World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்

World Socialist Web Site
holds international conference on socialism and the struggle against war

சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் தொடர்பாக உலக சோசலிச வலைத் தளம் நடாத்திய சர்வதேச மாநாடு

By the Editorial Board
1 April 2003

Back to screen version

மிக்சிகன், அன் ஆர்பர் நகரில் இந்த வாரக்கடைசியில் உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் சோசலிசமும் ஏகாதிபத்தியத்தியத்திற்கு எதிரான போராட்டமும் யுத்தமும் என்ற மாநாட்டை நடாத்தியது. அந்த மாநாட்டின் சுருக்கத்தையும், உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர்குழு தலைவரும், அமெரிக்காவின் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளருமான டேவிட் நோர்த் மாநாட்டில் வழங்கிய ஆரம்ப அறிக்கையையும் இன்றைய தினம் நாம் பிரசுரிக்கிறோம். அடுத்துவரும் நாட்களில் மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்களையும் மற்றும் தீர்மானங்களை வழங்கியவர்கள் கூறிய கருத்துக்களையும் மாநாட்டு மண்டபத்திலும், மேடையிலும் நடைபெற்ற விவாதத்தின் பகுதிகளையும் பிரசுரிப்போம்.

மார்ச் 29-30 ஆகிய நாட்களில் உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் சர்வதேச மாநாடு ஒன்றை நடத்தியது. அந்த மாநாடு ''சோசலிசமும் ஏகாதிபத்தியத்தியத்திற்கு எதிரான போராட்டமும் யுத்தமும்: புதிய சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்திற்கான மூலோபாயமும் வேலைத்திட்டம்'' என்ற தலைப்பில் மிக்சிகன், அன் ஆர்பர் நகரில் மாநாடு நடைபெற்றது. இதில் 150 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். தென்பகுதி, மேற்குக் கடற்கரைப் பகுதி, கிழக்கு கடற்கரைப் பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் பயணம் செய்து பலர் மாநாட்டில் கலந்துகொண்டனர். பல ஊழியர்கள் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் WSWS இன் வாசகர்கள். WSWS இனால் வழங்கப்படும் தினசரி விமர்சனங்கள் மற்றும் அரசியல் ஆய்வுகள் மூலம் சோசலிசத்தின் மீதும் சோசலிச சமத்துவக் கட்சியின் கொள்கைகளின் மீதும் அக்கறைகொள்ள ஆரம்பித்தனர்.

ஆரம்ப அறிக்கையை, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளருமான டேவிட் நோர்த் வழங்கினார். (பார்க்கவும்: ''கட்டுக்கடங்காத குழப்பத்தினுள்: அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடியும் ஈராக்கிற்கு எதிரான போரும்'') நோர்த் ஈராக் மீது நடத்தப்படும் போரை கண்டித்ததுடன் எதிர்பாராத வகையில் ஈராக் மக்களிடையே போருக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பதால், அமெரிக்க அரசு மேலும் அதிகமான கொடூர முறைகளில் அந்த நாட்டின் மீது தாக்குதலை நடத்தும் என்றும் எச்சரித்தார்.

''தனது சொந்த மனப்பிரமைகளால் ஏற்பட்டுள்ள எதிர்பாராத விளைவுகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் பென்டகனுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது'' என்று அவர் கூறினார். ''எல்லையற்ற மூர்க்கத்தனத்துடன் புஷ் நிர்வாகம் இந்தப் போரை 'ஈராக் சுதந்திரப் போர் நடவடிக்கை' என்று பெயர் சூட்டியது. தற்போது, பொதுமக்களிடையே இந்தப் போருக்கு எதிர்ப்பு வலுத்து வருவதால் அமெரிக்காவின் நோக்கத்தின் தத்துவ அடிப்படையான, ஈராக்கை கைப்பற்றி அமெரிக்க காலனித்துவ நாடாக மாற்றுவது என்பது ஈராக் மக்கள் மீது மேலும் அதிக அளவில் வன்முறை பழிவாங்கும் நடவடிக்கைகளை அமெரிக்காவை எடுக்க செய்வதுடன், இதிலிருந்து அரசாங்கத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் இந்தப் போர் தவிர்க்க முடியாத அளவிற்கு, வெகுஜன படுகொலை வெறியாட்டமாக சீர்குலைந்துவிடும்'' என்று அவர் எச்சரித்தார்.

நோர்த் தொடர்ந்து உரையாற்றும்போது, ''ஆளும் தட்டினது உறுதிப்பாட்டையும் மூர்க்கத்தனத்தையும் குறைத்து மதிப்பிடுவது மிகப்பெரிய தவறாக ஆகிவிடும். அமெரிக்க ஆளும் வர்க்கமும், அதன் இராணுவமும் வெல்லமுடியாதவை அல்ல. ஆனால், அவை சாதாரணமானவையாக எடுத்து எறியக்கூடியவை அல்ல, வெளிநாடுகளில் தனது எதிரிகளுக்கு எதிராக நடத்திய எண்ணுக்கணக்கற்ற போர்களினாலும், உள்நாட்டின் எதிர்ப்புகளுக்கு எதிராக மிகக் கசப்பான போராட்டத்தாலும் பெற்ற வரலாற்று அனுபவத்தின் விளைவாக ஆளும் குழு கட்டுபாடற்ற கொடூரத்தன்மையோடு தனது வர்க்க நலன்களுக்கு எதிரான சவால்களை சந்திக்கும் வல்லமை பெற்றது'' என்று அவர் விளக்கினார்.

போரை நியாயப்படுத்துவதிலும், போரை தூண்டிவிடுவதிலும் ஊடகங்களின் பங்கினை நோர்த் கண்டித்தார். ''சென்ற ஆண்டு இந்த நிலையான ஊடகங்கள் வெள்ளை மாளிகையினதும் பென்டகனினதும் பிரச்சார சாதனங்களே தவிர அதற்குமேல் எதுவும் இல்லை என்ற அளவிற்கு சீரழிந்துபோனதை காணமுடிந்தது. உண்மைகளை தவறான தகவல்களிலிருந்தும், பொய்களிலிருந்தும் மற்றும் முழுமையான கற்பனைகளிலிருந்தும் பகுத்துப்பார்க்க ஊடகங்கள் எந்தவிதமான முயற்சியும் செய்யவில்லை. இராணுவத்தின் மனோதத்துவ அடிப்படையிலான பணிகளுக்கு ஒரு கருவியாக தன்னை இணைத்துக்கொள்வதில் ஊடகங்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டன'' என்று நோர்த் குறிப்பிட்டார்.

இந்தப் போருக்கு சர்வதேச அளவில் உருவாகியுள்ள எதிர்ப்பை வரவேற்ற நோர்த், இந்த எதிர்ப்பு அலையை வழிநடாத்த, ஒரு அரசியல் முன்னோக்கு அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். உலக சோசலிச வலைத்தளத்தை புதிய சர்வதேச சோசலிச இயக்கத்தின் அரசியல் மற்றும், புத்திஜீவித மையமாக வளர்க்கவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம், ஏகாதிபத்திய போர், மனித இனத்திற்கு எதிரான எல்லாவகை அநீதிகள் மற்றும் சுரண்டல்கள் ஆகியவற்றிற்கு எதிராகவும் சமூக சமத்துவத்தை நிலைநாட்டவும், ஏகாதிபத்திய போருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுகின்ற அனைவருக்கும் தேவையான தகவமைவு, ஆய்வுகள் மற்றும் முன்னோக்கை வழங்குகின்ற மையமாகவும் வளர்த்தெடுக்கவேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்'' என்று நோர்த் குறிப்பிட்டார்.

மாநாட்டில் ஏகமனதாக, போரைக் கண்டித்தும் மற்றும் ஈராக்கிலிருந்து அமெரிக்க மற்றும் பிரிட்டனின் படைகளை விலக்கிக்கொள்ள கோரியும், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையை வலியுறுத்தியும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை பிரகடனப்படுத்தியும், ஜனநாயக உரிமைகளை சிதைக்கின்ற போக்குகளை எதிர்த்தும், உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கைத்தரம் குறைவதற்கு எடுக்கப்படும் மற்றும் உரிமைகள் ஒடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்டித்தும், மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் பெருகிவருவதை கண்டித்தும், போரில் உடந்தையாக செயல்படும் அமெரிக்க ஊடகங்களை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

''ஈராக் போரை நிறுத்து! அமெரிக்கா, பிரிட்டன்- மத்திய கிழக்கிலிருந்து வெளியேற வேண்டும்'' என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, மாநாட்டு பிரதிநிதிகள் கீழ்கண்ட பிரகடனத்தை வெளியிட்டனர்:- ''ஈராக்கிற்கு எதிரான போரை ஆரம்பிப்பதற்கு காரணமாக இருக்கும் புஷ் நிர்வாகத்தின் பொறுப்பான தலைமை அதிகாரிகள், நாடாளுமன்றத்தின் குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயகக்கட்சி தலைவர்கள், இராணுவ தளபதிகள், மற்றும் ஊடக சாம்ராஜ்ய தலைவர்கள் அனைவரும் போர்க் குற்றங்கள் புரிந்த குற்றவாளிகள். இவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படவேண்டும்''. ஈராக்கிலிருந்து, உடனடியாக அமெரிக்க மற்றும் பிரிட்டனின் இராணுவப் படைகள் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். சகல பொருளாதாரத் தடை நடவடிக்கைகளும் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். ஈராக் மக்களுக்கு அவசரகால அடிப்படையில் மனிதநேய மற்றும் பொருளாதார உதவிகள் வழங்கப்படவேண்டும். ஈராக் மீதான எல்லா தடைகளும் நீக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்குமாறு மாநாட்டு பிரதிநிதிகள், சர்வதேச தொழிலாள வர்க்கத்தை கேட்டுக்கொண்டனர்.

உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர்களில் ஒருவரான பரி கிரே தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் தொடர்பான தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். தொழிலாள வர்க்கம் ஜனநாயகக் கட்சியிலிருந்து திட்டவட்டமாக தன்னை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த முதலாளித்துவ கட்சிக்கு அமெரிக்க தொழிலாளர்கள் அரசியல் ரீதியில் அடிபணிந்து நடந்துகொண்ட நீண்ட வரலாற்றை அவர் மேற்கோள் காட்டினார். அமெரிக்கத் தொழிலாளர்கள் ஜனநாயகக் கட்சிக்கு கீழ்ப்படிந்து நடப்பது 19ம் நூற்றாண்டிலிருந்து, அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் ஆரம்பமாவதற்கு முன்னரே ஆரம்பமாகிவிட்டது. அந்த நேரத்தில், ஜனநாயகக் கட்சி அமெரிக்காவின் தென்பகுதிகளில் அடிமை சொந்தக்காரரின் நலன்களை பாதுகாத்தது என்று கிரே சுட்டிக்காட்டினார்.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் சீர்த்திருத்தவாத ''மூன்றாவது கட்சியை'' உருவாக்குவதன் மூலம் சாதிக்க முடியாது என்பதை கிரே வலியுறுத்தினார். ''அதற்கு பதிலாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல், முதலாளித்துவ முறையின் பொருளாதார அடித்தளத்தையே தகர்க்கின்ற ஒரு கட்சியை அமைப்பதன் மூலம்தான் தொழிலாள வர்க்கம் அரசியல் சுயாதீனம் அடைய முடியும்'', தீர்மானம் அதன் முடிவுரையில், ''சர்வதேசிய வாத சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் அரசியல் அதிகாரத்தைப்பெற சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாள வர்க்கத்தின் பரந்துபட்ட அரசியல் கட்சியாக உருவாக்குவதற்கு நாங்கள் உறுதி எடுத்துக்கொள்கின்றோம்'' என குறிப்பிட்டது.

ஜேர்மனியைச் சேர்ந்த சோசலிச சமத்துவ கட்சியின் செயலாளரான உல்றிச் ரிப்பேட், பிரிட்டன் சோசலிச சமத்துவ கட்சியைச் சேர்ந்த தேசிய செயலாளர் கிறிஸ் மார்ஸ்டன், அவுஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் துணை தேசிய செயலாளர் லின்டா ரெனன்பவும், கனடா சோசலிச சமத்துவ கட்சியின் தேசிய செயலாளர் கீத் ஜோன்ஸ், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ரஷ்யாவின் விளாடிமீர் வொல்கோவ் ஆகிய பல சர்வதேச பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் கலந்துகொண்ட சர்வதேச பிரதிநிதிகள் அமெரிக்காவின் பிரதிநிதிகளோடு இணைந்து தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றினர். அந்த தீர்மானம் வருமாறு:- ஏகாதிபத்திற்கும் போருக்கும் எதிரான போராட்டத்தில் உண்மையான அடித்தளம் அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். இந்த போராட்டம் ஏதாவதொரு ஏகாதிபத்திய அரசினதோ அல்லது தேசிய அரசுகளினதோ அல்லது ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகள் போன்றவற்றின் ஆசீர்வாதத்துடன் மேலே இருந்து அபிவிருத்தி செய்ய முடியாது..... அடித்தளத்திலிருந்து பரந்த தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் இருந்து ஒட்டுமொத்த சமுதாயத்தையே மாற்றி அமைப்பதை குறிக்கோளாக கொண்ட ஒரு சர்வதேச மூலோபாயத்தினால் தான் போருக்கு எதிரான போராட்டம் முன்னெடுத்து செல்ல முடியும்.''

இந்த மாநாட்டில் பல பிரதிநிதிகள் கலந்துகொண்டு நடைபெற்ற விவாதங்கள் தீவிரமாகவும், பயனுள்ளவையாகவும் அமைந்தன. சிலர், உலக சோசலிச வலைத் தளத்தின் வெளியீடுகளை பல ஆண்டுகளாக படிப்பவர்கள். ஆனால், தற்போது மேலும் அரசியல் அடிப்படையில் தீவிரமாக செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ளனர். பல இளைஞர்கள் சோசலிச சமத்துவ கட்சியின் முன்நோக்குகள் குறித்து கேள்விகள் கேட்டதுடன், வரலாற்றையும் மற்றும் அரசியலையும் தீவிரமாக ஆராய வேண்டிய அவசியத்தை பற்றி குறிப்பிட்டனர். மற்றவர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாங்கள் சந்திக்கின்ற குறிப்பான பிரச்சனைகள் குறித்து விவாதித்துடன் தீர்மானங்களுக்கு ஆதரவாக உரையாற்றினர்.

ஜனநாயக உரிமைகள் பற்றிய தீர்மானத்தில், செப்டம்பர் 11ற்கு பின்னர் போலியான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கும் அமெரிக்காவில் குடியேறியுள்ள ஆயிரக்கணக்கான மக்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு மாநாடு கோரிக்கை விடுத்தது. தேசபக்த சட்டம் (Patriot Act) மற்றும் இதர ஜனநாயகத்திற்கு முரணான சட்டங்களை பிரதிநிதிகள் கண்டித்ததுடன் செப்டம்பர் 11 நிகழ்ச்சிகள் குறித்து நடுநிலை விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்தனர். அந்த நிகழ்வை அமெரிக்காவின் ஆளும்தட்டு பயன்படுத்தி, அரசியல் நிர்ணயச் சட்டம் தந்துள்ள பாதுகாப்புக்களையும், சிவில் உரிமைகளையும் இல்லாதொழிக்கின்றது.

போர் மற்றும் அமெரிக்க சமூக நெருக்கடி பற்றிய தீர்மானத்தில், மாநாடு போருக்கு எதிரான போராட்டத்தை சமூக சமத்துவத்திற்கான போராட்டத்துடன் இணைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என குறிப்பிட்டது. கல்வி, கண்ணியமான வேலை வாய்ப்புக்கள் மற்றும் சுகாதார சேவை, வாழ்விடம் ஆகியவற்றை வழங்குவதற்கு சோசலிச கொள்கைகள் அவசியம் என்பதை மாநாடு எடுத்துக்காட்டியது. ஆயுத தொழிற்சாலைகளை சமுதாய அடிப்படையில் பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்கின்ற அரசிற்கு சொந்தமான தொழில்களாக மாற்றவேண்டும் என மாநாட்டு பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துடன், பிரம்மாண்டமான தனியார் நிறுவனங்களை அரசுடமையாக்கி அவற்றை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்றும் மாநாட்டு பிரதிநிதிகள் அழைப்புவிட்டனர்.

உலக சோசலிச வலைத் தளத்தை வளர்ச்சியடைய செய்வதற்கும் அதன் வாசகர்கள் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதற்கு பாடுபடுவதாக மாநாட்டு பிரதிநிதிகள் உறுதியளித்தனர். சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் சோசலிச உணர்மையை வளர்ப்பதில் உலக சோசலிச வலைத் தளம் முக்கிய பங்கு வகிக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved