World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US caught wiretapping UN atomic energy head ElBaradei

ஐ.நா. அணுசக்தி கமிஷன் தலைவர் El Baradei தொலைபேசியை ஒட்டுக் கேட்கும்போது பிடிபட்ட அமெரிக்கா

By Peter Symonds
15 December 2004

Use this version to print | Send this link by email | Email the author

சர்வதேச அணுசக்தி ஏஜென்ஸி (IAEA) டைரக்டர் ஜெனரல் Mohammed El Baradei, புஷ் நிர்வாகத்தின் ராஜியத்தந்திர முரட்டுத்தனத்தின் கடைசி இலக்காகி இருக்கிறார். வாஷிங்டன் போஸ்ட் ஞாயிறன்று பிரசுரித்துள்ள ஒரு கட்டுரையில் ElBaradei-ன் டசின் கணக்கான தொலைபேசி தொடர்புகளை ஒட்டுக்கேட்டதாகவும் குறிப்பாக ஈரான் தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டதை அவருக்கு எதிராக சங்கடத்தை உண்டாக்கும் விவரங்களை தோண்டுகின்ற நோக்கில் அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கள் ஒட்டுக்கேட்டதாக அம்பலப்படுத்தியுள்ளது.

பல்வேறு அமெரிக்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி அந்தச் செய்தி பத்திரிக்கை எழுதியிருந்தது என்னவென்றால், ``ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக அண்மை வாரங்களில் அமெரிக்க அதிகாரிகள் El Baradei-க்கு எதிராக அநாமதேய குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். சில அமெரிக்க அதிகாரிகள் El Baradei திட்டமிட்டு IAEA வாரியத்திடமிருந்து ஈரான் திட்டத்தின் பல மோசமான விவரங்களை மறைத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளன. ஆனால் அத்தகைய ஒரு மூடி மறைக்கும் நடவடிக்கை பற்றி அவர்கள் எந்த சான்றும் தரவில்லை. 'அவர்களது திட்டம் என்னவென்றால் El Baradei மீது கவனத்தை நிலைநிறுத்தி சீற்றத்தைத் தூண்ட வேண்டுமென்பது தான்' என்று மற்றொரு அமெரிக்க அதிகாரி கூறினார்.``

1997 முதல் IAEA தலைவராக இருக்கும் ElBaradei-க்கு பதிலாக மற்றொருவரை நியமிக்க விரும்புகிறது என்ற உண்மையை வெள்ளை மாளிகை மறைக்கவில்லை, அவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிகிறது. செப்டம்பர் மாதத்திலேயே, அமெரிக்க அரசுத்துறை செயலாளர் கொலின் பவல் எகிப்தின் முன்னாள் தூதரக அதிகாரியும் வக்கீலுமான El Baradei பதவி விலகவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு பவல் மிக அற்பமான சாக்குப்போக்கைக் கூறினார். மூத்த ஐ.நா. ராஜியத்துறை பதவிகள் இரண்டு முறைக்கு மேல் இருக்கக்கூடாது என்ற ஒரு சம்பிரதாய "விதியை" அவர் சுட்டிக்காட்டினார்.

El Baradei பதவியிலிருந்து விலகவேண்டுமென்று வாஷிங்டன் விரும்புகிறது என்பதில் எந்த மர்மமுமில்லை. ஈராக்கிலும், ஈரானிலும் மற்றும் வடகொரியாவிலும் அணு ஆயுதங்கள் தொடர்பாக புஷ் நிர்வாகத்தின் கட்டுக்கதைகளை திரும்பத்திரும்ப அவர் ஆட்சேபித்திருக்கிறார். டெஹ்ரான் ஒரு இரகசிய அணு ஆயுதங்கள் திட்டத்தை வைத்திருக்கிறது என்ற ஆதாரமற்ற அமெரிக்க குற்றச்சாட்டுக்களை ElBaradei ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். சென்ற மாதம் நடைபெற்ற IAEA கூட்டத்திற்கு முன் அவர் தயாரித்த அறிக்கையில் ``ஈரானிலுள்ள அனைத்து அணு சாதனங்களுக்கும் கணக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எனவே அந்தப் பொருட்கள் தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளுக்கு திருப்பிவிடப்படவில்லையென்று`` அவர் முடிவு கூறியிருக்கிறார்.

டெஹ்ரானுடன் ஒரு பேரம் செய்து அதன் அணுத்திட்டங்களின் பிரதான அம்சங்களை முடக்கிவிட ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவர் ஆதரவாக செயல்பட்டதால் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு ஈரான் விவகாரத்தை எடுத்துச் சென்று அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை மீறி நடந்துவிட்டதாக ஈரானுக்கு தடை விதிக்கின்ற அமெரிக்க முயற்சிகள் பயனற்றதாக செய்வதற்கு ElBaradei உதவினார். ஈராக்கைப் போன்று இந்த நிகச்சிகளிலும், சட்டவிரோத அணு ஆயுத நடவடிக்கைகள் நடக்கின்றன என்ற சாக்குப்போக்கை கூறி டெஹ்ரான் ஆட்சியை கவிழ்க்கவும், எதிர்காலத்தில் இராணுவ ஆக்கிரமிப்பை நடத்தவும், வாஷிங்டன் ஆயத்தமாகி வருகிறது. 2002-ல் புஷ் "போக்கிரி நாடுகள்'' என்று முத்திரை குத்திய நாடுகளில் ஈராக் மற்றும் வடகொரியாவிற்கடுத்து வரும் நாடுகளில் ஈரானும் ஒன்று.

அமெரிக்க அழுத்தத்திற்கு பணிந்துவிடும் எந்தவிதமான உத்தேசமும் இல்லை என்பதை ElBaradei கோடிட்டுக்காட்டியுள்ளார். அவர் பவல் சுட்டிக்காட்டியுள்ள இரண்டு முறை தான் பதவி என்று கூறப்படும் விதியை மறுத்திருக்கிறார், IAEA டைரக்டராக மூன்றாவது முறையாக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ElBaradei தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன, IAEA-வின் இரகசிய அறிக்கைகள் பிரசுரிக்கப்படுவதற்கு முன்னர் அவற்றை ஈரான் அதிகாரிகளுக்கு காட்டினார் என்பது அதில் ஒரு குற்றச்சாட்டு. El Baradei இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்திருக்கிறார், IAEA தனது அறிக்கைகள் தொடர்பாக எவருக்கும் இரகசியத் தகவலோ அல்லது பேச்சு வார்த்தையோ நடத்தப்படவில்லை, குறிப்பாக சோதனைக்கு உட்படும் நாட்டில் விவாதம் எதுவும் நடத்தப்படவில்லையென்று கூறியதுடன், "ஒரு அறிக்கை தயாரிக்கப்படும்போது எந்த நாட்டை சேர்ந்தவருக்கும் அந்த அறிக்கையின் ஒரு பந்தியைக்கூட காட்டுவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.

அத்தகைய ஒரு குற்றச்சாட்டிற்கு மிகத் தெளிவான மூலாதாரம் என்னவென்றால் தொலைபேசி தொடர்புகளை ஒட்டுக்கேட்டதாகும். ஆனால் அமெரிக்க அதிகாரிகள் தொலைபேசி தொடர்புகளை பார்த்ததில் ElBaradei மீது குற்றம் சாட்டுவதற்கு எந்தவிதமான அடிப்படையும் இல்லையென்று கூறியுள்ளனர், ``சிலர் ஈரானியர் மீது அவர் மிகுந்த மெத்தனத்தன்மையோடு நடந்துகொள்வதாக தோன்றுகிறது என்று நினைப்பதாகத் தெரிகிறது அவ்வளவுதான்`` என்று ஒரு அதிகாரி வாஷிங்டன் போஸ்ட் -ற்கு தெரிவித்தார். அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவில் இடம்பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரான ஜோசப் பிடன் அமெரிக்க பத்திரிக்கைகளுக்கு தந்துள்ள கருத்துக்களில், ``இதுவரை எனக்குத் தெரிந்தவரை ElBaradei விரும்பத்தகாத, சட்ட விரோத அல்லது பொருத்தமற்ற எதையும் செய்ததாக ஒன்றும் கோடிட்டுக்காட்டவில்லை`` என்று அறிவித்தார்.

வாஷிங்டன் போஸ்ட் தந்துள்ள தகவலின்படி, புஷ் நிர்வாகம் ஏற்கனவே ElBaradei-க்கு பதிலாக இரண்டு தென்கொரிய அதிகாரிகள், ஒரு பிரேசில் நாட்டு ஆயுதக் குறைப்பு நிபுணர், இரண்டு ஜப்பான் நாட்டுத் தூதர்கள் மற்றும் இந்த பட்டியலில் முதன்மை இடம்பெற்றிருப்பவர், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் அலெக்ஸான்டர் டெளனர் உள்பட தகுந்த அதிகாரிகளை தேடி வருகிறது. நேற்று ஆஸ்திரேலியன் பைனான்சியல் ரிவியூ குறிப்பிட்டிருந்ததைப் போல் பல மாதங்களுக்கு முன்னரே El Baradei-க்கு ஒரு சாத்தியமான மாற்று டெளனர் என்று அமெரிக்க ஊடகங்களில் வதந்திகள் உலவியதாக குறிப்பிட்டிருக்கிறது. ``ஜோன் போல்டன் ஆயுதக் கட்டுப்பாட்டு மற்றும் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான அரசுத் துணை செயலாளர்-----அவர் அமெரிக்க நிர்வாகத்தின் மிகக்கடுமையான தீவிரவாத நோக்கு கொண்டவர்-----அவர் மறைமுகமாக டெளனரின் பதவிக்காக வலியுறுத்தி வருகிறார்`` என்று அந்த பத்திரிகை கூறியுள்ளது.

அந்த நேரத்தில் டெளனர் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்தார், தாமதத்திற்கு பின்னர் நேற்று அறிவித்த ஒரு அறிக்கையில் அவர் ElBaradei-க்கு தாம் அறைகூவலாக தோன்றப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். அவரது இந்தக் கருத்துக்கள் திடீரென்று அவருக்கு அணு ஆயுதங்கள் தொடர்பான விவகாரங்களில் அக்கறை செலுத்தி வருவதை விளக்குவதாக இல்லை-----இந்தத் துறையில் அவருக்கு முந்திய அனுபவமோ அல்லது நிபுணத்துவமோ இல்லை. ஆகஸ்ட்டில் எதிர்பாராத வகையில் அவர் பியோகாங்கிற்கு பயணம் செய்தார். வடகொரிய தலைவர்கள் அணு ஆயுதங்கள் தொடர்பாக 6 நாடுகள் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடக்க வேண்டுமென்று ஏற்றுக்கொள்ள செய்வதற்காக அவ்வாறு அங்கு சென்றார்-----இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஆஸ்திரேலியா ஒரு தரப்பே அல்ல. சென்ற மாதம் சிட்னியில் நடைபெற்ற ஆசிய - பசிபிக் அணு ஆயுதப் பரவல் தடுப்பு மாநாட்டில் அவர் நடுநாயகமாக இடம்பெற்றார். அதில் ElBaradei அவரது விருந்தினராக கலந்துகொண்டார்.

IAEA தலைவர் பதவிக்கு அமெரிக்காவின் பிரதிநிதியாக இடம்பெறுவதற்கு டெளனருக்குள்ள ஒரே உண்மையான தகுதி என்னவென்றால் கிளிப்பிள்ளைபோல் வாஷிங்டனின் அரசியல் நிலைப்பாட்டை எடுத்துரைப்பது. ஆஸ்திரேலிய அரசாங்கம் புஷ் நிர்வாகத்தின் ''பயங்கரவாதத்தின் மீதான போரையும்'' "முன்கூட்டித்தாக்கும் போர்'' என்ற கொள்கைவழியையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பிற்கு தனது துருப்புக்களை அனுப்பியது. அந்நாட்டின் வெளிவிவகாரங்கள் தொடர்பான பிரதிநிதி என்ற முறையில் டெளனர் ஈராக்கின் பேரழிவுகரமான ஆயுதங்கள் தொடர்பாக கூறப்பட்ட ஒவ்வொரு பொய்யையும் சொல்பிழையாது திரும்ப திரும்ப கூறி வந்தார். அதன் பிறகு, ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில் தனது அபிலாஷைகளுக்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெறுவதற்காக தனது உறுதியான ஆதரவை விசுவாசத்தை வாஷிங்டனுக்கு ஹோவர்ட் அரசாங்கம் காட்டிக்கொண்டு வருகிறது.

இந்த வகையில் ElBaradei நிலைப்பாடு டெளனரோடு ஒப்பு நோக்கத்தக்கது, ஈராக் படையெடுப்பிற்கு முன்னர் அந்நாடு அணு ஆயுதங்களை ரகசியமாக தயாரித்து வருகிறது என்ற அமெரிக்கக் கூற்றை ElBaradei மறுத்தார். நைஜரிலிருந்து யுரேனிய தாதுப் பொருள்களை வாங்குவதற்கு ஈராக் முயன்று வந்தது என்று சுட்டிக்காட்டுவதாக தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் ஒரு கொச்சையான மோசடிகள் என்று அவர் அம்பலப்படுத்தினார். ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு அவர் 2003 மார்ச்சில் தாக்கல் செய்த ஒரு அறிக்கையில் ``அணு ஆயுத நடவடிக்கைகளை துவக்கியிருப்பதற்கான எந்த அடையாளமும் அல்லது சோதனையிடப்பட்ட எந்த இடத்திலும் அணு தொடர்பான தடை செய்யப்பட்ட எந்த நடவடிக்கையும் நடந்ததற்கான அடையாளமில்லை`` என்று El Baradei அறிவித்திருந்தார்.

UNMOVIC செயல் தலைவர் Hans Blix தலைமையில் ஐ.நா. ஆயுதங்கள் ஆய்வாளர்கள் பிரிவு 2002 நவம்பர் கடைசியிலிருந்து ஈராக் முழுவதிலும் துருவித் துருவி ஆராய்ந்த பின்னர், இராணுவப் படையெடுப்பை நியாயப்படுத்துவதற்கு 2003 பிப்ரவரியில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் பவல் தாக்கல் செய்த பொய்களின் பட்டியலை ஒவ்வொரு அம்சத்திலும் மறுக்கின்ற வகையில் ElBaradei-ன் அறிக்கைகள் அமைந்திருந்தன. இந்த இரண்டு அதிகாரிகளுமே தாக்கல் செய்த சான்று அமெரிக்கா தாக்குதலுக்கு ஐ.நா.வின் ஒப்புதல் இறுதியாக மறுக்கப்பட்டதில் கணிசமான பங்களிப்பு செய்திருக்கிறது.

வாஷிங்டனின் பக்கத்தில் குத்தும் முள்ளாக ElBaradei தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். நவம்பரில் நடைபெற்ற அமெரிக்கத் தேர்தலுக்கு சற்று முன்னர் அவர் வெளியிட்ட பல உண்மைகள் புஷ்ஷிற்கு அரசியல் அடிப்படையில் சேதம் ஏற்படுத்துவதாக அமைந்தன. ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு அக்டோபர் 1-ந் தேதி அவர் அனுப்பிய ஒரு கடிதம் ஈராக்கில் IAEA அதற்கு முன்னர் கண்காணித்து வந்த இரு வகை பயன்பாட்டு சாதனங்கள் என்று கூறப்பட்டவை "பரவலாகவும், திட்டமிட்டும் சிதைக்கப்பட்டன" என்ற சான்றை தாக்கல் செய்ததுடன், காணாமல் போய்விட்ட சாதனங்கள் தொடர்பாக அமெரிக்கா அல்லது ஈராக் அரசாங்கம் தெளிவாக சமாதானம் கூற முடியவில்லை என்றும், சான்றை தெளிவாக அம்பலப்படுத்தினார். அக்டோபர் 25-ல் அவர் 400 டன்கள் உயர் வெடிப்புத் திறன் கொண்ட பொருட்கள்----அமெரிக்கப் படையெடுப்பைத் தொடர்ந்து காணாமல் போய்விட்டது என்பதையும் அம்பலப்படுத்தினார்-----அவை அணு ஆயுதங்களில் வெடிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய தன்மை படைத்தவை.

அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் இந்த கையிருப்புக்களை பாதுகாப்பாக வைத்திருக்கத் தவறிவிட்டன மற்றும் அவை எதிர்காலத்தில் பயங்கரவாதிகளது கையில் சிக்கிவிடாது தடுப்பதற்கும் தவறிவிட்டன. இவை ''பேரழிவுகரமான ஆயுதங்கள்'' படையெடுப்பிற்கு ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தப்பட்டன என்பதை அம்பலப்படுத்துகின்றன. மத்திய கிழக்கிலும் ஈராக்கிலும் வாஷிங்டன் தனது பொருளாதார மற்றும் மூலோபாய குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு சாக்குபோக்காக இவைகளை பயன்படுத்திக்கொண்டன என்பதையும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியது. அமெரிக்கத் தேர்தலுக்கு பின், புஷ் நிர்வாகம் ஈரான் மற்றும் வடகொரியா தொடர்பாக அதிக ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை மேற்கொள்ளும் என்பதற்கு அனைத்து சமிக்கைகளும் காணப்படுகின்றன.

அமெரிக்காவின் ராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கை மற்றும் புலனாய்வு ஸ்தாபனங்களுக்குள் நடைபெற்று வருகின்ற தீவிரமான மோதல்களை எடுத்துக்காட்டுகின்ற மற்றொரு அடையாளம் தான் வாஷிங்டன் போஸ்ட்-டில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரையாகும். அரசாங்கத்திற்குள்ளேயும், அல்லது அரசு இயந்திரங்களுக்குள்ளேயும் மிக முக்கியமான ரகசியத் தகவல்களை அறிந்துகொள்கிற நிலையில் இருப்பவர்கள் வெளியிடுகின்ற ரகசியத் தகவல்கள் அடிப்படையில் வந்திருக்கிற இந்தக் கட்டுரை El Baradei-க்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்கின்ற அமெரிக்காவிற்கு உள்ளிருக்கும் அதிகாரிகளுக்கு சங்கடமளிக்கிற வகையில் அமைந்திருக்கிறது. இந்தத் தகராறுகளுக்கு அடிப்படையாக அமைந்திருப்பது கொள்கை அடிப்படையிலான வேறுபாடுகள் அல்ல, மாறாக புஷ் நிர்வாகத்தின் ஒரு தலைபட்சமான மோதல் போக்கு வெளியுறவுக் கொள்கையால் ஏற்படுகின்ற ஆபத்துக்கள் தொடர்பான தந்திரோபாய கவலைகள் ஆகும்.

என்றாலும், ElBaradei-ஐ வெளியேற்றுவதற்கு சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுகின்ற வழிமுறைகள் உட்பட வாஷிங்டன் தனது முயற்சிகளை நிறுத்துவதற்கு சாத்தியமில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஐ.நா. தலைமை அதிகாரி ஒருவரை அமெரிக்கா உளவு பார்க்கிறது என்ற தகவல் அம்பலத்திற்கு வந்திருப்பது புஷ் நிர்வாகம் பயன்படுத்தி வருகிற போக்கிரித்தனமான நடைமுறைகளை மீண்டும் வலியுறுத்திக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. சமாதானம், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் பெயரால் செயல்படுகிறோம் என்று தொடர்ந்து கூறிக்கொண்டே அதன் வழக்கமான ரகசியமான சதிச் செயல்கள், பொய்கள், மிரட்டல்கள், ஆத்திரமூட்டல் ஆகியவற்றைப் பயன்படுத்தி தனது சர்வதேச எதிரிகள் மீது மேலாதிக்கம் செலுத்துகின்ற திட்டங்களை தீவிரமாகப் பின்பற்றி வருகிறது.