World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Washington calls for end to political standoff in Sri Lanka

வாஷிங்டன் இலங்கையில் அரசியல் விட்டுக்கொடுப்பற்ற நிலைக்கு முடிவுகட்ட அழைப்பு விடுக்கிறது

By K. Ratnayake
5 January 2004

Use this version to print | Send this link by email | Email the author

வாஷிங்டன், இலங்கை ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான விட்டுக்கொடுப்பற்ற நிலை தொடர்வதை சகித்துக்கொள்ளாது என்ற செய்தியுடன் இலங்கையின் இரண்டு மாதகால அரசியல் நெருக்கடியில் தலையீடு செய்துள்ளது. நவம்பர் 4 அன்று, பாதுகாப்பு, உள்துறை மற்றும் ஊடகத் துறை அமைச்சுக்களின் கட்டுப்பாட்டை அபகரிக்கும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஒருதலைப்பட்சமான தீர்மானம், அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான பெரும் வல்லரசுகள் மற்றும் பெரு வர்த்தகர்களின் முயற்சிகளை விளைபயன்தக்க வகையில் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ரிச்சார்ட் ஆமிடேஜ் டிசம்பர் 29 விடுத்த பகிரங்க அறிக்கையில் குறிப்பிட்டதாவது: "அமெரிக்கா இலங்கையின் 20 வருடகால உள்நாட்டு மோதலுக்கு தீர்வுகாண்பதில் மிகவும் அக்கறை கொண்டுள்ளது... பிரதமரின் வாஷிங்டன் விஜயத்தின் போது (ஜனாதிபதியால்) கொழும்பில் உருவாக்கப்பட்ட அரசியல் நெருக்கடியானது சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பிரதமரை அனுமதிப்பதன் பேரில் பொறுப்புக்கள் பற்றிய விளக்கம் கிடைக்கும் வரை சமாதான முன்னெடுப்புகளுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்..."

இந்தக் குறிப்புகள் குமாரதுங்கவுக்கான ஒரு மெல்லிய திரையிடப்பட்ட எச்சரிக்கையாகும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவிற்கு ஒரு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த சமயம் ஜனாதிபதி இந்த மூன்று அமைச்சுக்களையும் அபகரித்துக்கொண்டார். புஷ் நிர்வாகம் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை ஆதரிப்பதாக சுட்டிக்காட்டியதை அடுத்து, அவசரகால நிலைமையை அமுல்படுத்துவதில் இருந்து மாத்திரம் பின்வாங்கிக்கொண்டார். எவ்வாறெனினும், அப்போதிலிருத்தே சமரசம் காணும் முயற்சிகள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு வருகின்றன.

ஆமிடேஜின் அறிக்கையானது, விட்டுக்கொடுப்பற்ற நிலைக்கு முடிவுகட்ட உதவிகோரி வாஷிங்டன் சென்றிருந்த இலங்கை அமைச்சரவை அமைச்சர் மிலிந்த மொரகொடவுடனான பேச்சுவார்த்தைகளை அடுத்தே வெளிவந்தது. அடுத்துவரும் நாட்களில் பலமான சர்வதேச அழுத்தங்கள் திணிக்கப்படும் என சுட்டிக்காட்டிய ஆமிடேஜ், "இலங்கையிலான தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்வதை அனுமதிக்க முடியாது," எனப் பிரகடனப்படுத்தினார். அவர் சமாதானப் பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிக்க வழிதேடும் நோக்கில் நோர்வே, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட ஏனைய அரசாங்கங்களுடனான பேச்சுவார்த்தைகளையும் முன்னறிவித்தார்.

ஜனவரி 2, அமெரிக்க இராஜாங்க செயலாளர் கொலின் பவல் இரண்டு இலங்கை தலைவர்களுக்கும் தமது பேதங்களை தீர்த்து கூடிய விரைவில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க கோரும் கடிதங்களை குமாரதுங்கவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் அனுப்பியதை அடுத்து ஆமிடேஜின் குறிப்புகள் மேலும் வலியுறுத்தப்பட்டன.

சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அமெரிக்க அழுத்தம் வாஷிங்டன் இரண்டு தசாப்தங்களாக நிராகரித்து வந்த இலங்கை வெகுஜனங்களின் நிலைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்தப்போவதில்லை. இந்த நீண்ட மோதலானது தெற்காசியாவில் வளர்ச்சி கண்டுவரும் அமெரிக்க நலன்களை குறுக்கே வெட்ட அச்சுறுத்தும் ஸ்திரமற்ற நிலைமையின் தொடர்ச்சியான மூலங்களாகும். விசேடமாக அது பிராந்தியத்தில் நிரம்பிப் போயுள்ள மலிவு உழைப்பு வழங்களை பற்றிக்கொள்ளவும் இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ளவும் பார்க்கிறது.

ஆமிடேஜின் தலையீடு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்தே உருவானது. விக்கிரமசிங்கவும் குமாரதுங்கவும் பல பேச்சுவார்த்தைகளை நடத்தினர். சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகர் மனோ தித்தவல மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் சேனத் கபுகொடுவ ஆகியோர் தலைமையிலான குழுவானது ஒரு சமரசத்தை உருவாக்குவதற்காக திரைக்குப் பின்னால் தொடர்ச்சியாக செயற்பட்டது. தீர்வு காண்பதற்காக குமாரதுங்க வழங்கிய டிசம்பர் 15 காலக்கெடு கடந்து விட்டதோடு, இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான அடுத்த பேச்சுவார்த்தைகளுக்கு திகதி குறிக்கப்படவில்லை.

குமாரதுங்க பாதுகாப்பு அமைச்சை தன்வசம் வைத்துக்கொள்ளும் அதேவேளை, உள்துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்களை திருப்பித் தர விரும்பினார். அவர் வடக்குக் கிழக்கில் ஆயுதப் படைகள் மீதான கட்டுப்பாட்டை ஒரு புதிய பாதுகாப்பு அமைச்சின் கீழ் அல்லது பிரதமரின் கீழ் இருத்துவதற்கும் முன்மொழிந்தார். ஆனால் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் தொடரவேண்டுமாயின் அரசாங்கம் முழுப் பாதுகாப்புப் பொறுப்பையும் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்திய விக்கிரமசிங்க இந்தத் திட்டத்தை நிராகரித்தார்.

டிசம்பர் 16, ஜனாதிபதி இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய மூன்றையும் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் ஒன்றிணைந்த கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் வர்த்தமானி அறிவித்தலை விடுக்க தித்தவல - கபுகொடுவ குழுவின் ஊடாக பிரேரித்தார். இது குமாரதுங்கவின் இறுதி விருப்பமாக இருக்கும் என தித்தவல சுட்டிக்காட்டிய போதிலும் அரசாங்கம் அதை நிராகரித்தது.

பாதுகாப்பு அமைச்சை தன்வசம் வைத்துக்கொள்வதற்கான குமாரதுங்கவின் தீர்மானம் அவர் அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கும் இராணுவ உயர்மட்டத்தினர் மற்றும் பலவித சிங்கள தீவிரவாதக் கும்பல்கள் போன்ற சமூகத் தட்டுக்களில் பிரதிபலிக்கின்றது. இவர்கள் நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு எந்தவொரு சலுகையும் வழங்குவதை எதிர்க்கின்றனர். ஜனாதிபதி நவம்பரில் இந்த மூன்று அமைச்சுக்களையும் அபகரித்துக் கொண்டது இந்தக் குழுக்களதும் ஊடகமும் முன்னெடுத்த நீண்ட பிரச்சாரத்தின் பின்னரேயாகும். இவை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அடிபணிந்து போவதோடு தேசிய பாதுகாப்பை சமரசத்துக்குள்ளாக்குவதாகவும் குற்றம்சாட்டுகின்றன.

இராணுவ உயர்மட்டத்தினர் ஏற்கனவே சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு தடங்கலை ஏற்படுத்தியதன் காரணமாக விக்கிரமசிங்க பாதுகாப்பு அமைச்சை மீளளிக்கு வற்புறுத்துகின்றார். அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பல பேச்சுவார்த்தைகள், விடுதலைப் புலிகளின் படகுகளை மூழ்கடிக்கும் கடற்படையின் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளால் சங்கடத்திற்குள் தள்ளப்பட்டன. பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக குமாரதுங்கவின் வசம் இருக்குமானால் இராணுவம் சமாதான முன்னெடுப்புகளை குறுக்கே வெட்டுவதில் சுதந்திரமாக ஈடுபடும்.

கடந்த இரண்டு வாரங்களாக, குமாரதுங்க கடுமையான அனுகுமுறைகளை மேற்கொண்டார். டிசம்பர் 19 அன்று, அவர் உள்துறை அமைச்சில் பிரதான மீள் ஒழுங்குகளை செய்தார். பொலிஸ் மற்றும் குற்றவியல் பிரிவுகளுக்கு பொறுப்பாக ஒரு புதிய உள்ளக பாதுகாப்பு அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டது. குடிவரவு, சிறைச்சாலை மற்றும் இந்திய வம்சாவளியினரைப் பதிவுசெய்யும் தினைக்களம் உட்பட ஏனைய திணைக்களங்களும் பாதுகாப்பு அமைச்சுக்கு மாற்றப்பட்டன. இந்த நடவடிக்கை ஜனாதிபதியின் கீழ் இருந்து பாதுகாப்பு மற்றும் உள்ளக பாதுகாப்பு எந்திரங்களை மேலும் பலப்படுத்தியது.

டிசம்பர் 28, குமாரதுங்க பிரதமருக்கு எதிராக அரசாங்க வானொலியில் முன்னெடுத்த ஒரு பிரச்சாரத்தில், சமாதானப் பேச்சுக்களின் தோல்வியை நியாயப்படுத்துவதன் பேரில் "ஒரு கற்பனையான நெருக்கடியை" உருவாக்கியதற்கு பிரதமரே பொறுப்பாளி எனப் பிரகடனம் செய்தார். குமாரதுங்க, ஜனாதிபதிக்கு பரந்த நிறைவேற்று அதிகாரங்களை வழங்கும் அரசியலமைப்பின் கீழ் தனக்குரித்தான பொறுப்புக்களை சாதாரணமாக மீளப் பெற்றுக்கொண்டதாக ஒட்டுமொத்தமாக வலியுறுத்தினார். 1994ம் ஆண்டில் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் ஜனாதிபதியும் அவரது பொதுஜன முன்னணியும் சர்வாதிகார ஜனாதிபதி முறையை கடுமையாக விமர்சித்தனர்.

வாஷிங்டனுடன் சேர்ந்து கொழும்பில் உள்ள பெரு வர்த்தக தலைவர்களும் அரசியல் நெருக்கடிக்கு முடிவுகட்டுமாறு கோருகின்றனர். இது 2002 பெப்பிரவரியில் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதிலிருந்து பெறப்பட்ட பொருளாதார இலாபங்களை கீழறுக்கின்றது.

டிசம்பர் 31, கூட்டு வர்த்தக சம்மேளனத் தலைவர் மகேந்தர அமரசூரிய, அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் நாட்டின் அரசியல் நெருக்கடியை தீர்க்க வர்த்தக சமூகம் செய்யவேண்டியது என்ன என்பதையிட்டு ஒரு பரந்த ஆய்வை மேற்கொள்வதற்காக ஜனவரி 8 அன்று ஒரு கூட்டம் நடைபெறவுள்ளதாக டெயிலி மிரர் பத்திரிகைக்கு தெரிவித்தார். கூட்டு வர்த்தக சம்மேளனம் கொழும்பில் உள்ள பிரதான வர்த்தக சபைகளின் கூட்டாகும்.

"தாம் வெளித் தோன்றியுள்ள அரசியல் சூழ்நிலையில் பார்வையாளராக தொடர்ந்தும் இருக்கப் போவதில்லை. புத்தாண்டின் ஆரம்பத்தில் எங்களுடைய கோரிக்கைகள் அரசியல் தீர்வை பெறுபேறாகத் தராவிட்டாலும், ஒரு உடன்பாட்டை அடைய அரசியல் தலைமைத்துவத்தை நெருக்குவதற்காக நாட்டில் உள்ள முழு வர்த்தக சமூகம் மற்றும் பொது சமுதாயத்தை அணிதிரட்டுவதன் பேரில் சாத்தியமான வளங்கள் அனைத்தையும் ஒன்றிணைக்க நாம் திட்டமிட்டுள்ளோம்", என கூட்டு வர்த்தக சம்மேளனம் தமது அறிக்கையில் பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த நெருக்கடி, "நாட்டின் பொருளாதாரம், சமூக கட்டமைப்பு மற்றும் மக்களின் எதிர்கால நலன்புரி நடவடிக்கைகள் அனைத்தையும் குழப்புமளவுக்கு கடுமையானதாக" இருப்பதாக சம்மேளனம் எச்சரிக்கை செய்துள்ளது. அது பாதகமான விளைவுகளை பட்டியலிட்டுள்ளது: வடக்கு கிழக்குக்கான திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன; பங்குச் சந்தை 80 பில்லியன் ரூபாய்களால் (820 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) வீழ்ச்சியடைந்துள்ளது; சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏனைய உதவியாளர்களும் வழங்கவுள்ள கடன் தொகை சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதிலேயே தங்கியுள்ளது; மற்றும் அமெரிக்கா இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கிடப்பில் தள்ளியுள்ளது.

எவ்வாறெனினும், குமாரதுங்க பின்வாங்கும் அறிகுறிகளைக் காட்டவில்லை. அரசாங்கத்துடன் ஒரு உடன்பாடு ஏற்படாவிடில் ஒரு புதிய பொதுத் தேர்தலுக்கு அழைப்புவிடுப்பதாக டிசம்பர் 31 அரச வானொலியில் சுட்டிக்காட்டினார். "பிரதமரும் அவரது அரசாங்கமும் ஒரு புரிந்துணர்விற்கு வர தாயாரில்லையெனில், நான் ஒரு ஜனநாயக வழியிலான பதிலீட்டை முன்னெடுக்கத் தள்ளப்படுவேன்" என அவர் பிரகடனம் செய்தார்.

ஆயினும், இலங்கை அரசியல் நிறுவனத்தில் உள்ள கூர்மையான பிளவுகளை தேர்தலால் தீர்த்துவிட முடியாது. பெறுபேறுகள் பெரும்பாலும் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீண்டும் பதவியில் இருத்தக் கூடும். இது தனியாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியுடனான அரசியலமைப்பு மோதலை உக்கிரமாக்கும். குமாரதுங்கவின் பொதுஜன முன்னணி மற்றும் அதன் கூட்டாளிகள் வெற்றிபெற்றாலும், அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்த அடிப்படைப் பிரச்சினையை, விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்தை மூலமாகவோ, அல்லது ஏற்கனவே 60,000 உயிர்களைப் பலிகொண்ட, அதிகளவு செலவை ஏற்படுத்தும் யுத்தம் மூலமாகவோ தீர்த்து வைக்கப்போவதில்லை.

Top of page