World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Australia votes with the US against UN condemnation of Israel's wall

இஸ்ரேல் சுவர் மீதான ஐ.நா கண்டனத் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியாவும் வாக்களித்தது

By Rick Kelly
31 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

புஷ் நிர்வாகத்திற்கு ஹோவார்ட் அரசாங்கம் தனது அசையாத ஆதரவைக் காட்டுகின்றதன் இன்னொரு எடுத்துக்காட்டலாய், இஸ்ரேல் பாதுகாப்பு வேலி என்று கூறிக்கொள்ளும் அதன் சுவரை நீக்கிவிட வேண்டுமென்று ஐ.நா பொதுச்சபையில் ஜூலை 20-ல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்காவுடன் சேர்ந்து ஆஸ்திரேலியாவும் வாக்களித்துள்ளது. பிற நாடுகளுடன் உள்ள உறவில் ஏற்படும் அதன் தாக்கம் அல்லது ஐ.நா போன்ற அமைப்புக்களில் தனக்குள்ள செல்வாக்கு ஆகியவற்றைப்பற்றி கவலைப்படாமல் வாஷிங்டனுடன் சேர்ந்து கொள்வதில் கான்பெர்ரா உறுதியுடன் உள்ளது என்பதை இந்த வாக்களிப்பு கோடிட்டுக்காட்டுகின்றது.

தீர்மானத்தை எதிர்ப்பதில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்ட பிறநாடுகள் மூன்று குட்டி பசுபிக் தீவு நாடுகள் - மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா, மற்றும் Palau- இவை அனைத்தும் அமெரிக்காவின் நிதியுதவியை நம்பியுள்ளவை ஆகும். தீவிரமாக சியோனிச நாட்டை ஆதரிக்கின்ற பிரிட்டன் மற்றும் இதர ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் உள்பட 150- நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

அந்த தடுப்புச்சுவர்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என்று சர்வதேச நீதிமன்றம் (ICJ) அளித்துள்ள தீர்ப்பை ஏற்று இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஐ.நா தீர்மானம் கேட்டுக்கொள்கிறது. ICJ தீர்ப்பின் கீழ் எல்லா உறுப்புநாடுகளும் தங்களது கடமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ஐ.நா வேண்டுகோள் விடுத்திருக்கிறது. ''கிழக்கு ஜெருசலத்தை சுற்றிலும் கிழக்கு ஜெருசலத்திலும் உட்பட, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பாலஸ்தீன எல்லையில் சுவர் கட்டியது தொடர்பாக எழுந்துள்ள சட்டவிரோதமான நிலையை அங்கீகரிக்கக் கூடாது என்பது'' உறுப்பு நாடுகளின் கடமை என்பதும் இதில் உள்ளடங்கும்.

பிரதமர் ஜோன் ஹோவார்ட் தனது அரசாங்கத்தின் வாக்களிப்பு பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கைசார்ந்த நிலைப்பாடு என்று முன்வைக்க முயற்சித்தார். ''தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்வதற்கு இஸ்ரேலுக்கு உரிமையுண்டு என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் சிறுபான்மையினராக இருக்கலாம், ஆனால் நாங்கள் செய்வதுதான் சரி, தன்னை தற்காத்துக்கொள்வதற்கு இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது'' என்று அறிவித்தார்.

உண்மையில், ஷரோன் அரசாங்கத்தின் "பாதுகாப்பு வேலி" இஸ்ரேலிய மக்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டதல்ல, மாறாக "அகண்ட இஸ்ரேலின்" ஒரு பகுதியாக மேற்குக்கரையின் பெரும் பகுதிகளையும், கிழக்கு ஜெருசலத்தையும், இஸ்ரேலுடன் இணைத்துக்கொள்ளும் தனது அரசாங்கத்தின் இலக்கை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காகத்தான். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக தினசரி நடத்தப்பட்டு வருகின்ற ஒடுக்குமுறை ஆட்சியுடன் இந்த தடுப்புச்சுவர் மேலும் எதிர்ப்பை கிளப்பிவிடவே செய்யும் மற்றும் இஸ்ரேலுக்குள் பாலஸ்தீன போராளிகளால் நடத்தப்படும் தாக்குதல்களை உசுப்பிவிடவே செய்யும்.

720 கிலோமீட்டர் தடுப்புச்சுவர் மேற்குக்கரையின் பல பகுதிகளில் பாலஸ்தீன எல்லைக்குள் பல கி.மீட்டர்கள் ஊடுருவிச்சென்று ஏற்கனவே பாலஸ்தீன மக்களது வீடுகளையும், நிலத்தையும் நாசப்படுத்திவிட்டது. இந்தச் சுவர் சமுதாயங்களையும் குடும்பங்களையும் பிரித்துவிட்டது, மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் ஏற்கனவே நீடித்துவரும் சாதாரண பாலஸ்தீன மக்களது துன்பத்தையும், இழிவையும் இந்தச்சுவர் தீவிரப்படுத்தியுள்ளது.

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் ஒடுக்குமுறை தாக்குதல் தொடர்பாக குறிப்பாக மத்திய கிழக்கில் எழுந்துள்ள ஆத்திர உணர்வை தணிக்கின்ற ஒரு முயற்சியாகத்தான் சுவருக்கு எதிராக ICJ அளித்துள்ள தீர்ப்பை ஐ.நா ஆதரித்துள்ளது. அந்த கட்டுப்படுத்தாத தீர்மானம் அரச பயங்கரவாத நடவடிக்கைகளை பாலஸ்தீன மக்களது எதிர்ப்புக்கிளர்ச்சியோடு ஒப்பிடுகிற ஒரு கோழைத்தனமான பத்திரமாகும். "வன்முறைத் தாக்குதல்களுக்கு திட்டமிட்டு செயற்படுகின்ற குழுக்களையும், தனி மனிதர்களையும் கட்டுப்படுத்துவதற்கு அவர்களது முயற்சிகளை சீர்குலைப்பதற்கு, மட்டுப்படுத்துவதற்கு மற்றும் அவர்களைக் கைது செய்வதற்கான அடிப்படையில் தெளிவாகத் தெரிகின்ற முயற்சிகளை எடுக்குமாறு" பாலஸ்தீனியர்களைக் கோரும் கோரிக்கையை அது உள்ளடக்கியுள்ளது.

அமெரிக்க ஆதரவு இஸ்ரேல் ஆட்சிக்கு ஹோவார்டின் பகிரங்கமான பாதுகாப்பு ஆஸ்திரேலியா தனது சொந்த ஏகாதிபத்திய நலன்களை மேற்கொள்வதற்கு அமெரிக்காவின் ஆதரவு தேவைப்படுகிறது என்ற கணக்கை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. கான்பெர்ரா, புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான போரை" எந்தவிதமான ஊசலாட்டமும் இல்லாமல் ஏற்றுக்கொண்டதற்கு பின்னால், ஈராக் சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்கு ஆஸ்திரேலிய துருப்புக்களை அது அனுப்பபியதன் பின்னால், அந்த நாட்டை அமெரிக்கா ஆக்கிரமிப்பதையும் சூறையாடுவதையும் அது உறுதியாய் பாதுகாத்தததன் பின்னால் அதே நோக்கம்தான் இருந்தது.

வாஷிங்டன் சார்பில் கடைசியாக அரசியல் களத்தில் குதித்துள்ள ஹோவார்டும் வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் டெளனரும் ஸ்பெயின் மற்றும் பிலிப்பினோ அரசாங்கங்கள், அவர்களது மக்கள் தெரிவித்த போர் எதிர்ப்பு உணர்வுகளுக்கு சலுகையாக பயங்கரவாதிகளுக்கு விட்டுக்கொடுத்து செல்வதாகவும் கண்டனம் செய்தார்கள். இந்த அரசியல் சேவைகளுக்கு கைமாறாக ஆஸ்திரேலியாவின் சொந்த புதிய காலனியாதிக்க தலையீடுகளில், குறிப்பாக பசிபிக்கில், கிழக்கு தீமூரில், சொலமன் தீவுகளில் மற்றும் பாப்பா நியூகினியில் அமெரிக்காவின் ஆதரவை உறுதிசெய்து கொள்ள முடியுமென்றும் ஹோவார்ட் நம்புகிறார்.

இஸ்ரேல் தொடர்பாக ஐ.நா வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் வரலாற்றைப் பார்த்தால் முந்தைய வெளியுறவு கொள்கையிலிருந்து ஹோவார்ட் விலகிச் சென்றிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இஸ்ரேலின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான கண்டன தீர்மானங்கள் ஐ.நா பொதுச்சபையில் வாக்கெடுப்பிற்கு வந்த நேரத்தில் எல்லாம் கான்பெர்ரா அந்தத் தீர்மானங்களை ஆதரித்தது அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 1997-ல் ஐ.நா வில் நிரந்தர துணைத்தூதராக ஆஸ்திரேலியாவின் சார்பில் பணியாற்றிய ஜோன் கிறிஸ்டன் கூறியதைப்போல், ''பொதுவாக பேசுகின்றபோது ஆஸ்திரேலியா தனிமைப்படலை எதிர்கொள்ள தயக்கம் காட்டுகிறது. ஒரு குறிப்பிட்ட கொள்கை செயல்பாட்டின் தாக்கங்களை நாம் ஆராயும்போது ஓர் அம்சம் எப்போதுமே நினைவில் கொள்ளத்தக்கது, 'எந்தக் கூட்டணியில் நாம் இருக்கிறோம்? மற்றும் இரண்டாவதாக 'எந்தளவிற்கு நாம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம்?' ."

இப்போது கான்பெர்ரா, வாஷிங்டன் தனிமைப்பட்டு நிற்கும்வரை தானும் அவ்வாறே நிற்க தயாராக இருக்கிறது. மார்ச் மாதம் 51 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா மனித உரிமைகள் கமிஷனில், சக்கர நாற்காலியில் நடமாடும் நிலையில் இருந்த ஹமாஸ் தலைவர் ஷேக் அஹமது யாசினை அரசியல் அடிப்படையில் கொலை செய்ததைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, அதை எதிர்த்து வாக்களித்த இரண்டுநாடுகள், ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும்தான்.

வாஷிங்டனை பின்பற்றி, ஹோவார்ட் அரசாங்கத்தின் நிலைப்பாடும் சர்வதேச சட்டம் ஐ.நா மற்றும் சர்வதேச நீதிமன்றம் போன்ற அமைப்புக்களை பெருமளவில் துச்சமாக மதிக்கின்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது. கான்பெர்ராவின் எதிர்ப்பை நியாயப்படுத்திய டெளனர் ''சர்வதேச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கு முகாந்திரமில்லை. அந்த நீதிமன்றம் ஆலோசனையாக தனது கருத்தைத்தான் கூற முடியும். ஒவ்வொரு சர்வதேச அரசியல் சிக்கல் பிரச்சனையிலும் சர்வதேச நீதிமன்றத்தை நாடிச்செல்வது மற்றும் ஆலோசனைக் கருத்தைப் பெறுவது அந்த நீதிமன்றத்தின் செல்வாக்கையே சீர்குலைத்துவிடும் என்று நான் நினைக்கிறேன்'' என்று குறிப்பிட்டார்.

ICJ வின் கண்ணியம் தொடர்பாக டெளனரின் கவலை வெறும் பாசாங்கேதவிர வேறல்ல. அவரது உண்மையான நோக்கம் அந்த நீதிமன்றத்தின் அதிகாரத்தை இழிவுபடுத்துவதுதான், குறிப்பாக ஆஸ்திரேலியாவுடன் தனக்குள்ள கடல் எல்லைத் தகராறை கிழக்கு கிழக்கு தீமூர் அரசாங்கம் ICJ வின் தீர்ப்பிற்கு கொண்டு செல்லப்போவதாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறபொழுதுதான் அவ்வாறு கூறுகிறார்.. இரண்டு நாடுகளுக்கும் இடையிலுள்ள கடற்பகுதியில் கடலுக்கடியில் லாபம் தரும் எரிவாயு மற்றும் எண்ணெய் கிடைப்பதை உறுதி செய்வது தொடர்பான உடன்படிக்கையில் கிழக்கு தீமூர் கையெழுதிட மறுத்துவிட்டது.

உத்தேச உடன்படிக்கையின்படி ஆஸ்திரேலியாவிற்கும், இந்தோனேஷியாவின் சுகார்தோ சர்வாதிகாரத்திற்குமிடையில் அந்த உடன்பாடு உருவாக்கப்பட்டது. அதன்படி Greater Sun Rise குத்தகைதாரர் வழங்கும் தொகையிலிருந்து கிழக்கு தீமூருக்கு குத்தகைதாரர் வழங்கும் வருமானம் 20-சதவீதம்தான் கிடைக்கும். ஐ.நா கடல் எல்லைகள் சம்மந்தமான சட்டப்படி ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டால் கிழக்கு தீமூருக்கு குத்தகைதாரர் தரும் வருமானம் 80- சதவீதம் கிடைக்கும்.

இந்தப்பிரச்சனையில் ICJ எந்த தீர்ப்பையும் தந்துவிடும் முன்னரே, இஸ்ரேல் தொடர்பாக ஐ.நா வில் எந்தத்தீர்மானமும் நிறைவேற்றப் படக்கூடாதென்ற கான்பெர்ரா நிலைப்பாட்டுடன் டெளனர் அதைப் பகிரங்கமாக இணைத்தார். ஜூலை 21 ல் டெளனர் கருத்துத்தெரிவிக்கும்போது, ''இந்த தகராறில் மூன்றாம் தரப்பிற்கு எந்த தேவையுமில்லை" என்றார். "மற்றொரு விஷயம் என்னவெனில் -ஆரம்பத்தில் ஒரு கேள்வியில், இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான பாதுகாப்பு வேலைகள் மற்றும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பாக உங்களிடம் கூறினேன் - சர்வதேச நீதிமன்றம் அரசியலாக்கப்படுவதை பார்க்க நான் விரும்பவில்லை. சர்வதேச நீதிமன்றத்தை சிலர் அரசியலாக்க முயன்று கொண்டிருப்பது எனக்கு கவலையளிக்கிறது. அது ஒரு நீதிமன்றம். அதன் அதிகாரவரம்பை நாடுகள் ஏற்றுக்கொள்ளாதபோது, அந்த விவகாரங்கள் குறித்து இதர வழிகளில்தான் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

ஐ.நா தீர்மானத்தின் மீது கான்பெர்ரா வாக்களிக்காமை ஆஸ்திரேலிய ஊடகங்களிலும் எதிர்க்கட்சிகளிடையிலும் மெளனமான கவலை நிலவுவது, ஹோவார்ட் முழுமையாக புஷ் நிர்வாகத்திற்கு கீழ்ப்படிந்து நடப்பதில் சம்மந்தப்பட்டுள்ள ஆபத்துக்கள் குறித்து ஆளும் வட்டாரங்களில் அச்சம் நிலவுவதை எதிரொலிக்கின்றது. வாஷிங்டனின் கண்மண்தெரியாத இராணுவவாதம் மற்றும் தன்னிச்சைப் போக்கு, குறிப்பாக ஈராக்கில் ஒரு பேரழிவை உண்டாக்கியிருக்கிறது, அது கான்பெர்ராவை சூழ்ந்து கொள்ளவும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.

ஆஸ்திரேலியா மிகக் கவனமாக பலரும் கலந்துகொள்ளும் அணுகுமுறையை மேற்கொண்டாக வேண்டும் என்ற அக்கறைகளில் நின்று, தொழிற்கட்சி வெளிவிவகாரங்கள் தொடர்பான பேச்சாளர் Kevin Rudd, ABC வானொலிக்கு அளித்த பேட்டியில் அறிவித்தார்: ''இந்த குறிப்பிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது ஆஸ்திரேலியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டிருக்க வேண்டியதுதான் மிகவும் சரியான நடவடிக்கையாக இருந்திருக்கும்.''

ஜனநாயகக் கட்சி செனட்டர் Natasha Stottdespoja இந்த வாக்கெடுப்பு துரதிருஷ்டவசமானது என்று கூறினார். ''பல நாடுகள் ஆஸ்திரேலியாவின் இந்த நிலைப்பாட்டை துச்சமாக மதிக்காவிட்டாலும் கவலையோடு நோக்குகின்றன'' என்று கூறினார். பசுமைக் கட்சி செனட்டர் Kerry-Nettle இந்த முடிவு சங்கடமளிப்பது என்று வர்ணித்தார்: "சர்வதேச சமுதாயத்தில் நமக்குள்ள செல்வாக்கிற்கு இது எந்தவகையிலும் உதவுவதாக இல்லை."

Sydney Morning Herald-TM இஸ்ரேல் தொடர்பான விந்தை வாக்களிப்பு" என்ற தலைப்பில் எழுதியுள்ள ஒரு சிறிய தலையங்கத்தில் இதேபோன்ற குறிப்பைத்தான் தந்திருக்கிறது: ''அமெரிக்காவுடன் திட்டவட்டமாக சேர்ந்து கொண்டு இஸ்ரேலை ஆதரிக்க கான்பெர்ரா முடிவு செய்திருக்கிறது. அமெரிக்கா இஸ்ரேலின் முக்கியமான நட்புநாடு மற்றும் இராணுவ மற்றும் பொருளாதார உதவியளிப்பது, எனவே ஆஸ்திரேலியா அந்த நாட்டை ஆதரித்திருப்பது ஆஸ்திரேலியாவின் வெளியுறவுக் கொள்கை வாஷிங்டனில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற கருத்தை வளர்க்கவே உதவும்''.

இஸ்ரேல் ஆட்சியின் குற்றவியல் மற்றும் ஆத்திரமூட்டும் கொள்கைகளுக்கு இந்த வட்டாரங்களில் எவரும், ஒரு கொள்கை அடிப்படையில் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை.

Top of page