World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraqis tortured and killed by British troops

பிரிட்டிஷ் துருப்புக்களினால் சித்திரவதை மற்றும் கொலை செய்யப்பட்ட ஈராக்கியர்கள்

By Harvey Thompson
10 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள பிரிட்டிஷ் துருப்புக்கள் அங்குள்ள பொதுமக்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் கொடூரமான நடவடிக்கைகள் குறித்து கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, இரண்டு பகுதிகளைக்கொண்ட கட்டுரையின் முதல்பகுதியை இன்று வெளியிடுகிறோம்.

பிரிட்டிஷ் ஆயுதப்படைகள் தாங்கள் ஆக்கிரமித்துக்கொண்ட ஈராக் மக்கள் மீது கொடூரமான நடவடிக்கைகளை மேற்கொண்டது தொடர்பாக செய்திகள் தற்போது வந்துகொண்டிருக்கின்றன.

அவர்கள், ஈராக் மக்கள் மீது அடித்து உதைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், சித்தரவதை செய்து கொலை செய்வதாகவும், தொடர்ந்தும் பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஈராக்கின் தெற்குப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் இராணுவம், அமெரிக்க இராணுவம் வடபகுதியில் மேற்கொள்வதைப் போன்ற மோசமான தாக்குதல்களை நடத்தி வருவதாக தொடர்ந்தும் பல சம்பவங்கள் கவனத்திற்கு வந்திருக்கின்றன.

இதுபற்றிய விசாரணைகளின் விவரங்களை வெளியிட பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்கம் (MoD) மறுத்துவிட்டது. அத்தோடு, அண்மையில் ''இராணுவத்தினர்கள் மீது இக்குற்றச்சாட்டுக்களுக்கு தாக்கல் செய்யப்படுமென்ற எந்தக் கருத்தும் இந்தக் கட்டத்தில் வெறும் ஊகம்தான்'' என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

* சென்ற ஆண்டு மே 15 ல், பாஸ்ராவிலுள்ள பிரிட்டிஷ் துருப்புக்கள் மூஸா என்பவரின் வீட்டிற்கு வந்து, சதாம் ஹூசைன் ஆட்சியில் ஈராக்கின் இராணுவ அதிகாரியாக இருந்த ஒரு பக்கத்து வீட்டுக்காரரை தேடி வந்திருப்பதாக தெரிவித்தனர். அவர்கள் சோதனை நடத்திக்கொண்டிருக்கும் போது, மூஸா குடும்பத்தினர் தற்காப்பிற்காக வைத்திருந்த கிளாஸினிக்கோவ் (Kalashnikov) துப்பாக்கி ஒன்று இருப்பதை பார்த்தனர். அமெரிக்க/பிரிட்டன் ஆக்கிரமிப்பிற்கு பின்னர் சமூகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பாதுகாப்பற்ற நிலை தோன்றியிருப்பதால், ஈராக்கியர்களின் வழக்கப்படி தற்காப்பிற்காக துப்பாக்கி வைத்துக்கொள்வது பொதுவான நடைமுறையாக இருக்கிறது.

ஆகவே, குடும்பத் தலைவரான அப்துல் ஜாபர் மூஸா, அந்த துப்பாக்கி இருந்ததற்கான காரணத்தை இராணுவத்தினர்களிடம் விளக்குவதற்கு முயன்றார். இச் சம்பவம்பற்றி அவரது 23 வயதான மகன் பஷீர் என்ன நடந்தது என்று விளக்கினார்:

''எனது தந்தை இதுபற்றி அவர்களுக்கு விளக்கம் தர முயன்றார். ஆனால் அவர்கள் அந்த துப்பாக்கியின் கட்டைப் பகுதியால் அவரது தலையில் தாக்கத் துவங்கினர்..... பின்பு அவரை வீட்டிலிருந்து இழுத்துச் சென்றனர். அவரது காலில் இருந்து இரத்தும் கசிந்தது. அதற்குப்பின்னர் அவர்களில் ஒருவர் என்னைப் பின் தொடர்ந்து வருமாறு கூறி ''இதர ஆயுதங்களையும் ஒப்படைத்துவிடு என்று கூறினார். நான் வேறு ஆயுதங்கள் எதுவும் இல்லையென்று கூறினேன்.

''அதற்குப் பின்னர் என்னை மற்றொரு அறைக்கு கூட்டிச் சென்று தாக்கத் தொடங்கினார். அவர் தனது கையால் எனது குரல்வளையைச்சுற்றி இறுக்கி, தலையை சுவற்றோடு சேர்த்து அடித்தார். அவரது கைகள் எனது குரல்வளையைச் சுற்றி மிக நெருக்கிக் கொண்டிருந்ததால் நான் சுய நினைவை இழந்தேன்...... அதற்குப்பின்னர் என்னை இராணுவ வாகனத்திற்கு இழுந்துச் சென்றனர்''.

இதுபற்றி பஷீர் மேலும் குறிப்பிடுகையில், ''என்னையும் எனது தந்தையையும் மற்றும் பக்கத்து வீட்டிலிருந்த முன்னாள் அதிகாரி ஒருவரையும் சேர்த்து அலி மஜிதின் (ஊடகங்களில் கெமிக்கல் அலி என்றழைக்கப்படுபவர்) வீட்டிற்கு இராணுவத்தினர் கொண்டு சென்றனர். அங்கு அவர்களது இராணுவ முகாம் ஒன்று உள்ளது. அவர்கள் எமது மூவரையும் கட்டாயப்படுத்தி முகமுடி அணிவித்த பின்பு, ஒரு அறைக்குள் கொண்டு சென்று ஒரு மணிநேரமாக அடித்து உதைத்து துன்புறுத்தினர்'' என்று தெரிவித்தார். பஷீர் தனது தந்தையின் அலறலைக் கேட்டார். அவரது தந்தை வேதனையில் அலறுவது நின்றதும் வேறொரு அறைக்கு பஷீர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உணவு வழங்கப்பட்டு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. உடைமாற்றிக் கொண்டார். அதற்குப்பின்னர் அவரது தந்தையை அவர் உயிரோடு பார்க்கவில்லை.

இச் சம்பவத்திற்கு பின் அடுத்த இரவு பஷீர், பாஸ்ராவிற்கு தெற்கிலுள்ள உம் கஸ்ஸார் பகுதியில் அமெரிக்கா நடத்தும் புக்கா முகாமிற்கு (Camp Bucca) கொண்டு செல்லப்பட்டு, அங்கு ஜூன் 20 வரை காவலில் வைக்கப்பட்டார். அவர் ஒரு அப்பாவிப் பொதுமகன். அவரைப் போர்க் கைதியாக அந்த முகாமில் வைத்திருந்தனர். பிரிட்டனிலிருந்து பிரசுரிக்கப்படும் Independent on Sunday பத்திரிகையின் நிருபர் ஒருவர், அவரது மணிக்கட்டில் உள்ள கைதியின் அடையாள சின்னத்தையும், அவரது செஞ்சிலுவைச் சங்க போர்க் கைதி ஆவணத்தில் IQZ-120259-01 என்ற எண்ணையும் பார்த்தார். ஆனால் அவர் விடுதலை செய்யப்பட்ட ஆவணத்தில், அவர் பொதுமகன் என்பதற்கான எந்தச் சான்றுமில்லை.

அவர்கள் இருவரும் எங்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர் என்பதை அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு துயரமிக்க சம்பவ சேர்க்கையிலேயே கண்டுபிடித்தனர். இதற்குப் பின்பு, இராணுவத்தினர் கரீம் என்பவரை தேடிக்கொண்டு வந்தனர். அவர் சரணடையாவிட்டால் அவரது மனைவியையும், மகளையும் கைது செய்யப்போவதாக இராணுவத்தினர் அச்சுறுத்தியதுடன், ஒரு தகவல் குறிப்பையும் கரீமிற்கு விட்டுச் சென்றனர். அந்தக் குறிப்பில், அலி மஜிதின் வீட்டிற்கு முன்னாள் உள்ள பிளாக் வாட்ச் சார்ஜன்ட் ஹென்டர்சனிடம், கரீம் சரணடைய வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.

நிலமை இப்படி இருக்கையில், அப்துல் ஜாபர் மூஸாவின் மூத்த மகனான அமர், மூன்று நாட்களாக அந்த முகாமிற்கு சென்று தனது தந்தை பற்றிய தகவலை விசாரித்துக் கொண்டேயிருந்தார். மூன்றாவது நாள் அவரை ஒரு இராணுவ டாக்டரிடம் அழைத்துச் சென்றபோது, அவரது தந்தை இறந்து விட்டதாக அந்த டாக்டர் கூறினார். அவரது தந்தையின் உடல், காயங்கள் மற்றும் ரத்தக் கசிவோடு பாஸ்ரா மருத்தவமனையில் இருந்ததாக அவர் கூறினார்.

''நான் அவரது உடலை பார்த்தபோது அவரது வாயிலிருந்து ரத்தம் வழிந்திருந்தது. அவரது உடல் முழுவதும் காயங்களாகவே இருந்தன. அவரது இடது பக்கத்தில் பூட்ஸ் காலால் மிதிப்பட்ட பெரிய நீல நிறக் காயம் இருந்தது. அவரது மார்புப் பகுதியிலும் இதேபோன்று மிதிபட்ட காய அடையாளம் காணப்பட்டது. அவரது உடல் முழுவதும் மண் நிறைந்திருந்தது. அவரது தோளில் விரல்கள் கீறிய தடங்கள் காணப்பட்டன'' என்று அமர் கூறினார்.

டாக்டர் ஹைதர் முஹமது சாலேஹ் என்பவர் கையெழுத்திட்டிருந்த அவரது மரணச் சான்றிதழில் ''திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பில் ரத்த தசைநார்கள் சுருங்கி'' மாண்டார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் இராணுவ மரணச் சான்றிதழ் அந்தக் குடும்பத்திற்கு தரப்படவில்லை. அவரது குடும்பத்தினர்கள் இதுபற்றி மேலும் விசாரணைகள் நடத்தவேண்டும் என்று கோருகின்றனர். அவர்களது பல குடும்ப உறுப்பினர்கள் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டிருந்தபோதும், விசாரணை செய்தவர்கள் அந்த வழக்குப்பற்றி கருத்து எதுவும் கூற மறுத்துவிட்டனர். இதனால், அந்தக் குடும்பத்திற்கு இழப்பீடு எதுவும் கிடைக்காதென்று அமரிடம் அந்த புலனாய்வு அதிகாரிகள் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

* புக்கா இராணுவ காவல் முகாமில் குறைந்த பட்சம் ஏழு ஈராக்கியர்கள் மடிந்தது தொடர்பான விரிவான விவரங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அந்த முகாம் உம் கஸ்ஸார் துறைமுகத்திற்கு அருகிலுள்ளது. 2003 ஏப்ரலுக்கும், செப்டம்பருக்கும் இடையிலான காலத்தில் மடிந்த ஏழு பேர் தொடர்பான வழக்குகளை இராணுவ விசாரணையாளர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஏழு பேர்களில், ஆறு பேர் பிரிட்டிஷ் காவலில் மாண்டார்கள். ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

* ஜூன் 8 ல் பிரிட்டிஷ் துருப்புக்கள் ராதி நீமா என்பவரை கைது செய்தது தொடர்பாக, அவரது மகள் இதுபற்றி கீழ்க்கண்ட விளக்கம் அளித்துள்ளார்: ''ஆறு பிரிட்டிஷ் கவச வாகனங்கள் எமது வீட்டை சுற்றி வளைத்துகொண்டு நின்றன. எனது சகோதரர் முஹம்மதை தேடி வந்திருப்பதாக அவர்கள் கூறினர். அவர் ஆயுதங்களை வாங்கியதாக தங்களுக்கு தகவல் வந்திருப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள். அவர் இங்கு இல்லையென்று கூறியதுடன், நாங்கள் பாத் கட்சிக்காரர்களுக்கு பயந்து ஒரு துப்பாக்கி வாங்கியிருப்பதாகவும் கூறினோம். எங்களது பதிலில் அவர்களுக்கு மனநிறைவு ஏற்படாததால் எனது தந்தையை கொண்டு சென்றனர்..... அவரது தலையில் ஒரு மூட்டையை தூக்கி வைத்து கவச வாகனத்தில் ஏற்றினர்'' என்று குறிப்பிட்டார்.

அடுத்த நாள் ஒரு பிரிட்டிஷ் ரோந்துப் படையினர் ஒரு தகவலுடன் வந்தனர். அவர்கள், ராதி நிமாவிற்கு இதய நோய் பிரச்சனையென்றும், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று நினைத்து அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் பாஸ்ராவிலுள்ள எல்லா மருத்துவமனைகளின் வார்டுகளிலும் தேடினர். ராதியின் சகோதரி அபாப் மிகுந்த விரக்தியடைந்து ஒரு மருத்துவமனையில் சவக்கிடங்கிற்கு சென்று பார்த்தபோது, அங்கு அவரது உடலைக் கண்டார்.

''அவரது உடல் கிடந்த அலங்கோலத்தைப் பார்த்து, அவரது கொடூரமான உருவத்தைக்கண்டு, அவரை நான் அடையாளம் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவரது உடல் எல்லாம் ரத்தக்கறை. முடியெல்லாம் ஒரே மண்ணாக இருந்தது. எவரோ ஒருவர் காலால் மிதித்த நீலநிறக் காய அடையாளங்கள் அவரது உடலின் பக்கவாட்டில் காணப்பட்டன'' என்று மேலும் அபாப் தெரிவித்தார்.

இதற்குப் பின்பு, அவரது ''மகனைப்பற்றி விசாரணை நடத்திக்கொண்டிருக்கும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதென்று'' கைப்பட எழுதிய குறிப்பு ஒன்று அந்தக் குடும்பத்திற்கு தரப்பட்டது.

அத்துடன், முஹமது நீமா பின்னர் கைதுசெய்யப்பட்டபோதிலும், சாட்சியம் எதுவும் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். ''முஹமது ஏதாவது தவறு செய்திருந்தால் கூட, எனது கணவனை அவர்கள் எதற்காக பிடித்துச்செல்ல வேண்டும்?'' என்று இறந்துபோன ராதி நீமாவின் விதவை மனைவியான ராஜியா கேட்டார்.

பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் இந்த வழக்கு விசாரணையை பூர்த்தி செய்துவிட்டதாக திரும்பத் திரும்ப அறிவித்தது. ''நீமா இயல்பான காரணங்களால் இறந்துவிட்டார்''. இதில் பதில் சொல்வதற்கு எதுவுமில்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே இப்படியான அறிக்கைகளை அமைச்சகம் விட்டுக் கொண்டிருந்தது.

* செப்டம்பர் 14 ல் பிரிட்டிஷ் படைகள் பாஸ்ராவில் உள்ள இபின் அல் ஹைதம் ஹோட்டலில் திடீர் சோதனையை நடத்தின. அப்போது தனது இரவுப்பணியை முடிவிற்கு கொண்டுவந்த பாஹா மூஸா என்ற வரவேற்பாளரை ஏற்றிச் செல்வதற்காக, அவரது தந்தையார் காருடன் காத்திருந்தார்.

பிரிட்டிஷ் இராணுவம், பாஹாவையும் இதர ஆறு ஹோட்டல் ஊழியர்களையும் தலையில் புறங்கையை கட்டிக்கொண்டு படுக்குமாறு கட்டளையிட்டு, அந்த கட்டடத்தில் சோதனையிட்டனர். ஹோட்டல் பாதுகாப்பிற்காக வரவேற்பு மேஜையில் 3 துப்பாக்கிகள் இருந்தன. அந்த ஹோட்டலை மூன்று வர்த்தகர்கள் கூட்டாக சேர்ந்து நடத்துகின்றனர். அதில் ஒருவரான ஹைத்தம் பாஹா அலி என்பவருக்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. சோதனையில் ஒரு ஈராக் இராணுவ சீருடையும், இரண்டு கைத் துப்பாக்கிகளும் இரண்டு சிறிய தானியங்கி துப்பாக்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

ஹைத்தம் அவரது அறை திறக்கப்பட்ட நேரத்தில் தலைமறைவாகி விட்டார். இவரைக் குறிவைத்துத்தான் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. இச் சோதனையின்போது அந்த அறையிலிருந்த பணக்கட்டுகளை இராணுவத்தினர்கள் எடுத்துக் கொண்டனர்.

பாஸ்ரா போலீஸ்படையில் கேர்னலாக பணியாற்றி வரும் பாஹாவின் தந்தை தாவூத் மூஸா, இராணுவத்தினர் பணத்தை தங்களது பாக்கட்டுக்குள்ளேயும், சட்டைக்குள்ளேயும் திணிப்பதைப் பார்த்தார். அவர், ஒரு பிரிட்டிஷ் அதிகாரியை நோக்கி இதுபற்றி கூறினார். ''இது அவர்களுக்கு நல்லதல்ல என்று நான் கூறியபோது, ஒரு அதிகாரியான லெப்டினட் மைக் அவர்களை சோதித்தார். அவர்களது சட்டைக்குள்ளிருந்த பணத்தையும் எடுத்தார்'' என மூஸா தெரிவித்தார். அந்த அதிகாரி இந்தக் கைது நடவடிக்கைகள் சம்பிரதாயத்திற்காக நடத்தப்படுகின்றன என்றும், பாஹாவும் மற்றவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அதற்குப்பின்னர் அவர்கள் அருகாமையிலுள்ள பிரிட்டிஷ் இராணுவத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனல், இச் சம்பவத்திற்கு நான்கு நாட்களுக்குப் பின்னர் பாஹா இறந்துவிட்டார்.

பிரிட்டிஷ் இராணுவ சவக்கிடங்கிற்கு தனது மகனது உடலை அடையாளம் காட்டுவதற்காக தாவூத் மூஸா வந்தபோது, தனது மகன் காயம்பட்டு ரத்தம் தோய்ந்து பிணமாகக் கிடப்பதை பார்த்தார். ''எனது மகனை மூடியிருந்த துணியை விலக்கிக்காட்டும் போது அவனது மூக்கு உடைந்திருந்தது. அவனது மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அவனது மணிக்கட்டில் தோல் கிழிக்கப்பட்டிருந்தது. அவனது நெற்றியில் மற்றும் கண்களுக்குக்கீழே தோல் எதுவுமில்லை. அவனது மார்பின் இடதுபக்கம் நீல நிறக் காயங்கள். அடிவயிற்றிலும் அதே காயங்கள் காணப்பட்டன. பூட்ஸ் காலால் உதைத்ததால் அவனது கால்களில் சிராய்ப்புக்கள் காணப்பட்டன. நான் அதைப்பார்த்து சகித்துக்கொண்டு நிற்க முடியவில்லை'' என்று தாவூத் மூஸா இதுபற்றி கூறினார்.

இச்சம்பவம்பற்றி இதர இரண்டு ஹோட்டல் ஊழியர்களை விசாரணை அதிகாரிகள் விசாரித்தனர். தி கார்டியன் பத்திரிகைக்கு அவர்கள் அளித்த பேட்டியில் இராணுவத்தினர் தங்களை திரும்பத் திரும்ப முழங்கையை மடக்கி குத்தியதாகவும், உதைத்ததாகவும், இரண்டு பகல் மற்றும் இரண்டு இரவு குணிந்தே இருக்கச் செய்ததாகவும் தெரிவித்தனர்.

பிரிட்டிஷ் படைகள் இபின் அல் ஹைத்தம் ஹோட்டலில் திடீர் சோதனை நடத்துவதற்காக உள்ளே நுழைந்தபோது, தூங்கிக் கொண்டிருந்த அந்த ஹோட்டல் பராமரிப்பு பொறியாளர் ஹைபா தாகா என்பவர் கைதிகள் நடத்தப்பட்டவிதம் குறித்து விரிவான விவரங்களை தந்திருக்கிறார். ''பிளாஸ்டிக்குகளால் கைவிலங்கிடப்பட்டு தலையில் முகமூடி இடப்பட்டு, எம்மை நகரின் இராணுவ முகாமிற்கு கொண்டு சென்றனர். அங்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு நொடிக்குள் சரமாரியாக எம் மீது தாக்கத் துவங்கினர். கேள்விகள் எதையும் கேட்கவில்லை. விசாரணையும் நடத்தவில்லை'' என்று அவர் கூறினார்.

கைதிகளை படையினர், சுவற்றில் முதுகை சாய்த்துக்கொண்டு கையை மடக்கி அவர்களது கட்டைவிரல்கள் தெரியுமாறு உட்கார கட்டளையிட்டனர். ''பாக்ஸிங் வளையத்திற்குள் நடப்பதைப்போன்று எங்களது அடிவயிற்றில் உதைத்தார்கள்.... அப்போது அவர்கள் சிரித்தார்கள். அது அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. நாங்கள் வேதனையில் துடித்தோம்'' என்று மேலும் இதுபற்றி ஹைபா கூறினார்.

அதற்கு பின்னர் இராணுவத்தினர், கைதிகளை தலையில் கையை ஊன்றிக்கொண்டு ஊர்ந்து செல்ல கட்டளையிட்டனர்.

''இப்படியே பல மணிநேரம் நாங்கள் இருந்தோம். அவர்கள் தொடர்ந்து தாக்கிக் கொண்டேயிருந்தார்கள். ஒவ்வொரு கைதிக்கும் ஒரு கால் பந்து வீரர் பெயரை சூட்டினார்கள். வான் பாஸ்டன், குல்லித் என்று பெயர்களைக்கூறி எங்களது பெயர்களை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளவில்லையா? என்று உதைக்கும் வேகத்தை அதிகரித்தனர்'' என்று அவர் மேலும் கூறினார்.

ஹோட்டலில் பணியாற்றியவரும், இக் கைதிகளில் ஒருவரான ரபீத் தாஹா முஸ்லீம் (வயது 29) என்பவருக்கு, அவரது மணிக்கட்டில் அழுத்தமாக கட்டப்பட்ட விலங்குகளின் வடுக்கள் இன்றும் காணப்படுகின்றன. ''எங்களது விதைகளில் உதைத்தார்கள், குத்தினார்கள், எட்டி உதைத்தார்கள், ஒரு கட்டத்தில் கைதிகள் நடனமாட வேண்டும் என்று சொன்னார்கள். மைக்கேல் ஜாக்ஷன் டிஸ்கோ நடனத்தைப் போன்று ஆடச்சொன்னார்கள்'' என்று தாஹா முஸ்லீம் கூறினார்.

பாஹா மூஸாவின் அறைக்கு அருகில் தாஹா அடைக்கப்பட்டிருந்தார். அவர் பாஹா மூஸாவின் கடைசி நிமிடங்களை நினைவு கூர்ந்தார். இரண்டாவது இரவில் அவர் வேறொரு அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பாஹா வேதனையில் முனுங்குவதை சுவற்றின் வழியாகக் கேட்டுள்ளார்.

''அவரது குரலைக்கேட்டேன். ''ரத்தம் வருகிறது, ரத்தம் வருகிறது என்று அலறினார். எனது மூக்கிலிருந்து ரத்தம் வருகிறது, நான் செத்துக் கொண்டிருக்கிறேன், நான் சாகப்போகிறேன் என்று கூக்குரலிட்டார். அதற்குப்பின்னர் அவரது குரலை நான் கேட்கவில்லை'' என்று தாஹா கூறினார்.

மூன்றாவது நாள் உயிரோடிருந்த கைதிகள் புக்கா முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். படுமோசமாக காயமடைந்த தாஹாவை இராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பாஸ்ராவிற்கு வடக்கில் சாய்பா பிரிட்டிஷ் இராணுவத் தளத்திலுள்ள 33 மருத்துவமனை தீவிர சிகச்சை மற்றும் மயக்க மருந்து ஆலோசகரான மேஜர் ரால்ப் செப்டம்பர் 17 அன்று எழுதிய மருத்துவ அறிக்கையில், தாஹாவின் நிலைமையானது கடுமையான சிறுநீரக இயக்கமின்மையால் உள்ளது என்று எழுதினார்.

''72 மணி நேரத்திற்கு முன்னர் அவர் கடுமையாக தாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அடிவயிற்றின் மேற்பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இடது முழங்கை, இடது மேல் தொடைப்பகுதியிலும், காயம்பட்டிருக்கிறது'' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Medical Restricted என்று செப்டம்பர் 16 ல் கையினால் எழுதப்பட்ட மற்றொரு மருத்துவ அறிக்கையில், ''தாஹா கைது செய்யப்பட்டபோது கடுமையாக தாக்கப்பட்டார்'' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. உடல் நிலை தேர்வதற்காக தாஹா இரண்டு மாதங்கள் மருத்துவ மனையில் சிகிச்சைப்பெற்றார்.

பாஹா மரணத்திற்கு ஒரு மாதம் கழித்து பிரிட்டிஷ் இராணுவ தளபதி பிரிகேடியர் வில்லியம் மூர், அவரது தந்தைக்கு வருத்தம் தெரிவித்தும் தனது ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தியும் கடிதம் ஒன்றை எழுதி, இதுபற்றி விசாரணை நடத்துவதாக உறுதியளித்தார். அது முதல் பாஹா மரணமடைந்த சூழ்நிலை குறித்து மூன்றாவது படைப்பிரிவின் ரோயல் இராணுவ போலீஸ் சிறப்பு விசாரணை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

பாஹாவின் உடலை பரிசோதனை செய்த பிரிட்டிஷ் தடயவியல் நிபுணரோடு தாம் பேசியதாகவும், பிரேத விசாரணை அறிக்கையின் பிரதியை வைத்துக்கொள்ள, விசாரணை செய்த அதிகாரிக்கு அனுமதி கொடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்ததாக 24 ஆண்டுகள் போலீஸ்காரராக பணியாற்றி வரும் தாஹாவின் தந்தை தாவூர் மூஸா தெரிவித்தார். செப்டம்பர் 21 தேதியிட்டு எழுதப்பட்டுள்ள மரண சான்றிதழை கார்டியன் நிருபர் பார்த்தார். மூச்சுத்தினறலால் திடீரென்று மூச்சுவிட முடியாமல் ஏற்பட்ட மரணம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

''எனது மகன் தெருவில் அல்லது ஹோட்டலில் அல்லது எனது வீட்டில் இறந்துவிடவில்லை. காவலில் மாண்டிருக்கிறார். அது இயற்கை மரணமல்ல. நியாயமான, நீதியான விசாரணை நடத்தி அவரது குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்'' என்று மூஸா குறிப்பிட்டார். பாஹாவின் இரண்டு புதல்வர்களான ஹசன் வயது 3, ஹூசைன் வயது 5 இருவரும் இப்போது அனாதைகளாகிவிட்டனர். அவர்களது தாய் பாஹா மரணத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே புற்று நோயினால் மடிந்துவிட்டார்.

விசாரணைகள் நடத்துவதாக உறுதிமொழிகள் தரப்பட்டன. இரங்கல் செய்திகள் அனுப்பப்பட்டன. சாட்சியங்கள் திரைப்படமாக பதிவு செய்யப்பட்டன. ஆனால் இன்றுவரை எந்த பிரிட்டிஷ் இராணுவ சிப்பாயும் கைது செய்யப்படவில்லை. அல்லது பாஹாவின் மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்படவில்லை. அல்லது வேறு ஆறு பேரை அடித்ததாக வழக்கு எதுவும் தாக்கல் செய்யப்படவுமில்லை.

தொடரும்...

Top of page