World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Socialist Equality Party endorses campaign of John Christopher Burton in California

சோசலிச சமத்துவக் கட்சி கலிஃபோர்னியாவில் ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டனின் பிரச்சாரத்திற்கு ஆதரவு அளிக்கிறது

By Statement of the Socialist Equality Party
9 August 2003

Use this version to print | Send this link by email | Email the author

கலிஃபோர்னியாவில் `திரும்ப அழைக்கும்` தேர்தலில் ஜோன் கிரிஸ்டோபர் பேர்ட்டனுடைய பிரச்சாரத்தை சோசலிச சமத்துவக் கட்சி வரவேற்கிறது. பேர்ட்டன் குடியுரிமை வழக்குரைஞர் மற்றும் சோசலிஸ்ட் ஆவார், லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் அடிப்படை உரிமையை பாதுகாப்பதில் நீண்ட புகழ்பெற்ற நிலைச்சான்றைக் கொண்டிருக்கிறார். இவர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு பல்வேறு கட்டுரைகளை பங்களிப்பு செய்துள்ளதோடு சோசலிச சமத்துவக் கட்சியின் ஒரு செயலூக்கமான ஆதரவாளருமாவார்

கலிஃபோர்னியாவின் அரச செயலகத்திற்கு பேர்ட்டன் கொடுத்துள்ள வேட்பாளர் அறிக்கை [பார்க்க "ஜோன் கிறிஸ்டோபர் பேர்டனுடைய வேட்பாளர் அறிக்கை"], அவர் ஒரு கொள்கையின் அடிப்படையில் நிற்கிறார் என்பதை தெளிவுபடுத்துகின்றது. கவர்னர் கிரே டேவிஸை "திரும்ப அழைக்கும்" செயலுக்கு ``கூடாது`` எனக் கோரும் இவர், டேவிஸுடைய கொள்கைகளுக்கோ, ஜனநாயக்கட்சியின் கொள்கைகளுக்கோ ஆதரவைத் தெரிவிக்கவில்லை. பெருவர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவு தரும் கொள்கைகளை உடைய ஜனநாயக, குடியரசுக் கட்சிகள் இரண்டிற்குமே மாற்றுத்திட்டத்தை கலி்ஃபோர்னிய உழைக்கும் மக்களுக்கு அளிப்பதில் அவரது பிரச்சாரம் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவிலேயே பெரிய மாநிலமான கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தொழிலாளர்கள், இளைஞர்கள் அல்லது சிறு வணிகர்கள் பால் ஏற்றிவைக்கப்படக்கூடாது என்ற பேர்ட்டனின் வலியுறுத்தல்களையும் அவருடைய சோசலிசக் கொள்கைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். கலிபோர்னியாவின் பொருளாதாரத்தின் அடிப்படை ``பெருநிறுவனங்களின் பணக் குவிப்பாக அன்றி, மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக" இருக்கவேண்டும் என்பதற்காக பெரு நிறுவனங்களையும் வங்கிகளையும் பொது உடைமையாக ஆக்கி ஜனநாயக முறையில் கட்டுப்படுத்தப்படும் பயன்பாட்டு அமைப்புக்களாக மாற்ற வேண்டி நேர்மையான அழைப்பை விடுத்துள்ளார்.

சோசலிச சமத்துவ கட்சி திரும்ப அழைக்கும் முயற்சியைக் கடுமையாக எதிர்ப்பதுடன் கலிஃபோர்னிய உழைக்கும் மக்களை அதைத் தோற்கடிப்பதற்காக அணிதிரட்ட முயற்சிக்கும். அந்தப் பிரச்சாரம், குடியரசுக் கட்சியின் உள்ளே உள்ள அதிதீவிர வலதுசாரிப் பிரிவுகளால் ஏற்பாடு செய்யப்பட்டு நிதியமும் பெறுகிறது. அடிப்படைச் சமுதாயப் பணிகளான சுகாதார நலம், கல்வி போன்றவற்றின் சரிவு, வேலையின்மையின் அதிகரிப்பு இவற்றினால் கலிஃபோர்னிய மக்கள் கொண்டுள்ள நியாயமான கோபத்தையும், ஏமாற்றத்தையும் பயன்படுத்தி கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலின் முடிவை தலைகீழாக மாற்றப் பார்க்கின்றனர்; அத்தேர்தலில்தான் டேவிஸ் மாநில மன்றத்திற்கு இரண்டாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர்கள் வெற்றி பெறுவார்களேயாயின், டேவிசும் ஜனநாயகக் கட்சியினரும் செயல்படுத்தும் மிகவும் கொடிய சட்டங்களைவிட பிற்போக்கான சமூக செயற்பட்டியலை திணிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.

குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினரான Darrell Issa போன்ற, கோடீஸ்வரர்களால் முன்னெடுக்கப்படும் திரும்ப அழைக்கும் பிரச்சாரத்தின் கூறப்படாத்திட்டம், தனியார் செல்வத்திரட்டு மற்றும் பெருநிறுவன கொள்கை லாபம் இவற்றிற்கெதிராக உள்ள அனைத்து சட்ட ரீதியிலான மற்றும் ஒழுக்கநெறிக் கட்டுப்பாடுகளையும் அகற்றவேண்டும் என்பதேயாகும். ஒரு புகழ் குறைந்த கவர்னருக்கு எதிரான "அடித்தள" இயக்கம் என்ற மறைமுகப் போர்வையில், குடியரசுக் கட்சியினர், கலிஃபோர்னிய வாக்காளர்களால் பரந்த அளவில் எதிர்க்கப்பட்ட கொள்கைகளைச் செயல்படுத்த முயற்சி செய்கின்றனர்.

அடிப்படை சமுதாயத் தேவைகளான பொதுக்கல்வி, பொது சுகாதார பாதுகாப்பு, வீட்டு வசதி மானியத்தொகை, மற்றும் ஏனைய பொது நலத்திட்டங்களை அழிக்க அவர்கள் இலக்கு கொண்டுள்ளனர். சுற்றுச்சூழலைக் காக்கும் சட்டங்கள், தொழிலாளரின் உடல் நலம், பாதுகாப்பு ஆகியவற்றைக் காக்கும் சட்டங்கள் அனைத்தையும் தூக்கியெறிய அவர்கள் விரும்புகின்றனர். பெருநிறுவனங்கள் மற்றும் பெருஞ்செல்வந்தர்கள் மீதான வரியை மேலும் குறைக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளனர்.

கலிஃபோர்னியாவின் பொருளாதார சீர்குலைப்பில் பெருநிறுவன மற்றும் அரசியல் நிழல் உலகத்தில் (Underworld) உள்ள அதே சக்திகள்தான் முக்கிய பாத்திரம் வகித்தன --இதைச் செய்தி ஊடகங்கள் மறைக்கப் பார்க்கின்றன- என்பதுதான் விந்தையாகும். பல ஆண்டுகளாக ஜோர்ஜ் W. புஷ்ஷின் பெரும்நிதி ஆதரவாளரும் டிக்செனியின் உற்ற நண்பருமான என்ரோன் நிறுவனத்தின் கென்னெத் லே மாநிலத்தை 2001ல் அழிவுக்குள்ளாக்கிய சக்தி நெருக்கடியை (Energy Crisis) விளைவித்ததிலும் விலைவாசிகளையும் இலாபங்களையும் உயர்த்துவதற்கு சக்தி அளிப்புக்களை நிறுத்தி பொருளாதார மற்றும் சமுதாய வாழ்வை குழப்பத்தின் விளிம்பில் நிறுத்திய முறையிலும் முக்கிய பங்கை ஆற்றினார் என்பது அனைவரும் அறிந்த உண்மையேயாகும். இந்த சக்தி நெருக்கடிக் காலம் முழுவதும் புஷ் நிர்வாகத்தால் லே ஆதரவும் பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருந்தார்.

மற்றைய குற்றஞ்சார்ந்த (Criminal) செயல்களில் ஈடுபட்டிருந்த பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், சக்தி மற்றும் உயர்தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வங்கித்துறைக் கூட்டாளிகளால் -பெரும்பாலோர் அரசியல் ரீதியாக குடியரசுக் கட்சியுடன் இணைத்துக் கொண்டவர்கள்- இவர்களால் பயன்படுத்தப்படும் குற்றவியல் முறைகள் மற்றும் கணக்கெழுதும் மோசடிகள், ஊக வாணிப எழுச்சியில் முக்கிய பங்காற்றியது மற்றும் அடுத்து பங்குச் சந்தைக் குமிழியின் ஏற்ற இறக்கச் சரிவில் பெரும்பங்கு ஆற்றியது. இந்த பேரழிவு கலிஃபோர்னியாவின் நிதிய முறைகளிலே அழிவுகரமான பாதிப்பைக் கொண்டிருந்தது.

டேவிஸைப் பதவியிலிருந்து இறக்குதல் என்பது, வாக்களிக்கும் உரிமை உட்பட ஜனநாயக உரிமைகளை கீழறுக்கும் மற்றும் ஜனநாயக அரசியல் முறையைத் தகர்க்க முனையும் வலதுசாரிக் குடியரசுக் கட்சியினரின் முயற்சிகளின் தொடர்ச்சி ஆகும். பில் கிளின்டனுக்கு எதிரான பதவி இறக்கக் குற்ற விசாரணையின் சாரமான பொருள் இதே நோக்கத்தைத்தான் கொண்டு இருந்தது; அதன்பின் புளோரிடாவில் தேர்தல் மோசடியும் 2000ம் ஜனாதிபதி தேர்தலே திருடப்பட்டதும் தொடர்ந்தன. இறுதி ஆய்வில், இச் சதித்திட்டங்கள் அனைத்துமே தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளுக்கெதிராக செலுத்தப்பட்டவை.

ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவுக்காக அல்ல, மாறாக, ஒரு சுயாதீனமான சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், சோசலிச சமத்துவக் கட்சி கென்னத் ஸ்டார் விசாரணையையும், கிளின்டனுக்கு எதிரான பெரிய குற்ற விசாரணையையும் மற்றும் 2002 தேர்தல் திருட்டையும் எதிர்த்தது போல், இன்று நாங்கள், இப்பொழுது நாட்டின் பெரிய மாநிலத்தில் அரசியல் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியையும் எதிர்க்கிறோம்.

அப்பொழுது ஜனநாயகக் கட்சியினர் எப்படி பெரிய பதவிநீக்க விசாரணை முயற்சி மற்றும் 2000 தேர்தல் மோசடி இவற்றை அம்பலப்படுத்த விரும்பாமலும் இயலாமலும் போனார்களோ, அதேபோல் இப்பொழுதும் கலிபோர்னிய திரும்ப அழைக்கும் முயற்சியிலும் தீவிர ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள். ஏற்கனவே, ஜனநாயகக் கட்சியினர் திரும்ப அழைக்கும் பிரச்சாரத்தின் அரசியல் முக்கியத்துவத்தின் தீய தன்மையை அம்பலப்படுத்த விரும்பவில்லை என்பது தெளிவாகிவிட்டது. வலதுசாரி குடியரசுக் கட்சியினர் மாநிலச் சட்டமன்றத்தை கைப்பற்றுவதைவிட, அதிதீவிர வலதுசாரி கொள்கைகளுக்கு எதிரான உண்மையான மக்கள் எழுச்சியைக் கண்டு அவர்கள் கூடுதலான அளவில் பயப்படுகிறார்கள்.

ஜனநாயகக் கட்சியினர் திரும்ப அழைக்கும் முயற்சியை முறியடித்து வெற்றி பெறுவார்களேயானால், அவர்களுடைய பெருவர்த்தக ஆதரவாளர்கள் வற்புறுத்தலின் படி சுகாதாரக்காப்பு, கல்வி, மற்றைய முக்கிய பணிகள் ஆகியவற்றின் மீதான தங்கள் தாக்குதல்களை உக்கிரப்படுத்தவே செய்வார்கள்.

இம்மாநிலம் தனிநாடாக இருந்தால் இதன் பொருளாதாரம் உலகப் பொருளாதாரங்களின் பத்து பெரும் நாடுகளில் ஒன்றாக இருந்திருக்கும்; இந்தத் தன்மையுடைய கலிபோர்னியாவில் அரசியல், பொருளாதார நெருக்கடி தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பெரும் தாக்கங்களையும் கொண்டுள்ளது. உலக சோசலிச வலைத் தளம் இந்த திரும்ப அழைக்கும் தேர்தல் பற்றி பரந்த அளவு செய்திகளையும், பகுப்பாய்வுகளையும் வெளியிடத் தன் ஆற்றல் முழுவதையும் பயன்படுத்த விழைகிறது. குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியினர், பசுமைக் கட்சியினர், சுயேச்சையாளர்கள் என அனைத்து முக்கிய வேட்பாளர்களின் பிரச்சாரம் பற்றி தேர்ந்த முறையில் செய்திகளைத் தொகுத்து வழங்கிட நம்முடைய ஆசிரியர் குழுவினர் தமது சக்தியை பயன்படுத்தப்படுவர், மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கான இந்த அனுபவத்தின் முக்கியமான அரசியல் படிப்பினைகளையும் எடுத்து வழங்குவர்.

ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டனுடைய பிரச்சாரத்திற்கு அதிக அளவு செய்தி வெளியீட்டை தொடர்ந்து அளிப்பதின் மூலம், தொழிலாள வர்க்கத்தின் பரந்த சோசலிச கட்சியின் வளர்ச்சியின் அடிப்படைக்கும், அரசியல் நனவின் உயர்விற்கும் வழிகோலும் முக்கிய முயற்சியில் முதற்படியை இது குறிக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்கள், சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரையும் ஆசிரியர் குழுவின் இந்தச் சிறந்த அரசியல் பணியைத் தொடர ஆதரவு அளிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுக்கிறோம். வாசகர்களை ஆசிரியர் குழுவோடு தொடர்பு கொண்டு கலிஃபோர்னியாவில் அரசியல் அபிவிருத்திகள் மற்றும் தேர்தல் பிரச்சார நிகழ்வுகளைக் கட்டுரை வடிவில் தருமாறும் கேட்டுக்கொள்கின்றோம். திரும்ப அழைக்கும் தேர்தலுக்குத் தேவைப்படும் அரசியல் ஆய்வையும் மற்றும் செய்தி உள்ளடக்கத்தை நாம் வெளியிடவும் நிதி ஆதரவு தருமாறு எமது வாசகர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

Top of page