World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

LTTE leader's speech points to danger of renewed war in Sri Lanka

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் உரை இலங்கையில் மீண்டும் யுத்தத்தை தோற்றுவிக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டுகிறது

By K. Ratnayake
3 December 2004

Use this version to print | Send this link by email | Email the author

நவம்பர் 27 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய வருடாந்த "மாவீரர் தின" உரை, இலங்கை உள்நாட்டு யுத்தத்தை நோக்கி நழுவிச் சென்றுகொண்டிருப்பதற்கான இன்னுமொறு அறிகுறியாகும். பிரபாகரனின் கருத்துக்கள் குறிப்பிடத்தக்கதாக இருப்பது, பெருமளவில் அவர்களது போர்க்குணத்திற்காக அன்றி, மாறாக அவர்களது நம்பிக்கையிழந்த நிலைமையினாலும் மற்றும் இடைநிறுத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்காக "சர்வதேச சமூகத்திற்கான" அவர்களது வலுவற்ற வேண்டுகோள்களினாலுமேயாகும்.

இந்த மாவீரர் தின நிகழ்வானது 2002 பெப்பிரவரியில், விடுதலைப் புலிகள் ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கத்துடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டதிலிருந்து மூன்றாவது முறையாக நடைபெறுகின்றது. எவ்வாறெனினும், பிரபாகரன் தனது உரையில் குறிப்பிட்டது போல், இந்த பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளில் விடுதலைப் புலிகளுக்கு எந்த பயனும் கிட்டவில்லை. விடுதலைப் புலிகள் தீவின் வடக்கு கிழக்கில் ஒரு தமிழீழ தனி அரசுக்கான தனது கோரிக்கையை உத்தியோகபூர்வமாக கைவிட்ட போதிலும், அதற்குப் பதிலாக இறுதி ஏற்பாடாக வாக்குறுதியளிக்கப்பட்ட கொழும்புடனான அதிகாரப் பகிர்வு பற்றிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கக் கூட இல்லை.

விடுதலைப் புலிகளின் தர்மசங்கடத்தை ஒன்றுசேர்த்த பிரபாகரன்: "எம்மால் இடைக்கால தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைப்பட்டுக் கிடக்க முடியாது... விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்கால சுபீட்சமின்றி சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழவும் முடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக்கோடுகளை நாம் அடைந்துவிட்டோம்," என பிரகடனம் செய்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர், வடக்கு கிழக்கில் ஒரு இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான விடுதலைப் புலிகளின் பிரேரணையின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் அவரது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் அழைப்பு விடுத்தார். அவர் ஆயுத மோதலுக்கு மீண்டும் திரும்புவதற்கான ஒரு மறைமுக அச்சுறுத்தலுடனும் மற்றும் "அக்கறையுடைய உலக நாடுகள் எமது இந்த இக்கட்டான நிலையை கருத்தில் எடுத்து, எமது நியாயமான நிலைப்பாட்டின் அடிப்படையில் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்," என வேண்டிக்கொள்வதுடனும் உரையை நிறைவுசெய்தார்.

இந்த குறிப்புக்கள் அரசியல் வங்குரோத்தை ஏற்றுக்கொள்வதற்கு சமமானதாகும். விடுதலைப் புலிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட போது, கொழும்பை பேச்சுவார்த்தை மேசைக்கு தள்ள பெரும் வல்லரசுகளின் ஆதரவை பெறுவதில் வெற்றிகண்டுவிட்டதாக அது மிகைப்படுத்திக்கொண்டது. அதனது முன்னோக்கு, தமிழ் ஆளும் கும்பல் வடக்கையும் கிழக்கையும் சர்வதேச மூலதனத்தை ஈர்க்கும் காந்தமாக மாற்றுவதை சாத்தியமாக்கும் ஒரு அதிகாரப் பரவலாக்கள் ஒழுங்கேயாகும். 2002ல் நடைபெற்ற முதல் சுற்றுப் பேசுவார்த்தையில் அதன் பிரதானப் பேச்சுவார்த்தையாளர் அன்டன் பாலசிங்கம், இலங்கையை "புலிப் பொருளாதாரத்திற்கு" மாற்ற விடுதலைப் புலிகள் உதவி செய்வதாக தற்பெருமை பேசினார்.

ஆயினும், நீண்டகாலமாக ஏகாதிபத்திய சக்திகள் அக்கறைகொண்டுள்ளது போல், விடுதலைப் புலிகள் ஒரு இரண்டாம் தரமான பணியை ஏற்றுக்கொள்வதோடு அதன்படி அதற்கான எல்லா நிபந்தனைகளையும் நிறைவு செய்தால் மட்டுமே, அது சமாதான கொடுக்கல் வாங்கல்களின் ஒரு பங்காளியாக ஏற்றுக்கொள்ளப்படும். புஷ் நிர்வாகம், விடுதலைப் புலிகள் "வன்முறையைக் கைவிடவேண்டும்" என விசேடமாக வலியுறுத்தியுள்ளதோடு அதை தொடர்ந்தும் ஒரு "பயங்கரவாத அமைப்பாக" முத்திரை குத்தி வருகின்றது. இந்த நடவடிக்கையானது வாஷிங்டனின் "பயங்கரவாதத்திற்கு எதிரான பூகோளப் போரின்" தருவாயில் வெளிப்படையான அச்சுறுத்தல்களை கொண்டுள்ளது.

விடுதலைப் புலிகள், இலங்கை கடற்படையினரின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களின் பின்னரும் மற்றும் பூர்வாங்க விடயங்களில் எந்தவொரு மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தைக்கூட அடைந்திராத நிலையிலும் 2003 ஏப்பிரலில் பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளியேறினர். பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான விலையாக, வடக்கு கிழக்கில் தனது மேலாண்மையின் கீழ் ஒரு இடைக்கால நிர்வாக சபையை ஸ்தாபிப்பதைக் கோரிய விடுதலைப் புலிகள், ஐ.தே.மு அரசாங்கத்துடனான நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின் கடந்த நவம்பரில் தனது தன்னாட்சி அதிகாரசபை திட்டத்தை முன்வைத்தனர்.

ஆயினும், சில நாட்களுக்குள், இராணுவத்துடனும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) போன்ற சிங்களப் பேரினவாத குழுக்களுடனும் இணைந்து சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்துகொண்டிருந்த ஜனாதிபதி குமாரதுங்க, மூன்று முக்கிய அமைச்சுக்களின் கட்டுப்பாட்டை அபகரித்துக்கொண்டதோடு அவசரகால நிலைமையை திணிக்கவும் முயற்சித்தார். இந்த இழுபறியான அரசியல் விட்டுக்கொடுப்பற்ற நிலை இறுதியாக அவர் பெப்பிரவரியில் ஐக்கிய தேசிய முன்னணியை பதவி விலக்கி ஏப்பிரல் தேர்தலை துரிதப்படுத்தியதுடன் முடிவிற்கு வந்தது. ஏப்பிரல் தேர்தலில் அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க) ஜே.வி.பி உடன் கூட்டு சேர்ந்து வெற்றிபெற்றது.

புதிய சுதந்திர முன்னணி நிர்வாகமும் வெளியேற்றப்பட்ட ஐ.தே.மு போல் அதே இக்கட்டான நிலைக்கு முகம்கொடுத்துள்ளது. ஒரு பக்கத்தில், யுத்தத்திற்கு மீண்டும் திரும்புவதானது, தீவை ஒரு மலிவு உழைப்பு மேடையாக மாற்றும் வர்த்தகக் கும்பல்களின் திட்டங்களுக்கு பொருளாதார ரீதியில் அழிவுகரமானதாக இருக்கும். மறுபக்கம், விடுதலைப் புலிகளுக்கு எந்தவொரு சலுகையும் வழங்குவதானது, இலங்கை அரசு 1948ல் தனது ஆரம்பம் முதலே தங்கியிருக்கின்ற சிங்களப் பேரினவாத கருத்துப்போக்கை கீழறுக்க அச்சுறுத்துவதாக அமையும்.

இந்தப் பெறுபேறு ஒரு ஆபத்தான முட்டுச்சந்தாக இருந்துவருகிறது. தன்னாட்சி அதிகாரசபையின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டால் ஆளும் சுதந்திர முன்னணியில் இருந்து விலகுவதாக ஜே.வி.பி அச்சுறுத்தியுள்ளது. விடுதலைப் புலிகள், தன்னாட்சி அதிகாரசபை பேச்சுக்களுக்கான அடிப்படையாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை பேச்சுக்களை ஆரம்பிக்க மறுத்து வருகின்றனர். விவகாரத்தை தீர்ப்பதற்கான நோர்வே மத்தியஸ்தர்களின் எல்லா முயற்சிகளும் தோல்விகண்டுள்ளன.

பிரபாகரன் தனது சனிக்கிழமை உரையில், விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ள போதிலும், கொழும்பு "காலைவாரும் முட்டுக்கட்டையாக" இருந்துகொண்டுள்ளது என, பெருமளவில் கூட்டத்தில் கூடியிருந்தவர்களை அன்றி "சர்வதேச சமூகத்தை" நம்பவைப்பதற்காக கணிசமான முயற்சிகளை மேற்கொண்டார். அவர் "உள்முரண்பாடுகளும் அடிப்படை வேறுபாடுகளும் கொண்ட ஒத்துவராத ஒரு கூட்டணி" என அரசாங்கத்திற்கு முத்திரை குத்தியதோடு "தமிழ் தேசியப் பிரச்சினை சம்பந்தமாக பரஸ்பர முரண்பாடான அணுகுமுறையையும் கொள்கைகளையும் கொண்டுள்ளதாகவும்" குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் பதட்டநிலைமை

விடுதலைப் புலிகளின் விரக்தியானது அதன் மீதான வலுவான அழுத்தங்களுடன் கட்டுண்டுள்ளது. தமிழ் மக்களின் சமூகத் தேவைகள் மற்றும் ஜனநாயக அபிலாசைகளை பூர்த்திசெய்வதில் முற்றிலும் இலாயக்கற்றுப் போயுள்ள இந்த அமைப்பு பிரிவுகளாகப் பிளவடைந்துள்ளது. "வடக்கு" தலைவர்கள் தனிச்சலுகைகளை மேலாண்மை செய்வதாகவும் கிழக்கின் தேவைகளை புறக்கணிப்பதாகவும் குற்றஞ் சாட்டிய விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்திய தளபதியான கருணா என்றழைக்கப்படும் வி. முரளீதரன், இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிலிருந்து பிரிந்து சென்றார். எதிரிகளை ஒழிப்பதற்காக விடுதலைப் புலிகள் துரிதமாக செயற்பட்ட அதே வேளை, இரு சாராருக்கும் இடையிலான கசப்பான யுத்தம் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகள், தனது அதிகாரத்திற்கு மிகவும் தேவையாகியுள்ள முண்டுகோலை வழங்குவதற்காக தன்னாட்சி அதிகாரசபையை அமுல்படுத்துவதில் அவநம்பிக்கையான நிலையில் உள்ளனர். பிரபாகரன் தனது உரையில், "எமது பிரேரணைகளில் சில அடிப்படைப் பிரிவுகள் பிரச்சினைக்குரியதாக அல்லது முரண்பாடானதாக இருந்தால், அத்தகைய விடயங்களை பேச்சுவார்த்தை மேசையிலான கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும்" என மன்றாடினார். தன்னாட்சி அதிகாரசபை பிரேரணையின் நிபந்தனைகளின் கீழ், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஜனநாயக விரோதமாக திணிக்கப்படும் ஒரு நிர்வாகத்தில், விடுதலைப் புலிகள் தானாகவே மேலாண்மையைக் கொண்டிருப்பர். இந்த கொடுக்கல் வாங்கல்களின் மூலம் வெளிநாட்டு உதவிகள் கிடைக்கவிருப்பதோடு அதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கும் கணிசமான அதிகாரங்கள் கிடைக்கும்.

எவ்வாறெனினும், பிரபாகரனுக்கு "சர்வதேச சமூகத்திடமிருந்து" உதவிகள் கிடைக்கப்போவதில்லை. மாவீரர் தின உரைக்கு சற்றே பத்து நாட்கள் முன்னதாக ஒரு அறிக்கையை வெளியிட்ட அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் ஆமிடேஜ், "சமாதானப் முன்னெடுப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை, ஐக்கிய இலங்கை என்ற வரைவுக்குள் தீர்ப்பதற்கான தனது கடப்பாட்டில் உறுதியாகவும் வெளிப்படையாகவும் இருப்பதற்காக" குமாரதுங்கவைப் பாராட்டினார். அதே சமயம், "பேச்சிலும் மற்றும் செயலிலும் பயங்கரவாதத்தை கைவிட்டு சமாதான மேசைக்குத் திரும்புமாறும்" அவர் மீண்டும் ஒருமுறை பகிரங்கமாக வலியுறுத்தினார்.

இந்தியா தன்னாட்சி அதிகாரசபையை ஏற்றுக்கொள்ளாது என ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக புது டில்லி, கொழும்புடன் பல விளைவுகளைக் கொண்ட ஒரு பாதுகாப்பு உடன்படிக்கையை நிறைவேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. இந்த உடன்படிக்கையானது இலங்கை ஆயுதப்படைகளுக்கு நிர்வாகவியல் ஆதரவையும் பயிற்சியையும் வழங்கவுள்ளதோடு விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடும் அதன் இயலுமையை பரந்தளவில் அதிகரிக்கச் செய்யும்.

விடுதலைப் புலிகள் ஒரு சாத்தியமற்ற இக்கட்டு நிலைக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆயுத மோதலுக்கு மீண்டும் திரும்பினால், அமெரிக்காவினதும் இந்தியாவினதும் ஆதரவைக் கொண்ட இலங்கை இராணுவத்தையே விடுதலைப் புலிகள் எதிர்கொள்வர். மறு பக்கம், பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காக கொழும்புக்கு விட்டுக்கொடுப்புகளை செய்தால், தமிழ் சிறுபான்மையினர் மத்தியில் தனது நிலை மேலும் கீழறுக்கப்படுவதையும், தனது சொந்த அமைப்புக்குள்ளேயே பதட்ட நிலைமைகள் உக்கிரமடைவதையும் எதிர்கொள்வர்.

அதற்கும் மேலாக, மாவீரர் தின கூட்டத்திற்கு முன்னதாக இடம்பெற்ற கூர்மையான மோதல்கள் தற்போதைய ஐயப்பாடான நிலைமை --சமாதானமும் இல்லை, யுத்தமும் இல்லை-- அதிகரித்தளவில் முடிவற்றது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. இலங்கை இராணுவம் மற்றும் ஜே.வி.பி போன்ற சிங்களப் பேரினவாத அமைப்புக்களின் அதிகரித்துவரும் ஆத்திரமூட்டல்களை விடுதலைப் புலிகள் எதிர்கொள்கின்ற அதே வேளை, ஏற்கனவே கருணா குழுவுடன் தீவிரமடைந்து வரும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

*நவம்பர் 19 அன்று, யாழ்ப்பாண நகரின் வடக்குப் பகுதியில் வல்வெட்டித்துறையில் இரு தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். விடுதலைப் புலிகள் இதற்காக இலங்கை இராணுவத்தை குற்றஞ் சாட்டினர். அடுத்த நாள் யாழ்ப்பாணக் குடா நாட்டின் பல பாகங்களிலும் எதிர்ப்புக்கள் வெடித்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதைகளை தடை செய்ததோடு டயர்களையும் எரித்தனர். கூடியிருந்த கூட்டத்தின் மீது பொலிசாரும் இராணுவத்தினரும் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தது உட்பட பல மோதல்கள் நடைபெற்றிருந்தன.

*நவம்பர் 24 அன்று, மட்டக்களப்பு வந்தாறுமூலையில் மாவீரர் தின நிகழ்வுகளுக்காக அலங்கார வேலைகளில் ஈடுபட்டிருந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகள் கருணா குழுவினரின் நடவடிக்கையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. மறுநாள் நவம்பர் 25 அன்று, கிழக்கு மாகாணத்தில் உள்ள அக்கரைப்பற்றில் உமாகாந்த் என்ற ஒரு விடுதலைப் புலி உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

*நவம்பர் 25, மன்னாரில் மாவீரர் தின விழாவின் ஒரு பாகமாக விடுதலைப் புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றுவதை தடுக்க துருப்புக்கள் முயற்சித்தன. நிராயுதபாணிகளான மக்கள் மீது பொல்லுகள் மற்றும் இரும்புக் கம்பிகள் சகிதம் படையினர் நடத்திய தாக்குதலில் பாராளுமன்ற உறுப்பினரான வினோ நொகார்த்தலிங்கம் உட்பட பதினான்கு பேர் காயமடைந்தனர். அதே தினம் வவுனியாவிலும் இதுபோன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. விடுதலைப் புலிகளின் கொடியை ஏற்றுவதில் ஈடுபட்டிருந்த கூட்டத்தினர் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் ஆறு பேர் காயமடைந்தனர்.

*நவம்பர் 26 அன்று, இந்து கலாச்சார மண்டபத்தில் பறந்துகொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் கொடியை இறக்கக் கோரி திருகோணமலையில் ஜே.வி.பி ஒரு ஆத்திரமூட்டல் ஆர்ப்பாட்டத்தை தூண்டிவிட்டது. ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் ஜயன்த விஜேசேகர, இலங்கை கண்காணிப்புக் குழு அலுவலகத்தை நோக்கிச் சென்ற சுமார் 300 பேர் அடங்கிய ஊர்வலத்தை வழிநடத்தியதோடு, அந்த ஊர்வலம் பொலிசார் கண்ணீர்புகை கொண்டு கலைப்பதற்கு முன்னதாக மண்டபத்தை நோக்கியும் சென்றது. திங்களன்று விடுதலைப் புலிகளுக்கு சார்பான தமிழர் பேரவை ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குசெய்த போது, இன மோதல்கள் வெடித்ததுடன் மூன்று சிங்களவர்களின் சாவுக்கும் வழிவகுத்தது. பொலிசார் உடனடியாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்செய்தனர்.

இலங்கை கண்காணிப்புக் குழுவின் தலைவரான நோர்வீஜிய ஜெனரல் ட்ரொன்ட் பெருஹோவ்ட் கடந்த வியாழனன்று அசோசியேடட் பிரஸ்ஸிற்கு கருத்து வெளியிடுகையில், இத்தகைய நிலைமையில், விசேடமாக கிழக்கில் "யுத்த நிறுத்தம் மிகப்பெரும் அழுத்தத்திற்குள்ளாகியுள்ளது" என எச்சரித்தார். "யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருந்த போதிலும் யுத்தமும் நடக்கிறது. யுத்த நிறுத்தமானது யுத்தத்தின் ஒரு நிலைமையேயாகும், உண்மையில் அதை கவிழ்க்கும் ஒரு யுத்தத்தையே நாம் காண்கின்றோம்," என அவர் பிரகடனம் செய்தார்.

&ஸீதீsஜீ;இந்த நிலைமைக்கு விடுதலைப் புலிகளிடம் முன்னேற்றமான பதில் ஏதும் கிடையாது. தமிழீழ முதலாளித்துவ அரசிற்கான அதன் கோரிக்கையானது எப்பொழுதும் தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களைப் பிரதிநித்துவம் செய்கின்றதே அன்றி தமிழ் தொழிலாளர் வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை அல்ல. இப்போது இந்தக் கோரிக்கை, அதிகாரப் பகிர்வு ஒழுங்கினுள் ஒரு இரண்டாம் தர பாத்திரத்தை இட்டு நிரப்புவதன் பேரில் கொழும்பை நெருக்குமாறு ஏகாதிபத்தியத்திற்கு அற்பத்தனமாக அழைப்பு விடுப்பது, அல்லது ஏற்கனவே 65,000 உயிர்களை பலிகொண்ட இரத்தக்களரி யுத்தத்திற்கு மீண்டும் திரும்புவது என்றளவிற்கு கீழிறக்கப்பட்டுள்ளது.

Top of page