World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

James P. Cannon on the significance of Independence Day

From Karl Marx to the Fourth of July

சுதந்திர தின முக்கியத்துவம் பற்றி ஜேம்ஸ் பி. கனன்

கார்ல் மார்க்சிலிருந்து ஜூலை நான்காம் தேதி வரை

By James P. Cannon
3 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஜேம்ஸ் பி. கனன் ஆல் எழுதப்பட்டு மிலிட்டன்ட் (The Militant) பத்திரிகையில் 1951 ஜூலை 16 வெளிவந்த கட்டுரையை எமது வாசகர்கள் நலன் கருதி கீழே பிரசுரிக்கிறோம். கனன் (1890-1974), அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஸ்தாபித உறுப்பினர்களுள் ஒருவரும் நீண்ட காலம் அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைவராகவும் இருந்தவராவர்.

மிக நீண்ட காலமாகவே நான் ஒரு ஜூலை 4ம் தேதிப் பற்றாளன்; பட்டாசு வெடித்தல், உல்லாசப்பயணங்கள், இசை நிகழ்ச்சிகள் என்று அதனுடன் வரும் கொண்டாட்டத்தையும் விரும்புபவன். நம்முடைய நாட்டில் அரிய புகழ் வாய்ந்த வரலாறு, அது எப்பொழுது தொடங்கியது என்பதைப் பற்றி, என்னை எங்கு நிறுத்திக் கேட்கச் சொன்னாலும் நான் கேட்பேன். நாம் வாழும் இந்தக் கண்டம் எவரும் அறியமுடியாமல் நீண்ட நாட்களாக உள்ளது; ஆனால் ஒரு நாடு என்ற முறையில், ஒரு சுதந்திரமான மக்கள் என்ற முறையில், மற்றவர்களைவிட விதி கூடுதலான நன்மைகளை கொடுத்திருந்த நாடு என்னும் முறையில், நாம் சுதந்திர பிரகடனத்தையும், ஜூலை நான்காம் தேதியையும் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.

தேசிய சட்டமன்றத்தில் 175 ஆண்டுகளுக்கு முன்பு கூடிய பிரதிநிதிகள் மாபெரும் முன்முயற்சியாளர்கள் ஆவர். "நாங்கள் இந்த உண்மைகளை தாமாகவே உண்மை என்று விளங்கக்கூடியவையாகக் கொள்கிறோம்" என்று அவர்கள் கூறியபொழுது, அவர்கள் மனிதகுலம் முழுவதற்கும் ஒரு புதிய உறுதிமொழி கொடுக்கும் சகாப்தத்தை திறந்துவிட்டனர். அதைத்தான் எப்பொழுது இசைக் கருவிகள் முழங்கத் தொடங்கியவுடனும் நான் அந்தத் தொடக்கத்தையும் உறுதிமொழியையும் களிப்புடன் கொண்டாடத் தயாராக உள்ளேன்; ஆனால் என்னை எவரும் ஜூலை நான்காம் தேதி பேச்சுக்கள், தொடக்கத்தையும் உறுதிமொழியையும் நிறைவேற்றிவிட்டன எனக் கூறி நம்பிக்கைக்கு உட்படுத்த முடியாது. அவற்றை நம்புவதை நிறுத்தி எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. நான் வளர்ந்து என்னைச் சுற்றியுள்ளவை இந்நாட்டில் எப்படி நடைபெறுகின்றன என்பதை காணத்தலைப்பட்டதும், இன்னும் சமூக சமத்துவமற்ற நிலையும், அநீதியும் தொடர்கின்றதை, சலுகைகள் கொண்டு நன்மை பெறுவோர் நம்முடைய முதல் புரட்சியின் மரபியத்துக்கு உரிமை கொண்டாடிப் பேசுவதை பார்க்கும்போது எனக்கு அவர்களைப் பார்த்தால் மோசக்காரர்களாகத்தான் தோன்றுகிறது. ஜூலை நான்காம் தேதி பற்றி பொதுவாகப் பேசும் உரையாளர்களை போலிகள் என்று உணரத் தலைப்பட்டேன், ஒரு பெருமை பொருந்திய கனவைச் சிதைப்பவர்களாகத்தான் கண்டேன். அவர்கள் ஒன்றும் 1776 ன் விடுதலைச் சிறுவர்களாக எனக்குத் தோன்றவில்லை.

ஆனால், கடந்த காலத்தில் பல அமெரிக்க தீவிரப் போக்கினரையும், புரட்சியாளர்களையும் மாற்றியது போல், அது என்னை ஜூலை 4க்கு எதிராக மாற்றியதில்லை. ஜூலை 4 மக்களுக்கு உரிமையானது என்றுதான் நான் நினைத்தேன். அதைத் துறந்தமை அமெரிக்க தீவிரப் போக்கின் பெரும் பிழைகளுள் ஒன்று என்றுதான் எப்பொழுதும் நான் கருதியிருக்கிறேன். சர்வதேசியத்தை அமெரிக்க எதிர்ப்புவாதத்திற்கு ஒப்பாக குழப்பிக்கொள்ளுவது ஒரு தவறாகும்; நம்முடைய நாட்டின் புரட்சிகர மரபுகளை பிற்போக்காளர்களுக்கு விட்டுக் கொடுத்தலும், தற்கால தொழிலாளர் இயக்கங்களுக்கு அவர்கள் 1776 மரபுகளின் முறைமையான வாரிசு என்ற கருத்தைக் கொடுக்காமல் இருப்பதும் நம்முடைய நாட்டின் இயல்பிற்கு உகந்தது அல்ல.

எனவேதான் மிலிட்டன்ட் இந்த ஆண்டு ஜூலை 4 அன்று ஒரு சிறப்புப் பதிப்பு வெளியிட்டு, அதன் முதல் பக்க அறிக்கையில் ஆசிய மக்கள் தங்கள் தேசிய விடுதலைக்காக போராட்டம் நடத்துவதை நம்முடைய 1776 போராட்டத்தின் பெயரில் வாழ்த்தியதும் எனக்கு பெரும் உவகையை கொடுத்துள்ளது; அது மட்டுமின்றி ஒரு பக்கம் முழுவதும் சிறப்புக் கட்டுரைகள் இந்தப் புரட்சி பற்றியும் அதன் உண்மைத் தலைவர்கள் பற்றியும் வெளியிடப்பட்டுள்ளது. இச்சிறப்புப் பதிப்பில் வந்துள்ள கட்டுரைகள் தீவிர படிப்பு, மற்றும் வரலாற்று ஆய்வின் விளைவாக வந்தவை என்பது வெளிப்படை. பலகாலமும் தெளிவில்லாமல் இருந்த, இன்றைய டோரிகளின் சிறப்பு நலன்களுக்காக வேண்டுமேன்றே மறைக்கப்பட்டிருந்த புரட்சியின் முக்கிய கூறுபாடுகளை அவை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. இந்தப் புதிய வெளிப்பாடுகள் வரவிருக்கும் அமெரிக்க தொழிலாளர்களின் புரட்சியில் மிகவும் சக்தி வாய்ந்த பிரச்சார தன்மையைக் கொண்டவை; இவை புரட்சியின் எதிர்மறைகள் அல்ல, இவை 175 ஆண்டுகளுக்கு முன் பெறப்பட்ட தேசிய சுதந்திரத்திற்கான புரட்சியின் தொடர்ச்சியும் முழுமையும் ஆகும்.

இந்த மிகச்சிறப்பான கட்டுரைகளின் ஆசிரியர்கள் தங்களுடைய ஆய்வில் இன்றியமையாத உண்மைகளை காண்பதற்கும், அவற்றை ஆராய்வதற்கும், அவற்றிற்கு இடையே உள்ள உட்தொடர்பு பற்றிக் கவனிக்கவும் தேவையான ஒரு தத்துவத்தினால் வழிகாட்டப்பட்டனர். அவர்கள் வர்க்கப் போராட்டத்தின் உந்து சக்தி என்ன என்பதைக் கண்டறிய முற்பட்டனர்; அதுதான் அனைத்து வரலாற்றின் உண்மைகளின் அறிதலுக்கு திறவுகோல் ஆகும். இந்த கட்டுரையாசியர்களுக்கு, முதல் அமெரிக்க புரட்சியை பற்றி அறியவும் அவர்களுக்கு வழிகாட்டியதும், ஊக்கம் கொடுத்ததும் மார்க்சிசம் ஆகும்; தேசியச்சட்ட மன்றமும், நீதிமன்றங்களும் இதனை "அந்நிய" கொள்கை விளக்கம் என சட்டத்திற்கு புறம்பாக்கிவிடுவர்; இதைப்பற்றி பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுவது இப்பொழுது அநேகமாக முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த ஜூலை 4ம் தேதி மிலிட்டன்ட் பதிப்பில் இறுதிவடிவம் பெற்ற இக்கட்டுரைகள் மலர்ந்த வழிவகையே ருசிகரமானது. அவை எங்கள் கட்சியின் மார்க்சிச பள்ளி மாணவர்களின் படைப்புக்கள் ஆகும். நம்முடைய கட்சி உறுப்பினர்கள் வரலாற்றுப் பணியைச் செய்வதற்கு உந்துதல் பெற வேண்டும் என்ற அவாவை நாங்கள் கொண்டுள்ளோம். அப்பணி அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வரவிருக்கும் புரட்சியை அமைத்து வழிநடத்தல் என்பது ஆகும். அத்தகைய மகத்தான பணிக்குத் திறமையுடன் தயார்செய்து கொள்ள, இந்த நாடு எப்படிப் பிறந்ததோ அதற்கு காரணமான புரட்சியை பற்றி படிப்பதைவிட மகத்தான செயல் என்னவாக இருக்கமுடியும்? மேலும் வரலாற்றின் ஒரே புரட்சிகர தத்துவத்தின் உதவி இல்லாமல் ஒரு புரட்சிகர வரலாறு பற்றிய படிப்பை, அக்கறையுடனும் பயனுள்ள வகையிலும் ஒருவர் எப்படி படிக்க முடியும்? அதுதான் எங்களுடைய தற்போதைய கண்ணோட்டம் ஆகும். நம்முடைய இளைய தலைமுறையில் இருந்து முக்கியமானவர்களை அவர்களுடைய அன்றாட நடவடிக்கைகளில் இருந்து ஆண்டிற்கு ஆறு மாத காலம் தங்கள் நாட்டின் வரலாற்றைப் படிப்பதற்கும் அதை விளக்கக் கூடிய ஒரே கருவியான இந்த "அந்நிய" கொள்கை விளக்கம் பற்றியும், படிக்க வைக்கும் அளவிற்கு நாங்கள் இம்முயற்சியில் தீவிரமாக உள்ளோம்.

இரண்டு பாடத்திட்டங்கள் இதைவிட பொருத்தமாக இணைந்துள்ளதை நீங்கள் காணமுடியாது. இன்றைய அமெரிக்க முதலாளித்துவத்தின் முழுமையான பரப்பையும், அதன் வளர்ச்சி இன்று எப்படி உள்ளது என்பது பற்றியும் முன்னரே மார்க்ஸ் கோடிட்டுக் காட்டியுள்ளார். அதற்கு தக்க சான்றாக அமெரிக்க முதலாளித்துவம், அதன் முக்கிய கூறுபாடுகளுடன் சாட்சியாக உள்ளது. எங்கள் மாணவர்கள் அமெரிக்காவை பற்றி அறிவதற்கு மார்க்சிடம் செல்லுகின்றனர்; மார்க்ஸ் கூறியுள்ளது சரிதானா என ஆய்வதற்கு அமெரிக்க வரலாற்றைக் கற்கிறார்கள்.

மார்க்சிசம் ஒரு நூற்றாண்டை கண்டுள்ளது; ஆனால் அதிகம் படித்த பண்டிதர்களினால் ஆயிரம் முறை மறுக்கப்பட்டுள்ள ஒரு சித்தாந்தமாக உள்ளது. இது போதாதென்று, இதன் எதிர்ப்பாளர்கள் -- அவர்களுக்கு இதில் விஞ்ஞானபூர்வமான நலனைவிடக் கூடுதலான அக்கறை உண்டு -- அன்றாடம், வாரந்திரம், மற்றும் மாதாந்திரமும் தங்களுடைய அனைத்து வெளியீடுகளிலும் மற்ற ஊடகங்களிலும் தவறான தகவல்கள், தவறான பயிற்சிமுறை இவற்றின் மூலம் கண்டனப்படுத்தியும் வருகின்றனர். எங்களுடைய மாணவர்களுக்கு இதுபற்றி அனைத்தும் தெரியும்; அவர்கள் கண்டனங்களை முழு உணர்வுடன் தங்களுடைய கொள்கைவழி பற்றிய படிப்பின் ஒரு பகுதியாக கற்கின்றனர். இந்த ஆய்வு மற்றும் எதிர்-ஆய்வு இவற்றையொட்டி அவர்கள் ஒரு உண்மையான மார்க்சிஸ்டுகளாக மாறுகின்றனர். அவர்கள் கொள்கைவழியை முழுமையாகக் கற்கின்றனர்; இவ்வாறு கற்கும் அளவில் அவர்கள் அதனை செயல்முறைப்படுத்திப் பார்க்கின்றனர். தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக கற்கப்படும் முடிந்த முடிவு அல்ல மார்க்சிசம்; அது சமூக பரிணாம வளர்ச்சி பற்றிய தத்துவமாகவும் வர்க்கப் போராட்டத்தில் ஒரு வழிகாட்டியாகவும் உள்ளது. இது ஸ்தூலமான யதார்த்தத்தின் கடந்தகால, தற்கால அறிவிற்கு ஒரு பதிலீடு ஆல்ல, மாறாக அதன் விசாரணைக்கும் விளக்கத்திற்குமான ஒரு தத்துவார்த்த கருவியாகும். எங்களுடைய மாணவர்கள் அதை அவ்வாறுதான் உணர்ந்துள்ளனர். அவர்கள் மார்க்சிடம் சென்றார்கள், அமெரிக்காவைக் கண்டு பிடித்தார்கள்.

என்னுடைய கருத்தில் அது மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு ஆகும். வெறும் நாட்டு வெறியை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை; அல்லது எந்தவிதமான கொச்சை தேசிய இறுமாப்பு மற்றும் அகந்தை போன்றவை எங்களுக்குக் கிடையாது. நாங்கள் சர்வதேச வாதிகள்; நம்முடைய விதி உலகின் மற்றபகுதிகளோடு பிணைந்துள்ளது என்று நாங்கள் நன்கு அறிவோம். சமுதாயத்தை மாற்றி, ஒரு சோசலிச அமைப்புக் கொண்டுவரப்படவேண்டும் என்பது உலகந்தழுவிய விவகாரம் ஆகும்; இப்பணிக்கு சர்வதேச ஒத்துழைப்பு தேவை; நாங்கள் அதில் ஒரு பகுதியைத்தான் பங்களிப்பு செய்கிறோம். ஆனால் இந்த சர்வதேச ஒத்துழைப்பில் எங்கள் பங்கு, இங்குள்ள புரட்சிபற்றி அறிதலாகும். அதை நாங்கள் செய்தாக வேண்டும், நன்கு ஆராய வேண்டும். நம் நாட்டைப் பற்றியும், அதன் வரலாறு, மரபுகள் பற்றி சரியாக தெரியாமல் அதில் ஈடுபட இயலாது. அவை பெரும்பாலும் சிறந்தவையே. நாடு நல்லதுதான்; அதில் உள்ள பெரும்பாலான மக்களும் நல்லவர்கள்தாம். அவர்களுடைய சாதனைகள் பன்முகமாகவும் அரிய முறையிலும் உள்ளன. சில தவறான மனிதர்கள் அதன் மீது கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டு, பெருங்குழியை நோக்கி நாட்டை செலுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தவிர அமெரிக்காவில் உண்மையில் எந்தத் தவறும் இல்லை.

இதற்கு விடை காண்பதற்கு நாட்டையும் அதன் மரபுகளையும் தூக்கி எறிவது சரியல்ல; முறையற்று அதிகாரத்தை கைப்பற்றியவர்களை, நம்முடைய முன்னோர்கள் புரட்சி என்ற பெயரில் பிரபலப்படுத்தியுள்ள வழிவகைகளைக் கையாண்டு அகற்றவேண்டும். இந்தப் புதிய புரட்சி 1776 ல் அவர்கள் தொடங்கிய பணியை முழுமையடையச் செய்யும். அவர்கள் நாட்டின் சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தனர். 1860களின் இரண்டாம் அமெரிக்கப் புரட்சி, உள்நாட்டுப் போர் என்று அறியபட்டது குழுமங்களின் அடிமை முறைகளை உடைத்து நாட்டை ஒன்றுபடுத்தி, தடையற்ற முறையில் தொழில் வளர்ச்சிக்கு பாதை அமைத்துக் கொடுத்தது. மூன்றாம் அமெரிக்கப் புரட்சியின் பணி இந்த மாபெரும் தொழிற்துறை இயந்திரத்தை, தங்கள் நலன்களுக்காக அதை இயக்கும் ஒட்டுண்ணிக் கும்பலிடமிருந்து மீட்டு, எல்லோருடைய நலன்களுக்காகவும் அதை இயக்குவது ஆகும்.

அதுதான் பொதுவான சிந்தனைப்போக்கு. ஆனால் கேட்பதற்கு எளிதாக இருப்பதுபோல் இது நடைமுறையில் எளிதாக வந்துவிடாது. இதில் பல சிக்கல்களும், நுட்பமான செயல்களும் உள்ளன. தொழிலாளர்கள் பொறிகள், ஏமாற்றுவித்தைகள் நிறைந்த காட்டின் வழியே கடந்து செல்ல வேண்டும். அவர்களுக்கு ஒரு வரைபடமும், திசைகாட்டும் கருவியும் தேவை. அவர்களுக்கு கடந்தகால அனுபவங்களைப் பற்றிய பொது அறிவும், வருங்காலத்திற்காக வழிகாட்டும் நெறியும் தேவை. அதுதான் மார்க்சிசம் ஆகும். அமெரிக்கத் தொழிலாளர்கள் மார்க்சிடம் வருவார்கள், மற்றும் அவருடன் சேர்த்து அவர்களை எவரும் வெற்றி கொள்ளமுடியாது. "தேர்ச்சி பெற்ற அமெரிக்க தொழிலாளர்களின் ஆசானாக மார்க்ஸ் இலங்குவார்" என்று ட்ரொட்ஸ்கி கூறினார். எங்களுக்கும் அதே கருத்து உண்டு, அதை அடையத்தான் நாங்கள் வேலைசெய்து கொண்டிருக்கிறோம்.

இங்கிலாந்தில் வாழ்ந்து தன்னுடைய ஆழ்ந்த கோட்பாடுகளை அபிவிருத்தி செய்த ஜேர்மனிய யூதரான மார்க்ஸ், எல்லா நாடுகளுக்கும் பொதுவானவர். முதலாளித்துவம் பற்றிய தலைசிறந்த ஆய்வாளர் இன்னும் கூடுதலான முறையில் அமெரிக்காவில் இயல்பாக உள்ளார்; இங்கு முதலாளித்துவத்தின் வளர்ச்சி மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. அமெரிக்க தொழிலாளர்கள் தங்கள் நாட்டை அறிந்து கொள்ளவும், அதை உண்மையில் தங்களுடையதாக மாற்றிக் கொள்ளவும் மார்க்ஸ் உதவுவார்.

Top of page