World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Socialist Equality Party to stand in Sri Lankan elections

சோசலிச சமத்துவக் கட்சி இலங்கைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது

By the Socialist Equality Party
24 February 2004

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) எதிர்வரும் ஏப்பிரல் 2ம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் 23 வேட்பாளர்களுடன் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. கொழும்பானது நாட்டின் மிகப் பெரிய மாவட்டமும், கைத்தொழில் மற்றும் வர்த்தக மையமுமாகும்.

இந்த வேட்பாளர் குழுவுக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும், உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினருமான விஜே டயஸ் தலைமை வகிப்பார். சோ.ச.க வேட்பாளர்களில் சிங்களம் மற்றும் தமிழ் பேசும் தொழிற்துறை தொழிலாளர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்களும் அடங்குவர்.

கடந்த மூன்று மாதகால அரசியல் நிகழ்வுகள், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை பதிவி விலக்கத் தீர்மானித்ததை அடுத்து உச்சநிலையை அடைந்தது. இது பாராளுமன்ற ஜனநாயகம் தானாகவே விரைவில் அழிந்துபோவதையும், முழுதும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட புதிய எதேச்சதிகார வடிவிலான ஆளுமைக்காக தயார்செய்யப்பட்டுக் கொண்டிருப்பதையும் வெளிப்படுத்துகிறது.

சோ.ச.க இந்தத் தேர்தலை தொழிலாள வர்க்கம் முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் பெரும் ஆபத்துக்களை பற்றியும், அவற்றுடன் போரிடக்கூடிய அனைத்துலக சோசலிச வேலைத் திட்டம் பற்றியும் ஒரு பரந்த கலந்துரையாடலை ஆரம்பித்து வைக்க பயன்படுத்தும்.

குமாரதுங்கவின் முன்னொருபோதும் மேற்கொள்ளப்பட்டிராத நடவடிக்கைகள், மரியாதையற்ற முறையில் தூக்கியெறியப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) உட்பட அரசியல் நிறுவனத்தின் எந்தவொரு பிரிவாலும் எதிர்க்கப்படவில்லை. குமாரதுங்க, அடிப்படை பாராளுமன்ற நடைமுறைகளை புறக்கணித்ததை மன்னிப்பதில் பிரதான கட்சிகள் உடன்பட்டமையானது, இலங்கை ஆளும் வட்டாரங்களுக்கிடையில் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு குறிப்பிடத்தக்க அளவேனும் ஆதரவு கிடையாது எனும் தெளிவான எச்சரிக்கையாகும்.

அரசாங்கத்தை வெளியேற்றியமை ஏப்பிரல் 2 தேர்தலை அலட்சியம் செய்கிறது. பெறுபேறுகள் என்னவாக இருந்தாலும், தனது நிகழ்ச்சித் திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக, ஜனாதிபதி தனது நிறைவேற்றதிகார அரசியலமைப்பு அதிகாரங்களை பயன்படுத்தவுள்ளதை தெளிவுபடுத்தியுள்ளார். அதிகாரத்தின் மையமானது பாராளுமன்றத்தில் இருந்து, இராணுவ உயர்மட்டம் மற்றும் சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆகிய இரண்டு பிரதான முண்டுகோல்களில் தங்கியுள்ள ஜனாதிபதியின் கைகளுக்கு மாறியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடான தற்போதைய யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு கட்டுப்படுவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்த போதிலும், "சமாதான முன்னெடுப்புகள்" பற்றிய அவரது கண்டனங்கள், அவைகளது சொந்த பிடிவாதமான தர்க்கத்தைக் கொண்டுள்ளன: அவை நாட்டை மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ளிச் செல்லவுள்ளன. அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க), ஜே.வி.பி மற்றும் ஏனைய சிங்களத் தீவிரவாத வாய்வீச்சாளர்களுடன் சேர்ந்து, சாதாரண உழைக்கும் மக்களை அவர்களின் சொந்த அவநம்பிக்கையான நிலைமையில் இருந்து திசைதிருப்புவதன் பேரில், தமிழர் விரோத பேரினவாதத்தை தூண்டிவிட இந்த பிரச்சாரத்தை சுரண்டிக்கொள்ளும்.

எந்தவொரு பாராளுமன்றக் கட்சியும் மக்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் எதிர்கொண்டுள்ள கூர்மையான ஆழமான நெருக்கடிகளை அனுகுவதற்குத் தன்னும் இலாயக்கற்றவைகளாக உள்ளன. குமாரதுங்கவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியால் தொடரப்பட்ட பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளில், "சமாதானம்" போன்ற எதுவும் கிடையாது. அதைவிட, அதன் மைய நோக்கமானது, பூகோள மூலதனத்திற்காக தீவை ஒரு மலிவு உழைப்பு மேடையாக மாற்றுவதற்காக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் கும்பல்களுக்கிடையில் ஒரு அதிகாரப் பகிர்வு ஒழுங்கை ஸ்தாபிப்பதாகும். ஜே.வி.பி மற்றும் விடுதலைப் புலிகள் உட்பட எல்லாக் கட்சிகளும், பொருளாதார மறுசீரமைப்பு, தனியார்மயமாக்கல் மற்றும் நலன்புரி செலவுகளை குறைத்தல் போன்ற திட்டங்களை ஆதரிக்கின்றன. இந்த திட்டங்கள் தீவு பூராவும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளின் வாழ்க்கைத் தரங்களில் அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஏப்பிரல் 2 தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரே கட்சி சே.ச.க மட்டுமேயாகும். சோ.ச.க மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் அனைத்துவிதமான பேரினவாதம் மற்றும் இனவாதத்தையும் சளையாது எதிர்ப்பதிலும், தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக இன அல்லது மொழி வேறுபாடின்றி பிரச்சாரம் செய்வதில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. சோ.ச.க, ஆரம்பத்தில் இருந்தே 60,000 மக்களின் உயிர்களைப் பலிகொண்ட அழிவுகரமான உள்நாட்டு யுத்தத்தை உறுதியாக எதிர்த்து வந்ததோடு, தீவின் வடக்குக் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் வெளியேற்றுமாறும் கோரிவந்துள்ளது.

சோ.ச.க வின் வேலைத் திட்டம் பின்வரும் மூன்று அடிப்படை கொள்கைகளில் வேரூன்றியுள்ளது:

தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக

உலக நிலைமையின் பிரதான காரணி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வன்முறையான வெடிப்பாகும். பூகோள மேலாதிக்கத்திற்கான அமெரிக்க குறிக்கோளானது, பெரும் வல்லரசுகளுக்கிடையிலான உடனடி யுத்த அபாயத்தை தோற்றுவிப்பதோடு, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற சிறிய வறிய நாடுகளை மட்டுமன்றி, எல்லா நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களையும் அச்சுறுத்துகின்றது. அமெரிக்க மூலோபாயமானது, ஒருபுறம் முன்னெப்போதும் இருந்திராத உற்பத்தியின் பூகோளமயமாக்கத்துக்கும், மறுபுறம் முதலாளித்துவம் தங்கியுள்ள தற்காலத்திற்கு ஒவ்வாத தேசிய அமைப்பு முறைக்கும் இடையிலான அடிப்படை முரண்பாடுகளை இராணுவ நடவடிக்கையின் மூலம் தீர்த்துக்கொள்ளும் ஒரு அவநம்பிக்கையான முயற்சியாகும்.

சோ.ச.க, தொழிலாள வர்க்கம் முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு இலங்கையின் தேசிய வரம்புக்குள் தீர்வு கிடையாது என வலியுறுத்துகிறது. கொழும்பில் நிலவும் தற்போதைய நெருக்கடியானது, எல்லாவற்றுக்கும் மேலாக, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளில் ஏற்பட்டுள்ள பரந்த மாற்றங்களின் பெறுபேறாகும். அவை இந்தியத் துணைக்கண்டம் பூராவும் ஆழமான தாக்கத்தைக் கொண்டுள்ளன. வாஷிங்டன், ஆப்கானிஸ்தான் மீதான அதனது இராணுவத் தலையீட்டின் தொடக்கத்திலேயே, தனது சொந்த பொருளாதார மற்றும் மூலோபாயக் குறிக்கோள்களை முன்னேற்றுவதற்காக, தெற்காசிய விவகாரங்களை மீளமைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இதன் காரணமாக அது காஷ்மீரிலும் மற்றும் இலங்கையிலுமான நீண்டகால மோதல்களுக்கு முடிவுகட்டுமாறு நெருக்கி வருகின்றது.

ஆனால், விடுலைப் புலிகளுடனான சமாதானக் கொடுக்கல் வாங்கல்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இலங்கை அரசை ஆழமான ஸ்திரமற்ற நிலைமைக்குள் தள்ளியது. இலங்கை அரசானது 1948ல் அதன் தொடக்கத்தில் இருந்தே தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் மற்றும் முதலாளித்துவ ஆளுமையை தூக்கி நிறுத்தவும் தமிழர் விரோத பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக் அல்லது ஆப்கானிஸ்தானை விட, இலங்கையில் சமாதானத்திற்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ளது என நம்புவது முட்டாள்தனமானதாகும். குமாரதுங்கவின் அண்மைய நடவடிக்கைகளைப் பற்றி வாஷிங்டன் அமைதி காப்பதானது, "சமாதான முன்னெடுப்புகளுக்கான" அதன் ஆதரவு, விரைவில் மாற்றம் பெறக்கூடிய நுட்பமான முன்யோசனையில் இருந்தே எழுகிறது என்பதற்கான எச்சரிக்கையாகும்.

பூகோள மூலதனத்தின் பொருளாதார ஆதிக்கத்தையும் அமெரிக்க மற்றும் பெரும் ஏகாதிபத்திய சக்திகளின் கொள்ளையிடும் திட்டங்களையும் சவால் செய்யக்கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமேயாகும். உற்பத்தியின் பூகோளமயமாக்கமானது, கடந்த இரு தசாப்தங்களாக, குறிப்பாக சீனா, இந்தியா மற்றும் ஏனைய ஆசிய நாடுகளிலும் தொழிலாள வர்க்கத்தின் புதிய போராளிகளை பரந்தளவில் உருவாக்குவதன் மூலம் சோசலிச அனைத்துலக வாதத்துக்கான புறநிலை அடிப்படைகளை உயர்ந்தளவில் பலப்படுத்தியுள்ளது.

இந்தியத் துணைக்கண்டத்திலும், ஆசியா பூராவும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகம் பூராவும் உள்ள அதன் வர்க்க சகோதரர்கள் மற்றும் சகோதரிகளும் இலங்கையில் உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் பங்காளிகளிகளாகும். எல்லாவிதமான இனவாதம் மற்றும் பேரினவாதத்திற்கும் எதிராக, சோ.ச.க இந்தியத் துணைக் கண்டத்திலும் மற்றும் அனைத்துலகிலுமான சோசலிச மாற்றத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீ லங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காக பிரச்சாரம் செய்கின்றது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (நா.அ.அ.கு) இலங்கைப் பகுதியான சோ.ச.க, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட நாடுகளில் உள்ளவர்களோடு, உலக ஏகாதிபத்தியத்தின் பிரதான மையங்களிலும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்காக, அதன் சகோதரக் கட்சிகளான அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஜேர்மனிய சோசலிச சமத்துவக் கட்சியால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குகிறது.

சமூக சமத்துவத்திற்காக

முதலாளித்துவ அரசியல்வாதிகள், சர்வதேச நாணய நிதியத்தின் திறந்த பொருளாதார கொள்கைகள் பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும், அதன் மூலம் முழு சமுதாயத்தினதும் வாழ்க்கை நிலைமை முன்னேறும் என்ற மாயையை தொடர்ந்தும் பரப்புகின்றனர். ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களினதும் சாட்சியங்கள் எதிரிடையை உறுதிப்படுத்துகின்றன. பூகோள மூலதனத்துக்காக ஆசிய நாடுகளை மலிவு உழைப்பு மேடையாக மாற்றுவதானது, மிகப் பெரும்பான்மையானவர்களின் செலவில் ஒரு சிறு குழுவினரை இலாபமடையச் செய்யும்.

இலங்கை விதிவிலக்கானதல்ல. மறுசீரமைப்பும் தனியார்மயமாக்கலும் பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்களின் தொழில் மற்றும் நிலைமைகளை சீரழித்துள்ளதோடு, இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவை போன்ற அடிப்படை சமூக சேவைகளையும் கீழறுத்துள்ளது. கிராமப்புற மக்களில் பிரமாண்டமான பகுதியினர், ஒழுங்கான பாதைகள், சுத்தமான தண்ணீர் மற்றும் மின்சாரம் இன்றி உள்ளனர். யுத்த நிறுத்தம் இருந்துகொண்டுள்ள போதிலும், யுத்தத்தால் அழிவுற்ற நாட்டின் வடக்கு கிழக்குப் பகுதி, வறுமையிலும் வசதிகளற்ற முகாம்களிலும் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கும் பெருந்தொகையான அகதிகளுடன் கோரமாகக் காட்சியளிக்கின்றது.

இலங்கையில் வறுமையையும் சமூக சமத்துவமின்மையையும் ஒழிப்பது என்பது ஒரு கற்பனைக் கனவு அல்ல. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்திலுமான கடந்த தசாப்தகால அதிசயிக்கத்தக்க அபிவிருத்தியானது, உலகின் உற்பத்தி சக்திகளின் பெரும் விரிவாக்கத்திற்கான அடிப்படையை உருவாக்கிவிட்டுள்ளது. பொருளாதார சக்தியின் நெம்புகோல்கள், செல்வம் படைத்த ஒருசிலரின் தனிப்பட்ட இலாபத்தை உருவாக்க பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக, அவை சகலரதும் முன்னேற்றத்தின் பேரில் தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுவதோடு, முழு மனித குலத்தின் அழுத்தும் சமூகத் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். அதிக ஊதியம் பெறக்கூடிய ஒழுங்கான தொழில்கள் வழங்கவும் சுத்தமான தண்ணீர், மின்சாரம் மற்றும் மலிவான பொதுப்போக்குவரத்து உட்பட, உயர் தரத்திலான சமூக சேவைகள் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பை உருவாக்கவும் இலங்கையின் சமூக செலவீனங்களில் ஒரு பரந்த விரிவாக்கம் தேவை.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக

தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் அதன் சுயாதீனத்திற்கான நிலையான அரசியல் போராட்டத்திற்கு வெளியில் அதன் ஜனநாயக உரிமைகளையும், அதன் சமூகத் தேவைகளையும் பாதுகாக்க முடியாது. 50 வருடங்ககளுக்கு முன்னர் உத்தியோகபூர்வ சுதந்திரம் பெற்றதில் இருந்து, இலங்கை ஆளும் வர்க்கம் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கான சாதாரண உழைக்கும் மக்களின் அபிலாசைகளை இட்டு நிரப்புவதில் அதன் இலயக்கற்ற நிலைமையை அம்பலப்படுத்தியுள்ளது.

சோ.ச.க தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அரசியல் போராட்டத்தையும் அங்கீகரிக்க மறுக்கும், முதலாளித்துவ வர்க்கத்தின் ஏதாவதொரு பகுதியினருக்கும் தொழிலாளர்களை அடிபணியச்செய்வதை இலக்காகக் கொண்ட பலவித சந்தர்ப்பவாத திட்டங்களையும் முழுமையாக நிராகரிக்கின்றது. இலங்கையில் இந்த நோக்கு அடுத்து அடுத்து பேராபத்துக்களை முன்வைக்கின்றது. 1964ல் லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க) சோசலிச அனைத்துலக வாதத்துக்கான போராட்டத்தை கைவிட்டு, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைந்ததன் மூலம் தேசியவாத மற்றும் பேரினவாத சக்திகளின் கைகளை நேரடியாகப் பலப்படுத்தியதோடு, ஜே.வி.பி மற்றும் விடுதலைப் புலிகளின் எழுச்சிக்கும், மொத்தத்தில் உள்நாட்டு யுத்தத்தின் வெடிப்பிற்கும் பங்களிப்பு செய்துள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களைப் போலவே ல.ச.ச.க வும் சீரழிந்து போயுள்ளது. இந்தப் பெயரளவிலான தொழிலாளர் அமைப்புகள் எதுவும் குமாரதுங்கவின் ஜனநாய விரோத நடவடிக்கைகளை எதிர்க்கவில்லை. உண்மையில், ல.ச.ச.க வும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஜே.வி.பி-ஸ்ரீ.ல.சு.க கூட்டணியோடும், ஐக்கிய தேசிய முன்னணிக்கு எதிரான அதன் இனவாத ஆர்ப்பாட்டங்களோடும் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டுள்ளன. தொழிலாளர்கள் சாத்தியமான முடிவுகளை எடுக்க வேண்டும்: ஆளும் கும்பல்களின் அழிவுகரமான கொள்கைகளுக்கு எதிரான எந்தவொரு வெற்றிகரமான சவாலும் முதலாளித்துவ ஒழுங்குக்கு எதிரான பரிபூரணமான எதிர்ப்பில் மாத்திரமே அடித்தளமிடமுடியும். 1940 களிலும் 1950 களிலும் ல.ச.ச.க வால் சக்திவாய்ந்த முறையில் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிச பாரம்பரியங்கள் மீளாய்வு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவேண்டும். இந்த வழியில் மாத்திரமே ஒரு தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்துக்கான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தால் ஒடுக்கப்பட்ட கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களை தன்பக்கம் அணிதிரட்ட முடியும்.

இந்த தேர்தலில் களங்கமற்ற பதாகையை தாங்கிச் செல்லும் ஒரே கட்சி சோ.ச.க மாத்திரமேயாகும். சோ.ச.க வும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் தேசியவாத வேலைத் திட்டத்திற்கு எதிரான சமரசமற்ற அரசியல் போராட்டத்தின் ஊடாக, அக்டோபர் புரட்சியின் வெற்றிகளைக் காப்பதற்காக லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட இடது எதிர்ப்பு அணியின் பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. ட்ரொட்ஸ்கிச இயக்கமானது, சோசலிசம் சோவியத் ஒன்றியத்தில் அதிகாரத்தை பலாத்காரமாகப் பறித்த கொடுங்கோலான அதிகாரத்துவத்துக்கு அல்லது கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள அதன் பரிந்துரையாளர்களுக்கு சமமானது என்ற நோக்கை எப்பொழுதும் நிராகரித்து வந்துள்ளது.

எதிர்காலத்தில் சோ.ச.க, தனது வேலைத் திட்டம் மற்றும் கொள்கைகள் அடங்கிய ஒர் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவுள்ளது. நாம் இலங்கையிலும், ஆசியாவிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் உள்ள உலக சோசலிச வலைத் தள வாசகர்களுக்கும் எமது பிரச்சாரத்தை ஆதரிக்குமாறும் அதில் பங்குபற்றுமாறும் அழைப்புவிடுக்கின்றோம். சிங்களத்திலும் தமிழிலும் மொழிபெயர்க்கப்படவுள்ள எமது விஞ்ஞாபனத்தை விநியோகிக்கவும், எமது பொதுக் கூட்டங்களுக்கு திட்டமிடவும், உங்களது வேலைத் தளங்கள் அல்லது உள்ளூர் பிரதேசங்களில் சோ.ச.க பேச்சாளர்கள் உரையாற்றும் வகையில் கூட்டங்களை ஒழுங்கு செய்யவும் உதவுவதோடு எமது தேர்தல் நிதிக்கு பங்களிப்பு செய்யுமாறும் அழைக்கின்றோம். எல்லாவற்றுக்கும் மேலாக எமது வேலைத் திட்டத்தையும் முன்னோக்கையும் வாசிப்பதுடன் சோ.ச.க வில் இணைய விண்ணப்பிக்குமாறு வேண்டுகிறோம்.

See Also :

சோசலிச சமத்துவக் கட்சி இலங்கை ஜனாதிபதியின் சர்வாதிகார நடவடிக்கைகளை கண்டனம் செய்கின்றது

இலங்கையின் அரசியலமைப்பு சதி ஜே.வி.பி யை அரசியல் முக்கியத்துவத்தை நோக்கித் தள்ளியுள்ளது

இலங்கை ஜனாதிபதி அரசாங்கத்தை பதவிவிலக்கியதை அடுத்து மெளனம் சாதிக்கிறார்.

இலங்கை ஜனாதிபதி அரசியல் சதியில் அரசாங்கத்தை விலக்கினார்

ஜே.வி.பி-ஸ்ரீ.ல.சு.க கூட்டணி இலங்கையின் அரசியல் பதட்டநிலையை அதிகரிக்கச்செய்கின்றது

Top of page