World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Ronald Reagan (1911-2004): An Obituary

ரோனால்ட் றேகன் (1911-2004): ஒர் இரங்கல் செய்தி

By David North
9 June 2004

Use this version to print | Send this link by email | Email the author

பெருங்கோமகனார்! நடக்க முடியாதது! என்ன, மடிந்துவிட்டாரா?

மிகவும் வயதான காலத்தில், அதுவும் தன்னுடைய படுக்கையிலேயே!...

மனச்சான்றின்படியே அவர் மடியும் நேரம் வந்துவிட்டது!

இவ்வுலகில் அவர் நீண்ட நாள் இருந்தது போதும்:

அவருடைய மெழுகுவர்த்தியை முற்றிலும் ஊதி அணைத்துவிட்டார்;

ஆம், அதுதான் காரணம், சிலர் கருதுகின்றனர்,

அவர் மிகப்பெரிய துர்நாற்றத்தை விட்டுச்சென்றாரென "

ஜோநாதன் ஸ்விப்ட், A Satirical legy on the Dealth of a Late Famous General என்பதிலிருந்து

ரோனால்ட் றேகனுடைய மரணம் தவிர்க்க முடியாமல், இறுதியில் வந்தபோது, அமெரிக்காவின் நாற்பதாவது ஜனாதிபதிக்கு மிக இனிப்பான, பெருமளவு புகழாரங்கள் வழங்கப்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டதேயாகும். ஆனால் நேர்மையற்ற, அவநம்பிக்கை மிகுந்த, அயோக்கியத்தனமான, முட்டாள்தனமான பிரச்சாரத்தை செய்தி ஊடகமும், அரசியல் ஸ்தாபனமும் வெளிப்படுத்திக் காட்டியமை நிரபராதியாக வேடிக்கை பார்க்கும் நபரை வியப்பில்தான் ஆழ்த்தியது. ஈராக்கிலிருந்து தொடர்ச்சியாக கெட்ட செய்திகளே குவிந்து வந்த வண்ணம் இருந்தநிலையிலும், உலகின் ஏனைய பகுதிகளில் இருந்தும் அதேபோன்ற நிலைதான் இருந்ததால், புஷ் நிர்வாகமும் செய்தி ஊடகத்திலுள்ள அதன் நண்பர்களும் பேச்சை மாற்ற ஏதேனும் வழிவகை கிடைக்காதா என்பதுடன் நாட்டின் துயரந்தோய்ந்த, பெரும் வருத்தம் உள்ள மன நிலைக்கு மாற்று கிடைக்காதா எனக் கவலைப்பட்டனர். D-Day இன் 60 வது நினைவு நாள் இத்தகைய மாற்றத்திற்கு தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால் சரியான நேரத்தில் றேகன் இறந்தமை இன்னும் கூடுதலான முறையில் செய்தி ஊடகம் அளிக்கும் தனிமனிதத் துதிபாடல், கொடியாட்டல், புனைந்துரைகள் இவற்றை வெடிப்பு மிக்க முறையில் கொடுப்பதற்கு ஒரு வாய்ப்பை அளித்தது.

அமெரிக்க செய்தி ஊடகம் முற்றிலுமாகத் திரட்டப்பட்டு அக்குவியலில் வெளிப்படுத்தப்படும் காட்சி அருவருப்பானகாட்சி என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். சனிக்கிழமையன்று றேகனுடைய மரணம் அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்தப் பிரச்சார இயந்திரத்தின் மகத்தான சுமை உருளத்தொடங்கி, ஒரு பெரிய வரலாற்றுப் பொய்யுரையை வளர்க்கும் செயல் நிகழ்ந்தது. றேகன் நிர்வாகம் பற்றிய ஆண்டுகளுக்கு காற்றலை மெருகேற்றல் மூலம் தற்கால வடிவு தீட்டப்பட்டது. றேகனுடைய கொள்கைகளினால் அமெரிக்காவில் ஏற்பட்ட சமூக வறுமை, இவருடைய அரசாங்கம் சட்டவிரோதமாக நிதியுதவி செய்ததின்மூலம் அமைக்கப்பட்ட பாசிச கொலைகாரப் படையினரின் தாக்குதலினால் மத்திய அமெரிக்காவில் உயிர் இழந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், அமெரிக்க வரலாற்றின் 20ம் நூற்றாண்டிலேயே மிகப்பெரிய ஊழல் நிறைந்திருந்த, குற்றங்கள் மலிந்திருந்த அரசாங்கம், இவை அனைத்தும், இன்னும் இதேபோன்ற துர்நாற்றம் வீசும் பல விவரங்கள் மறைக்கப்பட்டு விட்டன. தென்னாபிரிக்காவில் அவர் நிறப் பிரிவினையை ஆதரித்தமை, பல வலதுசாரி சர்வாதிகாரங்களுக்கு நிதி கொடுத்தமை, ஜேர்மனியில், பிட்பேர்க்கில் ஓரு மயானத்தில் புதைந்து கிடக்கும் SS (நாசிக் கட்சியின் விசேட போலிஸ் படையினர்) படையினருக்கு அவர் கொடுத்த புகழாரம் ஆகியவற்றைப்பற்றி இப்பொழுது கேள்விப்பட முடியாது. றேகனுடைய வாழ்வு, அரசியல் போக்கு இவை பற்றி பொதுநிலை மதிப்பீட்டை செய்தி ஊடகம் அடக்குவதோடு மட்டும் இல்லாமல், இவருடைய நிர்வாகத்தின் கொள்கை பற்றிய விரும்பத்தகாத கூறுபாடுகளைப் பற்றிய குறிப்புக்களைக் கூட தடை செய்துவருகிறது.

இத்தகைய இடைவிடா பிரச்சாரத்தின் நோக்கம், தவறான கருத்துக்களைக் கூறுவதும், குழப்புவதும் மட்டுமல்லாமல், மக்களுடைய கருத்தை அச்சுறுத்தலுக்கு உட்படுத்துதலும்தான், அதாவது றேகனையும் அவர் சார்ந்திருந்த அனைத்தையும் வெறுத்த அமெரிக்கர்களிடையே ஓர் அரசியல் சமுதாய ஒதுங்கும் உணர்வை ஏற்படுத்துதலும், அவர்களுடைய உள்ளத்தில் அவர்கள் கொள்ளும் தீர்மானங்கள் பற்றி ஐயப்பாடுகளை விதைத்து, அது முடியாவிட்டால் அமெரிக்கா பற்றி மாற்றுக் கருத்துக்கள் கூறக்கூடாது என்ற கருத்தையாவது பதியவைக்க வேண்டும் என்பதும்தான்.

ஆனால் இந்ந முழுவிவகாரமும் --ஐந்து நாட்கள் அதிகாரபூர்வ துக்கம், ஓர் அரசாங்க மரியாதையுடனான நல்லடக்கம்-- என்பது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடவில்லை. திங்கள் காலை பள்ளிகளிலும், அலுவலகங்களிலும், ஆலைகளிலும், ஒரு குறிப்பிடத்தக்க மகத்தான மனிதர் மறைந்து விட்டார் என்று குடிமக்கள் நினைத்ததற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லை; தனிநபர்களாகவும், மக்கட்திரளாகவும் ஒரு பெரிய இழப்பிற்கு ஆட்பட்டுவிட்டோம் என்ற நினைப்பில் இருந்தததாகவும் தெரியவில்லை. ரூஸ்வெல்ட்டின் மரணத்தை நினைவுபடுத்திக் கொள்ளக் கூடிய வயதில் இருந்தவர்களுக்கு, கென்னடியின் மரணம் ஒருபுறம் இருக்க, இந்த மாறுபட்ட தன்மை பெரும் விந்தையாகத்தான் இருந்திருக்கும். ஆம், இம்மனிதர்களும், முதலாளித்துவ அரசியல்வாதிகள்தாம், இருக்கும் சமுதாய அமைப்பைக் காத்திட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தவர்கள்தாம். ஆனால் ரூஸ்வெல்ட்டும், கென்னடியும் உண்மையான, உணர்வுபூர்வமான குரலை, அவர்களுடைய அரசியல் வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட அமெரிக்க சமுதாய தட்டுகளின் அபிலாஷைகளுக்காக கொடுத்திருந்தனர்; இதையொட்டி ஆழ்ந்த முறையில் அவர்கள் மக்களிடமிருந்து பாசத்தை வென்றனர். அவர்கள் மறைந்த போது உண்மையான கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.

ஆனால் பெரும்பாலான சாதாரண மக்களைப் பொறுத்தவரையில், ரோனால்ட் றேகனின் மரணம் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வே அல்ல. அவர்களுடைய உணர்வில் எவ்விதமான பங்கும் இந்த நிகழ்விற்கு இல்லை. அவர் ஆல்ஷெய்மர் (Alzheimer) நோயினால் அவதிப்படுகிறார் என்ற செய்தி வந்த பின், பொது மக்கள் பார்வையில் இருந்து பத்து ஆண்டுகளுக்கும் மேல் மறைந்திருந்தார் என்பதால் மட்டும் இக்கருத்து எழவில்லை. மிக அதிகான உழைக்கும் மக்கள் "றேகனாமிக்ஸ்" என்று வழங்கப்பட்ட இவருடைய பொருளாதாரக் கொள்கைகளினால் தங்கள் வாழ்வு எவ்வாறு பாதிக்கப்பட்டது என்று இன்னமும் நினைவில் கொண்டுள்னர்; அதுவும் முற்றிலும் தீயவிளைவுகளையே அது ஏற்படுத்தியது. உண்மையில், உழைக்கும் வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் இடையே ஹெர்பர்ட் ஹூவருக்கு (Herbert Hoover) அடுத்து மிகவும் வெறுக்கப்பட்ட ஜனாதியதியாகத்தான் றேகன் இருந்தார். றேகனுடைய கருத்துக்களுக்கு மத்திய தர வர்க்கத்தின் ஆதரவும், தொழிலாளர்களில் வசதி பெருகியவர்களுடைய ஆதரவும் இருந்தபோதிலும்கூட, றேகனுக்குக் கொடுக்கப்படும் கூடுதலான புகழ் ஒரு செயற்கைத் தன்மை வாய்ந்தது; செய்தி ஊடகத்தால் கட்டுக் கதையாக புனையப்பட்டு, அவருடைய நிர்வாகம் பற்றிய கொள்கைகளை யதார்த்தத்தில் இல்லாத ஒரு ஒளிவட்டத்துடன் பகிரங்க அங்கீகரிப்புக்காக காட்டப்படுவது மேலோங்கி இருக்கிறது.

ஆளும் வர்க்கத்தின் நோக்கங்களுக்காக செய்தி ஊடகம் வரலாற்றில் இருந்து தேவையான கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொள்ளுவதால், 1980கள், 1940களுக்கு பின்னர் மிகக் கடுமையான வர்க்கப் போராட்ட நிகழ்வுகளைக் கண்ட தசாப்தம் என்ற குறிப்பு வெளியிடப்படவில்லை. றேகன் நிர்வாகம் அதிகாரத்தில் இருந்தபோது முதல் ஆண்டில் கையாண்ட நடவடிக்கைகள், சமூக நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தொகையைப் பெரிதும் குறைத்தது, ஆகஸ்ட் 1981 லிருந்து வேலைநிறுத்தத்தில் இருந்த 12,000 விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளை பதவி நீக்கம் செய்தமை ஆகியவை மில்லியன் கணக்கில் தொழிலாளர்களை சீற்றத்திற்கு உள்ளாக்கிவயவை ஆகும். புதிய நிர்வாகத்தின் சமூக தத்துவம் அதன் துயரம் நிரம்பிய வெளிப்பாட்டை, பள்ளி மதிய உணவுத்திட்டத்தில் துவையலை காய்கறி என்று வரையறுத்துக்கூறியதில் கொண்டிருந்தது. 1981 செப்டம்பரில் கிட்டத்தட்ட முக்கால் மில்லியன் தொழிலாளர்கள் வாஷிங்டனில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதற்கும், PATCO என்ற விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சங்கத்தின் அழிப்பை எதிர்த்தும் ஆர்ப்பரித்தனர். கிட்டத்தட்ட ஒவ்வொரு தொழில்துறையுமே கசப்பான, பலநேரமும் வன்முறை சார்ந்த வேலை நிறுத்தங்களை சந்தித்தன; தொழிலாளர்கள் றேகன் நிர்வாகத்தின் வர்க்கப் போர்க் கொள்கைகளுக்கு எதிராக உறுதியுடன் போராடினர்.

ஆனால் இப்பொழுது மறைந்த ஜனாதிபதிக்குக் கொடுக்கப்படும் புகழாரங்களில் அந்த வரலாறு இடம் பெறவில்லை. றேகனுக்கு வழங்கப்படும் மரியாதைகள், சாராம்சத்தில் அவர் பணக்காரர்களுக்கு ஆற்றிய சேவை பற்றிய திருவிழா போன்றவை ஆகும். அவருடைய நிர்வாகத்தின் மிகமுக்கியமான இலக்கு தனியார் சொத்துக் குவிப்பிற்கு சட்டபூர்வ தடைகள் அனைத்தையும் அகற்றுதல் என்பதாகும். றேகன் நிர்வாகத்தின் கோட்பாடு, 19ம் நூற்றாண்டின் இழிபுகழ்பெற்ற பிரான்சின் லூயி பிலிப் இன் ஊழல்மலிந்த அரசாங்கத்தின் இலக்கு போலவே, "உன்னைச் செல்வந்தராக்கிக் கொள்" என்பதாகும். செல்வந்தருக்கான வரிகளை, 70 சதவிகிதத்தில் இருந்து 28 சதவிகிதம் எனக் குறைத்தது, ஜனாதிபதிக்கு நன்றியுடைய செல்வந்தரின் வரம்பிலடங்காத பற்றை தேடிக்கொடுத்தது. வரிவிதிப்புக்களில் மிகப்பெரிய குறைப்பு, சமுதாய இழிவிற்கும் 1980களில் செல்வந்தர்கள் களிநடனம் புரிந்து நின்றதற்கும் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருந்தது. மைகேல் மில்கென், இவான் போஸ்கி, டோனால்ட் டிரம்ப் (இவர் மீண்டும் வருவதற்கு முயற்சி செய்கிறார்), ஆகியோருடைய தசாப்தம் அது; மற்றும் கற்பனையுலகின் கார்டன் கெக்கோ, "பேராசை நல்லது" என்று அறிவித்தது அப்பொழுதுதான்.

"தொடர்பு கொள்ளுவதில் வல்லவர்" என்று றேகன் முடிவில்லாமல் புகழப்படுகிறார். இந்த அடைமொழி அவர் மீது செய்தி ஊடகத்தை கட்டுப்படுத்தும் மேம்போக்கினரால் வழங்கப்பட்டது; அவர்கள் தங்களைப் பற்றிய புகழுரையை ஜனாதிபதி வாயிலிருந்து வரவேண்டும் என்பதில் பேருவகை கொண்டவர்கள். றேகனுடைய ஒரு மாதிரி உரை, வெற்றாகவும், பயனற்றும், உளறல் நிறைந்ததும், பொருளற்றதுமாக அன்றாடம் அமெரிக்காவின் மாரியட்டுக்கள், ஹையட்டுக்கள், ஹில்டன் உணவு விடுதிகளில் பொடிமாஸ் உருளை, கோழிக்குஞ்சின் மார்புடன் வழங்கப்படும் ஆவேச உரையாற்றுபவர்களின் வியாபார உரைகளுக்கு ஒப்பாகத்தான் இருக்கும். இதேபோன்ற சோல்லாட்சிதான் றேகன்போல் தோற்றத்திலும் அறிவுத்துறையிலும் பெரிதும் ஒத்திருந்த 29 வது ஜனாதிபதியான வாரன் ஹார்டிங்கிடமும் காணப்பட்டிருந்தது; அவரை நாடே எள்ளி நகையாடிற்று.

ஆனால் றேகன் எத்தகைய மனிதராக இருந்தார்? அவரைப் பெரும் ஆர்வத்துடன் போற்றுபவர்கள்கூட, அவருடைய ஆளுமை, குணநலனில் தனித்திருந்தது, மிகச்சிறந்தது என்று எதையும் பிரித்துக் கூறமுடியாத கூறுபாடுகளைத்தான் அவர் கொண்டிருந்தார். அவருடைய அதிகாரபூர்வமான வாழ்க்கை சரிதத்தை எழுதிய எட்மண்ட் மோரிஸ், பொதுத் தோற்றத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மையான றேகனைக் கண்டுபிடிக்கத் திணறிப் போன நிலையில் கற்பனை எழுத்தாளர்கள் கையாளும் உத்தியைக் கடைப்பிடிக்க நிர்பந்திக்கப்பட்டார்.

அவருடைய வாழ்க்கைநூலை எழுதியவர் எழுத வேண்டிய பொருளின் வெற்றுத் தன்மையைக் கண்டு குழம்பிப்போனார். உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால் றேகனுடைய திரைப்படங்கள் ஏதேனும் ஒன்றைப் பாருங்கள். வெகு சாதாரணமான நடிப்பை மட்டும் வெளிப்படுத்தும் நடிகரிடம் சிறிதும் படைப்பாற்றல் கற்பனை இராது. அவருடைய நடிப்பின் மிகக் குறிப்பிடத் தக்க அம்சம் சிறிதுகூட உணர்வின் ஆழத்தைக் காட்டாமல் இருப்பது ஆகும். சற்றுக் கூடுதலான உணர்வுடைய, பரிவுடைய நபர் தன்னுடைய வாழ்விலேயே, குடிகாரத் தகப்பனின் மகன், ஒரு சிறிய புழுக்கம் நிறைந்த சிறு நகரமான இல்லினாய்ஸ், டிக்சனிலேயே வளர்ந்து, பெரும் நிதிச்சுமையினால் வரும் அழிவை எதிர்நோக்கியிருத்தல், இவற்றிலேயே மனிதக் குமுறல்கள் பற்றி வியத்தகு உள்ளறிவைப் போதுமான வகையில் பெற்றிருப்பார். றேகனோ வெளிப்படையான உலகில்தான் வாழ்ந்திருந்தார். இவருடைய நடிப்புத் தொகுப்பில் மொத்தமாக இருந்தவை தேவைக்கேற்ப இன்ன சைகைகள் காட்டுவார் என்று உறுதியாகக் கூறக் கூடிய தன்மைதான். தன்னுடைய புருவத்தை அவர் நெறிப்பதுண்டு. கோபம் முகச் சதைகளின் இறுக்கத்தால் வெளிப்படுத்தப்பட்டது. ஓரளவு சிறுவனின் உற்சாகமும் அவரால் வெளிப்படுத்தப்பட்டது, குறைந்த பட்சம் 1940 களிலாவது. நடுவயதை நெருங்கியவுடன் றேகனுடைய நடிப்புத் தொழில் தேக்கத்தைத்தான் அடைந்தது.

ஹாலிவுட்டில் இருந்த முதல் பத்தாண்டுகளில், அவருடைய விளக்கத்தையே ஏற்றாலும், றேகன் ஒரு "hemophiliac" தாராளவாத கொள்கை வாதியாகவும் ரூஸ்வெல்ட்டிற்கு ஆதரவு கொடுப்பவராகவும் இருந்தார். தன்னுடைய அரசியல் கருத்துக்களில் ஏற்பட்ட வியத்தகு மாற்றத்தில் அவர் நம்பும்படியாக எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை; ஆனால் 1940 களின் பிற்பகுதியில் அவருடைய நடிப்புத் துறையில் சரிவு ஏற்பட்டதை அடுத்து கிளர்த்தெழுந்த உட்காயமும் சீற்றமும் அவரை மாற்றியிருக்கவேண்டும். அனைவரும் வலதுபுறம் மாறும் காலமாக அது இருந்தது; தனக்கு உரிய பாத்திரங்களை தராத உயர்நிலையை காட்டிய மேநிலை "சிகப்புச் சட்டை" இயக்குநர்கள், திரைக்கதை எழுதுபவர்களை, திருப்பி அடிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அவர் பயன்படுத்திக் கொண்டார். இதுதான் 1940 கடைசி, 1950 களின் தொடக்கங்களில் றேகனுடைய கம்யூனிசத்திற்கு எதிரான ஹாலிவுட்டின் சூனியவேட்டையில் றேகன் கொண்டிருந்த பங்கிற்கு உண்மையான பின்னணியாகும். வெளிப்படையாக பல சந்தேகத்திற்குரிய கம்யூனிசவாதிகளை அடையாளம் காட்டினார் என்பதை தான் மறுத்திருந்தாலும், இவர் இரகசியமாக FBI க்கு தகவல்கள் கொடுத்தார் என்பது திண்ணமாக முடிவாகியுள்ளது. தன்னுடைய நடிப்பில் கொண்ட தோல்வியின் விளைவாக எழுந்த கோபத்துடன் இவருக்கு, இவருடைய தனிப்பட்ட வருமானத்தில் வருமான இலாகா செய்த கெடுபிடிகளும் கூடுதலான எரிச்சலை அளித்தன. இந்த உணர்வுகள் மிகவும் உண்மையாகவும், ஆழ்ந்தும் நிலைத்து, றேகனை அவருடைய படங்களில் இல்லாத நேர்மைத்தன்மையில், 1960 களின் முதல் ஆண்டுகளில் கலிபோர்னியாவின் மத்தியதர வர்க்கத்தில் நிறைந்திருந்த பெரும் ஏமாற்றம், எதிர்ப்பு உணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்தச் செய்தன.

கலிபோர்னியாவின் கவர்னர் என்று 1966ல் தேர்ந்தெடுக்கப்பட்டபோதிலும், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதிக்கான வேட்பாளர் என்ற தகுதிக்காக இவர் முயன்றது இருமுறை தோல்வியுற்றது; 1980 ல் அம்முயற்சியில் அவர் வெற்றியடைந்தார். அப்பொழுதும் கூட, அரசியல் அளவில் அமெரிக்க தாராளவாத கொள்கை மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டும் திவாலான தன்மையில் இல்லாதிருந்தால் இவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது நினைத்தும் பார்க்கமுடியாதது ஆகும். தாராளவாதிகளையும், ஜனநாயகக்கட்சியையும் வியட்நாம் போர் தார்மீக அளவில் செல்வாக்கிழக்கச்செய்த நிலையில், 1970 களின் சீர்குலைந்த பொருளாதார நிலைமைகள் ரூஸ்வெல்ட் காலத்தில் தொடங்கி அவருக்குப் பின் வந்த ஜனநாயகக் கட்சிக்காரர்களின் நிர்வாகத்தின் அஸ்திவாரங்களை அரித்திருந்தன.

கார்ட்டர் நிர்வாகத்தின் நான்கு ஆண்டு காலத்தில், ஜனநாயகக் கட்சி சமூக சீர்திருத்தம், முன்னேற்ற நோக்கு கொண்டுள்ள கட்சி என்ற தனது எஞ்சியிருந்த புகழையும் அழித்துக் கொண்டுவிட்டது. பெரும்பாலன மத்தியதர பிரிவின் அடுக்குகள் பணவீக்கத்தால் அந்நியப்பட்டனர்; வரிவிதிப்புக்கள், சமூக நலத்திட்டங்கள்பால் எதிர்ப்பு எழுந்தது; கார்ட்டர் நிர்வாகம் வெளிப்படையாகவே தொழிலாள வர்க்கத்தின் மீது விரோதப்போக்கை கொண்டது; 1978 ம் ஆண்டின் Taft-Hartley Act ஐ பயன்படுத்தி வலிமை வாய்ந்த 1977-78 சுரங்கத்தொழிலாளர் வேலை நிறுத்தத்தை உடைக்க முயற்சித்த எடுத்துக்காட்டின் மூலம் நிரூபித்தது.

ஜனநாயகக் கட்சி அடிபணிந்து நின்றதானது 1980ம் ஆண்டு றேகன் தேர்தலில் வெற்றிபெற வழிவகுத்தது. ஆனால் இந்த நிர்வாகத்தின் வருங்கால வெற்றி AFL-CIO, United Auto Workers, மற்றும் பல தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம், சமுதாய நலன்கள், ஜனநாயக உரிமைகள் இவற்றின் மீதான தாக்குதலைத் தடுக்காமல் நாசவேலைக்குட்படுத்தியதால், ஜனவரி 1981 ல் றேகன் நிர்வாகம் பணியாற்றத் தொடங்கியது.

றேகன் நிர்வாகத்தின் முக்கியமான சோதனை, இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த முறையில் கூறவேண்டுமானால், அமெரிக்காவில் வர்க்க உறவுகள்பற்றிய திருப்புமுனை 12,000 Professional air Trafic Controllers Union (PATCO) ஆகஸ்ட் 1981ல் வேலை நிறுத்தம் செய்தபோது வந்தது. இதில் விந்தையான விஷயம், முந்தைய ஆண்டுதான் PATCO றேகன் தேர்வுக்கு தங்கள் இசைவை தெரிவித்திருந்தது; தனிப்பட்ட முறையில் ஒரு குடியரசுக்கட்சி நிர்வாகம் கூடுதலான ஊதியங்களுக்கும் நல்ல வேலைச்சூழ்நிலைக்குமான சங்கத்தின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கார்ட்டர் நிர்வாகத்தின்போதே தயாரிக்கப்பட்டிருந்த திட்டங்களின்படி, றேகன் அனைத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளையும் பணிக்கு 48 மணி நேரத்திற்குள் வராவிட்டால் பதவியிலிருந்து நீக்கிவிடுவதாக அறிவித்தார். AFL-CIO விலிருந்து தொழிலாளர் கூட்டமைப்பு பாட்கோவிற்கு ஆதரவாக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாது என்ற உறுதிமொழி றேகன் நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதற்கு தக்க காரணங்கள் உள்ளன. ஒற்றுமையுடன் செயல்பட்டு PATCO அழிவு நிறுத்தப்படவேண்டும் என்ற உணர்வு அனைத்து தொழிற்சங்கவாதியினரிடையேயும் பரவியிருந்தது. AFL-CIO தொழில்துறையில் விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு சாதகமாக நடக்குமாறு உத்திரவு இட்டிருந்தால், றேகன் நிர்வாகம் பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டிருக்கும்; அதன் விளைவாக பெரும் அழிவுத்தோல்வியை அதன் முதல் பதவிக்காலத்தின் தொடக்கத்திலேயே சந்தித்திருக்கும்.

ஆனால் ஒற்றுமையான நடவடிக்கைக்கான கோரிக்கைகள் AFL-CIO ஆல் நிராகரிக்கப்பட்டன. PATCO தலைவர்கள் நான்கு பேர் சிறைக்குப் போயினர்; கிட்டத்தட்ட 12,000 விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தங்கள் வேலைகளை இழந்தனர், தொழிற்சங்கம் அழிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைதான் மீண்டும் மீண்டும் 1980கள் முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு முன்னோடியாக இருந்தது. மிகக் கடுமையான வேலைநிறுத்தத்தில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள், எஃகுத் தொழிலாளர்கள், பஸ் சாரதிகள், விமானப் பணியாளர்கள், செப்புச் சுரங்கத் தொழிலாளர்கள், கார் தொழிலாளர்கள், இறைச்சி கட்டும் பணியாளர்கள் என்று பலரும் பலவிதமாக ஈடுபட்டிருந்தனர்; இவை ஒவ்வொன்றிலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தேசிய தொழிற்சங்கங்களால் தனிமைப்படுத்தப்பட்டனர், எந்த விதமான பயனுள்ள ஆதரவும் அவர்களுக்கு கிடைக்காமல் போயிற்று, தோல்வியைத் தழுவும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டனர். இதற்கிடையில் நாடெங்கிலும், வேலை அளிப்பவர்கள் வேலை நிறுத்தங்களை உடைக்கும் உத்திகளை முழு நம்பிக்கையுடன் கையாண்டனர்; அவர்கள் றேகன் நிர்வாகத்தின் ஆதரவு தங்களுக்கு உண்டு என்று கருதியிருந்தனர்.

1989ல் றேகன் பதவியைவிட்டு விலகியபோது, அமெரிக்க தொழிற்சங்க இயக்கம், AFL-CIO உடைய காட்டிக் கொடுப்பினால், ஒரு சமுதாய இயக்கமாகச் செயல்படுவது முடிவுக்கு வந்துவிட்டிருந்தது.

றேகன் நிர்வாகத்தின் உள்நாட்டுத் திட்டத்தின் வெற்றி பெரிதும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் காட்டிக் கொடுப்புக்களினால் ஏற்பட்டது என்றால், இவருடைய சர்வதேச கம்யூனிச எதிர்ப்புத்திட்டத்தில் மகத்தான சாதனை என்று செய்தி ஊடகம் புகழும் USSR இன் பெருஞ்சரிவிற்கும் இவருடைய நிர்வாகத்தின் கொள்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. சோவியத் ஒன்றியம் 1991 டிசம்பரில் சிதைந்து போனது, றேகன் பதவியைவிட்டு மூன்றாண்டுகளுக்கு பின்னர் நிகழ்ந்ததாகும்; USSR ஐ ஆண்டுவந்த ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள், அதன் கிழக்கு ஐரோப்பிய ஆதரவு நாடுகள் ஆகியவை அரசியலளவில் காட்டிக் கொடுத்த பல தசாப்தங்களின் துன்பகரமான உச்சக்கட்டமாகும்.

பின்னர் நிகழ்த்திய CIA இன் உளவுத்துறை பகுப்பாய்வுகள் உறுதியாக நிரூபித்துள்ளது போல், றேகன் நிர்வாகம் சோவியத் ஒன்றியத்தில் அரசியல் நெருக்கடி எந்த அளவிற்கு ஆழ்ந்திருந்தது என்பதைப் பற்றி சிறிதேனும் அறிந்திருக்கவில்லை. 1983ம் ஆண்டு "தீமை நிறைந்த பேரரசு" என்று றேகன் ஆற்றிய இகழுரை, சோவியத்தின் வலிமை பற்றி பெரிதும் மிகைப்படுத்திக் கூறப்பட்டது; அதுமட்டுமின்றி அதன் உலக பேரவாக்களை பற்றி தீய முறையிலும் கேலிக்குரிய முறையிலும் தவறாகவும் எடுத்துரைக்கப்பட்டது.

றேகனுடைய பரந்த நோக்கமும் அமெரிக்க தலைமையும் சோவியத்தின் மீது பனிப்போரில் வெற்றியைக் கொண்டது என்ற அவலமான கருத்தை தம்பட்டம் அடிப்பதில், செய்தி ஊடகம் 1980 களில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் உண்மையான முக்கியத்துவத்தை ஆராய்ந்து எழுதவில்லை. அதாவது USSR உடன் நெருக்கடியை தூண்டும் வகையிலும் வியத்தகு முறையிலும் எதற்காக அமெரிக்கா முடிவெடுத்து நடந்துகொண்டது? அக்டோபர் 1962ல் கியூப ஏவுகணை நெருக்கடி முடிந்த பின்னர், அமெரிக்க USSR உடன் நேரடியாக மோதுவதை தவிர்த்து வந்துள்ளது. இந்தக் கொள்கை நிக்சனாலும், கிஸ்ஸிங்கராலும் 1970 களின் முற்பகுதியில் அமெரிக்க-ரஷிய உறவுகளில் அதிகாரபூர்வமாக இருக்கும் நிலையை காத்தல் என்ற அடிப்படையில் விரிவுபடுத்தப்பட்டது.

இப்பொழுது வரலாற்றாசிரியர்கள் அறிந்துள்ளபடி, இப்போக்கை பின்திருப்புவதற்கான முடிவும் சோவியத் ஒன்றியத்தின்பால் கூடுதலான மோதல் அணுகுமுறையும் கார்ட்டர் நிர்வாகத்தின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்டது. 1979 கோடையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, USSR ஐ இராணுவ ரீதியாகத் தூண்டிவிடும் என்ற நம்பிக்கையில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் சோவியத் எதிர்ப்புக் கொரில்லாக்களுக்கு இராணுவ மற்றும் நிதி ஆதரவு தரப்பட்டது. றேகன் நிர்வாகம் இந்த போர்வெறிக் கொள்கையை தொடர்ந்தது மற்றும் போரைத் தீவிரப்படுத்தியது.

இப்பாதையின் போக்கு மாற்றப்பட்டதற்கு உலகப் முதலாளித்துவத்தின் கட்டமைப்பு பிரச்சினைகள் காரணமே ஒழிய கருத்தியல் போக்கு அல்ல; 1970 களில் பலமுறையும் பொருளாதார அதிர்ச்சிகள் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருந்தன. றேகன் நிர்வாகத்தின் போர்வெறிக் கொள்கை, இறுதிப்பகுப்பாய்வில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சரிந்து கொண்டிருந்த உலகப் பொருளாதார அந்தஸ்திற்கு பதில் செயற்பாடாக எழுந்ததாகும்.

றேகன் நிர்வாகத்தைப் பற்றி ஒருவருடைய அரசியல் பார்வை எவ்வாறு இருந்தாலும், எந்தப் புறநிலை பகுப்பாய்வின்படியும், 1980 களின் நடுப்பகுதியின் நெருக்கடிக்குத் தீர்வு காண அது கொண்ட முயற்சிகள் வெளிப்படையாகத் தோல்வியில் முடிவடைந்தன என்பது தெளிவு. றேகன் நிர்வாகத்தால் பெருகிய, அவசர, சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மத்திய அமெரிக்க மக்கள் எழுச்சியை அடக்கும் முயற்சிகள், உலகத்தழுவிய கம்யூனிசத்திற்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்டவை, 1986ம் ஆண்டு கடைசியில் ஈரான்-கான்ட்ரா ஊழல் வெடிப்பில் உச்சக் கட்டத்தை அடைந்தது. வெள்ளை மாளிகைக்குள் இருந்த போக்கிரிகளால் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் சார்ந்த நடவடிக்கைகள் அம்பலமானது, சட்டமன்றம் இயற்றியிருந்த சட்டங்களை மீறிச் செயல் பட்டவை, றேகன் நிர்வாகத்தை பெரும் அதிர்ச்சிக்கும் குழப்பத்திற்கும் ஆளாக்கின. இத்தகைய குற்றச் சாட்டுக்களுக்கு றேகன் மேற்கோண்ட ஒரே பாதுகாப்பான பதில் தனக்கு நிர்வாகத்தில் என்ன நடந்கொண்டிருக்கிறது எனத் தெரியாது என்றதுதான். இந்த நிகழ்வில் இவர் தெரிவித்த அறியாமை ஒருகால் முற்றிலும் ஏற்கத்தகுத்ததாகக் கூட இருந்திருக்கலாம்.

இதற்கு ஜனநாயகக் கட்சியின் விடை அது எப்பொழுதும் காட்டும் அக்கறையற்ற தன்மைதான். பெரிய பதவி நீக்க விசாரணை என்று தெளிவற்றமுறையில் பேச்சு அடிபட்டாலும், ஜனநாயகக் கட்சியினர் சில அரைமனத்துடனான கூட்டங்களை நடத்தினர், அதில் அவர்களை ஆலிவர் நார்த் சொற்களால் வசைபாடி, அவமானப்படுத்துதற்கு அனுமதித்ததுடன் முடிந்தது.

ஆனால், றேகன் நிர்வாகம் இயல்பாக ஆட்சி நடத்தும் திறைனையும் இழந்து அதன் கவலைகள் வரிக்குறைப்புக்கள், பெருகிய இராணுவச் செலவினங்கள் ஆகியவற்றினால் பெருகி நின்றன. முன்னென்றுமிருந்திராத பற்றாக்குறையை எதிர்கொண்ட நிலையில், அமெரிக்கா 1914க்குப் பின்னர் முதல் தடவையாக ஒரு கடனாளி நாடான நிலையில், றேகன் நிர்வாகம் வரிகளை உயர்த்தக் கட்டாயப்படுத்தப்பட்டதுடன், USSR உடன் கூடுதலான இணக்கத்துடனும் நடந்து கொள்ள நேரிட்டது.

சோவியத் ஒன்றியம் பின்னர் பொறிந்து போனதை றேகன் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்; மிகத் தொடர்பில்லாத முறையில்தான் "பெரும் தொடர்பாளர்" 1980 களில் கொண்டிருந்த கொள்கையின் விளைவு என இது தொடர்புபடுத்தப்படலாம். அமெரிக்க இராணுவச் செலவினங்களில் வியத்தகு அதிகரிப்பு USSR ஐ எதிர்நோக்கியிருந்த பொருளாதாரப் பிரச்சினைகளை கூட்டியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் றேகனுடைய கொள்கைகள் சோவியத்தின் இறுதி முடிவு பற்றி தீர்மானிப்பதில் குறிப்பிடும் முக்கியத்துவம் பெற்றவையாக இருந்தன என்பதற்குச் சிறிதுகூட சான்றுகள் இல்லை. மாறாக, சோவியத் நாட்டின் தகர்ப்பு அதிகாரத்துவத்தின் ஆளும்தட்டு அதிகரித்த அளவில் அமைதியற்றும் விரோதப்போக்கையும் கொண்டிருந்த தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்கையில் தமது சடரீதியான நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கு இதுதான் ஒரே வழி என்று முடிவுக்கு வந்த பின்னர், நிறைவேற்றப்பட்ட கலைப்பால் ஏற்பட்டதாகும்.

இக்கருத்துக்களை கூறியபின்னர், றேகன் ஜனாதிபதியாக எதையும் சாதிக்கவில்லை, எந்த மரபுரிமைப் பண்பையும் விட்டுச்செல்லவில்லை என்று கூறுவது நம்முடைய நோக்கம் அல்ல.

அப்படி நடக்கவில்லை. றேகன் உலகைவிட்டு நீங்கிவிட்டாலும், அவருடைய நிர்வாகத்தின் நிறைவேற்றல்கள் வாழ்கின்றன மற்றும் அனைத்து இடங்களிலும், அமெரிக்காவில் உள்ள சமூக சமத்துவமற்ற நிலையின் வளர்ச்சியில், விசித்திரமான முறையில் ஒரு மிகச்சிறிய அமெரிக்க சமூகம் அனைத்து செல்வத்தையும் குவித்துக் கொண்டுள்ளதில், அதிர்ச்சி தரக்கூடிய அளவு எழுத்தறிவின் சரிவில் மற்றும் பொதுப்பண்பாட்டின் வீழ்ச்சியில், அமெரிக்க ஜனநாயக நிறுவன அமைப்புக்கள் முற்றிலும் முடைநாற்றம் எடுத்து அழுகி நிற்பதில், மற்றும் இறுதியாக கொலைவெறித்தனமான அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பில் காணத்தக்கதாக இருக்கின்றன.

இவைதான் றேகனிசத்தின் மரபுரிமைப் பண்புகள்.

Top of page