World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Marxism and the political economy of Paul Sweezy

Part 1: Early influences

மார்க்சிசமும் போல் ஸ்வீசியின் அரசியல் பொருளாதாரமும்

பகுதி 1 : ஆரம்பகால ஆதிக்கம்
By Nick Beams
6 April 2004

Use this version to print | Send this link by email | Email the author

இக்கட்டுரை உலக சோசலிச வலைத் தளத்துடைய சர்வதேச ஆசிரியர் குழுவைச் சேர்ந்த நிக் பீம்ஸ், தீவிர அரசியல் பொருளாதார நிபுணர் பெளல் ஸ்வீசியின் வாழ்க்கையும், படைப்புக்கள் பற்றி எழுதியுள்ள தொடர் கட்டுரைகளில் முதலாவது ஆகும். போல் ஸ்வீசி Monthly Review உடைய நிறுவனர் ஆசிரியராக இருந்து, 2004 பெப்ரவரி 27 அன்று நியூயோர்க், லொர்ஸ்மொன்டில் காலமானார்.

பெப்ரவரி 27ம் தேதி, அமெரிக்க தீவிரவாத போக்கில் மிக முக்கியமான செல்வாக்குப் பெற்றிருந்தவர்களில் ஒருவரான 93 வயதான போல் ஸ்வீசி மறைந்துபோன தினமாகும். ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு அரசியல் போக்கின் தலைவராக ஸ்வீசி இருந்திராவிடினும்கூட, 1949ல் நிறுவியிருந்த Monthly Review ஏட்டின் மூலமும், மார்க்சிச அரசியல் பொருளாதாரம், மற்றும் அமெரிக்க முதலாளித்துவம் பற்றிய எழுத்துக்கள் மூலம், அமெரிக்காவிலும் சர்வதேசரீதியாகவும் ஒரு முக்கியத்துவ வாய்ந்த அரசியல் பங்கைக் கொண்டிருந்தார்.

ஸ்வீசியின் வாழ்க்கையும், படைப்புக்களையும் பற்றி கருத்தாய்வு செய்யும்போது, அவருடைய தத்துவார்த்த நிலைப்பாட்டிற்கும், இவர் பணிபுரிந்திருந்த கால கட்டத்தின் சமூக, அரசியல் சூழ்நிலையின் வளர்ச்சிக்கும் இடையே இருந்த சிக்கல் நிறைந்த உறவுகள் பற்றியும் தக்க கவனம் செலுத்தப்படவேண்டும். ஸ்வீசியின் சுயசரிதை மார்க்சிச பொருளாதாரம் பற்றிய அவரது பரந்த கருத்துக்களின் அடிப்படையின் நிலைப்பாட்டிலிருந்து, எனது பார்வையில், முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வுகளுடனான அவரது குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் பற்றிய நிலைப்பாட்டிலிருந்து வெறுமனே எழுதப்பட முடியாது. ஸ்வீசியின் தத்துவார்த்த நிலைப்பாடுகள் திட்டவட்டமான ஒரு அரசியல் நோக்குநிலையின் வெளிப்பாடாக இருந்தன.

முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தொழிற்பாடு பற்றிய ஆய்வதில் "மார்க்சிச பொருளாதாரம்" என்பது சாதாரணமாக கருத்தாக கொள்ளப்படுவதில்லை. உண்மையில், அத்தகைய ஆய்வு, தற்போதிருக்கும் முதலாளித்துவ தத்துவத்தைப் பற்றிய விமர்சனத்தின் மூலம்தான் வளர்க்கப்பட முடியும். அத்தகைய விமர்சனம், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்ததை நிறுவுதலை இலக்காகக் கொண்டு செயலாற்றப்படவேண்டும். இதிலிருந்து பிரிப்பது, "மார்க்சிச" அரசியல் பொருளாதாரத்தை மேலாதிக்கம் செய்யும் கருத்தியலின் ஒரு சாதாரண "இடது" வகைப்பட்டதாக்குவதாகும்.

மார்க்சிசத்தின்பால் ஸ்வீசியின் திருப்பம், குறிப்பாக அரசியல் பொருளாதாரம் பற்றிய அவர் ஆய்வு, உலகப் பொருளாதாரத்தை மட்டுமல்லாது அத்தகைய நிகழ்வு நடப்பது என்பது இயலாத காரியம் என்று கூறியிருந்த மற்ற பொருளாதார தத்துவங்களையும் இல்லாதொழித்த பெருமந்த நிலையின் (Great Depression) தாக்கத்தின் கீழ் நிகழ்ந்தது.

அரசியல் ரீதியாக அந்தப் பத்தாண்டுகள் சோவியத் யூனியனின் ஸ்ராலினிச ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டதுடன், 1933ல் ஜேர்மனியில் ஹிட்லர் அதிகாரத்தைக் கைப்பற்றியதுடன், "ஜனநாயக" அல்லது ஆளும் வர்க்கத்தின் பாசிச எதிர்ப்பு பிரிவுகள் என கூறப்பட்டவைக்கு தொழிலாள வர்க்கம் அடிபணிந்திருக்கவேண்டும் என்று கூறிய ஸ்ராலினிஸ்டுகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட மக்கள் முன்னணி போன்றவை எழுச்சியுற்ற காலகட்டமாகும்.

ஸ்வீசி, பல ஸ்ராலினிச "தத்துவவாதிகள்" மார்க்சிசத்தை ஒரு வகை வளைந்து கொடுக்காத கோட்பாடாக மாற்றிக்காட்டும் முயற்சிகளைப் பற்றி சரியான முறையில் விமர்சித்திருந்தார். 1942ல் வெளிவந்த இவருடைய நூலான முதலாளித்துவ வளர்ச்சி பற்றிய கருத்தாய்வு (The Theory of Capitalist Development) என்பது பற்றி, மாஸ்கோ தன்னுடைய நிலைமையை இன்னும் அறிவிக்காததால், இவருடைய நண்பர்கள் கருத்துக் கூறத் தயங்கியது பற்றி தான் கடுமையாக தாக்கியதை அவர் பின்னர் நினைவு கூர்ந்தார். அத்தகைய விமர்சனங்கள் அதிக செல்வாக்குக்களை கொள்ளவில்லை; ஸ்வீசியின் அரசியல் பார்வை ஸ்ராலினிச செல்வாக்கு மிகுந்திருந்த தீவிரவாத குழுவின் மக்கள் முன்னணிகளின் அரசியலால் பெரிதும் பாதிப்பிற்கு உட்பட்டது. இந்தச் சார்பு, பின்னர் அவருடைய அரசியல் பொருளாதாரம் பற்றிய கட்டுரைகளிலும், Monthy Review படைப்புக்களிலும் பிரதிபலித்தது.

இவருடைய பின்னணியின் நிலையில், Wall Street Journal குறிப்பிட்டிருந்தபடி "தீவிர பொருளாதார வல்லுநர்களின் தலைவர்" என்ற அடைமொழிக்கோ, அல்லது J.K. Galbraith கூறியிருந்தபடி, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் "மிகவும் குறிப்பிடத் தகுந்த அமெரிக்க மார்க்சிச அறிஞர்" என்ற அடைமொழிக்கு பொருத்தமாக வந்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.

ஹார்வர்ட், லண்டன் பொருளாதார பாடசாலை மற்றும் இரண்டாம் உலகப்போர்

போல் ஸ்வீசி ஏப்ரல் 10 1910 அன்று First National Bank of New York (Citibank ன் முந்தைய நிறுவனப்பெயர்) துணைத் தலைவராக இருந்த எவெரெட் பி.ஸ்வீசியின் மகனாகப் பிறந்தார். ஒரு செல்வந்த தட்டு மாணவர்களுக்காக இருந்த புதிய இங்கிலாந்தில் தங்கிப்படிக்கும் பள்ளியான Philips Exeter Academyல் படித்துப் பின்னர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றார். பட்டக் கல்வி முடித்த பின்னர் ஸ்வாசி லண்டன் பொருளாதார பாடசாலையில் (London School of Economics-LSE) படிப்பைத் தொடர்ந்தார். அங்கு லண்டன் பொருளாதார பாடசாலையின் அரசியல் துறைப் பேராசிரியரும், பிரிட்டிஷ் அறிவுஜீவுகளில் முக்கியமானவருமான ஹரால்ட் லாஸ்கியன் (Harold Laski) செல்வாக்கின்கீழ் வந்தார். ஸ்வீசி, அவருடைய சொற்களின்படியே, "ஒரு பெரும் நம்பிக்கையுடைய, ஆனால் அறியாமை நிறைந்த மார்க்சிசவாதியானார்."

பொருளாதார பெருமந்த நிலையின் அனுபவத்தாலும், ஜேர்மனியில் ஹிட்லர் வந்ததை கண்ணுற்றும் தீவிரமையப்படுத்தப்பட்டிருந்த ஸ்வீசி, தன்னுடைய ஆரம்பகால வளர்ச்சியை பற்றிக் கூறுகையில், பின்னர் மற்றொரு தாக்கத்தையும் நினைவு கூர்ந்தார். எந்த எழுத்தாளர்களின் செல்வாக்கு இவருடைய எழுத்துகளின் மீது தாக்கத்திற்கு உட்படுத்தியது என்று 1979ல் கேள்வி ஒன்றிற்கு விடையளிக்கையில், அவர் மார்க் ட்வைன், எர்நெஸ்ட் ஹெமிங்வே, எட்கர் ஸ்நோ (Mark Twain, Ernest Hemingway and Edgar Snow) ஆகியோரை குறிப்பிட்டபின் "இன்னும் ஒரு பெயர். ட்ரொட்ஸ்கியுடைய (அப்பொழுதுதான் அது மொழிபெயர்க்கப்பட்டிருந்தது) ரஷ்யப் புரட்சியின் வரலாறு... ஒரு குட்டி முதலாளித்துவ அமெரிக்க முதலாண்டு பட்டதாரி மாணவரை ஒரு மார்க்சிஸ்டாக மாற்றியதில் ஒரு பெரும் பங்கைக் கொண்டது ஆகும். (ஆனால் ட்ரொட்ஸ்கியின் மீது அவர் எழுத்தாளர் என்ற முறையில் நான் கொண்டிருந்த மதிப்பு, என்னை அரசியல் ட்ரொட்ஸ்கியாக மாற்றியது இல்லை" என மேலும் தெரிவித்தார்) [1]

ஹார்வர்டுக்கு மீண்டும் 1933ல் திரும்பியதும், அவர் தன்னைடைய முனைவர் பட்டத்திற்காக (டாக்டர் ஆராய்ச்சிப் பட்டம்), தொழிற்புரட்சிக் காலத்தின் நிலக்கரி உரிமையாளரின் உயர் சிறுகுழு என்ற ஆராய்ச்சி கட்டுரைக்கு தேவையான உழைப்பில் ஈடுபடலானார். அந்தத் துறையில் மிக அறிவுமிகுந்த இளம் அறிஞராகக் கருதப்பட்டிருந்த நிலையில், அந்தப் பெருமை நிறைந்திருந்த பல்கலைக்கழகத்தில் ஓர் உயர்ந்த இடத்தைக் கொண்டிருந்த ஆஸ்திரிய பொருளாதார வல்லுனர் ஜோாசப் ஷும்பீடருடன் (Josef Schumpeter) இவர் நெருங்கிய தனிப்பட்ட நட்புறைவைக் கொண்டிருந்தார். இருபதாம் நூற்றாண்டுப் பொருளியல் வல்லுனர்களில் ஷம்பீடர் "ஒரு தனிப்பெரும் இடம் கொண்டவர்" என்று பின்னர் ஸ்வீசி நினைவு கூறுவதுண்டு. மார்க்சிசத்தின் அறிவார்ந்த முக்கியத்துவதை நன்கு உணர்ந்திருந்து, "என்னுடைய முயற்சி, முதலாளித்துவத்தை பற்றிய விரிவான கருத்தாய்வை, மார்க்சிசத்திற்கு மாற்றாக இருக்கவேண்டும் என்ற உணர்வுடனே அமைக்கப்பட்டது." என்றார். [2]

1938ல் ஸ்வீசி ஹார்வர்ட் பொருளாதாரத் துறையில் ஆசிரியராக அமர்ந்து, ஹார்வர்ட் ஆசிரியர்கள் சங்கத்தை நிறுவினார். 1930களில், பாசிசம், போருக்கு எதிரான குழு என்ற அமைப்பிலும் இன்னும் பல புகழ்மிகுந்த முன்னணிகளிலும் உறுப்பினராக இருந்தார். இவர் ஒரு பொழுதும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்ததில்லை என்றாலும், பின்னர், அவ்வாறு எளிதில் சேர்ந்திருந்திருக்கலாம், அதாவது அதன் அரசியல் நோக்குநிலை தொடர்பாக தனக்கு முக்கிய கருத்து வேறுபாடு இருக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

ஆனால், ரஷ்யப் புரட்சியின் வரலாறு அவர்மீது கொண்டிருந்த தாக்கத்தை பற்றிய அவருடைய கருத்துக்களையே பார்க்கும்போது, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின்பால் ஸ்வீசியுடைய போக்கு எப்படி இருந்தது? ஸ்ராலினிசத்தை அம்பலப்படுத்தியது, அதன் மக்கள் முன்னணி அரசியல் ஆகியவற்றை கொண்டிருந்த ட்ரொட்ஸ்கிச அரசியல் ஆய்வு பற்றிய நேரடியான விரோதப்போக்கில்லாவிட்டாலும், ஸ்வீசி முரண்பாடுகள் அமெரிக்க தீவிர அறிவுஜீவிகள் தட்டின் பார்வையைத்தான் வெளிப்படுத்தியது. அவர்கள் ரஷ்யப் புரட்சியை ஆதரித்து, அதனால் ஊக்கம் பெற்று உந்துதல்கூட அடைந்தனர். ஆனால் அவர்கள் புரட்சியை ஒரு ரஷ்ய தேசிய நிகழ்வாக கருதியிருந்ததால், உலக சோசலிசப் புரட்சியின் முதல் துப்பாக்கி குண்டின் குரல் என்று கருதாத நிலையில், ட்ரொட்ஸ்கிச அரசியலின் முதுகெலும்பு போன்ற ஆதாரத்தையே எதிர்த்தனர்: அதாவது ட்ரொட்ஸ்கியின் சர்வதேசியக் கண்ணோட்டம், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் போன்றவற்றுடன் அவர்களுக்கு உடன்பாடு இல்லை. தாராளவாத முதலாளித்துவம் மற்றும் ரூஸ்வெல்ட் நிர்வாகத்தின்பால் சார்பு இவற்றை மீறியதாக இருந்தது.

1942ம் ஆண்டு, ஸ்வீசி ஹார்வர்டிலிருந்து நீங்கி, அமெரிக்கா 1941 டிசம்பரில் இரண்டாம் உலகப் போரில் நுழைந்ததை அடுத்து இராணுவத்தில் சேர்ந்தார். அக்காலக்கட்டத்தின் பல அறிவுஜீவிகளைப் போலவே, இவரும் OSS (Office of Stgrategic Services) எனப்பட்ட போர் மூலோபாய அலுவலகத்தை இறுதியில் சென்றடைந்தார்; 1943ல் பிரிட்டனின் பொருளாதாரக் கொள்கை பற்றி ஆராய்வதற்கு இலண்டனுக்கு அனுப்பப்பட்டார். போரின் மத்தியிலும் கூட, ரூஸ்வெல்ட் நிர்வாகம் போர் முடிந்தபின் பொருளாதார வளர்ச்சிகளுக்கான திட்டங்களை மேற்கொள்ளத் தலைப்பட்டிருந்தது; அதில் பிரிட்டிஷ் பேரரசு அதன் காப்புமுறை, பேரரசு சிறப்பு நலன்களுடன் கலைக்கப்படுவதும் அடங்கியிருந்தது.

ஸ்வீசி ஹார்வர்டை விட்டு வந்திருந்தபோது, அவருடைய 5 ஆண்டுகால ஒப்பந்தத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகள் உதவிப்பேராசிரியர் என்ற நிலை எஞ்சி இருந்தது. போரின்போது ஒருவரின் எஞ்சியபதவி காலியானபோது, இறுதித் தகுதியாளர்களில் இருவரில் இவரும் ஒருவராக இருந்தார். ஆனால் ஷம்பீடரின் அழுத்தமான ஆதரவு இருந்திருந்தபோதிலும்கூட இவருக்கு அந்தப் பதவி கிடைக்கவில்லை. 1945இல் நாடு திரும்பியதும், அவருடைய நண்பர்களிடமிருந்து "திட்டவட்டமான வரைகாலத்துடன் என்னை அவர்கள் திருப்பி அழைத்துக் கொள்ளமாட்டார்கள் என்பதை அறிந்தேன்.", "அவர்கள் இனி ஒரு மார்க்சிசவாதியை அமர்த்தும் வாய்ப்பு இல்லை என்றும் அறிந்தேன்" என்றார். [3]

இனி, ஊழிய உரிமைப்பணி கிடைக்கப் போவதில்லை என்பதால், எஞ்சியிருந்த ஒப்பந்தக்கால இரண்டாண்டு காலமும் அங்கு பணியாற்ற வேண்டியதில்லை என்ற முடிவிற்கு ஸ்வீசி வந்தார். தன்னுடைய தகப்பனார் விட்டுச் சென்றிருந்த பணத்தில் அவர் வாழ்க்கையை நடத்தமுடிந்தது.

வாலசின் தேர்தல் பிரச்சாரம்

1948ல் ஹென்றி வாலசின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்வீசி மிகுந்த ஈடுபாட்டினை கொண்டார். ரூஸ்வெல்ட்டின் துணை ஜனாதிபதியாக இருந்திருந்த வாலஸ், கூடுதலான முறையில் சோவியத் ஒன்றியத்திற்கு சலுகைகள் காட்டினார் என்று கூறப்பட்டு வர்த்தக மந்திரி பதவியிலிருந்து 1946ல் ட்ரூமன் நிர்வாகத்தால் தூக்கி எறியப்பட்டார். 1948 தேர்தல்களில் முற்போக்கு கட்சியின் (Progressive Party) தலைவர் என்ற முறையில் வாலஸ் பிரச்சாரத்தை நடத்தினார்; அவர் ரூஸ்வெல்ட்டின் கொள்கைகள் தொடரப்படும், சோவியத் ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகள், பொருளாதாரத் திட்டம், மற்றும் "முற்போக்கான முதலாளித்துவம்" அவர் அழைத்திருந்த அபிவிருத்தி போன்றவற்றையெல்லாம் செயல்படுத்துவதாக உறுதிமொழி அளித்திருந்தார்.

குளிர்யுத்த சூழ்நிலையின் ஆழமான தன்மையினால், வாலசின் பிரச்சாரம் தோல்வியில் முடிவுற்றது. ஸ்வீசி, ஒரு தீவிரவாத செய்தியாளரான லியோ ஹ்யூபெரமனுடன் (Leo Huberman) வாலசின் இயக்கம் ஒரு சோசலிச மாற்றை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். அத்தகைய நிலைப்பாட்டிலிருந்து, தற்கால நிகழ்ச்சிகள் ஆய்விற்குட்படுத்தப்பட ஒரு ஏடு தேவை என்று அவர்கள் இருவரும் முடிவு எடுத்தனர். ஆனால் ஸ்வீசி, வாலசின் பிரச்சாரத்தில் சோசலிசம் இல்லை என்ற குறை கூறியிருந்தும், அவர் தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் போராட்ட வளர்ச்சிக்காக எக்கருத்தையும் முன்வைக்கவில்லை. மாறாக, அவருடைய முன்னோக்கு இரண்டாம் உலகப் போரினதும் மக்கள் முன்னணியினதும் காலகட்டத்தை பிரதிபலிக்கும் புத்திஜீவித அரசியல் பிரிவினரை பிரநிதித்துவப்படுத்துவதாக இருந்தது. அதாவது உள்நாட்டில் ரூஸ்வெல்ட் முறையையும், சர்வதேச அளவில் சோவியத் ஒன்றியம் சார்பான போக்கைக் கொண்டும் இருக்கவேண்டும் என்று விரும்பினார்.

1949ல், அத்தகைய வெளியீட்டினை நிறுவுவதற்கு ஒரு வாய்ப்பு, அவருடைய ஹார்வர்ட் நண்பர் ஒருவரான இலக்கிய அறிஞர் எவ்.ஓ.மாதீசென் (F.O.Mathiessen) என்பவர் பெரும் சொத்துக்களுக்கு அதிபதியான வகையில் ஸ்வீசிக்குக் கிடைத்தது. மாதீசென், ஸ்வீசிக்கும், ஹுபெர்மனுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் 5,000 டொலர்கள் அவர்களுடைய திட்டமிடப்பட்டிருந்த சஞ்சிகைக்கு கொடுப்பதாக கூறியிருந்தார். மே 1949ல் Monthly Review, ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன் "சோசலிசம் எதற்காக" என்ற கட்டுரையை தாங்கி வெளிவந்தது.

ஆனால், போர் முடிந்த நிலையில், அரசியல் சூழ்நிலை முற்றிலும் மாறியதுடன் மிகப்பரந்த தாராளவாத கொள்கையுள்ள பிரிவு தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் சேர்ந்து குளிர்யுத்தத்தினதும் கம்யூனிச எதிர்ப்பு வேட்டையிலும் பங்கு பெறத் தலைப்பட்டனர். ஹுபர்மென்னும், ஸ்வீசியும் தாக்கப்பட்டனர். செனட்டர் மக்கார்தியின் (McCarthy) குழுவிற்குமுன் 1953ல் ஹுபர்மென் நிறுத்தப்பட்டார். நியூ ஹாம்ப்ஷைரின் அரசாங்கத் தலைமை வக்கீல், ஸ்வீசியை இருமுறை, "நாசவேலை நடவடிக்கைகள்" பற்றிய விசாரணைக்காக, 1954ல் விசாரணை சாட்சியத்திற்கு கட்டாய ஓலையை அனுப்பினார். ஸ்வீசிக்கு எதிரான நடவடிக்கைகளில், வாலஸ் தேர்தல் பிரச்சாரமும் அடங்கி இருந்தது; ஸ்வீசி அப்பிரச்சாரத்தின், நியூ ஹாம்ப்ஷைரின் தலைவராக இருந்திருந்தார். மற்றும் தான் கம்யூனிசத்தை நம்பினாரா அல்லது நம்பவில்லையா என்று இவர் ஆற்றிய உரையிலிருந்தும் சில பகுதிகள் விசாரணைக்கு உட்பட்டன. அமெரிக்க அரசியலமைப்பின், பேச்சுரிமை வழங்கியிருந்த முதல் திருத்தத்தின் அடிப்படையில் கேள்விகளுக்குப் பதில் கூற ஸ்வீசி மறுத்ததால், நீதிமன்ற அவமதிப்பு காரணத்திற்காக இவருக்கு சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்டபின், இவருடைய வழக்கு கூட்டாட்சியின் தலைமை நீதிமன்றப்படிகளையும் அடைந்தது; அங்கு 1957ல் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனை தள்ளுபடி செய்யப்பட்டது மக்கார்தி சகாப்தம் ஒரு முடிவிற்கு வந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இது அடையாளமாயிற்று.

தொடரும்......

Notes:
1. cited in John Bellamy Foster Memorial Service for Paul Marlor Sweezy, Monthly Review March 2004
2. Interview with Paul Sweezy conducted by Sungar Savran and E. Ahmet Tonak published in Monthly Review April 1987
3. ibid

Top of page