World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Prolonged protest by unemployed Sri Lankan graduates

இலங்கையில் வேலையற்ற பட்டதாரிகளின் தொடர்ச்சியான போராட்டம்

By our reporters
28 October 2003

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள், மத்திய கொழும்பின் கோட்டை புகையிர நிலையத்திற்கு வெளியில் ஒரு நிரந்தர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவது மாதமாக தொடரும் இந்தப் பிரச்சாரமானது பல்கலைக்கழக படிப்பினை முடித்தவர்கள் கடுமையான தொழில் பற்றாக்குறைக்கு முகம் கொடுப்பதை சுட்டிக்காட்டுகின்றது.

தினமும் 10 முதல் 20 வரையான போராட்டக்காரர்கள் தூக்கம் இழந்து பங்கெடுக்கின்றனர். 24 மணிநேரமும் உண்ணாவிரதம் இருப்பதோடு பாதசாரிகளுடன் உரையாடி நிதி திரட்டுகின்றனர். வேலையற்ற பட்டதாரிகளின் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்தப் பிரச்சாரம், தலைநகரின் புறநகரப் பகுதியிலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் "சத்தியாகிரகங்கள்" அல்லது அமர்வுப் போராட்டங்களோடும் இணைக்கப்பட்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகள் சங்கமானது, ஐக்கிய தேசிய முன்னணி (ஐ..தே.மு) அரசாங்கம் எல்லா வேலையற்ற பட்டதாரிகளுக்கும் உடனடியாக வேலை வழங்கவேண்டுமெனவும், எதிர்கால பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக ஒரு தேசிய கொள்கையை வரையுமாறும் கோருகிறது. பட்டதாரிகள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஒரு கலந்துரையாடலைக் கோரி அனுப்பிய கடிதத்துக்கு பதிலளிக்கவில்லை எனத் தெளிவுபடுத்தினார்.

வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக சுமார் 25,000 ஆகும். ஆனால் பட்டதாரிகள் சங்கத்தின் படி இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமானதாகும்: 25-40 வயதெல்லையுடைய பட்டதாரிகள் 35,000 முதல் 40,000 வரை உள்ளனர். வேலையற்றோர் வீதமானது விசேடமாக கலைத்துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் உயர்ந்து காணப்படுகிறது. பெரும்பாலான வேலையற்றவர்கள் ஏழ்மை நிறைந்த கிராமப்புறங்களிலேயே இருப்பதோடு தாங்கமுடியாத பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்கின்றனர்.

பிரதான கட்சிகள் இரண்டும் --ஆளும் ஐ.தே.மு மற்றும் எதிர்க் கட்சியான பொதுஜன முன்னணி (பொ.மு)-- அரசாங்கத் தொழிற்துறை மற்றும் இத்தகைய பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புக்களை அழிப்பதில் பெரும் பங்காற்றியுள்ளன. மத்திய வங்கியின் 2003 ஆண்டறிக்கையின் படி, அரசாங்க தொழிற்துறையானது 1990ல் 21.5 வீதத்திலிருந்து 2002ல் 13.4 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கி மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான கூட்டுறவு புடவை விற்பனை நிலையமான சலுசலவிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்கள், சுயவிருப்பின் பேரில் ஒய்வுபெறும் திட்டத்தின் மூலம் கூட்டித்தள்ளப்பட உள்ளன. உற்பத்தித் திறனை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சியின் விளைவாக துறைமுக அதிகாரசபை, இலங்கை பெற்றோலியம் மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனம் ஆகியவற்றில் உள்ள ஆயிரக்கணக்கான தற்காலிக தொழிலாளர்கள் தமது தொழில்களை இழந்துள்ளனர். 2002ல் மக்கள் வங்கியில் பல நூறு தொழில்கள் பலாத்காரமாகவும் மீள நிரப்பப்படாமலும் வெட்டித் தள்ளப்பட்டுள்ளன. ஐ.தே.மு அரசாங்கம் அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் திட்டங்களை அமுல்படுத்துமானால் பெருந்தொகையானவர்கள் தொழில்களை இழக்க நேரிடும்.

வேலையற்ற பட்டதாரிகள் சங்கமானது, சோசலிச சொற்றொடர்களுடன் "நாட்டைப் பாதுகாக்க" எனும் சிங்கள பேரினவாத கோரிக்கைகளை விடுக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உடன் இணைந்துகொண்டுள்ளது. போராட்டத்தில் இருந்த ஒரு ஜே.வி.பி. ஆதரவாளர், பட்டதாரிகள் "வெளிநாட்டாருக்கு சொந்தமான" தனியார் நிறுவனங்களுக்காக வேலை செய்ய வேண்டியதில்லை, ஆனால் அரசாங்கம் வேலைவாய்ப்பை விரிவுபடுத்த வேண்டும், அப்போது அவர்களால் "மக்களுக்காக வேலைசெய்ய" முடியும் எனவும், ஆனால் ஐ.தே.மு, பொதுஜன முன்னணி ஆகிய இரண்டும், வெளிநாட்டு மற்றும் இலங்கை வர்த்தகர்களின் தேவைகளின் பேரில் பொதுத் துறையை மறுசீரமைப்பதற்காக "மக்களுக்கான" தொழில் மற்றும் சேவையை வெட்டித்தள்ளி வருகின்றது.

இந்தப் போராட்டமானது வித்தியாசமான பின்னணி மற்றும் அரசியல் நோக்கு கொண்ட, அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்க்க வழிதேடிக்கொண்டிருக்கும் பல்வேறுபட்ட மாணவர்களை ஈர்த்துக்கொண்டுள்ளது. அவர்களில் பலர் பட்டதாரிகள் முகம்கொடுக்கும் நிலைமைகள் தொடர்பாக உலக சோசலிச வலைத் தளத்துக்கு (WSWS) கருத்துத் தெரிவித்தனர்.

தீவின் தென் முனையிலுள்ள மாத்தறை மாவட்டத்தில் வசிக்கும் 29 வயதான லக்மினியுடன் உரையாடும்போது: "நான் 1993ல் உயர்தரத்தில் சித்தியடைந்து 1996 பெப்பிரவரியில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். 2000 ஜூனில் நான் புவியியலில் விசேட பட்டம் பெற்றேன். பட்டம் பெற்று மூன்று வருடங்கள் கடந்தும் இன்னமும் எனக்குத் தொழில் கிடைக்கவில்லை.

"எனது பெற்றோர்கள் மிக நெருக்கடியான நிலைமையின் கீழ் கல்விக்காக செலவு செய்தார்கள். எனது குடும்பத்தில் நானும், ஐந்து சகோதரர்களும், நான்கு சகோதரிகளுமாக 10 பேர் இருக்கின்றோம். எனது அப்பா கட்டுமானத் தொழிலாளியாக இருந்தார். இப்போது அவருக்கு 73 வயது. அவரால் வேலை செய்ய முடியாது. அம்மாவுக்கும் தொழில் கிடையாது. எனது இரு சகோதரர்கள் தனியார் பஸ் சாரதிகளாக பணிபுரிவதோடு இன்னுமொருவர் கட்டுமான வேலைகளில் பயிற்சி பெறுகின்றார். இன்னுமொரு சகோதரர் தனது நுழைவுப் பரீட்சையை முடித்திருந்தாலும் பல்கலைக்கழக அனுமதியைப் பெறமுடியவில்லை. அவர் ஆங்கில மற்றும் கணினி பயிற்சிகளைப் பெற்றிருந்தாலும் இன்னமும் வேலையற்றவராக இருக்கின்றார்.

"நான் பல தொழில்களுக்கு விண்ணப்பித்தேன் ஆனால் தேர்வுசெய்யப்படவில்லை. எனக்கு தையல் வேலை பழக்கம் இல்லாததால் என்னால் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்ய முடியாது. திருமணம் முடிப்பதும் ஒரு பிரச்சினைதான். எல்லா மாப்பிள்ளைகளும் நான் ஒரு தொழில் செய்வதை அல்லது சீதனத்தை எதிர்பார்க்கின்றனர். எனது பெற்றோர்களிடம் பணமோ அல்லது சீதனம் கொடுப்பதற்கான வசதியோ கிடையாது. ஆகவே நான் இப்போது எனது பெற்றோர்களுக்கும் சமூகத்துக்கும் நெருக்கடியானவளாக உள்ளேன்," எனக் குறிப்பிட்டார்.

கொழும்புக்கு வடக்கேயுள்ள குருணாகலையில் இருக்கும் 25 வயதான ரேணுகா, இந்த ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப் பீடத்தில் பட்டம் பெற்றதாக குறிப்பிட்டார். "நான் பட்டம் பெற்ற பின்னர் சுமார் 25 தொழில்களுக்கு விண்ணப்பித்தும் எட்டு பதில்களையே பெற்றேன். முதலில் நான் குருணாகலையில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் சேர்ந்து தாங்க முடியாத வேலை நிலைமைகளின் காரணமாக வெளியேறினேன். பின்னர் நான் ஒரு புத்தகக் கடையிலும், இறுதியாக ஒரு மாணிக்கக் கல் வெட்டும் நிலையத்திலும் வேலை செய்தேன்.

"கடைசியாக வேலை செய்த இடத்தில், மூன்று மாத பயிற்சிக் காலத்துக்காக ரூபா. 1,200 ($US12) உதவித்தொகை வழங்கப்பட்டது. ஆனால் ஒரு கல் பழுதடைந்தால் அவர்கள் 400 ரூபாவை வெட்டிவிடுவார்கள். சில மாதங்களில் எனது முழு சம்பளமும் வெட்டுக்களாலேயே முடிந்து போனது. கடுமையான சுரண்டலின் காரணமாக நான் வெளியேறத் தள்ளப்பட்டேன். இப்பொழுது எனக்குத் தொழில் கிடையாது. எனது அப்பா சம்பாதிக்கும் பணம் போதாததாக இருப்பதோடு வாழ்க்கை மிகவும் நெருக்கடியானதாக உள்ளது.

"எல்லா அரசாங்கங்களும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக வாக்குறுதியளிக்கின்றன. ஆயினும் அவர்கள் எங்களது பிரச்சினைகள் மட்டுமல்ல மொத்தத்தில் வேலையற்ற பிரச்சினையையே தீர்க்கமாட்டார்கள். அரசாங்கம் எங்களை ஏமாற்றுவது மட்டுமல்லாமல் பொலிசாரையும் குண்டர்களையும் பயன்படுத்தி எங்களது பிரச்சாரத்துக்கு தாக்குதல் தொடுக்கின்றது," எனவும் அவர் குறிப்பிட்டார்.

தாம் 1999ல் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக துமின்த ஜயதிலக தெரிவித்தார். "நான் ஒரு தொகை விண்ணப்பங்களை அனுப்பியதோடு ஆடைத் தொழிற்சாலைகளில் மாதிரி அமைப்பாளர் வேலைக்கும் கூட விண்ணப்பித்தேன். நான் பொதுத்துறையில் பல ஆள்சேர்ப்பு பரீட்சைகளிலும் பங்குபற்றிய போதும் வெற்றி கிடைக்கவில்லை. பொதுத்துறையில் வேலை வாய்ப்பு இல்லாததால் எங்களை தனியார் துறையில் சேர்ந்துகொள்ளுமாறு அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் எங்களுக்கு அவசியமான தொழில்நுட்ப அறிவு கிடையாது என தனியார்துறையினர் கூறுகின்றனர்.

"வயதும் ஒரு பிரச்சினையாகும். அவர்கள் 18-25 வயதுக்குட்பட்ட இளைஞர்களை விரும்புகிறார்கள். அரசாங்கம், பொதுத்துறையில் தொழில் கிடையாது எனவும் மத்திய அரசாங்கத்திலும் மாகாண அரசாங்கத்திலும் குறைந்தளவே தொழில் வாய்ப்பு காணப்படுவதாகவும் கூறுகிறது. மாகாண அதிகாரிகள், தம்மிடம் தொழில் வாய்ப்பு இருப்பதாகவும் மத்திய அரசாங்கம் எந்தவொரு நிதியையும் வழங்காததால் தம்மால் யாரையும் சேர்த்துக்கொள்ள முடியாது எனத் தெரிவிக்கின்றனர். ஐ.தே.மு. அரசாங்கமானது உலக வங்கியின் வழிகாட்டலின் மூலம் எல்லா ஆள் சேர்ப்புத் திட்டங்களையும் நிறுத்திவிட்டது," எனவும் அவர் குறிப்பிட்டார்.

கோட்டை ரயில் நிலையத்திற்கு வெளியில் இடம்பெறும் இந்தப் போராட்டமானது பாதசாரிகளின் குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றுக்கொண்டுள்ளது. போராட்டத்துக்கு நிதி வழங்கிய ஒரு பாடசாலை மாணவர் குழுவினர்: "உங்களுக்கு தொழில் இல்லையென்றால், நாங்கள் படிப்பதில் அர்த்தம் இல்லை," எனக் கூறிச் சென்றனர்.

ஒரு புகையிரத ஊழியர் குறிப்பிட்டதாவது: "அரசாங்கம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதற்காக ஒரு கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய போட்டி நிலைமைகளின் கீழ் பட்டம் பெறுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டும். பட்டம் பெற்ற பின்னர் தொழில் கிடைக்காவிட்டால் பயன் என்ன? எனது மகன் அனுராதபுரத்தில் 10ம் வகுப்பில் படிக்கின்றார். அங்கிருந்து 295 பேர் மட்டுமே (ஒவ்வொரு வருடமும்) பல்கலைக் கழகத்துக்கு தெரிவுசெய்யப்படுகின்றார்கள். இத்தகைய போட்டி நிலைமையின் கீழ் படிப்பதில் எதாவது பயன் இருக்குமா என எனது மகன் கேட்கின்றார். அரசாங்கம் தொழில் வழங்க மறுத்துவருவது மட்டுமல்லாமல் பல தொழில்களையும் வெட்டித் தள்ளுகின்றது."

ஒரு தனியார் நிறுவனத்தில் உற்பத்தி உதவியாளரான இவான்ஸ் உலக சோசலிச வலைத் தளத்துக்கு குறிப்பிட்டதாவது: "அவர்களது போராட்டம் தெளிவானது. பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனது அண்ணி 1998ல் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையில் விசேட பட்டம் பெற்றார். ஆனால் இன்னும் வேலை கிடைக்கவில்லை."

 வேலையற்ற பட்டதாரிகளின் இக்கட்டான நிலையையிட்டு வளர்ச்சியடைந்துவரும் பொதுமக்களின் அக்கறையின் காரணமாக, அரசாங்கம் தொழில் வழங்குவதற்கான சில அடையாள நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் வேலையற்றோர் பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவுமாறு வர்த்தகர்களின் சங்கத்துக்கு அழைப்பு விடுத்தார். அவர்கள் 5,000 வேலையற்ற பட்டதாரிகள் உட்பட 14,000 வேலையற்ற இளைஞர்களை பயிற்சியாளர்களாக சேர்த்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அரசாங்கம் பயிற்சிக் கால உதவித்தொகையான ரூபா. 6,000த்தில் 2.000த்தை வழங்கினால் மட்டுமே இது இடம்பெறும்.

See Also :

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை சுகாதார ஊழியர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் வேலைநிறுத்தத் தகர்ப்பு நடவடிக்கையுடன் இணைந்துகொண்டுள்ளது

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை சுகாதார ஊழியர்கள் அச்சுறுத்தல்களை சவால் செய்கின்றனர்

Top of page