World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Pulitzer Prize awarded to report on US atrocities in Vietnam

வியட்நாமில் அமெரிக்க அட்டூழியங்கள் தொடர்பான செய்திக்கு புலிட்சர் விருது

By Patrick Martin
7 April 2004

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க இராணுவப் பிரிவான டைகர் படை வியட்நாம் போரில் புரிந்த அட்டூழியங்களை தொகுத்து விசாரணை செய்து வெளியிட்ட ஒகியோவிலுள்ள (Ohio) தினசரி செய்திப் பத்திரிகையான ரொலடோ பிளாட்டிற்கு (Toledo Blade) புலிட்சர் பரிசு வழக்கப்பட்டிருப்பதாக ஏப்ரல் 5 ல் அறிவிக்கப்பட்டது. 1967 ஆம் ஆண்டு ஏழு மாதங்களில் இந்தப் படைப்பிரிவு நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்தது தொடர்பான ஆவணங்களை இந்தப் பத்திரிகையின் நிருபர்களான மைக்கேல் டி. சல்லா, மிச் வெஸ் மற்றும் ஜோ மார் ஆகியோர் ஆய்வு செய்து தொடராக விவரித்தனர்.

இந்த செய்தித்தொடர் வழக்கத்திற்கு மாறானது. --அமெரிக்கப் படையினர் புரிந்த இந்தக் கொலைகள் இராணுவ உயர் அதிகாரிகளால் மூடி மறைக்கப்பட்டன-- இத்தொடர் வியட்நாமில் அமெரிக்கப் படைகள் புரிந்த அட்டூழியங்களை மட்டுமின்றி, அதிகாரப்பூர்வமாக அமெரிக்க இராணுவக் கொலைக் கொள்கையையும் இது அம்பலப்படுத்தியுள்ளது. அப்போது வியட்நாமில் அமெரிக்க இராணுவத்திற்கு, ''சுதந்திரமாக சுட்டுத் தள்ளலாம்'' என்று அறிவிக்கப்பட்ட பிராந்தியங்களில் நடமாடுகின்ற எவரையும் சுட்டுத்தள்ளுவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இந்த தொடர் கட்டுரை வியட்நாமில் பாதிக்கப்பட்டவர்கள் மீதும், டைகர் படையை சேர்ந்தவர்கள் மீதும் மிகுந்த கருணை அணுகுமுறை அடிப்படையில் வெளியிடப்பட்டது. இந்தப் படைப்பிரிவைச் சேர்ந்த பலர் தங்களது போர்க்கால நடவடிக்கைகளின் தாக்கங்களால் மன உளைச்சல்களாலும் மன நோயாளிகளாகவும் பாதிக்கப்பட்டனர்.

இப்பத்திரிகைத் தொடர் இரட்டிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினர் அப்பாவி குடிமக்கள் மீது புதிய கொடுமைகளை செய்து கொண்டிருக்கின்ற நேரத்தில் இந்தத் தொடர்கட்டுரை வெளிவந்துள்ளது. இந்த விருது வழங்கப்பட்டிருக்கின்ற நேரமும் தற்போது பொருத்தமானது. வியட்நாம் போருக்குப் பின்னர் அமெரிக்க இராணுவம் பல்லூஜா நகரத்திலும், பாக்தாத்திலும் மற்றும் தெற்கு ஈராக்கின் கிளர்ச்சி கொரில்லாக்களை குறிவைத்து தெருக்கு தெரு தேடுதல் மற்றும் அழித்தல் நடவடிக்கையை மிகப்பெரும் எடுப்பில் மேற்கொண்டுள்ள இந்த வாரத்தில், இவ்விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது.

டைகர் படை தொடர்பான கட்டுரைத் தொடருக்கு ''மறைக்கப்பட்ட ரகசியங்கள், கொடூரமான உண்மைகள்'' என்று தலைப்பிட்டிருந்தார்கள். இப்படைப் பிரிவின் பல முன்னாள் படையினர்கள் தங்களது அனுபவங்களை தெரிவிக்க முன்வந்ததால் இந்த விடயத்தை தொடராக வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. சிலர் இந்த அட்டூழியங்களை நேரில் கண்டும் தடுத்து நிறுத்த முடியாத நிலையில் இருந்தனர். வேறு சிலர் நேரடியாக இதில் பங்கெடுத்துக்கொண்டவர்கள். தற்போது இவர்கள், இத்தவறுக்கு வருத்தம் தெரிவிப்பவர்களாகவும், பழைய நினைவுகளால் அலைக்கழிக்கப்படுபவர்களாகவும் காணப்படுகின்றனர். முன்னாள் படையினர்களில் ஒன்பது பேர் அதிர்ச்சிக்குப்பிந்திய மன அழுத்தக் கோளாறுகளால் துன்புற்று வருகின்றனர்.

அத்துடன், எந்தவித ஆயுதங்களும் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காத வியட்நாம் குடிமக்களுக்கு எதிராக 18 படையினர்கள் போர்க் குற்றங்களை புரிந்ததாக இராணுவ புலனாய்வு நிரூபித்தப் பின்னரும் நிக்சன் மற்றும் போர்ட் நிர்வாகங்கள் எவர் மீதும் வழக்கு தொடரவில்லை என்று இந்த நிருபர்கள் பதிவேடுகளை ஆராய்ந்து கண்டுபிடித்தனர். ''நாங்கள் வெற்றி பெற்றிருப்பதில் நான் மகிழ்ச்சிடைகிறேன். ஆனால் இது மிகவும் வருந்தத்தக்க வெற்றி. டைகர் படை அப்பாவி ஆண்களை, பெண்களை மற்றும் குழந்தைகளை கொன்று தள்ளியது. இந்தச் செயல்களை புரிந்தவர்கள் இன்னும் தண்டிக்கப்படாமல் நடமாடுகிறார்கள்'' என்று நிருபர் வெஸ், Blade பத்திரிகைக்கு கூறியதாக இந்தப் பத்திரிகையின் இணையத் தளம் தெரிவித்துள்ளது.

''29 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற விசாரணையை குப்பைத் தொட்டிக்கு அனுப்பினார்கள் என்பதை இராணுவம் விசாரிக்க வேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியம்'' என்று நிருபர் சல்லாக் குறிப்பிட்டார். அதிகாரபூர்வமான விசாரணை இன்னமும் நிலைச்சான்றில் தொகுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும், எந்த அதிகாரியோ அல்லது பொதுமக்களோ அல்லது இராணுவத்தினர்களோ இக்கொலைகளுக்கு அல்லது அவற்றை மூடிமறைத்தற்கு பொறுப்பு என்று குற்றம் சாற்றப்படவில்லை.

இந்த மூன்று நிருபர்களும் டைகர் படையைச் சேர்ந்த 43 முன்னாள் படையினர்களை பேட்டி கண்டதுடன், வியட்நாமிற்கு பயணம் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் விசாரித்தனர். ஒரு பிராந்தியப் பத்திரிகையான பிளாட் பத்திரிகை 300,000 மக்கள் வாழ்கின்ற நகரில் பிரசுரிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் இப்பத்திரிகை புலிட்சர் பரிசை பெற்றதில்லை. இவ்வளவு ஒரு சிறிய பத்திரிகை கணிசமான அளவிற்கு பணம் செலவிட்டு இந்தக் கட்டுரைத் தொடரை வெளியிட்டிருக்கிறது. இப்பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் குர்த் பிராங் (Kurt Franck) பேட்டியளிக்கும் போது ''இந்தச் செய்திகளை வெளியிடுவதில் எங்களுக்கு ஒரு ஒழுக்க நெறி கடமை இருந்தது. எங்கே அரசாங்கம் தவறிவிட்டதோ அங்கே இப்பத்திரிகை நுழைந்து இந்த அத்தியாயத்தை பூர்த்தி செய்திருக்கிறது'' என்று குறிப்பிட்டார்.

இந்த விருது வழங்கப்பட்டிருப்பது பெரும்பாலான அமெரிக்க ஊடகங்களுக்கு உள்ளார்ந்த கண்டனமாக இருக்கின்றது. அவை இத்தொடர் பிரசுரிக்கப்பட்ட நேரத்தில் அவற்றை புறக்கணித்தன. பெரிய போர்க்கால அட்டூழியம் அம்பலத்திற்கு வந்ததை எந்தத் தொலைக்காட்சியும் தகவலாகக்கூட தரவில்லை. வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸ் உட்பட மிகப்பெரும்பாலான தினசரி பத்திரிகைகள் இதனை சுருக்கமாகவும், அக்கறையின்றியும் வெளியிட்டன.

மேலும், புஷ் நிர்வாகத்தின் மற்றும் அமெரிக்காவின் பாரிய நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரல் பற்றிய செய்தி சேகரிப்பு மற்றும் விமர்சனங்களுக்காக வேறுபல புலிட்சர் பரிசுகளும் திங்களன்று வழங்கப்பட்டன. அவை, அமெரிக்காவில் அடிப்படை அரசியல் மாற்றங்கள் பெருமளவில் உருவாகி வருகின்றன என்பதை கோடிட்டு காட்டுகின்றன.

சர்வதேச செய்திகளுக்கான பரிசு வாஷிங்டன் போஸ்ட் வெளியுறவு தொடர்பாளர் அந்தோனி சாடிட்டிற்கு (Anthony Shadid) கிடைத்திருக்கிறது. அரபுமொழியை சரளமாக பேசும் இவர், லெபனானிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் பாரம்பரியத்தில் வந்தவராவர். இவர், ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின்போது பாக்தாத் நகரத்திலிருந்து நேரடியாக செய்திகளைக் கொடுத்தார். ''அசாதாரணமான ஆற்றலுடன் கைப்பற்றியமையும், தனிநபர் அபாயங்களையும், ஈராக் மக்களது உணர்வுகளையும், அவர்களது மனக் கிளர்ச்சிகளையும், அவர்களது நாடு ஆக்கிரமிக்கப்பட்டு, தலைவர் கவிழ்க்கப்பட்டு, அவர்களது வாழ்வு தலைகீழாக மாறிய பின்னர் உண்மையான உணர்வு வெளிப்பாடுகளை'' படம் பிடித்துக்காட்டியிருப்பதாக புலிட்சர் பரிசளிப்புக்குழு இச் செய்தியாளரை பாராட்டியுள்ளது.

ஈராக் போரின்போது அமெரிக்க இராணுவப் பிரிவுகளுடன் இணைந்து சென்று செய்திகளை கொடுத்த பல்வேறு பத்திரிகையின் தலையங்க எழுத்தாளர்கள் அல்லது நிருபர்கள் எவருக்கும் இப்பரிசு கிடைக்கவில்லை. புஷ் நிர்வாகத்தின் போர் முயற்சியையும், மிக விரைவாக இராணுவம் முன்னேறிச் செல்வதையும் ஆதரித்து செய்திகளையும் செய்தி விமர்சனங்களையும், கட்டுரைகளையும் எழுதிய எவருக்கும் இந்த விருதுகள் வழங்கப்படவில்லை.

செய்தியாளர் சாடிட், போரின்போது அமெரிக்க விமானங்கள் பாக்தாத்திலுள்ள பொதுமக்கள் மீது குண்டுகளை வீசி தாக்கியபோது அதன் விளைவுகளை விவரித்து செய்திகளை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு அரபு அமெரிக்கர். இதற்கு முன்னர் பொஸ்டன் குளோப் (Boston Globe) பத்திரிகைக்காக மேற்குக்கரை பகுதியில் பாலஸ்தீன இண்டிபாடா எழுச்சி நிகழ்ச்சிகளை சேகரித்த போது, இவர் இஸ்ரேலிய படைகளால் சுடப்பட்டு காயமடைந்தார். எனவே மிகப்பெரும்பாலான அமெரிக்கப் பத்திரிகை பெரிய நிறுவனங்களைவிட ஈராக் மக்கள் பாதிக்கப்பட்டதில் இவர் மிக அதிக உணர்வுபூர்வமான அனுபவம் உள்ளவராவர்

பத்திரிகையின் முன்பக்கத்திற்கு அளிக்கப்பட்ட இவரது செய்திகள் கீழ்க்கண்டவாறு பிரதிபலிக்கிறது. அவற்றில், 2003 மார்ச் 27 ல், ''ஒரு நொடியில் சிதைந்துவிட்ட வாழ்வுகள்''. 2003 மார்ச் 29 ல் ''உலகம் முழுவதும் கதறி அழுகிறது''. ''நெரிசல் நிறைந்த சந்தைக் கொலைகள் காட்சியாக மாறுகிறது''. 2003 மார்ச் 31 ல் ''மலர்ந்த மலர் போன்ற சிறுவன்''. '''வானம் வெடித்தபோது 14 வயது ஆர்கன் டியாவ் மாண்டுவிட்டான்'' போன்றவைகள் அடங்குகின்றன. புலிட்சர் குழு இந்த செய்திகளை கருத்தில் எடுத்துக்கொண்டு, இச் செய்தியாளருக்கு மட்டுமே விருது வழங்கியிருக்கிறது. இவருடன் சேர்ந்து சென்ற, ஈராக்கை அமெரிக்கா பிடித்துக்கொண்டது தொடர்பாக அதற்குப்பின்னர் இணைந்து செய்திகளை தந்துகொண்டிருக்கும் வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளருக்கு இவ்விருது வழங்கப்படவில்லை.

ஏனெனில், அதற்குப்பின்னர் வந்த செய்திகள் அனைத்துமே அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆட்சியும் அமெரிக்க இராணுவப் படைகளும் தந்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் பிரசுரிக்கப்படுபவை ஆகும். அமெரிக்காவை எதிர்த்து ஏன் சண்டையிடுகிறார்கள் என்று கொரில்லா புரட்சிக்கார்களை நேரடியாக பேட்டி கண்ட ஒரு சில பத்திகையாளர்களில் சாடிட் ஒருவர்தான் அமெரிக்கர் ஆவர். ஏன் அமெரிக்காவிடம் சண்டையிடுகின்றீர்கள் என்று கொரில்லா கிளர்ச்சியாளர்களிடம் பேட்டிக்கண்டு, அதேபோல், அமெரிக்க ஆக்கிரமிப்பால் தங்களது வேலைவாய்ப்பு மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து விவரமாக செய்திகளையும் அனுப்பியிருந்தார்.

லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஐந்து புலிட்சர் பரிசுகளைப் பெற்றிருக்கிறது. வால்மார்ட் நிறுவனம் (Wal Mart) உலகின் மிகப்பெரிய நிறுவனமாக வளருவதற்கு பயன்படுத்திய முறைகளை ஆராய்ந்து தேசிய அளவில் செய்திகளை வெளியிட்டதற்கான விருதும் இதில் அடங்கும். இந்தச் செய்தியில் அந்தக் கம்பெனி எப்படி தொழிலாளர் செலவினங்களை குறைத்தும், அமெரிக்காவில் தனது தொழிலாளர்களை கசக்கி பிழிந்தும், சீனாவில் பிரதானமாக குறைந்த செலவில் பொருள்களை வழங்குகின்ற பெரிய வலைப்பின்னல் போன்ற வர்த்தக அமைப்புக்களை உருவாக்கி தொழிலாளர் செலவினங்களை குறைத்து வருவதாகவும் விவரிக்கப்பட்டிருக்கிறது.

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு, பணி இடங்களில் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை ஆய்வுசெய்து வெளியிட்ட கட்டுரைக்காக பொதுசேவை விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதன் நிருபர்களான டேவிட் பார்ஸ்டோ (David Barstow) மற்றும் லோவல் பேர்க்மான் (Lowell Bergman) ஆகிய இருவரும் அமெரிக்கத் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றும் போது மடிந்தது, மற்றும் காயமடைந்தது தொடர்பாக இடைவிடாது ஆய்வு செய்தும், அடிப்படை பாதுகாப்பு விதிகளை மீறி முதலாளிகள் நடந்ததையும் அம்பலப்படுத்தினர்''. இதற்காக, புலிட்சர் கமிட்டி இவர்களைத் தேர்வு செய்துள்ளது.

Top of page