World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan election produces a hung parliament and further political instability

இலங்கைத் தேர்தல் ஒரு நிச்சயமற்ற பாராளுமன்றத்தையும் மேலதிக அரசியல் ஸ்திரமற்ற நிலைமையையும் உருவாக்கியுள்ளது

By K.Ratnayake
5 April 2004

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தேர்தல் ஒரு தீர்க்கமற்ற முடிவை தந்துள்ளதோடு, அது கூடுதலான அரசியல் எரிவுநிலைக்கு மட்டுமே வழிவகுக்கும். ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (ஐ.ம.சு.மு), 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில், ஐக்கிய தேசிய முன்னணியின் (ஐ.தே.மு) செலவில் தனது நிலைமையை உயர்த்திக்கொண்டுள்ள போதிலும், எந்தவொரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் முழுமையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.

குமாரதுங்க, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தொடர்பாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான தற்போதைய விட்டுக்கொடுப்பற்ற நிலைமையை தீர்ப்பதன் பேரில், ஐ.தே.மு அரசாங்கத்தை பதவி விலக்குவதன் மூலம் பெப்ரவரி 7 அன்று தேர்தலைத் துரிதப்படுத்தினார். ஆயினும், இந்தத் தேர்தல், கொழும்பு ஆளும் கும்பல்களுக்கிடையிலான கசப்பான கோஷ்டி மோதல்களைத் தீர்ப்பதற்கு பதிலாக, அரசியல் நெருக்கடியை உக்கிரமாக்குவதற்கு மட்டுமே சேவையாற்றியுள்ளது.

குமாரதுங்க, தனது சொந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க) சிதைவடைந்துவரும் நம்பகத்தன்மையை தூக்கிநிறுத்துவதற்கான ஒரு அவநம்பிக்கையான முயற்சியாக, சிங்கள இனவாதத்தினதும் மற்றும் மக்கள் நலன்சார்ந்த வாய்வீச்சுக்களினதும் பிற்போக்குக் கலவையை அடிப்படையாகக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உடன் சேர்ந்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை (ஐ.ம.சு.மு) அமைத்துக் கொண்டார். இந்தக் கூட்டணி, அரசாங்கம் பதவி விலக்கப்படுவதற்கு சற்றே ஒரு நாளுக்கு முன்னதாகத்தான் உத்தியோகபூர்வமாக பதிவுசெய்யப்பட்டது.

இந்தத் தேர்தலில், சுதந்திர முன்னணி 105 ஆசனங்களை வென்றது. ஆயினும், இதில் பெரும் பயனடைந்தது ஸ்ரீ.ல.சு.க அன்றி ஜே.வ.பி யே ஆகும். அது தனது பாராளுமன்ற ஆசனங்களை 16ல் இருந்து 40 வரை அதிகரித்துக்கொண்டதோடு, சில தேர்தல் மாவட்டங்களில் ஸ்ரீ.ல.சு.க வேட்பாளர்களை விட அதிகரித்த விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளது. இப்போது ஜே.வி.பி, சுதந்திர முன்னணியின் அமைச்சரவையில் சக்திவாய்ந்த பிரதிநிதித்துவத்தை கோரும் நிலையில் உள்ளது. மறுபக்கம், ஸ்ரீ.ல.சு.க தனது அடித்தளத்தை இழந்துள்ளது --77 ஆக இருந்த ஸ்ரீ.ல.சு.க ஆசனங்கள் இம்முறை 66 வரை குறைந்துபோயுள்ளன.

ஸ்ரீ.ல.சு.க வின் ஏனைய பங்காளிகளான, லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் எந்தவொரு வெற்றியையும் ஈட்டவில்லை. உண்மையில், இந்த பழைய தொழிலாளர் கட்சிகள் 2001 தேர்தலிலேயே துடைத்துக்கட்டப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சி ஒரு ஆசனத்தை மட்டுமே வென்றுள்ள அதேசமயம், மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட ல.ச.ச.க எதிலும் வெற்றிபெறவில்லை.

ஜே.வி.பி முதல் முறையாக அரசாங்கத்தில் சேர்ந்துகொள்வதால், அரசியல் பதட்டநிலைமைகள் மட்டுமே அதிகரிக்க முடியும். சுதந்திர முன்னணி, யுத்த நிறுத்த உடன்படிக்கையை மதித்து, விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதாகத் தெரிவித்த போதிலும், தமிழ் சிறுபான்மையினருக்கு எந்தவொரு சலுகையும் வழங்குவதை ஜே.வி.பி எதிர்ப்பதானது, நாட்டை மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ளிச் செல்லும். ஜே.வி.பி யின் பேச்சாளர்கள், விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் நாட்டைக் காட்டிக்கொடுப்பதாக ஐ.தே.மு வை பல மாதங்களாக கண்டனம் செய்துவந்துள்ளனர்.

ஜே.வி.பி பெற்ற வாக்குகள், ஸ்ரீ.ல.சு.க மற்றும் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) [ஐ.தே.மு வின் தலைமைக் கட்சி] ஆகிய இரு பிரதான கட்சிகளையிட்டும் மக்கள் பரந்தளவில் அதிருப்தியடைந்துள்ளதை பிரதிபலிக்கின்றன. ஐ.தே.மு வின் வாக்குகள் தேசிய ரீதியில் 38 வீதம் வரை, அதாவது 7 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. 109 ஆசனங்களைக் கொண்டிருந்த ஐ.தே.மு. இம்முறை 82 ஆசனங்களையே பெற்றுள்ளது. தெற்கில் பதுளை, நுவரெலியா, கண்டி மற்றும் கொழும்பு தவிர்ந்த ஏனைய எல்லா தேர்தல் மாவட்டங்களிலும் ஐ.தே.மு தோல்விகண்டுள்ளது. ஒன்பது அமைச்சர்கள் தமது ஆசனங்களை இழந்துள்ளனர்.

ஐ.தே.மு மீதான மக்களின் அதிருப்தி, கம்பனித் தலைவர்களால் கோரப்பட்ட துடைத்துக்கட்டும் பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்களில் இருந்து நேரடியாக வெளிப்படுகிறது. இந்தக் கம்பனித் தலைவர்கள், தீவை, பூகோள மூலதனத்திற்காக ஒரு மலிவு உழைப்பு மேடையாக மாற்றுவதன் பேரிலேயே சமாதானத்தை எதிர்பார்க்கின்றனர். கடந்த இரண்டரை வருடங்களாக, ஐ.தே.மு வின் கொள்கைகள், விலை அதிகரிப்பு மற்றும் உதிவி மானியம், தொழில் மற்றும் சமூக சேவைகள் மீதான வெட்டுக்களை பெறுபேறாகத் தந்தன. இவை, தொழிலாளர்கள், விவசாயிகள், வேலையற்றவர்கள் மற்றும் மாணவர்களின் வேலைநிறுத்தங்களையும் மற்றும் எதிர்ப்பு அலையையும் தூண்டிவிட்டது.

ஏனைய இரு கட்சிகள் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் கண்டுள்ளன. விடுதலைப் புலிகளின் நிஜ பிரதிநிதிகளாக செயற்படும் தமிழ் கட்சிகளின் ஒரு கூட்டமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு (த.தே.கூ) 22 ஆசனங்களை வென்றுள்ளது. பெளத்த பிக்குகளை வேட்பாளர்களாக நிறுத்திய சிங்கள தீவிரவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய 9 ஆசனங்களை வென்றது. இது, இன ரீதியில் பலமாகத் துருவப்படுத்தப்பட்ட ஒரு பாராளுமன்றத்தை பெறுபேறாக்கியுள்ளது.

சிங்களப் பேரினவாதத்தை தூண்டிவிட்டதோடு, ஜே.வி.பி யின் நிலைமையை முன்னேற்றமடையச் செய்த குமாரதுங்க, இப்போது, கையாள முடியாத பல அரசியல் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றார். தேர்தலில் ஜே.வி.பி பலமடைந்தமையானது, ஆரம்பத்திலேயே கூட்டணி அமைப்பது சம்பந்தமான விடயத்தில் பிளவடைந்துள்ள ஸ்ரீ.ல.சு.க விற்குள் மேலும் பிளவுகள் ஏற்படுவதை கூர்மைப்படுத்தும். எல்லாவற்றுக்கும் மேலாக, சுதந்திர முன்னணிக்கு பாராளுமன்ற பெரும்பான்மையை பெறுவதற்கு இன்னும் எட்டு ஆசனங்கள் தேவையாக இருப்பதோடு, ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு ஜே.வி.பி யின் பலம் தடையாக உள்ளது.

சுதந்திர முன்னணியின் 105 ஆசனங்களுக்கு மேலதிகமாக, குமாரதுங்க, இராணுவத்துடன் நெருக்கமாக செயலாற்றும் தமிழ்க் கட்சியான, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை (ஈ.பி.டி.பி) கணக்கில் சேர்த்துக்கொள்ள முடியும். அவர், ஐ.தே.க வின் முன்னாள் பங்காளிகளான, முறையே முஸ்லிம்களையும் மற்றும் தமிழ் தோட்டத் தொழிலாளர்களையும் அடிப்படையாகக் கொண்ட, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற முயற்சிக்கலாம். ஆனால் இக்கட்சிகள் ஜே.வி.பி உடனான ஒரு அரசாங்கத்தில் இணைய மாட்டோம் என முன்னரே பிரகடனம் செய்துள்ளன.

சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமயவுடன் உடன்பாடு காண முயற்சிக்கக் கூடும். ஆயினும், இந்த தீவிர வலதுசாரி அமைப்புடனான ஏற்பாடுகள், விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை சாத்தியமற்றதாக்கும். ஜாதிக ஹெல உறுமய, "சமாதான முன்னெடுப்புகளை" கடுமையாக எதிர்ப்பதுடன், இலங்கை, பெளத்த மேலாதிக்கத்தையும் மற்றும் சிங்களப் பெரும்பான்மையையும் கொண்ட ஒரு தர்ம ராஜ்ஜியமாக (குருமார்களின் ஆட்சி) ஆக வேண்டும் என வலியுறுத்துகின்றது. அது பிராதன கட்சிகளின் மோசடிகளை கண்டனம் செய்வதன் மூலமும், "சுத்தமான" பாராளுமன்றத்திற்கு வாக்குறுதியளிப்பதன் மூலமும், மத்தியதர வர்க்கத்தின் நம்பிக்கையீனம் கொண்ட தட்டினருக்கு அழைப்பு விடுக்கின்றது.

ஜாதிக ஹெல உறுமய பெற்ற வாக்குகள் தேசிய ரீதியில் 6 சதவீதமாக உள்ள அதே சமயம், அது கொழும்பு, கம்பஹா, களுதுறை மற்றும் கண்டி போன்ற நகர்ப்புற மாவட்டங்களில் குறிப்பிடத்தக்களவு உயர்ந்த மட்டத்திலான ஆதரவை வென்றுள்ளது. ஜாதிக ஹெல உறுமய, 18 சதவீத வாக்குகளையும் மூன்று ஆசனங்களையும் வென்ற கொழும்பு மாவட்டத்தின் சில தொகுதிகளில் ஐ.தே.க வை மூன்றாம் இடத்திற்குத் தள்ளியது. கெஸ்பாவ மற்றும் மஹரகமை தொகுதயில் அது 29.4 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. இவை பெருமளவிலான சிறு வியாபாரிகள், வர்த்தகர்கள் மற்றும் மத்தியதர வர்க்கத்தின் ஏனைய பிரிவினரும் வாழும் புறநகர்ப் பகுதிகளாகும். இப்பகுதிகளில் ஜாதிக ஹெல உறுமய நச்சுத்தனமான கிறிஸ்தவ விரோத பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தது.

இறுதி முடிவுகளால் உற்சாகமடைந்த ஹெல உறுமய தலைவர்கள், "நாட்டின் பிரதானக் கட்சியாக" முன்னேற முயற்சிப்பதாக ஞாயிறன்று ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தனர். தற்போதைய அரசியல் கட்சிகளை மோசடிகளுக்காக கண்டனம் செய்த ஹெல உறுமய, எந்தவொரு கூட்டணியிலும் அங்கம் வகிக்காது எனவும், ஆனால் விடயத்தைப் பொறுத்தே தனது நிலையைத் தீர்மானிக்கும் எனவும் வலியுறுத்தியது. ஹெல உறுமய அமைப்பாளர் அதுரலிய ரத்னே தேரவின்படி, இந்த கட்சி பாராளுமன்றத்தில் ஒரு புதிய ஆசன ஒழுங்குக்காக வலியுறுத்தும், அதாவது, ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர்கள் அரசாங்க தரப்பு ஆசனங்களிலோ அல்லது எதிர் ஆசனங்களிலோ அமரமாட்டார்கள்.

விடுதலைப் புலிகளுடனான ஐ.தே.மு வின் மென்மையான அனுகுமுறையை விமர்சித்ததை அடுத்து, சுதந்திர முன்னணி, விடுதைலப் புலிகளின் ஆதரவிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் ஆதரவு கோருவது நிகழ்தற்கரியதாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வட மாவட்டங்களான யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் 90 சதவீத வாக்குகளை வென்றதோடு, கிழக்கு மாகாணங்களிலும் குறைந்தளவு வாக்குகளை வென்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற அதிகப்படியான வாக்குகள், வடக்கு கிழக்கில் ஏனைய தமிழ் கட்சிகள் மீதான விடுதலைப் புலிகளின் அடக்குமுறைகள் மற்றும் பயமுறுத்தல்களால், குறைந்தபட்சம் அதன் பாகமாக, கிடைத்தவையாகும். தேர்தல் ஆணையாளர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாக்களிப்பு நிலையங்களை ஸ்தாபிக்க மறுத்ததை அடுத்து, யாழ்ப்பாணத்தில் 47.3 சதவீதத்தாலும் மற்றும் வன்னியில் 66.3 சதவீதத்தாலும் வாக்களிப்போர் தொகை வீழ்ச்சியடைந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்திய தளபதியான கருணா என்றழைக்கப்படும் வி. முரளிதரன், மார்ச் முற்பகுதியில் விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து சென்று தனது சொந்தப் படையை அமைத்துக்கொண்டதை அடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பிளவடைந்துள்ளது. கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட ஏழு ஆசனங்களில், ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கருணாவின் ஆதரவாளர்களாகும். இந்தப் பிளவானது விடுதலைப் புலிகளின் இரு பிரிவினர்களுக்கும் இடையிலான ஒரு ஆயுதமோதலுக்கு வழிவகுக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. அதேசமயம், அது சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை கீழறுக்கும் அச்சுறுத்தலையும் கொண்டுள்ளது.

குமாரதுங்க, பாராளுமன்ற பெரும்பான்மையை பெறுவதில் சமாளித்துக்கொண்டாலும் கூட, அது அதிகரித்தளவில் ஸ்திரமற்றதாகவே விளங்கும். ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஜே.வி.பி க்கும் இடையில் விடுதைலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படை பற்றி எந்தவொரு உடன்பாடும் கிடையாது. ஜே.வி.பி, வடக்கு கிழக்கிற்கு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பரவலாக்கலை வழங்கும் ஸ்ரீ.ல.சு.க வின் திட்டத்தை ஆரம்பத்திலேயே எதிர்த்தது. அதே சமயம், சுதந்திர முன்னணி அரசாங்கம், தனியார்மயமாக்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கோரும் பெரு வர்த்தகர்கள் மற்றும் பெரு வல்லரசுகளின் அழுத்தங்களுக்கு உள்ளாகும்.

உள்ளூர் மற்றும் வெளியூர் ஆய்வாளர்கள், தேர்தல் முடிவுகளை நம்பிக்கையின்மையுடன் கண்ணுற்றது ஆச்சரியத்திற்குரியதல்ல. ஏ.எப்.பி செய்திச் சேவைக்கு பெயர்குறிப்பிடாத ஒரு ஆசிய இராஜதந்திரி பேசும்போது: "உங்களால் இதைவிட போர்க்குணமிக்க பாராளுமன்றத்தை இலங்கையில் எதிர்பார்க்க முடியும் என நான் நினைக்கவில்லை. நாம் இங்கு மையத் தளத்தை இழந்துகொண்டிருக்கின்றோம் எனத் தோன்றுகிறது. இந்தப் புதிய சபையில் எதையும் நிறைவேற்றுவது ஒரு சவாலாகவே இருக்கும்," எனத் தெரிவித்தார். அராஜகத்திற்கான சாத்தியம் பற்றி எச்சரித்த ஒரு மேற்கத்திய இராஜதந்திரி: "அடுத்த பாராளுமன்றம் எத்தகைய வாழ்க்கையை எதிர்நோக்குகிறது என்பதை அவதானிப்பது முக்கியமானதாகும்," என்றார்.

தனது நீண்டகால ஆய்வை மீண்டும் உச்சரித்த ஞாயிறு ஐலண்ட் பத்திரிகை, ஸ்ரீ.ல.சு.க வும் ஐ.தே.க வும் ஒரு சிறந்த கூட்டணியை அமைக்க ஒன்றுசேர வேண்டும் என்றது. "இந்த நாட்டுக்கு குமாரதுங்க செய்யக்கூடிய சிறந்த நடவடிக்கை என்னவென்றால், அவர் அண்மையில் பலவீனமானதில் இருந்து முயற்சித்து வந்த, தேசிய அரசாங்கத்தை அமைப்பதை நோக்கி செயற்படுவதாகும்," என அது பிரகடனப்படுத்தியதோடு, "தெற்கில் உள்ள பிரதானக் கட்சிகள் சுய இலாபத்திற்காக சவாரி செய்யுமளவில், பூகோளரீதியான ஆதரவு, 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் உதவி, யுத்தத்திற்கான முடிவு ஆகியவற்றை இழந்துவிடக்கூடாது" எனவும் எச்சரிக்கை செய்துள்ளது.

ஐ.தே.மு அரசாங்கத்திற்கு ஆதரவளித்த சண்டே லீடர் பத்திரிகை: "சற்றே இரண்டு வருடங்களுக்குள், 20 வருடகால யுத்தத்தை அடுத்து சமாதானத்தையும் மற்றும் பொருளாதார வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்ல இலாயக்கானதாக சர்வதேச கவனத்தை ஈர்த்த நாடு, சனிக்கிழமை குழப்பத்தின் விளிம்பில் ஊசலாடியது," என சோர்வுடன் பிரகடனம் செய்தது. அரசியல் விட்டுக்கொடுப்பற்ற நிலைக்கு வழிவிடமுடியாத ஆய்வாளர், "2001 தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, கூட்டுழைப்பு என்ற பெயரால் ஜனாதிபதியுடன் மென்மையாக நடந்துகொள்ள தீர்மானித்ததன் மூலம், குமாரதுங்கவுக்கு இலங்கையை தோல்வி நிலைமைக்கு உள்ளாக்க இடமளித்தையிட்டு ஐ.தே.மு இன்று கவலைப்படும், என முடிவு செய்துள்ளார்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க), தற்போதைய நிலைமை தொழிலாளர் வர்க்கத்திற்கு மிகவும் ஆபத்தானது என தேர்தல் பிரச்சாரத்தின் ஊடாக எச்சரிக்கை செய்தது. குமாரதுங்க, அதிகரித்தளவில் இராணுவம், அரச இயந்திரம் மற்றும் சிங்கள தீவிரவாத தட்டினரில் தங்கியுள்ளார். ஆழமடைந்துவரும் சமூக மற்றும் அரசியல் பதட்ட நிலைமைகளை தீர்க்க இலாயக்கற்ற அவர், விசேடமாக தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிராக இலக்கு வைக்கப்பட்ட எதேச்சதிகார முறையிலான ஆளுமையை மேற்கொள்ளத் தயங்கப் போவதில்லை.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாள வர்கக்த்தை, அதன் பொது வர்க்க நலன்களுக்காக சுயாதீனமாக அணிதிரட்டுவதன் அடிப்படையில், இந்தத் தேர்தலில் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்த ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமேயாகும். அதன் வேட்பாளர்கள், முதலாளித்துவ சுரண்டலால் தோற்றுவிக்கப்பட்ட சீரழிந்த நிலைமைகளுக்கு எதிரான பொதுப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக தொழிலாளர்களை ஒன்றிணைப்பதன் அடிப்படையில், வடக்கு கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை உடனடியாக வாபஸ் பெறக்கோரும் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். சோசலிச சமத்துவக் கட்சி, தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலுமான ஐக்கிய சோசலிச குடியரசுகளின் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசை ஸ்தாபிப்பதற்காக போராடுகிறது.

கொழும்பு மாவட்டத்தில் வேட்பாளர்களை நிறுத்திய சோ.ச.க, 159 வாக்குகளைப் பெற்றதோடு, தேர்தலில் போட்டியிட்ட 28 கட்சிகளில் 14 வது இடத்தைப் பெற்றது. இந்த வாக்குகள், இன்னமும் சிறயளவிலானதாக இருந்த போதிலும், தொழிலாளர்களின் மற்றும் இளைஞர்களின் முக்கியமான பிரிவினர், இலங்கையின் உத்தியோகபூர்வ அரசியல் வாழ்க்கையின் ஒவ்வொரு நோக்கிலும் ஆதிக்கம் செலுத்தும் இனவாத அரசியலை நனவுரீதியாக நிராகரிக்கத் தயாராகின்றார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஆயினும், அது உழைக்கும் மக்களின் பரந்த தட்டினர் மத்தியில் காணப்படும் அரசியல் குழப்பநிலையையும் மற்றும் முன்னோக்கு நெருக்கடியையும் வெளிப்படுத்துகிறது. பெரும்பாலான வாக்காளர்கள், பிரதான கட்சிகளை ஆழமாக எதிர்க்கும் அதேவேளை, தமது வர்க நலன்களுக்கு அடிப்படையில் எதிரான வேலைத்திட்டங்களை அடிப்படையாக கொண்ட கட்சிகளுக்கு வாக்களிப்பதைத் தவிர வேறு மாற்றீட்டைக் காணவில்லை.

நாம், சோ.ச.க வின் வேலைத்திட்டத்தையும் முன்னோக்கையும் கவனமாக படிப்பதன் மூலமும் மற்றும் அதனுடன் இணைவதற்கு விண்ணப்பிப்பதன் மூலமும் அனுகூலமான முடிவை எடுக்குமாறு, சோ.ச.க வின் விஞ்ஞாபனத்தை படித்த, சோ.ச.க கூட்டங்களில் பங்குபற்றிய மற்றும் சோ.ச.க பிரச்சாரங்களை பின்பற்றிய தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு அழைப்புவிடுக்கிறோம்.

Top of page