World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

European governments rocked by EU election results

ஐரோப்பிய யூனியன் (EU) தேர்தல் முடிவுகளால் ஆட்டம் கண்டுவிட்ட ஐரோப்பிய அரசாங்கங்கள்

By Peter Schwarz
15 June 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஐரோப்பிய யூனியனின் 25 உறுப்பினர் நாடுகளில் ஜூன் 10 முதல் 13 வரை நடைபெற்ற ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவில் வாக்காளர்கள் பெருமளவிற்கு இடம் பெறவில்லை. அத்தோடு, ஐரோப்பாக் கண்டம் முழுவதிலும் ஆளும் கட்சிகள் அதிரடி தோல்விகளை சந்தித்துள்ளன.

ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு 732 பிரதிநிதிகளை (deputies) தேர்ந்தெடுப்பதற்காக மொத்தம் 349 மில்லியன் மக்கள் இந்த வாக்குப்பதிவில் கலந்துகொள்ள வேண்டும். ''இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப்பின் மிகப் பிரம்மாண்டமான ஜனநாயக, வாக்குப்பதிவு'' என்று பல விமர்சகர்கள் இதைப்பற்றி எழுதியிருந்தனர். ஆனால், ஐரோப்பிய யூனியன் உருவாக்கியுள்ள அமைப்புக்கள் மீதும் பல்வேறு ஐரோப்பிய அரசாங்கள் மீதும் வெகுஜன மக்களின் அதிருப்தியின் வெளிப்பாடாக இந்தத் தேர்தல் முடிவுகள் திரும்பியுள்ளன.

தகுதிபெற்ற வாக்காளர்களில் 44.2 சதவீதம் பேர் மட்டுமே இத் தேர்தல் வாக்குப்பதிவில் கலந்து கொண்டனர். இது ஐரோப்பிய தேர்தலிலேயே மிகக்குறைவான வாக்குப்பதிவாகும். 1979 ல் நடைபெற்ற தேர்தல்களில் 63 சதவீதமான வாக்குகள் பதிவாகியபோதிலும், அதற்குப்பின்னர் படிப்படியாக வாக்குப்பதிவு வீதம் வீழ்ச்சியடைந்து கொண்டு வருகின்றன. கடைசியாக 1999 ல் நடைபெற்ற ஐரோப்பிய தேர்தலில் வாக்காளர்கள் 50 சதவீதத்திற்கும் சற்று குறைவாகவே வாக்குப்பதிவில் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு மே 1 ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிதாக உறுப்பினர்களாக சேர்ந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடைய வாக்குப்பதிவுகளின் பிரதிச் செயலினால், வாக்குப்பதிவில் வாக்காளர்கள் புறக்கணிப்பு செய்ததற்கு மிகப்பெரிய காரணியாக அமைந்துள்ளது. புதிதாகச் சேர்ந்த நாடுகளிலேயே மிக அதிகமான மக்களைக்கொண்ட போலந்தில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 5 பேரில் ஒருவர் மட்டுமே இத் தேர்தலில் வாக்களித்திருக்கிறார். செக் (Czech) குடியரசில் வாக்குப்பதிவு 30 சதவீதத்திற்கும் குறைவாகும். ஹங்கேரியில் 40 சதவீதத்திற்கும் குறைவு. ஐரோப்பிய ஒன்றியத்தின் நீண்டகால உறுப்பினர்களான ஜேர்மனி மற்றும் பிரான்சில் கூட மிகக் குறைந்தளவு வாக்குப் பதிவுவாகியதும் மற்றுமொரு நிலைச்சான்றாகும்.

இந்தத் தேர்தல்களில் மக்களுக்கு ஆர்வமில்லை மற்றும் தேர்தல்கள் பற்றி சரியான விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்று சில விமர்சகர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், இப்படி விளக்கம் தந்திருப்பது அவற்றினுள் செயல்பட்டுக் கொண்டுள்ள உண்மையான சக்திகளை மூடிமறைக்கும் முயற்சியாகும்.

ஐரோப்பிய ஒன்றிய அமைப்புக்கள் என்பன ஜனநாயக விரோத கட்டமைப்பு என்றும், அவை மிகுந்த சக்திவாய்ந்த வர்த்தக லாபிகளுக்காக (lobbies) உறுதியோடு இயங்குபவை என்றும் பல ஐரோப்பியர்கள் சரியாக கவனத்தில் கொண்டதினால், அவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை. இந்த வகையில் குறைந்த அளவிற்கான வாக்குப்பதிவானது, பொதுமக்கள் அரசியல் நிறுவனங்கள் முழுவதிலும் இருந்து அந்நியப்பட்டு நிற்பதையும், மற்றும் ஐரோப்பியாவிற்குள் கூர்மையான சமூக துருவமுனைப்படுத்தலின் பிரதிபலிப்பையும் எடுத்துக்காட்டுகின்றது.

இந்த சமூக மற்றும் அரசியல் நிகழ்வுப் போக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தை விமர்சிப்பதை மையமான பிரச்சாரமாகக் கொண்டு அல்லது அதனை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கின்ற குழுக்கள் மற்றும் கட்சிகள் வெற்றிபெற்றிருப்பதிலிருந்து நிரூபித்துக்காட்டியுள்ளது. எடுத்துக்காட்டாக நெதர்லாந்தில், முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியான போல் வான் புட்னெனினால் (Paul Van Buitenen) அண்மையில் நிறுவப்பட்ட அமைப்பானது, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் உடனடியாக இடம்பெறுவதற்கு தேவையான வாக்குகளை பெற்றிருக்கிறது. 1990 களில் வான் புட்னென் ஐரோப்பிய ஒன்றிய கமிஷனில் நிலவிய ஊழலைக் கண்டுபிடித்து அம்பலப்படுத்தியதால், அவர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதேபோன்று, ஐரோப்பிய துணை பிரதிநிதியாக (Deputy) பணியாற்றிவந்த கென்ஸ் பீட்டர் மாட்டின் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவத்தினரின் லஞ்ச ஊழல் மற்றும் மித மிஞ்சிய செலவினங்களை எதிர்த்து பிரச்சாரம் நடத்தினார். அவருக்கு ஆஸ்திரியாவில் 14 சதவீதமான வாக்குகள் கிடைத்திருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கின்ற வலதுசாரிக் கட்சிகள் போலந்து, செக் குடியரசு, ஹங்கேரி மற்றும் பிரிட்டனில் கணிசமான வெற்றியை பெற்றுள்ளன.

பல்வேறு நாடுகளில், பல்வேறு வகைப்பட்ட நிலையில் வாக்குப்பதிவுகள் அமைந்திருந்தாலும் அரசாங்கங்களின் மீது மக்களது அதிருப்தியை எடுத்துக்காட்டுகின்ற வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. குறிப்பாக, பல ஆண்டுகளாக ஆட்சி புரிந்துவரும் சமூக ஜனநாயகக் கட்சிகள், சமூக நலத் திட்டங்களை சிதைக்கின்ற கொள்கைகளை கடைபிடித்து வருவதால் தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளன.

ஆளும் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியும் (SPD) பிரிட்டனின் தொழிற்கட்சியும் முன் கண்டிராத மோசமான தேர்தல் முடிவுகளை சந்தித்திருக்கின்றன. போலந்தில் ஆளும் ஜனநாயக இடதுசாரி (SLD) கூட்டணி பத்து சதவீதத்திற்கும் குறைந்த வாக்குகளையே பெற்றிருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், போலந்தில் வாக்களிக்க தகுதிபடைத்த ஒவ்வொரு ஐம்பது வாக்காளர் குழுவிலும் ஒருவர்தான் அரசாங்க கட்சிக்கு சாதகமாக வாக்களித்திருக்கின்றார் என்பதாகும்.

அதேபோன்று, வலதுசாரிக் கட்சிகளும் வாக்காளர்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பிரான்ஸ், இத்தாலி, அயர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்தில் பழமைவாதக் கட்சிகள் கணிசமான அளவிற்கு செல்வாக்கை இழந்திருக்கின்றன. நலன்புரி அரசு வேலைத்திட்டங்கள் சிதைக்கப்பட்டதினால் மக்களிடையே எழுந்த கோபத்தையும் மற்றும் ஈராக்கிற்கெதிரான போரை எதிர்ப்பதுமாகிய இரண்டு காரணங்களின் பிரதிபலிப்பாக இவை இருக்கின்றன.

குறிப்பாக, இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் கட்சி மற்றும் பிரிட்டனில் டோனி பிளேயரின் தொழிற்கட்சி ஆகியவை சந்தித்த தோல்விகள், பெரும்பாலும் போருக்கெதிரான மக்களது எதிர்ப்பில் பிணைந்திருக்கிறது. ஸ்பெயினில், மூன்று மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலில் போருக்கு எதிரான மக்களது உணர்வை பயன்படுத்தி வியப்பூட்டும் வகையில் வெற்றிபெற்ற சோசலிஸ்ட் கட்சி, இந்த தேர்தலில் தனது வெற்றியை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

இத் தேர்தல்களில் ஆளுகின்ற இடது மற்றும் வலதுசாரிக் கட்சிகள் தோல்விகளை சந்தித்திருப்பதால், ஊடகங்களில் உள்ள சில பிரிவுகள் ''தேர்தல் எச்சரிக்கை பற்றி'' கூறியுள்ளன. இருந்தபோதிலும், இதிலுள்ள பிரச்சனைகள் தற்காலிகமான எச்சரிக்கையல்ல. நீண்டகாலமாக நிலையான ஆதரவு பெற்றுவந்த ''மக்களுடைய கட்சிகள்'' தற்போது தங்களது ஆதரவை சிறிதுகாலமாக இழந்துகொண்டு வருகின்றன. ஆகவே, இந்தக் கட்சிகளுக்கு சமூக அடித்தளத்தில் பெரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளதை நடந்தமுடிந்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

இந்த தோல்வியானது, பரந்த வெகுஜன மக்களுக்கும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனங்களுக்குமிடையே நிலவுகின்ற ஆழமான இடைவெளியை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது. இரண்டாவது உலகப்போருக்குப்பின் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்க ஆட்சியினுடைய பாரம்பரிய நிறுவனங்கள் மற்றும் இயந்திர அமைப்புக்கள் அனைத்துமே தற்போது கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றன.

ஜேர்மனி

ஜேர்மனியில் 21.4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள சமூக ஜனநாயகக் கட்சி (SPD) அதிபர் சுரோடர் தலைமையில் படுமோசமான இதற்கு முன்னர் இல்லாத தேர்தல் முடிவை சந்திருக்கிறது. 1953 ல் நடைபெற்ற தேசிய ரீதியிலான தேர்தல்களில் இந்தக் கட்சி 28.8 சதவீதமான வாக்குகளை பெற்றது. அப்போது ஜேர்மனியின் பழமைவாத தலைவரான Konrad Adenauer செல்வாக்கின் உச்சாணியில் இருந்தார்.

தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலை இதற்கு முன்னர் நடைபெற்ற ஐரோப்பிய தேர்தலோடு ஒப்பிடும்போது SPD தனது செல்வாக்கில் 9.2 சதவீதத்தை இழந்துள்ளது. 2002 ஜேர்மன் தேசிய தேர்தல் முடிவுகளோடு ஒப்பிடும்போது இந்தக் கட்சி தனது செல்வாக்கில் 17 சதவீதத்தை இழந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்கள் நடந்த அதே நேரத்தில் Thuringia மாநிலத் தேர்தலும் நடைபெற்றது. இத் தேர்தலில் SPD தனது ஆதரவை இழந்து வெறும் 14.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. இது மாநிலத் தேர்தலில் அக்கட்சி கண்டிராத மோசமான முடிவுவாகும். அத்துடன், PDS (Party of Democratic Socialism) கட்சியைவிட பத்து சதவீதம் குறைவாகவே SPD வாக்குகளைப் பெற்றிருக்கிறது. பழமைவாத கிறிஸ்துவ ஜனநாயக யூனியனுக்கு (CDU) அடுத்த படியாக PDS இரண்டாவது பெரிய கட்சியாக இந்த மாநிலத்தில் வந்துள்ளது.

ஜேர்மனியில், 48.7 வீத வாக்குகளோடு CDU ஐரோப்பிய தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாக கருதப்பட்டது. ஆனால், உண்மையிலேயே 1999 ல் நடைபெற்ற ஐரோப்பிய தேர்தலில் இக் கட்சி பெற்ற வாக்குகளை விட இது 4.2 சதவீதம் குறைவாகும்.

ஜேர்மன் பசுமைக் கட்சி இதர கட்சிகளின் இழப்புக்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, தனது வாக்குப்பதிவு வீதத்தை இரட்டிப்பாக்கி 11.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அரசாங்கத்தில் தனது சொந்த கூட்டுப் பங்களிப்பிலிருந்து பசுமை கட்சி பெரும்பாலும் விலகிநின்று, பெரிய நகரங்களில் வாழ்கின்ற மத்தியதர தட்டினரின் ஆதரவை நம்பியுள்ளது.

''சுதந்திர சந்தை'' கொள்கையை வலியுறுத்தும் தாராளவாத சுதந்திர ஜனநாயக கட்சியும் (FDP) தனது பங்கிற்கு வாக்குகளை அதிகம்பெற்று, 6.1 சதவீத வாக்குகள் மூலம் மீண்டும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நுழைந்திருக்கிறது. 2002 தேசிய தேர்தலில் PDS 5 வீதமான குறைந்தபட்ச வாக்குகளை பெறத் தவறியதால் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் அதனால் இடம்பெற முடியவில்லை. தற்போது ஐரோப்பிய தேர்தல்களில் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்று, FDP அளவிற்கு தனது நிலையை PDS உயர்த்திக் கொண்டுள்ளது.

SPD தனது செல்வாக்கை இழந்ததற்கு முக்கியமான காரணம் தனது பாரம்பரிய ஆதரவாளர்களில் மிகப்பெரும் பகுதியினர் வாக்குப்பதிவிற்கு இடம் பெறாமல் தவிர்த்ததினால் ஆகும். அரசாங்கத்தின் 2010 செயற்திட்டத்தில் விளக்கப்பட்டுள்ள சமூக நலத்திட்ட வெட்டுக்களால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் இந்த வாக்குப்பதிவை புறக்கணித்தனர். ஜேர்மன் தேசியத் தேர்தல்களில் 11 மில்லியன் மக்கள் வாக்களித்தனர். ஆனால், இந்த சுற்றில் அந்தளவிற்கு வாக்குகள் அளிக்கப்படவில்லை என்று ஒரு கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 800,000 வாக்காளர்கள் CDU வின் பக்கம் திரும்பிவிட்டதாகவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த தேர்தல்களில் கலந்து கொண்ட சிறிய கட்சிகள் எதுவும் 2 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெறவில்லை. ஜேர்மனி சோசலிச சமத்துவக் கட்சி (PSG) மொத்தம் 25,824 வாக்குகளை பெற்றுள்ளது. இது 1994 ஐரோப்பிய தேர்தல்களில் பெற்ற வாக்குகளைவிட இரு மடங்காகும்.

பெரிய பிரித்தானியா

ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்திலிருந்து தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், பிரிட்டனில் இந்தத் தேர்தலில் தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு தீர்க்கமான தோல்வி ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு 1999 தேர்தலைவிட 2 சதவீதம் அதிகமாக, 39 சதவீதமாக உள்ளது. (அது பிரதானமாக வடக்குப் பகுதியில் தபால் வாக்குப்பதிவு அனுமதிக்கப்பட்டதன் விளைவாகும்) அப்படியிருந்தும் ஐரோப்பிய ஒன்றிய சராசரியைவிட இந்த வாக்குப்பதிவு வீதம் குறைவுதான்.

இத் தேர்தலில் தொழிற்கட்சி 23 சதவீதமான வாக்குகளை பெற்றிருந்தபோதிலும், இது 6 சதவீதத்தை மேலும் இழந்துள்ளது. 1910 ம் ஆண்டு இந்தக் கட்சி துவக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் அளவிற்கு மிகக்குறைந்த அளவு வாக்குகளை பெற்றிருக்கிறது. சென்ற வியாழனன்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் சந்தித்த தோல்வியைவிட படுமோசமான தோல்வியை இப்போது அது சந்தித்திருக்கிறது. இருப்பினும், தொழிற்கட்சியின் இன்னலுக்குரிய காரணங்களால் டோரிக் கட்சி பயனடையவில்லை. அவர்கள் 27 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார்கள். இது, சென்ற தேர்தலைவிட 10 சதவீதம் குறைவாகும். 1832 லிருந்து எந்த தேசியத் தேர்தலிலும் பெற்றிறாத மிகக்குறைந்த வாக்குகளை இக்கட்சி பெற்றிருக்கிறது.

இப்படி பிரிட்டனில் நிலவுகின்ற வாக்காளர்களின் அதிருப்தியை பயன்படுத்திக் கொண்ட கட்சி ஐரோப்பிய ஒன்றியத்திற்கெதிரான பிரிட்டனின் UKIP சுதந்திர (UK Independence Party - UKIP) கட்சியாகும். மொத்தம் 16.8 சதவீத வாக்குகளை இக் கட்சி பெற்று மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறது. 1999 ம் ஆண்டைவிட இது இருமடங்காகும். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் அக்கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை மூன்றிலிருந்து நான்கு மடங்குகள் உயர்ந்து பன்னிரண்டாகியுள்ளது. கிழக்கு மிட்லாண்ட்ஸ் பகுதியின் முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளரும், அரபு மக்களுக்கெதிரான தனது வெட்கக்கேடான விமர்சனங்களைக் கொண்டவருமான Kilroy-Silk என்பவர், 0.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று 2 வது இடத்திற்கு வந்தார். தென்மேற்கு, தென்கிழக்கு பகுதிகளிலும் UKIP கட்சியானது, டோரிகளுக்குப் பின்னால் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.

இந்தத் தேர்தல் பற்றி கார்டியன் பத்திரிகையானது: ''இரண்டு பெரிய கட்சிகளும் பெரும்பான்மை வாக்குகளை பெறுவதற்கு போராடிய முதலாவது தேர்தல் இது. பிரிட்டன் மக்களவையில் (House of Commons) இடம் பெறாத கட்சிகள் முதல் தடவையாக மொத்த வாக்குப் பதிவில் 25 சதவீதத்திற்கு மேல் பெற்றுள்ளன. பிரிட்டிஷ் வரலாற்றிலேயே முதல் தடவையாக தேர்தலில் 'வெற்றி' பெறுகின்ற கட்சி பதிவான வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கு குறைவாகவே பெற்றிருக்கின்றது'' என்று கருத்து தெரிவித்துள்ளது.

டோரிகளது வாக்கைத்தான் பிரதானமாக UKIP கட்சி பெற்றிருக்கிறது. ஆனால், அந்தக் கட்சியின் வெற்றியானது ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பாக அரசாங்கத்தின் கொள்கைக்கு பெரிய சங்கடங்களை உருவாக்கியுள்ளது. இப்போது அதிகாரப்பூர்வமான அரசியல் முழுமையாக வலதுசாரி பக்கம் திரும்பவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்பதை ஆதரிக்காதவர்களே கூட தொழிற்கட்சி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு தங்களது எதிர்ப்பைக் காட்டுவதற்காக UKIP க்கு வாக்களித்திருக்கின்றனர்.

UKIP க்கு வாக்களித்திருப்பதன் மூலம் வாக்காளர்களது அதிருப்தி தொழிற்கட்சிக்கு எதிராக பிரதான வலதுசாரி வடிவம் எடுத்துவிட்டதென்று எடுத்துகொள்ள முடியாது. அதற்கு எதிரான நிலவரமே ஏற்பட்டுள்ளது. தாராளவாத ஜனநாயகக் கட்சிக்காரர்கள் ஈராக் போருக்கெதிரான அரங்கில் நின்று பிரச்சாரம் செய்தனர். தங்களை சமூகப் பிரச்சனைகளில் தொழிற்கட்சியின் இடதுசாரி அணியினர் என்று சித்தரித்தனர். அதனால், தங்களது வாக்குகளை 15 சதவீதமான அளவிற்கு 2 புள்ளிகள் கூடுதலாக பெற்றனர்.

பசுமைக் கட்சிக்காரர்கள் 6 சதவீத வாக்குகளைப் பெற்று தங்களது இரண்டு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் தக்கவைத்துக் கொண்டனர். George Galloway ன் இடதுசாரி ரெஸ்பக்ட் ஐக்கிய கூட்டணி (Respect Unity Coalition) தேசிய அளவில் 1.8 வீதமான வாக்குகளைப் பெற்றும், லண்டனில் 5 வீதத்தை நெருங்கி வருகிற அளவிற்கு வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இந்தக் கட்சி லண்டனில் 90,000 திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றிருந்த போதிலும், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இடம் பெறுவதற்கு அவை போதுமான வாக்குகளை பெறவில்லை.

தீவிர வலதுசாரி பிரிட்டன் தேசியக் கட்சி தேசிய அளவில் 1 வீதமான வாக்குகளை கூடுதலாக பெற்று 5 வீதத்தை எட்டியுள்ளது.

தேர்தலில் போட்டியிட்ட அளவுக்கு அதிகமான வேட்பாளர்களில் பலர், ''பாரம்பரிய தொழிற்கட்சிக்கும்'' மற்றும் போருக்கு எதிர்ப்பையும் முக்கிய பொருளாக கொண்டிருந்தனர். UKIP அல்லாத சிறிய கட்சிகளின் ஒட்டுமொத்த வாக்குகளின் எண்ணிக்கை 19 சதவீதமாகும். இந்த சிறிய கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகளோடு UKIP க்கு கிடைத்த வாக்குளையும் இணைத்துப் பார்த்தால் வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மூன்று பெரிய கட்சிகளான தொழிற்கட்சி, பழமைவாத கட்சி மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சி ஆகியவற்றை உதறிதள்ளிவிட்டது தெளிவாகத் தெரிகிறது.

பிரான்ஸ்

பிரான்சில் ஜனாதிபதி சிராக் மற்றும் பிரதமர் ரப்ஃரினின் ஆளும் கட்சியான UMP 16.6 சதவீத வாக்குளைத்தான் பெற்றது. 2002 ல் சிராக்கினால் உருவாக்கப்பட்ட வலதுசாரி கூட்டணி UMP ஆகும். ஜனாதிபதி தேர்தலில் பிளவுபட்டு நின்ற வலதுசாரிகளை இதன் மூலம் அவர் ஒன்று சேர்த்தார். தேசிய நாடாளுமன்றத்தில் UMP க்கு அறுதிப் பெரும்பான்மை உள்ளது.

ஐரோப்பிய தேர்தல்களுக்குப் பின்னர், பிரான்சின் வலதுசாரிகள் எப்பொழுதும்போல் பிளவுபட்டே நிற்கின்றனர். UMP ல் ஒரணியாகச் சேர மறுத்துள்ள தாராளவாத ''சுதந்திர சந்தையை'' அடிப்படையைக் கொண்ட UDF கட்சியானது, இந்த தேர்தலில் 12 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. அத்துடன் கூடுதலாக இரண்டு வலதுசாரிக் கட்சிகள், பிலிப் டு வில்லியே தலைமையிலான MPF மற்றும் சார்ள் பாஸ்குவா தலைமையிலான RPF ஆகிய இரண்டும் 8.4 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளன. UMP மற்றும் UDF ற்கு எதிராக மேலே கூறப்பட்ட இரண்டு கட்சிகளும் ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்த்து நிற்கின்றன. அதிதீவிர வலதுசாரியான லு பென்னின் தேசிய முன்னணி 10 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற பிராந்திய தேர்தல்களில் தேசிய முன்னணி 15 சதவீத வாக்குகளை பெற்றது.

சோசலிஸ்ட் கட்சி இந்தத் தேர்தலில் மிகப் பெருமளவிற்கு பயனடைந்ததோடு, ஏறத்தாழ 30 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. சென்ற ஐரோப்பிய தேர்தலில் கட்சி ஒட்டுமொத்தமாக பெற்ற வாக்குகளைவிட இது 8 வீதம் அதிகமாகும். பிரெஞ்சு பசுமைக் கட்சி தங்களது செல்வாக்கை இழந்து 7 சதவீதமான வாக்குகளையும், கம்யூனிஸ்ட் கட்சி 5.8 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. 1997 முதல் 2002 வரை ஜோஸ்பன் தலைமையில் ''இடதுகள் கூட்டணி'' ---சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமை மற்றும் தீவிரவாதிகள் ஆகியோர்--- மொத்தம் 42.4 சதவீத வாக்குகளை பெற்றிருக்கின்றது. வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகள் பெற்ற 37.7 சதவீத வாக்குகளை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும் (தேசிய முன்னணி நீங்கலாக).

LO (Lutte Ouvrière) மற்றும் LCR (Ligue Communiste Révolutionnaire) இணைந்த ''தீவிரவாத இடதுசாரிக்'' கட்சிகள் 2.6 சதவீத வாக்குகளை பெற்றிருக்கின்றன. இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் பெற்ற வாக்குகளைவிட இது குறைவாகும். முந்தியத் தேர்தல்களில் 5 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை இக்கட்சிகள் பெற்றதால் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இடம்பெற முடிந்தது. இக்கட்சிகள் மூன்று மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற பிராந்தியத் தேர்தல்களில் பெற்ற 4.9 சதவீத வாக்குகளிலிருந்து தற்போது வீழ்ச்சியடைந்துள்ளன.

இத்தாலி

இத்தாலியில் 70 சதவீதமான வாக்குப்பதிவில், பிரதமர் பெர்லுஸ்கோனி தலைமையிலான ஆளும்கட்சி 20.5 சதவீத வாக்குகளையே பெற்றிருக்கிறது. இது 2001 நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்குகளைவிட 9 சதவீதம் குறைவானதாகும். முந்திய ஐரோப்பிய தேர்தல்களில் பெற்ற வாக்குகளைவிட இது 5 சதவீதம் குறைவாகும். கட்சியின் முன்னணி வேட்பாளராக நின்ற பெர்லுஸ்கோனி குறைந்தபட்சம் 25 சதவீத வாக்குகளை பெற முடியுமென்று கணித்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட முறையில் அவருக்கு கடுமையான தோல்வி என்று கருதப்படுகிறது.

பெர்லுஸ்கோனியின் இழப்புக்களை பயன்படுத்தி அவரது வலதுசாரிக் கூட்டணிக் கட்சிக்காரர்கள் பயனடைந்துள்ளனர். தேசிய முன்னணி 11 சதவீதமான வாக்குகளையும், கிறிஸ்துவ ஜனநாயக கட்சியான UDC 5.6 சதவீத வாக்குகளையும் பெற்றிருக்கிறது. கூட்டணியின் மற்றொரு கட்சியான வடக்கு கழகம் (Northern League) 5 சதவீதமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஆளும் கூட்டணிக் கட்சிகள் 43 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளன.

பிரதான எதிர்க்கட்சியான ஆலிவ் மரக் கூட்டணி (Olive Tree Alliance) 30 சதவீதமான வாக்குகளை பெற்றிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான ரொமனோ புரோடி இக்கட்சியின் முன்னணி உறுப்பினர் என்றாலும் தேர்தலில் அவரால் பெரும் வெற்றிபெற முடியவில்லை. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஆளும் கூட்டணிக் கட்சிகளைவிட எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக 2 சதவீதமான வாக்குகளை அதிகமாக பெற்றுள்ளன.

இந்த முடிவுகள் தேசிய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளாக மாற்றப்படுமானால் கம்யூனிச மீள்அஸ்திவாரக் கட்சி (Communist Refoundation Party) தற்போது ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் பெற்றுள்ள 6 சதவீதமான வாக்குகள் அடிப்படையில் முன்னணி பங்கு வகிக்கமுடியும். கடந்த காலத்தில் இக்கட்சியானது நாடாளுமன்றத்தில் மத்திய - இடது அரசாங்கங்களை ஆதரித்ததோடு, எதிர்காலத்தில் மத்திய - இடது கூட்டணியில் பங்குவகிக்கவும் உத்தேசித்துக் கொண்டிருக்கிறது.

ஸ்பெயின்

மார்ச் 14 ல் நடைபெற்ற தேசிய தேர்தல்களில் பெற்ற எதிர்பாராத வெற்றியைத் தொடர்ந்து ஸ்பெயினில் சோசலிஸ்ட் கட்சி (PSOE) தனது செல்வாக்கை நிலைநாட்டிக் கொண்டுள்ளது. 43.3 சதவீத வாக்குகளைப்பெற்று மார்ச் தேர்தல் முடிவுகளைவிட சிறிதளவு கூடுதலாக வெற்றிபெற்றுள்ளது. மார்ச் தேர்தலில் தோல்வியடைந்த பழமைவாத மக்கள் கட்சியின் (PP) வாக்குகள், இத் தேர்தலில் 2 சதவீதம் அதிகரித்து PSOE யைவிட 2 புள்ளிகளே குறைவாகப் பெற்றிருக்கிறது. வாக்குப்பதிவு மிகக் குறைந்தளவில் 46 சதவீதமாக இருந்தது.

ஸ்பெயினில் சிறிய கட்சிகள் தோல்வியடைந்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து உருவான ஐக்கிய இடதுகள் 4.2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பெற்றிருந்த நான்கு இடங்களில் இரண்டை இழந்துவிட்டது.

போலந்து

போலந்தில் மிகக்குறைவான அளவே வாக்குப்பதிவுகள் நடந்துள்ளது. பழமைவாத மக்கள் அரங்கு (conservative Citizen's Platform) மிகவலுவான கட்சியாக வந்திருக்கிறது. இக்கட்சியும் இதர பழமைவாத எதிர்க்கட்சிகளும் கொள்கை அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கின்றன. ஆனால், போலந்தின் ''தேசிய நலன்களை'' வலுவான அடிப்படையில் வலியுறுத்தி வருகின்றன. இக்கட்சிகள் ஒட்டுமொத்தமாக 40 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கும் இரண்டு வலதுசாரிக் கட்சிகள் 30 சதவீதமான வாக்குகளை பெற்றுள்ளன. தேசிய கத்தோலிக்க கழகம் (LPR) 17 சதவீதமான வாக்குகளையும், வலதுசாரி Andrzej Lepper தலைமையிலான Samoobrona என்ற கட்சி (தற்காப்பு கட்சி) 12 சதவீதமான வாக்குகளையும் பெற்றுள்ளன. தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற கருதுத்துக் கணிப்புக்களில் மக்கள் ஆதரவு அதிகமுள்ள Lepper மிகப்பெருமளவிற்கு வாக்குகளை பெறுவார் என்று மதிப்பிடப்பட்டது.

ஆளும் SLD கட்சியானது 10 சதவீத்திற்கும் குறைந்த வாக்குகளையும், இக்கட்சியிலிருந்து பிரிந்துசென்ற போலந்து சமூக ஜனநாயகக்கட்சி 5 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.

இந்தத் தேர்தல் முடிவுகள் என்பன நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியை தணிப்பதற்கு எந்த வகையிலும் பயன்படாது என்று பார்வையாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். போலந்து ஜனாதிபதி Alexander Kwasniewski ஆல் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்ட மார்க் பெல்கா (Marek Belka) மீண்டும் ஒருமுறை நாடாளுமன்றத்தில் தனது பதவியை உறுதிசெய்து கொள்ளவேண்டும். சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மார்க் பெல்காவிற்கு தேவையான வாக்குகள் கிடைக்கவில்லை. ஆகவே, தற்போது நடைபெற்ற தேர்தல்களில் SLD கட்சி படுமோசமான விளைவுகளை சந்தித்ததால் பெல்கா, இரண்டாவது முறையாக தனது பிரதமர் பதவியை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை கொண்டிருக்கவில்லை.

Top of page