World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Bush at the UN: Washington's war ultimatum to the world

ஐ.நா சபையில் புஷ்: உலகத்துக்கு வாஷிங்டனின் போருக்கான இறுதி எச்சரிக்கை

By the Editorial Board
13 September 2002

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கிற்கு எதிரான வாஷிங்டனின் போர்த்திட்டங்களை வலியுறுத்தவும் ஐக்கிய நாடுகள் அவைக்கே கெடு விதிக்கவும் அதாவது அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஒப்புதல் கொடு அல்லது "சம்பந்தப்படாமல் இரு" என்று கூறவும் ஜோர்ஜ்.டிபிள்யு. புஷ் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு முன்சென்றார்.

அவரது கர்வமும் மிரட்டலும் கொண்ட தொனி ஒருபுறம் இருக்க, அவரது முழுமையான உரை வெளிப்படையான முரண்பாட்டைக் கொண்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் விருப்பத்திற்கு மாறாக சதாம் ஹூசைன் செயல்பட்டதால் அவர் தண்டிக்கப்பட்டு தூக்கி வீசப்பட வேண்டும். ஐக்கியநாடுகள் சபை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமிப்பு செய்து ஒரு கைப்பொம்மை ஆட்சியை நிறுவும். இந்த இரட்டை நிலைப்பாடு புஷ்ஷின் ஒவ்வொரு பேச்சிலும் ஊடுருவிப் பரந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையில் தோற்றமளிக்கப்போகும் தறுவாயில், பென்டகனின் அறிவிப்பு உலக அமைதி மற்றும் பாதுகாப்பு பற்றிய புஷ்ஷின் பேச்சுக்குப் பின்னால் இருக்கும் சண்டையிடும் குணத்தின் சாரத்தை கோடிட்டுக் காட்டியது, அதாவது புளோரிடாவில் உள்ள அமெரிக்க மத்திய ஆணையக தலைமையகத்தில் இருந்து ஜெனரல் டம்மி பிராங்ஸின் தலைமையின் கீழ் 600 அதிகாரிகள் பாரசீக வளைகுடா நாடான கத்தாருக்கு அனுப்பப்படுவார்கள், அங்கே அவர்கள் ஒரு முன்னிலை போர் ஆணையகத்தை அமைப்பார்கள். இந்த அறிவிப்பு செய்யப்பட்ட நேரமானது, வாஷிங்டனின் நோக்கங்கள் பற்றி எந்த ஐயங்களும் இருக்கக்கூடாது என்ற எண்ணம் கொண்டது.

மிகவும் வெளிப்படையாக சொல்லாமல் புஷ் உள் அர்த்தத்துடன் கோரிக்கை விடுத்தார், அதாவது ஒருசில வாரங்களுக்குள் ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுத பரிசோதகர்களை ஈராக்கினுள் சென்று அங்கு தங்கு தடையின்றி அவர்கள் எந்தவிதமான அனைத்து ஆயுதக்கிடங்குகளுக்கும் செல்ல அனுமதிக்க வேண்டு மென்று ஈராக்கிற்கு கட்டளை இடும் தீர்மானம் ஒன்றை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நிறைவேற்ற வேண்டும் என்பதாகும். அவ்வாறான ஒரு தீர்மானம், ஈராக் முழுமையாக இணங்கத் தவறும் பட்சத்தில் இராணுவப் படையைப் பயன்படுத்த முன்னதாகவே ஒப்புதல் அளிக்கும்.

அதேசமயம் புஷ், அப்படியான ஒரு தீர்மானம் கொண்டு வரப்படுவது, பாக்தாத் இணங்கினாலும் இணங்காவிட்டாலும் அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்யவும் வாஷிங்டனுக்கு கீழ்ப்படியும் ஒரு கைப்பொம்மை அரசாங்கத்தை நிறுவுவதற்குமான முன்னோடியாகத்தான் இருக்கும் என தெளிவாகக் கூறினார்.

புஷ்ஷின் உரை பொய்கள், திரிபுகள் மற்றும் முரண்பாடுகளின் ஒரு பொழிப்பு ஆகும். அது ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போரின் சுருக்கமாக ஊடுருவிப் பரவுகிறது. அது உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக ஈராக் அரசாங்கம் உள்ளது என்ற முட்டாள்தனமான அடிப்படையில் தங்கி உள்ளது. அப்படியான ஒரு அச்சுறுத்தல் மிகவும் கடுமையானது மிகவும் உடனடியானது என்பதால் உடனடி இராணுவ நடவடிக்கை தேவையானது என்பதாகும்.

சதாம் ஹூசைன் நவீனகால ஹிட்லர் என்ற அமெரிக்காவின் கூற்றை புஷ் வலியுறுத்தினார், ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டது ஏனெனில், அதன் மூலமாக "உலக அமைதி" மீண்டும் எப்போதுமே "எந்த ஒரு மனிதனின் விருப்பத்தின் பேரிலும் கெட்ட எண்ணத்தினாலும் அழிக்கப்படமாட்டாது" என்று அவர் பிரகடனம் செய்தார். "ஈராக் அரசாங்கமானது எப்படியான ஒரு ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஐக்கியநாடுகள் சபை உருவாக்கப்பட்டதோ திட்டவட்டமாக அதே தன்மை உடையதாகும்" என்றார் அவர்.

அப்படியான கூற்றுக்களின் விசித்திரத்தை உள்ளெடுத்துக் கொள்வதற்கு நிறைய விமர்சன மதிப்பீடுகள் வேண்டியதில்லை. ஈராக் ஒரு வறுமையான முன்னைய காலனித்துவ நாடாகும், அது போரில் தோற்கடிக்கப்பட்டு மற்றும் ஒரு பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட பொருளாதாரத் தடைகளால் சீரழிக்கப்பட்டது. அதன் பாதுகாப்புக்கள் 1991 வளைகுடாப் போரில் இருந்து குறைக்கப்பட்டன. முழுமையாக பாதுகாப்பு இல்லாத ஒரு நாட்டுக்கு எதிராக அமெரிக்கா இடைவிடாத-- இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ -- போரை நடாத்தியது. அநேகமாக நாளாந்த அடிப்படையில் அது வடக்கு மற்றும் தெற்கு ஈராக்கில் உள்ள இராணுவம் மற்றும் மக்கள் வாழும் பகுதிகள் மீது குறிவைத்து குண்டுகள் வீசுவதைத் தொடர்ந்து செய்கிறது.

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஏகாதிபத்திய நாட்டுக்காக புஷ் பேசுகிறார், அது மிகவும் முன்னேறிய மற்றும் பரந்த மக்களின் அழிவை ஏற்படுத்தக் கூடிய மரண ஆயுதங்கள் முழுவதையும் கொண்டு ஆயுதபாணியாக உள்ளது. அது சவால்விட முடியாத அதன் இராணுவ பலத்தைப் பயன்படுத்தி மிகவும் பலவீனமான மற்றும் சிறிய நாடுகளை அழித்தது, 1960கள் மற்றும் 70களில் வியட்நாமை நாசப்படுத்தியது, மற்றும் இரண்டு பத்தாண்டு காலத்தில் மேலும் பல நாடுகளை --லெபனான், கிரெனடா, லிபியா, பனாமா, ஈராக், சோமாலியா, சூடான், யூகோஸ்லாவியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை -- தாக்கியது.

அது தற்போது உலகம் முழுவதும் டசின் கணக்கான இடங்களில் இராணுவப் படைகளை நிறுத்தி உள்ளது, கடந்த வருடத்தை ஆப்கானிஸ்தான் மீது குண்டு போடுதற்கு செலவிட்டது-- ஆயிரக் கணக்கான மக்களைக் கொன்றது, கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான தலிபான் மற்றும் அல்கொய்தா இராணுவத்தினரைப் படுகொலை செய்தது.

ஜேர்மனியின் நாஜி அரசாங்கத்துடன் வரையறை செய்யக்கூடிய தோற்றங்களில் ஒன்று அதன் மூர்க்கமான இராணுவவாதம் மற்றும் சர்வதேச சட்டம், உலக அபிப்பிராயம் பற்றிய இழிவான பார்வை ஆகும். புஷ் நிர்வாகம், தான் அதன் வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படை அம்சமாக இராணுவப் படையைப் பயன்படுத்துவதன் மூலமாக தற்போதைய எந்த அரசாங்கத்தையும் விட, ஹிட்லர் அரசாங்கத்தைப் போன்று இருக்கிறது. ஐக்கியநாடுகள் சபையில் புஷ்ஷின் நடவடிக்கையானது சர்வதேச சட்டம் தொடர்பாக அவரது அரசாங்கத்தின் ஆணவப் புறக்கணிப்பையும் போர்நிலைமையையும் எடுத்துக்காட்டுகிறது.

ஈராக் இரசாயன, உயிரி மற்றும் அணு ஆயுதங்களைக் குவிக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை முன்வைக்க எந்த முயற்சியையும் புஷ் எடுக்கவில்லை, அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டை அவரது நிர்வாகம் எடுக்கிறது. வாஷிங்டனின் வார்த்தையை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா மற்றும் உலகில் உள்ள மக்களுக்கு கூறப்பட்டுள்ளது.

இந்த நிலைப்பாட்டிற்கான தெளிவான விளக்கம் என்னவென்றால், அமெரிக்காவிடம் அதன் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு முக்கியமான ஆதாரம் எதுவும் கிடையாது. ஐக்கிய நாடுகள் சபையில் புஷ் பேசுவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஈராக்கின் அணு, இரசாயன மற்றும் உயிரியல் திறன்கள் பற்றிய ஒரு புதிய தேசிய உளவு அறிக்கையை திரட்ட அரசாங்கம் தவறி விட்டது என அமெரிக்கப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். அப்படியானதொரு இடை முகவாண்மையின் (cross agency) ஆய்வு இறுதியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் செய்யப்பட்டது. செனெட் புலனாய்வுக் குழுவுக்கு தலைமை வகிக்கும் புளோரிடா ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பொப் கிரகாம், கடந்த ஜூலையில் ஒரு புதிய மதிப்பீட்டுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் பலன் கிடைக்கவில்லை.

"எங்களை நம்புங்கள் இல்லாவிட்டால்" என்ற அமெரிக்க அரசாங்கத்தின் தற்போதைய பாவனையை, அக்டோபர் 1962ல் கியூப ஏவுகணை நெருக்கடியின்போது கென்னடி நிர்வாகம் எடுத்த அணுகுமுறையுடன் ஒப்பிடுவது அறிவூட்டத்தக்கதாக இருக்கும். அந்த சமயத்தில் கியூபாவுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்பு, கியூபா சோவியத் ஏவுகணைகளை நிறுத்தி உள்ளது என்பதற்கு தெளிவான ஆதாரத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு போவதற்கு முன்பு காண்பிப்பது சட்டபூர்வமான அவசியம் என அமெரிக்க ஆளும் மேல் தட்டினர் கருதினர். பாதுகாப்பு சபைக் கூட்டம் ஒன்றில் ஏவுகணைப் பகுதிகளை காண்பிக்கும் அமெரிக்காவின் வேவுப் பணியில் எடுத்த நிழற்படங்களை ஐக்கியநாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் அட்லை ஸ்டீவன்சன் போட்டுக் காண்பித்தார்.

அப்படியான ஆதாரம் இல்லாத நிலையில் போருக்கான அமெரிக்காவின் உரைச்சுருக்கம் இரண்டு வாதங்களுடன் சுருங்கிப் போகிறது. முதலாவது ஈராக் அரசாங்கம் உலகை அச்சுறுத்துகிறது, ஏனென்றால் அது அதனிடம் உள்ள பரந்த மக்களை அழிக்கக் கூடிய என குற்றம் சாட்டப்படும் ஆயுதங்களை பயங்கரவாதக் குழுக்களுக்கு வழங்கலாம், அவற்றினை இக்குழுக்கள் கடந்த செப்டம்பர் 11ல் ஏற்பட்ட அழிவை விட மோசமான தாக்குதல்களை நடத்த உபயோகிக்கலாம். சமீபத்திய எதிர்காலத்தில் ஈராக் ஒரு அணு ஆயுதத்தைக் கூட உருவாக்கலாம். "அவரிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்பதை முதல் தடவையாக நிச்சயமாக நமக்குத் தெரியப்போவது எப்போது என்றால் அதை அவர் பயன்படுத்தும் போதுதான், கடவுள்தான் தடுக்க வேண்டும்" என்று புஷ் கூறினார்.

வேறுவார்த்தைகளில் கூறினால் சதாம் ஹூசைனுக்கு எதிராக இறுதிவரையிலான அமெரிக்காவின் போருக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் கொடுக்க வேண்டியது எதற்கு என்றால், ஈராக் சர்வாதிகாரியிடம் ஏற்கனவே ஒன்று இருப்பதற்காக அல்ல, ஆனால் எதிர்காலத்தில் அவர் என்ன செய்யலாம் என்பதற்காகவாகும். போருக்கான முன்னர் அறிந்திராத இந்த நியாயப்படுத்தலை மிகத் தெளிவாகவே, எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டின் மீது திடீர்த் தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தலாம்.

மேலும் ஸ்தூலமாகக் கூறினால், ஐயத்திற்கிடமின்றி மேலும் பல நாடுகளின் மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதல்கள் நடத்துவதை நியாயப்படுத்துவதாக இருக்கும், ஒவ்வொரு ஐக்கிய நாடுகள் சபைப் பிரதிநிநியும் அறிந்தபடி அந்த நாடுகள் புஷ் நிர்வாகத்தினுள் உள்ள போர் சூழ்ச்சியினால் குறிவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக-- சிரியா, ஈரான் மற்றும் கொரியா ஆகியன.

இரண்டாவது விவாதம் 1991 வளைகுடாப் போருக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானங்களின் பாசுரத் (Litany) தொகுதியை கொண்டிருக்கிறது, புஷ்ஷின் படி, ஈராக் மறுத்திருந்தது. இந்தத் தீர்மானங்களை அமல்படுத்தல் எனும் பெயரில், அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு ஐ.நா அதன் இசைவாணையை அளிக்க வேண்டும் என புஷ் கூறினார்.

இந்த விவாதம் பற்றி கூறப்படவேண்டிய முதலாவது விஷயம் தீர்மானங்களை தாமே, 1991 வளைகுடாப் போரில் அமெரிக்காவினதும் அதன் ஏகாதிபத்தியக் கூட்டாளிகளினதும் கட்டளையின் பேரில் திணிக்கப்பட்ட வெற்றியாளரின் அமைதியைக் கொண்டிருக்கிறது. அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படைப் பாத்திரத்தை பெரும் வல்லரசுகளின் ஒரு கருவியாக சோதனை செய்கின்றனர்.

இந்த நடவடிக்கைகள், செயற்கடுமை வாய்ந்த பொருளாதாரத் தடைகளைத் திணித்தல் மற்றும் ஈராக்கின் இறையாண்மையை அகற்றல் ஆகியன, ஈராக்கியர்களைப் பட்டினிபோட மற்றும் துன்புறுத்த மற்றும் நாட்டை பழுதுபடுத்த, அதன்மூலம் ஈராக்கின் எண்ணெய் வளங்கள் மீது அதன் பிடியைப் பலப்படுத்த, கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தின் பங்கு பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஜப்பானுக்குக்குப் போகும் என்ற உறுதியுடன், வடிவமைக்கப்பட்டது.

ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தின் அமெரிக்காவில் உள்ள பல நாடுகளுக்கு எதிரான அவர்களின் வன்முறை மற்றும் அழிவு நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா மீதோ அல்லது மற்றைய ஏகாதிபத்திய நாடுகள் மீதோ அத்தகைய பொருளாதாரத் தடைகள் ஒருபோதும் திணிக்கப்பட்டதில்லை.

ஈராக்கின் பாவங்கள் பற்றிய அவரது பட்டியலில், அந்நாட்டின் மீது ஆத்திரமூட்டல்களைச் செய்யும்பொருட்டு மற்றும் திரும்பத்திரும்ப குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடாத்தும் பொருட்டு ஐ.நா தீர்மானங்களின் ஷரத்துக்களை அமெரிக்கா திரித்த மற்றும் தவறான வகையில் பயன்படுத்திய விதத்தைக் குறிப்பிடுவதை புஷ் புறக்கணித்தார். இவற்றுள், ஐ.நா அனுமதி ஆதரவின்றி நடைமுறைப்படுத்திய, ஈராக்கின் வடக்கிலும் தெற்கிலும் "பறக்கத்தடை" மண்டலங்களைத் திணித்தல், மற்றும் அமெரிக்க ஏவுகணைகளுக்கு துல்லியமான இலக்குகளைக் கண்டறிய மற்றும் சதாம் ஹூசைனுக்கும் மற்றைய ஈராக்கிய தலைவர்களுக்கும் எதிரான அமெரிக்க கொலைச்சதி முயற்சிகளுக்கான உளவுத் தகவல்களை அளிக்க உதவிய, ஐ.நா ஆயுத பரிசோதனையாளர்கள் மத்தியில் சி.ஐ.ஏ உளவாளிகளை ஊடுருவச் செய்தல் உள்பட அடங்கும்.

1998ல் ஆயுதப் பரிசோதகர்களுடன் ஈராக்கின் "முற்றிலும் ஒத்துழைப்பை நிறுத்தல்" பற்றி, அந்த ஆண்டில் டிசம்பரில் அமெரிக்கா- பிரிட்டிஷ் தொடுத்த நான்குநாள் வான் போரில் --இத்தாக்குதல் பாதுகாப்பு சபையின் அனுமதி இன்றி நடத்தப்பட்டது-- ஐ.நா தனது ஆயுதப் பரிசோதகர்களை முன்னதாகவே திரும்பப் பெற்றதைக் குறிப்பிடாமல், கெட்டதிறங்களை மறைத்து வேறுபண்புகளாகக் குறிப்பிட்டார்.

1998ல், அமெரிக்கா ஈராக் தொடர்பாக ஒருதலைப்பட்சமாய் அறிவித்தது, வெறுமனே ஐ.நா பொருளாதாரத் தடைகளை வலிந்து ஏற்கும்படி செய்தல் மட்டுமல்ல, ஆட்சியை அகற்றுவதுமாக இருக்கும் -- ஐ.நா விதிமுறைகளை மீறும் இக்கொள்கையையும் பற்றி அவர் குறிப்பிடவில்லை.

ஐ.நாவின் பொறுப்பின் மீறத்தகாத்தன்மை பற்றிய புஷ்ஷின் அக்கறை என்று கூறப்படுவது அமெரிக்க நிலைப்பாட்டில் ஊடுருவிப் பரவி நிற்கும் போலிப்பாசாங்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேறலைக் கோரும் ஐ.நா தீர்மானங்களை வீம்பு பாராட்டும், மத்திய கிழக்கில் உள்ள அதன் நெருங்கிய கூட்டாளி இஸ்ரேல் பற்றி சொல்வதற்கு அவரிடம் ஒன்றும் இருந்ததில்லை.

மேலும் அமெரிக்காவானது தனக்கு உகந்ததாயிராது என அது கருதும் ஐ.நா தீர்மானங்களால் கட்டுண்டிருக்க மறுக்கிறது. அது தற்போது, போர்க் குற்றவாளிகளை விசாரிப்பதற்கான ஐ.நா-ஆல் புதிதாக நிறுவப்பட்ட, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை பயனற்றதாக்குவதற்கான வெளிப்படையான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஈரான் மீதான சதாம் ஹூசைனின் ஆக்கிரமிப்பையும் ஈரான்--ஈராக் போரின் பொழுது இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதையும் பற்றிய அமெரிக்க தரத்திலான கண்டித்தல்களுடன் புஷ் ஈராக்கிற்கு எதிரான அவரது வசைமாரிகளை மேலும் முத்தாய்ப்பாகக் கூறினார். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா சதாம் ஹூசைனை ஆதரித்ததை, இரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை அபிவிருத்தி செய்ய அவருக்கு உதவியதை, மற்றும் ஈரானுக்கும் ஈராக்கின் வடக்கில் உள்ள அதன் கூட்டாளியான குர்துகளுக்கும் எதிராக இரசாயன ஆயுதங்களை அவர் பயன்படுத்துவதற்கு மெளனமாய் ஒத்துழைப்பு வழங்கிய உண்மையை அவர் தள்ளுபடி செய்தார்.

வியாழன் அன்று புஷ்ஷூக்கு முன்நிகழ்வாய் மேடையில் ஐ.நா பொதுச்செயலாளர் கோபி அன்னான் (Kofi Annan), ஐ.நா சபையானது, ஈராக்கிற்கு எதிரான புதிய போருக்காக அமெரிக்கா நாடும் சட்டரீதியான மூடிமறைப்பை வழங்குவதற்கு தயாராக இருந்தது என தெளிவுபடுத்தினார். அன்னான் அமெரிக்கா தலைமையிலான 1991 போரை "பல்கூட்டு" நடவடிக்கையாக ஆதரித்து, வாஷிங்டன் முன்னால் கெஞ்சும் பாணியில் செய்துகாட்டினார். அவரது குறிப்புக்களின் சாராம்சம் ஐ.நா சேவைகளை அமெரிக்கா தொடர்வதற்கான வேண்டுகோளாக இருந்தது. போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபொழுது, அன்னான் புஷ்ஷூக்கு, "ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்படும் விசேட சட்டரீதியான தன்மைக்கு ஈடிணை ஏதுமில்லை" என்று அறிவுரை வழங்கினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக அம்மான், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற குறைந்த ஏகாதிபத்திய வல்லரசுகளான, மற்றும் ரத்து அதிகாரத்தைக் (Veto Power) கொண்டிருக்கும் ஏனைய பாதுகாப்பு சபை உறுப்பினர்களான ரஷ்யா மற்றும் சீனா ஆகியன, வாஷிங்டனானது வளைகுடாவிலும் மற்றும் எங்கிலும் அவர்களின் நலன்களைக் கவனத்தில் எடுக்கும் என்ற உத்தரவாதங்களுக்கு பரிமாற்றாக ஈராக்கிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையை அங்கீகரித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றத் தயாராக இருந்தன.

ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தொடக்கக் கூட்டத் தொடர் அமெரிக்க இராணுவ வாதத்தின் வெடிப்பின் அழிவுகரமான விளைபயன்களைப் பற்றி கடும் எச்சரிக்கையை வழங்கியது மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அல்லது வாஷிங்டனின் ஏகாதிபத்திய போட்டியாளர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதன் மீது தன்னைத் தளப்படுத்தி இருக்கும் எந்த விதமான எதிர்ப்பினையும் இட்டு நம்பிக்கை இன்மையை வழங்கியது. அமெரிக்க போர் முன்னெடுப்பை தடுத்து நிறுத்தக் கூடிய ஒரே ஒரு சக்தி இருக்கிறது, அது சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் அணிதிரட்டப்பட்ட, சர்வதேச தொழிலாள வர்க்கம் ஆகும்.

See Also :

ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போரை எதிர்!
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சர்வதேச இயக்கத்தைக் கட்டி எழுப்பு!

அமெரிக்கா,பிரிட்டன் ஈராக் மீதான வான்வழிப் போரை விரைவுபடுத்துகின்றன

செனியின் போருக்கான விவரம்: பரந்த பொய்களும் வரலாற்று ரீதியான பொய்மைப்படுத்தல்களும்

உத்தியோகபூர்வ விவாதத்திற்குப் பின்னால், அமெரிக்கா ஈராக்கைத் தாக்குவதற்காக படைகளைத் தயாரிக்கிறது

ஜேர்மன் பிரதமர் ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தத்தை எதிர்த்துள்ளார்

ஈராக்கில் அமெரிக்க யுத்த நோக்கங்கள் குறித்து அமெரிக்க மக்கள் அறியாது மறைக்கப்பட்டுள்ளனர்

ஈராக்கிற்கு எதிரான போருக்கு அமெரிக்கா நெருங்குகிறது

அமெரிக்கா ஈராக்கின் மீது முழு அளவிலான ஆக்கிரமிப்புக்கு தயார் செய்து கொண்டிருக்கிறது

Top of page