World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bush administration takes steps to cancel US election

புஷ் நிர்வாகம் அமெரிக்கத் தேர்தலை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கிறது

Statement of the Socialist Equality Party
13 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

புஷ் நிர்வாக அதிகாரிகள், 2004 தேர்தலை தள்ளிவைப்பதற்கு அவசியமான சட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவாக ஆராயுமாறு வேண்டுகோல் விடுத்திருக்கின்றனர். இந்த வேண்டுகோல், ஜனநாயக உரிமைகளை புறந்தள்ளிவிட்டு, இராணுவம், மற்றும் பொலிசை அடிப்படையாகக் கொண்ட சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதன் பேரில், அமெரிக்க அரசியல் சட்டத்தையே ரத்துச்செய்வதற்கான உள்ளார்ந்த அச்சுறுத்தலை பிரதிதித்துவம் செய்கின்றது. இது தேர்தல் தோல்வி பற்றி மட்டுமல்லாமல், அமெரிக்காவில் சமூக மற்றும் அரசியல் கொந்தளிப்பின் வெடிப்பையிட்டும் பீதியடைந்துள்ள ஆழமாக சீரழிந்த மற்றும் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட ஆட்சியின் அவநம்பிக்கையான நடவடிக்கையாகும்.

இந்த வேண்டுகோள் ஞாயிறன்று நியூஸ்வீக் வார இதழில் அம்பலத்திற்கு வந்ததுடன், மூன்று மத்திய ஏஜென்சிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது: அவை, இந்த சாத்தியக்கூறை முதலில் ஆலோசித்த, புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேர்தல் உதவிக் குழுவும், திரும்ப திரும்ப எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல், தேர்தலோடு சம்பந்தப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல்கள் பற்றி நிச்சயமற்ற எச்சரிக்கைகளை விடுத்துக்கொண்டிருக்கும் உள்நாட்டு பாதுகாப்புத்துறையும், மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் டொம் ரிஜ் முன்வைத்த வேண்டுகோலின் சட்ட மற்றும் அரசியலமைப்பு பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து வரும் நீதித்துறை திணைக்களத்தின் ஆலோசகர் சபையுமாகும்.

தேர்தல் உதவிக்குழுவின் தலைவர் டீ போரஸ் சோரியஸ் (DeForest Soaries) திங்களன்று நாடாளுமன்ற இரு அவைகளையும் சார்ந்த குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி தலைவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தேர்தலை இடம்பெறாமல் செய்வதற்கு எந்த சட்ட அல்லது அரசியலமைப்பு விதியும் இல்லை என்பதை அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். ''தேர்தல் நேரத்தில் பெரும் பயங்கரவாத தாக்குதல் நடக்குமானால் வாக்குப்பதிவை தள்ளிவைப்பதற்கோ அல்லது மறுதேதிக்கு ஒத்திவைப்பதற்கோ, தெளிவான நடைமுறை இல்லை'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சோசலிச சமத்துவக் கட்சி, பயங்கரவாத தாக்குதல் நடப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக காரணம் காட்டி, தேர்தலை ஒத்திவைப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதை அப்பட்டமான பொய் என குறிப்பிடுவதோடு அதை நிராகரிக்கின்றது. ஈராக்கிற்கு எதிரான சட்டவிரோத படையெடுப்பை நியாயப்படுத்துவதற்காக பயங்கரவாத அச்சுறுத்தலை பயன்படுத்தியது போல், 2000 ஜனவரியில் தேர்தலையே வெற்றிகரமாக திருடி பதவிக்கு வந்தது முதல் புஷ் நிர்வாகத்தின் இரகசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியான தீவிர ஜனநாயக விரோத நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக்குவதற்காக அது பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிர்வாகம், ''பயங்கரவாத அச்சுறுத்தல்'' என சொல்லுகின்ற எதுவும், நம்பகத்தன்மை கொண்டதல்ல. ஈராக்கினால், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் போக்கு உள்ளது என்றும் அதனிடம் ''பேரழிவுகரமான ஆயுதங்கள்'' உள்ளன என்றும் திட்டமிட்டு பொய்கூறியது சென்ற வாரம் செனட் புலனாய்வுக்குழு அறிக்கை மூலம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது. புஷ் நிர்வாகத்தில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி முதல் அடிமட்டம் வரை தங்களது குற்றவியல் அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்துவற்கு எதை வேண்டுமானாலும் கூறுவார்கள்.

அதிகாரத்தில் தங்களது இறுக்கமான பிடியை நிலைநாட்டிக்கொள்வதற்காக எதையும் செய்யத் தயாராகவுள்ள ஆபத்தான மற்றும் மூர்க்கமான மனிதர்களை உள்ளடக்கியதே புஷ் நிர்வாகமாகும். நவம்பர் தேர்தலுக்கு முன்னர் ஒரு பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவும் வரை, அதை திட்டமிடுபவர்களாகவும் மற்றும் அதை நடைமுறைப்படுத்துபவர்களாகவும் இருக்கப் போவது புஷ் நிர்வாகத்திலும், அதன் பொலிஸ் பிரிவிலும் மற்றும் பல்வேறு புலனாய்வு அமைப்புக்களிலும் இடம்பெற்றுள்ள அதிதீவிர வலதுசாரிகளே தவிர, அமெரிக்காவில் செயல்படும் சில இரகசிய அல்கொய்தா பிரிவு உறுப்பினர்கள் அல்ல.

புஷ் நிர்வாகம், பயங்கரவாத தாக்குதலை அடுத்து, தேர்தலை ஒத்திவைக்கவும் ரத்து செய்யவும் அவசியமான அடித்தளத்தை அமைப்பதில் இப்போது ஈடுபட்டுக்கொண்டிருப்பதை அம்பலப்படுத்த இடமளித்தமையானது, குறைந்தபட்சம் அதன் ஆதரவாளர்கள் மத்தியில் உள்ள புதிய பாசிச கும்பல்களுக்கு அத்தகைய தாக்குதலை முன்னெடுக்க அரசியல் உள்ளடக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்கியுள்ளது. இவர்கள் எதிர்வரும் தேர்தலில் இந்த நிர்வாகத்தின் தோல்வியை ஏற்கத் தயாராக இருப்பவர்கள் அல்ல.

அல்கொய்தா ஒரு பயங்கரவாத சம்பவத்தை ஏற்படுத்திவிடக்கூடும் என்ற சாத்தியக்கூறை ஏற்றுக்கொள்வதாக இருந்தால்கூட, அதுவே தேசிய தேர்தலை தள்ளி வைப்பதற்கு நியாயம் ஆகாது. ஜோர்ஜ் வாஷிங்டன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், இதுவரை 216 ஆண்டு காலமாக இதுபோன்ற ஒரு முன்மாதிரி இடம்பெற்றிருக்கவில்லை. முதல் உலகப்போரில், இரண்டாவது உலகப்போரில், ஏன் உள்நாட்டுப்போர் நடைபெற்ற காலத்தில்கூட, அப்பொழுது டசின் அரசுகளில் போர் நடந்து கொண்டிருந்த நேரத்தில் கூட தேசிய தேர்தல்கள் நடைபெற்றன. 1812ம் ஆண்டு நடைபெற்ற போரிலும் வாஷிங்டன் டீ.சீ யை (DC) பிரிட்டிஷ் படைகள் பிடித்துக் கொண்டிருந்த நேரத்திலேயேயும் சரி வெள்ளை மாளிகை தீ வைத்துக் கொளுத்தப்பட்ட நேரத்திலேயேயும் சரி அரசாங்கத்தால் தேர்தலை தள்ளிவைக்க முயலவில்லை.

பயங்கரவாத தாக்குதல் நடந்தால் நவம்பர் தேர்தலை தள்ளிவைக்க வேண்டிய அவசியத்திற்கான தெளிவான விளக்கம் எதுவும் தரப்படவில்லை. அதற்கு மாறாக, மார்ட்ரிட் குண்டு வெடிப்புக்கள் அண்மையில் நடைபெற்ற ஸ்பெயின் நாட்டு தேர்தலில் ஏற்படுத்திய பாதிப்பைப்பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. அந்த தேர்தலில் வலதுசாரி போர் ஆதரவு அரசாங்கம் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. விளக்கப்படாத ஆனால் தெளிவான ஆதாரம் என்னவென்றால் இது போன்ற குறிப்புக்களை அவர்கள் சொல்லியிருப்பது, தேர்தல் நடத்தப்பட்டால், பயங்கரவாத சம்பவத்தின் பின்விளைவால் ஸ்பெயினில் செய்ததைப்போல் மக்கள் ''தவறான'' வழியில் வாக்களித்துவிடக்கூடும் என்பதற்காக தேர்தலை தள்ளிவைப்பது, இரத்து செய்வதையேயாகும்.

அமெரிக்க சமுதாயத்தின் சமூக உள் முரண்பாடுகள்

புஷ் நிர்வாகம், வெளிநாட்டிலிருந்து தூண்டிவிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தலால் நவம்பர் தேர்தலை தள்ளிவைப்பதை நோக்கமாக கொண்டிருக்கவில்ல்லை. உண்மையான காரணம் ஜனநாயக உரிமைகள் மீதான முன்கண்டிராத அச்சுறுத்தலானது, அமெரிக்க சமுதாயத்தினுள் சமூக மோதல்களையும் முரண்பாடுகளையும் உருவாக்கியுள்ளது. ஜனாதிபதி தேர்தலை தெளிவாக புறக்கணிக்க கருத்துகொண்டுள்ள அரசாங்கத்தின் உண்மை எதை அர்த்தப்படுத்துகின்றது என்றால், இன்றையதினம் அமெரிக்க முதலாளித்துவ ஜனநாயக கட்டுக்கோப்பு வெறுமனே ஒரு குறிப்பிட்ட அரசியல் எல்லை கோட்டிற்கு மட்டுமன்றி, வரலாற்று அடிப்படையில் ஒரு தேக்க நிலைக்கும் வந்திருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டு இரத்தக்களரியின் வரலாறு அடிக்கடி எடுத்துக்காட்டி வந்திருப்பது போல், சமூக கொந்தளிப்புக்களும் மோதல்களும் பாரம்பரிய அரசியல் சட்ட கட்டுக்கோப்பினால் தீர்த்து வைக்கமுடியாத நிலைக்கு செல்லும்போது முதலாளித்துவ ஜனநாயகம் போலீஸ் இராணுவ சர்வாதிகாரம் மற்றும் பாசிசமாக கூட உருவெடுக்கின்றது. அத்தகைய ஒரு நிலவரம் அமெரிக்காவிற்குள் இன்றைய தினம் உருவாகிக்கொண்டிருக்கிறது. வேறு எந்த முன்னேறிய நாடுகளையும் விட அமெரிக்காவில் அதி பணக்கார செல்வந்த தட்டியினருக்கும், பரந்த வெகுஜன உழைக்கும் மக்களுக்குமிடையேயான சமூக இடைவெளி விசாலமாகவும், ஆழமாகவும் உருவாகியுள்ளது.

தேர்தல்கள் ரத்து செய்வதற்கான அச்சுறுத்தல் அமெரிக்காவின் அண்மைக்கால அரசியல் வரலாற்றின் உள்ளடக்கத்திற்குள்ளேயே கட்டாயம் காணப்பட வேண்டும். இது பாரம்பரிய ஜனநாயக நெறிமுறைகளின் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பண்பிடப்படுகிறது. இந்த காலகட்டத்தின் மையமான அம்சம் என்னவென்றால், குடியரசுக்கட்சியை பாசிச நோக்குள்ள சக்திகள் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் உள்நாட்டில் தனியார் செல்வத்தை குவிப்பதற்கான எல்லாத்தடைகளையும் நீக்கவும் உலகம் முழுவதிலும் அமெரிக்க இராணுவ வலிமையை பெருக்குவதற்குமான அவர்களின் திட்டத்திற்கு தேர்தல்முறையையே சகித்துக்கொள்ள முடியாத தடையாக கருதுகின்றனர். இலாப அமைப்பு முறையைப் பாதுகாக்கவும் பெருநிறுவன செல்வந்தத் தட்டுக்களின் நலன்களைப் பாதுகாக்கவும், அதேபோல் அர்ப்பணித்துக்கொண்டுள்ள பல்லில்லாத மற்றும் பலவீனமான ஜனநாயகக் கட்சியிலிருந்து உத்தியோகப்பூர்வமாய் அங்கீகரிக்கப்பட்ட எதிர்ப்பு வருகின்ற நிலைமையிலும்கூட, அத்தகைய கொள்கைகளை ஜனநாயகரீதியாக நிறைவேற்றுவது என்பது இயலாததாகும்.

1990களின் நடுவில் இருந்து திட்டமிட்டு பணியாற்றிவரும் இந்த தீவிர வலதுகள், முதலில் கிளிண்டன் நிர்வாகத்தை சீர்குலைத்தும், ஸ்டார் புலன் விசாரணை மூலம் அதைத் தொடர்ந்து நடைபெற்ற பதவி நீக்க விசாரணை மற்றும் செனட் விசாரணை மூலம், கிளிண்டன் நிர்வாகத்தை வெளியேற்றினார்கள். அதற்குப்பின்னர் 2000த்தில் நடைபெற்ற தேர்தலை கடத்திச்சென்ற, புளோரிடா நெருக்கடியில் இறுதியாக உச்சநீதிமன்றம் தலையிட வேண்டியாதாயிற்று.

இதுபோன்று பகிரங்கமாக 2004 தேர்தல்களை தள்ளிவைக்கும் திட்டங்கள் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களின் நோக்கங்கள் குறித்து யாரும் சந்தேகிக்க வேண்டியதில்லை: 2004 வாக்குப்பதிவை தள்ளிவைப்பதானது தேர்தலை இரத்து செய்வதேயாகும். ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் வெள்ளை மாளிகையில் காலவரையின்றி அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பார்.

இந்த நிகழ்ச்சிபோக்கு குறிப்பிடத்தக்க தெளிவானது: முதலில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை நாசமடையசெய்தார்கள், மக்களது வாக்குப்பதிவில் தோல்வியடைந்த ஒருவரை ஜனாதிபதியாக அமர்த்தினார்கள், இப்போது, வாக்குப்பதிவு நடத்தாமலேயே, வாஷிங்டன் தனது பாணியில் ஆட்சி கவிழ்ப்பு மூலம் கைப்பற்ற பார்க்கின்றது.

2001 செப்டம்பர் 11ல் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றதை ஒரு சாக்கு போக்காகக்கொண்டு எடுக்கப்பட்ட அனைத்து அடக்குமுறை நடவடிக்கைகளின் இறுதிக்கட்டம்தான் 2004 தேர்தலுக்கு முடிவு கட்டுவதற்கான இந்த அச்சுறுத்தலாகும்: தேசபக்தி சட்டம் நிறைவேற்றப்பட்டது, உள்நாட்டு பாதுகாப்புத்துறை ஸ்தாபிக்கப்பட்டது, வடக்கு இராணுவ தளம் உருவாக்கப்பட்டது. (அமெரிக்காவிற்கு உள்ளேயே எல்லா மாநிலங்களையும் உள்ளடக்கிய) அமெரிக்க இராணுவமும் சீ.ஐ.ஏ வும் கைதுசெய்கின்ற கைதிகளை அடைப்பதற்கு உலகம் முழுவதிலும் சங்கிலித் தொடர்போன்ற சிறைமுகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளன, இந்த முகாம்களிலும் ஈராக்கில் உள்ள இராணுவ சிறைகளிலும், சித்ரவதைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நூற்றுக்கணக்கில் புஷ் நியமித்துள்ள நீதிபதிகள் நிறைந்த நீதிமன்றங்கள் மீது இன்னும் தீவிரமான சிவில் உரிமைகளை மீறுகின்ற நடவடிக்கைகளை ஆதரிக்குமாறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

சட்ட சபை அலுவலகம் தற்போது தேர்தல்களை தள்ளி வைப்பதற்கு உள்ள அரசியல் சட்ட மற்றும் சட்டவிதிகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறது. இதே அமைப்புத்தான் இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு தயாரித்து தந்த 50 பக்க குறிப்பில், புஷ் நிர்வாகம் ''பயங்கரவாதத்தின் மீதான போரில்'' கைதிகள் மீது சித்தவதைகளை பயன்படுத்தலாம் என்ற திட்டத்தை வழங்கியது. சட்டசபை அலுவலகம் ''தலைமை தளபதி'' என்கிற முறையில் போர்காலத்தில் அந்த அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்று அறிவித்து, அவர் சட்டத்திற்கு மேம்பட்டவர், நீதிமன்றங்களோ அல்லது நாடாளுமன்றம் இயற்றிய சட்டமோ அவரை என தெரிவிக்கின்றது.

வெறும் சட்ட ஆய்விற்கு மேற்பட்ட தயாரிப்புகள் நடைபெற்றக் கொண்டிருக்கின்றன என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. செயலூக்கமான அவசர திட்டத்தில் பல்வேறு கூட்டாட்சி போலீஸ் அமைப்புக்களையும், ஈடுபடுத்தவது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் உள்நாட்டு பாதுகாப்பு துறையைச்சார்ந்த மத்திய அவசரகால நிர்வாக அமைப்பு (FEMA) 2004 சிவில் உள்நோக்கு வெள்ளோட்டத்தை நடத்தியது. வாஷிங்டன் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தால், என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து 100க்கு மேற்பட்ட இரகசிய இடங்களில் 4000 மத்திய அதிகாரிகள் அணிதிரண்டு இந்த பயிற்சியை நடத்தினர். அமெரிக்காவிற்குள் வெகுஜன அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அவசரகால நிர்வாக அமைப்பு நீண்டகாலமாக முன்னணி வகித்து வருகின்றது. ரீகன் சகாப்த திட்டத்தில் ஆப்ரேஷன் ஸிணிஙீ-84 என்ற இரகசிய நடவடிக்கைகள் மூலம் நிக்கரகுவா மீது அமெரிக்கா போர் தொடுத்த போது பல்லாயிரக்கணக்கான அமெரிக்காவில் குடியேறியுள்ள மத்திய அமெரிக்க மக்களையும், போர் எதிர்ப்பு செயலூக்கர்களையும் கைது செய்வதற்கு இந்த அமைப்பு திட்டமிட்டது.

நியூஸ்வீக் வெளியிட்டுள்ள கட்டுரை புஷ் நிர்வாகத்தினால் திட்டமிட்டு கசியவிடப்பட்ட தகவலாகும் என்பது தெளிவாகிறது. தேர்தல் இரத்து செய்யப்பட்டால், ஊடகங்களும், பொது மக்களும் எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்ளக்கூடும் என்பதை சோதித்துப்பார்ப்பதற்காக இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த சுருக்க அறிக்கையின் ஆசிரியரான மைகல் இஸ்கோஃப், கிளின்டனுடனான உறவு பற்றிய லிவின்ஸ்கியின் பேச்சை பதிவு செய்த லின்டா றிப் மற்றும் சுயாதீன சட்ட ஆலோசகர் கெனத் ஸ்டாரின் அலுவலகத்தையும் இணைக்கும் இடைத் தரகராக சேவை செய்ததன் மூலம் லிவின்ஸ்கி சம்பவத்தில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவராவார்.

நாடாளுமன்ற குடியரசுக் கட்சியின் முன்னணி உறுப்பினர்களில் ஒருவரான கலிஃபோர்னியாவை சேர்ந்த கிறிஸ்டோபர் காக்ஸ் இந்த பிரச்சனையில் சாதகமாக கருத்து தெரிவித்திருக்கிறார், இது முற்றிலும் சட்டநுட்ப பிரச்சனை என்று கூறியிருக்கிறார். ஞாயிறு இரவு தொலைக் காட்சியில் பேட்டி வழங்கிய அவர், நியூயோர்க் நகர அதிகாரிகள், 2001 செப்டெம்பர் 11ம் திகதி நடத்தப்படவிருந்த முதன்மை தேர்தலை ரத்து செய்து பின்னர் அதை வேறு ஒரு நாள் நடத்தியதாக சுட்டிக்காட்டினார்.

''மத்திய தேர்தல்களைப் பொறுத்தவரையில் அதனைச் செய்வதற்கான அதிகாரத்தை ஒருவரும் பெற்றிருக்கவில்லை. ஆகையால், எனக்கு சட்டரீதயான குறிப்பொன்றைத் தாருங்கள், என்ன தேவை என என்னிடம் தெரிவியுங்கள், நாம் காங்கிரஸிற்கு சென்று ஒரு சட்டத்தை இயற்ற வேண்டுமா? என செயலாளர் ரிஜ் சட்டத்துறை திணைக்களத்திடம் கேட்கின்றார்.

இதுவரை இந்தப் பிரச்சனையில் ஜனநாயகக்கட்சியும் ஊடகங்களும் மேற்கொண்டுள்ள நிலைப்பாடு குறிப்பிடத்தக்கது. ஊடகங்கள் அந்த செய்தியை மிக குறைத்தே வெளியிட்டிருக்கின்றன. பத்திரிகைகள் சிறிய குறிப்பு செய்தியோடு நிறுத்திக்கொண்டன. நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் போன்ற பெரிய பத்திரிகைகளில் அந்த செய்தி வெளியிடப்படவில்லை. இந்த அசாதாரணமான வேண்டுகோலை, நடக்கவுள்ள அபாயகரமான சம்பவத்திற்கு தயாராகும் வகையில் மேற்கொள்ளப்படும் திட்டம் --எந்தவொரு அரசியல் முக்கியத்துவமும் இல்லாத ஒரு அதிகாரத்துவ வழிமுறை-- எனக் கருதும் தொலைக்காட்சி செய்தி அறிக்கைகள் மிகவும் அக்கறையற்றுக் காணப்படுகின்றன.

புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொண்டோலீசா ரைஸ் சீ.என்.என் சேவைக்கு பேட்டி வழங்கிய போது, நியூஸ் வீக் தகவல் பற்றி அவரிடம் கேள்வியெழுப்பிய நிகழ்ச்சி அறிவிப்பாளர் வுல்ஃப் பிலிட்ஸருடன் வாக்குவாதப்பட்டார். அவரது பேச்சு முன்னதாகவே தயார்செய்யப்பட்டதாகத் தோன்றியது. நவம்பர் தேர்தலை இத்து செய்யும் அபிப்பிராயம் புஷ் நிர்வாகத்திற்கு இல்லை என ரைஸ் தெரிவித்த பின்னர், பிலட்ஸர் வேறு விடயங்களுக்கு மாறினார்.

கெர்ரி எட்வாட்ஸ் தேர்தல் பிரச்சாரத்தில் அதிகாரபூர்வமாக எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. உண்மையிலேயோ அல்லது கற்பனையோ, பயங்கர சம்பவம் எதுவும் நடந்துவிடுமானால் அதுவே விவாத்திற்குரிய பிரச்சனையாக ஆகிவிடும் என்று கருதுகிறார்கள். கெர்ரி இதைப்பற்றி இப்போது கருத்து தெரிவிப்பதற்கு இன்னும் காலம் கனியவில்லை என்று கூறினார்.

நாடாளுமன்ற முன்னணி ஜனநாயகக் கட்சிக்காரர்களும் அதுபற்றி மிகுந்த உற்சாகத்தோடு கருத்து தெரிவிக்கவில்லை. உள்நாட்டு பாதுகாப்புக்குழு உறுப்பினரும் கீழ்சபை உறுப்பினருமான எட்வார்ட் மார்க்கி, தேர்தலுக்கு முந்தைய பயங்கரவாத தாக்குதலை தடுப்பது நல்லது, அதற்காக திட்டமிடுவது பயனளிக்கும் என்று கூறினார்.

இதுபோன்ற கருத்துக்கள், 2000 டிசம்பரில் புஷ் எதிர் கோர் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஜனநாயகக் கட்சி அடிபணிந்ததை அடுத்து சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) வெளியிட்ட எச்சரிக்கையை நியாயப்படுத்துகின்றன. ஆளும் வர்க்கத்திற்குள் ஜனநாயக உரிமையை தற்காத்து நிற்கும் எவரும் இல்லையென்றும், ஆளும் கும்பல் இப்போது ஜனநாயககத்தை தனது செல்வத்திற்கும் சலுகைகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாகவே கருதுகின்றது எனவும் அது சுட்டிக்காட்டியிருந்தது.

சோ.ச.க இரண்டு மாதங்களுக்கு முன்னர் 2004 தேர்தல் நடைமுறைகளில் ஜனநாயக விரோத ஆத்திரமூட்டல்களின் ஆபத்துக்களைப் பற்றி கலந்துரையாடியது. ஏப்ரல் 28 பிரசுரிக்கப்பட்ட "2004 அமெரிக்கத் தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியை ஆதரியுங்கள்" என்ற தலைப்பிலான எமது தேர்தல் அறிக்கையில் கீழ்கண்டவாரு விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையில்;

''புஷ் தன்னைத்தானே போர்கால ஜனாதிபதி என்று பிரகடனப்படுத்திக்கொண்டு தனது அரசியல் வாழ்விற்கு துணைதேட முடிவுசெய்திருப்பது அமெரிக்க மக்களுக்கு மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். புஷ் நிர்வாகம் விருப்பத்தோடு தனது பதவியிலிருந்து மக்களது உணர்வுகளுக்கு கட்டுப்பட்டு வெளியேறும் என்று அனுமானிப்பதற்கு எந்தவிதமான அடிப்படையும் கிடையாது. 2004 தேர்தல் பிரச்சாரத்தில், நடப்பு நிர்வாகம், குறிப்பாக புஷ்ஷின் தேர்தல் வெற்றி வாய்ப்புக்கள் மோசமாகும் போது, அமெரிக்காவிற்குள் புதிய நாசம் விளைவிக்கும் பயங்கரவாத தாக்குதலை அனுமதிக்கும் அல்லது தூண்டிவிடக்கூடச் செய்யும். இது நடக்கும். ஏற்கனவே அமெரிக்க ஊடகங்களில் கோடிட்டுக்காட்டப்பட்டிருக்கிறது. இத்தகைய தாக்குதல் எதுவும் நடக்குமானால் நவம்பர் 2 தேர்தல் தள்ளிவைக்கப்படலாம் அல்லது இரத்து செய்யப்படலாம் அல்லது இராணுவ சட்ட நிர்வாகத்தில் தேர்தல்கள் நடத்தப்படலாம்," என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் தன்னிறைவைப் போல் ஆபத்தானது வேறு ஒன்றும் இல்லை. தேர்தலை தள்ளிவைப்பதும் இரத்துசெய்வதும் ஒரு சட்ட நுட்ப பிரச்சனையல்ல. இந்த நடவடிக்கை, ஜூலியட் சீசர் ரூபிகனை கடந்தது, ரோமானிய குடியரசிற்கு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியதோ, அதே அளவிற்கு அமெரிக்க ஜனநாயகத்தின் தலையெழுத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். இது மீண்டும் திரும்பிவர முடியாத வழிமுறையையும், ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு விதிகளை முற்றாக நிராகரிப்பதையுமே பிரதிந்திநிதித்துவம் செய்கின்றது. இது, பொலிஸ் ராஜ்ஜியம், சர்வாதிகாரம் மற்றும் உள்நாட்டு யுத்தத்தையும் நோக்கி திரும்புவதேயாகும்.

தொழிலாளர் வர்க்கத்திடையே அரசியல் விழிப்புனர்வின்மையும் மற்றும் தயாரற்ற நிலமையும் காணப்படுவது பெரும் ஆபத்தானதாகும். தொழிலாளர் வர்க்கத்தை சுயாதீனமான அரசியல் சக்தியாக ஒழுங்கமைக்க முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் மூலமே இது வெற்றிகொள்ளப்பட முடியும். கம்பனி மற்றும் பெரும் செல்வந்தர்களின் கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் மற்றும் குடியரசுக் கட்சிக்கும் எதிராக, ஒரு நேர்மையான அரசியல் பதிலீட்டைக் கட்டியெழுப்புவது மிக முக்கியமானதாகும். இங்குதான் 2004 தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுக்கும் அரசியல் பிரச்சார இயக்கத்தின் முக்கியத்துவம் தங்கியிருக்கிறது.

Top of page