World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Two opponents of the US occupation assassinated in Iraq

ஈராக்கில் இரு அமெரிக்க ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் படுகொலை

By James Cogan
26 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கில் ஜனவரி 30-ல் நடைபெறவிருக்கும் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்ற 3,000 சுன்னி முஸ்லீம் மத குருமார்களை கொண்ட முஸ்லீம் அறிஞர்கள் சங்க (AMS) இரண்டு முன்னணி உறுப்பினர்கள் இந்த வாரம் கொலை செய்யப்பட்டனர்.

Mosul நகரத்து முன்னணி சுன்னி மத குருமார்களில் ஒருவரான Sheik Faidh Mohammed Amin al-Faidi, நவம்பர் 22-ல் அவரது வீட்டிலிருந்து புறப்பட்டபோது துப்பாக்கி ஏந்திய முகமூடி மனிதர்கள் வாகனத்தில் வந்து சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அண்மை வாரங்களில் Umm al-Qura மசூதியில் Fallujah-வில் அமெரிக்காவின் போர்க் குற்றங்களையும், திட்டமிடப்பட்டுள்ள தேர்தலின் ஜனநாயக விரோதத் தன்மையையும், மிக ஆவேசமாக கண்டித்து உரையாற்றி வந்த Mohammed Bashar al-Faidi-ன் சகோதரர் Faidi என்று பாக்தாத்திலுள்ள AMS தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

அடுத்த நாள் பாக்தாத்திற்கு வடக்கிலுள்ள Muqdadiyah நகரத்தில் அதிகாலை தொழுகையை முடித்துக்கொண்டு மசூதியிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த மற்றொரு மத போதகர், Sheik Ghalib Ali Latif al-Zuheiri-யை முகமூடி அணிந்த ஒரு துப்பாக்கிக் குழு சுட்டுக் கொன்றது.

இந்தக் கொலைகளை செய்தது யார் என்று தெரியவில்லை. என்றாலும், சந்தேகம் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்புப் படைகள் மீதுதான் ஏற்பட்டாக வேண்டும். அவர்களிடம் தான் அதற்குத் தேவையான ஊழியர்களும், அதற்கான நோக்கமும் உள்ளது----மோசடி தேர்தல்களுக்கான எதிர்ப்பை அடக்க வேண்டும் என்பதாகும்.

ஈராக்கின் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை வகிப்பதற்காக அமெரிக்கா நியமித்துள்ள இயத் அல்லாவி, அமெரிக்க அதிகாரிகளாலேயே கூட ஒரு குண்டர் என்று வர்ணிக்கப்பட்டவர். அவர் அரசியல் எதிரிகளை கொல்வதற்கு கட்டளையிடுகின்ற வல்லமை படைத்தவர் என்பதை சந்தேகிக்கின்ற வகையில் அவரது வரலாற்றில் எந்த அம்சமும் இல்லை.

அல்லாவி சதாம் ஹூசைன் பாத்திஸ்ட் சர்வாதிகாரத்தின் ஓர் உளவாளியாக தனது அரசியல் வாழ்வை தொடக்கினார், பிரிட்டனிலும், ஐரோப்பாவிலும் வாழ்ந்து வந்த ஈராக்கியர்களை உளவு பார்ப்பதிலும் மிரட்டுவதிலும் ஈடுபட்டிருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டவர். 1975-ல் அவர் ஈராக் ஆட்சியிலிருந்து பிரிந்து தனது விசுவாசத்தை M16 பிரிட்டிஷ் உளவுப் படைக்கு மாற்றிக்கொண்டார். 1980-களில், CIA-வுடன் உறவு கொண்டார், 1990 டிசம்பரில் ஈராக் மீது முதலாவது போர் தொடுக்கப்படுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்ட நேரத்தில் அமெரிக்க நிதியுதவியோடு ஈராக் தேசிய உடன்பாட்டுக் கட்சி (INA) இன் தலைவராக ஆனார்.

1992-க்கும் 1995-க்கும் இடைப்பட்ட காலத்தில் அல்லாவியும் INA-வும் ஈராக்கில் பயங்கரவாத குண்டு வெடிப்புக்களில் ஈடுபட்டதாக CIA முன்னாள் ஏஜென்டுகள் குற்றம் சாட்டியதை நியூயோர்க் டைம்ஸ் பிரசுரித்திருந்தது. ஹூசைன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் ஒரு அமெரிக்க ஆதரவு போலீஸ் அரசை அமைப்பதற்கு அடித்தளமாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு 1990களின் இறுதியில் அவரது கட்சி அதிருப்தி கொண்ட ஈராக் தளபதிகளோடும், பாத்திஸ்ட் தலைவர்களோடும் முடிந்த வரை மிகப் பெருமளவிற்கு உறவுகளை நிலைநாட்டிக்கொள்ள முயன்றது. மற்றொரு CIA முன்னணி நபரான அஹமத் சலாபியோடு இணைந்து ஈராக்கிலிருந்து வெளியேறிய நபர்களிடமிருந்து ஈராக்கிடம் பேரழிவுகரமான ஆயுதங்கள் பொதிந்துள்ளன என்ற தவறான கூற்றுக்களுக்கு ஆதாரங்களைத் தயாரித்து அவற்றை செம்மையாக்கம் செய்வதில் அல்லாவி ஒரு முக்கிய பங்களிப்பு செய்தார்.

சென்ற ஆண்டு அமெரிக்க படையெடுப்பை தொடர்ந்து, அமெரிக்க ஆதரவோடு அல்லாவி ஒரு ஈராக்கி புலனாய்வு அமைப்பைத் திரும்ப உருவாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். புதிய அமெரிக்கக் கட்டுப்பாட்டு ஆட்சியில் வெறுப்பிற்கு இலக்கான ஈராக்கிய இரகசியப் போலீஸைச் சேர்ந்த கணிசமான அளவிற்கு நபர்களை நியமித்தார்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் இடைக்கால பிரதமராக நியமிக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர், ஒரு முன்னணி ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர் Paul McGeough, நேரில் கண்டவர்கள் அல்லாவி பற்றிக் கூறிய குற்றச்சாட்டுக்களான தானே பாக்தாத் போலீஸ் நிலையம் ஒன்றில் 6 கைதிகளை சுட்டுக் கொன்றார் என்ற விவரத்தை வெளியிட்டிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. ஆகஸ்ட் மாதம் ஒரு பாக்தாத் சிறையில் அல்லாவியின் புதிய உள்துறை போலீஸார் கைதிகளை சித்திரவதை செய்வதை அமெரிக்க தேசிய காவலர்கள் கண்டுபிடித்து தடுத்து நிறுத்த முயன்றனர், ஆனால் அமெரிக்க தளபதிகள் அதில் தலையிட வேண்டாமென்று கட்டளையிட்டுவிட்டனர் பாதிக்கப்பட்டவர்களை அவர்களை கைது செய்தவர்கள் வசமே விட்டுவிடுமாறு கூறிவிட்டனர்.

அல்லாவி ஆட்சிக்கு ஆலோசகர்களாகவும், பயிற்சி தருபவர்களாகவும், நிதியளிப்பவர்களாகவும், ஈராக்கிலுள்ள 3,000 ஊழியர்களைக் கொண்ட அமெரிக்க தூதரகம் செயல்பட்டு வருகிறது----உலகிலேயே மிக பெரிய தூதரகமாகும். இவர்களில் மிகப்பெரும்பாலோர் CIA மற்றும் சிறப்புப் படை அதிகாரிகள் என்பதில் சந்தேகமில்லை அவர்களது சிறப்புத் தகுதியே எதிர் கிளர்ச்சி நடவடிக்கைகள் எடுப்பது தான்.

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதர் ஜோன் நெகரோபொன்ட் நீண்ட நெடுங்காலமாக கொலைக் குழுக்களோடும், இரகசிய நடவடிக்கைகளிலும் பழக்கப்பட்டவர். நெகரோபொன்ட் ஈராக் தூதராக நியமிக்கப்பட்ட நேரத்திலேயே WSWS, ``ஈராக் மக்களுக்கெதிராக ஒரு இடைவிடாத கறைபடிந்த ஒடுக்கு முறைப் போரை`` புஷ் நிர்வாகம் மேற்கொள்ளும் என்பதற்கு ஒரு சமிக்கைதான் என்று எச்சரிக்கை விடுத்தது (பார்க்க: `` நெகரோபொன்ட் நியமனம்: ஈராக்கிய மக்களுக்கு ஓர் எச்சரிக்கை``).

1964 முதல் 1973 வரை, நெகரோபொன்ட், வியட்நாமில் அமெரிக்கத் தூதரகத்திலும், தேசிய பாதுகாப்பு சபையிலும் ஒரு மூத்த அமெரிக்க அதிகாரியாக பணியாற்றினார், அந்த காலகட்டம், "Operation Phoenix" நடவடிக்கையை அமெரிக்க சிறப்புப் படைகள் மேற்கொண்ட சமயமாகும்--- அப்போது தேசிய விடுதலை போராட்டத்தை ஆதரிப்பதாக சந்தேகிக்கப்பட்ட 20,000 வியட்நாம் மக்கள் அமெரிக்க சிறப்புப் படைகளால் கொல்லப்பட்டனர். 1981 முதல் 1985 வரை அவர் Honduras-ல் அமெரிக்க தூதராக பணியாற்றினார், அந்த நேரத்தில் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரத்தின் எதிரிகள் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர், ``மறைந்துவிட்டனர்`` அல்லது CIA பயிற்சி பெற்ற மற்றும் நிதியுதவி பெற்ற வலதுசாரி கொலை குழுக்கள் கொடூரமாக சித்திரவதை செய்தன.

2001-ல், நெகரோபொன்ட் ஐ.நா.வில் தூதராக நியமிக்கப்பட்ட பின்னர் வியட்நாம் மற்றும் Honduras போன்ற நாடுகளில் நடைபெற்ற கொடுமைகளை பகிரங்கமாக நியாயப்படுத்தினார். அமெரிக்கா ஆதரித்த ஆட்சிகள், ``சர்வாதிகாரிகளாக" அமெரிக்கர்களின் விருப்பத்திற்கு மாறான கசப்பானவர்களாக இருந்திருக்கக்கூடும்`` ஆனால் அங்கெல்லாம் ''கொந்தளிப்பு'' நிலவியதால் ஜனநாயகம் சாத்தியமில்லாது போயிற்று என்று அறிவித்தார்.

வியட்நாமிலும், மத்திய அமெரிக்காவிலும் பரிசோதிக்கப்பட்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகள் இப்போது ஈராக்கில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நவம்பர் தொடக்கத்தில் அல்லாவி ஈராக்கின் 18 மாகாணங்களில் 15-ல் 60 நாட்கள் இராணுவச் சட்டத்தை திணித்தார். இது அமெரிக்க இராணுவத்திற்கு ஊடக முன் தணிக்கைகளை கொண்டு வருவதற்கும், ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும், விசாரணையின்றி, எதிரிகளை கைது செய்வதற்கும், இதற்கெல்லாம் மேலாக ஈராக் மக்கள் எதிர்ப்பு இயக்க மையங்களில் ஒன்றான பல்லூஜா நகரத்தின் மீது இரத்த வெறி தாக்குதல்களை கட்டவிழ்த்துவிடுவதற்கு ஒரு சட்டபூர்வமான மூலாம் பூசுவதற்கு உதவியது.

பல்லூஜாவில் 2000திற்கு மேற்பட்ட ஈராக்கிய போராளிகளை கொன்றுவிட்டதாகவும், 1600க்கு மேற்பட்டவர்களை கைது செய்திருப்பதாகவும் அமெரிக்க இராணுவம் கூறுகிறது. அந்த நகரம் சிதைக்கப்பட்டுவிட்டது, அந்த நகரத்து 250,000 மக்கள் தங்களது சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுவிட்டனர். ஈராக் முழுவதிலும் கிளர்ச்சிக்காரர்கள் என்று கூறப்பட்டவர்களை மிகப்பெருமளவில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தப் படுகொலை நடத்தப்பட்டது. பாக்தாத்திற்கு தெற்கிலுள்ள நகரங்களில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர், கடந்த மூன்று மாதங்களில் சாலை தடைகளாலும், வீட்டு சோதனைகளாலும் 600-க்கும் மேலானோர் பிடிக்கப்பட்டுள்ளனர். இந்த வாரத்தில் கிர்க்குக்கில் வீட்டிற்கு வீடு சோதனையிட்டதில் 38 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். மோசூலிலும் பாக்தாத்திலும் டசின் கணக்காணோர் பிடிக்கப்பட்டுள்ளனர்.

ஈராக்கில் தற்போது அமெரிக்கக் கட்டுப்பாட்டிலுள்ள அல்லது இடைக்கால அரசாங்கம் நடத்துகின்ற சிறைகளில் எத்தனை பேர் அடைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற அண்மைக்கால புள்ளி விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. என்றாலும், 2003 மார்ச்சில் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பு தொடங்கிய பின்னர் ஏதாவதொரு கட்டத்தில் அல்லது கட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

அந்த இரண்டு படுகொலைகளும் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் சென்ற வாரக் கடைசியில் அல்லாவி மறைமுகமாக AMS-ஐ அச்சுறுத்தினார், ''வன்முறைகளுக்கு அழைப்பு விடுப்பவர்கள் பலாத்காரத்தால் ஒடுக்கப்படுவார்கள். வெறுப்பை வளர்ப்பதற்கு தங்களை அனுமதித்து கொள்பவர்கள் மீது நீதித்றையும் நடவடிக்கை எடுக்கும். தங்களை முஸ்லீம் அறிஞர்கள் சங்கம் என்று கூறிக்கொள்பவர்கள் இஸ்லாம் அன்பு, மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட ஒரு மதம் என்ற தரத்திற்கு தங்களை உயர்த்திக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்`` என்று அவர் அறிவித்தார்.

இந்த இரண்டு கொலைகளும் நடப்பதற்கு முன்னர், சுன்னி மசூதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் குறைந்தபட்சம் 7 AMS தலைவர்களும், டசின் கணக்கில் அவர்களது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர். பாக்தாத்திலுள்ள தலை சிறந்த முக்கியத்துவம் வாய்ந்த சுன்னி கல்லறையிலுள்ள அபு ஹணீபா மசூதியில் நவம்பர் 19-ல் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், 40-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். பல்லூஜா தாக்குதலை கண்டித்து இடைக்கால அரசாங்கத்திலிருந்து இராஜினாமா செய்துவிட்ட சுன்னியை அடித்தளமாகக் கொண்ட ஈராக் இஸ்லாமிய கட்சித் தலைவர் Naseer Ayaef-ஐ நவம்பர் 16-ல் அமெரிக்கத் துருப்புக்கள் கைது செய்தன.

மொக்தாதா அல்-சதர் தலைமையில் இயங்கிவரும் ஷியைட் இயக்கத்தின் முன்னணி உறுப்பினர்கள் சென்ற வாரம் நஜாப்பிலும், கர்பலாவிலும் கைது செய்யப்பட்டனர். சதரின் பிரதான பிரதிநிதியான Ali Smeism இந்த வாரம் அந்த கைதுகளைக் கண்டித்தார், மற்றும் மேலும் 160 சதர் ஆதரவாளர்கள் சிறையில் வைக்கப்பட்டிருப்பதையும் கண்டித்தார். அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்ற சியைட் கட்சிகளான இஸ்லாமிய புரட்சி ஈராக் சுப்ரீம் கவுன்சில் (SCIRI) மற்றும் தாவாக்கட்சி இரண்டும்--- அரசாங்கத்தில் தங்களது அந்தஸ்த்தை பயன்படுத்தி '' அமைப்பை பழிவாங்கி வருவதாகவும் அவர் கண்டித்தார்.

ஏப்ரலிலும், மீண்டும் ஆகஸ்டிலும் சதரை பின்பற்றுபவர்கள் பல்லாயிரக் கணக்கில் ஆயுதங்கள் ஏந்தி தென்பகுதி முழுவதிலும் அமெரிக்க துருப்புக்களோடு போரிட்டனர். கடந்த மூன்று மாதங்களாக நிம்மதியற்றதொரு யுத்த நிறுத்தம் அமலில் உள்ளது, ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்த்து வருகின்ற சதர் மீது பிடிவாரண்டு இன்னும் இருக்கத்தான் செய்கிறது. தற்போது அவர் தேர்தல்களை புறக்கணிக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளார். ``ஒரு மூன்றாவது போருக்கு`` சதரின் இயக்கத்தை இழுத்துவிட்டு நசுக்குவதற்கு இடைக்கால அரசாங்கம் முயன்றுவருவதாக எச்சரித்த Smeisim அண்மையில் நடத்தப்பட்ட கைதுகள் தொடர்பாக தங்களது ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளுமாறு சதரின் ஆதரவாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

ஜனவரியில் நடைபெறவிருக்கும் தேர்தல் ஒரு அமெரிக்க ஆதரவு ஆட்சி வருவதற்கு உறுதி செய்து தருவதாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அத்தகைய அமெரிக்க ஆதரவு ஆட்சி அமெரிக்க பெருநிறுவன நலன்கள் நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடுவதற்கு, குறிப்பாக பரவலான எண்ணெய் இருப்பைக் கைப்பற்றுவதற்கு மற்றும் அமெரிக்க இராணுவம் முடிவில்லாமல் நீடித்துக்கொண்டிருப்பதற்கு அனுமதியளிக்கும்.

உக்ரைனிலும் இதர பகுதிகளிலும் நடைபெறுகின்ற தேர்தல்களை புஷ் நிர்வாகம் கண்டித்து வருவதையே எள்ளி நகையாடுகின்ற வகையில் ஈராக் வாக்குப்பதிவிற்கு முன்னர், அல்லாவி ஆட்சியும் அமெரிக்க இராணுவமும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அமைந்துள்ளன. மிகப்பெரும்பாலான ஈராக் மக்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பின் மீது ஆழ்ந்த விரோதபோக்குக் கொண்டிருக்கின்றனர் மற்றும் அதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்றும் விரும்புகின்றனர். அப்படியிருந்தும், இந்த உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற எவரும், அமெரிக்க இராணுவம் மற்றும் அவர்களது உள்நாட்டு உடந்தையாளர்களின் கரங்களில் மடிகின்ற அல்லது சிறையில் அடைக்கப்படுகின்ற ஆபத்தில் உள்ளனர்.

Top of page