World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : வரலாறு : நான்காம் அகிலம்

Meetings on 50 years of the International Committee of the Fourth International

Nick Beams: "The program of the ICFI has stood the test of time"

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழுவின் 50-வது ஆண்டு பற்றிய கூட்டங்கள்

நிக் பீம்ஸ்: "நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழுவின் வேலைதிட்டம் காலத்தின் சோதனையைக் கடந்து விட்டது"

23 December 2003

Use this version to print | Send this link by email | Email the author

டிசம்பர் 21ம் தேதி அன்று, ஆஸ்திரேலியாவின் சோசலிச சமத்துவ கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுபெற்றதைக் குறிக்கும் வகையில், சிட்னியில் ஒரு கூட்டத்தை நடாத்தியது. கடந்த இரு மாதங்களாக, 1953ம் ஆண்டு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து, மிசேல் பப்லோ, ஏர்னஸ்ட் மண்டேல் இருவரின் தலைமையிலிருந்த சந்தர்ப்பவாத போக்கிற்கு எதிராக நீண்டகாலம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் நடாத்தப்பட்ட போராட்டத்தின் முக்கியத்துவத்தை ஆய்வதற்காக சர்வதேச ரீதியாக நடபெற்ற தொடர் கூட்டங்களில் இதுவும் ஒன்றாகும். பரந்தரீதியான கட்சி ஆதரவாளர்களின் பிரிவினர்கள், WSWS வாசகர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் என பலதரப்பினரும் சிட்னி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் (ஆஸ்திரேலியா) தேசிய செயலாளரும், WSWS ன் சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினருமான நிக் பீம்ஸ் அளித்த ஆரம்ப அறிக்கையைக் கீழே வெளியிடுகிறோம்.

2003ம் ஆண்டு, பெரும் வரலாற்று மாறுதலோடு தொடர்பு கொண்டிருந்த ஆண்டாக, 1914, 1929 அல்லது 1939 போல் வரலாற்றில் கருதப்படும். அமெரிக்க தலைமையிலான, ஈராக்கின்மீது நடத்தப்பட்ட போர், ஒரு புதிய ஏகாதிபத்திய போருக்கும் காலனித்துவத்திற்குமான சகாப்தத்தின் வெடிப்பைக் குறிக்கிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தோற்றுவிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடுகையில், நாம் ஒரு வெறும் காலவரிசைப்பட்டியை ஒட்டிய நிகழ்ச்சியை மட்டும் குறிப்பிடவில்லை. எந்த கொள்கைகள், மற்றும் வேலைதிட்டங்களின் அடிப்படையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழு நிறுவப்பட்டதோ, அவை காலத்தையும், பெரும் நிகழ்ச்சிகளின் பாதிப்பையும் எதிர்த்து வெற்றி அடைந்துள்ளது மட்டுமின்றி, இக்காலத்திற்கும், மேற்கொள்ள இருக்கும் பணிகளுக்கும் பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளதிலும் வெற்றி அடைந்துள்ளது என்பதை நிரூபித்திருக்கிறோம்.

கடந்த சில நாட்களாக செய்தி ஊடகம் சதான் ஹுசைன் பிடிபட்டதின் வெற்றியைப்பற்றி குமட்டும் அளவிற்குக் கூச்சலிட்டு, போருக்கு எதிராகக் கூறப்பட்ட கருத்துக்களுக்கு அவரை பதவி நீக்கம் செய்தது சரியெனக் காட்டுவதாக ஆர்ப்பரிக்கிறது. ஆனால் எந்த அளவு கொண்டாட்டங்கள் இருந்தாலும், இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இறைமை பெற்றுள்ளதாக கூறப்படும் நாடுகளிடையே நிலவி வந்திருந்த சர்வதேச உறவுகளை கட்டுப்படுத்திய நெறிகள் எல்லாவற்றையும், ஈராக்கியப் போர் தகர்த்தது என்பதை மறைக்க முடியாது. பேரழிவு ஆயுதங்கள் பற்றிய, மற்றும் ஈராக்கிய ஆட்சி, அல் கொய்தா இவற்றிற்கிடையே ஒத்துழைப்பு என்ற பொய்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, இரண்டாம் உலகப்போருக்குப்பின் எந்தக் குற்றச்சாட்டு நாஜி ஆட்சியின்மீது நூரெம்பேர்க் விசாரணையில் தெளிவுபடுத்தப்பட்டதோ, இது அதே குற்றமான "ஓர் ஆக்கிரமிப்புப்போர்" என்பதையும் மூடிமறைக்கமுடியாது.

சதாம் ஹுசைன் கைப்பற்றப்பட்டபின்னர், பிரதம மந்திரி ஜோன் ஹோவார்ட், தொழிற் கட்சி தலைவர் மார்க் லேதமுடன் சேர்ந்து கொண்டு, ஹுசைனுக்கு மரணதண்டனை விதிப்பதற்கு ஆதரவு கொடுப்பதில் முந்திக் கொண்டார். சதாம் ஹுசைனுக்கு "பகிரங்க விசாரணை" கொடுக்கப்படவேண்டும் என்றும் அவர் நடவடிக்கைகள் அனைத்தையும் ஒவ்வொரு விவரமும், படுகொலைக்குமேல் படுகொலை, இறப்பிற்குப்பின் இறப்பு என்று தெளிவாகக் கூறப்பட்டால் உலகம் எத்தகைய மனிதனாக அவர் இருந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளும்..." என்று ஹோவார்ட் அழைப்பு விடுத்தார்.

எவ்வாறிருந்தபோதிலும், அத்தகைய விசாரணை ஏகாதிபத்திய நடவடிக்கைகளை பற்றியும் இன்னும் தெளிவுபடுத்திக்காட்டும். உண்மையாகவே, "பகிரங்க விசாரணை" மேற்கொள்ளப்பட்டால், அது ஹோவார்ட் கோருவதையோ, விரும்புவதையோவிட அதிக விவரங்களைக் கொடுக்கும். அமெரிக்க ஆட்சியுடனும், மற்றய ஏகாதிபத்தியங்களுடனும், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்பு, ஆயுத ஒப்பந்தத்திற்கு மேலான ஆயுத ஒப்பந்தம், உயிரியல் ஆயுதங்களுக்கு மேலான உயிரியல் ஆயுதங்கள் வழங்கப்பட்டமை, இரகசிய ஒப்பந்களுக்கு மேலான இரகசிய ஒப்பந்தம் போன்றவற்றிலிருந்து வலதுசாரி கொலைகார பாத் கட்சியின் அடியாள் என்பதினால் சதாம் ஹுசைன் ஈர்த்ததிலிருந்து அனைத்து உறவுகளும் அம்பலப்படுத்தப்படும்.

அந்த விசாரணை, 1983ம் ஆண்டு றீகன் நிர்வாகத்தின் தூதராக இருந்த, இப்பொழுதைய அமெரிக்க பாதுகாப்பு மந்திரி ரம்ஸ்பெல்ட் பாக்தாத்திற்கு பயணித்ததை விரிவாகக் கூறும்; ஈரானுக்கு எதிராக ஈராக்கை அமெரிக்கா போரிடத்தூண்டியதைக் கூறும்; போரை நடத்துவதற்கு அது கொடுத்த தகவல் மற்றும் ஆயுத உதவிகள், மற்றும் எந்தெந்த அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள் குர்திஸ் மக்கள் மீது சதாம் ஹுசைன் விஷவாயுத்தாக்குதல்கள் நடத்துவதற்கு உபகரணங்களைக் கொடுத்தன என்றும் கூறும். இப்படி ஒவ்வொரு தொடர்பு பற்றிய ''விபரமான'' அம்பலப்படுத்தப்படுதலும், வரலாற்றுச் சான்றை ஆராய்தலும், பேரழிவு ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்படவில்லை என்றாலும் சதாம் ஹுசைன் ஒரு சர்வாதிகாரி என்பதால் போரை நியாயப்படுத்த அதன் ஆதரவாளர்கள் கூறிய வாதங்கள் அனைத்தையும் அழித்துவிடும். இத்தகைய ஆய்வு, அவருக்கு முன் பலரைப் போலவே, சதாம் ஹுசைனும் ஆட்சியில் பலகாலம் நீடித்ததற்கும், ஏகாதிபத்திய சக்திகளின் முக்கிய உதவி இல்லாவிட்டால் பதவிக்கே வந்திருக்க முடியாது என்பதை நிறுவும்.

ஆனால், ஹோவார்டோ, அவரையும் விடக் குறைந்தமுறையில் புஷ்ஷும் அவருடைய நிர்வாகமும் அத்தகைய வரலாற்றுச் சான்றை வெளிப்படுத்தும் தன்மையுடைய விசாரணையை விரும்பப் போவதில்லை. அத்தகைய விசாரணை நடத்தப்பட்டால், சதாம் ஹுசைனின் கொலைகார நடவடிக்கைகளுக்கு ஏகாதிபத்திய சக்திகள் உடந்தையாக இருந்தன என்பதை விட, ஏகாதிபத்திய சக்திகளின் கொலைகார நடவடிக்கைகளுக்குத்தான் சதாம் ஹுசைன் உடந்தையாக இருந்தார் என்பது இறுதி ஆய்வில் தெளிவாக நிரூபிக்கப்பட்டு விடும்.

ஏகாதிபத்திய போரின் ஒரு புதிய சகாப்தம்

பின்னர் நிரூபிக்கப்பட்டதுபோல், தடையற்ற இராணுவ வலிமையை ஓர் ஏழ்மையான மற்றும் ஒரு பாதுகாப்பற்ற நாட்டின்மீது கொண்டதற்காக மட்டுமல்லாமலும், முன்கண்டிராதளவில் கலப்படமற்ற பொய்களையும், திரித்துக் கூறுதல்களையும் அதைத் தொடர்ந்து மேற்கொண்டதற்காக மட்டும் ஈராக்கின் மீதான 2003ம் ஆண்டுப் போர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருக்கவில்லை. போருக்குப்பிந்தைய சர்வதேச அரசியல் உறவுகளைக் கட்டுப்படுத்தியிருந்த அமைப்பு முறைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டது என்ற உண்மை எழுவதுதான் அதன் முக்கியத்துவத்திற்குக் காரணமாகும்.

ஹுசைன் ஆட்சியைக் கவிழ்த்து, ஈராக்கைக் கைப்பற்றுவதற்கு மட்டும் அமெரிக்கா இந்த இராணுவவாத வெடிப்பை மேற்கொள்ளவில்லை; இதைவிட நீண்டகால விளைவுகளை இலக்காக கொண்ட பூகோள மேலாதிக்கத்திற்கான நடவடிக்கையாகும். ஏகாதிபத்தியத்தின் வரலாற்றில், ஈராக்கிய போர் ஒரு புதிய சகாப்தம் தொடங்கப்பட்டதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. ஈராக்கில் எடுத்துக்காட்டப்பட்டதுபோல், பாதுகாப்பற்று இருக்கும் நாடுகளின் மீது போர்கள் நடாத்தப்படவுள்ளன என்பது மட்டுமல்லாமல், பெரிய முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான மோதல்களையும் இது வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த காலத்தில், மார்க்சிஸ்டுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பற்றி பேசியபொழுது, அவர்களின் ஆய்வு கடுமையாக எதிர்க்கப்பட்டன. ஆனால் இப்பொழுது அமெரிக்காவின் வெளிப்படையாக பூகோள மேலாதிக்க முயற்சி அரசியல் வாழ்வில் அங்கீகரிக்கப்பட்ட உண்மையாகிவிட்டது.

ஹார்வர்ட் புகழ் கல்வியாளரான ஜோசப் நை (Joseph Nye), Foreign Affairs ஜூலை-ஆகஸ்ட் இதழில் எழுதுகையில் கூறுவதாவது: ''ரோமாபுரிக்காலத்திற்குப் பின்னர் எந்த ஒரு நாடும் இதுபோல் மற்றவகைளைவிட படர்ந்து நின்ற தன்மையைக் கொண்டிருக்கவில்லை. உண்மையில், 'பேரரசு' என்ற சொல்தான் இத்தன்மைக்கு வெகுஅருகில் வருகிறது. மதிப்பிற்குரிய பகுப்பாய்வாளர்கள், இடதுசாரிகளும் வலதுசாரிகளும், இசைவுடன், இருபத்தோராம்-நூற்றாண்டின் 'அமெரிக்கப் பேரரசு' என்று ஏற்கத்தலைப்பட்டு விட்டனர். ஈராக்கில் அடையப்பட்ட இராணுவ வெற்றி, இந்தப் புதிய உலக ஒழுங்கை உறுதிப்படுத்தியுள்ளது.''

இது பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. ஏகாதிபத்தியத்தின் இந்த வெடிப்பிற்கு மூலகாரணம் என்ன? இப்படியான புதிய நிலமையை எதிர்நோக்கும் மக்களின் அரசியல் போராட்டத்தை எந்த வகையான முன்னோக்கு வழிநடாத்துப்போகிறது?

இந்த வெடிப்பிற்கான காரணத்தை, ஜோர்ஜ் புஷ் அல்லது இன்னும் கூடுதலான அளவில் இப்பொழுது புதிய-பழமைவாதிகள் என்று அவருடைய நிர்வாகத்தில் அழைக்கப்படுபவர்களையோ அல்லது இவர்கள் பின்பற்றும் கொள்கைகளையோ கொண்டால், உண்மையில் நாம் தரமற்ற மார்க்சிசவாதிகளாகப் போய்விடுவோம். உண்மையில், தனிமனிதர்கள் ஒரு பங்கை வகிக்கின்றார்கள், சில சமயம் தீர்மானகரமான பங்கு என்றாலும், அவர்களது வேலைத்திட்டங்கள்தான் சமூகத்தில் ஆழமான நலன்களை வெளிப்படுத்துவதாகும். இந்த நிகழ்வைப் பொறுத்தவரையில், புஷ்ஷைச் சுற்றியிருக்கும் சிறுகுழுவால் முன்வைக்கப்படும் பூகோள ஆதிக்கம் என்ற வேலைதிட்டம், அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியை தீர்க்கும் முயற்சியாகும்.

இந்த நெருக்கடியின் வேர்களை, உலகப் பொருளாதாரத்தின் முரண்பாடுகளிலேயே காணமுடியும். உற்பத்தி சக்திகளில் ஏற்பட்ட மிகப்பரந்த அளவிலான அபிவிருத்திகள், எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த இருபது ஆண்டுகளில் கணணி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதினால் சாத்தியமாகிய உற்பத்தி நிகழ்வுப்போக்கின் பூகோளமயமான தன்மையானது தனியார் சொத்துடமைக்கும் தேசிய அரசு முறைக்கும் இடையிலான மோதலை தோற்றுவித்துள்ளது. உற்பத்தியின் பூகோள மயமாக்கலானது பொருளாதார, சமுக வாழ்வின் இடைத்தொடர்புகளை அதிகரிக்கச்செய்துள்ளது. ஆனால் அரசியல் வடிவமைப்போ இன்னமும் முரண்பாடான நலன்களை கொண்ட தேசிய அரசுகளை அடித்தளமாக கொண்டுள்ளது.

புஷ்ஷின் வெளியுறவுக் கொள்கைகளின் ஆரம்பம் இதில்தான் உள்ளது. உலக முதலாளித்துவத்தில் இருக்கும் முரண்பாடுகளை பூகோள மேலாதிக்கத்தின் வழியாக பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தீர்க்க முயற்சித்ததன் இருப்பத்தோராம் நூற்றாண்டின் பதிப்பாக அமெரிக்க ஆளும் வர்க்கம் ஈடுபட்டுள்ள தன்மையை இது பிரதிபலிக்கிறது. ஆனால், முந்தைய முயற்சிகள் எவ்வாறு பூகோள பேரரசை தோற்றுவிக்கவில்லையோ, அதேபோல் இம்முயற்சியும் அமைதி, வளம், ஒருங்கிணைந்த சிறப்பான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை கொண்டு வரப்போவதில்லை. இது மீண்டும் ஓர் உலகப்போரின் வெடிப்பைத்தான் கொண்டுவரப்போகிறது; இதற்கான எதிர்பார்ப்பு அறிகுறிகள் ஏற்கனவே அமெரிக்கவிற்கும் மற்றைய பெருமுதலாளித்துவ நாடுகளுக்கும் இடையிலான ஆழ்ந்த மோதலில் காணப்படுகிறது.

இந்த ஆண்டு வெடித்துள்ள வன்முறையிலான ஏகாதிபத்தியம், சமீபகாலத்திய நிகழ்வுகளால் மட்டும் தோன்றாமல், ஒரு நூற்றாண்டுக்கும் முந்தைய நிகழ்வுகளின் விளைவு ஆகும்.

நான்காம் அகிலத்தின் தோற்றம்

சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு, 1903ம் ஆண்டில் நிகழ்ந்தவற்றை நம் மனக்கண்முன் நிறுத்தவோமேயானால், அக்காலகட்டத்தில் மிகுந்த தொலை நோக்குடைய சோசலிச தலைவர்களும், மார்க்சிச இயக்கமும், பார்ப்பதற்கு முடிவற்ற விரிந்து கொண்டிருப்பதுபோல் தோற்றம் அளிக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்தை, பெரிய ஏகாதிபத்திய சக்திகளிடையே காலனித்துவம், சந்தைகள், வளங்கள், இலாபங்கள் பற்றிய கூர்மையான மோதல்களை கொண்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டினார்கள். இந்தமோதல்கள்தாம் இறுதியில் முதல் உலகப் போராக வெடிக்க இருந்தன.

உற்பத்தி சக்திகள் பூகோளரீதியாக விரிவாக்கப்பட்டதன் விளைவாக, உலகப்பொருளாதாரத்தில் ஆழ்ந்த முரண்பாடுகளின் வெளிப்பாடு தோன்றியது ----இது குறிப்பாக முந்தைய நாற்பது ஆண்டுகளில்---- தோன்றியிருந்த தேசிய அரசுகளின் வரம்புகளுக்குள் ஏற்பட்டிருந்தன. பெரிய முதலாளித்துவ சக்திகள் ஒவ்வொன்றும் இந்த முரண்பாடுகளை தன்னுடைய நலனுக்காக ---அதன் போட்டியாளர்களுக்கு எதிரான ஆதிக்கத்தின் அடிப்படையிலேயே, தீர்க்க முற்பட்டடதால்---- ஒவ்வொருவரும் மற்றவர் அனைவரையும் எதிர்த்துப்போரிடுதல் என்ற இரத்தம்தோய்ந்த மோதலுக்கு வழிகோலியது.

"ஏகாதிபத்தியத்தின் முதலாளித்துவ குழப்பத்தை பாட்டாளி வர்க்கம் எதிர்க்க வேண்டிய ஒரேவழி, உலகப் பொருளாதாரத்தை சோசலிச முறையில் ஒழுங்கமைப்பதை ஒரு நாளாந்த நடைமுறை முன்னோக்காக கொள்வதுதான்." என ட்ரொட்ஸ்கி எழுதினார்.

போரும், அதையொட்டிய காட்டுமிராண்டித்தனத்தையும் பயன்படுத்தப்படுவதின் மூலம், தன்னிடத்திலுள்ள தீர்க்கமுடியாத உள்முரண்பாடுகளை தீர்ப்பதற்கு வழிவகுக்கும் என்று முதலாளித்துவம் நினைத்தால், தொழிலாள வர்க்கம் அதற்குத் தன்னுடைய முடிவான தீர்ப்பாக உலக சோசலிசப் புரட்சியை முன்வைக்க வேண்டும்.

இரண்டாம் அகிலத்தில் முக்கியமான கட்சிகள், தேசியப்பாதுகாப்பு என்ற பெயரில், தங்கள் ஆளும் வர்க்கத்துடன் அணிசேர்ந்து காட்டிக் கொடுத்துவிட்டதால், சோசலிச சர்வதேசியம் என்ற முன்னோக்கின் அடித்தளத்தில் புரட்சிகர மார்க்சிஸ்டுகள் போராட்டம் நடத்த வேண்டியதாக ஆயிற்று.

போரில் கேள்வி, முதலில் சுட்டது யார் என்பதோ அல்லது பங்குபெற்றிருந்த ஏகாதிபத்தியங்களில் எது கூடுதலான அல்லது குறைவான சூறையாடுவதைக் கொண்டிருந்ததோ என்பது அல்ல; போரின் வரலாற்றுரீதியான அர்த்தம் என்ன என்பதே ஆகும். இது, முந்தைய வரலாற்று காலகட்டத்தில் உற்பத்தி சக்திகளின் பெருக்கத்திற்கு அடித்தளமாக இருந்த முதலாளித்துவம், தற்போது தனியார் சொத்துடமையுடனும், போட்டி தேசிய-அரசமைப்பு முறையுடனும் பாரிய மோதலுக்கு வழிவகுத்து, மனிதகுலப் பண்பாடு முழுவதையுமே அழிவிற்கு கொண்டுவரும் அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளது.

இந்த சர்வதேசிய பார்வைதான் ரஷ்யாவில் போல்ஷிவிக்குகள் நடத்திய போராட்டத்தின் மையத்தானமாக இருந்ததுடன், 1917 அக்டோபரில் சோசலிச புரட்சியில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் முடிவடைந்தது. அத்துடன் இதுதான் புரட்சிக்குப் பின்னர் ஸ்ராலினிச அதிகாரத்துவம், மற்றும் அதன் தேசியவாத கண்ணோட்டமான "தனி ஒரு நாட்டில் சோஷலிசம்" என்பதற்கும் எதிராக, ட்ரொட்ஸ்கியும் இடது எதிர்ப்பும் நடத்திய போராட்டத்தின் இதயத்தானமாகவும் இருந்தது. சோசலிசத்திற்கான வரலாற்றுத்தேவை, உற்பத்திசக்திகள் ஏற்கனவே முதலாளித்துவ அரசுகளில் தேசியத்தடைகளை உடைத்துவிட்ட உண்மையின் பின்னணியில், "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" ஒரு "பிற்போக்குத்தனமான கற்பனாவாதம்" என்று ட்ரொட்ஸ்கி கூறினார்.

இதன் விளைவாக, உலகப் பொருளாதாரம், உலக அரசியல் என்று வந்துவிட்ட ஏகாதிபத்திய சகாப்தத்தில், எந்த கம்யூனிஸ்ட் கட்சியும் தன்னுடைய நாட்டிலுள்ள போக்குளை அடிப்படையாக கொண்டு செயல்படமுடியாது என்றும், சகாப்தத்தின் தன்மைக்கு ஏற்ப, சர்வதேச வேலைத்திட்டத்தைத்தான் அடித்தளமாகக் கொள்ளவேண்டும் என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். "இன்றைய சகாப்தத்தில், கடந்த காலத்தைவிட மிகப்பெரிய முறையில், பாட்டாளி வர்க்கத்தின் தேசிய நோக்குநிலை, உலக நோக்குநிலையிலிருந்து வளரும், வளரவேண்டுமே ஒழிய இதற்கு எதிரிடையாக முடியாது. இந்த தன்மையில்தான் கம்யூனிச சர்வதேசியத்திற்கும், மற்றயவகைகளிலான தேசிய சோசலிசத்திற்கும் அடிப்படையும், முக்கியமானதுமான வேறுபாடு உள்ளது."

பத்து ஆண்டுகளாக இடது எதிர்ப்பு, மூன்றாம் (கம்யூனிஸ்ட்) அகிலத்தை இத்தகைய மறு சீரமைக்க போராடியது. ஆனால், 1933ம் ஆண்டு, அகிலத்தின் (Comintern) "சமூக பாசிசம்" என்ற தத்துவத்தின் நேரடி விளைவாக, நாஜிகளுக்கு எதிராக சமூக ஜனநாயக கட்சிகளுடன் சேர்ந்து ஐக்கிய முன்னணி அமைக்க மறுத்ததின் விளைவாக ஹிட்லர் பதவிக்கு வந்ததும், அகிலத்தினுள்ளேயே இந்தப் பேரழிவுகரமான கொள்கை பற்றிய தீவிர விவாதம் இல்லாமற்போனதாலும், ட்ரொட்ஸ்கி ஒரு புதிய அகிலம் நிறுவப்பட்டு, கட்டியமைக்கப்படவேண்டும் என்ற முடிவிற்கு வந்தார்.

1938ம் ஆண்டு நான்காம் அகிலம் நிறுவப்பட்டபோது, சோசலிச புரட்சியின் உலக கட்சி என்ற பெயரிலேயே அதன் தன்மையையும் வரலாற்றுப் பணியையும் வெளிப்படுத்த வேண்டும் என ட்ரொட்ஸ்கி எழுதியிருந்தார்.

நான்காம் அகிலத்தை தோற்றுவிக்க அவர் நடத்திய 5 ஆண்டு கால அரசியல் போராட்டத்தில், ட்ரொட்ஸ்கி ஒரு புதிய அகிலத்தை, தொழிலாள வர்க்கம் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வரும் நிலைமைகளில் ஏற்படுத்த முடியாது என்ற வாதத்தைத்தான் தொடர்ந்து எதிர் கொண்டார். அவருடைய கருத்தின் எதிர்ப்பாளர்கள், ஒரு புதிய எழுச்சி வருவதற்கு காத்திருப்பது முக்கியம் என்று வலியுறுத்தினர்.

இந்தத் தோல்விகளே, நான்காம் அகிலம் தேவையென்று தெளிவாக நிரூபித்துவிட்டதை பதிலாக ட்ரொட்ஸ்கி கூறினார். ஏகாதிபத்தியத்தின் வலிமையினாலோ அல்லது தொழிலாள வர்க்கத்தின் திறன் இல்லாமையாலோ ஏற்பட்ட விளைவு அல்ல என்று அவர் கூறினார். தொழிலாள வர்க்கத்தினுடைய தலைவர்கள் காட்டிக்கொடுத்ததால் விளைந்த தோல்விகள்தான் அவை என்று தெளிவுபடுத்தினார். இறுதிஆய்வில், மனிதகுலத்தின் நெருக்கடி தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடிதான் என கூறமுடியும் என்றார்.

ட்ரொட்ஸ்கியின் தீர்மானத்தின் முக்கியத்துவம், பின்னர் நடந்த நிகழ்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் சோசலிசம், புரட்சி, ஏன் மார்க்சியத்தைக் கூட அடித்தளமாக கொண்டதாக கூறிக்கொண்ட, நான்காம் அகிலத்தைவிடப் பெரிய பல மத்தியவாத கட்சிகள் இருந்தன. போருக்குப்பின் அவற்றில் ஒன்றுகூட தப்பியிருக்கவில்லை. நான்காம் அகிலம் ஒன்றுதான், ஒருபுறத்தில் தனது சொந்த "ஜனநாயக" ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாமல் நாஜி ஏகாதிபத்தியத்தின் சக்திகளை எதிர்த்து தன்னுடைய சுயாதீனமான போக்கை பாதுகாத்தது.

போருக்குப்-பிந்தைய மறுஸ்திரத்தன்மை

போருக்குப் பிந்தைய காலம் புதிய பிரச்சினைகளையும், சவால்களையும் அளித்தது. எதிர்பாராத திருப்பங்கள் தோன்றிய சூழ்நிலையில், ட்ரொட்ஸ்கியுடைய முன்னோக்கை இனி சாத்தியப்படாது என்றும், அது கடந்த காலத்திற்குரியது என்று நான்காம் அகிலத்திற்குள்ளேயே கூறத்தலைப்பட்டவர்கள் இருந்தனர். உலகப் புரட்சி ஏற்படவில்லை, போரின் விளைவினால் முதலாளித்துவம் பொறிந்துவிடவில்லை, பொருளாதாரம் முன்னேறத் தலைப்பட்டுவிட்டது. அதேநேரத்தில், முதலாளித்துவ சொத்து உறவுகள் மாற்றப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பெற்ற வெற்றிகளின் விளைவாக ஸ்ராலினிச அதிகாரத்துவம் தன்னை வலுப்படுத்திக் கொண்டுவிட்டதாக தோன்றியது. மேலும், சோசலிசம் நான்காம் அகிலத்தின் மூலம்தான் தொழிலாள வர்க்கத்தின் புதிய சர்வதேசப் புரட்சிகரத்தலைமை ஏற்படுத்தப்படுத்தப்பட முடியும் என்ற ஆய்வுரையை பொய்ப்பிப்பது போல், சீன, யூகோஸ்லேவியா ஆகிய நாடுகள் புரட்சியில் வெற்றியைக் கண்டிருந்தன என்றும் அவர்களால் கூறப்பட்டது.

நான்காம் அகிலம் எதிர்கொள்ளவேண்டிய மாபெரும் அரசியல் அழுத்தங்கள், ஐரோப்பாவில் முக்கிய தலைவர்களாக இருந்த மிசேல் பப்லோவும் ஏர்னஸ்ட் மண்டேலும் வளர்த்திருந்த ஒரு புதிய முன்னோக்கின் வழியாக பிரதிபலித்தது. "நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம்" என்ற தலைப்பில் 1951ம் ஆண்டில் வெளியிட்ட ஆவணம் ஒன்றில் பப்லோ எழுதினார்:

"நம்முடைய இயக்கத்திற்கு புறநிலை சமூக யதார்த்த அடிப்படையில் முதலாளித்துவ ஆட்சி, ஸ்ராலினிச உலகம் என்ற இரண்டு பிரிவுகளை கொண்டுள்ளது. மேலும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்த இரு கூறுபாடுகளும் பொதுவாக அநேகமாகப் புறநிலை சமூக யதார்த்தமாக உள்ளன; ஏனென்றால், முதலாளித்துவத்தை எதிர்க்கும் பெரும்பாலான சக்திகள் இப்பொழுது சோவியத் அதிகாரத்துவத்தின் தலைமைக்குள்ளோ, அல்லது அதன் செல்வாக்கிற்கு உட்பட்டோதான் காணப்படுகின்றன".

பப்லோவின் இந்த முன்னோக்கின் இதயத்தானத்தில், மார்க்சிசத்தின் சர்வதேச பார்வையை கைவிடுதல்தான் இருந்தது. விஞ்ஞான கருத்தாய்வில் புறநிலை சமூக யதார்த்தம், உலகப் பொருளாதாரம் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், முதலாளித்துவத்தின் உற்பத்தியின் பூகோள வளர்ச்சியானது உலக தொழிலாள வர்க்கத்தை ஒரு தீர்க்கரமான சமூக சக்தியாக முன்கொண்டுவந்துள்ளது என்பதை மார்க்சிசம் அடித்தளமாக கொண்டதாகும். பப்லோவாதம் இந்தக் கருத்தாய்வை நிராகரித்து, அவ்வாறு நிராகரிப்பதன்மூலம், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன புரட்சிகரமான பங்கையும் நிராகரிக்கிறது. மாறாக, இது மேலெழுந்தவாரியான அடிப்டையில், புறநிலை சமூக யதார்த்தம், முதலாளித்தவ உலகம், ஸ்ராலினிச உலகம் என்று இரண்டுவகையாகத்தான் உள்ளது என்பதுடன் ஆரம்பிக்கிறது.

இந்த முன்னோக்கிலிருந்து, நான்காம் அகிலம் தவிர்க்கமுடியாமல் உடைந்துபோகும் நிலை ஏற்பட்டது. சோசலிச புரட்சிக்கான உலகக் கட்சியாக இல்லாமல், தொடர்ச்சியான சந்தர்ப்பவாத தந்திரோபாயம், தேசிய நலன்களால் உந்தப்பெற்று தேசிய-அடித்தளம் கொண்ட பல பிரிவுகளையுடைய கட்சிகளின் கூட்டாகப் போயிற்று.

நான்காம் அகிலத்தின் எதிர்காலத்தில் இந்நிலையின் உட்குறிப்புக்கள் திட்டவட்டமாயின. நான்காம் அகிலத்தின் மூன்றாம் காங்கிரசிற்கு வழங்கிய அறிக்கை ஒன்றில், "பரந்த மக்களின் உண்மையான இயக்கத்தில் ஆழ்ந்த முறையில்" இணைந்து கொள்ளுவது தேவை என்று வலியுறுத்தினார். அதவாது, "அனைத்து அமைப்புமுறை நலன்கள், அக்கறைகள், முறையான சுதந்திரமோ மற்ற எதுவாயினுமோ, ஒவ்வொரு நாட்டிலும் வெளிப்பட்டுள்ள உண்மையான மக்கள் இயக்கத்தில் முழுமையாக கரைந்து அதன் மூலம் அவ்வியக்கத்தை செல்வாக்குப்படுத்தக்கூடிய வகையில்" இருக்க வேண்டும் என்ற பொருளில் எழுதியிருந்தார்.

பப்லோவாத முன்னோக்கு, நான்காம் அகிலத்தை சமூக ஜனநாயகம் அல்லது ஸ்ராலினிச கட்சிகளுக்குள் அல்லது முதலாளித்துவ தேசியவாதிகள் அமைப்புக்கள் ஆதிக்கம் பெற்ற நிறுவனங்களுக்குள், கரைத்துவிட்டு விடவேண்டும் என்பதாக இருந்தது. இதுதான் ஒரு பகிரங்கக் கடிதத்தை, சோசலிச தொழிலாளர் கட்சியின் ஜேம்ஸ் பி. கனனால் (அமெரிக்க ட்ரொட்ஸ்கிச கட்சியின்), 1953 நவம்பரில் வெளியிட வைத்து, பின்னர் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் நிறுவுதலுக்கு வழிவகுத்தது.

அதிலிருந்து 50 ஆண்டுகளாக, பகிரங்கக் கடிதத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு மறுப்புத் தெரிவித்த எல்லாவிதமான போக்குகளும் பப்லோவாதத்தின் முன்னோக்கை எதிர்த்த கூற்றுக்களைத்தான் தெரிவித்துள்ளன. கனன், தன்னுடைய நிலைமை அச்சுறுத்தப்பட்ட பின்னர்தான், அந்தக் கடிதத்தை காலதாமதப்படுத்தித்தான் எழுதியிருக்க வேண்டும்; பப்லோவாதத்திற்கு எதிராக உண்மையில் பிளவு இருந்ததில்லை; கனன் தவறான தந்திரோபாயத்தைக் கையாண்டார்; இது அவருடைய சந்தர்ப்பவாத தந்திர உத்தி என்றெல்லாம் பேசப்பட்டன. ஆனால், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ட்ரொட்ஸ்கிசத்தின் வராற்றுத் தொடர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்பதை மறுக்கும் நோக்கத்தைக் கொண்ட இவற்றின் எதிர்ப்புக்கள் அனைத்தும், பகிரங்கக் கடிதத்தின் உள்ளடக்கத்தை பற்றிய ஆய்வை செய்யவில்லை.

கனன் பகிரங்கக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நான்காம் அகிலம் நிறுவப்படுவதற்கான ஆறு முக்கிய கொள்கைகள் அதன் மதிப்பை இழந்துவிடவில்லை. அவர் நாகரிகத்தை அழிக்கக்கூடிய அச்சுறுத்தலானது, முதலாளித்துவ உற்பத்திமுறையில் இருந்து வரலாற்று நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும், உலக சோசலிச பொருளாதாரம் திட்டமிடப்படுதல் இன்றியமையாதது என்றும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாத்து அதற்காக போராடக்கூடிய சுயாதீனமாக செயல்படக்கூடிய புரட்சிகர கட்சி வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

பகிரங்கக் கடிதம் வெளியிடப்பட்டதும், நான்காம் அகிலத்தின் நடைமுறை அஸ்திவாரங்கள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதும், சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டன என்பதை குறிக்கவில்லை. மாறாக, இது உண்மையில் நீண்ட காலப் போராட்டமாகத்தான் மாறிவிட்டது. ஏனெனில், குறுகியகால நலன்களுக்காக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான வரலாற்று நலன்களைக் காட்டிக்கொடுக்கும் சந்தர்ப்பவாதம், கெட்ட மனிதர்களின் செயல்களால் இல்லாமல், புறநிலையான நிலைமைகளால் தோற்றுவிக்கப்பட்டுள்ள அழுத்தங்களின் அரசியல் வெளிப்பாடு ஆகும். போருக்குப் பிந்தைய, முதலாளத்துவத்தின் மறுசீரமைப்பு, பார்ப்பதற்கு வலுவடைந்துபோல் இருந்த ஸ்ராலினிச அமைப்புகள், முன்னைய காலனித்துவ நாடுகளில் குட்டிமுதலாளித்துவத்தின் தேசிய இயக்கங்களின் எழுச்சி ஆகியவையும் தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

அமெரிக்காவின் சோசலிச தொழிலாளர் கட்சி, கியூபாவில் குட்டி முதலாளித்தவ இயக்கம் ஒரு தொழிலாள வர்க்க நாட்டை உருவாக்கிவிட்டது, காஸ்ட்ரோ "நனவற்ற மார்க்ஸ்சிஸ்டு" என்று கியூபா பற்றிய ஒரு பொதுவான நிலையை ஒட்டி பப்லோவாதிகளுடன் மீண்டும் மறுஐக்கியம் கொள்ளவேண்டும் என்று முயற்சித்ததால், பகிரங்கக் கடிதம் வெளியிடப்பட்டு பத்து ஆண்டுகளுக்குள்ளாகவே, 1953ம் ஆண்டு தோன்றியிருந்த அனைத்துப் பிரச்சினைகளுமே மீண்டும் தலையெடுத்தன.

பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, நான்காம் அகிலத்தின் தொடர்ச்சியை பாதுகாத்தனர். மிகப்பெரிய எதிர்ப்புக்களுக்கிடையே, ஒப்புமையில் மிகவும் தனிமைப்படுத்திருந்த நிலையிலும், அவர்கள் இயக்கத்தின் நடைமுறைத்திட்டங்களை பாதுகாத்து, அமெரிக்காவின் சோசலிச தொழிலாளர் கட்சி தலைமை, கியூபா பற்றி எடுத்த நிலைப்பாட்டின் தன்மை, நான்காம் அகிலத்தை அழித்துவிடும் என்று வலியுறுத்தியது. இந்தப் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் போராட்டம் சரியே என்பது 1964ல் பப்லோவாத அகிலத்தின் இலங்கை பிரிவான லங்கா சமஜமாஜ கட்சி (LSSP) மாபெரும் காட்டிக்கொடுப்பை நடாத்தி திருமதி பண்டாரநாயக்காவுடைய அரசாங்கத்தின் அணியில் சேர்ந்ததன் மூலம் தெளிவாயிற்று.

1985-86ன் பிளவு

கொள்கை தொடர்பான உறுதியான போராட்டம் இறுதியில் குழுவாத தனிமைப்படுதலுக்குத்தான் வழிவகுக்கும் என சந்தர்ப்பவாதிகள் தொடர்ந்து கூறிவந்தனர். உண்மையில், பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கெதிரான பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் போராட்டம், உலகம் முழுவதும் இருந்த புரட்சிகர சக்திகளின் கவனத்தை ஈர்த்த ஈர்ப்புமுனையாக மாறிவிட்டது. எனவே, கொள்கையுடைய அரசியலுக்கான நீண்டபோராட்டம் 1960களின் நடுப்பகுதியில் தீவிரமயப்படுத்தப்பட்ட தொழிலாளர்களையும் இளைஞர்களையும் உள்ளீர்க்க தொடங்குகையில் தொழிலாளர் புரட்சி கட்சி (Workers Revolutionary Party-WRP) அரசியலில் சீரழிவைக் கண்டது பெரும் சோகத்திற்குரியதேயாகும்.

கட்சி வளர்ச்சியடைந்து முக்கியமான ஜட வளங்களையும் அடையத் தொடங்கிய நிலைமைகளில், SLL-WRPன் தலைமை அதிகரித்த அளவில் அதன் பங்கை தேசிய வரம்புகளுக்கு உட்பட்டு வரையறுக்கலாயிற்று. முந்தைய காலகட்டத்திற்கு முற்றிலும் எதிரான முறையில், நான்காம் அகிலம் சந்தர்ப்பவாதத்திற்கெதிரான சர்வதேசப் போராட்டத்தை, தொழிலாள வர்க்கத்திற்கு தெளிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டிராமல், பிரிட்டனுக்குள் அமைப்புரீதியான வெற்றிகளை கூறி உலகெங்கிலும் உள்ள மற்றவர்களை ஊக்குவித்து அகிலத்தில் சேரவைப்பதை இலக்காக கொள்ளத்தலைப்பட்டது. இதன் விளைவாக, பிரிட்டனில் அமைப்பை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சி பெரிதும் நம்பப்பட்டது. இது கருதியது என்னவெனில், SLL-WRP க்குள் சந்தர்ப்பவாத போக்குகள் எழுச்சிபெற்றபோது, அவர்கள் தவிர்க்கமுடியாமல் செய்ததுபோன்று, --புரட்சிகரக்கட்சி வெற்றிடத்தில் செயல்புரிவதில்லை-- பிரச்சினைகளை போராட்டத்திற்கு உட்படுத்தப்படவில்லை. இயக்கத்திற்குள் ஒரு தெளிவு ஏற்படுத்துவதற்கு பதிலாக, இந்தப் போக்குகள் அமைப்பின் ஒற்றுமையைக் கருதி, அவற்றுடன் சமரசம் செய்து கொண்டன.

SLL-WRP யின் மூன்று முக்கிய தலைவர்களான, ஹீலி, பண்டா, மற்றும் சுலோட்டர் ஆகியோரிடையே 1960களின் கடைசிப்பகுதியில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் தோன்றலாயின. பண்டா, சீனாவில் மாவோயிசம், வியட்நாமில் NLF போன்றவற்றுடன் பேரார்வம் கொள்ள கூடுதலாக தலைப்பட்டார். சுலோட்டர், நான்காம் அகிலத்தை பப்லோவாதம் அழித்துவிட்டது எனவே மத்தியவாத சக்திகள் ஒன்றிணைந்து செயலாற்றினால்தான் அது சீரமைக்கப்படும் என்ற சிந்தனை போக்கை கொண்டிருந்தார். இந்த வேறுபாடுகளையெல்லாம் களையாமல், ஹீலி, கட்சியின் ஒற்றுமையை காப்பாற்றிக் கொள்ளுவதற்காக, அமைப்பிலும், நடைமுறை முன்னேற்றங்களையும் தக்கவைக்க பார்த்தார். இதற்காக மிகக் கடுமையான கசப்பான விலையை பின்னர் கொடுக்க நேர்ந்தது.

1980 களில் அல்லது அதற்கும் சற்று முன்னர், தொழிலாளர் புரட்சி கட்சி (WRP) இன் தலைமை ட்ரொட்ஸ்கிச வேலைதிட்டம் மற்றும் கொள்கைகளுக்கான போராட்டத்திற்கு ஆழ்ந்த விரோதப் போக்கை காட்டத்தொடங்கி, இவற்றை "பிரச்சார வாதங்கள்" என்றும் கண்டனத்திற்கு உட்டபடுத்தியது.

1985-86ல் தொழிலாளர் புரட்சி கட்சி அமைப்பிற்குள் எழுச்சிபெற்றிருந்த எல்லாப் பிரிவுகளின் சார்பாகவும் ஜெரி ஹீலி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை எதிர்த்து, "வெண்மையானதைவிட வெண்மையான சோசலிசத்தை பின்பற்றுகின்றது" என கண்டனத்திற்கு உட்படுத்தினார். இச் செயலின் மூலம், போருக்குப் பிந்தையகாலத்தின் அனைத்து சந்தர்ப்பவாத போக்குகளின் பார்வையையும், ஒன்று திரட்டி ட்ரொட்ஸ்கிச வேலைதிட்டம், கொள்கைகள் இவற்றை பின்பற்றினால் தனிமைப்படுத்தப்படும் நிலைதான் வருமென கூறிவிட்டார். உண்மையில், ஒரளவுக்கு ட்ரொட்ஸ்கிச இயக்கம் தனிமைப்பட்டு போனதே, ஸ்ராலினிசத்தின் ஆதிக்கத்தாலும், பல தேசிய விடுதலை இயக்கங்கள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை நம்பியிருந்த தன்மையினாலும், அது ஏகாதிபத்தியத்துடன் தந்திரோயாயமுறையில் கொடுக்கல் வாங்கல்களை கொண்டிருந்ததாலும்தான். ஆனால், இந்த நிலைமை இப்பொழுது ஆச்சரியப்படத்தக்க முறையில் மாறத் தொடங்கியது.

மிக அடிப்படையாக 1985-86 ஆண்டின் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிளவு, உலக அரசியலில் ஏற்பட்டிருந்த நீண்டகால தாக்கத்தை அளிக்கக் கூடிய மாறுதல்களுடன் பின்னிப்பிணைந்திருந்தது; இம்மாறுதல்கள் ட்ரொட்ஸ்கிசத்திற்கும் பல சந்தர்ப்பவாத போக்குகளுக்கும் இடையே முக்கியமான உறவு மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தன. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஸ்ராலினிச அதிகாரத்துவத்துடன் அடித்தளத்தை கொண்டிருந்த தொழிலாளர் புரட்சி கட்சியின் எல்லா பிரிவுகளும் உடைய ஆரம்பித்தன. 1991ல் சோவியத் ஒன்றியம், மற்றும் அதற்கு தலைமை தாங்கிய ஸ்ராலினிச அதிகாரத்துவம் இரண்டுமே பொறிந்தன.

நனவுபூர்வமான தலைமையின் அவசியம்

இத்தகைய வழியில் கடந்த 50 ஆண்டுகாலத்தை ஆய்வு செய்ததில், சில முடிவுகளையும், படிப்பினைகளையும் நாம் எடுக்ககூடிய நிலையில் உள்ளோம். ஒரு குறுகிய பார்வையுடையவர், அல்லது புரட்சிக்கட்சியை அமைப்பதற்கான நீண்டகாலப் போராட்டத்திற்குப் பொறுமை இல்லாதவர், ஆகியோருக்கு நான்காம் அகிலத்தின் வரலாறு குழப்பமான பிளவுகளையும், மோதல்களையும் கொண்டிருந்ததாக தோன்றக்கூடும். உடனடியான "வெற்றியில்" ஆர்வம்கொண்ட நடைமுறைவாதிக்கும் இந்த மோதல்களில் அக்கறையும், முக்கியத்துவமும் இருக்காது. ஆனால் முன்னேற்றப்பாதை காணவேண்டும் என்று கருதுபவர்களுக்கு, இவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாகும்.

நான்காம் அகிலத்தின் வரலாறும், எல்லாவற்றையும் விட அனைத்துலகக்குழு கடந்த 50 ஆண்டுகளாக நடத்திவரும் போராட்டம், எதிரான அரசியல் முன்னோக்குகளை சோதனைக்குட்படுத்தும் களமாக காட்சியளிக்கும்.

பப்லோவாதத்தின் ஆரம்பமுன்னோக்கை கருதுகையில்: லெனின், லியோன் ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்திசெய்யப்பட்ட வழிமுறைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள தலைமையின் கீழுள்ள கட்சிகளால், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போராட்டம் சோசலிச மாற்றத்திற்கு வழிவகுக்காது; மாறாக, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தலைமையின் கீழ், "உருகுலைந்த சிதைந்த தொழிலாளர் அரசாக" ("Deformed Workers' States") கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டது போல் எழுச்சியுறும்; இந்த போக்கு ஒருவேளை சில நூற்றாண்டுகள் கூட நீடிக்கலாம் அல்லது ஸ்ராலினிச அதிகாரத்துவம் "சுய-சீர்திருத்தம்" என்ற போக்கில் சென்று, ஸ்ராலினிச கட்சிகள் பெரும் மக்கள் அழுத்தத்தினால், "ஒரு புரட்சிகர நோக்குநிலையை" கொள்ளக்கூடும் என்பதே பப்லோவாத கருத்தாகும்.

ஒரு புரட்சிப் பிரிவு ஸ்ராலினிசத்திலிருந்து எழுச்சியுற்று, முதலாளித்துவ மறுசீரமைப்பு போக்குகளுக்கு எதிராக போராடும் என்றும், ஸ்ராலினிச அமைப்புகள் "முற்றிலும், முற்றிலும் எதிர் புரட்சிகரமானவை" என்று விவரித்தலும் தவறானது என்ற பப்லோவாத கருத்திற்கு, வரலாறு எத்தகைய விடையை கொடுத்துள்ளது?

விவசாயிகளையும், குட்டி முதலாளித்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட தீவிர தேசிய விடுதலை இயக்கங்கள், சோசலிச மாற்றத்தை கொண்டுவரக்கூடியவை என்று கூறிய கருத்துரைகள் என்ன ஆயின?

ஸ்ராலினிச ஆட்சிகளின் உடைவும், முதலாளித்துவத்தை மறுசீரமைப்பதில் அதிகாரத்துவம் கொண்டிருந்த பங்கும், ஸ்ராலினிச அமைப்புகளை பற்றிய இருபக்கத் தன்மையையும், அது முற்போக்கான பாத்திரத்தை வகிக்கும் என்பதையும் தவிடுபொடியாக்கிவிட்டது. அதேபோல், தேசிய விடுதலை இயக்கம் என்று அழைக்கப்பட்டிருந்தவையும், சோவியத் ஒன்றியத்தின் உடைவை பின்பற்றி, ஏகாதிபத்தியத்திடம் அடிபணிந்துவிட்டதால், அவற்றின் புரட்சிப்பங்கும் முத்திரையிடப்பட்டு மூடப்பட்டுவிட்டது.

கடந்த 50 ஆண்டுகளின் வரலாற்றின் புறநிலைரீதியான ஆய்வு, பப்லோவாதம், நான்காம் அகிலத்திற்கு பதிலாக தேடிய மாற்றங்கள் அனைத்தும் முற்றிலும் திவாலான தன்மை உடையவை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. ஒரு மாற்றீட்டை கொடுக்க கூடியவை என்று கருதப்பட்டவை அனைத்துமே பொறிந்துவிட்டன அல்லது, மீளமுடியாத சீரழிவு போக்கினுள் நுழைந்துவிட்டன.

தொழிலாள வர்க்க இயக்கத்தின் மீதான அரசியல் அழுத்தத்தின் வடிவம் மாறிவிட்டது என்பதுதான் இதன் பொருள். இப்பொழுது இது கீழ்கண்ட வடிவத்தில் உள்ளது: பழைய அமைப்பு முறைகளின் அழிவானது சோசலிசமே செயல்படுத்தமுடியாத தன்மையை கொண்டுள்ளது என கருதப்பட்டது. ஆனால் இப்படிப்பட்ட கருத்தும், முன்பு தொழிலாளர் இயக்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்திய கட்சிகளும் அமைப்புக்களும், முதலாளித்துவத்தை தூக்கிவீசக்கூடிய ஒரு முன்னோக்கை முன்வைக்கமுடியும் என்ற கருத்துபோலவே பிழையானது ஆகும்.

அப்படியானால் அவர்களின் அழிவு உண்மையில் எதைக் குறிப்பிடுகிறது? அவற்றின் கொள்கைகளுக்கு அடித்தளமாக இருந்த மற்றும் அவர்களுக்கு குறிப்பிடத்தக்களவு ஆதரவை வழங்கிய சடத்துவ நிலைமைகள், அந்தமுறையில் நான்காம் அகிலத்தைத் தனிமைப்படுத்திய நிலைமைகள் முற்றிலும் மாறுதலுக்கு உட்பட்டுவிட்டன.

உற்பத்தி முறையில் ஏற்பட்ட பாரிய மாற்றங்களும், தொலைத்தொடர்களில் ஏற்பட்ட கணிணிமயமாக்கல் வளர்ச்சிகளும், சுருங்கக்கூறின், கடந்த 20 வருடங்களில் உற்பத்தி சக்திகளில் ஏற்பட்ட வளர்ச்சி, பழைய கட்சிகளினதும், அவற்றின் தலைமைகளினதும் வேலைதிட்டங்களை முற்றிலும் யதார்த்தமற்றதாக்கிவிட்டன.

இது ஒரு மகத்தான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று உண்மையாகும். சமூகப் புரட்சி வருங்காலத்தில் ஏதோ ஒரு காலகட்டத்தில் தொடங்க இருக்கிறது என்பதைவிட, பரந்தமுறையில் புரட்சிகர மாறுதல்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன என்பதுதான் இதன் பொருளாகும். அவை ஏற்கனவே முழு அரசியல் மேற்கட்டுமானத்தையும் மாற்றிக் கொண்டிருக்கின்றன.

நான் முன்னரே குறிப்பிட்டபடி, ஏகாதிபத்திய போரின் வெடிப்பும், அமெரிக்காவின் பைத்தியக்காரத்தனமான பூகோள மேலாதிக்கம் கொள்ளவேண்டும் என்ற உந்துதலும், இன்னும் கூடிதலான வெடிக்கும் வகையில், உலக முதலாளித்துவத்தின் மத்திய முரண்பாடுகளை புதிதாகப் பழையபடி தீவிரமாக எழுச்சி பெற்றுள்ளது என்பதையும், உற்பத்தி சக்திகளின் பூகோள அபிவிருத்திக்கும் காலத்திற்கு ஒவ்வாததான தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலேயான முரண்பாட்டையும் குறிக்கிறது.

வரலாறு இப்பொழுது ஒரு வினாவை எழுப்புகிறது: இந்த முரண்பாடுகளை எவ்வாறு தீர்க்கப்பட முடியும்? அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய நலன்களுக்காக உலகை மாற்றியமைக்கவேண்டும் என்று கொண்டுள்ள உந்துதல், மனிதகுலத்தை புதியவகைகளிலான காட்டுமிராண்டித்தனங்களில் ஆழ்த்திவிடுமா அல்லது இந்த முரண்பாடுகளை, காலம்கடந்துவிட்ட முதலாளித்துவத்தை அழித்து, மனிதப் பகுத்தறிவு, தேவைகள் இவற்றிற்கேற்ப திருத்தி அமைக்கப்படமுடியமா?

மார்க்ஸ் விளக்கியுள்ளது போல், வரலாறு, தீர்வுக்கான நிலைமைகளை உருவாக்காமல் எந்தவொரு பிரச்சனையையும் முன்வைப்பதில்லை. இதுதான், அமெரிக்கா ஈராக்கிற்கெதிராக போர்தொடுத்ததற்கு எதிராக 2003 பெப்ரவரியில் பரந்துபட்ட மக்களின் உலகளவிலான ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்புக்களும் வெடித்ததின் முக்கியத்துவமாகும். New York Times அப்பொழுது குறிப்பிட்டிருந்தது போல், உலகில் இப்பொழுது இரண்டு பெரிய சக்திகள்தான் உள்ளன: "ஒன்று ஐக்கிய அமெரிக்கா மற்றயது உலக மக்களுடைய கருத்து".

தற்போதைய மிக முக்கியமான பணி, ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போரிடும் இந்த மக்கள் இயக்கத்திற்கு முழு நனவுடைய தலைமையைக் கொடுப்பது ஆகும். இதற்கு, உலக சோசலிச புரட்சிக் கட்சியின் காரியாளராக ஆக உள்ளவர்களுக்கு தக்க அரசியல் கல்வியூட்டலும், பயிற்சி அளித்தலும் தேவை என்பதை உணர்த்துகிறது. இங்குத்தான் àôè சோசலிச வலைத் தளத்துடைய முக்கியத்துவம் உள்ளது. இப்பணியைச் செய்வதற்குதான் நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழு (ICFI) இந்த வழிவகையை அபிவிருத்தி செய்துவருகிறது.

இன்று நாம் எதிர்கொண்டுள்ள போராட்டங்களுக்கும், பகிரங்கக் கடிதத்தில் தெளிவாக்கி கூறப்பட்டுள்ள கருத்துக்கள், மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு தோற்றுவிக்கப்பட்டமை ஆகியவற்றிற்கும் ஆழ்ந்த தொடர்பு உள்ளது. உண்மையில் பல பிரச்சினைகள் 100 ஆண்டுகளுக்கு பின் சென்று 1903ம் ஆண்டு, ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியில் போல்ஷிவிக்கிற்கும், மென்ஷிவிக் போக்கிற்கும் இடையே இருந்த பிளவுகளுக்கு செல்கின்றன.

இந்தப்பிளவு, சோசலிசப் புரட்சி முழு நனவோடுதான் தொடங்கப்படமுடியும் என லெனின் வலியுறுத்தியதில் ஏற்பட்டது. முதலாளித்தவத்தின் நெருக்கடி எவ்வளவு ஆழ்ந்திருந்த போதிலும், அதன் கொள்கைமுறைகள் எவ்வளவு கடுமையாக இருந்தபோதிலும், மக்கள் இயக்கம் எத்தகைய பரந்த தன்மையுடையதாக இருந்தாலும், முதலாளித்துவத்தின் தகர்ப்பு, சோசலிசம் நிறுவப்படுதல் ஆகியவை தன்னியல்பாகத் தோன்றாது. முதலாளித்துவத்தினாலேயே தோற்றுவிக்கப்படும் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு, அதன் முக்கிய முட்டுத்தூணாக இருக்கும் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான ஒரு ஒழுங்குமுறையான போராட்டம் இருக்கவேண்டுமென லெனின் உறுதிகொண்டிருந்தார்.

பப்லோவாதிகளுடன் 1953ம் ஆண்டு நிகழ்ந்த பிளவு இந்தப் புரிதலின் அடிப்டையில் ஏற்பட்டது. 1954 மார்ச் மாதம், கனன் பிரச்சினைகளைப் பற்றிச் சுருக்கமாகக்கூறுகையில், பப்லோவுடனும், மண்டேலுடனும் இருந்த வேறுபாடுகளின் மத்தியாக இருந்தது புரட்சிகரக் கட்சியின் பங்கைப் பற்றியது என்றார்.

"நாம் மட்டும்தான் கட்சி என்பது முழு நனவுடன் கூடிய முன்னணி, அதன் பங்கு புரட்சிப் போராட்டத்தின் தலைமை என்னும் லெனின்-ட்ரொட்ஸ்கிசக் கொள்கையின் அசையாப் பின்பற்றுவர்கள் ஆவோம்." என்று அவர் எழுதினார். "இந்த தத்துவம், இந்த சகாப்தத்தில் சுட்டெரிக்கும் முக்கியத்துவத்தைக் கொண்டு எல்லாவற்றின்மீதும் ஆதிக்கம் செலுத்தும். தலைமையின் பிரச்சினை, இயல்பாக நீண்டகால வழிமுறையில் கொள்ளும் வர்க்கப் போராட்டத்தின் தன்னியல்பான வெளிப்பாடுகளுடன் கட்டுப்பட்டுக்கொள்ளாமலும், இந்த அல்லது அந்த முதலாளித்துவம் சற்று வலுவிழுந்துள்ள நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றிகொள்ளுவதுடன் நிற்பது அல்ல. சர்வதேசப் புரட்சியை எவ்வாறு வளர்ப்பது என்பதுதான் கேள்வியாகும், சமுதாயத்தை எவ்வாறு சோசலிசமாக மாற்றுவது என்பதுதான் கேளவியாகும். இது தானே நடக்கும் என்று கூறுவது, உண்மையில் மார்க்சிசத்தை முழுமையாக துறந்துவிடுவது ஆகும். இல்லை, இது ஒரு முழு நனவுடன் இருக்கவேண்டிய செயல்பாடு, இது மார்க்சிச கட்சியின் தலைமையை கட்டாயமாகக் கொள்ளவேண்டியதை வலியுறுத்துகிறது; ஏனென்றால் மார்க்சிசம்தான் வரலாற்று வழிவகையில் முழு நனவு கூறுபாட்டின் பிரதிநிதியாக உள்ளது. வேறு எந்தக் கட்சியாலும் இதைச் செய்யமுடியாது."

1953ல் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், உலக முதலாளித்துவம் மறுபடியும் தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்ட நேரத்தில் தோன்றியது. இன்று முதலாளித்துவத்தின் உற்பத்தி முறைகளில் உள்ள எல்லா முரண்பாடுகளும் புதிய உச்ச கட்டத்தின் ஆழ்ந்த நிலையை அடைந்து, முன்பு அவை கையாண்டிருந்த, கட்டுப்படுத்தும் வழிமுறைகளும், சீர்திருத்தும் கருவிகள் அனைத்தும் முற்றிலும் உடைந்து விட்டன அல்லது மிகுந்த சீரழிந்த நிலையில் உள்ளன.

இதுதான் 1953ம் ஆண்டு பிளவு மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் தோற்றம் ஆகியவற்றின் முக்கியத்துவம் ஆகும். வெளிப்படையாகவே பாரிய கஷ்டங்களுக்கு மத்தியில், 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி பாதுகாத்துவரும் கொள்கைகளும் வேலைதிட்டங்களும், இப்பொழுது உலக சோசலிசப் புரட்சி தயாரிப்பதற்கும், அமைக்கப்படுவதற்கும் அடிப்படையாக இருக்க வேண்டும். நாம் உங்கள் அனைவரையும், இந்தப் போராட்டத்தில் பங்கு பற்றி, சோசலிச புரட்சியின் உலக கட்சியில் அங்கத்தவர்களாகுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அதுதான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவாகும்.

See Also :

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 50வது ஆண்டு நிறைவு கூட்டத்தில் இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மத்தியில் டேவிட் நோர்த் உரை

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 50 ஆண்டுகள் பற்றிய கூட்டங்கள்
பீற்றர் சுவார்ட்ஸ்: "அடிப்படைக் கோட்பாடுகள் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன"

கிறிஸ் மார்ஸ்டன்: தொழிலாளர் புரட்சிக் கட்சியுடன் பிளவும் ட்ரொட்ஸ்கிசத்தின் மேம்பாடும்

Top of page