகிறது: உலகம் முழுவதிலும் குற்றவியல் நிறுவனமாகக் காணப்படும் ஒன்றைத் தொடங்குவதற்குத்தான் புஷ் நிர்வாகம் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

நாஜி போன்ற ஆக்கிரமிப்பு வேலைத்திட்டம்

அமெரிக்க அரசாங்கம் புதிதாய் ஈடுபட்டுள்ள இராணுவ வன்முறை வேலைத் திட்டம் மற்றும் அரசியல் ஆத்திரமூட்டல் ஆகியவற்றின் அளவானது நாஜிக்களின் நாட்களுக்குப் பின்னர் காணப்படாதது ஆகும். இந்த ஒப்பீடானது நம்பமுடியாததோ அல்லது சொற்சிலம்பமோ அல்ல. முன்னரே தாக்கித் தனதாக்கும் தாக்குதல் (Preemptive attack) பற்றிய கோட்பாட்டை பகிரங்கமாகப் பறைசாற்றுவதில் --வேறு வார்த்தைகளில் சொன்னால், சுயபாதுகாப்பு என்ற அப்பட்டமான பாசாங்குடன், வலியத்தாக்கும் நோக்கங்களுக்காக போர் முன்னெடுக்கப்பட்டது-- இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நாஜி ஜேர்மனியின் தலைவர்கள் மற்றும் ஜப்பானிய பேரரசின் தலைவர்களை விசாரணைக்கு ஆளாக்கி, குற்றம் நிரூபிக்கப்பட்டு மற்றும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்படிப்பட்ட முதன்மையான குற்றங்களை இழைப்பதற்கு புஷ் மற்றும் அவரது குழுவும் தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றனர்.

நாஜிக்கள் செக்கோஸ்லோவேகியா, போலந்து, டென்மார்க், நெதர்லாந்து மற்றும் அக்கம் பக்கத்து நாடுகள் மீது தூண்டாத ஆக்கிரமிப்புக்களை நடத்தியபொழுது "வலிய இழுக்கும் போரைத் தொடுக்கும்" குற்றத்தை நாஜிக்கள் செய்தனர் என்ற நூரெம்பேர்க் விசாரணைகளின் முன்மாதிரியின் கீழ் புஷ் நிர்வாக அதிகாரிகள் விசாரணையை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதை அறிந்துள்ளனர் என்பதை நம்புதற்கு காரணம் இருக்கிறது. அதனால்தான் போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களைக் கவனிப்பதற்கு ஐக்கி நாடுகளின் மேற்பார்வையின் கீழ் அமைக்கப்பட்ட, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (International Criminal Court) விசாரணை அதிகாரத்தில் இருந்து அமெரிக்க இராணுவ மற்றும் வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்களை விதிவிலக்காக்கும் அமெரிக்காவின் உரத்த பிரச்சாரம் இருந்தது.

செப்டம்பர் 7 அன்று நியூயோர்க் டைம்ஸ் ஒரு வழக்கத்திற்கு மாறான கட்டுரையில், "புஷ் நிர்வாகமானது அதன் வலியுறுத்தல்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை அதிகாரத்தில் இருந்து அமெரிக்கர்களுக்கு விதிவிலக்குகள் கேட்பதில் நகர்த்தலைச் செய்தது. இதற்கான முக்கிய காரணம் போர்க்குற்றச் சாட்டுக்களின் பேரில் நாட்டின் உயர் மட்டத் தலைவர்கள் குற்றம் சாட்டப்படுவதிலிருந்து, கைது செய்யப்படுவதிலிருந்து மற்றும் நீதிமன்றத்தின் முன்னர் இழுத்து நிறுத்தப்படுவதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதாகும் என ஐரோப்பியக் கூட்டாளிகளுக்கு அதன் நிர்வாக அதிகாரிகள் கூறினர்" என அறிவித்தது.

சிலியிலும் அமெரிக்காவிலும் நீதிமன்றங்களில், முன்னாள் அரசு செயலாளர் ஹென்றி கிசிங்கருக்கு எதிராக, பரந்த அளவிலான படுகொலைகளுக்கு பொறுப்பாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சட்ட நடவடிக்கைகள் கொண்டு வரப்பட்டதை அமெரிக்க அதிகாரிகள் மேற்கோள் காட்டினர். அப்படுகொலைகள் சிலியில் ஜெனரல் அகஸ்டோ பினோசே சர்வாதிகாரத்தை நிறுவிய 1973 சி.ஐ.ஏ ஆதரவு இராணுவச் சதியை தொடர்ந்து உடன் நிகழ்ந்தது. ஒரு உயர்மட்ட அமெரிக்க அதிகாரி டைம்ஸ் பத்திரிகையிடம், நிர்வாகமானது கொடுமைகளை நிகழ்த்திய அமெரிக்க படைவீரர்களைப் பற்றி ''எதிர்கால லெப்டினென்ட் காலிஸ்'' (இவர் வியட்நாம் யுத்தத்தில் மைலாய் படுகொலைகளை நடாத்தி பின்னர் ஜனாதிபதி நிக்சனால் மன்னிப்பு வழங்கப்பட்டவர்) பற்றிக் கவலைப்படவில்லை, மாறாக "உயர் மட்ட பிரமுகர்களான ஜனாதிபதி புஷ், செயலாளர் ரம்ஸ்பெல்ட், செயலாளர் பாவெல்" ஆகியோரின் போர்க்குற்ற விசாரணையின் சாத்தியத்தைப் பற்றியே கவலைப்படுகின்றது, எனக் கூறினார்.

புஷ் நிர்வாகமானது, ஈராக்கை மரண ஆபத்தான பேரச்சுறுத்தலாக உருப்படுத்திக் காட்டும் அதன் முயற்சியில், ஹிட்லர் மற்றும் கோயெபல்சுகளின் "பெரும் பொய்" உத்திகளை கண்மூடிப் பின்பற்றுகிறது. இப்பிரச்சாரமானது மிக அடிப்படைரீதியான உண்மைகளை பகிரங்கமாக அலட்சியம் செய்வதில் தங்கி இருக்கிறது. ஈராக் ஒரு ஏழ்மை பீடித்த நாடு, ஒரு தசாப்தத்திற்கு முன்னர்தான் அமெரிக்கத் தாக்குதலால் அது ஏற்கெனவே சூறையாடப்பட்டது. பூகோளத்தில் உள்ள மற்றைய நாடுகளை போன்று மிகச்சிறிதாய்க் கொண்டுள்ள இராணுவ ஆற்றலால் அது ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்காது, இருக்க முடியாது.

ஈராக், மக்கள் தொகையில் முறையே, உலகில் நாற்பத்தி நான்காவது நாடாகும். நிலப்பரப்பில் முறையே ஐம்பத்தி ஆறாவது மட்டுமே ஆகும், இரண்டு வகையையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் தர அடிப்படையில் அது ஆப்கானிஸ்தானை விடவும் கீழானது. பொருளாதார ஆற்றலில் ஈராக்கிற்கும் அமெரிக்காவிற்கும் உள்ள வித்தியாசம் தலைகிறுகிறுக்க வைக்கும். ஈராக் 2000-வது ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 57 பில்லியன் டாலர்களைக் கொண்டிருந்தது -- இது தனியொரு அமெரிக்கரான பில்கேட்ஸின் சொந்த சொத்தை விடவும் குறைவானது. 11 டிரில்லியன் அமெரிக்கப் பொருளாதாரம் ஈராக்கை விடவும் 200 மடங்குகள் பெரியது, ஈராக்கின் பொருளாதார உற்பத்தி அதனை பர்மா மற்றும் சிறிலங்காவிற்குக் கீழேயும், கெளதமாலா மற்றும் கென்யாவுக்கு சற்று மேலேயும் உள்ளது.

இராணுவ ஆற்றலைப் பொறுத்த மட்டில், இடைவெளியானது இன்னும் மிகப்பெரியது. 1991 பாரசீக வளைகுடாப் போரில் ஆயிரக்கணக்கான ஈராக்கிய புதிதாகப் படைத்துறைப் பணிக்குச் சேர்க்கப்பட்டோர் அமெரிக்கக் குண்டுகளால், ஏவுகணைகளால் மற்றும் ஏனைய உயர் தொழில் நுட்ப ஆயுதங்களால் எரித்துக் கருக்கப்பட்டனர். அதேவேளை சில நூறு அமெரிக்கப் படைவீரர்கள் உயிரை இழந்தனர். இடையிலான தசாப்தத்தில், ஈராக் பொருளாதார முற்றுகைக்கு கீழ்ப்படுத்தப்பட்டது மற்றும் திரும்பத் திரும்ப குண்டு வீச்சுக்களுக்கு ஆளானது, மற்றும் ஈராக்கிய இராணுவம் 1990-ல் இருந்த அதன் அளவில் இருந்து மூன்றில் ஒரு பங்காக சுருங்கி விட்டது. இதற்கிடையில் பென்டகனானது, அமெரிக்க இராணுவ வரவு-செலவுத் திட்டம் இப்பொழுது உலகில் உள்ள அடுத்த 25 நாடுகளால் செலவிடப்படும் இராணுவச் செலவுகளின் இணைந்த மொத்தத்தையும் மீறிச் செல்கின்ற அளவிற்கு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது.

போரின் வர்க்கத் தன்மை

போரின் அடிப்படைப் பண்பு, அதில் ஈடுபட்டிருக்கும் அரசுகளின் வரலாற்று ரீதியாய் வகிக்கும் நிலை மற்றும் வர்க்கத் தன்மையால் வரையறுக்கப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்க அரசுகள் பூகோளத்தை மேலாதிக்கம் செய்வதை நாடும் மிக சக்திவாய்ந்த ஏகாதிபத்திய நாடாக இருக்கிறது. ஈராக் மீது வர இருக்கும் அதன் தாக்குதல், டசினுக்கும் மேலான நாடுகளில்: நிகராகுவா, பனாமா, கிரெனடா, ஹைட்டி, சோமாலியா, சூடான், லிபியா, லெபனான், ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் முன்னாள் யூகோஸ்லாவியாவின் உட்கூறாய் இருந்த பல்வேறு அரசுகள் மற்றும் துண்டுப் பகுதிகள் இவற்றில் அமெரிக்கப் படைகள் குண்டுகள் வீசல், தாக்குதல், ஆக்கிரமித்தல் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய கவிழ்ப்பு, பாதைகளில் இரு தசாப்த காலங்களின் அதிகரித்த அளவிலான விளைவைப் பற்றிக் கவலைப்படாத மற்றும் வலிய இழுக்கும் நடத்தையின் உச்சக் கட்டமாக இருக்கிறது.

ஈராக்கானது காலனித்துவ ஒடுக்குமுறையில் வேரூன்றிய மூலத்தோற்றத்தைக் கொண்டிருக்கும் ஒரு நாடாகும். அது பல தசாப்தங்களாக பெரிய பிரித்தானியாவால் ஆளப்பட்டது. அதன் பிரதேசங்கள் அழிந்துகொண்டிருந்த ஒட்டோமான் பேரரசிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டது. 1950களின் இறுதிக்குப் பின்னர், பிரிட்டிஷாரால் திணிக்கப்பட்ட இறுதி முடியாட்சி தூக்கி வீசப்பட்ட பொழுது, அந்நாடானது தொடரான இராணுவ ஆதரவு பெற்ற முதலாளித்துவ தேசியவாதிகளின் ஆட்சியால் ஆளப்பட்டு வந்திருக்கிறது, அவை குளிர் யுத்தக் காலம் முழுவதும், ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் சமநிலையைப் பேணும் நிலைப்பாட்டை கொண்டிருந்தன.

1979 ஈரானியப் புரட்சி, எண்ணெய் வளம் மிக்க பாரசீக வளைகுடாவில் முக்கிய அமெரிக்கக் கூட்டாளியாக இருந்த ஷா-வைத் தூக்கி எறிந்த பின்னர், ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹூசைன் தன்னைத்தானே அதற்கு சாத்தியமான பதிலீடாக வழங்கிக் கொண்டார். 1980ல் ஈரான் மீதான அவரது ஆக்கிரமிப்பு வாஷிங்டனால் பேரார்வத்துடன் வாழ்த்தி வரவேற்கப்பட்டதோடு பாக்தாதுடன் நெருக்கமான உறவையும் ஏற்படுத்தியதுடன், அந்த ஆட்சிக்கு ஆயுத விற்பனை செய்வதற்கு இருந்த எதிர்ப்பை கைவிட்டதுடன், மற்றும் ஈரானியத் துருப்புக்களின் நடமாட்டம் பற்றிய செயற்கைக்கோள் படங்களையும் ஈராக்கிய இராணுவத்திற்கு அளிக்கச் செய்தது.

அதேவேளை இன்று புஷ் நிர்வாகமானது, ஈராக் இராசாயன ஆயுதங்களை உடைமையாகக் கொண்டிருப்பதை ஒரு போருக்கான காரணம் எனக் காட்டுகிறது, அது இந்த ஆயுதங்களுக்கான மூலம் பற்றி விவாதிப்பதற்கு அக்கறை எடுக்கவில்லை. ஈரானிய வெற்றியைத் தடுப்பதற்காக இரசாயன ஆயுதங்களை ஈராக் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்கும் றேகன் நிர்வாகமானது ஆதரவளித்தது. ஆயிரக் கணக்கான ஈரானிய படைவீரர்களை கடுகுப் புகைத் (Mustard Gas) தாக்குதல்களுக்கான இலக்காகப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா உளவுத் தகவல்களைக் கூட வழங்கியது.

அமெரிக்க நிர்வாக அதிகாரிகள், சதாம் ஹூசைன் செய்த குற்றங்களுள் ஒன்று, பத்து லட்சம் மக்களைக் கொன்ற போரை ஈரானுடன் ஆரம்பித்தது என விவாதிக்கின்றனர். அமெரிக்க அரசாங்கம் --மத்திய கிழக்குக்கு அப்போது றேகனின் சிறப்புத் தூதுவராக இருந்த, தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் போன்ற அதிகாரிகள், எவ்வளவு சாத்தியமோ அந்த அளவுக்கு ஈரானிய இளைஞர்களைப் படுகொலை செய்வதற்கு ஹூசைன் மீது தூண்டுதல் செய்தது உட்பட-- இதற்கான பொறுப்பின் பெரும் பங்கை ஏற்கிறது, இது ஒரு குற்றம் என்பதை அவர்கள் முழுமையாக நன்கு அறிவர்.

1990 இல் குவைத் ஆக்கிரமிப்புடன் ஈராக்கிய தலைவர் ஐக்கிய அமெரிக்க அரசுகளுடன் மோதலுக்கு வந்தார். பின்னர் அவர் அமெரிக்க அரசாங்கத்தாலும் செய்தி ஊடகத்தாலும் பூதமாகக் காட்டும் பிரச்சாரத்தால் விரைந்து மாற்றப்பட்டார், அவை தொடர்ச்சியாக --பனாமாவின் மானுவெல் நோரிகா, சோமாலியாவின் மொகம்மது அய்டிட், யூகோஸ்லாவியாவின் ஸ்லொபோடன் மிலோசெவிக் மற்றும் ஒசாமா பின் லேடனையும் (நேற்றைய சோவியத் எதிர்ப்பு "விடுதலைப் போராளி", இன்றைய முதன்மைப் பயங்கரவாதி) கூடப் போல-- நேற்றைய நண்பர்களை இன்றைய பகைவர்களாக மாற்றுதற்கு பயன்படுத்தப்பட்டன. ஹூசைன் அவரது முறையே பாக்தாதின் கொடியவராக, முழு பாரசீக வளைகுடாப் பகுதிமேலும் மேலாதிக்கம் செய்யும் மற்றும் அதன் மூலம் எண்ணெய் வளங்கள் மீதான அமெரிக்கக் கட்டுப்பாட்டிற்கு அச்சுறுத்தல் செய்யும் புதிய ஹிட்லராக உருவகித்துக் காட்டப்பட்டார்.

ஈராக் இராணுவ சாதனத்தின் பெரும் பகுதியை அழித்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, வெள்ளை மாளிகை சதாம் ஹூசைன் அவரது அண்டை அயலாரை படைபலத்தின் மூலம் வெற்றி கொள்ள முனைகின்றார் என இனியும் பாசாங்கு செய்ய முடியாது. பதிலாக, செப்டம்பர் 11 தாக்குதலை அடுத்துத் தொடர்ந்து, புஷ் நிர்வாகமானது புதிய மற்றும் முன்னர் கனவுகாணாத ஒன்றான, ஈராக் மீதான யுத்தத்தை நியாயப்படுத்த மதச்சார்பற்ற ஈராக்கிய ஆட்சிக்கும் ஹூசைனை வீழ்த்துவதற்காக திரும்பத் திரும்ப அழைப்பு விடுத்த அல் கொய்தா இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கும் இடையிலான கூட்டின் சாத்தியம் பற்றி ஒரு புனைவை உருவாக்கியது.

வாஷிங்டனின் உண்மையான போர் இலக்குகள் என்ன?

* முதலாவதாக, ஈராக்கை இராணுவ ரீதியாக ஆக்கிரமித்தலும் அதன் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றலும்

இது எரிசக்தி ஏகபோகங்களுக்கு பெரும் நற்பேறுகளை வழங்கும், அது பொதுவில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் பேரளவு செல்வாக்கை செயலில் முனைவிக்கிறது, மற்றும் குறிப்பாக புஷ் நிர்வாகத்தை மேலாதிக்கம் செய்கிறது. பெட்ரோலியம் வளங்களைக் கட்டுப்படுத்துவது பொருளாதார லாபங்களை மட்டும் வழங்கவில்லை, பெரிதளவான அரசியல் மற்றும் மூலோபாய நெம்புகோலையும் கூட வழங்குகின்றது. ஈராக்கின் எண்ணெயை விரைவில் கைப்பற்றுவதன் மூலம், அமெரிக்காவானது, பாரசீக வளைகுடாவில் பெட்ரோலிய ஏற்றுமதிகள் மீது பெரிதும் சார்ந்து இருக்கின்ற ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள அதன் பெயரளவிலான கூட்டாளிகளுக்கு எதிராக, அதேபோல ரஷ்யா, சீனா மற்றும் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்கா முழுதுவதும் உள்ள ஆட்சிகளுக்கும் எதிராக தனது நிலையைப் பெரிதும் உயர்த்திக் கொள்ளும். ஆப்கானிஸ்தானில் போர் மூலம் மத்திய ஆசியாவில் அதன் அரசியல் மற்றும் இராணுவ செல்வாக்கு எல்லையை விரிவுபடுத்தி வைத்திருக்கும் நிலையில், ஈராக்கை அமெரிக்கா வெற்றி கொள்வது அமெரிக்க ஆளும் தட்டினருக்கு இரு முக்கிய எண்ணெய் உற்பத்திப் பிராந்தியங்களில் போட்டியிட முடியாத மேலாதிக்க நிலை வகிப்பை வழங்கும்.

* இரண்டாவது, அமெரிக்க இராணுவ ஆற்றலை பூகோள ரீதியாய் விஸ்தரித்தல்

ஈராக்கில் அமெரிக்க ஆட்சிக்கு உட்பட்ட எல்லைப் பகுதி இந்தப் பிராந்தியத்திலும் இதற்கு அப்பாலும் எதிர்கால போர்களுக்கான ஒத்திகை பார்க்கும் தளமாக இருக்கும். மிகவும் கூடிய உடனடியான இலக்கு ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க அண்டை நாடு ஈரானாகும். இறுதியாக செளதி அரேபியாவுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க அரசியல் அமைப்புக்குள்ளே செயலூக்கமான பிரச்சாரம் நடக்கிறது. சூடான், யேமன், லிபியா மற்றும் சிரியா ஆகிய அனைத்தும் சாத்தியமான இலக்குகளாக காட்டப்பட்டிருக்கின்றன.

அமெரிக்கத் துருப்புக்களும் போர் விமானங்களும் கிட்டத்தட்ட மத்தியதரைக் கடலுக்கும் தியென் ஷான் மலைகளுக்கும் இடையில் ஒவ்வொரு நாட்டிலும் நிறுத்தப்பட்டுள்ளன, அம்மலைகள் முன்னாள் சோவியத் மத்திய ஆசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லையைக் குறிக்கின்றன. ஈராக்கிற்கு எதிரான தாக்குதல் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும், இரு அணுஆயுத வல்லரசுகளுக்கும் எதிராக வரவிருக்கும் போர்களுக்கு முன்னோடியானதாக, அமெரிக்க இராணுவ மற்றும் அரசியல் வட்டங்களுக்குள் பார்க்கப்படுகின்றது என்பதில் ஐயமில்லை.

* மூன்றாவது, உள்நாட்டு அரசியலைக் கட்டுப்படுத்தலைப் பராமரித்தல்

வளர்ந்து வரும் சமூக, அரசியல் சமத்துவமின்மை மற்றும் அரசியல் அமைப்புடன் பரந்த அளவில் பரவி இருக்கும் மக்களின் நம்பிக்கையின்மை சூழலின் கீழ், ஆளும் தட்டானது, திசைதிருப்புவதன் மூலம் மற்றும் வழிவிலகச் செய்வதன் மூலமும் மற்றும் "பயங்கரவாதம் மீதான போர்" என்பதன் பின்னர் அவர்களின் மனக்குறைகளை வழிப்படுத்துவதன் மூலமும் தத்துவார்த்த மற்றும் அரசியல் கட்டுப்பாட்டைப் பராமரிக்க நாடுகிறது. போரானது, உள்நாட்டு ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பதற்கான கடுமையான வழிமுறைகளாக ஆகிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் போரின் நெருக்கடி நிலைகளின் பெயரில், அரசாங்கமானது ஜனநாயக உரிமைகள் மீது கடுமை தணியா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது, சர்வாதிகார இராணுவ முகாம் கட்டுப்பாட்டில் உள்ள அரசுக்கான அடிப்படையை உருவாக்குகிறது.

வெளிப்பாடு என்னவாக இருக்கும்? விரைவான அமெரிக்க இராணுவ வெற்றி நிகழக்கூடியதாக ஒருவர் ஏற்றுக் கொண்டால் கூட, இந்த இலக்கை நிறைவேற்ற நிர்வாகமானது அமெரிக்க உயிர்களைப் பலியாக்க மட்டுமல்லாது, எண்ணற்ற ஈராக்கியர்களைக் கொல்லவும் தயாரிப்பு செய்திருக்கிறது என்பது தெளிவானதாகும். அத்தகைய நடவடிக்கையைப் பின்பற்றும் ஒரு அரசாங்கம், நவீன வரலாற்றில் மாபெரும் கொடுமைகளுள் ஒன்றான, பெரும் அளவிலான குற்றத்தில் அமெரிக்க மக்களைச் சிக்கவைக்கும்.

அமெரிக்காவைப் பொறுத்த மட்டில், ஈராக்கிய ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும் ஒரு பொம்மை ஆட்சியை நிறுவுவதற்கும், முதலாவது வளைகுடாப் போர் அளவிலான காட்டுமிராண்டித்தனமான குண்டு வீச்சுக்கள் கூட போதுமானதல்ல. அமெரிக்க இராணுவத் திட்டமிடலாளர்கள், குண்டு மழைபொழிவதுடன் சேர்த்து படைவீரர்களுக்கும், விரும்பினால் குடிமக்களுக்கும் எதிராக நகர்ப்புற போரை நடாத்தி, பாக்தாத் மற்றும் மற்றைய பிரதான நகரம் ஒவ்வொன்றையும் சூறையாடுவதற்கு தயாரிப்பு செய்துகொண்டிருக்கின்றனர். இறப்பு எண்ணிக்கை பத்தாயிரக் கணக்கில் அல்லது இலட்சக் கணக்கில் ஏற்படக் கூடும்.

அணு ஆயுதங்கள் அமெரிக்காவால் பயன்படுத்தல் நிகழ்வுக்கு அப்பாற்பட்ட ஒன்றைத் தேடிக் கூறவில்லை. கடந்த மார்ச்சில் வெளியான அணு ஆயுதங்கள் அபிவிருத்திக்கான புதிய அமெரிக்க வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பயன்படுத்தலின் படி, அணு ஆயுதங்களைக் கட்டவிழ்த்து விடுவதற்கான ஒரு காட்சி ஈராக்குடனான போர் விளைவிக்கும் இஸ்ரேல் மீதான ஈராக்கிய ஏவுகணைத் தாக்குதலாகும்.

மேலும், வெற்றி கொள்வதற்கான அமெரிக்கப் போர்களின் முடிவாக ஈராக் இருக்கப்போவதில்லை. ஆப்கானிஸ்தானில் போரை ஆதரித்த மற்றும் ஈராக்கிற்கு எதிரான போரை அங்கீகரித்தவர்கள் எதிர்கால அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கான பொறுப்பைக் கட்டாயம் எடுக்க வேண்டும். அத்தகைய போர்கள் ஏற்கனவே செயலூக்கத்துடன் பென்டகனால் திட்டமிடப்பட்டிருக்கின்றன. கடந்த மாதம் நடாத்தப்பட்ட, மிக சமீபத்திய அமெரிக்க ஆணையக-- மற்றும் கட்டுப்படுத்தும் பயிற்சி 2007ல் ஈரான் மீது அமெரிக்க ஆக்கிரமிப்பைத் தூண்டிவிடும் போர் விளையாட்டாக இருந்தது.

போலியான பகிரங்க விவாதம்

செப்டம்பர் 4 அன்று காங்கிரசின் தலைவர்களின் குழுவுடன் ஜனாதிபதி புஷ் இன் வெள்ளை மாளிகை சந்திப்பானது, ஈராக் மீதான அமெரிக்க ஊடுருவல் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புக்கான வழியைத் தயாரிக்கும் ஒருங்குபடுத்தப்பட்ட பிரச்சாரத் தாக்குதலின் தொடக்கமாகும். ஈராக் மீதான இராணுவ நடவடிக்கைக்கான காங்கிரசின் வாக்கை அனுமதிக்க மட்டும் புஷ் ஒப்புக்கொண்டார் ஏனென்றால் அவர் போர் தீர்மானத்தினை நிறைவேற்ற போதுமான அளவு இரு கட்சி ஆதரவுக்கு, முன்னதாகவே உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருந்தார்.

விவாதம் என்று அழைக்கப்படுவது --ஜனநாயகக் கட்சியின் 2000 ஆண்டு ஜனாதிபதி வேட்பாளர் அல்கோர் முதல் அவையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் டிக் ஜிப்பார்ட் வரையிலான-- முன்னணி ஜனநாயகக் கட்சியினர் ஏற்கனவே ஈராக்கிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு அவரது ஆதரவை அறிவித்திருந்த சூழ்நிலைகளின் கீழே இடம்பெற்றது. ஒரு செனெட்டர் அல்லது காங்கிரஸ் உறுப்பினர் கூட புஷ் இன் போர்க் கொள்கையை --ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு ஈராக்கை ஆக்கிரமிக்க மற்றும் அதன் அரசாங்கத்தைத் தூக்கி வீசுவதற்கு உரிமை இருக்கிறது என்ற கொள்கையை-- சவால் செய்திருக்கவில்லை.

எந்தவிதமான உண்மையான ஜனநாயக ரீதியான விவாதத்தின் முற்கூறுகள் --வெளிப்படையான மற்றும் நேர்மையான தகவல்கள், பொதுமக்கள் பங்கேற்பு, எதிர்த்தரப்புக்களும் இருத்தல் ஆகியன-- தற்போதைய விவாதத்தில் பற்றாக்குறையாக இருக்கின்றன. அரசியல் அமைப்புக்குள்ளே உள்ள புஷ் மற்றும் அவரது விமர்சகர்கள் பொது கட்டமைப்பை ஏற்றுக் கொண்டனர்: சதாம் ஹூசைன் ஒரு அரக்கன், ஈராக் அமெரிக்காவை அச்சுறுத்துகின்றது, அமெரிக்கா மத்திய கிழக்கில் அமைதிக்கும் ஜனநாயகத்துக்குமான சக்தி, அமெரிக்க இராணுவ நடவடிக்கை சூறையாடும் காரணங்களுக்காக ஒரு போதும் இடம் பெறவில்லை, தற்பாதுகாப்புக்காகத்தான், மற்றும் இவ்வாறான கட்டமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஆனால் உண்மையில், இக்கருத்துரைகள் ஒரு அக்கறை மிகுந்த ஆய்வின் கீழ் பொறிந்து போகின்றன:

சதாம் ஹூசைன் பரந்த அழிவுகரமான ஆயுதங்களைத் தயாரிக்கிறார்-- நாம் பார்த்தவாறு, அவர் ஆரம்பத்தில் அமெரிக்காவின் ஒரு கூட்டாளி மற்றும் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையின் ஒரு கருவி என்ற வகையில், அவற்றைப் பெற்று ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்தினார். அவற்றில் பெரும்பாலானவை முறையே 1990களில் ஐ.நா தடைகளின் கீழ் அழிக்கப்பட்டு விட்டன. முன்னாள் ஆயுத பரிசோதனை அதிகாரிகளான ஸ்காட் ரிட்டர் மற்றும் ரிச்சர்ட் பட்லர் போன்றோர், ஈராக் அத்தகைய ஆயுதங்களில் அதனை மீளக் கட்டி எழுப்புதற்கான அதன் திறனை குறிப்பிடத்தக்க வகையில் கொண்டிருக்கிறது என்ற கூற்றுக்களை உறுதியாக மறுத்திருக்கின்றனர். வியட்னாமில் அமெரிக்கத் தலையீட்டிற்கான சாக்குப்போக்கை வழங்கிய இழிபுகழ் பெற்ற டோன்க்கின் வளைகுடா சம்பவத்தைப் போல --அப்போதிருந்து சில ஆண்டுகள் கழித்து இப்போது, ஏனைய அத்தகைய பொய்மைப்படுத்தல்களின் பாணி உண்மை என்றால், ஈராக்குடனான போருக்குப் பின்னர் நீண்ட காலம் கழித்து, அமெரிக்க செய்தி ஊடகத்தில் ஈராக்கில் பரந்த மக்களைக் கொல்லும் எந்தவிதமான ஆயுதங்களும் ஒருபோதும் இருந்திருக்கவில்லை மற்றும் போருக்கான ஒரு சாக்குப்போக்கை வழங்கும் மொத்தத் துணியிலிருந்து அது உற்பத்தி செய்யப்பட்டது என்ற சிறு குறிப்புக்கள் தோன்றலாம்.

அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்கள் மட்டுமே சதாம் ஹூசைனின் அணு ஆயுதங்கள், உயிரி மற்றும் இரசாயன ஆயுதங்கள் பற்றி அவரின் பேயுருவில் நம்பிக்கை கொள்வதில் உரிமை கொண்டாடுகின்றன. ஈராக்கானது அச்சுறுத்தலைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது என்பதற்கு எந்தவித நற்சான்றையும் ஏனைய ஐரோப்பிய அரசுகளும் அளிக்கவில்லை, அரபு நாட்டை அழிப்பதில் உரிமை கொண்டாடும் அக்கறைகளைக் கொண்ட இஸ்ரேலைத் தவிர்ந்த மத்திய கிழக்கின் எந்த நாடுகளும் சரி செய்யவில்லை.

ஈராக் ஐ.நாவால் விலக்கி வைக்கப்பட்ட சில ஆயுதங்களை இன்னமும் பெற்றிருக்கிறது என்பது உண்மையாக இருந்தாலும் கூட, அத்தகைய ஆயுத முறைகளை உடைமையாகக் கொண்டிருத்தல் மட்டுமே ஒரு நாட்டை ஆக்கிரமிப்பதற்குப் போதுமான அடிப்படையாக எப்போதிருந்து இருக்கிறது? இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இருந்து ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் இஸ்ரேல் ஆகியன அணு ஆயுதங்களை உடைமையாகக் கொண்டிருப்பதில் ஐக்கிய அமெரிக்க அரசுகளுடன் சேர்ந்திருப்பது தெரிந்ததே. சில மாதங்களுக்குள்ளேயே இரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களைக் கட்டி எழுப்பும் திறமையை டசின் கணக்கான நாடுகள் கொண்டிருக்கின்றன. இருந்தும், இந்தக் காலகட்டம் முழுவதும் இந்தப் பிரச்சினை தொடர்பாக எந்த அமெரிக்க அரசாங்கமும் போருக்குச் சென்றிருக்கவில்லை. பதிலாக, அமெரிக்க கொள்கை ஆயுதக் கட்டுப்பாடுகள் மீதான இராஜதந்திரப் பேச்சுக்களில் ஈடுபடல், அணு ஆயுத பரவல் தடை பற்றிய கட்டுப்படுத்தும் ஒப்பந்தங்களை விளைவிப்பதில், ஆயுத சேகரிப்புக்களைக் குறைப்பதில் மற்றும் ஒரேயடியான அணு ஆயுத சோதனைகளை மற்றும் உயிரி ஆயுத சோதனைகளைத் தடை செய்வதில் ஈடுபடுவதில் இருந்திருக்கின்றன.

ஐக்கிய அமெரிக்க அரசுகளை நேரடியாகத் தாக்கும் திறனை சதாம் ஹூசைன் கொண்டிருக்கவில்லை மற்றும் அவரது அரசியல் பகைவர்களாக இருக்கும் பயங்கரவாதிகளுக்கு அத்தகைய ஆயுதங்களை அவர் வழங்குவது என்பது நியாயமானதாக இல்லை. ஈராக் நீண்ட தூர ஏவுகணைத் திறனைப் பெற்றிருக்கவில்லை மற்றும் அதனை அபிவிருத்தி செய்ய ஒருபோதும் நாடி இருக்கவில்லை. 1991 பாரசீக வளைகுடாப் போரின் பொழுது, அமெரிக்க அணு ஆயுதத் தாக்குதலை எதிர்கொண்ட பொழுது மற்றும் முதலாவது புஷ் நிர்வாகத்திடமிருந்து அதன் இலக்கு குவைத்திலிருந்து ஈராக்கிய துருப்புக்களை வெளியேற்றுவது, பாக்தாதை ஆக்கிரமிப்பது அல்ல என்ற உத்தரவாதங்களின் பொழுது, அது இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை. அழிவுகரமான பாதிப்பின் சாத்தியத்துடன் ஒரேயொரு சூழ்நிலையில்தான் ஈராக்கின் சிறியளவிலான இராசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படக் கூடும்: நாட்டின் இதயப் பகுதியில் அமெரிக்கத் துருப்புக்களைக் கொண்டுவரும் அமெரிக்க ஆக்கிரமிப்பின் நிகழ்வில்தான்.

ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானங்களை சதாம் ஹூசைன் மீறிக்கொண்டிருக்கிறார்-- இது உண்மையாக இருக்கலாம், பல்வேறு ஐ.நா தீர்மானங்களை ஈராக் ஏற்றுக்கொண்டிருப்பதன் பின்னர் இருந்து, முற்றுகை மூலம் மக்களைப் பட்டினிபோடுவதை சட்டரீதியானதாக ஆக்கியதன் பின்னர், அமெரிக்க அடிவருடி ஆட்சி மட்டுமே அவை அனைத்துடனும் ஒத்துப்போக முடியும். ஆனால் எப்போதிருந்து ஐ.நா பாதுகாப்புச்சபை தீர்மானங்களை மீறல் ஒரு தலைப்பட்சமான அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு அடிப்படையாக இருந்திருக்கிறது? இஸ்ரேல், ஐ.நா தீர்மானங்களை ஈராக்கை விட மிக அப்பட்டமாக மீறி இருக்கையில், ஆறு நாட்கள் போருக்குப் பின்னர், 35 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்குக் கரையையும் காசா பாலைநிலத் துண்டையும் ஆக்கிரமித்திருக்கும் அரசுடன் வெள்ளை மாளிகையின் போருக்கான ஆர்ப்பரிப்பு இல்லை.

அமெரிக்க அரசாங்கம், வலுச்சண்டைக்கு இழுக்கும் அதன் நடவடிக்கைகளுக்கான ஒரு மூடுதிரையாக, வசதியாக இருக்கும்பொழுது ஐ.நாவை அது பயன்படுத்துகிறது. ஏனைய சம்பவங்களில் அது ஐ.நாவை தண்டனையிலிருந்து விலக்கீட்டு உரிமையுடன் அலட்சியம் செய்கிறது. இவ்வாறு, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் போர் விமானங்கள், ஐ.நா அனுமதி இன்றி வாஷிங்டனால் அறிவிக்கப்பட்ட "பறக்கத்தடை" மண்டலங்கள் என அழைக்கப்படும் ரோந்துகளின்போது, ஈராக்கின் வடக்கிலும் தெற்கிலும் உள்ள இலக்குகள் மீது குண்டுகளை வீசி இருக்கின்றன. அமெரிக்க அரசாங்கமே UNSCOM உடன் சி.ஐ.ஏ நபர்களை ஊடுருவச் செய்து ஈராக்கில் ஐ.நா பரிசோதனைக் குழுவைத் தலைகீழாக்கியது. சி.ஐ.ஏ நபர்களின் இலக்கு அமெரிக்கக் குண்டு வீச்சுக்களுக்கான குறி இலக்குளை அடையாளம் காட்டுவது மற்றும் எதிர்கால படுகொலை முயற்சிகளுக்கு சதாம் ஹூசைன் நடமாட்டங்களை ஆய்வுசெய்தல் ஆகும்.

புஷ் நிர்வாகமானது, அதன் இராணுவ நடவடிக்கைகள் ஐ.நா பாதுகாப்பு அவைக்கு கீழ்ப்பட்டிருக்காது மற்றும் அது பாதுகாப்பு சபையின் அனுமதி நிபந்தனையின் பேரில் ஈராக் மீது தாக்குதலை நடத்தாது என வலியுறுத்துகின்றது. இந்த இரட்டை நிலைப்பாடு தெளிவானது: ஈராக் ஐ.நாவுக்கு கீழ்படிய வேண்டும் அல்லது அழிக்கப்படும், ஆனால் அமெரிக்கா அது விரும்புவதை செய்ய முடியும்.

சதாம் ஹூசைன் தனது மக்களை ஒடுக்கும் சர்வாதிகாரி-- மீண்டும் உண்மைதான், ஆனால் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையானது, மத்திய கிழக்கிலும் மற்றும் எங்கிலும், 50 ஆண்டுகளாக அத்தகைய ஆட்சியாளர்களை பெரும்பாலும் முன்கொண்டு வருவதை மற்றும் அவர்களுக்கு முண்டு கொடுப்பதைக் கொண்டிருந்தது. ஈரானின் ஷா, செளதி முடியாட்சி, மற்றும் துருக்கியில் உள்ள பல்வேறு இராணுவச் சர்வாதிகாரிகள் ஆகியோர் உட்பட, அவர்களில் பலரை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டால் சதாம் ஹூசைனைப் போன்றே காட்டுமிராண்டித்தனமானவர்கள். அமெரிக்காவும் கூட, சோவியத் ஒன்றியத்திற்கும் மதச்சார்பற்ற அரபு தேசியவாதத்திற்கும் எதிரான போராட்டத்தில் ஒரு கருவியாக இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களை கட்டி எழுப்பவும் மற்றும் படிமுறைரீதியாக நிதியூட்டவும் செய்தது.

வரவிருக்கும் ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போருக்கான சர்வதேச ஆதரவை உறுதிப்படுத்தும் அல்லது குறைந்த பட்சம் தடைச்சொல்லின்றி உடன்படவைப்பதற்கான அதன் முயற்சியில், புஷ் நிர்வாகமானது செச்சென்யாவில் ரஷ்ய அரசாங்கத்தால் ஈவுஇரக்கமற்ற இராணுவ ஒடுக்குதலுக்கு, க்சிக்கியாங்கில் உய்குர் பிரிவினைவாத குழுக்கள் மீது சீன ஒடுக்குதலுக்கு, குர்துகளின் மீதான துருக்கிய ஒடுக்குதலுக்கு மற்றும் ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் பற்றியதில் ஏனைய எண்ணற்ற அத்துமீறல்களுக்கு புஷ் நிர்வாகமானது பச்சை விளக்கு காட்டி இருக்கிறது.

ஜனநாயகத்திற்கான சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலிருந்து அப்பால், ஐக்கிய அமெரிக்க அரசுகள் அரபு மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை உள்ளார்ந்த ரீதியில் எதிர்த்தது, அது இப்பிராந்தியத்தின் எண்ணெய் வளங்கள் மீது அமெரிக்கக் கட்டுப்பாட்டுடன் தவிர்க்கமுடியாத வகையில் மோதுகிறது, அதேபோல இஸ்ரேல் அரசுக்கான அமெரிக்க ஆதரவைத் தவிர்க்க முடியாததாக்குகின்றது. ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பானது, ஜனநாயகத்திற்கான வெற்றியைப் பிரதிநிதித்துவம் செய்வதிலிருந்து விலகி, அதிகரித்த அளவில் காட்டுமிராண்டித்தனமான மற்றும் ஒடுக்குமுறைப் பண்பை எடுக்கும். அது மேற்குக்கரை மற்றும் காசா மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பை பெரும்பாலும் ஒப்பீட்டளவில் கடுமையாய் இராததாகப் பார்க்கச் செய்யும்.

குற்றவாளிகளின் அரசாங்கம்

புஷ் நிர்வாகம் ஈராக்கில் "ஆட்சி மாற்றம்" பற்றி ஓயாமல் பேசி வருகிறது. உலக சோசலிச வலைத் தளமானது, ஒரு சோசலிஸ்டுகள் மற்றும் ஜனநாயக உரிமையின் பாதுகாப்பாளர்கள் என்ற வகையில், இரு முதலாளித்துவ தேசியவாத அரசியலையும் சதாம் ஹூசைனின் சர்வாதிகார வழிமுறைகளையும் விட்டுக் கொடுக்காது எதிர்க்கிறது. ஆனால் இந்த ஆட்சியை அகற்றுவது ஈராக் மக்களின் பணி ஆகும், அமெரிக்க அரசாங்கத்தினது அல்ல.

உலகைப் பொறுத்தவரை தீக்குறி, ஏற்கனவே ஐக்கிய அமெரிக்க அரசுகளில் இடம்பெற்றுள்ள "ஆட்சி மாற்றம்" ஆகும். புஷ் நிர்வாகமானது அமெரிக்க ஆளும் தட்டில் உள்ள குற்றவாளி நபர்கள் அதிகாரத்துக்கு வந்துள்ளதைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. இது உயர்வு நவிற்சி (மிகைப்படுத்தல்) அல்ல: அதன் அரசியல் வழிமுறைகளில், சமூக அடித்தளத்தில் மற்றும் வெளிவிவகாரக் கொள்கையில், புஷ் நிர்வாகமானது கொள்ளைக் கும்பல் வாதத்தை உருவகப்படுத்துகிறது.

இந்த அரசாங்கமானது, முந்தைய நிர்வாகத்தை சீர்குலைப்பதற்கான சதி மற்றும் வலதுசாரி அரசியல் சீரழிவில் கிளின்டன் பதவி நீக்க விசாரணையில் உச்சக்கட்டத்தை அடைந்து, 2000-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் திருட்டால் பின்தொடரப்பட்ட, நீண்ட பிரச்சாரத்தின் உற்பத்திப் பொருளாகும்.

புஷ் நிர்வாகம் அதன் முன்னணி நபர்களை கடந்த ஆண்டு கார்ப்பொரேட் ஊழல்களில் அம்பலப்பட்டிருக்கும் படிமுறைரீதியான இலஞ்ச ஊழல்களை உடைய சமூகத் தட்டிலிருந்து எடுத்துக் கொண்டுள்ளது. தரைப்படை செயலாளர் தோமஸ் வைட் (Thomas White) முன்னாள் என்ரோன் நிர்வாக அதிகாரி ஆவார். உதவி ஜனாதிபதி டிக் செனி (Dick Cheney) எரிசக்தி கட்டுமான நிறுவனமான ஹாலிபர்ட்டன் (Halliburton) இன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த (CEO- Chief Executive officer) அவரது முந்தைய பாத்திரத்தில் மோசடிக் கணக்குகளுக்காக விசாரணையின் கீழ் இருக்கிறார். புஷ் தன்னும் அவரது சொந்த நல்வாய்ப்பை, நட்பு மற்றும் உள் வியாபாரம் (பங்குகளின் விலைகள் பற்றி முன்னரே அறிந்து வியாபாரத்தில் ஈடுபடல்) அடிப்படையில் பெருக்கிக் கொண்டார். பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் மற்றும் கருவூல செயலாளர் (Treasury Secretary) போல் ஓ 'நெய்ல் இருவரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரிகளே (CEO) அதேவேளை ஏனைய உயர் அதிகாரிகள் எரிசக்தி, மருந்துப் பொருட்கள் மற்றும் கார் தொழிற்சாலைகளுக்காக உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டும் ஆதரவாளர்களாக சேவை செய்துள்ளனர்.

புஷ் வெள்ளை மாளிகையில் நுழைந்த பொழுது, தலைமை நிர்வாக அதிகாரிகளால் நிரம்பப்பட்ட தனது அமைச்சரவை, அரசாங்கத்தை ஒரு வர்த்தகத்தைப் போல நடத்தும் என செருக்குடன் கூறிக்கொண்டார். இது உண்மையானது: புஷ் நிர்வாகமானது அரசாங்கத்தில் என்ரோன், வேர்ல்ட் கொம், க்ளோபல் கிராசிங், டைகோ மற்றும் ஏனைய டசின் கணக்கான கோர்ப்பொரேட் சூழ்ச்சிகளின் உயர் --வடிவ வகையறாக்களின் வழிமுறைகளைப் பொதிந்துள்ளது.

புஷ்ஷின் உள்நாட்டுக் கொள்கைகள் கோர்ப்பொரேட் அமெரிக்காவை வளப்படுத்துவதற்கு, உழைக்கும் மக்களை படிமுறைரீதியாகக் கொள்ளையிடுவதைக் கூட்டுகிறது. அமெரிக்க வரலாற்றிலேயே செல்வந்தர்களுக்காக மிகப்பெரிய அளவு வட்டி குறைப்பு வழியாக, தலைகிறுகிறுக்கச் செய்யும் 1.35 டிரில்லியன் டாலர்களை புஷ் தள்ளினார். அவரது நிர்வாகம் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளின் மற்றும் வாழ்க்கைத் தரங்களின் மேல் தாக்குதலுக்கு மேல் தாக்குதலைத் தொடுத்து இருக்கிறது. சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒழுங்குகள், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கள், தொழிற்சங்க உரிமைகள்-- அனைத்தும் தனிநபர் செல்வம் மற்றும் கோர்ப்பொரேட் லாபத்தை திரளச்செய்வதில் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் அகற்றுவதற்கான ஓட்டத்தின் ஒரு பகுதியாக அழிவுக்கான இலக்காக ஆக்கப்பட்டிருக்கின்றன.

புஷ் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையானது அதன் உள்நாட்டுக் கொள்கையின் பூகோள அளவிலான விரிவாக்கம் ஆகும். குற்றம் மற்றும் பித்தலாட்டம் மூலம் அதிகாரத்துக்கு வந்தவர்கள் போர் மற்றும் சமாதானம் பற்றி இப்பொழுது முடிவுகளை எடுக்கின்றனர். கோர்ப்பொரேட் தட்டுக்களின் மிகவும் கொள்ளை அடித்துப் பறிக்கும் பகுதியினரின் --பூகோளத்தை சூறையாடலில் இலாபம் பெற விரும்பும் எரிசக்தி ஏகபோகங்கள், ஆயுதத் தொழில்துறை, நிதிக் கூட்டுக்கள் ஆகியோரின்-- நலன்களைக் கூட்ட, அவர்கள் அமெரிக்க அரசாங்கத்தின் இராணுவ மற்றும் அரசியல் வளங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

போர்க்கால நடவடிக்கைகள் வெளிநாட்டு இலக்குகளுக்கு எதிராக மட்டும் அல்லாமல், உள்நாட்டில் அமெரிக்க மக்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும். நிர்வாகமானது ஏற்கனவே அரசியல் கருத்துவேறுபாட்டை குற்றமயமாக்க ஆரம்பித்துள்ளது. புஷ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், தாக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஈராக்குடனான போருக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக சிறையில் தள்ளப்படுகின்றனர். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் "ஒன்றில் நீங்கள் எம் பக்கம் இருக்க வேண்டும் அல்லது எமக்கு எதிராக இருக்க வேண்டும்" என புஷ் அறிவித்திருக்கிறார். இந்தக் கொள்கையின் தர்க்கவியல் நிர்வாகத்திற்கு எதிரான அனைத்து சமூக எதிர்ப்புக்களையும் ஒரு தேசத்துரோகமாக நடத்துவதாக இருக்கிறது.

போரும் சோசலிசத்திற்கான போராட்டமும்

ஈராக்கிற்கு எதிரான தற்போதைய ஏகாதிபத்தியத்திய போருக்கு எதிரான போராட்டம் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் முழு சமூக மற்றும் அரசியற் கட்டமைப்புக்கு எதிரான போராட்டத்துடன் கட்டுண்டிருக்கிறது. இறுதி ஆய்வில் புஷ் நிர்வாகமும் அதன் கொள்கைகளும் அந்தக் கட்டமைப்பின் உற்பத்திப் பொருளாக இருக்கின்றன. போரானது அமெரிக்காவின் ஆளும் தட்டின் வேலைத் திட்டமாக ஆகி இருக்கிறது, ஏனெனில் ஆழமாகி வரும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து வெளிவருவதற்கு அதனிடம் வேறு வழி எதுவும் இல்லை.

சர்வதேச ரீதியாகவும் மத்திய கிழக்கிலும் அதன் இலக்குகளை பின்தொடர்வதற்கான சிறந்த வழிபற்றி புஷ் நிர்வாகத்துக்கு அறிவுரை கூறுவதை நாடும், ஜனநாயகக் கட்சியின் பகுதியினர் உட்பட, விமர்சகர்கள் என கூறப்படுபவர்கள் அனைவரிலிருந்தும் உலக சோசலிச வலைத் தளமானது தன்னைப் பிரித்துக் கொள்கிறது. அமெரிக்க மக்களின் ஜனநாயக விருப்பினை அது பிரதிபலிக்காது என்பது ஒருபுறம் இருக்கட்டும், சோசலிஸ்டுகள் என்ற வகையில், அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகள் அமெரிக்க மக்களின் சட்டரீதியான மற்றும் நேர்மையான நலன்களை வெளிப்படுத்துவதாக நாம் அணுகவில்லை. நாம் அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பதோடு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் சர்வதேச ரீதியாகவும் உழைக்கும் மக்களின் சக்தி வாய்ந்த இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்காக வேலை செய்கின்றோம்.

அத்தகைய இயக்கம் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை கட்டாயம் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் ஏகாதிபத்தியப் போரானது முதலாளித்துவ அமைப்புமுறையின், எல்லாவற்றுக்கும் மேலாக உலக முதலாளித்துவத்தின் மிக ஆற்றல் வாய்ந்த மையத்தில், ஐக்கிய அமெரிக்க நாடுகளில் உள்ள முரண்பாடுகளின் தவிர்க்க முடியாத உற்பத்திப் பொருளாகும். இருபதாம் நுாற்றாண்டின் நடுப்பகுதியில் அதன் முழுமலர்ச்சிக் காலங்களுக்கு மாறுபாடாக, ஐக்கிய அமெரிக்க அரசுகளானது இனியும் வளர்ந்து வரும் சக்தியாக இல்லை அல்லது அது ஜனநாயக ஒப்பனைகளில் அதன் பூகோள அபிலாஷைகளை மூடி மறைக்கிறது.

அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்று ரீதியான அழுகலை இரு அடிப்படை உண்மைகள் வெளிப்படுத்துகின்றன. சர்வதேச ரீதியாக, ஐக்கிய அமெரிக்க அரசுகள் அதன் பூகோள மேலாதிக்க நிலையை இழந்திருக்கிறது, ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் சக்திமிக்க வர்த்தகப் போட்டியாளர்களை அது எதிர்கொள்கிறது, மற்றும் பிரம்மாண்டமான வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் செலுத்துகைப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றது, அது தேசிய திவாலை முன்னறிவிக்கின்றது. உள்நாட்டில், அமெரிக்க சமூகமானது முன்னர் என்றும் இருந்திரா வடிவங்களில் சமூக மற்றும் பொருளாதார துருவமுனைப்படலால் துயருறுகின்றது. மக்கள் தொகையானது முன்னர் என்றுமிருந்திரா அளவு செல்வத்தை அனுபவிக்கும் சிறிய துண்டுப் பகுதிக்கும், வாழக்கைத் தரங்கள் தேக்கமடைந்திருக்கும் அல்லது வீழச்சி அடைந்துவரும் மற்றும் வேலைகள், ஓய்வூதியங்கள், சுகாதார பராமரிப்பு மற்றும் பொது சேவைகள் சம்பந்தமாக பாதுகாப்பின்மை பெருகிவருவதை எதிர்கொள்ளும், உழைக்கும் மக்களின் பரந்த பெரும்பான்மை பகுதிக்கும் இடையில் பிளவுண்டு இருக்கிறது.

அதனால்தான் அமெரிக்க ஜனநாயகத்தின் அழுகிப்போதலானது, செப்டம்பர் 11-ஐ பின்தொடர்ந்து இயற்றப்பட்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளால் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. அத்தகைய சின்னஞ்சிறு சதவீத மக்கள் அனைத்து செல்வங்களையும் கட்டுப்படுத்தல் மற்றும் அவர்களின் இலாப நலன்களுக்காக மீதமுள்ள மக்களை பணயக்கைதியாக வைத்திருக்கும் ஒரு சமுதாயத்தில் ஜனநாயக வடிவங்களைப் பராமரித்தல் என்பது சாத்தியமில்லை.

பூகோள அளவில் அமெரிக்க இராணுவ வாதத்தின் தோற்றம் ஏகாதிபத்தியம் பற்றிய மார்க்சிச ஆய்வின் ஆழமான உறுதிப்படுத்தலாகும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லெனினால் இனங்காணப்பட்ட அனைத்து சிறந்த ஆய்வுக் கட்டுரைகளும் --நாடுகளை காலனித்துவ பாணியில் ஆக்கிரமித்தல், கச்சாப் பொருட்களைக் கொள்ளையிட்டுத் தனதாக்கிக் கொள்வதற்கு இராணுவப் போராட்டம், "பின்னுக்கு நிற்பவர்கள் அனைவரதும் பிற்போக்கு" உள்நாட்டுக் கொள்கை --இவை புஷ் நிர்வாகத்தின் வேலைத் திட்டமாக இருக்கின்றன.

அமெரிக்க அரசாங்கமானது, செப்டம்பர்11 துயரச் சம்பவத்தை-- ஒன்றில் தாக்குதல்களைத் தடுப்பதற்குத் தவறியதில் அல்லது செயலூக்கத்துடன் (வேண்டுமென்றே) அவற்றைப் பொறுத்தருளியதில், அதன் சொந்தப் பாத்திரம், இன்னும் விசாரணை செய்யப்பட இருக்கிறது-- அரசியல் மற்றும் கோர்ப்பொரேட் தட்டுக்களுக்கு உள்ளே உள்ள மிகப் பிற்போக்கான சக்திகளின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துதற்கான சாக்குப்போக்கை வழங்குவதற்கு, அதனைப் பற்றிக் கொண்டது. ஆப்கானிஸ்தானில் நடந்த போரானது பெரிய அளவிலான மற்றும் இன்னும் கூடிய இரத்தம் தோய்ந்த சாகசங்களுக்குமான ஒரு மிதிகல் ஆகவே இருந்தது.

உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும் வாழக்கைத் தரங்களை மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தலும் ஒரே போராட்டத்தின் இரு பக்கங்களாகும். வெள்ளை மாளிகையிலும் பென்டகனிலும் உள்ள போர்வெறியைத் தூண்டுபவர்களை தடுத்து நிறுத்தக் கூடிய ஒரே சக்தி, இராணுவ வாதத்துக்கும் போருக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தால் தலைமை தாங்கி நடாத்தப்படும் ஒரு வெகுஜன இயக்கமாகும், அது முழு ஆளும் தட்டிற்கும் மற்றும் அதன் இரு கட்சிகளுக்கும் எதிராக இயக்கப்படும். புஷ்ஷின் போர்த்திட்டங்களை எதிர்ப்பதற்கு காங்கிரஸ் அல்லது ஜனநாயகக் கட்சியினர் மீது நம்பிக்கை வைக்கப்பட முடியாது. முடிவில், இந்த சக்திகள் புஷ் தாமே பாதுகாக்கின்ற அதே அமைப்பு முறையையே பாதுகாக்கின்றனர் மற்றும் அதே அடிப்படை சமூக நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

உலக சோசலிச வலைத் தளமும், சோசலிச சமத்துவக் கட்சியும் போருக்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதிலும் அத்தகையதொரு சுயாதீன தொழிலாள வர்க்க இயக்கத்தை வளர்த்தெடுப்பதற்கு தம்மை அர்ப்பணித்திருக்கின்றன.

See Also :

அமெரிக்கா,பிரிட்டன் ஈராக் மீதான வான்வழிப் போரை விரைவுபடுத்துகின்றன

செனியின் போருக்கான விவரம்: பரந்த பொய்களும் வரலாற்று ரீதியான பொய்மைப்படுத்தல்களும்

உத்தியோகபூர்வ விவாதத்திற்குப் பின்னால், அமெரிக்கா ஈராக்கைத் தாக்குவதற்காக படைகளைத் தயாரிக்கிறது

ஜேர்மன் பிரதமர் ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தத்தை எதிர்த்துள்ளார்

ஈராக்கில் அமெரிக்க யுத்த நோக்கங்கள் குறித்து அமெரிக்க மக்கள் அறியாது மறைக்கப்பட்டுள்ளனர்

ஈராக்கிற்கு எதிரான போருக்கு அமெரிக்கா நெருங்குகிறது

அமெரிக்கா ஈராக்கின் மீது முழு அளவிலான ஆக்கிரமிப்புக்கு தயார் செய்து கொண்டிருக்கிறது

Top of page