World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Grenade attack on Sri Lankan music concert kills two

இலங்கையில் இசை நிகழ்ச்சி மீதான கிரனேட் தாக்குதலுக்கு இருவர் பலி

By Nanda Wickramasinghe
17 December 2004

Use this version to print | Send this link by email | Email the author

கொழும்பில் கடந்த சனிக்கிழமை "டெம்ப்டேஷன் 2004" களியாட்ட நிகழ்ச்சிக்காக நிரம்பி வழிந்திருந்த பார்வையாளர் பகுதிக்குள் வீசப்பட்ட கைக்குண்டுக்கு இருவர் பலியாகினர். செய்தித்தாள் புகைப்படப் பிடிப்பாளரான லங்கா ஜயசுந்தர, ஒரு ஹோட்டல் வரவேற்பாளரான திலானி மஹேஷிகா ஆகிய இருவரே கொல்லப்பட்டவர்களாவர். இந்தக் குண்டு வெடிப்பில் மேலும் 19 காயமடைந்துள்ளதுடன் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்த கீழ்த்தரமான தாக்குதல் இலங்கையின் இனவாத அரசியலின் தன்மையை கோடிட்டுக் காட்டுவதோடு நாட்டைப் பற்றிக்கொண்டுள்ள தீவிரமான பதட்ட நிலைமைகளை சுட்டிக்காட்டுகிறது.

"டெம்ப்டேஷன் 2004" ஒரு தனியார் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு இளைஞர்களை இலக்காகக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் இலங்கை இளைஞர்கள் மத்தியில் புகழ்பெற்ற பொலிவூட் நடிகர் ஷாருக் கான் பங்கேற்றார். நிகழ்ச்சி இடம்பெற்ற குதிரைப் பந்தய மைதானம் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாக பல வாரங்களாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்ததோடு, அன்றைய தினம் சுமார் 25,000 பேர் நிகழ்ச்சியைக் காண வந்திருந்தனர்.

எவ்வாறெனினும், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை, பெளத்த பிக்குகள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் சிங்களப் பேரினவாத அமைப்பான ஜாதிக ஹெல உறுமய பெரும் எதிர்ப்பையும் கூச்சலையும் வெளிப்படுத்தியது. முன்னணி பெளத்த பிக்குவான கங்கொடவில சோமவின் முதலாவது நினைவு தினத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடக்கவிருப்பதாக கூறியே இந்த வன்செயல்கள் இடம்பெற்றன.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கான காரணங்கள் போலியானவையாகும். கங்கொடவில சோம டிசம்பர் 12 ம் திகதி இறந்தாரே அன்றி, களியாட்டம் இடம்பெற்ற 11 ம் திகதி அல்ல. இரண்டாவதாக, "டெம்ப்டேஷன் 2004" போலவே அன்றைய தினம் நடைபெற்ற சைக்கிள் ஓட்டப்போட்டி உட்பட இன்னும் பல இசை நிகழ்ச்சிகளுக்கு ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இந்த நிகழ்ச்சிகளில் இந்திய திரைப்பட நடிகர்கள் பங்கேற்கவில்ல, எனவே அவை தேசிய மற்றும் சமய உணர்வுகளுக்கு எதிரானது அல்ல என கருதப்பட்டது.

டிசம்பர் 2 ல் இடம்பெற்ற ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில், ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் ஒமல்பே சோபித தேரர்: "நாம் ஷாருக் கான் நிகழ்ச்சியை ரத்து செய்வதற்காக அரசாங்கத்தை தள்ளுவதற்காகவும், வனக்கத்திற்குரிய சோம தேரரின் மரணம் பற்றி விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஒரு ஆணைக்குழுவை நியமிக்குமாறு அரசாங்கத்தை நெருக்குவதற்காகவும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம்" என பிரகடனம் செய்தார்.

கடந்த ஆண்டு கங்கொடவில சோம ரஷ்யாவில் மரணமடைந்த போது, பலவித சிங்களப் பேரினவாத அமைப்புக்கள் அவர் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டதாக எந்தவொரு சாட்சியமுமின்றி குற்றம்சாட்டின. அவர்கள் அவரது மரணத்தைப் பற்றிய விசாரணைகளை மட்டுமன்றி, குறிப்பாக பலவித கிறிஸ்தவ அமைப்புக்களால் பெளத்தர்கள் முறையற்று மதமாற்றம் செய்யப்படுவதை தடுப்பதை இலக்காகக் கொண்ட ஒரு சட்டத்தை அமுல்செய்யுமாறும் கோரினர். கடந்த வருட முற்பகுதியில் இருந்து கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் மற்றும் நாடு பூராவுமுள்ள வணக்கத் தளங்கள் மீதும் சுமார் 30 வன்முறைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தீவிர வலதுசாரி கருவியான சிஹல உறுமய, ஜாதிக ஹெல உறுமய என மாற்றம் செய்யப்பட்டது முதல், கடந்தாண்டு நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இந்த அமைப்பு முன்னணியில் இருந்து வந்துள்ளது. ஏப்பிரல் தேர்தல்களில் பிரதான அரசியல் கட்சிகள் மீதான பரந்த அதிருப்திகளை சுரண்டிக்கொண்டு, ஊழல்களுக்கு முடிவுகட்டுவதாகவும் "பாராளுமன்றத்தை சுத்தம் செய்வதாகவும்" வாக்குறுதியளித்து ஜாதிக ஹெல உறுமய ஒன்பது ஆசனங்களை வென்றது. எப்படி இருந்த போதிலும், அந்தக் கட்சி அவதூறுகள் மற்றும் கசப்பான உள்முரண்பாடுகளுக்குள் அப்போதிலிருந்தே சிக்கிக்கொண்டுள்ளது. இவை அதனது ஆதரவை இழக்கச் செய்துள்ளன. ஆகவே, இந்த களியாட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் கட்சியின் வீழ்ச்சிகண்டுவரும் ஆதரவை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியை இலக்காகக் கொண்ட ஒரு சிடுமூஞ்சித்தனமான செயல் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை.

சோம ஹிமி சிந்தன பதனம எனும் (Soma Himi Chinthana Padanama) பெயரிலான ஒரு முன்னணி அமைப்பு, இந்த களியாட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக பெளத்த பிக்குகள் குழுவின் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தது. ஆனால், இந்த ஆத்திரமூட்டும் ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னணியில் ஜாதிக ஹெல உறுமய இருப்பது தெளிவு. ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற குழுத் தலைவரான அதுரலிய ரத்னே, இக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சோபிதவுடன் சேர்ந்து நிகழ்ச்சி அமைப்பாளர்களுடன் ஒரு "சமரசத்தை" அடைவதற்காக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உத்தியோகபூர்வமாக மண்ணிப்புக் கோரியதை அடுத்து பெளத்த பிக்குகள் உண்ணாவிரத்தை முடிவுக்கு கொண்டுவந்த போதிலும், அவர்களின் சில நூறு ஆதரவாளர்கள் நிகழ்ச்சி இடம்பெவிருந்த இடதிற்கருகில் உக்கிரமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் நுளைய முற்பட்டதை அடுத்து பொலிசாருடன் வன்முறையான மோதல்கள் வெடித்தன. அறிக்கைகளின் படி, அதுவரையும் அங்கிருந்த ரத்னே மற்றும் சோபித ஆகியோர் கூட்டத்தை கலைப்பதற்கு எந்த முயற்சியையும் செய்யவில்லை.

இந்த சம்பவத்தில் பண்ணிரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அருகில் இருந்து மைதானத்தில் கங்கொடவில சோமவின் மரணத்தை நினைவு கூர்வதற்காக கூடியிருந்த இன்னுமொரு குழுவுடன் சேர்ந்துகொண்டனர். இந்தக் குழு, ஜாதிக ஹெல உறுமய தலைவர் ரத்னேயின் தூண்டுதலால் கைதுசெய்யப்பட்டிருந்த 12 பேரையும் விடுதலை செய்யக் கோரியதுடன் சில மணித்தியாலங்களின் பின்னர் பொலிசார் அவர்களை விடுதலை செய்தனர்.

இத்தகைய ஒரு சூழிநிலையிலேயே இரவு 11.30 மணிக்கு பார்வையாளர்கள் மீது கிரனேட் வீசப்பட்டது. வீசியது யார் என்பது பற்றி இன்னமும் விசாரணைகள் நடைபெறுவதோடு இதுவரையும் யாரும் கைது செய்யப்படவில்லை.

அங்கு வருகை தந்திருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உட்பட பல முன்னணி இந்திய பிரஜைகளின் உயிரை ஆபத்துக்குள்ளாக்கிய இந்த தாக்குதலையிட்டு புது டில்லி உடனடியாக அதிருப்தியை வெளிப்படுத்தியது. பொலிஸ் விசாரணைகளின் முன்னேற்றத்தை கவனமாக பின்பற்றப் போவதாக இந்திய அரசாங்கம் சுட்டிக்காட்டியது.

ஆயினும், கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தினதும் மற்றும் ஊடகங்களினதும் பிரதிபலிப்புகளின் மூலம், இத் தாக்குதலைப் போலவே இலங்கை அரசியலினதும் தன்மையை அம்பலப்படுத்தியது.

ஐலண்ட் பத்திரிகை பொருளாதார தாக்கத்திற்கு தன்னை முன்கூட்டியே ஈடுபடுத்திக்கொண்டது. "நாட்டின் உல்லாசத் துறைக்கு ஒரு நன்மதிப்பைக் கொடுக்கவிருந்த மற்றும் மில்லியன் கணக்கான ஷாருக் கான் ரசிகர்களுக்கு ஒரு உயர்ந்த அன்பளிப்பாகவிருந்த ஒரு நிகழ்ச்சி துரதிஷ்டவசமாக இறுதியில் அழிவுகரமானதாக முடிவடைந்தது" என்று அந்த செய்தியிதழ் ஒப்பாரி வைத்தது. இதே போன்று டெயிலி மிரர் பத்திரிகையில் ஒரு கட்டுரைக்கு "இலங்கைக்கு வருத்தத்திற்குரிய ஒரு நாள்" என தலைப்பிடப்பட்டிருந்தது: "டெம்ப்டேஷன் 2004 உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கொழும்பை ஒரு களியாட்ட மையமாக முன்தள்ளும் ஒரு நிகழ்ச்சியாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது" என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய முன்ணியை (ஐ.தே.மு) குற்றம்சாட்ட முயற்சித்தது. ஞாயிறு அன்று ஒரு கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி குமாரதுங்க: "தெற்கில் குண்டுத் தாக்குதல் நடத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பயன்படுத்த முடியாமையினால், ஐ.தே.மு விடுதலைப் புலிகளின் வேலையைப் பொறுப்பேற்றுள்ளது" என பிரகடனம் செய்தார்.

எந்தவொரு சாட்சியமும் இன்றி குமாரதுங்க பின்வருமாறு உறுதியாகக் கூறுகின்றார்: ''கொழும்பில் இந்திய கலைஞர்கள் பங்குபற்றிய இசை நிகழ்ச்சியில் நடந்த குண்டுத் தாக்குதலின் பின்னணியில் கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு ஐ.தே.மு பாராளுமன்ற உறுப்பினர் இருக்கின்றார். ஐ.தே.மு இதைச் செய்ததற்குக் காரணம் ஜனநாயக வழியில் ஆட்சிக்குவர முடியாததாலேயே ஆகும்." ஜனாதிபதி செயலகத்திலிருந்து வெளியான ஒரு அறிக்கையானது இந்த சம்பவம் "சமுதாயத்தில் சட்ட விரோத சக்திகளை துடைத்துக் கட்டும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை" பலப்படுத்தும்" என எச்சரித்துள்ளது.

சுதந்திர முன்னணியின் இரண்டாவது பெரும் பங்காளியான சிங்கள தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சற்று வேறுபட்ட விதத்தில் விடயத்தை கையாண்டது. அது தனது ஊடக அறிக்கையில், கொழும்புக்கும் புது டில்லிக்கும் இடையிலான உறவை கீழறுப்பதே விடுதலைப் புலிகளின் தேவையாகும் எனக் கூறுவதன் மூலம் தாக்குதலுக்கான குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் மீது சுமத்தியது. இந்த கிரனேட் தாக்குதல் "விடுதலைப் புலிகளை சாந்தப்படுத்த முயற்சிக்கும் சில தோல்விகண்ட சக்திகளால்" ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என ஜே.வி.பி மேலும் குற்றம் சாட்டுகிறது -- இந்த மூடிமறைப்பானது ஐ.தே.மு மீது குற்றம் சாட்டுவதற்கேயாகும்.

அரசாங்கம் இந்த தாக்குதலை தலைநகரம் பூராவும் பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்காக உடனடியாக பயன்படுத்திக் கொண்டது. நகரின் பிரதான இடங்களில் ஆயுதபாணிகளாக்கப்பட்ட பொலிஸ் மற்றும் இராணுவத்தினரும் நிறுத்தப்பட்டதோடு வாகனங்கள் நோக்கமின்றி பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. ஆயினும், இந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகள் என்பன பெளத்த பிக்குகளை நோக்கி அல்லாமல் "விடுதலைப் புலி சந்தேக நபர்கள்" மற்றும் நாட்டின் தமிழ் சிறுபாண்மையினரை இலக்காகக் கொண்டது என்பதில் சிறிதளவு சந்தேகமே இருக்க முடியும்.

ஐ.தே.மு தனது பங்கிற்கு, அரசாங்கம் தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளது எனவும் நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஒழுங்குகள் தளர்ச்சியாக இருந்ததற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அரசாங்கத்தை குற்றம் சாட்டியது.

ஒருவரும் உண்மையான சந்தேக நபர்களான ஜாதிக ஹெல உறுமய, பெளத்த பீடத்தின் பிரிவுகள் மற்றும் சிங்கள இனவாத குழுக்களை நோக்கி விரல் நீட்டவில்லை. இவர்கள் உண்மையிலேயே கிரனேட் தாக்குதலை திட்டமிட்டிருக்காவிட்டாலும் கூட, அத்தகைய ஒரு தாக்குதலுக்கான அரசியல் நிலைமைகளை உருவாக்கி விட்டமைக்கு இந்த பாசிச தட்டுக்களே உண்மையான பொறுப்பாளிகளாகும்.

இந்த குண்டுத் தாக்குதலையிட்டு பரந்த வெறுப்பு அதிகரித்ததை அடுத்து, ஜாதிக ஹெல உறுமய அதனை பொறுப்பேற்க மறுத்தது. ஊடகங்களுக்கு ஜாதிக ஹெல உறுமய வெளியிட்ட ஒரு அறிக்கையில்: "இந்த குண்டுத் தாக்குதலில் எங்களுக்கோ அல்லது உண்ணாவிரதம் இருந்த பிக்குகளுக்கோ எந்த தொடர்பும் கிடையாது. எங்கள் மீது குற்றம் சுமத்த யாரோ சதி செய்கிறார்கள், ஆனால் நாங்கள் அப்பாவிகள். ஷாருக் கான் இந்தியாவிலும் அதே போல் ஆசியாவிலும் புகழ்பெற்றவர். அவரை எதிர்ப்பதில் எங்களுக்கு அக்கறையில்லை" என பிரகடனம் செய்தது. ஆயினும் எல்லா ஆதாரங்களும் இதற்கு எதிர் திசையையே சுட்டிக்காட்டுகின்றன.

குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், பிரதான அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் ஜாதிக ஹெல உறுமய மற்றும் அதன் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளை கண்டனம் செய்வதோடு முடித்துக்கொண்டனவே ஒழிய அதை விமர்சிக்கவில்லை. சுதந்திர முன்னணியும் ஐ.தே.மு வும் அக்கறை கொண்டுள்ளது போல், இதில் ஒரு உடனடி முக்கியத்துவம் உள்ளது: இரு சாராரும் பாராளுமன்றத்தில் தங்களது மிகவும் ஸ்திரமற்ற கூட்டணியின் அங்கத்தவர்களை பெருக்கிக்கொள்ள ஜாதிக ஹெல உறுமயவை பரிந்து கேட்க முயற்சிக்கின்றனர்.

மிகவும் அடிப்படையான விதத்தில், முழு அரசியல் ஸ்தாபனமும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கருவிகளில் அதன் தீவிரமான வெளிப்பாட்டைக் காட்டும் சிங்களப் பேரினவாதத்தில் ஆழமாக மூழ்கிப்போயுள்ளது. அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக அரச எந்திரத்திற்கான தத்துவ மேற்பூச்சாகவும் தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காகவும் இலங்கை முதலாளித்துவம் தமிழர் விரோத பேரினவாதத்தை சுரண்டிக்கொண்டுள்ளது. இதன் விளைவு 60,000 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்ட அழிவுகரமான உள்நாட்டு யுத்தமாக இருந்த வந்துள்ளது.

முற்றிலும் இனவாதத்தால் விசமூட்டப்பட்ட இத்தகைய அரசியல் காலப்போக்கில் மட்டுமே ஜாதிக ஹெல உறுமயவுக்கும் அதன் நெருக்கமானவர்களுக்கும் கொழும்பில் உள்ள உத்தியோபூர்வ வட்டாரங்களின் எந்தவொரு கடுமையான விமர்சனங்களில் இருந்தும் மற்றும் சாத்தியமான விதத்தில் கிரனேட் தாக்குதலில் அதன் தொடர்பு பற்றிய பொலிசாரின் எந்தவொரு கடுமையான புலனாய்விலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியும்.

Top of page