World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

After Fallujah's destruction: US occupation force to reach 150,000

பல்லூஜா அழிக்கப்பட்ட பின்னர்: அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் 150,000 ஆக உயர்வு

By Joseph Kay
3 December 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கில் இருக்கும் அமெரிக்கத்துருப்புக்களின் எண்ணிக்கை அடுத்தமாதம் 12,000 இற்கு அதிகமாக அதிகரிக்கப்பட்டு எப்போதும் இல்லாத அளவிற்கு 150,000 துருப்புக்களாகும் என்று புதன் கிழமையன்று பென்டகன் அறிவித்தது. ஈராக் மக்களிடமிருந்து வளர்ந்து வரும் ஆக்கிரமிப்பிற்கு எதிரான எதிர்ப்பு கிளர்ச்சியை முறியடிக்கின்ற நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்ற நிலையில் ஆக்கிரமிப்புப்படைகளை பெருக்குவதற்கான முடிவு வந்திருக்கிறது.

ஈராக்கில் ஏற்கெனவே உள்ள துருப்புக்களிடையே சுழற்சி முறையில் பணிமாற்றத்தால் செய்யப்பட்டுள்ள அதிகரிப்புத்தான் பெரும்பாலும் இந்த துருப்புக்களின் எண்ணிக்கை உயர்வாகும். இதில் ஏற்கெனவே தங்களது பணி 2 மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ள முதலாவது நகரும் படைப் பிரிவுடன், 2 ஆவது பிரிகேட்டை சேர்ந்த 3500 உறுப்பினர்களும் அடங்குவர். இந்தப் படைப்பிரிவு பாக்தாத் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதுடன் சென்ற மாதம் நடைபெற்ற பல்லூஜா தாக்குதலில் ஈடுபட்டன.

ஜனவரி இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள தேர்தலில் ''பாதுகாப்பை'' உறுதிசெய்து தருவதற்காக ஒரு நடவடிக்கை மட்டுமே இந்த துருப்பு அதிகரிப்பு நடவடிக்கை என்று பென்டகன் சித்தரித்து வந்தாலும் அதன் உண்மையான முக்கியத்துவம் வேறாகும். பல்லூஜா தாக்குதலுடன், அமெரிக்க இராணுவம் மிதமிஞ்சிய பலாத்காரத்தின் மூலம் ஈராக்கியரது எதிர்ப்பை நசுக்குவதை குறிக்கோளாகக் கொண்டு ஒரு பெரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

இதன் விளைவாக ஏற்பட்ட சாவுகளும் அழிவும் ஈராக் மக்களிடையே எதிர்ப்பை தீவிரப்படுத்தியுள்ளது, அதற்காக கூடுதல் துருப்புக்களை பயன்படுத்தவேண்டியுள்ளது. இந்த நடைமுறை வியட்நாம் போரின் ஆரம்பகட்ட நாட்களை நினைவுபடுத்துகிறது: எதிர்ப்பினால் படைப்பெருக்கம் ஏற்படுகிறது, அதிகரித்த நடவடிக்கைகளால் எதிர்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்படி ஆக்கிரமிப்பினால் உருவாக்கப்பட்டுள்ள வெகுஜன விரோதத்திற்கு வாஷிங்டனின் ஒரே பதில் ஆக்கிரமிப்புப்படைகள் மேலும் அதிக அளவில் ஒடுக்குமுறையிலும், இரத்தக்களரியிலும் ஈடுபடுத்தலாகும்.

அமெரிக்க ஊடகங்கள் அடிக்கடி சித்தரித்து வருவதைப்போல் அல்லாமல் அமெரிக்க இராணுவத்திற்கு ஈராக்கில் நிலவரம் சரியாக இருக்கப்போவதில்லை என்பதை கோடிட்டுக்காட்டுகின்ற வகையில்தான் துருப்புக்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு வருகிறது. பல்லூஜா தாக்குதல் ஆரம்பித்து மூன்று வாரங்களுக்குப் பின்னரும் மற்றும் அந்த நகரத்தின் பெரும்பகுதியை அமெரிக்க இராணுவம் சிதைத்துவிட்ட பின்னரும்கூட இன்றைக்கும் அங்கு சண்டைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பாக்தாத்திலும் சுன்னி முக்கோணம் என்றழைக்கப்படும் இதர பகுதிகளிலும் மற்றும் வடக்கு நகரான மோசூலிலும் எதிர்ப்பின் அளவு பெருகியுள்ளது.

ஈராக் மக்களிடையே அமெரிக்க ஆக்கிரமிப்புப்படைகள் கணிசமான அளவிற்கு எந்தவித ஆதரவையும் திரட்ட இயலவில்லை. பல சந்தர்ப்பங்களில் கிளர்ச்சிப்படைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைவந்த போது அமெரிக்கா பயிற்றுவித்த பாதுகாப்புப்படைகளே கூட தங்களது கடமைகளை கைவிட்டு ஓடியிருக்கின்றன. பினான்சியல் டைம்ஸ் மேற்கோள்காட்டியுள்ள ஒரு அமெரிக்க அதிகாரி தந்துள்ள தகவலின்படி ஈராக் பொலிஸ்காவல் நிலையங்களில் பணிகளை மேற்கொள்வதற்காக, கூடுதல் அமெரிக்கத் துருப்புக்கள் தேவைப்படுகின்றன என்பது அந்தத்தேவைக்கான காரணங்களில் ஒன்றாகும்.

தேர்தல்களுக்கு பின்னர்கூட அமெரிக்கத் துருப்புக்களின் இந்த உயர்ந்த அளவு குறைவதற்கான சாத்தியக்கூறு எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் நிலையத்தில் பணியாற்றிவருகின்ற துருப்புக்கள் தொடர்பான நிபுணரும், ஓய்வுபெற்ற ஒரு தளபதியுமான ரிச்சர்ட் ஸ்டார்க் ''பாதுகாப்புத்துறை படைப்பிரிவுகளை சிக்கனமாகவும், கவனமாகவும் முடிந்தவரை நிர்வகித்து வருகிறது என்றாலும், மேலும் ஓராண்டுவரை இந்த தொகை 150,000 என்ற அளவிற்கு குறைய முடியாது'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உண்மையிலேயே வரும் மாதங்களில் மேலும் அதிகமான துருப்புக்கள் தேவைப்படலாம் குடியரசுக் கட்சி செனட்டர்களான John MCcain மற்றும் Richard Lugar மற்றும் முன்னணி தாராளவாத ஸ்தாபனத்தின் அங்கமான நியூயோர்க் டைம்ஸ் ஆகியோர் உட்பட அமெரிக்க முன்னணி அரசியல்வாதிகள் பலர் பென்டகன் அறிவித்த 12,000 துருப்புக்களுக்கு மேலாக கூடுதல் துருப்புக்கள் தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளனர். படைகளை குவிப்பதற்காக இராணுவ பிரச்சாரம் அவசியமான தர்க்கமாக தேவைப்படுகிறது, இதற்கு கட்டாய இராணுவத்தை விஸ்தரிப்பதும் ஒரு திட்டமும் தவிர்க்க முடியாத அவசியமாகும்.

பல்லூஜா: சிதைக்கப்பட்டுவிட்ட ஒரு நகரம்

புதிய துருப்புக்களில் பெரும்பகுதி பல்லூஜா நகரிலுள்ள அமெரிக்க இராணுவத்தை வலுப்படுத்துவற்காகவே பயன்படுத்தப்படும். அந்த நகர் தொடர்பான தகவல்கள் திரட்டுவதற்கான முழு இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்கத் துருப்பக்களோடு ''இணைக்கப்பட்டுள்ள'' நிருபர்கள் மட்டுமே அங்கு உள்ளனர். எவ்வாறிருந்தபோதிலும் தெளிவாகத்தெரிவது என்னவென்றால், முன்னர் 2,50,000 மக்கள் வாழ்ந்த அந்த நகரத்தை அமெரிக்க இராணுவம் சீரழித்துவிட்டது.

அமெரிக்க பத்திரிகைகளில் சில செய்திகள்தான் வந்திருக்கின்றன அவற்றில் ஒன்று பேரழிவின் அளவை கோடிட்டுக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. நியூயோர்க் டைம்ஸில் டிசம்பர் முதல்தேதி Robert Worth தந்திருக்கிற தகவலின்படி (''பல்லூஜா சிதைவுகளில்; பெரிய திட்டங்களும், ஒரு குழப்ப நிலை ஆபத்தும்'') இராணுவம் ''வழக்கத்திற்கு மாறான சவாலை சந்தித்துக்கொண்டிருக்கிறது: இப்போதுதான் தங்களது நகரம் அழிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மக்களது நம்பிக்கையை மீண்டும் வென்றெடுப்பது எப்படி?''
இந்த அறிக்கையில் பல்லூஜா ''அழிக்கப்பட்டுவிட்டது'' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சொல்லை அமெரிக்க ஊடகங்கள் இதற்கு முன்னர் பயன்படுத்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அசாதாரணமான சுய முன்தணிக்கை நிலவரத்திற்கிடையிலும், படுமோசமான அழிவுபற்றிய உண்மை பிரதான பத்திரிகைகளில் வெளிவர ஆரம்பித்திருக்கிறது. பிரசுரிக்கப்படும் வார்த்தைகளுக்கிடையே ஒருவர் கொடூரமான கொடுங்கோண்மை பரிணாமங்களின் ஒரு சித்திரத்தை பெறமுடியும்.

''அமெரிக்க குண்டுகள், டாங்கிகள் மற்றும் பீரங்கிகளில் முழு அளவு இப்போதுதான் நமக்கு வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த சண்டையில் அழிக்கப்பட்ட கட்டடங்களின் எண்ணிக்கை 200 இற்கு மேல் இருக்கும், இந்த விவரம் ஈராக்கின் பிரதமர் இயத் அல்லாவி பொறியாளர்கள் மற்றும் தளபதிகள் வெளியிட்டதாகும். நகரத்தின் மின்சார இணைப்புக்கள் நகரத்தின் மற்ற பகுதிகளைவிட படுமோசமாக சேதமடைந்திருப்பதால் அவற்றை முழுவதுமாக சிதைத்துவிட்டு மீண்டும் புதிதாக திரும்ப உருவாக்கித்தான் ஆகவேண்டும்'' என்று Worth மேலும் எழுதியுள்ளார்.

அமெரிக்க விமானப்படை குண்டு வீச்சுக்கள் மற்றும் பின்னர் நடத்தப்பட்ட படையெடுப்பில் உண்மையிலேயே எத்தகைய கட்டடங்கள் நாசப்படுத்தப்பட்டன என்பதை அந்த கட்டுரை ஆசிரியர் கோடிட்டுக்காட்டவில்லை. அந்த நகரத்தில் இருந்த கட்டடங்களில் மூன்றில் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்தன அல்லது நொறுக்கப்பட்டன என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்தப் படையெடுப்பின் போது ஏதாவதொரு கட்டடத்திலிருந்து துப்பாக்கிச்சூடு நடக்குமானால் அந்தக் கட்டடத்தை எதிர்ப்புப்போராளிகள் வாழும் இடம் என்று சந்தேகித்து தாக்கித்தகர்க்க வேண்டும் என்பது அமெரிக்காவின் கொள்கை.

நகரத்திலிருந்து வெளியேறி செல்ல முடிந்த பலர் இப்போது சுற்றியுள்ள பிராந்தியங்களில் படுமோசமான நிலையில் அகதிகள் முகாம்களில் குவிந்து கிடக்கின்றனர். டைம்ஸ் கட்டுரை தெளிவுபடுத்தியிருப்பது போல் அந்த அகதிகளில் பலர் தங்களது வீடுகளுக்கு திருப்புவதற்கு பல மாதங்கள் ஆகும் அப்படி திருப்புபவர்கள் அமெரிக்க இராணுவ முகாம்களில் அடைக்கப்படுவர்.

''ஜனவரியில் தேசிய மாகாண தேர்தல்கள் நடைபெறுகின்ற நேரத்தில் ஒரு சிறிதளவு நகர வாசிகளை பாதுகாப்பாக கொண்டுவந்து சேர்க்க இயலுமா? என்ற சந்தேகத்தில் சில அமெரிக்க அதிகாரிகள் இங்கே உள்ளனர் என்று Worth எழுதுகிறார்.

திரும்புகின்ற குடும்பங்கள் இராணுவசட்ட நிபந்தனைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவர், ''ஒவ்வொரு வீட்டுத்தலைவரும் ஒரு அடையாள அட்டையை அணிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுவார்கள்'' என்று (மரைன் நான்காவது சிவில் விவகாரக்குழு) தளபதி John Ballard தெரிவித்தார். திருட்டை சமாளிப்பதற்கு அமெரிக்க மற்றும் ஈராக் துருப்புக்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்படும் என்று அந்தக் தளபதி குறிப்பிட்டார் அது என்ன என்ற விபரத்தை அவர் தரவில்லை. NBC செய்தி அறிக்கை தந்துள்ள தகவலின்படி நடமாடுகின்ற எவரையும் சுட்டுக்கொல்கின்ற அதிகாரத்தை இராணுவம் எடுத்துக்கொள்ளும்.

போக்குவரத்து முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும். ''குண்டுகள் வருவதைத்தடுப்பதற்காக கார்கள் எதுவும் முதலில் நகருக்குள் அனுமதிக்கப்படமாட்டாது. மாறாக இலவச பஸ் போக்குவரத்து நடத்தப்படும்'' என்ற முறையில் போக்குவரத்து அமைந்தாலும் அதை அமெரிக்கப்படைகள் தான் நடத்தும் அதன் பொருள் என்னவென்றால் அமெரிக்க அனுமதியின்றி எந்த ஈராக்கியரும் அந்த நகரத்தின் வழியாகப் பயணம் செய்ய முடியாது.

Worth மேலும் குறிப்பிட்டிருப்பது ''நகரத்தின் பொருளாதாரத்தை மீண்டும் இயங்கச்செய்வதற்கு மறுசீரமைப்புத்திட்டப்பணிகளை மேற்கொள்ளும் தகுந்த ஆற்றல்கள் படைத்த நகர மக்கள் திரும்பிவருமாறு படையினர் கேட்டுக்கொள்வர்'' இதை வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால் அவர்களது நகரத்தை அழித்துவிட்டு பல்லாயிரக்கணக்கான அதன் மக்களை கொன்றுகுவித்துவிட்டு மேலும் ஆயிரக்கணக்கானோரை கைது செய்த பின்னர் இராணுவம் திரும்பி வருவோரை அமெரிக்கக்கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் ''மறுசீரமைப்புத்'' திட்டங்களில் பணியாற்ற கட்டாயப்படுத்தப்படுவர்.

இந்த அமெரிக்கத்திட்டத்தின் மோசமான போக்கு தெளிவாக வெளிச்சம்போட்டக் காட்டுகிறது. ''ஈராக்கியர் சுதந்திர நடவடிக்கை திட்டம்'' என்ற பெயரால் அமெரிக்க இராணுவம் தன்னால் முடிந்தவரை அந்த மக்களை சர்வாதிகார அடிப்படையில் கட்டுப்படுத்தி ஒரு போலீஸ் அரசை திணிப்பதற்கு முயன்றுவருகிறது.

அமெரிக்கா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகிறதா?

நகரின் சில பகுதிகளில் ஈராக் போராளிகளுக்கெதிராக அமெரிக்கப்படைகள் இன்னும் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன. பல அரபு ஊடக செய்தி மூலங்களும் மற்றும் நேரில் கண்டவர்களும் அவர்கள் நாபாம் (Napalm) என்கிற விஷ குண்டு உட்பட இரசாயன ஆயுதங்களை மிச்சமிருக்கும் எதிரிகளையும் அழிப்பதற்காக அவர்கள் பயன்படுத்திக் கொண்டு வருவதாக தெரிவித்த செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆசியா டைம்ஸ் வலைத் தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள Pope Esobar வெளியிட்ட ஒரு அறிக்கையின் படி: ''பல்லூஜா மருத்துவர்கள் வீங்கிய நிலையில், அல்லது மஞ்சள் நிறம் பூத்த உடல்களை எந்தவிதமான காயமும் இல்லாமல் பார்த்தனர். அல்லது, நபாம் என்கிற விஷ குண்டினால் பலியான 'உருகிய உடல்களை' கண்டனர், நபாம் பாலிஸ்தைரின் மற்றும் ஜெட் விமான எரிபொருள் கலந்த பயங்கர கலவையாகும். இந்த ''விஷ வாயு'' தாக்குதலில் இருந்து தப்பி ஜோலான் புறநகர் பகுதிக்கு ஓடிய நகரவாசிகள் தந்துள்ள தகவல்கள் நமது செய்தி மூலங்களை உறுதிப்படுத்துகின்றன. ஒரு நகரவாசியான Abu Sabah, ஒரு காளான் போன்ற மேகமூட்டம் காணப்பட்டது மற்றும் அதற்குப்பின்னர் அதிலிருந்து நீண்ட புகை வாலோடு சிறிய துண்டுகள் விழுந்தன. இந்த வியப்பூட்டும் சிறிய குண்டுகள் பெரிய தீ மூட்டத்தை ஏற்படுத்துகின்றன. அதன் மீது தண்ணீரை ஊற்றினாலும் அது தோலை எரித்துவிடுகிறது என்று கூறினார். அதுதான் நபாம் அல்லது வெள்ளை பொஸ்பரஸ் தாக்குதலுக்கு இல்லாக்கிற மக்களுக்கு ஏற்படுவதாகும்.''

பெயர் குறிப்பிட விரும்பாத போராளி வட்டாரங்களை மேற்கோள் காட்டி Al-Quds Press ''அமெரிக்க ஆக்கிரமிப்புத்துருப்புக்கள் போராளிகள் மீது புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. மற்றும் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்டுள்ள இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி போராளிகளை எதிர் கொள்கின்றனர்'' என்று குறிப்பிட்டிருக்கிறது.

பாக்தாத் டாக்டரான Ibrahim al-Kubaisi ஒரு மருத்துவ வாகனங்களோடு சென்றார், அவருக்கு அமெரிக்கத் துருப்புக்கள் பல்லூஜா நகருக்குள் நுழைய அனுமதி மறுத்துவிட்டது. அவரை மேற்கோள் காட்டி அல்ஜெசீரா தகவல் தந்திருக்கிறது. al-Kubaisi தந்துள்ள தகவலின் படி: ''பல்லூஜாவில் ஒரு பயங்கரமான குற்றச்செயல் நடந்து கொண்டிருக்கிறது. மற்றும் அதைப்பற்றி எவரும் அறிந்து கொள்வதை அவர்கள் விரும்பவில்லை. நான் நான்கு காயமடைந்த மக்களை ஜோர்தான் தள மருத்துவ மனையிலிருந்து (பல்லூஜாவிற்கு அருகிலுள்ளது) பாக்தாத் மருத்துவ மனைக்கு மாற்றினேன். அவர்கள் என்னிடம் அங்கு ஒரு குற்றம் நடப்பதாகவும் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினர். உடல்களில் துப்பாக்கி குண்டு காய அடையாளங்கள் இல்லை, ஆனால் கருப்பாக தீய்ந்துபோன பகுதிகள் காணப்படுகின்றன. பல்லூஜாவிலுள்ள al-Hadra al-Muhammadiya பகுதிக்குள் மக்கள் செல்வதற்கு அனுமதிக்கின்றனர். ஆனால் al-Julan, al-Askari மற்றும் al-Senai புறநகர்பகுதிகளில் சண்டை நடந்துகொண்டிருப்பதால் அமெரிக்கத் துருப்புக்கள் அங்கு மக்கள் நுழைவதற்கு தடை விதித்திருக்கின்றனர்''

பல்லூஜா நகரில் 6,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், அவர்களில் பலர் பொதுமக்கள் என்றும் ஈராக் ரெட் கிரசன்ட் பிரதிநிதியான மொஹமத் அல் நூரி மதிப்பிட்டிருக்கிறார். அந்த நகருக்குள் நடமாடுவதே சிரமமாக இருக்கிறது ஏனென்றால் உடல்கள் சாலைகளில் சிதறிக்கிடக்கின்றன என்று அவர் BBC இற்கு தெரிவித்தார்.

''எங்கு பார்த்தாலும் உடல்கள் கிடக்கின்றன. ஈராக் ரெட் கிரசன்ட் (Red Crescent) இனர் தருகின்ற உணவுப் பொட்டலங்களை பெறும்போது அந்த மக்கள் கதறி அழுவதை பார்க்க முடிகிறது. இது துயரம்மிக்க ஒரு மனிதநேய பேரழிவாகும்'' என்று அல் நூரி தெரிவித்தார்.

அந்த நகருக்குள் நுழையாமல் மடிந்தவர்கள் எண்ணிக்கையை முடிவு செய்வது இயலாத காரியமாகும். அமெரிக்க இராணுவம் சான்றை மறைப்பதற்காக பெரிய குழிகளை வெட்டி அவற்றில் சடலங்களை புதைத்துவிட்டதாக சில செய்திகள் தெரிவித்தன.

சென்றவாரம்தான் நகரின் சில பகுதிகளுக்கு உதவிகள் கிடைத்திருக்கின்றன. படையெடுப்பு ஆரம்பித்ததிலிருந்து சென்றவாரம் வரை முற்றுகையிடப்பட்ட நிலையில் தவித்துக்கொண்டிருந்த அந்த நகரத்து மக்களுக்கு, எந்தவிதமான உதவி கிடைப்பதையும் அமெரிக்க இராணுவம் தடுத்துவிட்டது.

உதவி இறுதியாக அந்த நகரத்திற்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டது பல்லூஜா நகரத்து மக்களுக்கு ஒரு பொறிவைப்பதற்காகவே என்று அல் ஜெசீரா ஒரு செய்தியில் தெரிவித்திருக்கிறது. அந்த செய்தி நிறுவனம் ஒரு பல்லூஜா நகரவாசியை மேற்கோள் காட்டியுள்ளது. உதவியைப் பெறுவதற்காக ரெட் கிரசன்ட் மையத்திற்குள் வருமாறு அமெரிக்கப்படைகள் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றன. ''அவர்கள் உதவிகளை பெறுவதற்காக ரெட் கிரசன்ட் மையத்திற்குள் வந்து திரண்டதும் அவர்களை அமெரிக்கப் படைகள் சுற்றிவளைத்து எவரும் வெளியேற முடியாது தடுக்கின்றனர். பின்னர் பெண்கள், குழந்தைகள், மற்றும் 15 வயதிற்கும் குறைந்த மற்றும் 55 வயதிற்கும் மேற்பட்ட ஆண்களை மட்டுமே அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேற அனுமதிக்கின்றனர்''.

Top of page