World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Razing of Fallujah fails to break Iraqi resistance

பல்லுஜா அழிக்கப்பட்டாலும் ஈராக்கியர் எதிர்ப்பு முறியடிக்கப்படவில்லை

By James Cogan
13 December 2004

Use this version to print | Send this link by email | Email the author

பல்லுஜா அழிக்கப்பட்டதன் மூலம் ஈராக்கில் ``கிளர்ச்சிக்காரர்களின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டது`` என்று சென்ற மாதம் அமெரிக்க லெப்டினென்ட் ஜெனரல் ஜோன் சேட்டலர் பாராட்டினார். 1,200-க்கு மேற்பட்ட ஈராக்கிய போராளிகளை அந்த நகரத்தின் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலில் கொன்றுவிட்டதாகவும், போராளிகள் என்ற சந்தேகத்தில் மேலும் 2000 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்றும் அமெரிக்க இராணுவம் கூறியது. அந்த நகரம் அழிந்து கிடக்கிறது, பல்லாயிரம் தொன்கள் எடை கொண்ட அமெரிக்க குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளால் அந்த நகரமே சிதைந்து கிடக்கிறது. பல்லூஜா மக்கள் தங்களது சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டுவிட்டனர். 1,20,000 மக்கள் வசதிக் குறைவான நகரங்களிலும், அமரியா நகரத்திலும் அதைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக முகாம்களிலும் தங்கியிருக்கின்றனர் மற்றும் மேலும் 1,00,000 பேர் பாக்தாத்திலும், இதர நகரங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

என்றாலும், அந்த தாக்குதல் நடந்து 4 வாரங்களுக்கு பின்னர் அந்த தாக்குதலால் அந்த அட்டூழியங்களால் ஈராக் மக்கள் மிரட்டப்பட்டு ஆயுதந்தாங்கிய எதிர்ப்பிற்கு ஆதரவு தருவது முடிந்துவிடும் என்ற கூற்றை மறுக்கின்ற வகையில் இப்போது ஈராக் முழுவதிலும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பல்லூஜா படுகொலைகள் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கெதிரான போரை எந்த வகையிலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நூற்றுக்கணக்கான ஈராக் இடைக்கால அரசாங்க துருப்புக்களும், போலீசாரும், அதிகாரிகளும் மற்றும் கூலிப்படை ஒப்பந்தக்காரர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர், அல்லது காயமடைந்திருக்கின்றனர். அதே நேரத்தில் டிசம்பரில் அமெரிக்க இராணுவத்தின் சராசரி பாதிப்பாக ஒவ்வொரு நாளும் இரண்டு பேருக்கு மேல் கொல்லப்படுகின்றனர், 25 பேருக்கு மேல் காயமடைகின்றனர்.

அமெரிக்க துருப்புக்கள் மீது நடத்தப்படுகின்ற மிகப்பெரும்பாலான தாக்குதல்கள் செய்திகளாக வெளிவருவதில்லை. பாக்தாத்தில் தினசரி குண்டு வீச்சுக்கள், கை வெடிகுண்டுத் தாக்குதல்கள் திடீர் தாக்குதல்கள் நடந்துகொண்டு இருக்கின்றன, இத்தாலி தூதரகம் முதல் அமெரிக்க தூதரகம் இடைக்கால அரசாங்க அலுவலகங்களும் இடம்பெற்றுள்ள பச்சை மண்டலம் வரை குறிவைத்து தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. பெரும்பாலும் சுன்னி முஸ்லீம்கள் வாழும் புறநகர் பகுதிகள் போர் மண்டலங்களாகவே ஆகிவிட்டன. Time வார இதழுக்கு பேட்டியளித்த ஒரு கடைக்காரர், Adhamiyah புறநகர் ``பாக்தாத்திற்கு நடுவில் ஒரு சிறிய பல்லூஜாவாக`` ஆகிவிட்டது என்று கூறியுள்ளார். ஏறத்தாழ ஒரு மாதமாக அமெரிக்க பிரிட்டிஷ் மற்றும் அரசாங்கத் துருப்புக்கள் பாக்தாத்திற்கு தெற்கிலுள்ள நகரங்களிலும், கிராமங்களிலும் பல்வேறு கொரில்லா குழுக்களை ஒழித்துக்கட்ட முயன்று வருகின்றன.

சென்ற வாரக் கடைசியில் மட்டுமே கிளர்ச்சிக்காரர்கள் தலைநகரில் ஒரு அமெரிக்க போர் வீரர், மூன்று மூத்த போலீஸ் அதிகாரிகள், அரசாங்க ஊழியர்கள் என்று நம்பப்படும் நான்கு பேரை கொன்றுவிட்டனர். கடந்த மூன்று வாரங்களில் இரண்டு முறை கிளர்ச்சிக்காரர்கள் பாக்தாத் போலீஸ் நிலையங்கள் மீது பட்டப்பகலில் துணிச்சலாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர். நவம்பர் 20-ல் 300-க்கும் மேற்பட்ட கிளர்ச்சிக்காரர்கள் Adhamiyah-வில் ஒரு போலீஸ் நிலையத்தை தாக்கினர், அதனால் ஏற்பட்ட போர் பல மணி நேரம் நீடித்தது. டிசம்பர் 2-ல் ஈராக் போராளிகள் நகரின் தென்பகுதியில் ஒரு போலீஸ் நிலையத்தை வெற்றிகரமாக பிடித்துக்கொண்டனர், 11 போலீசாரை கொன்றனர், 50-க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்தனர்.

அமெரிக்க இராணுவம் தலைநகரை தன்கையில் பாதுகாப்பாக தக்க வைத்க்கொள்ள முடியவில்லை என்பதை டிசம்பர் 3-ல் நடைபெற்ற சம்பவம் தெளிவாக விளக்குகிறது. ஆஸ்திரேலிய பாதுகாப் அமைச்சர் ரொபர்ட் ஹில் பாக்தாத் விமான நிலையத்திலிருந்து தனது பாதுகாப்பு தொடர்பான அச்சத்தின் காரணமாக ஆஸ்திரேலிய தூதர் அலுவலகத்திற்கு பயணம் செய்ய முடியவில்லை. அந்த நேரத்தில் அமெரிக்க இராணுவம் முழுமையாக இராணுவப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் அந்த வெளிநாட்டு பிரமுகரை பாதுகாப்பாக ஏற்றி வருவதற்கு ஹெலிகாப்டர் எதுவும் கிடைக்கவில்லை.

மூன்று நாட்களுக்குப் பின்னர், ஆக்கரமிப்பு மையத்திலிருந்து அப்பால் உள்ள பகுதிகளில் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதில் தங்களது ஆற்றலைக் காட்டும் விதமாக பச்சை மண்டலத்திற்கு அருகிலுள்ள பிரதான Haifa Street மாவட்டத்தில் கிளர்ச்சிக்காரர்கள் நடவடிக்கைகளை நடத்திக்காட்டினர். அமெரிக்கத் துருப்புக்கள் ஆயுதந்தாங்கிய கவச வாகனங்களில் வந்து விரட்டுவதற்கு முன்னர், கொரில்லாக்கள் பகிரங்கமாக ஒரு அரசு ஊழியரை கொலை செய்தனர்.

USA Today பெற்றுள்ள இரகசிய புலனாய்வு தகவலை சென்ற வாரக் கடைசியில் பிரசுரித்திருக்கிறது, அமெரிக்க இராணுவம் ஆயுதந்தாங்கிய எதிர்ப்பை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத, பிராந்தியங்கள் அடிப்படையிலான கொரில்லாக் குழுக்களின் செயல் என்று கருதவில்லை, மாறாக படையெடுப்பிற்கு முன்னர் அமைக்கப்பட்ட ஒரு மையப்படுத்தப்பட்ட ஆணையக கட்டமைப்பின் கீழ் ஒரு நவீன கிளர்ச்சி அமைப்பு என்று அமெரிக்க இராணுவம் கருதுகிறது. பிரதான சுன்னி முஸ்லீம் பிராந்தியங்களான மத்திய மற்றும் வடக்கு ஈராக் பகுதிகளில் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் அந்தப் போராளிக் குழுக்கள் நாடு முழுவதிலும் தங்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைத்துக்கொள்ளும் வல்லமை படைத்ததாக உள்ளன. இந்த ஆயுதந்தாங்கிய போராட்டத்தில் குறைந்தபட்சம் 20,000 பேர் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக அமெரிக்க புலனாய்வு இப்போது மதிப்பிட்டிருக்கிறது.

பல்லூஜா மீது ஒருங்கிணைந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தும்போது அதை முறியடிக்க முடியாது என்பதை அறிந்துகொண்டு ஏராளமான போராளிகள் அந்த நகரத்திலிருந்து வெளியேறி இதர பெரிய மற்றும் சிறிய நகரங்களில் எதிர்ப்புக் குழுக்களோடு இணைந்து கொண்டனர். பாக்தாத் போலீஸ் நிலைய தாக்குதலில் கொல்லப்பட்ட சில ஈராக்கியர்கள் பல்லூஜா நகரிலிருந்து வந்தவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பல்லூஜா கவுன்சில் தலைவரான ஷேக் அப்துல்லாஹ் அல்-ஜனாபி டிசம்பர் 5ல் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கவுன்சிலின் உறுதிபாட்டை அறிவித்துள்ளார், ``ஈராக்கை விட்டு ஆக்கிரமிப்பாளர்களும், அவர்களது ஏஜென்டுகளும் வெளியேறுகிறவரை அவர்களுக்கெதிரான ஜிஹாத் நீடிக்கும்.'' பல்லூஜா உலகில் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களது குரலாகவும், சின்னமாகவும் மற்றும் கிளர்ச்சிக்கான உறுதியான அரங்காகவும் விளங்குகிறது`` என்று குறிப்பிட்டிருக்கிறார். பல்லூஜாவில் நடைபெற்ற சண்டையில் ஜனாபி கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்க இராணுவம் ஈராக் இடைக்கால அரசாங்கமும் கூறியது, ஆனால் இதர எதிர்க்கட்சி தலைவர்களோடும், பிரதிநிதிகளோடும் அவர் பல்லூஜா நகரிலிருந்து தப்பி ஓடிவிட்டார் என்பது இப்போது நிச்சயம் என்று தோன்றுகிறது.

பல்லூஜாவிலிருந்து சில மணி நேர பயணத்தில் சென்று சேரத்தக்க தூரத்திலுள்ள அன்பர் மாகாண தலைநகரமான ரமடி இப்போது ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியின் குவிமையமாகியுள்ளது. அந்த நகரத்திற்குள்ளேயும், வெளியிலும் இருக்கின்ற அமெரிக்கத் துருப்புக்கள் அந்த நகரத்தின் மீது எந்தவித கட்டுப்பாடும் இல்லாத நிலையில் இருப்பதால் ஏறத்தாழ நிரந்தர தாக்குதலுக்கு இலக்காகிக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா தேர்ந்தெடுத்த பெரும்பாலான போலீசார் தங்களது பணிகளை துறந்து சென்றுவிட்டனர் அல்லது கிளர்ச்சிக்காரர்களோடு சேர்ந்துகொண்டனர்.

சென்ற வாரம் ஈராக் போலீஸ்காரர்களில் ஒருவர் வாஷிங்டன் போஸ்டிற்கு பேட்டியளிக்கும்போது, ``அமெரிக்கர்கள் எவரும் இல்லாவிட்டால் ரமடியில் வழக்கமான வாழ்வு நிலவும். ஆனால் அமெரிக்கர்கள் உள்ளே நுழைந்ததும் மோதல்கள் தொடங்கிவிடுகின்றன. போராளிகள் உடனடியாக தேனீக்களைப் போல் திரண்டு வந்து அமெரிக்கர்களை எதிர்கொள்கிறார்கள்`` என்று குறிப்பிட்டார். சென்ற புதன்கிழமை, இரண்டு அமெரிக்க கவச வாகனங்கள் புறநகர் பகுதியில் தாக்கப்பட்டன, அந்த பகுதியில் செயல்பட்டு வரும் அமெரிக்க மரைன் படைப்பிரிவுகளில் ஒன்றில் மட்டுமே நவம்பர் மாதத்தில் மட்டும் எட்டு பேர் மடிந்திருக்கின்றனர், பல பேர் காயமடைந்திருக்கின்றனர்.

சமரா நகரை அக்டோபரில் ''தங்கள் வசம்''' எடுத்துக்கொண்டுவிட்டதாக அமெரிக்கப் படைகள் கூறின. ஆனால் டிசம்பர் 8-ல் 40 நிமிடங்களில் அமெரிக்க மற்றும் போலீஸ் இலக்குகள் மீது போராளிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஒரு போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டது, ஆயுதங்களை எடுத்துக்கொண்டார்கள் மற்றும் அந்தக் கட்டிடம் தகர்க்கப்பட்டது. மற்றொரு போலீஸ் நிலையம் மீது குண்டு வீச்சு தாக்குதல்களும், துப்பாக்கி சூடுகளும் நடைபெற்றன. நகரின் மையப் பகுதியில் போராளிகள் அமெரிக்க துருப்புக்களோடு ராக்கெட் மூலம் செலுத்தப்படும் வெடிகுண்டுகளாலும், சிறிய ஆயுதங்களாலும் சண்டையிட்டனர். நகர போலீஸ் தலைவரின் வீட்டின் மீது சுட்டார்கள், அன்றைய தினம் அவர் பதவியிலிருந்து விலகினார்.

மோசூல் நகரில் பணியாற்றிய 5,000 போலீசார், அந்த நகருக்கு விரைந்து அனுப்பப்பட்ட அமெரிக்கத் துருப்புக்கள் மற்றும் குர்து போராளி இராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சிக்காரர்கள் தெருக்களில் ஒரு வாரம் சண்டையிட்டதைத் தொடர்ந்து, சென்ற மாதம் பதவிகளை இராஜிநாமா செய்து விட்டு வெளியேறிய பின்னர், மோசூல் போலீஸ் தலைவரும் கூட பதவியை இராஜினாமா செய்துவிட்டார். அவர்களில் தற்போது 1,200-க்கு மேற்படாதவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். ஆனால் அவர்கள் தங்களது அலுவலக சுற்றுச்சுவர்களை விட்டு அபூர்வமாகத்தான் வெளியேறுவர்..

மக்களோடு மக்களாக மோசூலில் கலந்துகொள்வதற்கு முன்னர், கிளர்ச்சிக்காரர்கள் அமெரிக்க துருப்புக்கள் மீதும் ஆக்கிரமிப்பிற்காக பணியாற்றிவரும் ஈராக்கியர்கள் மீதும் திட்டமிட்ட தாக்குதலை நடத்தினர். மோசூல் தெருக்களில் 160-க்கு மேற்பட்ட தேசிய காவலர்களது உடல்கள் கிடந்தன----- இவர்களில் மிகப்பெரும்பாலோர் குர்திஸ் பிரிவுகளை சார்ந்தவர்கள். டிசம்பர் 4-ல் ஒரு குர்து ரோந்து படைக்கு நடுவே ஒரு தற்கொலை குண்டு வீச்சாளி ஒரு கார் குண்டை வெடித்ததால், குறைந்தபட்சம் 16 பேர் கொல்லப்பட்டனர். இந்த வாரக் கடைசிக்கு மேலாக தெற்கு மோசூல் போலீஸ் பயிற்சி அமைப்பை பிடித்துக்கொள்ள முயன்ற கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடந்தன.

மோசூலில் அமெரிக்க படை நிலைகள் மீதும் ரோந்து படைகள் மீதும் தொடர்ந்து திடீர் தாக்குதல்கள் அல்லது குண்டு வீச்சுத்தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஞாயிறன்று ஒரு ஆயுதக்கிடங்கிற்கு அருகே நடைபெற்ற திடீர் தாக்குதலில் எட்டு அமெரிக்க துருப்புக்கள் காயமடைந்தன. அந்த நேரத்தில் ஒரு அமெரிக்க ஜெட் போர் விமானம் இருந்ததால் கொரில்லா தங்குமிடங்கள் என்று சந்தேகிக்கப்பட்ட பகுதிகளில் 500 இறாத்தல் குண்டுகளை வீசித் தாக்கி மேலும் அமெரிக்கர்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டது. என்றாலும், கிளர்ச்சி பரந்து சென்றுகொண்டிருக்கிறது மற்றும் அமெரிக்க இராணுவம் முழுவதும் பரவலாக பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுவிட்டது. எனவே இனி அமெரிக்கப் படைகள் அதிக அளவில் மடிவதும் காயமடைவதும் பிடிக்கப்படுவதற்குமான நடவடிக்கைகளின் நாட்கள் எண்ணப்பட்டு நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

சுன்னி நகர்களான Baquaba, Haditha மற்றும் Tikrit-லும், அதைச் சுற்றிலும் அத்துடன் Kirkuk நகருக் அருகிலுள்ள எண்ணெய் வளம் மிக்க பிராந்தியத்திலும் ஈராக்கியர்களுக்கும் ஆக்கிரமிப்புப் படைகளுக்குமிடையே அடிக்கடி மோதல்கள் நடந்துகொண்டிருப்பதை காணமுடிகிறது. அமெரிக்க இராணுவம் தளவாடங்களை அழிக்கும் பணிகளில் உதவுவதற்காக ஒரு பஸ் நிறைய வந்தவர்கள் மீது கொரில்லாக்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தபட்சம் 17 ஈராக் ஒப்பந்தக்காரர்கள் கொல்லப்பட்டனர். லோஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் தந்துள்ள தகவலின்படி, அந்த பஸ்சில் வந்தவர்கள் தெற்கு ஈராக்கிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. ''அதில் அமெரிக்க இராணுவத்திற்காக பணியாற்ற விரும்பி வந்த சில உள்ளூர்வாசிகளும் இருந்தனர்.''

கிர்குக் பகுதியில் எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி கொரில்லாக்கள் பிரதான எண்ணெய் குழாய் இணைப்புகளில் நாசவேலை தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். இடைக்கால அரசாங்க எண்ணெய் அமைச்சகம் செய்துள்ள மதிப்பீடுகளின்படி ஆகஸ்டிற்கும், அக்டோபருக்கும் இடையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் பிரதான நெடுஞ்சாலைகளை தங்களது கைவசம் வைத்துக்கொள்ள இயலாத நிலையிலும் ஈராக்கின் உள்கட்டமைப்புக்கள் சிதைந்துவிட்ட காரணத்தினாலும் எரிசக்தி வளம் மிக்க அந்த நாட்டில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எரிபொருளுக்கு பாக்தாத்தில் மைல்கணக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்கிறார்கள், வீடுகளுக்கு சமையலுக்கும், வீட்டை வெப்பமாக்குவதற்கும் மண்ணெண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சென்ற வாரம் Reuters அதிகாரபூர்வமான ஆவணங்களை மேற்கோள்காட்டி விடுத்திருந்த எச்சரிக்கையில் ``பாக்தாத் பகுதியில் எரிபொருள்கள் சப்ளை பற்றாக்குறை ஒரு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது. கணிசமான அளவிற்கு சப்ளை குறைந்துவிட்டது. நடப்பு நிலவரம் விரைவாக சரி செய்யப்படாவிட்டால் அரசாங்கத்தின் மீது பொதுமக்களது நம்பகத்தன்மை கணிசமான அளவிற்கு சிதைந்துவிடக்கூடும்`` என்று குறிப்பிட்டிருந்தது.

ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்து போரிட்ட ஈராக் இளைஞர்களில் எத்தனைபேர் கொல்லப்பட்டனர், அல்லது காயமடைந்தனர் என்ற விவரம் தெரியவில்லை. அது நிச்சயமாக ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கில் சென்றுகொண்டிருக்கிறது என்றாலும், போரிடும் வேட்கை நீடித்துக்கொண்டிருக்கிறது. 1990-91-ல் அமெரிக்கா தலைமையிலான ஈராக்கிற்கு எதிரான போரை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக ஐ.நா. தடைகள் செயல்படுத்தப்பட்டன, இவற்றின் விளைவாக ஈராக் மக்களுக்கு ஒரு பொருளாதார மற்றும் சமூக சீரழிவு ஏற்பட்டது. நடப்பு அமெரிக்க ஆக்கிரமிப்பு, நாட்டை உண்மையிலேயே ஒரு அமெரிக்க காலனியாக மாற்றி அதன் செல்வத்தை அமெரிக்க பெருநிறுவன நலன்களுக்காக சூறையாடுகின்ற ஒரு முயற்சி தான் என்பதை பெரும்பாலான ஈராக் மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கின்றனர். இடைக்கால அரசாங்கம் ஒரு பொம்மையாட்சி என்பதற்கு மேலாக எதுவுமில்லையென்று கருதப்படுகிறது, குறிப்பிடத்தக்க எந்த முடிவாக இருந்தாலும் பின்னணியில் அமெரிக்க தூதரகம் விழிப்புடன் புலன்விசாரணை செய்கிறது.

ஜனவரி 30-ல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள தேர்தல்கள் இதை மாற்றிவிடப் போவதில்லை. மூன்று பிரதான சுன்னி மாகாணங்களிலும், பாக்தாத்திலுள்ள சுன்னிப் பகுதிகளிலும் வாக்காளர் பதிவோ அல்லது தேர்தல் பிரச்சாரமோ எதுவும் நடக்கவில்லை. பரவலாக வாக்காளர்கள் வாக்குப்பதிவை புறக்கணிப்பார்கள் என்று சுன்னி அரசியல் கட்சிகள் ஊகங்களை வெளியிட்டிருக்கின்றன. வாக்குப்பதிவு எந்த அளவிற்கு இருந்தாலும், சுன்னிகள் ஷியாக்கள் மற்றும் குர்துகள் உட்பட----- ஈராக் மக்களில் மிகப்பெரும்பாலான பிரிவுகளைச் சார்ந்தவர்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் நடத்தப்படுகின்ற தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை சட்ட விரோதமானது என்றும் மக்களது பிரதிநிதித்துவ உரிமை படைத்ததல்ல என்றும் கருதுவார்கள் மற்றும் தொடர்ந்து ஆயுதந்தாங்கிய கிளர்ச்சிக்கு அனுதாபம் காட்டவே செய்வார்கள்.

Top of page