World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israeli ambassador vandalizes artwork at Swedish museum

ஸ்வீடீஸ் கண்காட்சியில் ஓவியத்தை அழித்த இஸ்ரேலிய தூதுவர்

By Brian Smith
5 February 2004

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த மாதத்தில் கண்காட்சி ஒன்றில் ஸ்வீடனுக்கான இஸ்ரேலிய தூதரால் கலை வேலைப்பாடு நாசம் செய்யப்பட்டமையானது ஷரோன் அரசாங்கத்தின் சமூக மற்றும் அரசியல் உடற்கூற்றியலைப் பற்றி அதிக அளவில் பேசுகிறது.

Stockholm நகரின் தொல் பழமை சின்னங்களின் அருங்காட்சியகத்தில் வேறுபாடுகளின் உருவாக்கம் (Making Differences) என்ற தலைப்பில் ஓவியக்கண்காட்சி திறப்பு விழாவில் இஸ்ரேலிய தூதுவர் Zvi Mazel கலந்து கொண்டார். இக்கண்காட்சியானது ஸ்வீடன் அரசாங்கத்தினால் நடக்கும் இனப்படுகொலை பற்றிய சர்வதேச மாநாட்டின் ஒரு பகுதியாகும்.

இதில் வெண்பனியும் உண்மையின் குரூரமும் (White and the Madness of Truth) என்ற தலைப்பிலான ஒரு ஓவியம் இஸ்ரேலில் பிறந்த ஓவியர் டிரார் பெய்லர் (Dror Feiler) மற்றும் அவரது ஸ்வீடிஸ் மனைவி குனில்லா ஸ்கோயல்ட் பெய்லர் ஆகியோரால் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தது. அந்த ஓவியத்தில் சிறிய வெண்ணிறப் படகு, ரத்தம் போன்று தோற்றமளிக்குமாறு தீட்டப்பட்ட சிவப்பு நிற தண்ணீரில் மிதப்பது போன்ற காட்சியைக் கொண்டிருந்தது. அந்தப் படகின் பாய்மரச் சீலை ஹனாடி ஜரதாத் என்கின்ற பாலஸ்தீனத் தற்கொலை குண்டு வெடிப்பாளர் உருவப்படத்தால் வரையப்பட்டு இருந்தது. ஹனாடி ஜராதத், கடந்த வருடம் அக்டோபர் மாதம் 4-ம் தேதி இஸ்ரேலில் உள்ள ஹைஃபா நகரிலுள்ள ஒரு சிற்றுண்டி விடுதியில் தன்மீதுள்ள குண்டுகளை வெடிக்கச் செய்து தானும் இறந்து 19-இஸ்ரேலியர்களையும் கொன்றார்.

அருங்காட்சியகத்தில் வெண்பனி கூடிய தோட்டத்தில் அமைக்கப்பட்ட இந்த ஓவியத்தைக் கண்ட மெஸல் கட்டுப்படுத்த இயலாத கோபமடைந்தார், உடனடியாக அதை அங்கிருந்து அகற்றியாக வேண்டும் என்று கோரினார். அருங்காட்சியக பொறுப்பாளர்கள் அதை மறுத்தனர். உடனே மெஸல் அந்த ஓவியத்திற்கு ஒளி பாய்ச்சிக்கொண்டிருந்த மின் விளக்கை தண்ணீரில் தள்ளினார். உடனடியாக மின்சாரக் கோளாறு ஏற்பட்டு ஓவியம் எரிந்து நாசமானது. அதையடுத்து அவர் அந்த அருங்காட்சியகத்திலிருந்து பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டார்.

மெஸல் இதைப் பற்றி குறிப்பிடும்போது அந்த ஓவியத்தைப் பார்த்தவுடன் என்ன எண்ணம் எழுந்ததென்றால் ''என்ன அர்த்தத்தில் இந்த ஓவியம் படைக்கப்பட்டிருக்கிறது? புதிய ரத்தக் கடலில் அந்தப் படகு, அதில் அந்தப் பெண்ணின் சிரித்த முகம்; அதன் பின்னர் தான் அந்த ஓவியத்தின் தலைப்பைப் பார்த்தேன் அவள்தான் ஸ்நோ ஒயிட் அதாவது அவளது பாவங்கள் கழுவப்படுகின்றன என்கிற ரீதியில் இருந்ததையும் பார்த்தேன்- இந்த ரத்தம் எனது சகோதரர்களின்- எனது மக்களின் ரத்தம்''

''அந்த ஓவியம் சகிக்க முடியாதது; பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை அவமதிப்பது போல இருக்கிறது' என மெஸெல் கூறினார். Dror Feiler ஒரு யூதர் என்ற விஷயம் வெட்கக் கேடானது. என்பதை அவரிடமே தெரிவித்தாக மெஸல் கூறினார்.

பெய்லர் தம்பதியர் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்தனர். ''நாபுலஸில் என்ன செய்கிறீர்களோ, அதையேதான் இங்கும் செய்கிறீர்கள்" என்று பியலர் மெஸலிடம் தெரிவித்து இருக்கிறார். ''இது ஒரு சுதந்திர நாடு; நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதை என்னால் சொல்ல முடியும்; இன ஒதுக்கீடு உள்ள உங்களது நாட்டில் உங்களைப்போல இங்கு இல்லை'' என பெயலர் மெஸலிடம் கூறினார்

அவர் பின்பு குறிப்பிட்டார், ''எனது குடும்பம் இன்னும் இஸ்ரேலில்தான் வசிக்கிறது - நான் ஏன் தற்கொலை குண்டு வெடிப்பாளரை விரும்ப வேண்டும்? பயங்கரவாதத்தை விளக்க முற்படுவதால் அதை நாங்கள் மன்னிக்கிறோம் என்று அர்த்தம் அல்ல. அப்படிக்கூறுவது நகைப்பிற்குரியது என உணருகிறோம், ஆனால் நாம் தற்கொலைக் குண்டுவெடிப்புக்களை கண்டனம் செய்கிறோம்'' எங்களது ஓவியம் ''பலவீனமான தனிமையில் உள்ள நபர்களால் கூட எப்படி பயங்கர செயல்களை நிகழ்த்த முடிகிறது'' என்பதைக் குறித்து மக்களின் கவனத்தைத் திருப்புவதுதான் எங்களது நோக்கம்.

இதை குணில்லா ஒப்புக்கொண்டார். ''தற்கொலை குண்டுவெடிப்பாளரை பெருமைப்படுத்துவதல்ல எங்கள் நோக்கம்.'' மாறாக "இரண்டு குழந்தைகளின் தாய், அதுவும் ஒரு தொழில்துறை வழக்கறிஞர் ஆகிய தகுதிகள் உள்ள ஒரு பெண்ணினால் எப்படி இது போன்ற செயலில் ஈடுபட முடிகிறது என்பது புரியாததாக இருக்கின்ற நிலையை'' வெளிக்கொண்டுவர முயற்சித்ததாக கூறினார். அவர் மேலும் தொடர்ந்து பேசுகையில் "அந்தப் பெண்ணின் படத்தை செய்தித்தாளில் பார்த்தபோது, அவர் ஸ்நோ ஒயிட்டைப் போலவே இருக்கிறார் என்று நினைத்தேன், அதனால் தான் இந்தப் பெயரை இந்த ஓவியத்திற்கு வைத்தேன் என்றார்.''

''எனது இதயம் ரத்தத்தில் நீந்துகிறது (Mein Herze Schwimmt im Blut) என்ற தலைப்புடைய படத்துடன் Bach's 199 பாடற்கதை நாடகம் கூடவே ஒலித்துக் கொண்டிருந்தது: பாடல் ஆரம்ப வரி, ''என் இதயம் இரத்தத்தில் நீந்துகிறது, ஏனென்றால் கடவுளின் பார்வையின் முன் எனது பெரும் பாவங்கள் என்னை ராட்சாஸனாக தெரிய வைக்கிறது'' என்பதாக இருந்தது.

பின்வரும் உரை பக்கச் சுவர்களில் மீது சுவரொட்டிகளில், ஸ்னோ ஒயிட் என்கிற தற்கொலை குண்டு வெடிப்பாளர் ஹனாடி ஜராதத்தின் செய்கையைப் பற்றியும் கதைநடையில் எழுதி வைக்கப்பட்டு இருந்தது.

முன்னொரு சமயம் குளிர்கால நடுவில்,

பன்னிரண்டு ஜூனில் சகோதரன் மற்றும் உறவினர் இறக்க

மூன்று துளிகளாய் சிந்திய ரத்தத்துக்காக

அவளும் ஒரு பெண்தான்

வெண்பனி போலும் வெண்மை, இரத்தத்தைப் போல சிவப்பு, கருங்காலி போன்ற கூந்தல்

அகிம்சை உணர்வுடன் ஏதும் அறியா ஏந்திழை தோற்றம்

நோக்கங்கள் உளவோ அரிதாய் சந்தேகம்

வெண்மையின் மீதே வனப்பாய்ச் சிவப்பு விளக்குமோர் செய்தி

கொலைகாரர்கள் விலையைக் கொடுத்தே தீருவர்

அழப்போவது நாங்கள் மட்டுமே அல்ல

நோஞ்சான் குழந்தையாய் அவள் இதயம்

இரவும் பகலுமாய் அமைதி இல்லாதிருக்கும்வரை

ஹனாடி ஜராதத் 29 வயதே வழக்கறிஞர் அவள்

காட்டுக்குள் ஓடுவேன் வீட்டுக்குத் திரும்பிடேன்

மண உறுதி நடக்குமுன்னே இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால்

மரண உறுதி நடந்ததே

கூரான கற்கள் மீது முட்களினூடாக ஓடினாள்

கூறினாள் அவள்: நீ சிந்திய இரத்தம் வீண்போகா

ஸ்நோ ஒயிட்டின்

தூய நெஞ்சினை துளைக்கவே முயன்றாள்

கொலைகளை சாட்சியாய் கண்டதன் பின்னே

காட்டு விலங்குகள் விரைவில் உன்னையும் விழுங்கும் என

நோயால் படுத்தாள் கவலையால் நொந்தும் போனாள்

அவனின் மரணத்தால் அவளுடையதானது குடும்பப் பொறுப்பு

இலட்சியப் பணிக்கே முழுமையாய்

அர்ப்பணித்தாள் அவளை

"ஆம்" என்றாள் வெண்பனி நங்கை, "மனம் நிறைந்து சொல்கிறேன்"

வேதனையுடன் அழுதே மேலும் தொடர்ந்தாள்,

நமது தேசம் அதன் கனவுகளை அடைய முடியாது போனால்

இழந்துவிட்டவர்களின் இலட்சியத்தை நிறைவேற்றாது போனால்

சுதந்திரமாய், கெளரவமாய் வாழமுடியாது போனால்,

இவ்வுலகே அழிந்து போகட்டும்!

பின் என்ன பரிதாபத்திற்குரிய குழந்தையே, விரைந்தே ஓடு என்றாள்

அவள் ரகசியமாய் இஸ்ரேலுக்குள் நுழைந்தாள்;

ஹைஃபா விடுதிக்குள் பாய்ந்து சென்றாள்;

பாதுகாப்பு வீரனை சுட்டுக் கொன்றதும்

பலநூறாய் தன்னையே வெடித்து

பத்தொன்பது அப்பாவி மக்களைக் கொன்றாள்

வெண்பனி போலும் வெண்மை, இரத்தத்தைப் போல சிவப்பு,

கருங்காலிமரம் போல் கரியதோர் கூந்தல் கொண்ட அவள்

அழுதே புலம்பினர் பலரும்; ஜெர் அவிவ் குடும்பத்தினர், அல்மாக் குடும்பத்தினர்

இறந்தோர் மற்றும் காயம்பட்டோரின் உறவினர் நண்பரென அனைவரும்

வெண்மையின் மீதே வனப்பாய்ச் சிவப்பு விளக்குமோர் செய்தி

அருங்காட்சியகத்தின் இயக்குநர் கிறிஸ்டியன் பேர்க் அந்த ஓவியமானது "இஸ்ரேலிய-பாலஸ்தீனியர்கள் மோதலில் அவ்வாறான நிகழ்வுகளின் காரணத்தைக் குறித்து நம்மை சிந்திக்க வைக்கிறது'' என்றார்.

டிரார் பெய்லர் இதை ஒப்புக்கொள்கிறார். இஸ்ரேலிய- பாலஸ்தீனியர்களின் பிரச்சனையில் அடிப்பட்டுப்போன மனிதத்தன்மையால் பிரச்சனை எப்படி தன்னை திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்திக் கொள்கிறது என்பதற்கான இன்னொரு உதாரணம் ஜராதத். "ஒருவனை மூலையில் விட்டு அதிகமாய் அடிக்க அடிக்க என்ன நிகழுமோ அதுதான். தனிப்பட்ட மனிதன் மிருகமாகிறான்".

ஆக்கிரமிப்புப் பகுதியில் என்ன நடக்கிறது என்பது பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்வதை விரும்பாத நபர் மெஸல், அதுவும் சிறப்பாக இஸ்ரேலிய அடக்குமுறைதான் பயங்கரவாதச் செயல்கள் நிகழ்வுகளுக்குக் காரணமாக இருக்கிறதோ என்று மற்றவர்கள் எண்ணிப்பார்ப்பதையும் மெஸல் விரும்ப மாட்டார். ஓவியத்துடன் இருந்த வாசகங்கள் மற்றும் இசை ஆகியவற்றை வேண்டுமென்றே அலட்சியம் செய்த அவர் ஓவியத்தை செமிட்டிக் இனத்தவர்களுக்கு எதிரானது என்றும், தற்கொலை குண்டு வெடிப்பினரை தூண்டிவிடுவது போல இருக்கிறது என்றும் விவரித்திருக்கிறார்: ''என்னைப் பொறுத்த மட்டிலும் அந்த ஓவியம் குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழைக்கப்பட்ட சகிக்க முடியாத அவமதிப்பு ஆகும். இஸ்ரேலின் தூதுவரான நான் உண்மை நிலையை தவறாக சித்தரித்துக் காண்பிக்கப்படுவதை கண்டு பாராமுகமாக இருக்க முடியாது".

பெய்லர் இஸ்ரேலிய வேளாண் குடியிருப்பில் பிறந்தவர் ஆனால் 1973-லிருந்து ஸ்வீடனில் வாழ்ந்து வருபவர். இஸ்ரேலியர் - பாலஸ்தீன அமைதிக்காக இயங்கும் யூதர்கள் இயக்கத்தில் செயல்பட்டு வருபவர். ஸ்டாக்ஹோல்மை மையமாக வைத்து இயங்கும் இந்தக் குழுவானது மேற்குக் கரையிலும் காசா பகுதிகளிலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைக் குறித்து எதிர்த்து குரல் கொடுத்து வருகிறது. தனது ஓவியத்தின் மீதான தாக்குதல் உடனடிக் கோபத்தால் ஏற்பட்டதல்ல என்று நம்புகிறார் பெய்லர். அவரது ஓவியத்தை செமிட்டிக் இன எதிர்ப்பின் அடையாளம் என்று கூறுபவர்கள் ஆக்கிரமிப்பு எல்லைப்பகுதிகளில் இஸ்ரேலின் கொள்கையை பற்றி விமர்சிப்பதை வாய்மூடப்பண்ணும் முயற்சித்தானே தவிர வேறொன்றுமில்லை என்றார். "விமர்சிப்பவர்கள் அனைவரையும் செமிட்டிக் இன எதிரிகள் என்று முத்திரை குத்தி விடுவதால் பலர் அச்சத்தினால் அமைதியாகிறார்கள்'' என்று குறிப்பிடுகிறார் அவர்.

தங்களது செய்கைகளை விமர்சிப்பவர்களை பயமுறுத்துவதுடன் ஷரோன் அரசாங்கம் வலதுசாரியினரின் வழிமுறைகளைக் கையாண்டு தங்களது மக்களில் அரசியல் ரீதியில் மிகவும் பின்தங்கியவர்களிடையே உள்ள தவறான எண்ணங்களையும், பயங்களையும் விசிறிவிட்டு பெரிதாக்குகின்றனர். தவறாக வழிநடத்தப்படும் இந்த மக்கள் கூட்டத்தை சியோனிச அரசின் உத்தியோக ரீதியிலான கொள்கைக்கும் மற்றும் இஸ்ரேலிய தொழிலாரை குறிவைத்து எடுக்கப்படும் பொருளாதார சிக்கன நடவடிக்கைகளுக்கும் மாற்றுக் கொள்கைகளை நாடும் எவருக்கும் எதிராகவும் அவர்களை திரட்டுவதற்கு முடிகிறது.

கலைஞர்களுக்கு எதிராக கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன, ஹைஃபாவின் சட்டமன்ற உறுப்பினர் தன் தொகுதியில் உள்ள ஸ்வீடன் தெரு என்ற பெயரை மாற்ற போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருக்கிறார். இஸ்ரேலிய அரசாங்கம் ஓவியத்தை கண்காட்சியிலிருந்து அகற்றுமாறு கோரியிருக்கிறது. பிரதம மந்திரி ஏரியல் ஷரோனும் மெஸலின் நடவடிக்கைகளை மிகுந்த உற்சாகத்துடன் ஆதரித்து இருக்கிறார். அவர் கூறியதாவது ''அதிகரித்து வரும் செமிட்டிச எதிர்ப்பினரிடையே இம்மாதிரியான உடனடி செயல்பாட்டுக்கு நன்றி தெரிவித்திருந்தார் மற்றும் அரசாங்கம் முழுவதும் அவருக்கு பின்னால் இருக்கிறது... என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய தூதுவர் சரியான விதத்தில்தான் நடந்து கொண்டிருக்கிறார் .... என்னைப் பொறுத்தவரை அங்கே வெளியிடப்பட்ட கருத்து இலேசாக எடுத்துக் கொள்ளக்கூடியது அல்ல என்பதால் உடனடியாக நடவடிக்கையைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை'' என்று கூறினார் ஷரோன்.

உள்துறைப் பாதுகாப்பு மந்திரி Tzachi Hanegbi மெஸலுக்கு விருது அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். ''ஒரு தூதுவர் ராஜீய முறையிலல்லாமல் நடக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏதாவது ஒன்று இருக்குமானால், அது இதுதான்'' என்று கூறியிருக்கிறார்.

வலதுசாரி பத்திரிகை Hatzofe, ''ஐரோப்பாவிலுள்ள பிற தூதுவர்கள் பின்பற்றக்கூடிய விதத்தில் உதாரணமாய் நடந்து கொண்டிருக்கிறார்'' மெஸலின் நடவடிக்கையை ஆதரித்திருக்கிறது. ஜெருசலம் போஸ்ட் பத்திரிகையும் இதைப் பாராட்டியிருக்கிறது. ''நடந்ததைக் குறித்து சாதாரண விதத்தில் ஆட்சேபம் செய்திருந்தால் வழக்கம் போல அது பதிவு செய்யப்பட்டு அதன் தன்மை இழந்து ஐரோப்பிய ராஜதந்திர வட்டார விவகாரங்களில் சிக்கி மறைந்து, அழிந்து போயிருக்கும். இதன் காரணமாகத்தான் திரு மெஸல் ஓங்கிக்குரல் கொடுக்க வேண்டியதாயிற்று. ஐரோப்பா இஸ்ரேலுக்கு தற்போது கொடுத்திருக்கும், ஒரே வழி அதுதான். ''

இது போன்று ஐரோப்பிய செமிட்டிச எதிர்ப்பு என்ற இடைவிடாத குற்றச்சாட்டுக்கள் ஷரோனுக்கு அடிப்படை அரசியல் காரணங்களுக்காக பயன்படுகிறது. மேற்குக்கரை மற்றும் காசாப் பகுதியில் இஸ்ரேலின் பலவந்த ஆக்கிரமிப்பு பற்றி விமர்சிக்கும் எந்த கண்ணோட்டத்திற்கும் எதிராக பயன்படும் ஆயுதமாக செமிட்டிச எதிர்ப்பு விளக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பாவிற்குள்ளே உள்ள பெரும்பாலானோரின் கண்ணோட்டமாகவும், ஐரோப்பிய யூதர்கள் பலரின் அபிப்பிராயமுமான, பல தலைமுறைகளாக நடக்கும் இந்த பிரச்சனைக்கு அரசியல் ரீதியில் மாற்றைத் தேடியாக வேண்டும் என்பது போன்ற பரவலான கருத்துக்களை குப்பை என ஒதுக்கித்தள்ளும் வழியாக இது ஆகிறது. இதே கருத்து இஸ்ரேலிய மக்கள் மத்தியிலும் நம்ப வைக்கப்படுகிறது. இஸ்ரேல் அனைத்துப் பக்கங்களிலும் எதிரிகளால் முற்றுகையிடப்பட்டு இருக்கிறது என்பதால் மக்கள் அரசாங்கத்தை எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரித்தே ஆகவேண்டும் அதுவும், அதன் கொள்கைகள் சமூக மற்றும் பொருளாதார சீர்கேடுகளை உண்டாக்கினாலும் அதனைச் சுற்றியே அணிதிரள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். இறுதியாக ஷரோன் மற்றும் அதிவலதுசாரி சியோனிச சக்திகள் ஆகியோர் புஷ் நிர்வாகமும் அவரது கிறிஸ்தவ அடிப்படைவாத கொள்கையினரும்தான் இஸ்ரேலின் உண்மையான நண்பர்களாக இருக்க முடியும் என்று நம்பவைக்கின்ற முயற்சிகளுக்கு மேற்கண்ட அணுகுமுறை உதவுகிறது.

செமிட்டிச இன எதிர்ப்பு குற்ச்சாட்டுக்கள், அதுவும் குறிப்பாக ஐரோப்பிய எதிர்ப்பு உணர்வுகளையும் சேர்த்து பேசுவதற்குக் காரணம் இந்த இரண்டும் ஜேர்மனிய பாசிசம் மற்றும் இன அழிப்பையும் ஞாபகப்படுத்தத்தான். ஆனால் இந்த அணுகுமுறை, தணிக்கை செய்ய கோரிக்கை, விமர்சனங்களை சகிக்க முடியாத மனப்பான்மை மற்றும் எதிர்ப்பாளர்களின் விமர்சனக்குரலை தேடிப்பிடித்து ஒடுக்குவது உள்பட கசப்பான உண்மையினை மறைத்துவிட கட்டாயம் அனுமதித்து விடக்கூடாது - இவைதான் பாசிச அரசியல் மனோநிலையை உண்மையாகவே ஞாபகப்படுத்துகிற விஷயங்களாகும்.

Top of page