World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Police attack teacher trainee protest

இலங்கை: ஆசிரியர் பயிலுனர்கள் ஆர்ப்பட்டம் மீது பொலிஸ் தாக்குதல் நடத்தியது

By M. Thevarajah
8 June 2004

Use this version to print | Send this link by email | Email the author

பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் உள்ள ஆசிரியர் பயிலுனர்களால் மே 28 நடத்தப்பட்ட போராட்ட ஊர்வலத்தின் மீது, பொலிசார் தடிகளையும் கண்ணீர் புகையையும் பயன்படுத்தி தாக்குதல் மேற்கொண்டதில் குறைந்த பட்சம் 20 பேர் காயமடைந்துள்ளனர். எட்டு மாணவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, இருவர் மோசமான நிலையில் உள்ளனர். இது, ஏப்பிரல் 2 தேர்தலை அடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல், இலங்கையின் மத்திய மலையக மாவட்டங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களை நேரடியாக இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் வன்முறைக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாகும்.

இந்த அரச ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, இலங்கையின் மத்திய பெருந்தோட்ட பிரதேசமான ஹட்டனுக்கு அருகில் அமைந்துள்ளது. பெரும்பாலான மாணவர்கள் தமிழர்களாகும். இவர்களில் அதிகமானவர்கள் குறைந்த ஊதியம் பெரும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் மகன் மற்றும் மகள்களுமாவர். அவர்கள் ஆசிரியர்களாவதற்காக மூன்று வருட பயிற்சியை பெறுகின்றார்கள். முதல் இரண்டு வருடங்களும் கல்லூரி பயிற்சியும் கடைசி ஒரு வருடம் பாடசாலைகளோடு இணைந்த பயிற்சியும் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது இங்கு சுமார் 750 வதிவிட மாணவர்களும் 250 வெளிவாரி மாணவர்களும் உள்ளனர்.

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுமான சுமார் 2,000 பேர் கல்லூரியை மீண்டும் திறக்கக் கோரி மே 28 ஊர்வலத்தில் பங்குபற்றினர். வசதிகள் பற்றாக்குறை மற்றும் அலுவலக ஊழல்கள் காரணமாக மாணவர்களோடு எழுந்த முரண்பாடுகளை அடுத்து ஏப்பிரல் 23 அன்று நிர்வாகம் கல்லூரியை மூடியது. இந்த முரண்பாடுகளின் போது 15 மாணவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விலக்கிக்கொள்ளுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர்.

ஹட்டன் டன்பார் மைதானத்தில் ஊர்வலம் ஆரம்பமான உடனேயே ஒரு சிரேஷ்ட பொலிஸ் அலுவலர் "ஊர்வலத்தை நிறுத்துவதற்கான" கட்டளை தனக்கு கிடைத்திருப்பதாக எச்சரித்தார். மாணவர்களும் பெற்றோர்களும், வீதியில் இறங்குவதற்கு முன்னதாக ஊர்வலத்துக்கு பல தடவை தொந்தரவு செய்த பொலிசாரை எதிர்த்ததோடு, ஊர்வலம் செல்வதற்கான தமது உரிமையை வலியுறுத்தினர். ஊர்வலம் ஒரு சந்தியை அடைந்த போது, முகக் கவசம் அணிந்திருந்த பொலிசார் முன்பின் பாராமல் கண்ணீர் புகை மற்றும் தடிகளுடன் ஊர்வலத்தை தாக்க ஆரம்பித்தனர். கண்ணீர் புகை தாக்குதலின் விளைவாக பல ஆர்ப்பாட்டக்காரர்கள் மூச்சுவிட போராடியதோடு வாந்தியும் எடுத்தனர். அவர்கள் ஓடித் தப்ப முனைந்தும் கூட விரட்டி விரட்டி தடியால் தாக்கப்பட்டனர்.

கல்லூரி நிர்வாகத்துடனான முரண்பாடு இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்துகொண்டிருக்கின்றது. அது, நிர்வாகம் மாணவர்களின் நிதியை துஷ்பிரயோகம் செய்கிறது என்றக் குற்றச்சாட்டுக்களுடன் சேர்த்து, வசதிகள் மற்றும் அலுவலர்கள் பற்றாக்குறை சம்பந்தமாக தொடங்கியது. வதிவிட மாணவர்கள் 1,500 ரூபா (15 அமெரிக்க டொலர்) மாதாந்த கொடுப்பனவை மட்டுமே பெறுகின்றனர். இதில் நிர்வாகம் உணவுக்காக 1350 ரூபாய்களை வெட்டிக்கொள்கிறது. கலாசாலை அலுவலர்கள் நிதியை கையாடுகின்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் மாணவர்கள் உணவு விநியோகத்தை பொறுப்பேற்றுக் கொண்டனர். கடந்த செப்டெம்பரில் இருந்து ஒரு மாணவர்கள் குழு தங்குமிட சமையலறையை ஐந்து மாதங்களாக நடத்தி வந்ததோடு, சுமார் 200,000 ரூபாய்கள் மாணவர்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டது.

எவ்வாறெனினும், மார்ச் 19 அன்று, அடிப்படை உணவுப் பொருட்களை வழங்கும் உள்ளூர் கடைக்காரருக்கு பணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமத்தையிட்டு உணவுக் குழு மாணவர்கள் பதிவாளரிடம் விசாரித்தனர். பதிவாளரும் குமாஸ்தாவும் பணம் செலுத்துவதை தொடர்ந்தும் ஒத்தி வைத்ததன் விளைவாக மாணவர்களுடனான மோதலுக்கு வழிவகுத்தனர். பொலிசார் இந்த சம்பவத்தில் தொடர்புபடாத பல மாணவர்கள் உட்பட 12 மாணவர்கள் மீது குற்றம்சாட்டுவதற்காக இந்த சம்பவத்தை பயன்படுத்திக்கொண்டனர். உதாரணத்திற்கு, அ. விஜயமோகன் இரத்தினபுரியில் உள்ள அவரது வீட்டில் விடுமுறையில் சென்று தங்கியிருந்த போது கைதுசெய்யப்பட்டார்.

ஆசிரிய பயிலுனர்கள், 12 மாணவர்களின் விடுதலைக்காகவும் மற்றும் நிர்வாகத்தின் நிதி நடவடிக்கைகளுக்கு எதிராகவும் உடனடியாகப் பிரச்சாரத்தை ஆரம்பித்தனர். நிர்வாகம் ஏப்பிரல் 23 கலாசாலையை மூடிவிடுவதன் மூலம் பதிலளித்தது. கைதுசெய்யப்பட்ட மாணவர்களை பொலிசார் இறுதியாக விடுதலை செய்த போதிலும், ஒவ்வொருவருக்கும் ஏனைய மூவர்களோடு சேர்த்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

கொடுப்பனவுகள் சம்பத்தப்பட்ட முரண்பாடானது ஒரு தொகை குறைபாடுகளில் ஒன்றேயாகும். மாணவர்கள், விரிவுரையாளர் பற்றாக்குறையை சுட்டிக்காட்டினர்: இருவர் மாத்திரமே விஞ்ஞானம் கற்பிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளனர்; சங்கீதம் மற்றும் நடனம் கற்பிக்க ஒருவரும் கிடையாது. கடந்த ஆண்டு சங்கீதம் மற்றும் நடனம் கற்பிக்க இரு விரிவுரையாளர்கள் அழைத்துவரப்பட்டிருப்பினும், கலாசாலையில் உள்ள குறைபாடுகளைப் பற்றி முறைப்பாடு செய்த அவர்கள், ஜனவரியில் வெளியேறினர். நூலகத்தில் தேவையான அளவு புதிய அல்லது பழைய புத்தகங்கள் கிடையாது. எந்தவொரு விரிவுரை அரங்கிலும் ஒலிபெருக்கி வசதிகள் கிடையாது.

மாணவர் விடுதிகள் இடைவெளியின்றி உள்ளது. 2க்கு 2 மீட்டர் அறைகளில் நான்கு மாணவர்கள் தங்கியிருக்கின்றனர். இங்கு சிகிச்சை நிலையம் இல்லை. சலவைச் சாலை வசதிகள் வெட்டப்பட்டுள்ளன. துப்புரவுத் தொழிலாளர்கள் இன்மையினால் மாணவர்களே மலசல கூடங்களை துப்புரவு செய்ய வேண்டும். இவற்றுக்கும் மேலாக, கலாசாலை அலுவலர்களால் தாம் களவாடப்படுவதாக மாணவர்கள் உணர்கின்றனர். இந்த அலுவலர்களில் பெரும்பாலானாவர்கள் ஆளும் அரசியல் கட்சிகளுடன் உறவுகொண்டுள்ளவர்களாகும்.

தமது வதிவிடக் கல்வியை முடித்துக்கொண்ட மாணவர்கள் ஏனைய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். அவர்கள் வெறும் 2000 ரூபாவையே மாதாந்த கொடுப்பனவாகப் பெறுகின்றனர். இந்தத் தொகையில் அவர்களால் மிகவும் அடிப்படையான தங்குமிடத்தைக் கூட தேடிக்கொள்வது சிரமமானதாகும். உலக சோசலிச வலைத் தளத்துக்கு (உ.சோ.வ.த) கருத்துத் தெரிவித்த அஜித் சிங்: "வெளிக்களப் பயிற்சி காலத்தின் போது, தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்துக்கும் எமக்கு பணம் தேவை. மற்றும் திட்ட அறிக்கைகளை தயார் செய்வதற்காக எழுதுபொருட்கள் மற்றும் ஏனைய தேவைகளுக்காகவும் மேலதிகப் பணம் தேவைப்படுகிறது. ஆகவே குறைந்தபட்சம் 5,000 ரூபா எமக்குத் தேவைப்படுகிறது," என்றார்.

எஸ். பிரேமகுமார் உ.சோ.வ.த உடன் உரையாற்றிய போது: "நாம் எமது உரிமைகளைக் காப்பதற்காக பல பிரச்சாரங்களை முன்னெடுத்தோம். ஒரு நாள் உணவை பகிஷ்கரித்தல், உண்ணாவிரதம் மற்றும் சத்தியாக்கிரகம் ஆகியவையும் இதில் அடங்கும். எங்களுடைய அண்மைய போராட்டத்தின் போது, விடியற்காலை 2 மணிக்கு உள்ளூர் பொலிஸ் அதிகாரியான செந்திலுடன் அங்கு வந்த முன்னால் கலாசாலை அதிபரான எஸ். முரளீதரன், எமது போராட்டத்தை நிறுத்துமாறு எச்சரித்தார்.

"நாம் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் மற்றும் தொழிற்சங்கங்களுக்கும் அறிவித்தும் எதுவும் நடக்கவில்லை. நாம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா) தலைவர் ஆறுமுகம் தொண்டமானை சந்தித்தோம். ஆயினும் அவர் இந்த விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டார். முன்னால் கலாசாலை அதிபர் முரளீதரன் இ.தொ.கா வுடன் மிகவும் நெருக்கமானவர். நாம் மலையக மக்கள் முன்னணியின் (ம.ம.மு) தலைவர் பி. சந்திரசேகரனை சந்தித்தபோது, அவர் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்த போதிலும் மீண்டும் எதுவும் நடக்கவில்லை. ஆகவேதான் எமது பிரச்சினைகளை மக்களுக்கு தெரிவிப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தோம்," எனத் தெரிவித்தார்.

டிக்கோயா சலங்கந்தைத் தோட்டத்தைச் சேர்ந்த என். சதீஸ்வரன் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார். "பொலிஸ் என் வீட்டுக்கு வந்த போது, எனது பெற்றோர்கள் வேலைக்குச் சென்றிருந்தனர். நான் அங்கு இருக்கவில்லை, வீடும் பூட்டியிருந்தது. ஆனால், பொலிசார் வீட்டைச் சுற்றி சோதனையிட்ட பின்னர், என் தந்தையின் வேலைத் தளத்திற்குச் சென்று என்னைப் பற்றி விசாரித்துள்ளனர். பொலிசார் எங்களைக் கிரிமினல்களை போலவே நடத்தினர். ஆனால் கலாசாலை சொத்துக்களைத் திருடியவர்களை சுதந்திரமாக நடமாட அனுமதித்துள்ளனர். பொலிசார் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை," என உ.சோ.வ.த வுக்குத் தெரிவித்தார்.

ஏ. விஜயமோகன், தன்மீது பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்ததாக உ.சோ.வ.த வுக்கு தெளிவுபடுத்திய போது: "நான் மார்ச் 15 அன்று கலாசாலையில் விடுமுறை பெற்றுக்கொண்டு எனது சகோதரியின் திருமணத்திற்காக இரத்தினபுரியில் உள்ள எனது வீட்டுக்கு சென்றிருந்தேன். மார்ச் 19 சம்பவம் நிகழும் போது நான் இரத்தினபுரியில் எனது வீட்டில் இருந்தேன். நான் எப்படி சம்பவத்தில் தலையிட்டிருக்க முடியும்? அவர்கள் என்னை சூழ்ச்சியில் சிக்கவைத்துள்ளனர். இப்போது, நான் அக்டோபர் 12ம் திகதி நுவரெலிய நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டும்," எனக் குறிப்பிட்டார்.

எந்தவொரு தோட்டத் தொழிலாளர்களின் அமைப்பும் மாணவர்களுக்கு ஆதரவு வழங்கவில்லை. தொழிற்சங்கமும் அரசியல் கட்சியுமான இ.தொ.கா பயிலுனர்களை குற்றம்சாட்டியது. இ.தொ.கா உப தலைவர் எம்.எஸ். செல்லசாமி, "ஸ்ரீபாத பயிலுனர் ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பலபேர் காயமடைந்துள்ளனர். அமைப்பாளர்கள் இதற்குப் பொறுப்புச் சொல்லவேண்டும்," என ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். ம.ம.மு உள்ளூர் அலுவலர்கள் மே 28 ஊர்வலத்தில் பங்குபற்றிய போதிலும், பொலிசார் தலையிட்டவுடன் துரிதமாகக் காணாமல் போயினர். ம.ம.மு தலைமைத்துவம் பொலிஸ் தாக்குதலைப் பற்றி எந்தவொரு கண்டன அறிக்கையும் வெளியிடவில்லை.

மா ஓ வாத புதிய ஜனநாயகக் கட்சி (பு.ஜ.க) ஊர்வலத்தை ஒழுங்கு செய்ய உதவிய போதிலும், அது இந்த எதிர்ப்பை ஒரு இனவாத வழிக்கு திருப்ப முயற்சிக்கின்றது. பு.ஜ.க ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், கல்லூரி மூடப்பட்டதை அடுத்து கல்லூரி முதல்வராக இருந்த முரளீதரனுக்கு பதிலாக ஒரு சிங்கள அலுவலரை பதவியில் இருத்தியதாக குற்றம்சாட்டியது. "இது மலையக தமிழ் மாணவர்களைக் காட்டிக்கொடுப்பதாகும்," என பு.ஜ.க பிரகடனம் செய்தது.

பல மாணவர்கள் இந்த பிரச்சாரத்தை இனவாத வழியில் திசைதிருப்புவதற்கான முயற்சியை எதிர்த்தனர். ஆரம்பமே பிரச்சாரம் ஒரு தமிழ் நிர்வாகிக்கு எதிரானதாகும் என அவர்கள் சுட்டிக் காட்டினர்.

மே 28 ஊர்வலத்திற்கு முன்னதாக கூட்டத்தில் பேசிய ஒரு மாணவர் தலைவர்: "எமது கணக்குப் பரிசோதனைகளின் படி, நிர்வாகத்தின் மோசடி நடவடிக்கைகளை நாம் அம்பலப்படுத்தியுள்ளோம். ஆனால், சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. நான் ஒரு சிங்கள நிர்வாகியை வெளியேற்றுவதற்காக போராடுகிறோம் என கூறுவதன் மூலம், சிலர் எமது போராட்டத்தை அவமதிக்க முயற்சிக்கின்றனர். நிர்வாகி எந்த சமூகத்தைச் சார்ந்தவர் என்பதில் எமக்கு அக்கறையில்லை," எனத் தெரிவித்தார்.

மே 28 ஸ்ரீபாத கல்லூர மாணவர்கள் மீதான தாக்குதலானது, தோட்டப்புற மாவட்டங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் மேற்கொண்ட இரண்டாவது தாக்குதலாகும். ஏப்பரல் 28 அன்று, நுவரெலியா கந்தபளையில் வெளிப்படையான ஒரு சிறிய வாகன போக்குவரத்தில் ஏற்பட்ட சம்பவத்தோடு உருவான பதட்டநிலைமைகளை அடுத்து, பொலிசார் இரு தமிழ் தொழிலாளர்களை சுட்டுக்கொன்றனர். நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குப் பதிலாக, பொலிசார் சிங்கள குண்டர்களின் பக்கம் சேர்ந்து மோதலை எரியச் செய்தனர். இந்த படுகொலைகள் 400,000 க்கும் மேற்பட்ட தமிழ் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு வழிவகுத்தது.

தோட்டப்புற மாவட்டங்களிலும் ஏனைய பிரதேசங்களிலும் இனவாத பதட்ட சூழ்நிலை நிலவுவதற்கு குமாரதுங்கவும் அவரது சுதந்திரக் கூட்டமைப்பும் பொறுப்பாளிகளாவர். சுதந்திரக் கூட்டமைப்பு, ஏப்பிரல் 2 தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குகளை சேகரிக்கும் அவநம்பிக்கையான முயற்சியில் வேண்டுமென்றே சிங்களப் பேரினவாத உணர்வுகளைத் கிளறிவிட்டது.