World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

US intervenes in disputed Ukraine election: Who the hell asked you, Mr. Powell?

உக்ரைன் தேர்தல் சர்ச்சையில் அமெரிக்கா தலையிடுகிறது: திரு. பெளல் அவர்களே உங்களை யார் கேட்டது?

By Joseph Kay
30 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

உக்ரைன் ஜனாதிபதி தேர்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது, ஏனெனில் அது புஷ் நிர்வாகத்தின் உயர்ந்த தரங்களுக்கு ஏற்றதாக அமையவில்லை என்று அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருந்த கொலின் பெளல் சென்ற வாரம் அறிவித்திருப்பது அதன் பிற்போக்குத்தனமான அரசியல் விளைவுகளுக்காக இல்லாவிட்டாலும், அவரது இந்த அறிவிப்பு மிக உயர்ந்த நாடாகமாகும். அவர் அமெரிக்க அரசுத்துறையின் முதன்மை சர்வதேச பேச்சாளர் சார்ந்திருக்கின்ற நிர்வாகம் முதலில் பதவிக்கு வந்ததே ஒரு தேர்தலையே திருடிய பின்னராகும். உக்ரைன் தேர்தல் சட்டவிரோதமானது ''ஏனெனில் அது சர்வதேச தரங்களுக்கு ஏற்றதாக இல்லை ஏனென்றால் பல்வேறு நம்பகத்தன்மையுள்ள மோசடி மற்றும் முறைகேடுகள் பற்றி ஒரு புலன்விசாரணை நடக்கவில்லை'' என்று அவர் கூறுகிறார்.

2000 டிசம்பரில் புஷ் மற்றும் அல்கோர் வழக்கில் அமெரிக்க உச்சநீதிமன்றம் ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறுகின்ற வகையில் வெள்ளை மாளிகையை ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்ஷிற்கு வழங்கியது ''சர்வதேச தரங்களுக்கு'' ஏற்றதாக இல்லை மற்றும் அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ரஷ்யாவோ அல்லது சீனாவோ அல்லது ஐரோப்பிய ஒன்றியமோ அறிவித்திருக்குமானால் அமெரிக்க ஆளும் வட்டாரங்களுக்குள் பதில் என்னவாக இருந்திருக்குமென்று கற்பனைதான் செய்துபார்க்க முடியும். அந்த அப்பட்டமான தேர்தல் மோசடியை கையாண்டதின் காரணமாகத்தான் பெளல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதான இராஜதந்திர பிரதிநிதி என்ற அளவிற்கு பதவி உயர்வு பெறமுடிந்தது.

2000 தேர்தல்களில் நடைபெற்ற மோசடி மற்றும் முறைகேடுகள் பற்றிய ஆவணங்களில் அடங்கியிருந்தவை: புளோரிடா மாநிலத்தில் தொழிலாளவர்க்க வாக்காளர்களை திட்டமிட்டு அச்சுறுத்தியது, சட்டபூர்வமாக வாக்குகள் மறு எண்ணிக்கையை தடுப்பதற்கு குடியரசுக் கட்சி தலையிட்டது, முரடர்களை ஏற்பாடுசெய்து குடியரசுக்கட்சி உள்ளூர் தேர்தல் வாரியங்களை மிரட்டியது மற்றும் இறுதியாக ஒருதலைப்பட்சமான போக்குகொண்ட உச்சநீதிமன்றம் மக்கள் வாக்குப்பதிவில் தோற்றிருந்தாலும், 5 இற்கு 4 என்ற பெரும்பான்மையில் புஷ்ஷிற்கு ஆதரவாக தீர்பளித்தது. புளோரிடாவில் நடைபெற்ற மோசடி மற்றும் மிரட்டல்களுக்கு தலைமை வகித்தவர்கள் குடியரசுக்கட்சி வேட்பாளரின் சகோதரரான ஆளுனர் ஜெப் புஷ் மற்றும் அவரது புளோரிடா அரசுத்துறை செயலரான கேத்தரின் ஹாரிஸ் ஆகியோர்.

2000 தேர்தல்கள் அளவிற்கு கீழே இறங்கி செல்லாவிட்டாலும், 2004 தேர்தல்களில் நடைபெற்ற மோசடிகளுக்கு கணிசமான சான்று உள்ளது. உக்ரைன் தேர்தல்களில் மோசடி என்ற தனது கூற்றுக்களுக்கு ஆதாரமாக புஷ் நிர்வாகம் பயன்படுத்தியுள்ள பிரதான சான்றுகளில் ஒன்று அதிகாரப்பூர்வமான தேர்தல் முடிவான, நடப்பு பிரதமர் Viktor Yanukovich இற்கு வெற்றியை தந்த தேர்தல் முடிவுகளும் மற்றும் வாக்களித்தவர்கள் தொடர்பான கணக்கெடுப்பும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு வேட்பாளர் Victor Yushchenko கணிசமான அளவு வாக்கு வித்தியாசத்தால் வெற்றிபெற்றுள்ளார் என்பதாகும். அப்படியிருந்தும் அதே வேறுபாடுகள் 2004 அமெரிக்கத் தேர்தல்களிலும் நடந்திருக்கின்றன! அதிகாரபூர்வமான வாக்கு எண்ணிக்கையில் புஷ் வெற்றிபெற்றார். ஆனால் பல பெரிய மாநிலங்கள் புஷ்ஷிற்கு ஆதரவாக இருந்தவை ஜனநாயகக்கட்சி வேட்பாளர் ஜோன் கெர்ரிக்கு கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் கூடுதலாக வாக்களித்ததாக வாக்களித்தவர்கள் தொடர்பாக முன்னர் வந்த கருத்துக்கணிப்புக்கள் காட்டின.

இவை அமெரிக்காவில் திட்டமிட்ட அளவில், மிக பெருமளவிற்கு தேர்தல்கள் மோசடி செய்யப்படுவதை எடுத்துக்காட்டுவதாக மட்டும் அமையவில்லை. அமெரிக்கத் தேர்தல்களில் மிகப்பெரும் அளவிற்கு பெருநிறுவன பணங்கள் ஊடுருவுகின்றன, வெகுஜன ஊடகங்கள் மூலம் மக்களது கருத்துக்கள் திரிக்கப்படுகின்றன, எதிர்கட்சிகள் மற்றும் எதிர்கருத்துக்கள் திட்டமிட்டு ஒதுக்கப்படுகின்றன, மற்றும் தேர்தல் குழுவின் ஜனநாயக விரோதத்தன்மையும் அடங்கும். இவை அத்தனையும் சேர்ந்து கொண்டு ஒரு அமெரிக்கத் தேர்தலில் பிரமாண்டமான பெருநிறுவனங்களும் வங்கிகளும் தேர்ந்தெடுப்பவர்கள் தான் வேட்பாளர்களாக இருக்கமுடியுமென்ற சாத்தியமான நிலையை ஏற்படுத்துகின்றன.

உக்ரைனின் ஜனநாயகத்திற்காக புஷ் நிர்வாகம் நிற்பதாக பாசாங்கு காட்டினாலும், 20ம் நூற்றாண்டு முழுவதிலும் அமெரிக்காவின் நிலைச்சான்றை கருத்தில்கொள்ளும்போது அதைவிட மோசமான அகந்தைப்போக்கு காணப்படுகிறது. தசாப்தத்திற்கு பின் தசாப்தமாக, குறிப்பாக 1947 பனிப்போர் தொடங்கிய காலத்திலிருந்து, உலகம் முழுவதிலும் உள்ள மக்களது ஜனநாயக அபிலாசைகளை பலிகொடுத்து அமெரிக்க பெருநிறுவனங்களை மற்றும் வங்கிகளின் நலன்களை வளர்த்தெடுக்கும் விடாமுயற்சியை மேற்கொண்டது.

சிலி நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி சல்வடோர் அலன்டே அமெரிக்க ஆதரவோடு 1973ல் படுகொலை செய்யப்பட்டார். இது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை CIA நடவடிக்கைகள் மூலம் ஆட்சி கவிழ்ப்பில் மிகவும் இழிவுபுகழ்பெற்றதாகும். ஈரான், குவாத்தமாலா, கிறீஸ், துருக்கி, தென்கொரியா, இந்தோனேஷியா, பாக்கிஸ்தான், பிரேசில், அர்ஜென்டீனா, பொலிவியா, உருகுவே, டொமினிக்கன் குடியரசு மற்றும் பனாமா முதலிய மற்றைய நாடுகளாகும். ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க அரசாங்கம் மிக அப்பட்டமான ஜனநாயக விரோத ஆட்சிகளை ஆதரித்தது. பிரான்கோவின் ஸ்பெயின், இன ஒதுக்கல் தென்னாபிரிக்கா, சவுதி அரேபிய மத்தியகால கொடுங்கோல் ஆட்சி ஆகியவை உட்பட வலதுசாரி சர்வாதிகரங்களை கொண்ட கொடூரமான அல்லது இரத்தவெறி கொண்டவர்களை கூட அமெரிக்கா ஆதரித்து நிற்கிறது.

தற்போது புஷ்ஷின் ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' அமெரிக்காவின் நண்பர்களாக சர்வாதிகாரிகளையும், ஏதேச்சதிகாரிகளையும், திரட்டுவதற்கு ஒரு புதிய சாக்குப்போக்கை தந்திருக்கிறது. இந்தப் பட்டியலில் நீண்டகால நண்பர்களான எகிப்தின் முபாரக்கும், மற்றும் புதிய வரவுகளான பாக்கிஸ்தானின் ஜெனரல் முஷரஃப் மற்றும் உஸ்பக்கிஸ்தானின் முன்னாள் ஸ்ராலினிச சர்வாதிகாரி Karimov உம் அடங்குவர். சென்ற ஆண்டு புஷ் நிர்வாகம் எண்ணெய் வளம் மிக்க அஜர்பைஜானில் கொடூரமாக மோசடி செய்யப்பட்ட ஒரு தேர்தலில், முன்னாள் ஸ்ராலினிசத் தலைவர் Haider Aliyev ஜனாதிபதி பதவியை தனது பாரம்பரிய வாரிசுரிமையாக தனது மகனுக்கு தந்ததை வாழ்த்தியது. மிக அண்மைக்காலத்தில், அமெரிக்க பத்திரிகைகள் அமெரிக்க ஆதரவு ஹமீத் கர்சாயிக்கு ஒரு மகத்தான ஜனநாயக வெற்றி என்று பாரட்டிய ஆப்கானிஸ்தான் தேர்தல்கள் அமெரிக்க இராணுவத்தின் விழிப்பான கண்காணிப்பின் கீழ் துப்பாக்கி முனையில் நிர்பந்தமாக நடத்தப்பட்டது என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஈராக்கில் நடைபெறவிருக்கும் தேர்தல்களை பொறுத்தவரை ---அமெரிக்க அரசாங்கம் மோசடி மற்றும் முறைகேட்டோடு மட்டும் திருப்திபட்டுக்கொள்ளும் விருப்பத்தில் இல்லை---- காலத்திற்கு காலம் பரிசோதிக்கப்பட்ட வெறுக்கப்பட்ட அரசியல் கொலை நடவடிக்கைகளை இப்போது பயன்படுத்திவருகிறது, ஜனவரி தேர்தல்களுக்காக ஈராக் எதிர்ப்பு போராளி வெகுஜனங்களின் இரத்தத்தை அந்த மண்ணில் உரமாக்கிக் கொண்டிருக்கிறது. சென்றவாரம் இயத் அல்லாவியின் பொம்மை ஆட்சியை எதிர்க்கும் இரண்டு முன்னணி தலைவர்கள் வடக்கு நகரான மோசூலில் படுகொலை செய்யப்பட்டனர். சென்ற ஆண்டு படையெடுப்பு நடத்தப்பட்டபின்னர் 100,000 ஈராக்கியர் கொல்லப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது, சென்ற மாதம் பல்லூஜா நகரில் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

பெளலோ ஈராக் படையெடுப்பை முன்னெடுப்பதில் இழிவுபுகழ்பெற்ற பங்களிப்பு செய்தவர். தேர்தல் ''மோசடி மற்றும் முறைகேடு'' பற்றி குறிப்பிடுகின்ற அந்தத் தனிமனிதர், வெளிவிவகாரத்துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில் அவரது கண்ணியம் பற்றி மாயையில் இருந்தவர்களும் வெறுத்து ஒதுக்குகின்ற அளவிற்கு நடந்து கொண்டார். கோடிக்கணக்கான மக்கள் முன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ஈராக்கிடம் பேரழிவுகரமான ஆயுதங்கள் இருப்பதாக அவர் மிக அப்பட்டமான பொய்களை கூறினார்.

உக்ரைன் தேர்தல் ஒரு ஜனநாயக நடைமுறைக்கு முன்மாதிரி என்றோ அல்லது ரஷ்ய ஆதரவு வேட்பாளர் Yanukovich இனை ஆதரிப்பதன் மூலமோ அமெரிக்காவின் இரட்டைவேட போக்கை உணர்ந்து கொள்ளமுடியுமென்று வாதிடுவது கூட அவசியமில்லாதது. உக்ரைன் வாக்குப்பதிவில் ஒரு கணிசமான அளவிற்கு மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை ஒரு உயர் அளவிற்கு நிச்சயமாக சொல்ல முடியும்---- ஆனால் இரண்டு தரப்பிலுமே இது நடந்திருக்கிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின், Yanukovich வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதில் பெருமளவு செல்வாக்கை பயன்படுத்தியிருக்கிறார்-----ஏனென்றால் அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் நன்கொடைகளையும் நிதியுதவியையும் மற்றும் அரசியல் ஆதரவையும் Yushchenko விற்கு ஆதரவாக தங்களது செல்வாக்கை பயன்படுத்தின.

என்றாலும், ரஷ்யா ஒரு பக்கமும் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் மறுபக்கமும் நின்று கொண்டு உக்ரைன் தொடர்பாக ஜனநாயகத்திற்கு எதிராக சர்வாதிகாரம் என்று கூறுவது சற்றும் சம்மந்தமில்லாததாகும். இங்கே இந்த மோதலில் ஈடுபட்டிருக்கும் நலன்கள், அந்த நாடு ஒரு விவசாய மற்றும் தொழில்துறை பிராந்தியத்தின் மையத்தில் அமைந்திருப்பதும், மற்றும் அது எரிவாயு குழாய்கள் கடந்து செல்லும் ஒரு முக்கிய பகுதியாக இருப்பதும், மற்றும் ரஷ்யா கிழக்கு ஐரோப்பா மற்றும் கருங்கடல் பகுதிக்கு அது ஒரு எல்லை நாடாக பொதுவான பூகோள மூலோபாய முக்கியத்துவமான பகுதியாக உள்ளதுமாகும்.

அமெரிக்காவிற்கு இந்த பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நலன்களை ஆப்கனிஸ்தான் மற்றும் ஈராக் போர்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அதே உலக பூகோள மூலோபாயம்தான். சோவியத் ஒன்றியம் சிதைந்ததை பயன்படுத்தி அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டினர், தங்களது செல்வாக்கை எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கில் மட்டுமின்றி முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பகுதிகள் மீதும் விரிவுபடுத்திக்கொள்ள உறுதியுடன் நின்றனர். கிழக்கு ஐரோப்பா, காக்கஸஸ் மற்றும் மத்திய ஆசியா, ரஷ்யாவின் சொந்த செல்வாக்கு பூகோளங்கள் என்று நீண்ட நெடுங்காலமாக மறைமுகமாக ஒதுக்கப்பட்டு நின்றன.

அமெரிக்க அதிகாரிகளும் ஊடகங்களும் கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவின் ''நவீன-ஏகாதிபத்தியம்'' பற்றி மிகக்கடுமையான சொற்களில் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டிருந்தாலும், அதே பிராந்தியத்தில் அமெரிக்கா தலையிடுவது குறித்து எதுவும் கூறப்படவில்லை. ஆப்கனிஸ்தான் போரைத் தொடர்ந்து ஒரு காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் மத்திய ஆசிய அரசுகளாக இருந்த பலவற்றில் அமெரிக்கா தனது நிரந்தர இராணுவத்தளங்களை அமைத்தது. சென்ற ஆண்டு, அமெரிக்கா தூண்டிவிட்ட ஜோர்ஜியாவில் நடந்த ''ரோஜா புரட்சி'' என்றழைக்கப்பட்டதில் மிக்கைல் சாக்ஸ்வில்லியின் அமெரிக்கா ஆதரவு அரசாங்கம் பதவியில் அமர்த்தப்பட்டது, அதற்கு பின்னர் சாக்கஸ்வில்லி வலதுசாரி பொருளாதாரக் கொள்கையை கடைபிடித்து வருவதால் மக்களில் பரந்த பிரிவினருக்கு சீரழிவான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அதே கொள்கைகள் Yushchenko வின் கீழ் கடைபிடிக்கப்பட்டு, அந்த நாடு மேற்கத்திய பெருநிறுவனங்களுக்கும், முதலீடுகளுக்கும், திறந்துவிடப்படும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

உலக சோசலிச வலைத்தளம் தனது வாசகர்கள் ஒரு சிறிய முயற்சியை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறது. Google தேடிக்கு செல்லுங்கள், அங்கே, ''அமெரிக்கா- உக்ரைன் உறவுகள்'' என்பதைத் தேடுங்கள் அதில் கூடுதல் நலன்களுக்காக ''எண்ணெய்'' அல்லது ''எரிவாயு'' என்ற சொல்லையும் சேர்த்துக்கொள்ளுங்கள் அதில் அண்மைய ஆண்டுகளில் உக்ரைன் மீது அமெரிக்கா எடுத்துக்கொண்டுள்ள விரிவான அக்கறை பற்றிய ஆவணங்கள் மடைதிறந்த வெள்ளம்போல் தோன்றும். இந்த வருடம் மே மாதத்தில் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிவந்த Zbigniew Brzezinski உக்ரைனிற்கு விஜயம் செய்தது குறிப்பிட்ட நலனிற்காகவாகும். அமெரிக்காவும், உக்ரைனும் ரஷ்யாவை அவ்விடத்திலிருந்து நீக்கிவிட நெருங்கி ஒத்துழைக்கவேண்டுமென்று வாதிடுகின்றார்.

Brzezinski இன் விஜயத்தின் நோக்கமானது, 1997ல் The Grand Chessboard என்ற புத்தகத்தில் எழுதியுள்ள வரிகளோடு இணைந்து நிற்கின்றது. யுரேஷிய பிராந்தியத்தில் மிக உயிர் நாடியான ஐந்து ''அச்சாணிகளில்'' ஒன்றான உக்ரைனை கட்டுப்படுத்துவது உலகை கட்டுப்படுத்துவதற்கு மிக முக்கியமானது என்று அவர் கருதுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக ரஷ்யாவின் ஆதிக்கத்தை கீழறுப்பதற்கு சுதந்திரமான மற்றும் மேற்கு நாடுகளுக்கு ஆதரவான உக்ரைன் குறிப்பான முக்கியத்துவம் பெற்றிருப்பதாக அவர் எழுதியிருந்தார். ''உக்ரைன் இல்லாமல்'' ''ரஷ்யா ஒரு யுரேஷியா சாம்ராஜியமாக இருக்க முடியாது'' என்று அவர் தனது நூலில் எழுதியிருந்தார்.

Brezezinski விஜயம், அமெரிக்க வெளிவிவகாரத்துறை துணை செயலர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் பயணத்தை தொடர்ந்து நடைபெற்றதாகும், அவர் எதிர்கட்சி தலைவர் Yuschenko வை சந்தித்தார். அவர், ஆர்மிடேஜ் நடத்திய ஒரு நிருபர் மாநாட்டில் நேட்டோவுடனும், உலக வர்த்தக அமைப்புடனும், உக்ரைன் ஒருங்கிணைப்பது குறித்து விவாதித்தார். அதன்பின் ஜனாதிபதி தேர்தல் சட்டபூர்வமாக நடைபெற்றதா என்பது குறித்து சந்தேகங்களை எழுப்புவதில் ஆர்மிடேஜ் முன்னணியில் இருக்கிறார்.

ஆர்மிடேஜின் தலைவர் கொலின் பெளல் உக்ரைன் தேர்தல் முடிவுகளை அமெரிக்கா, அங்கீகரிக்காது என்று அறிவித்திருக்கிறார். பொதுவாக அமெரிக்க அரசாங்கமும் குறிப்பாக புஷ் நிர்வாகமும் கொடுமை, அகங்காரம் இரட்டைவேடப் போக்குகளால் உலக மக்களில் மிகப்பெரும்பாலோரால் நியாயமாக வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள், எப்படி உக்ரைனிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ நடைபெற்ற தேர்தல்களை அங்கீகரிப்பது அல்லது அங்கீகரிக்காமல் இருப்பது என்ற அதிகாரத்தை தங்கள் கையில் வைத்திருக்க முடியும்?

ஈராக்கில் கடைபிடித்துவரும் மூர்க்கத்தனத்துடன் இணைந்து உக்ரைனில் அமெரிக்க கொள்கை மோசமான பின்விளைவுகளை பற்றி கவனமில்லாததாக உள்ளது. பெரும்பாலும் ரஷ்ய மொழிபேசுகின்ற கிழக்கு உக்ரைன் மற்றும் Donbas பகுதிகளை சேர்ந்த தொழிலாள வர்க்கத்தின் நியாயமான சமூக மற்றும் அரசியல் கவலைகளை ஆத்திரமூட்டுகின்ற வகையில் புறக்கணிக்கும் வகையில் Yushchenko முகாம் ஒரு விடாபிடியான நிலைப்பாட்டை எடுக்க ஊக்குவிப்பதன் மூலம் புஷ் நிர்வாகம் இன, மொழி அடிப்படைகளில் அந்த நாட்டை பிரிப்பது அல்லது இரத்தக்களரி உள்நாட்டுப்போர் ஆபத்தை பெருக்குகின்ற போக்கில் சென்று கொண்டிருக்கின்றது. இது முன்னாள் யூகோஸ்லாவியா போன்று ஒரு மகத்தான துயரமாகிவிடும். ஆனால் யூகோஸ்லாவியாவைவிட இரண்டு மடங்கு பெரிய அந்த நாடு ரஷ்யாவின் எல்லையில் உள்ளதுடன், முன்னாள் சோவியத் யூனியனின் ஆயுததளவாட சாலைகள் பலவற்றை தன்னிடம் கொண்டுள்ளது.

See Also :

உக்ரைனில் பூசலுக்குட்பட்ட தேர்தலையொட்டி பெரும் சக்திகளின் போட்டிகள் வெடிக்கின்றன

Top of page