World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : பூகோளமயமான உற்பத்தி

The political economy of "New Labor"

"புதிய தொழிற்கட்சியின் அரசியல் பொருளாதாரம்

By Nick Beams
27 June 1998

Use this version to print | Send this link by email | Email the author

ஆஸ்திரேலிய தொழிற் கட்சியின் பாராளுமன்றத் தலைவராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, மார்க் லதாமுடைய (Mark Latham) பூகோள மூலதனத்தை நாகரிகப்படுத்துதல் (Civilizing Global Capital) என்ற புத்தகத்திற்கு, உலக சோசலிச வலைதளத்தின் ஆசிரியரும் சோசலிச சமத்துவ கட்சியுடைய தேசிய செயலாளருமான, நிக் பீம்ஸ் எழுதியுள்ள மதிப்புரையை கீழே பிரசுரிக்கிறோம். முதலில் 1998 ஜூன் 27 அன்று வெளிவந்த இம் மதிப்புரை, லதாமின் அரசியல் நிலைப்பாடு பற்றியும் தொழிற்கட்சி செல்ல இருக்கின்ற பாதை பற்றியும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

கடந்த நூற்றாண்டின் திருப்பத்தில், ஆஸ்திரேலிய தொழிற்கட்சியை நிறுவியவர்கள், சமூக நீதியும் சமத்துவமும் முதலாளித்துவ பொருளாதார செயற்பாடுகளில் தொடர்ச்சியான சீர்த்திருத்தங்களின் மூலம் அடையப்படமுடியும் என்ற கருத்தினடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் சோசலிச முன்னோக்கின் அபிவிருத்தியை தடுக்க முற்பட்டனர்.

அரசாங்கத் தலையீடும் ஒழுங்குபடுத்துதல், "வாழ்விற்கான ஊதியம்" உத்திரவாதமளிக்க தொழில் துறையில் மத்தியஸ்தர் (நடுவர்) முறையைக் கொள்ளல், தேசியத் தொழிற்துறையை பாதுகாத்து வளர்த்தல், வெள்ளை ஆஸ்திரேலியக் கொள்கையின்படி இனவாத குடியேற்றங்கள் தடைக்கு உட்படுத்தப்பட்டுக் காப்பாற்றப்படல் ஆகியவற்றின் மூலம், ஐரோப்பாவில் இருப்பதுபோலன்றி வர்க்க மோதல்களும், பிளவுகளும் இல்லாது ஆஸ்திரேலியா "உழைப்பவர்களின் சுவர்க்கமாக'' விளங்கும் என்று அவர்கள் உறுதியாகக் கூறினர்.

இந்த முன்னோக்கை ஊக்குவிப்பதற்கான அரசியல் கட்டாயங்களுக்கு மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையேயான போர் என்று கருதப்பட்ட 1890களின் ஆரம்பத்தில் நடந்த வர்க்க மோதல்களில் வெளிவந்த தொழிலாள வர்க்கமும், சர்வதேச நிகழ்ச்சிகளும் அடித்தளமாக இருந்தது. 1905ம் ஆண்டு நடந்த முதல் ரஷ்யப்புரட்சி, அரசியல் பொது வேலைநிறுத்தத்தையும், தொழிலாளர் குழுக்கள் (சோவியத்துக்கள்) அமைக்கப்படுவதையும் முதன் முதலாகக் கண்டது. இது உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை அனுப்பிவைத்தது. இது அரசியலில் ஒரு புது சகாப்தம் உதித்தெழுந்துவிட்டது என்பதைக் குறித்ததுடன், தொழிலாள வர்க்கம் மிகப்பெரிய அரசியல் சக்தியாக எழுச்சியுற்றதையும் எடுத்துக்காட்டியது.

எல்லாவற்றிற்கும் மேலாக, குட்டி முதலாளித்துவ அரசியல்வாதிகள், தேசியவாதிகள், ஆஸ்திரேலிய தொழிற்கட்சி தலைமையைக் கொண்டிருந்த தொழிற்சங்க அதிகாரத்துவம் என்று அனைவரும் மார்க்சிச வேலைதிட்டத்தையும், அதன் முன்னோக்கான முதலாளித்துவத்தை தூக்கிவீசுதல், சோசலிச வழிமுறைகளில் நனவுடன் சமுதாயத்தை ஒழுங்கமைத்தல் என்பதைத் தடுத்து, தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கும், அதனால் புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய அரசுக்கும் அடிபணிந்து நிற்கச் செய்ய முயன்றனர்.

1900களின் ஆரம்பத்தில், "உழைப்பின் விடயம்" ("The Case for Labor") என்ற தலைப்பில் எழுதிய தொடர்கட்டுரைகளில், பின்னர் ஆஸ்திரேலியப் பிரதம மந்திரியாக வந்த பில்லி ஹ்யூஜிஸ் (Billy Hughes) தன்னுடைய சகத் தொழிலாளர் தலைவர்களுடைய வாதங்களையும் சுருக்கமாக கூறுகையில், சோசலிச சமுதாயம் "ரஷ்யாவின் சிகப்பு ஞாயிறு" மூலமாகவோ அல்லது பாராளுமன்றச் சட்டத்தின் மூலமாகவே வராமல், எவ்வாறு ஒரு "சிறுவன் இயற்கையாக முழுமனிதனாக மாறுகிறானோ", அதேபோல் "இயற்கையாக வளர்ந்து மலர்ச்சி அடையும்" என வலியுறுத்தினார். நடுவர் நீதிமன்றங்களின் செயல் விரிவாக்கம், ஊதியக்குழுக்கள், "புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடைய" செயல்பாடுகள், வேலைக்கமர்த்துவோரின் மீதான விதிமுறை கட்டுப்பாடுகள் அரசாங்கமே நடத்தும் தொழில்களின் திடமான வளர்ச்சி ஆகியவற்றின் விளைவாகக் கிட்டத்தட்ட கவனத்திற்குள்ளாகாமலே சோசலிச சமுதாயம் அமைக்கப்பட்டு விடும் என்றும் கூறினார்.

ஒரு நூற்றாண்டிற்குப்பின், உலக முதலாளித்துவம் இன்னும் கூடுதலான பெரும் மாறுதல்களைக் கொண்டு, பூகோளமயமாக்கல் உற்பத்திமுறை, உலகச் சந்தையின் வளர்ச்சி இவற்றால் ஒவ்வொரு தேசியப் பொருளாதாரத்தையும் மேலும் தனது கடும் ஆதிக்கத்திற்கு உட்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இந்தப் பொருளாதார மாற்றம் மிகவும் ஆழ்ந்த அரசியல் விளைவுகளை உருவாக்கியுள்ளது. ஆஸ்திரேலிய தொழிற்கட்சி, மற்றும் சர்வதேச சமூக ஜனநாயக கட்சிகள் சமூக சீர்திருத்தத்திற்காக முன்வைத்த திட்டம் காலாவதியாகிப் போய்விட்டது. தொற்றுவியாதி போல் பரவியுள்ள பாரிய மக்களின் வேலையின்மை, வாழ்க்கைத் தரங்களின் சரிவு, முன்பு வழங்கப்பட்ட சமூக சீர்திருத்தங்கள் இல்லாதொழிக்கப்பட்டமை ஆகியவற்றால் சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எல்லா இடங்களிலும் இவற்றால் வழங்கப்பட்ட உறுதிமொழி கொடுமையான நகைச்சுவையாக மாறிவிட்டது.

எல்லோருக்கும் தரமான வாழ்க்கையைக் கொடுக்க இயலுமான கணினிமயமாக்கலுடன் இணைந்த பாரிய தொழில்நுட்பப் புரட்சி சமூக துருவப்படுத்தலை மிக ஆழமானதாக செய்துள்ள நிலைமையோடு இணைந்துள்ளது. தொழிலாள சீர்திருத்தவாதிகளால் காலத்திற்கு ஒவ்வாது எனக்கூறப்பட்ட, முதலாளித்துவ வளர்ச்சி தவிர்க்கமுடியாது ஒருமுனையில் செல்வக்குவிப்பையும், மற்றொரு முனையில் ஏழ்மையையும், வறுமையையும் உருவாக்கும் என்ற மார்க்சின் ஆய்வு, இன்றைய சமூக நிலைமகள் பற்றிய விவரிப்பு போல உள்ளது.

எனவே, நூற்றாண்டின் திருப்பத்தில் தொழிலாள வர்க்கத்திடம் சோசலிசக் கண்ணோட்டம் வளருவதைத் தடுக்க முற்பட்ட தொழிற்கட்சி வாதிகளின் அரசியல் கட்டாயங்கள், இப்பொழுது முன்னிருந்ததைக் காட்டிலும் மிக சக்திவாய்ந்ததாகத்தான் உள்ளன. இப்புத்தகத்தின் தோற்றத்தின் தன்மை இதில்தான் உள்ளடங்கியுள்ளது.

பூகோளமயமாக்கப்பட்டுள்ள முதலாளித்துவ சந்தைப் பொருளாதார வடிவமைப்பிற்குள், சமூகநீதி, சமத்துவம் போன்றவற்றை அடைவதற்காக சில கொள்கைகளைக் கொண்ட திட்டத்தை ஆஸ்திரேலியத் தொழிற்கட்சியை நிறுவுதுதான் தனது நோக்கம் என அப்புத்தகம் குறிப்பிடுகின்றது.

இத்திட்டத்தின் பொருளுரையை விரிவாக ஆராயும் பொழுது, அத்தகைய முன்னோக்கு செயல்படுத்த இயலாத தன்மையைக் கொண்டுள்ளது என்பது மட்டுமல்லாமல், புதிய பூகோளமயமாக்கப்படுதலின் நிலைமைகளுக்கு ஏற்ப சமூக சீர்திருத்தங்கள் என்ற போர்வையின் கீழ் சமூக நிலைமைகள், வாழ்க்கைத்தரங்கள் ஆகியவற்றின் மீது ஆழ்ந்த தாக்குதல்களைக் கொண்டு வரும் திட்டம்தான் அதன் உண்மையான செயல்திட்டம் என்பது மிகத் தெளிவாகக் காணலாம்.

இந்நூலாசிரியர், மார்க் லாதம் முன்னணியிலுள்ள எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் உறுப்பினரும், கல்வித்துறைபற்றி கட்சியின் பேச்சாளரும் ஆவார். சர்வதேச அளவில் கிளின்டனாலும், பிளேயரினாலும் சர்வதேசரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தப்படும் "புதிய தீவிர மத்தியை" பின்பற்றுபவர் என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் லதாம் ''தேசிய மூலதனத்தை நாகரிகப்படுத்துவதை'' அடித்தளமாக கொண்ட தொழிற்கட்சி வாதத்தின் முன்னோக்கிற்கான பொருளாதார அடிப்படைகளை உருவாக்க ஆரம்பித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சுரங்கத்துறை, விவசாயம் ஆகியவற்றில் பொருளாதார லாபங்கள் உலகிலேயே மிக அதிக அளவில் இருந்த நிலைமைகளில், இவற்றில் வந்த கூடுதலான வருமானங்கள் வாழ்க்கைத் தரங்களை நிலைநிறுத்திக் கொள்ளத் தேவையான அடிப்படை கொடுப்பதற்காக, "அடிப்படை ஊதியச் சமன்படுத்துதல், தொழில் துறையில் காப்புவரிகள், வளர்ந்து வரும் பொதுத்துறையால் தொழிலாளர் சந்தையை வலுப்படுத்துதல்'' என்னும் முறைகளின் மூலம் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டன.'' [Mark Latham, Civislising Global Capital, p.6].

இந்த நிலைமைகள் இப்பொழுது முற்றிலுமாக மாறிவிட்டன. 1980களில் விரைவாகத் தொடங்கி, பொருள்களின் விலைகள் நீண்டகாலச் சரிவிற்கு உட்பட்டுள்ளன; தொழிற்கட்சி, போருக்குப்பின் பெரிதும் தன் கொள்கைகளுக்கு அடிப்படையாகக் கொண்டிருந்த, அரசாங்கத் தலையீடு, தேசியப் பொருளாதாரத்தை "வனப்புறும் வகையில் சீர்செய்தல்" என்ற கெயின்சியன் திட்டம் (Keynesian program), கடந்து இருபது ஆண்டுகளில் முன் கண்டிராத மூலதனத்தின் இடம்பெயரும் தன்மையின் வளர்ச்சியினால் நொருக்கப் பட்டுவிட்டது.

ஒரு திறந்த பொருளாதாரத்தில் மூலதனம் மிக அதிகமாக இடம் பெயரும் தன்மையுள்ள இந்தப் புதிய நிலைமை சமூக ஜனநாயகத்தை தொடர்ச்சியான, கொள்கைச் சங்கடங்களை எதிர்கொள்ள வைத்துள்ளது. "சர்வதேச அளவிலுள்ள போட்டியுடைய வரிகளின் அடித்தளத்தில், ஏற்கப்படவேண்டிய பொதுவான குடிமக்களுக்கான கட்டாய உரிமைகளையும், தொழில் நிலையங்களையும் கொடுப்பதற்குப் போதுமான நிதி திரட்டப்பட முடியுமா? நலன்புரி அரசின் சரிந்துகொண்டிருக்கும் நெறித்தன்மை, திறம்படச் செயலாற்றும் திறமை என்பன எவ்வாறு திரும்ப மாற்றப்பட இயலும்? பூகோளமயமாக்கலின் பொருளாதார ஒதுக்கீடு, சமத்துவமின்மையுடைய போக்கை திருத்த முடியுமா? பொருளாதாரப் பாதுகாப்பின்மை, சொந்தநாட்டின் பொருளாதாரத்தின் மீதான கட்டுப்பாட்டிழப்பு இவற்றை எதிர்கொள்ளவேண்டிய நிலையில், தன்னுடைய மரபு வழியிலான சமூக பாதுகாப்பு அளிக்கும் கட்சி என்ற பங்கை, தொழிலாளர் கட்சி தொடர்ந்து ஆற்ற இயலுமா? சமூக நீதியைப் பொருளாதாரத் திறந்தவெளிக்கொள்கையோடு சமரசத்தோடு பொருத்தி, இலாபப் பங்கீட்டை வருமானமுறையாகக் கொள்ளும் முன்மாதிரியை அமைக்க முடியமா? புதிய பூகோள மூலதனப் பொருளாதாரத்தோடு, வரலாற்று முறையுடைய ஆதாரங்களோடு இருக்கும் தொழிலாளர் வெற்றிகரமாக மாறுதலுக்குட்பட்டுச் செயல்படமுடியுமா? (p9)

"ஒப்பிடத்தக்கவகையில், மூலதனம் அதிக இடம் பெயரும் தன்மையில்லாத நிலையில், நாடுகளின் தெளிவான அதிகார வரம்பிற்குள் அது கொண்டுவரப்பட்டிருந்தது 'பழைய பொருளாதாரத்தின்' வித்தியாசமான அம்சமாக இருந்ததன'' லாதெம் குறிப்பிடுகிறார். [p.46] அந்தவகையில், மறுபகிர்வு முறையில் மூலதனத்தின் இருப்புக்களிருந்து குறிப்பிட்டளவு வளங்களை தொழிலாள வர்க்கத்திற்கு வழங்குவதற்கு தமது சமூக சீர்திருத்தவாத திட்டங்களின் அடித்தளத்தில் தேசிய அரசுகளின் மீது தமது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்த சமூக ஜனநாயகக் கட்சிகளுக்கும் மற்றும் தொழிற்சங்கங்களுக்கும் இயலுமானதாக இருந்தது. இந்த முன்னோக்கு இப்பொழுது முற்றிலும் முடிவடைந்துவிட்டது. இதன் விளைவாக, "சர்வதேச அளவில், இடது-மத்தியிலுள்ள கட்சிகள்... பொருளாதார இயக்கத்தின்மீது அடித்தளத்தை இழந்த மூலதனத்திற்கு தக்க விடையிறுக்கும் முறையைக் கொண்டுவர முடியவில்லை. பூகோளரீதியான பொருளாதார நிகழ்ச்சிகளுக்கும், உள்நாட்டுத் தேர்தல் பிரச்சினைகளுக்குமிடையேயான இடைவெளிக்கு பாலம் கட்டும் திட்டம் அமைக்கப்படமுடியாமல்தான் உள்ளது. ஆயினும் கூட, இந்த நெருக்கடிகளைத் தீர்க்காமல் சமூக நீதி முறையிலான பொருளாதாரப் பங்கீட்டை சமூக ஜனநாயகம் பாதுகாத்துச் செயல்படுத்த முடியும் என்பது ஒரு கடினமான உணர்வாகும்." [p.45]

சீர்திருத்தங்கள் முதலாளித்துவத்திற்குள் அடையப்படக்கூடும் என்பதால் மார்க்சிச வேலைத் திட்டமான சோசலிசப்புரட்சி தேவையில்லை என்ற முந்தைய தலைமுறையின் தொழிற்கட்சிச் சீர்திருத்தவாதிகளோடு ஒத்த கருத்தைக்கொண்டிருந்த லாதம், இப்பொழுது எந்தக்கருவிகளைக் கொண்டு அவை அடையப்படாலாம் என்று கூறினாரோ, அவை சரிந்துவிட்டன என்பதை ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். மேலும், உற்பத்தி சக்திகளில் உள்ளடக்கியிருக்கும் உந்துதல் தேசிய-அரசு முறையில் எல்லைகளை உடைத்துவிடும் என்று இந்த நூற்றாண்டு முழுவதும் மார்க்சிசவாதிகள் ஆய்ந்து கூறியுள்ள போக்குகளின் தன்மையை விளங்கிக்கொள்ளும் நிலைமைக்கு வந்துள்ளனர்.

கடந்த காலத்தில் தேசிய மண்ணிலேயே நிலை பெற்றிருந்த மூலதனத்தின் மீது சுமத்தப்பட்ட வரிகளின் மூலம் கிடைத்து நிதியினால் சமூக சீர்திருத்தங்களுக்கு அரசாங்கங்கள் செலவழிக்க முடிந்தது. இப்பொழுதோ, உலகில் எங்கு வேண்டுமானாலும் உற்பத்தி ஆலையை அமைக்க இயலும் மூலதன நகர்வினாலும், உலகச் சந்தையில் எங்கு வேண்டுமானாலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருளை விற்கலாம் என்பதால், தேசியத்தளத்ததை கொண்டுள்ள மூலதனத்திற்கு வரிவிதிப்பதற்கு மாறாக பூகோள மூலதனத்திலிருந்து இலாபத்தை திரும்ப தமது நாட்டினுள் கொண்டுவருவதற்கான போட்டியில் அதிகரித்தளவில் ஒவ்வொரு அரசாங்கங்களும் ஈடுபட்டுள்ளன.

"பூகோள முதலாளித்துவத்திற்கும் உள்நாட்டு அரசியலுக்கும் இடையே உள்ள பல முரண்பாடுகளுக்கிடையில் தொழிற்கட்சிகளின் செயல்திட்டம் அரசாங்கத்தின் நிதிநெருக்கடியால், அதாவது சர்வதேச அளவில் போட்டியிடவேண்டிய வரிவிதிக்கும் அரசுமுறைக்கும், பொதுநிதியிலிருந்து நாட்டின் பொருளாதாரச் சரிசெய்யும் செலவுகள் இவற்றிற்கும் இடையே இருக்கும் இடைவெளியினால் சமூக ஜனநாயக வேலைதிட்டங்கள் குறிப்பிடத்தக்க முறையில் நன்மைகளை இழந்துள்ளது." [p.31]

வேறுவிதமாகக் கூறினால், மூலதனம் பூகோளமயமாக்கப்பட்டதால் பெருகிவரும் வேலையின்மை, உண்மை ஊதியக்குறைவு, தொழில்கள் மூடப்படுவதினால் பிராந்தியங்கள் முழுவதும் பொருளாதாரப் பேரழிவு ஆகியவை நலன்புரி பணிகளுக்கு தேவையான பணத்தேவையை அதிகரித்துள்ளதுடன், மறுபக்கத்தில் இந்தத் தேவைகளுக்கான செலவினங்களுக்கு வருமானத்தை குறைத்து விட்டது.

"எவ்வாறு உலக மூலதனத்தின் பகிர்வு முறைகளை தேசிய நாட்டின் செயல்பாடு, அதை மீறி, உயர்ந்து செயல்பட முடியும்" என்று ஆஸ்திரேலிய தொழிற்கட்சி காட்டவேண்டும் என்று லாதம் (இவரே ஏற்றுக்கொள்ளும், தவிர்க்கமுடியாத சமூக சமத்துவமற்ற ஆழ்ந்த போக்கு -NB) வலியுறுத்துகிறார்.

வேறுவிதமாகக் கூறினால், பூகோளரீதியில் நகர்ந்து செல்லும் தன்மை படைத்த மூலதனத்தின்மீது, தேசிய அரசு கட்டுப்பாட்டை வைத்துக்கொள்ள ஏதேனும் வழிவகை செய்தால் ஒழிய, முதலாளித்துத்திற்குள் சமூகஜனநாயக முன்னோக்கில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது என்பது முற்றிலும் நடைமுறையில் சாத்தியமாகாது.

சீர்திருத்தத்திற்கு அல்லது "பூகோள மூலதனத்தை நாகரிகப்படுத்துவதற்கு", லாதமுடைய முன்னோக்கை கீழ்கண்டமுறையில் சுருக்கிக் கூறலாம்:

இந்த புதிய தகவல்தொழில்நுட்பத்தை அடித்தளமாக கொண்டுள்ள பொருளாதாரத்தில், மூலதன விரிவிற்கு முக்கிய காரணம், திறமையான பயிற்சி பெற்ற தொழிலாளர்களின் வளர்ச்சியும், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான உள் கட்டமைப்பை விரிவுபடுத்துதலும் ஆகும். நாட்டின் பொருளாதாரம் திறமையுடைய தொழிலாளர்களினால் வளர்ச்சியடையும் என்பது மட்டுமின்றி, "இந்த உடைமைகளினதும் முன்னேற்றத்தினதும் பெருக்கம் அதாவது கல்வி, ஆராய்ச்சி, வளர்ச்சி ஆகியவை தேசியநாட்டின் எல்லைகளுக்குள் வலிமையாக வேரூன்றி விளங்கும் பொருளாதார நன்மைகளையும் அதிகமாக்கும்" என்பதுதான் இதன் பொருள்.

"பூகோள மூலதன தத்துவத்திற்கு, எங்கும் தடையின்றிச் செல்லக்கூடிய உழைப்பும், திறமைபடைத்த தொழிலாளர் படையும் தேவைப்படுகின்றன." நடைமுறையில், ஒப்பிட்டுப் பார்க்கும்போது இடம் பெயருதலில் அதிகம் ஈடுபடமுடியாத மக்கள் நிலை, பிரதேசவாதம், தேசியவாதம் என்ற புவியியல் தன்மையில் ஆணி அறைந்தாற்போல் நகரமுடியாத தன்மை, தேசிய அரசிற்கு பொருளாதார நன்மை கொடுக்கும் திறனைக் கொடுத்துள்ளது."[p.53]

அதாவது, மூலதனக்குவிப்பு, விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவை நேரடியாக நம்பியுள்ளதாலும், இந்த அறிவையும், திறமைகளையும் பதித்துக்கொண்டுள்ள தொழிலாளர்கள் ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது நகரமுடியாததாலும், பூகோளரீதியாக மூலதனம் இத்தகைய தொழிலாளர்கள் இருக்குமிடத்திற்கு வந்தே ஆகவேண்டும் என்பதால், தேசிய அரசு தன்னுடய கட்டுப்பாட்டை இதன்மீது பயன்படுத்த முடியும்.

முதலாளித்துவத்தை "சீர்திருத்த" பயன்படுத்தும் வாய்ப்பு உடைய லாதமுடைய இந்த வாதம் முழுவதும், பெரும்பாலான அடிப்படைக் கருத்துக்களை ஆராயும் பொழுது சரிந்துவிடுகிறது. மூலதனக்குவிப்பு, தகவல்தொழில் நுட்பத்தை அடித்தளமாக கொண்ட இப்புதிய உழைப்பு வடிவத்தை உபயோகிப்பதை நம்பியுள்ளது என்பது உறுதிதான். ஆனால் இத்தகைய திறமையும், நுட்பமும் உடைய தொழிலாளர்களின் உழைப்பு அதன் இயல்பினால் பூகோளரீதியாக இடம்பெயரக்கூடிய (Globally mobile) தன்மையைக் கொண்டிருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட தொழிலாளி, ஒரு குறிப்பிட்ட தேசிய நாட்டில் வாழும்போது, அவருடைய உழைப்பு (உழைப்பின் விளைவுகள்) நாடுகளையும், கண்டங்களையும் கடந்து செல்லமுடியும்.

உதாரணமாக, ஆஸ்திரேலியாவில், ஒரு கணணி பொறியியலாளர் (Computer Programmer) ஆஸ்திரேலியாவை அடித்தளமாக கொள்ளாத நிறுவனங்களால் நியமனம் பெற்று, உலகெங்கிலும் உள்ள திட்டங்களில் பங்கு பெற முடியம். ஒரு வடிவமைப்பாளரோ அல்லது கட்டிடக்கலை வல்லுனரோ இதேபோல் தங்கள் உழைப்பை, உலகின் மறுபகுதியிலுள்ள உற்பத்தி முறைகளுக்குச் சேர்க்க முடியம். எஃகு உற்பத்தி வழிமுறையில் தேர்ச்சிபெற்ற தொழிலாளி ஒருவர் கம்பியூட்டர் உதவியுடன் எங்கு எஃகு உற்பத்தி செய்யப்படுகிறதோ, அந்நாட்டில் வாழாமல் வேறுநாட்டிலிருந்து தன் உழைப்பைக் கொடுக்க முடியம். மிக உயர்ந்த தனிப் பணிகள் அளிக்கும் துறையில் இருப்பவர்கள்கூட தங்கள் உழைப்பை உலகெங்கிலும் அளிக்கமுடியும். உதாரணமாக Virtual Technology உதவியுடன் உலகின் ஒரு பகுதியில் வசிக்கும் ஓர் அறுவை சிகிச்சை நிபுணர் உலகின் மற்றொரு இடத்தில் நடக்கும் அறுவை சிகிச்சையை தன்னுடைய மருத்துவமனையை விட்டு நகராமலேயே செய்ய முடியும்.

உண்மையில் லாதம் வாதிடுவதுபோல், மூலதனக்குவிப்பு, மேலும் மேலும் உற்பத்தி முறையில் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியை நம்பியுள்ளது. ஆனால், இதனால் தேசிய-அரசுகளுக்கு மூலதனத்தின்மீது கூடுதலான நன்மை கிடைத்துவிடப் போவது இல்லை; ஏனென்றால், இந்த அறிவுடைய உழைப்பு உற்பத்தி முறைக்கு உட்செலுத்தும் பொருட்களில் மிகவும் பூகோளரீதியாக இடம் பெயரும் தன்மையைக் கொண்டுள்ளது ஆகும். இதன் விளைவாக, மூலதனம், விஞ்ஞானம், தொழில்நுட்ப ஆதாரங்கள் வளர்ந்து, நிறைந்துள்ள ஒரு குறிப்பிட்ட நாட்டின் புவியியல் எல்லைக்குள் காலை வைக்காமலேயே (அதன் பொருளாதார, அரசியல் அதிகாரவரம்பு ஒருபுறமிருக்கட்டும்) அவ்வளர்ச்சியை சுரண்ட முடியும்.

மார்க்சிச அரசியல் பொருளாதார சொற்றொடரில் இதைக் கூறவேண்டுமென்றால், ஒரு குறிப்பிட்ட திறமையுடைய உழைப்புச் சக்தியை வாங்குவது, அதன் பரிவர்த்தனை மதிப்பைப் (Exchange Value) பெறுவதற்காக, ஒரு குறிப்பிட்ட தேசிய அரசின் வரம்புகளுக்குள் நடந்தபோதிலும்கூட உற்பத்தி முறையில் (இதன்மூலம்தான் உபரிமதிப்பும், இலாபமும் உற்பத்தியாகின்றன) அதன் பயன்பாட்டு மதிப்பின் (Use Value) நுகர்வு உலகெங்கிலும் நடக்கலாம்.

நலன்புரி அரசின் நெருக்கடி

லாதமின் வாதத்துடைய கருப்பொருளான சமூக நீதியும் சமத்துவமும், முதலாளித்துவத்தை புதிய திட்டத்தின் மூலம் திருத்தமுடியும் என்பது, ஒரு வினாவைக் கட்டாயமாக எழுப்புகிறது: இந்தப் புத்தகத்தின் உண்மையான நிகழ்ச்சிநிரல் என்ன, எந்த சமூக சக்திகளுக்காக இது பேசுகிறது?

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க நாம் போருக்குப் பிந்தைய சமூக நலன்புரி அரசாங்கத்தின் நெருக்கடியை இன்னும் ஆழ்ந்து ஆராய வேண்டும். மூலதனத்தின் இடம்பெயரும் தன்மையானது தேசிய அரசாங்கங்கள் ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு, குறைந்த வரிகளையும், கூடுதலான சிறப்புச் சலுகைகளையும் அதற்குக் கொடுத்து, தங்கள் வருவாயையும் அதன் மூலம் இழக்கத் தயாராக உள்ளன என்னும் உண்மை இந்த நெருக்கடியின் ஒரு பகுதி ஆகும். ஆனால் அது இந்த முடிவோடு நின்று விடாது.

போட்டி, முதலாளித்துவ உற்பத்தியினுன் உந்து சக்தி அல்ல, மாறாக அதன் அடிப்படை விதிகள் வெளிப்படும் வழியாகும் என்று மார்க்ஸ் தெளிவுபடுத்தியுள்ளதை நினைவு கூர்தல் வேண்டும். சமூகநலன்புரி அரசிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியின் மூலகாரணம் போட்டியில் அல்ல, மாறாக மூலதனத்தின் முரண்பாடுகளில்தான் இருக்கிறது.

முதலாளித்துவ உற்பத்தியின் உற்பத்திமுறை முற்றுமான செல்வத்திரட்டலுக்கோ அல்லது சமுதாய முன்னேற்றத்திற்கோ ஈடுபடுத்தப்படுவதில்லை. மாறாக, மூலதனம் மேலும் விரிவடைய அடிப்படையாக இருக்கும், தொழிலாள வர்க்கத்தின் உழைப்புச் சக்தியிலிருந்து உபரி மதிப்பை கறந்தெடுக்கும் உந்துதல்தான் அதை ஊக்குவிக்கிறது.

இந்த மொத்த உபரி மதிப்பு மூலதனத்தின் பலபிரிவுகளிடையே, சமுதாயத்தின் மொத்த மூலதனத்தில் அவற்றின் விகிதத்தையும், அவற்றின் உற்பத்தித்திறனுக்கும் ஏற்றவாறு பகிர்ந்து கொள்ளப்படுகிறது. மூலதனத்தின் பிரிவுகளில் சராசரியைவிடக் குறைந்த உற்பத்திப்பிரிவுகள் உபரி மதிப்பில் அவர்களுக்குக் கிடைக்கக் கூடியதைவிடக் குறைவாகவே பெறும்பொழுது, கூடுதலான உற்பத்தித்திறன் உடையவை கூடுதலான பங்கினைப் பெறுகின்றன. இந்தப் பங்கிட்டுக்கொள்ளுதல் சந்தையில் நடைபெறும் முடிவற்ற மோதலினூடாக நடைபெறுகிறது. அதாவது, போட்டி என்பது, இலாபம் என்ற வடிவத்தில் மூலதனத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையே உபரிமதிப்பு பகிர்ந்துகொள்ளப்படும் ஒரு சமூக வடிவமைப்பு (Social Mechanism) ஆகும்.

இந்த முன்னோக்கில் இருந்து பார்க்கும்போது, சமூக நலன்களுக்கான ஒதுக்கீடுகள், மூலதன போட்டிப் பிரிவுகளுக்கிடையே பகிர்விற்காக கிடைக்கும் மொத்த உபரி மதிப்பிலிருந்து தேசிய அரசிற்கு கிடைக்கும் தொகையாகத்தான் உள்ளது.

போருக்குப்பின், சமூகநல அரசாங்கங்களின் விரிவாக்கம், வளர்ச்சியுற்ற முதலாளித்துவ நாடுகளில் மிகப்பெரிய சமூக போராட்டங்கள் வெடித்துவிடுமோ என்ற பயத்தினால் தொழிலாளர்களுக்கு ஒரு சலுகையாக மேற்கொள்ளப்பட்டதுடன், இது கூடுதலான திறமை மிகுந்த உற்பத்திமுறைகள் பயன்படுத்தப்பட்டதால், முதலாளித்துவ பொருளாதாரத்தில் விளைந்த மேலதிக இலாபத்தினாலும்தான் முடிந்தது.

தொழிலாள வர்க்கத்தினிடமிருந்து கறந்தெடுக்கப்பட்ட இந்த உபரி மதிப்பின் விரிவில்தான், அரசால் அதிலிருந்து ஒரு பகுதி எடுத்து நலன்புரி சேவைகளுக்கு, முழுநேர வேலை வழங்க, கல்வி மற்றும் சுகாதார வசதிகளை அதிகரிக்க என்று கொடுக்கப்பட்டது.

1940களின் பிற்பகுதிகளில் தொடங்கப்பட்ட, சமூக நலன்புரிதிட்டம் இன்னமும் கூடுதலான முறையில் 1970களின் ஆரம்பத்தில், 1968லிருந்து 1975 வரையிலான தொழிலாள வர்க்கத்தின் எழுச்சிக்கு விடையாக விரிவாக்கப்பட்டது. ஆனால் அந்த இயக்கம், நீண்டகால போருக்குப்பிந்தைய முதலாளித்துவத்தின் வளர்ச்சியோடு இயைந்திருந்தது. 1960களின் இறுதியில் இருந்து இலாபவிகிதம் கீழ்நோக்கி திரும்பலாயிற்று. 1974-75ல் உலக முதலாளித்துவம். 1930 களுக்குப் பிறகு காணப்படாத ஆழ்ந்த பெருமந்த நிலையைக் கண்டது.

இந்த இலாபவிகிதக் கீழ்நோக்கிய போக்குத்தான், ஒன்றுக்கொன்று தொடர்புடைய செலவினங்களைக் குறைப்பதற்காக உற்பத்தியை பூகோளமயமாக்குதல், உற்பத்தி முறையில் புதிய தொழில்நுட்ப உத்திகளை வளர்த்துச் செயல்முறையில் கொண்டுவருதல் என்ற இரண்டு போக்குகளுக்கு உந்தும் சக்தியாக இருந்தது. இரண்டும் சேர்ந்து, முதலாளித்துவப் பொருளாதரத்தின் அடிப்படையை மாற்றுவதற்கும், இதையொட்டி சமூகநலன் அரசுகளுக்கும் பெரிய விளைவுகளைக் கொடுக்கவும் பொறுப்பாயின.

பூகோள மூலதன இடப்பெயரும் தன்மை, போருக்குப்பின்னான சமூக நலன்புரி அரசு அடிப்படைக்கு ஆதாரமாக இருந்த கீன்சியன், தேசிய நெறிப்படுத்துதல் திட்டத்திற்கு (Keynesian national regulation) முற்றுப்புள்ளி வைத்தது. அதேநேரத்தில், கம்பியூட்டர் துகள்கள் (computer chip) அடிப்படையில் உற்பத்திமுறையில் வந்த மகத்தான தொழில் நுட்ப புதிய கண்டுபிடிப்புக்கள், இலாபமுறையின் நெருக்கடியைத் தீவிரப்படுத்தின. இறுதி ஆய்வில், இலாபத்தின் ஆதாரமான உபரி மதிப்பு தொழிலாள வர்க்கத்தின் உபரி உழைப்பை கறந்தெடுப்பதுதான். ஆனால், புதிய தகவல் தொழில் நுட்பத்தின் சாரமே, உற்பத்தி வழிவகைகளில் இருந்து மதிப்பு உருவாக்கும் உழைப்பை பிரதியீடு செய்வது ஆகும். இதன் விளைவாக, புதிய தொழில்நுட்பம் இலாபவிகிதம் கீழ்நோக்கிய போக்கை குறைப்பதற்குப் பதிலாக, அதை அதிகப்படுத்தவே செய்துள்ளது. இதுதான், சமூக நலன்புரி அரசின் முடிவிற்கான முக்கிய புள்ளியாகும்.

மொத்த உபரி மதிப்பு விரிவடையும் நிலைமையில், மூலதனத்தால் சமூக நலன்புரி அரசை சகித்துக்கொள்ள முடிந்தது; வர்க்கப் போராட்டத்தை அடக்கிவைக்கவும், நெறிப்படுத்தவும் அது பயன்பட்டதால் அதை வரவேற்கக்கூடச் செய்தது. ஆனால், கிடைக்கக் கூடிய உபரி மதிப்பு சிதையவும், குறையவும் தொடங்கிய போக்கை காட்டிய நிலைமையில், அத்தகைய சமூகநலன்புரி செலவுகளுக்குப் பணத்தைக் கொடுக்கும் நடவடிக்கைகள் சகித்துக் கொள்ள முடியாமல் ஆகிவிட்டன.

லாதமும் "ஒருவருக்கொருவர் பொறுப்பேற்றலும்"

மேலே கண்ட பொதுக் கருத்து பரிசீலனைகளின் பாதையில், இப்பொழுது, சமூக நலனுக்காக லாதம் வகுத்த குறிப்பிட்ட திட்டங்களைக் காண்போம். அவையனைத்தும், தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம், தனிநபர்களையும், குடும்பங்களையும் அவர்களது சுகாதாரம், கல்வி, வேலை இவற்றைப் பொறுத்தவரையில் "சுய பொறுப்பில்'' இருத்தும் நோக்கில், மூலதனத்திற்கு சமூக நலன்புரி செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தைச் சாராம்சமாகக் கொண்டுள்ளவையாகும்.

லாதமின் கருத்துப்படி, நலன்புரி புதிய வடிவங்களின் அடிப்படை, "சமூக நலன்புரி அரசின் பணிகள் முழுவதிலும், ஒருவருக்கொருவர் பொறுப்பேற்கும் முறை நிலைநிறுத்தப்படவேண்டும்". முந்தைய தொழிற்கட்சி அரசாங்கம் Job Compact எனப்படும் (சீரான வேலை) முறையில் நீண்ட காலம் வேலையற்றிருந்தவர்களுக்கு "பயிற்சி நிலை" அல்லது "குறைந்த அளவு ஊதிய வேலை" கொடுத்து உதவியளிக்க தொடங்கியது, இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் வேலையற்றோருக்கு கொடுக்கப்படும் வேலையின்மை உதவிகள் அவர்களால் இழக்கப்படும்.

உண்மையில், வெளிப்படையான பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை: லாதம் கூறுவது போல், தொழிற்கட்சி அரசாங்கம், "சமுதாயத்திற்கும், நலன்புரி பெறுவோருக்கும் திருப்தி அளிக்கக்கூடிய வகையில்" ஒரு முறையை வளர்த்திருந்தால், [p.205] அதில் எதற்காகக் கட்டாயப்படுத்துதல் இருக்க வேண்டும்? பயிற்சித்திட்டங்கள் எனகூறப்பட்டவை, உண்மையிலேயே "திறமைகளைப் பெருக்குவதாக" வும், அவர்கள் கூறும் மற்ற சிறப்புக்களையும் பெற்றிருந்தால், அவற்றில் பங்கு பெறாவிட்டால் நலன்கள் இழக்கப்பட்டுவிட நேரிடும் என்ற அச்சுறுத்தலுக்கு இடமில்லை. உண்மையில், அந்தத் திட்டங்கள் அனைத்துமே ஒருவகையான மலிவு உழைப்பை உருவாக்கும் வடிவம்தான்.

நலன்புரிதிட்டத்தில் இவர் கருதிய மாற்றங்களில் ஒன்றாக, "வாழ்நாள் முழுவதும் ஊதிய ஆதரவு" என்பதையும் லாதம் வலியுறுத்துகிறார். இதிலும், எந்த நோக்கத்திற்காக திட்டம் போடப்பட்டதோ, அதைச் செயல்படுத்தும் விதிகள் மாற்றிவிடுகின்றன. திட்டத்தின் இலக்குகளின்படி, சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொட்டிலிலிருந்து இடுகாடுவரை வருமானப் பாதுகாப்பு கொடுப்பது இல்லாமல், ஒரு முறையை அமைத்து சமூக நலன்புரிகளை பெறுவோர் தாங்கள் பெறும் உதவியைத் திருப்பிக் கொடுக்கும் முறையாக கருதப்பட்டது; இதனால் சமூக நலன்புரி செலவினங்களுடைய தொகை குறைவதோடு, மூலதனத்தின் கட்டாய அபகரிப்பிற்கான வளங்களின் அளவு அதிகரிக்கப்படும்.

தொழிற் கட்சியின் அரசாங்கம், HECS திருப்பிக்கொடுத்தல் முறை புகுத்தப்பட்டதால், 1970களில் பெரும் கல்விச் சீர்திருத்தங்களில் ஒன்றான, வெற்றியுடன் அடையப்பட்ட மூன்றாம் நிலை இலவசக் கல்விமுறையை அகற்றிவிட்டது போல், லாதம் இந்த முறையும் விரிவுபடுத்தப்படவேண்டும் என்று கூறுகிறார்.

"அரசாங்கங்கள் தங்கள் குடிமக்கள் பொருளாதார உறுதியற்ற நிலையில் இருக்கும் பொழுது வருமான ஆதரவு கொடுக்கவேண்டியது அவசியம் என்றாலும், அவர்கள் திருப்பக் கொடுத்தலின் சமநெறித் தன்மையின் முறையையும் (Higher Education Contrubution Scheme) உயர்கல்வி முறையில் அளிப்பு இருப்பதுபோல் இதனுடன் ஆய்ந்து, பொருளாதார மாற்றத்தால் பின்னர் நன்மை அடைவதையும் கருத்திற்கொள்ள வேண்டும். நலன்புரி அரசால் ஒருவருக்கொருவர் பொறுப்புக்களின் வளர்ச்சியில் இது ஒரு முக்கிய கூறுபாடாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். [p. 227]

"புதிய பொருளாதாரத்தின் தேவைகள்", பொதுத்துறை ஒதுக்கீட்டிலிருந்து ஊதிய ஆதரவின் மூலமும், விருப்பப் பாதுகாப்புச் சேமிபுக்களிலிருந்தும் பெறப்படவேண்டும் என்ற கருத்தில் அவர் தீவிரமாக இருந்தார். அதாவது, "புதிய பொருளாதார'' நிலையில், சமூக நலன்புரி திட்டங்கள் குறைக்கப்பட வேண்டும் என்று மூலதனம் கட்டாயப்படுத்தும் நிலையில், ஊதியம் பெறுவோர், தங்களுடைய ஓய்வுகாலம், தங்கள் குழந்தைகளின் கல்வி, தங்கள் உடல்நலம், தாங்கள் வேலையின்றி இருக்கும் காலம் ஆகியவற்றிற்கெல்லாம் கூடுதலாகப் பணம் செலுத்த வேண்டும்,

"சமூக ஜனநாயகத்தால் இயலாதது என்பதோடு, குடிமக்கள் பாதுகாப்பின்மை பரவுதலால் ஏற்படும் ஒவ்வொரு தேவைக்கும், ஒவ்வொரு கோரிக்கைக்கும், பொது ஆதாரங்களிலிருந்து தடையற்ற நிதிஒதுக்கீட்டை எதிர்பார்க்கக் கூடாது" [p.230].

இங்கு நாம் ஒரு தீய வட்டம் செயல்முறைக்கு வருவதைக் காண்கிறோம். லாதமே கொடுக்கும் புள்ளிவிவரங்களிலிருந்து, சராசரி தொழிலாளர் குடும்பம், "அதன் வாழ்க்கைத் தரத்தில், எதிர்பாராமல் சரிவை 50 சதவிகிதம் கூடுதலாக எதிர்பார்க்கக்கூடும்; இது பொருளாதார அடிப்படையில் எப்பொழுதாவது, தற்காலிக, பகுதிநேர, ஒப்பந்தமுறையிலான வேலைகள் புதிய பொருளாதாரத் திட்டத்தில் சீரமைக்கப்பட உள்ளதால் ஏற்படுவதைப் பிரதிபலிக்கக் கூடும்" [p.224]. ஆயினும்கூட, இவருடைய திட்டத்தின்படி சமூக நலன்புரிகள் உதவி அதற்கான தேவை பெருகும்பொழுதும் குறைக்கப்பட வேண்டும்.

தன்னுடைய சிறப்புப்பகுதி என லாதமால் கருதப்படும் கல்வித்துறையில், தனிநபரே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்ற, இதே கொள்கை செலுத்தப்படும் முறையைத்தான் காண்கிறோம்.

"நலன்புரி ஆதரவில் இருக்கும் பெற்றோர்களுக்கு, வீடுகளில் கல்வியாளர்களாக தங்கள் திறைமைகளை உயர்த்திக்கொள்வதிலும், வளர்த்துக்கொள்வதிலும், எந்தவிதமான சாக்குப் போக்குகளும் கூடாது. இந்தப் பொறுப்பு, அவர் பற்றிய நிர்வாக ஆவணத்தில் குறிக்கப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டால்தான் வருமான ஆதரவு கிடைக்கும் என்று நிச்சியிக்கப்பட வேண்டும். வீடுகளில் கல்வியாளர்களாகத் தங்கள் பொறுப்பை முறையாக ஏற்கத் தயங்குபவர்களுக்கு வருமானம் கொடுப்பது நிறுத்தப்படவேண்டும். கல்வியில் நலமற்றிருக்கும் நிலை, ஏழைகளுக்கு நல்ல பள்ளிகள் அமைத்துவிடுவதின் மூலம் தீர்க்கப்பட்டுவிட முடியாது."[p.245]

இந்தப் பிற்போக்கான திட்டம் நவீனப்புதுமைக்கருத்து என்ற பெயரில் வழங்கப்படுகிறது. உண்மையில், இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் முற்போக்கான சிந்தனையாளர்களும், தொழிலாளர் இயக்கங்களும் எதிர்த்துப் போராடிய போக்கிற்குத்தான் திரும்பிச் செல்லுகிறது. கல்வி என்பது "சுய முன்னேற்றத்தை" வளர்த்துக்கொள்ளும் பிரச்சனையே ஒழிய அது ஒரு சமூக பொறுப்பு ஆகாது என்ற கருத்துடையவர்களுக்கு எதிராகத்தான் உலக கல்வி முறை வளர்ச்சியுற்றது.

இந்த முழுப்புத்தகத்திலும் வேறு எந்தப்பகுதியிலும், லாதமுடைய கொள்கை வகுத்தல்களிலுள்ள சமூக தீமைப்போக்கின் தன்மையையும், அவை வர்க்க நலன்களை பாதுகாக்க பயன்படுவதுபோன்ற தன்மையும், இதைவிடச் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளதா என்பது சந்தேகத்திற்கு உரியதுதான். இவருடைய திட்டங்களினால், ஏற்கனவே வேலையின்மை, நல்ல ஊதியம் இல்லாத வேலைகள், சமூக நலன்புரி அளிப்புக்களின் குறைவான தொகை என்ற பலவிதமான தொல்லைகளால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள், அவர்களைடைய வீடுகளில் "வீட்டுக் கல்வியாளர்களாக" (Home Educators) மாறாவிட்டால் இன்னும் வருமானம் அவர்களுக்குக் குறைக்கப்படும்.

லாதமுடைய வாதத்தின்படி, கல்விக்குறை, ஏழைகளுக்கு நல்ல பள்ளிகள் கொடுக்கப்படுவதின் மூலம் தீர்ந்துவிடாது. ஆனால் இப்பொழுது உள்ள நிலையிலோ, தொழிலாள வர்க்கம் வாழும் பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில் நிலைமை மோசமாகிக் கொண்டிருப்பது என்ற உண்மையை அவரே ஒப்புக் கொள்கிறார்: "வீடு இருக்குமிடம் ஒரு மனிதனுடைய கல்விச் சாதனைக்கும் வாழ்வு முழுவதிற்குமான வாய்ப்புக்களுக்கும், மிக நம்பிக்கை தரும் அடையாளக்குறிப்பாகி விட்டது.

ஏழைகள் மீது வரிவிதித்தல்

லாதத்தின் திட்டங்களிலேயே, சமூக அளவில், மிகப் பின்னோக்கிச் செல்லும் திட்டம், முற்போக்கு செலவின்பால் வரி (Progressive Expenditure Tax PET) ஆகும். மூலதனத்தின் எங்கும் செல்லும் திறன், வருமானவரி, பெருநிறுவனங்கள் மீதான வரி ஆகியவை அதிகமாக்கப்பட்டால், பெருநிறுவனங்கள் தங்களுடைய செயல்களை வேறிடத்திற்கு மாற்றிக் கொண்டுவிடுவர். இதன் விளைவாக, ஒப்பிட்டுக்காணும்போது தேசிய-அரசு எல்லைகளுக்குள் நடைபெறும் பொருளாதார நடவடிக்கைகள்மீது வரிவிதிப்பு உள்ளதா என்பதைப் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கருதுகிறார்.

இவருடைய PET முன்மொழிவின்படி, வருமானத்தில் சேமிப்புக்கள் போக உள்ள துறையில் ஒரு நுகர்வு வரி சுமத்தப்படும். இந்தத்திட்டத்தின் பிற்போக்குத் தன்மையை எளிதில் விளக்கிக்கூறலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு முன்னணியில் உள்ள கணக்கியல் துறையிலுள்ள கல்வியாளர், பிரேசர் அரசாங்கத்தின் வரிமுறையை ஆராய்ந்து சுருக்கமாகத் தெரிவிக்கையில், பிரச்சினை பணக்காரர்களைக் கூடுதலாக வரி கொடுக்கச் சொல்வது அல்ல, அவர்ளை எவ்வாறு வரிவிதிக்காமலேயே தப்புவிக்கலாம் என்ற நோக்கத்துடன் செயல்படுவதுதான் என்றார்.

இக்காலகட்டத்திற்குப்பின், வருவாய்த்துறையில் வரவுகளும் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருக்கின்றன. ஆஸ்திரேலிய வரி அலுவலகம், உள்நாடாயினும், வெளிநாடாயினும் சார்ந்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் கிட்டத்தட்ட எந்த வரியையும் செலுத்துவதில்லை என்று தெரிவிக்கிறது. ஏப்ரல் 25-26, 1998 Australian Financial Review வில் வந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, உயர்ந்தபட்ச வருமான அளவிலிருப்போருக்கான ஒதுக்கீட்டு வரிவிகிதம், குறைந்தபட்ச வருமானத் தரத்திலிருப்போரைவிடக் குறைவாகும்.

லாதமுடைய PET திட்டத்தின் கீழோ, தங்கள் வருமானத்தில் அதிக அளவு சேகரிக்கக்கூடிய திறனுடைய செல்வந்தர் மீதான வரிச்சுமை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. அத்தகைய முறை செல்வந்தருக்கு வரிகள் குறைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், பல பாதுகாப்புக்களோடும், விதிமுறைகளோடும் அறிமுகப்படுத்தப்பட்டால், அவை வெகுவிரைவில் இல்லாதொழிக்கப்பட்டுவிடும்.

பிரச்சினையே, முதலாளித்துவச் சொத்துக்களுக்கும் வருமானங்களுக்கும் பாதுகாப்புக் கொடுக்கும் நோக்குமுடைய சட்டமுறை அடிப்படையில்தான் இருக்கிறது. எனவேதான், வரிவிதிப்புமுறை வரலாறு காண்பிப்பதுபோல், வரி செலுத்துவதிலுள்ள சட்டமுறையில் ஒரு விரிசல் மூடப்பட்டுவிட்டால், மற்றொன்று அதற்குப்பதிலாகத் தோன்றிவிடும்.

சமூக முற்போக்கு வரிவிதிப்பை உருவாக்குதல், பரந்த முறையில் உழைக்கும் மக்களின் கூட்டுஉழைப்பினால் உருவாகும் சமூக செல்வம், சமூக நலன், மற்றும் மனிதத் தேவைகளுக்காகச் செலவு செய்யப்படவேண்டுமே ஒழிய மூலதனத்தின் உரிமையாளர்களின் இலாபக் கோரிக்கைக்காக பயன்படுத்துதல் என்பதை தவிர்க்கும், புதிய சமூக அமைப்பிற்கான அரசியல் போராட்டத்துடன்தான் பிரிக்கமுடியாமல் பிணைக்கப்பட்டுள்ளது.

"மூன்றாம் பாதையின்" அரசியல் பொருளாதாரம்

இந்தப் புத்தகம் முழுவதிலும், லாதம் தன்னை "தீவிர மத்தியின்" பிரதிநிதி என்றும் பிரிட்டனின் புதிய தொழிற் கட்சியும், டோனி பிளேயரும் வளர்த்துள்ள "மூன்றாம் பாதை" என்று அழைக்கப்படும், கருத்திற்கு வாதிடுபவராகவும் பறைசாற்றுக் கொள்ளுகிறார்.

1990 களில் பெருகிவந்த சிக்கலான அரசியல் நிலைமை பிரிட்டன் முதலாளித்துவம் எதிர்நோக்கிய நிலைமையே இத்திட்டத்தின் ஆரம்பமாக அமைந்தது. 1979ல் அதிகாரத்தைக் கைப்பற்றிய தாட்சர் அரசாங்கம், போருக்குப்பின்னர், பிரிட்டிஷ் அரசியலில் இருந்த சமூக சமரசத் தன்மையைக் கிழித்துப் போட்டுவிட்டு, பிரிட்டன் பூகோளரீதியான பொருளாதாரத்தில் போட்டியிட வகைசெய்யும் பொருட்டு, நிதி மூலதனத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றும் முறையில், சமூக பொருளாதார வாழ்கையை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

1980களில் அரசு உடைமை தொழிற்துறைகள் பெரும்பாலானவை தனியார்மயமாக்கப்பட்டதாலும், வேலைதகர்ப்புக்களினால் மத்தியதர வர்க்கத்தினருக்கு ஓரளவு கிடைத்த ஜடரீதியான, சமூக நிலைமைகளும், தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை, அத்திட்டங்கள் அடிப்படையாகக் கொண்டிருந்தன. அந்த பத்தாண்டுகள் முடிவில், 1987ல் உலகெங்கிலும் பங்குச் சந்தை சரிந்ததை அடுத்து, மத்தியதர வர்க்கத்தினரின் பெரும்பாலான பிரிவுகளும், டோரிகளுடைய திட்டத்தினால் பெரிதும் தாக்கப்பட்டனர்.

தலைவரித்திட்டத்திற்கெதிரான எழுச்சியில் பிரதிபலித்த இந்தப் பின்னணியின் விளைவில், தாட்சர் வெளியேற்றப்பட்டு, ஜோன் மேஜர் பதவியில் இருத்தப்பட்டார். 1992 தேர்தல்களில் டோரிக்கட்சிக்குப் போதுமான ஆதரவைத் திரட்டியதால், அதிகாரத்தை இழுபறியாகக் கைப்பற்ற மேஜரால் முடிந்தது, ஆனால் அவருடைய அரசாங்கம் ஆளும் வர்க்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாததாகக் கருதப்பட்டது.

ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கமும் நிதிமூலதனத்தின் அரசாங்கமாகும். அதற்காக எந்த அரசாங்கமும், தொழிலாள வர்க்கத்தினதும், மத்தியதர வர்க்கத்தினதும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், ஆளும்வட்டத்தின் செயற்பட்டியலை அப்படியே சுமத்திவிடமுடியும் என்று பொருள்கொண்டு விடமுடியாது. முதலாளித்துவ அரசியலின் சாராம்சமே, பரந்த மக்கள் தமது சமூகநிலையில் முன்னேற்றம் காண்பதற்கான கோரிக்கைகளுக்கும், அபிலாசைகளுக்குமான ஒரு முன்னோக்கை அபிவிருத்தி செய்வதன் ஊடாக மூலதனத்தின் தேவைக்கேற்ப அவர்களை திசைதிருப்பி அடிபணியவைப்பதை உள்ளடக்கியுள்ளது.

இந்தப் பிளேயரின் திட்டத்தைத்தான், அவரைத்துதிபாடும் ஆஸ்திரேலிய ஆதரவாளர்கள் பின்பற்றிச் செயல்படுத்த விரும்புகின்றனர். பிரிட்டனில், ''மூன்றாம் பாதை'', ''பங்குதாரர் சமுதாயம்'' என்றெல்லாம் கூறப்படும் அடிப்படைகளில் இயற்றப்பட்டுள்ள புதிய தொழிற் கட்சியின் திட்டம், உண்மையில் தாட்சரின் அனைத்துக் கொள்கைகளையும் நிலைப்படுத்துவதாக உறுதியளித்துள்ள பிளேயர் அரசின் வழிவகையாகும், இந்தச் செயல்பட்டியலை பெருவணிகத்தின் தேவைகளுக்குப் பிரதிநிதியாக, அவருக்கு முன்னிருந்த டோரிக்கட்சி பிரதம மந்திரி மேஜரைவிட நேரடியாக நடைமுறைப்படுத்துகிறார்.

ஆஸ்திரேலியாவின் அரசியல் வளர்ச்சிகள், பிரிட்டனுக்கு இணையாகவே இருக்கின்றன. ஆனால், தேசியப் பொருளாதார நெறிப்படுத்தலின் அடிப்படையில் அமைந்திருந்த போருக்குப்பின்னான வர்க்க சமரசக் கொள்கை தகர்ப்பும், பூகோளச் சந்தை சக்திகளின் தடையற்ற செயல்பாட்டிற்குப் பொருளாதாரத்தை அனுமதித்ததும், ஹாக்-கீடிங்கின் (Hawke-Keating) தொழிற் கட்சி அரசாங்கத்தால் நடத்தப்பட்டன.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியது, தொழிலாள வர்க்கத்தினதும் மற்றும் மத்தியதர வர்க்கத்தின் கீழ்த்தட்டினதும் பரந்த பிரிவுகளிடையே ஆழ்ந்த விரோதப் போக்கை ஏற்படுத்தி, தொழிற்கட்சியின் வாக்குகளில் பெரும் சரிவை ஏற்படுத்த வழிசெய்தது. இந்த தட்டுகளுக்கு நேரடி வேண்டுகள் விடுத்த தாராண்மை கட்சியினர், "போராடுபவர்களுக்கு" சமூக நிலையையும், வாழ்க்கைத் தரத்தையும் பாதுகாப்பதாக உறுதியளித்துப் பதவிக்கு வந்தனர்.

ஆனால் முதலிலிருந்தே, ஹோவார்ட் அரசாங்கம், கீடிங் தலைமையில் நடைபெற்ற "சீர்திருத்த'' செயற்பட்டியலில் வேகமில்லாததனால் பெருகிய அதிருப்தியடைந்திருந்த நிதிமூலதனத்தின் கோரிக்கைக்கும், அதேதிட்டத்தைச் செயல்படுத்தியதற்காக தொழிற் கட்சிமீது கசப்பும், எதிர்ப்பும் கொண்ட மில்லியன் கணக்கான தொழிலாளர்களும், மத்தியதர வாக்காளர்களுக்கும் இடையே நிலவிய முரண்பாடுகளுக்கிடையில் அகப்பட்டிருந்தது.

பூகோளப் பொருளாதாரத்தின், "சர்வதேசப் போட்டித்தன்மையின்" கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக, சமூகநலன்புரி அரசால் எஞ்சியிருந்த நன்மைகளும் தகர்க்கப்படவேண்டும் என்பதுதான், நிதி மூலதனத் தேவைகளின் கூரிய ஆயுதமாகும். இதுதான் லாதமின் திட்டத்துடைய கருப்பொருளாகும். ஆனால் இதை அதன் தன்மையான ''மூன்றாம் பாதையிலிருந்து'' பிரித்து அளிக்க முடியாது --பழைய தேசியக் கட்டுப்பாட்டிற்குத் திரும்பமுடியாமலும், "சுதந்திர சந்தை" முறையையும் செயல்படுத்த முடியாத நிலையைத்தான் அது கொண்டுள்ளது.

எனவேதான், லாதம் தன்னுடைய மூலதனத்திற்கான முன்னோக்கை, "பொது நன்மைகளை நிர்வகித்தல்", "ஒருவருக்கொருவர் பாதுகாப்பு", "போர்டிற்குப் பிந்தைய'' நலன்புரி அரசை அமைத்தல், "பரஸ்பர சமூக பொறுப்பு" போன்ற சொற்றொடர்களோடு, சமூக நலன்புரி அழிப்பிற்காகக் கொடுத்துள்ளார்.

புதிய சொல்லாட்சியின் அடிப்படை நோக்கம், சமூக போக்கை புதிராக்குதல் ஆகும். எனவே, மிகப்பெரிய புதிராக்குதலாகிய, "புதிய பொருளாதாரத்தின்" தோன்றலோடு, சமுதாயத்திலுள்ள மூலதனத்திற்கும் உழைப்பிற்குமிடையேயான வர்க்க வேறுபாடு கடக்கப்பட்டுவிட்டது என்று கூறியது ஆச்சரியத்தை அளிக்கவில்லை.

"மரபுவழியிலான மூலதனம், உழைப்பு என்ற இரட்டை இனிப் பொருளற்றது. உதாரணமாக, மூலதனம் பிரிவடைந்து பொதுப் பங்குமுறைக்கு வந்துவிட்டதால், பெரும்பாலான தொழிலாளிகள் அதைப் பெறும் நிலையில்தான் உள்ளது. ஆஸ்திரேலியாவில், வயதுக்கு வந்தவர்களில் 20 சதவீதத்திற்கும் மேலானவர்கள், கிட்டத்தட்ட 2.6 மில்லியன் முதலீட்டாளர்கள் பங்குளுக்கு உரிமையாளராக உள்ளனர். கட்டாயமான ஓய்வுக்காலம் வளரும் நிலையில், 90 சதவீதம் ஆஸ்திரேலியர்கள் இப்பொழுது மறைமுகமாகப் பங்குளிலும், பத்திரங்களிலும், நிதிய முதலீடுகளிலும் அக்கறை கொண்டுள்ளனர். விற்பனைமுறைகளும், பங்குகள் வெளிப்பட்டுவரும் தன்மையும், ஒரு தலைமுறை தொழிலாளர்கள் அனைவரும் தொழில்வழங்குனராக மாற்றியுள்ளது. தேசிய வருமானத்தின் பகிர்வில் மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையேயான போட்டி என்ற கருத்துக்கள் எல்லாம் இனி வரையறுக்கமுடியாதவை. பொருளாதார நலன்களின் வெளிப்படுத்துகையில் பல ஆஸ்திரேலியர்களும் இருபுறத்திலும் முகாமிட்டுள்ளனர்."[p.78]

இதன் விளைவாக, "தொழில் துறையில் மூலதன உடைமையைக் கொண்ட மூலதனம், உழைப்பு என்ற இரட்டைப் பிளவு, பொருளாதாரப் பகிர்விலும் சமத்துவத்திலும் உள்ள முக்கிய பிரச்சினைகளைச் சமாளிக்கப் போதுமானதாக இருக்காது."[p.83]

வர்க்கப் போராட்டம் கடக்கப்பட்டுவிட்டது என்னும் லாதமின் கூற்று, ஒரு சமுதாய வர்க்கமான தொழிலாள வர்க்கம் குறிப்பிட்டவகை உழைப்பை வழங்குகின்றது என்ற வெற்று அடையாளப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கணினிமயமாக்கப்படல், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஆகியவை வளர்ச்சிபெற்ற முதலாளித்துவ நாடுகளில் தொழில் துறையிலுள்ள தொழிலாள வர்க்கத்தின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் இதே வழிவகைகள் மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையேயான மோதலகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், சொத்துஉடைமைகளிலிருந்து வருமானம் பெறும் வர்க்கம் ஒருபுறமும், தன்னுடைய உழைப்புச் சக்தியை விற்று அதன் மூலம் வாழ்க்கை நடத்துவோர்க்கும் இடையே உள்ள மோதலை மற்றொருபுறமும் தீவிரப்படுத்தியுள்ளன.

வர்க்க மோதல்கள் கடக்கப்பட்டுவிட்டது என்று லாதம் கூறும் இவ்வழிவகைகளால், உண்மையில் அது தீவிரமடைந்துள்ளது. முன்பு மத்தியதர வர்க்கம் என்று குறிக்கப்பட்ட பிரிவுகளில் பெரும்பாலானவை துருவப்படுத்தப்பட்டு, ஒரு சிறிய பகுதி, அதன் பங்குகள் அல்லது பத்திரங்கள் என்ற உடைமைகள் மூலம் வருமானம் பெருமளவு கொண்டு உயரே சென்றுள்ள நிலையில், பெரும்பகுதி தொழிலாள வர்க்கத்தினராக மாறி தங்கள் வாழ்க்கை நடத்தப்படுவதற்கு உழைப்புச் சக்தியை விற்கும் நிலையில் இருக்கின்றனர்; இவர்கள் முதலாளிகளால் தேவைக்கேற்ப வேலையில் அமர்த்தப்படுவதும், விலக்கப்படுவதுமாக இருக்கின்றனர்.

புதிய வடிவிலான செல்வம் வளர்ந்துள்ளது என்பதும் உண்மையாகும். மூலதனத்தின் கோரிக்கைகளும், உண்மையில் முதலாளித்துவ வர்க்கமே Myers, Baillidu8s, Coles, Darlings போன்ற சில 30 குடும்பங்களோடு, அடையாளம் காட்டப்பட முடியாதவையாக ஆகிவிட்டது. இந்தக் குடும்பங்கள் இன்னும் கணிசமான செல்வத்தை தக்கவைத்துள்ள போதிலும், அவர்களுடைய வாரிசுகளும், பின்தோன்றல்களும் உயர்ந்த நிலையிலும் நிதி அமைப்புக்களில் சிறப்பிடங்களிலும் உள்ளனர். ஆனால், நிதிச் சந்தையின் நடைமுறையால் இந்தக் குழுவில் புதிய சேர்க்கைகள் ஏற்பட்டுள்ளன, பழைய வழியிலான தொழில்துறை மூலதன அடிப்படையில் செல்வத்தைக் குவிக்காமல், நிதி மூலதனம் என்ற மூலதனத்தின் தூய வடிவில் மூலதனமாகக் குவிப்பவர்கள் இதில் இடம் பெறுகின்றனர்.

பல தொழிலாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடுகளை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, அதாவது அவர்களுடைய ஓய்வூதிய நிதியங்கள் சந்தை நடைமுறையில் இருப்பதால் கொண்டுள்ளனர் என்பது உண்மையே. ஆனால் அவர்களுடைய வருமானத்தின் மூலம் ஊதியங்கள்தாம். ஒருவர் அல்லது ஒருத்தி தன்னடைய சேமிப்பை, உடல்நலத்திற்காகவோ, கல்விக்காகவே, ஓய்வுகாலத்திற்கோ பயன்படுவதற்காக பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, ஒரு தொழிலாளி வீடு வாங்கிவிட்டால் எவ்வாறு முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்தவராகிவிட மாட்டாரோ, அதேபோல் பங்குவாங்கியவரும் முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்தவராகி விடமாட்டார்.

மூலதனம்-உழைப்பு முரண்பாடு மறைந்துவிட்டது என்று கூறுவதற்குப் பதிலாக, நிதிமூலதனம் பூகோளமயமாக்கப்பட்டிருப்பது அது இன்னும் நேரடியான வடிவத்தை எடுத்துள்ளது. மிகப் பெரிய அளவிலான சொத்துக்கள் இன்று பங்கு, நிதி சந்தைகளின் நடைமுறையினால் குவிக்கப்படுகின்றன; இந்த வகையில்தான், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கிலான உழைப்பாளிகளின் உபரி மதிப்பு கறக்கப்பட்டு, மூலதனத்தின் போட்டியிடும் பலபிரிவுகளிடையே பிரித்துக் கொள்ளப்படுகிறது.

முதலாளி வர்க்கத்தின் அணிக்குக் கணிசமான கூடுதல், பெருநிறுவன தலைமை நிர்வாகிகளும், உயரளவு அதிகாரிகளும் ஆவர்; இவர்களுக்கு பரிசாகப் பங்குத் தொகுப்புக்கள் கொடுக்கப்பட்டு, அவற்றின் மதிப்பு வேலைகள் தகர்ப்பு, மொத்த ஆட்கள் எண்ணிக்கைக் குறைப்பு இவை பெருகும் போது அவையும் அதிகரிக்கின்றன.

தொழில்நுட்பத்தின் பங்கு

குழப்பத்தை அதிகரிக்கும் வகையில், உற்பத்தி முறையில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் இவற்றின் வளர்ச்சியுற்ற பங்கினால், சமூக, வர்க்க உறவுகளிடையே அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் லாதம் எழுதியுள்ளார்.

"மரபுவழியில் இயந்திரங்கள், மூலப் பொருட்கள் இவற்றை முக்கியத்துவமற்றதாக்கி, தகவல் தளம், தகவல் அறிவு இவற்றுடைய பரிமாற்றத்தால், செல்வம் உற்பத்தி செய்யப்படுகிறது." என்று அவர் எழுதியுள்ளார்.

இங்கும் அவர் உற்பத்திமுறையில் உள்ள குறிப்பிட்ட வடிவங்களுடன், சமூக, வர்க்க உறவுகளை தொடர்புபடுத்தி தவறான அடையாளத்தை அடிப்டையாகக் கொள்கிறார். முதலாவதாக, அறிவியலும் விஞ்ஞானமும் எப்போதுமே உற்பத்திமுறையில் ஒரு முக்கிய உள்ளடக்கமாக இருந்திருக்கின்றது.

இரண்டவதாக, இந்த அறிவையும், தொழில் நுட்ப திறமைகளையும் உள்ளடக்கிய தொழிலாளரும், பழைய முறையிலான தொழிலாளர் போலவேதான் இலாபத்தை உற்பத்தி செய்கின்றனர். தொழில்நுட்பத்திறன் வாய்ந்த தொழிலாளரிடமிருந்து கிடைக்கும் உபரி மதிப்பு, அவர்கள் மூலதன உரிமையாளர்களுக்குத் தங்கள் உழைப்பின் சக்தியை விற்கும் மதிப்பிலிருந்து, அதாவது அவர்கள் ஊதியத்தில் உள்ளடங்கியுள்ளதற்கும், அவர்கள் அன்றாடம் உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்பிற்குமிடையே உள்ள வித்தியாசமாகும்.

கணினி வளர்ச்சியினால் உற்பத்தி முறைகள் வியத்தகு முறையில் மாறியுள்ளன என்பது உண்மைதான். ஆனால், "உற்பத்திமுறையை புரட்சிகரமாக்குதல்" என்று மார்க்ஸ் அடையாளம் காட்டும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் சாரம், மூலதனம்-உழைப்பு இவற்றின் உறவைக் கடந்து அப்பால் சென்றுவிடுவதில்லை; மாறாக அதனால் உந்தப்பெற்று முன்செல்லுகிறது.

அறிவும், விஞ்ஞானமும் உற்பத்திமுறையில் பயன்படுத்தப்படுவதின் நோக்கம், போட்டியாளருடன் போட்டியிடச் செலவினங்களைக் குறைத்து இலாபத்தைப் பெருக்குவதற்காகத்தான், அல்லது புதிய பொருட்களைத் தயார் செய்து போட்டியாளர்களின் பொருட்களைப் பழைமையாக்கி விடுவதற்குத்தான். வேறுவிதமாக கூறினால் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, உற்பத்திமுறையில் மூலதனத்திற்கு வெளியே நடப்பது இல்லை; மூலதனம் இலாபத்தைக் கூடுதலாக அபகரிக்கும் பல வழிகளில் அதுவும் ஒன்றாகும். இந்தத் திறமைகளையும் விஞ்ஞான அறிவையும் உள்ளடக்கியுள்ள தொழிலாளர்கள் மூலதனத்துடன் கொண்டுள்ள புறநிலையான சமூக உறவு, பழைய வடிவிலான உழைப்பில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளரின் நிலையில் இருப்பதைப் போலத்தான் இருக்கின்றது.

சமூக சமத்துவப் பிரச்சினைகள் மூலதனம்-உழைப்பு என்ற அடிப்படையில் இனி தீர்வுகாணப்பட முடியாது என்று லாதம் கூறுகிறார். உண்மையில், சமூக செல்வத்தை உற்பத்தி செய்யும் தொழிலாளரும் அதை அபகரிக்கும் முதலாளித்துவமுமான இந்தச் சமூக உறவே, ஆழ்ந்த சமூக துருவமுனைப்பையும், சமத்துவமற்ற நிலையையும்தான் ஏற்படுத்தியுள்ளது; இது ஆஸ்திரேலியாவில் மட்டுமின்றி, உலகத்திலுள்ள ஒவ்வொரு முதலாளித்துவ நாட்டிலும் இருக்கிறது.

உண்மையான சமூக சமத்துவத்திற்கான போராட்டம், ஒரு சமுதாயத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் மூலதனத்தின் இலாபக் கோரிக்கைகளை, ஒரு அடிப்டை சமூக மாற்றத்தை மில்லியன் கணக்கிலுள்ள தொழிலாளர்கள், கைவினைஞர்கள், நுட்பத் தொழிலாளர்கள், தேர்ச்சி, பகுதித் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் என்று சமுதாயச் சொத்து அனைத்தையும் உற்பத்தி செய்யும் தொழிலாளர் தேவைகளுக்காக, நேரடியாகச் சவால்விடும், சோசலிச வேலைத் திட்டத்தினால்தான் முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி இத்தகைய பணியில்தான், ஒரு புதிய பரந்த தொழிலாளர் கட்சியை அமைத்து, அதன்வழியே தொழிற் கட்சிக்கும், மூலதனத்தின் நலன்களின் பெயரில் லதமால் கூறப்பட்டுள்ள அதன் திட்டமான சமூக நிலைகளினதும் மற்றும் வாழ்க்கைத் தரத்தின் மீதான ஆழ்ந்த தாக்குதலுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்கும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

Top of page