World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

Russia: Behind the disappearance of presidential candidate Ivan Rybkin

ரஷ்யா: ஜனாதிபதி வேட்பாளர் இவான் ரிப்கின் தலைமறைவிற்கு பின்னால்

By Vladimir Volkov
24 February 2004

Use this version to print | Send this link by email | Email the author

இந்த மாத ஆரம்பத்தில் ரஷ்ய ஜனாதிபதி வேட்பாளர் இவான் ரிப்கின் (Ivan Rybkin) ஐந்து நாட்கள்வரை திடீரென்று மர்மமான முறையில் தலைமறைவானார், அதற்குப்பின்னர் மீண்டும் தோன்றி வியப்பளிக்கும் விளக்கங்களைத்தந்தார். Michael Bugakov நாவல் The Master and Margarita வில் மர்மமனிதன் Volands, Mephisto உருவமாகத் தோன்றுவதைத்தான் இந்த நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. ரஷ்ய அரசியலின் உச்சாணிக்கொம்பில் நடைபெறுகின்ற சம்வங்கள் மிகப்பெருமளவிற்கு அறிவிற்கு புறம்பான இருட்டை நோக்கி வீழ்ச்சியடைந்து கொண்டு வருகின்றன.

இதில் பெரும்பான்மை மக்களது ஜனநாயக உரிமைகள் தொடர்பான எந்த தாக்கமும் இல்லை. இது மலிவாக விற்பனையாகும் உளவு மர்ம நாவலைப் போன்றுதான் தோன்றுகிறது. ஜனநாயகம் மற்றும் ''வெளிப்படைத்தன்மை'' பற்றி போதனை செய்துவருகின்ற அரசாங்கம் தனது உள்நாட்டு பிரச்சனைகளுக்கு முற்றிலும் நேர்மைக்குறைவான முறையில் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மூலம் தீர்வுகண்டு வருகிறது. இரகசிய சேவைகள், அரசியல்வாதிகள், பல்வேறு சிவில் ஊழியர்கள் மற்றும் ஊடகங்களை ஈடுபடுத்தி சதிச்செயல்கள் மற்றும் மிரட்டல்கள் மூலம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.

காலவரிசைப்பட்டி

ரிப்கின் தானே ஒப்புக்கொண்ட அடிப்படையிலும் மற்றும் ஊடகங்களில் வந்திருக்கும் தகவல்கள் அடிப்படையிலும் கீழ்க்கண்ட சித்திரம் உருவாகியுள்ளது.

ரிப்கின் பெப்ரவரி 5, வியாழன்று காணாமல் போய்விட்டார். இரவு 8-மணியளவில் அவர் அவரது வீட்டிலிருந்தார். இரவு 10-மணிக்கு அவரது தலைமை தேர்தல் பிரச்சார அலுவலர் Xenia Ponomareva வை தொலைபேசியில் தொடர்புகொண்டார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர், பெப்ரவரி 3 செவ்வாய்க்கிழமையன்று லண்டனுக்கு அவர் சென்றார். மறுநாள் திரும்பினார். புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பல பத்திரிகையாளர்களுடன் அவர் தொடர்பு கொண்டு குறைந்தபட்சம் 10 பேட்டிகளை கொடுத்தார். இதில் ஒன்று அவர் ''Svoboda" வானொலிக்கு அளித்தபேட்டியாகும், இதில் ரஷ்ய ரகசிய சேவைகள் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை கலந்து கொள்ளமுடியாதவாறு தடுப்பதற்கு முயலுமென்று தெரிவித்தார் மற்றும் தனது வெளிநாட்டு பயணத்தின்போது அவர்கள் நிலழ்போல் தொடர்ந்து வந்ததாகவும் குறிப்பிட்டார். தான் லண்டனுக்கு புறப்பட்ட நேரத்தில் தனது விமானம், ஓடுபாதையிலிருந்து விலக்கி நிறுத்தப்பட்டதாகவும் ஏழு கார்கள் சுற்றிவளைத்துக்கொண்டு நின்றதாகவும் குறிப்பிட்டார். ரிப்கினின்படி, ''கறுப்பு உடைகள் மற்றும் கறுப்புத் தொப்பிகள் அணிந்த நாலுபேர் அந்த விமானத்தில் நுழைந்தனர்,'' அவர்கள் எதையும் தேடவில்லை, அல்லது எவரையும் விசாரிக்கவில்லை. ஆனால் ''அச்சத்தையும், பரபரப்பையும் பரப்புவதற்கு தங்களால் முடிந்தவரை முயன்றார்கள்'' என்று ரிப்கின் குறிப்பிட்டார். அவர்கள் யார்? அதற்குப் பின்னர் தனது விமானம் புறப்பட்டது எப்படி? என்பதை அவர் விளக்கவில்லை.

பெப்ரவரி 6 வெள்ளியன்று அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அதில் ரிப்கின், "புட்டினின் அண்மைக்கால பொருளாதாரக் கொள்கையை'' கலந்துரையாட திட்டமிட்டிருந்தார். அதற்கு முதல் நாள் அவர் தலைமறைவானதால் நிருபர் பேட்டி நடைபெறவில்லை.

பெப்ரவரி 8, ஞாயிறன்று, அவரது மனைவி தனது கணவனைக் காணவில்லை என்று புகார் தாக்கல் செய்தார். பெப்ரவரி 9-திங்களன்று கொலை பற்றி புலன் விசாரணை தொடங்கியது.

அதே நாளில், மற்றொரு தகவலும் வெளியானது Rybkin மாஸ்கோ அருகிலுள்ள Waldferne விருந்தினர் மாளிகையில் இருக்கிறார் என்பதுதான் அந்த தகவல். அந்த விருந்தினர் மாளிகை ஜனாதிபதியின் அலுவலர் கட்டுப்பாட்டிலுள்ளது மற்றும் FSB ரகசிய சேவை அதைப்பயன்படுத்தி வருகிறது. ரிப்கின் எங்கு இருக்கிறார் என்று கூறப்படும் அறிக்கையை நாடாளுமன்ற பாதுகாப்புக்குழு துணைத்தலைவர் G.Gudkov தந்தார், அவர் முன்னாள் KGP-FSB அதிகாரி.

அடுத்த நாள், பெப்ரவரி 10, செவ்வாயன்று உக்ரேனிலுள்ள கீவில் ரிப்கின் இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து அவர் நிதானத்தோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு கீவிலுள்ள தனது நண்பர்களை சந்தித்து உடலை தேற்றிக்கொள்வதற்கு சென்றதாகவும், தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி தொடர்புகளை நிறுத்தி விட்டதாகவும் குறிப்பிட்டார். ''ஒட்டு மொத்தத்தில், நான் மிக நன்றாக இருந்தேன்'' என்று அவர் கூறினார்.

இந்த தகவல் குறித்து உடனடியாக பல விமர்சகர்கள் சந்தேகங்களை எழுப்பினர். அவர் "கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார்" மர்மமான எதுவும் அவருக்கு நடந்துவிடவில்லை என்ற கருத்துபரவ ஆரம்பித்தது. அதற்கு மாறாக ரிப்கினின் புரவலரான லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள, சிலவராட்சியின் உறுப்பினர் Boris Beresovski-ன் தந்திரவித்தையாக இந்த முழுநிகச்சியும் அமைந்திருப்பதாக கூறப்பட்டது. ரிப்கினின் தேர்தல் பிரச்சாரத்தின் மீது மக்களது கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த தலைமறைவு நடைபெற்றதாக அந்தத்தரப்பினர் விளக்கம் தருகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு வேட்பாளரின் தகுதிக்கு புறம்பான நடவடிக்கை இது என்று கருதப்படுகிறது.

இந்த நேரத்தில் ரிப்கின் மாஸ்கோவில் நேரடியாக தோன்றினால் விவகாரங்கள் தெளிவாகும் என்று கருதப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. ''மாஸ்கோ எக்கோ'' வானொலிக்கு அவர் பெப்ரவரி 11-ல் விளக்கங்கள் அளித்தது முரண்பாடுகளையும் நிச்சயமற்ற நிலையையும் அதிகரிக்கவே உதவின.

ரிப்கின் தந்திருக்கும் சம்பவங்கள் தொகுப்பின்படி, அவர் மாஸ்கோவிலிருந்து அவரது நெருங்கிய உறவினர்கள் அல்லது அவரது தேர்தல் பிரச்சார உதவியாளர்கள் ஆகியோருக்கு தகவல் தராமல் ரகசியமாக புறப்பட்டுச்சென்றார். ''மாஸ்கோ-ஒடிஸா'' என்ற 23 இலக்க ரயிலில் பயணம் செய்தார். கொனொடோப் என்ற இடத்தில் உக்ரைன் எல்லைக்குள் நுழைந்தார். அங்கு அவரது அடையாள சான்றிதழை கொடுத்து நுழைவு விசா பெற்றார்.

அப்படியிருந்தும், ரஷ்ய ரகசிய சேவைகளின் பிரதிநிதிகள் பலமுறை குறிப்பிடுகையில் பெப்ரவரி 5-மற்றும் 10-க்கு இடைப்பட்ட காலத்தில் ரிப்கின் ரஷ்யாவை விட்டு செல்லவில்லை என்று கூறியுள்ளனர். ''இவான் ரிப்கின் உத்தியோக ரீதியில் தனது லண்டன் பயணத்திற்காக பெப்ரவரி 3ல் எல்லையைக்கடந்தார். மற்றும் பெப்ரவரி 4-ல் திரும்பி வந்தார். மேலும் அவர் எல்லையை கடந்தது தொடர்பாக அதிகாரபூர்வமான சான்று எதுவுமில்லை'' என்று போக்குவரத்து பணிகளுக்கான FSB நிலையத்துணை இயக்குநர் Vadim Shibayev பெப்ரவரி 10-ல் தெரிவித்தார்.

உக்ரைன் எல்லை நிர்வாகிகளும், தங்கள் எல்லைக்குள் ரிப்கின் நுழைந்தாரா என்பதை உறுதிப்படுத்தத் தவறிவிட்டனர்.

ரிப்கின் தந்துள்ள தகவலின்படி, கீவில் அவர் நான்கு நாட்கள் தங்கியிருந்த ஹோட்டல் உக்ரைனில் இருந்ததாகவும், அங்கு அவர் உக்ரைன் ஜனாதிபதி Leonid Kutchma- விற்கு எதிரான எதிர்க்கட்சி பிரதிநிதிகளை சந்தித்ததாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் அந்த ஹோட்டல் நிர்வாகம் ''இந்த பிரபலமான பட்டப்பெயருடன் ரஷ்ய குடிமகன்'' எவரும் அந்த ஹோட்டலில் தங்கியிருக்கவில்லை என்று அறிவித்தது. அதற்குப் பின்னர் ரிப்கின் தனது கதையை மாற்றிக்கொண்டு தனது நண்பர் ஒருவருடன் தங்கியிருந்ததாக தெரிவித்தார்.

உக்ரைனில் உள்ள எதிர்கட்சித் தலைவர்கள் தங்களுக்கு ரிப்கினுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று ஒருமனதாக அறிவித்துவிட்டனர். எதிர்கட்சித்தலைவர் அலெக்ஸாண்டர் டர்ட்சினோவ் ''எங்களுடன் எந்த சந்திப்பும்'' நடத்தவில்லை என்று தெரிவித்தார். உக்ரைனின் கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிஸ்ட் கட்சிகள் மற்றும் விக்டர் யூட்சென்கோ தலைமையில் இயங்கும் ''நமது உக்ரைன்'' அமைப்பு ஆகிய கட்சிகளும் ரிப்கினை சந்திக்கவில்லை என்று தெரிவித்தன. அத்தகைய கூட்டம் எதுவும் நடந்தது பற்றி தங்களுக்குத் தெரியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ரிப்கின் மாஸ்கோ திரும்பியது சற்றும் குறைந்த புதிர் சம்பவமல்ல. அவர் கூறியுள்ள தகவல்களின்படி கீவிலிருந்து அவர் திரும்ப பறந்து வந்தார். போரிஸ்பொல் விமான நிலையத்தில் அவரது பாஸ்போர்ட் புறப்பட்ட நேரத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். கீவிவிலிருந்து, Transaero விமானத்தில் அவர் புறப்படுகிறார் என்ற விவரம் தெரிந்ததும் பத்திரிகையாளர்கள் உடனடியாக விமான நிலையத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு அவரை சந்திக்கமுடியவில்லை, மேலும் உக்ரைன் எல்லை அதிகாரிகள் போரிஸ்பொலிருந்து ரிப்கின் விமானத்தில் சென்றாரா என்பது குறித்து தெளிவான பதிலை தரவில்லை. ரஷ்யா சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அதிகாரபூர்வமான கோரிக்கை விடுத்தால்தான் இந்த தகவலை தரமுடியும் என்று அறிவித்துவிட்டனர். அத்தகைய கோரிக்கை எதுவும் எழுப்பப்படவில்லை.

இதற்கிடையில் ரிப்கின் லண்டனுக்கு விமானத்தில் சென்றார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் லண்டனில் தங்கியிருக்கிறார். மார்ச் 14-தேர்தல் வரை அங்கு தங்கியிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறார். அதற்குப்பின்னர் பெப்ரவரி-13-ல் மாஸ்கோவில் அவருடன் வீடியோ செய்தியாளர் மாநாடு பேட்டி ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் இதுவரை தான் சொல்லிய அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது என்று விளக்கினார்.

என்னை தவறான பாவனைக்காட்டி கீவுக்கு உண்மையிலேயே கவர்ந்து சென்றார்கள். அங்கு செச்சென்யா பிரிவினைவாத தலைவர் அஸ்லான் மாஸ்கடோவுடன் சதி ஆலோசனைக்கூட்டம் நடத்துவதற்கு வாய்ப்பிருப்பதாக பாவனை காட்டினர். அந்தக் கூட்டம் நடைபெறவில்லை. என்றாலும் எந்த மாடிக்குடியிருப்பில் அந்தக் கூட்டம் நடப்பதாக இருந்ததோ அங்கு தனக்கு போதையூட்டப்பட்டதாகவும் சில நாட்கள் கழித்து செவ்வாய்க் கிழமையன்று தான் தனக்கு சுயநினைவு திரும்பியதாகவும் கூறினார். அதற்குப்பின்னர் முறைகேடான, ''கொச்சையான'' வீடியோ படங்களைக்காட்டி தனக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டதாகவும் பேட்டியில் விவரித்தார்.

அதனையடுத்து, தனது தலைமறைவிற்கு தவறான தகவலை தனது வீட்டிற்கு தொலைபேசியில் தருமாறு நிர்பந்திக்கபட்டதாகவும் குறிப்பிட்டார். இறுதியாக தான் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு, மாஸ்கோவிற்கு திரும்பியதாகவும் குறிப்பிட்டார். தனது தலைமறைவினால் யாருக்கு லாபம் என்று தன்னால் கற்பனை செய்துபார்க்க முடியவில்லை என்று குறிப்பிட்டார்.

FSB யினால் ரிப்கின் கடத்தப்பட்டாரா?

புரிந்து கொள்ளமுடியாத கருமேகத்திற்குள் ரிப்கினின் ஐந்துநாள் தலைமறைவு சிக்கிக்கொண்டிருக்கிறது. அதற்கு மாறாக அவர் தந்துள்ள விவரங்களும் கோடிட்டுக்காட்டியுள்ள தகவல்களும் ரஷ்ய ரகசிய சேவைகள் சம்மந்தப்பட்டிருப்பதைத் தெரிவிக்கின்றன. தனது சுதந்திரத்திற்கும் உயிருக்குமே பயந்து கொண்டிருப்பதாக ரிப்கின் கூறுகிறார்.

அவர் திரும்பிய பின்னர், அவரது செயலாளர், இந்த அனுபவம் ''மற்றொரு செச்சன்யா போரைப்போன்று'' இருப்பதாக விளக்கினார். (ஜனாதிபதி எல்சின் சார்பில் முதல் செச்சன்யா போரில் Rybkin சமரசம் செய்து வைப்பவராக பணியாற்றினார்) சில பத்திரிகைகள் கூறியுள்ள தத்துவத்தின்படி அவருக்கு உளவியல் இயக்க போதை மருத்துகளை தந்திருக்க வேண்டுமென்பதை நிரூபிக்க முடியவில்லை. அதே செயலாளர் Nowaja Gaseta பத்திரிகைக்கு செயலாளர் தந்த தகவலில் '' Ivan Petrovitch எந்த விதமான புலன்விசாரணைக்கும் மருத்துவ சிகிச்சைக்கும் உட்படமாட்டார். அதைப்பற்றி கூட தனிப்பட்ட முறையில் நான் சிந்தித்ததுண்டு'' என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சிகள் குறித்து பத்திரிகையாளர் Anna Politkovskaia மிகப் பெருமளவில் ஏற்கக்கூடிய விளக்கத்தைத் தந்திருக்கிறார். புட்டினுக்கு எதிராக அவரை அம்பலப்படுத்துகிற வகையில் ரிப்கினிடம் எதாவது தகவல் இருக்கிறதா என்பதை சோதிப்பதற்காக ரகசிய சேவைகள் அவரை கடத்திக்கொண்டு போயிருக்கலாம் என்று அந்தப் பத்திரிகையாளர் கருதுகிறார். அவருக்கு "உண்மையை வரவழைக்கும் போதை மருத்துகள்'' தரப்பட்டிருக்கலாம் எனவேதான் அவர் தனது பயணம் பற்றிய துல்லியமான விவரங்களைத் தரமுடியவில்லை.

Waldferne விருந்தினர் மாளிகையில் அவர் தங்கியிருக்கிறார் என்று வெளியில் தகவல் தெரிந்தவுடன் அவர் உக்ரைனுக்கு கொண்டுவரப்பட்டார். அங்கு அவர் மீண்டும் வெளியில் தோன்றும்வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அதேநேரத்தில் அவர் மிரட்டப்பட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. தனிப்பட்ட முறையிலும் அரசியல் அடிப்படையிலும் அவரை இழிவுபடுத்துவதற்காக அவரது தலைமறைவு பயன்படுத்தப்பட்டது. உண்மையில், கீவிற்கு ''பின்வாங்கிச்சென்ற'' ஒருவர் மற்றும் அனைவரையும் துன்பத்தில் தள்ளிவிட்டுச் சென்றவர், தருகின்ற தகவல் எதையும் இப்போது எவரும் நம்பமுடியுமா?

ஜனாதிபதி புட்டின் தனிப்பட்ட முறையில் ரிப்கின் தலைமறைவிற்கு அனுமதி வழங்கினார் என்று Politkovskaia கூறுகிறார். ''ரிப்கினிடமிருந்து கட்டாயப்படுத்தி தகவல்களை பெறுமாறு யார் கட்டளையிட்டிருக்க முடியும்? யாருக்கு அந்தத் தகவல் மிக அவசியமாக தேவைப்படுகிறதோ அவர்தான் அந்த கட்டளையை தனிப்பட்ட முறையில் தந்திருக்கவேண்டும்'' என்று அவர் எழுதுகிறார்.

அத்தகைய சந்தேகத்திற்குரிய கூட்டத்தில் ரிப்கினுக்கு காட்டப்பட்ட திரைப்படங்கள் எதுவாக இருக்குமென்று? அந்த Politkovskaia இறுதியாக அனுமானம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ''அடுத்த சில நாட்களில் Petrovitch Rybkin போன்ற தோற்றமுடைய ஒருவரது புகைப்படம் அல்லது வீடியோ படத்தை நாம் பார்ப்போம். ஸ்குரத்தோவ் கேட் II என்று அழைக்கப்படுகின்ற அல்லது அதையொத்த ஒரு நிகழ்ச்சி இடம்பெறும். இதன் நோக்கம் என்னவென்றால் அவர் தனது வாயைத்திறப்பதற்கு முன் அவரை சமரசப்படுத்திவிடவேண்டும் என்பதாகும். அப்போது எவரும் அவர் சொல்வதை நம்பமாட்டார்கள்'' என்று அந்தப் பத்திரிகையாளர் எழுதுகிறார்.

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் 1999-ஜனவரியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை அந்தப் பத்திரிகையாளர் சுட்டிக்காட்டுகிறார். அந்த நேரத்தில் பதவியைப்பிடிப்பதற்கான போராட்டம் உச்சக்கட்டத்தில் நடந்துகொண்டு இருந்தது. அன்றைய பிரதமர் யவ்கேனி பிரிமகோவிற்கும் சக்திவாய்த அதிபரான Boris Beresovski க்கும் இடையில் அரசியல் ஆதிக்கப்போட்டி மிகக்கடுமையாக நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் அன்றைய தலைமை அரசாங்க வழக்கறிஞர் ஜூரி ஸ்குரத்தோவ் சாயலுள்ள ஒருவர் இரண்டு ஒழுக்கச்சிதைவுள்ள இளம்பெண்களுக்கு நடுவில் அவர்களுடன் இருப்பது போன்ற வீடியோபடம் காட்டப்பட்டது. அந்த நேரத்தில் ஸ்குரத்தோவ் தேர்தலில் பிரிமகோவிற்கு ஆதவாகப் பணியாற்றிவந்தார். அந்த வீடியோபடம் காட்டப்பட்டதால் ஸ்குரத்தோவிற்கு அரசாங்கப்பதவி பறிபோனது. அந்த நேரத்தில் FSB-ன் தலைமை அதிகாரியாக இருந்த விளாடிமீர் புட்டின் அந்த வீடியோ படத்தைக்காட்டுவதற்கு அனுமதி வழங்கினார். அப்போது புட்டின் பெரஸ்கோஸ்கிக்கு ஆதரவாக பணியாற்றினார்.

அரசியல் உள்ளடக்கம்

புட்டினுக்கு ரிப்கின் ஆபத்தானவராக இருக்கமுடியுமா? முடியும். கடந்த சில வாரங்களில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் நடத்திவருகின்ற தேர்தல் பிரச்சாரத்தைப் பார்த்தாலே இது தெளிவாகத் தெரியும்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகரும் பாதுகாப்புக் குழு தலைவருமான ரிப்கின் அரசியலுக்கு தான் திரும்புவதை அறிவித்தார். 2000ம் ஆண்டு முதல் அவர் லண்டனில் வசிக்கும் பெரஸ்ஸோவ்ஸ்கிக்கு அச்சாணியாக செயல்பட்டு வருகிறார். அவர் 1999-ஆகஸ்டில் செச்சன்யா படையெடுப்பில் ரகசிய சேவைகள் சம்மந்தப்பட்டிருந்தமை தொடர்பாக அவரிடம் இருக்கும் புட்டின் தொடர்பான தகவல்களையும் அதற்குப்பின்னர் 300 பேர்களைக் கொன்ற ரஷ்ய மாடிக்குடியிருப்புப் பகுதிகளில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்களையும் பயன்படுத்திக் கொள்ள முயன்று வருகிறார்.

இதுவரை ரிப்கினை ஒப்புநோக்கி பார்க்கும்போது ''சுத்தமானவர்'' என்ற பெயரை நிலைநாட்டி வருகிறார். அவர் அரசியல் வாதியாக பணியாற்றிய காலத்தில் எந்தவிதமான பெரிய மோசடிகள் அல்லது சந்தேகத்திற்குரிய சதிச்செயல்களில் சம்மந்தப்பட்டிருந்தவர் அல்ல. எனவே ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் என்ற முறையில் அவர் வெளிப்படுத்தும் எந்த உண்மையையும் சமுதாயமும், ஊடகங்களும் புறக்கணித்துவிட முடியாது, அவை மிகுந்த பாரதூரமான விளைவுகளைக் கொண்டிருக்கும்.

டிசம்பர் இறுதியில் ரிப்கின் ஜனாதிபதி தேர்தலில் தான் ஒரு வேட்பாளர் என்று அறிவித்தார். தாராளவாத கட்சிகளில் முழுமையான குழப்பம் நிலவிய அந்த நேரத்தில் பெரஸ்ஸோவ்ஸ்கிக்கு ஆதரவான நெருக்கமான சக்திகள் புட்டினுக்கு ஆதரவு தெரிவித்தன. டிசம்பர் 7-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப்பின்னர் தாராளவாத கட்சிகளுக்கிடையே "ஜனநாயக" சமரச பொதுவேட்பாளர் பற்றி எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. சிறிது காலம் இளம் அரசியல்வாதி விளாடிமீர் ரிஷ்கோவ்க்கு வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டது. முடிவெடுப்பதற்கு டிசம்பரில் 31-இறுதிநாள் என்று முடிவு செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் அவசரமாக முடிவு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது. பெரஸ்ஸோவ்ஸ்கி தனது முடிவை எடுத்தார், ரிப்கின் தேர்தல் களத்தில் தோன்றினார்.

அந்த நிலையிலும் ரிஷ்கோவ் நிச்சயமற்ற நிலையில் இருந்ததால், தாராளவாத கட்சியான (Union of Rightwing Forces (SPS) தலைவர்களில் ஒருவரான இரினா சக்கமாதா தான் ஒரு சுயேட்சை வேட்பாளர் என்று அறிவித்தார். ஜனவரி தொடக்கத்தில், இஸ்ரேலில் வாழ்ந்து கொண்டிருப்பவரும் யூகோஸ் எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களில் ஒருவருமான லியோனிட் நியூஸ்லின் பிரச்சாரத்திற்கு நிதியுதவி தருவதாக அறிவித்தார். உடனடியாக ரஷ்ய அதிகாரிகள் சர்வதேச அளவில் நியூஸ்லினைத் தேடுகின்ற வேட்டையில் இறங்கினர்.

2002- இலையுதிர்காலத்தில் மாஸ்கோ இசைநாடக அரங்கில் பிணைக்கைதிகள் பிடிபட்டது தொடர்பாக அரசாங்கம் நடந்துகொண்ட முறையின் காரணமாக, ஜனவரி 14-ல் சக்கமாதா, புட்டின் ''அரசாங்க அளவில் குற்றங்களை'' புரிந்து வருவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அவ்வம்மையாருக்கு ஆதரவாக தான் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள தயாராக இருப்பதாக ரிப்கின் அறிவித்தார் ஆனால் சக்கமாதா மிகவிரைவாக தனது தாக்குதல் வேகத்தை குறைத்துக் கொண்டார். அவருக்கு பதிலாகத்தான் ரிப்கின் போட்டியிட முன்வந்து மிகுந்து ஆவேசத்தோடு குற்றச்சாட்டுக்களை வெளியிட்டார்.

''ரஷ்யாவில் ஆட்சி புரிவதற்கு புட்டினுக்கு எந்த உரிமையும் இல்லை'' என்ற தலைப்பில் Kommersant-JTM பெப்ரவரி 2-ல் கட்டுரை ஒன்றை அவர் எழுதியிருந்தார். அவர் அந்தக்கட்டுரையில் சக்கமாதாவின் குற்றச்சாட்டுக்களை மீண்டும் கூறியிருந்தார். ''சமுதாயம் ஜனாதிபதி புட்டின் மற்றும் அவருக்கு நெருக்கமான வட்டார நடவடிக்கைகளை அரசாங்க குற்றங்களென்று மதிப்பீடு செய்ய வேண்டும். அரசியல் சட்டம் எல்லா வகையிலும் அழிக்கப்பட்டு விட்டது. ரஷ்யா தற்போது மீண்டும் இருளில் மூழ்கிக்கொண்டுடிருக்கிறது'' என்று ரிப்கின் திரும்பவும் குற்றம் சாட்டினார்.

அவர் தலைமறைவாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் மற்றொரு கட்டுரையை ரிப்கின் எழுதியிருக்கிறார். ''ஜார் விளாடிமீர்'' என்ற தலைப்பில் ரிபிகின் எழுதியிருந்த கட்டுரை அவர் தலைமறைவான பின்னர் பிரசுரிக்கப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது: ''நான் புட்டினுக்கு எதிராக இருப்பதற்கு காரணம் அவர் உறுதிமொழிகளை மீறி நடந்துகொள்கிறார்.'' செச்சன்யாவில் "வெற்றிகள்", மீண்டும் இராணுவம் "புதுபிக்கப்பட்டது", "ரஷ்ய அரசின் மறுபிறப்பு" ஆகியவற்றை எடுத்துக்காட்டாகக் கூறி ஜனநாயக உரிமைகளையும், சுதந்திரத்தையும் குறைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். ''இந்த மகத்தான நாட்டில் நமது அடிப்படை உரிமைகளை அரசாங்கத்தில் உள்ளவர்களால் மதிக்கப்படவில்லை என்றால், இன்னும் நான்கு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக புட்டினை பதவியில் அமர்த்தினால் முன்னேற்றம் கிடைக்கும் என்று எப்படி ஒருவர் நம்பிக்கை கொள்ள முடியும்?'' என்று ரிப்கின் கேட்டார்.

மற்றொரு அறிக்கையொன்றை ரிப்கின் வெளியிட்டார். அதில் புட்டினை ''ஆதிக்கவாதியென்று'' குற்றஞ்சாட்டினார் வர்த்தக உலகத்தோடு அவருக்குள்ள தொடர்புகளை அம்பலப்படுத்தினார்.

இவை அத்தனையும் ரிப்கின் தனது குற்றச்சாட்டுக்களை தீவிரமாக்கிக்கொண்டு வருவதையும், மேலும் அதிகமான குற்றச்சாட்டுக்களை எடுத்துவைக்க தயாராக இருப்பதையும் சமிக்கைகாட்டுவதாக அமைந்தன. இந்த அச்சுறுத்தல்கள் காரணமாக அவருடன் நேருக்கு நேர் போர்புரிவது மிக ஆபத்தானது என்று கிரெம்ளின் முடிவிற்கு வந்துவிட்டது. அது குற்றச்சாட்டுக்களாகவும் சர்வதேச அமைப்புக்களுக்கு வேண்டுகோள்கள் விடுப்பதாகவும் மட்டுமே ஆகும். அவரை அச்சுறுத்துவதும் வாக்காளர்கள் முன் செல்வாக்கு இழக்க வைக்கப்பண்ணுவதும் சிறந்ததாக இருக்கும் என்று கிரெம்ளின் கருதியது.

அவர் தலைமறைவான அன்று மத்திய தேர்தல் கமிஷன் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ரிப்கின் வேட்புமனுவை வழிமொழிந்து கையெழுத்திட்டுள்ள வாக்காளர்களில் 26-சதவீதம்பேர் வாக்குகள் செல்லாதவை, எனவே அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று அறிவித்தது. மறுநாள் தேர்தல் கமிஷன் எதிர்பாரா வகையில் தனது நிலையை மாற்றிக்கொண்டு செல்லுபடியாகாத கையெழுத்துக்கள் அனுமதிக்கப்பட்ட வரம்பான 21-சதவீத அளவிற்கு மேல் இல்லாததால் ரிப்கின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடத் தகுதியுள்ளவர் என்று சான்றிதழை வழங்கியது.

இந்த சம்பவங்களையெல்லாம் தொகுத்துப்பார்க்கும் போது, ஜனாதிபதிக்கு ஆபத்தான எதிரியை சந்திக்க வேண்டிய தருணத்தில் கிரெம்ளின் அவரை அச்சுறுத்தி, பொதுமக்களிடம் இழிவுபடுத்தி அவரது செல்வாக்கை சிதைக்க முயன்றது. ஒரு வேட்பாளரை "உருவாக்கும்" குறிக்கோள் எட்டப்பட்டுவிட்டது. எப்படியோ ரிப்கின் களத்திலிருக்கிறார், எனவேதான் தனது தலைமறைவில் ரஷ்ய ரகசிய சேவைகளின் பங்களிப்பைப்பற்றி நேரடியாக பேசுவதற்கு அவர் மறுத்துவிட்டார். இப்போது ஆட்சி செய்துவரும் குழுவினருக்கு எதிராக போட்டியிட விரும்புகின்ற அவர் சில வரம்புகளைத் தாண்ட விரும்பவில்லை. இது அவரது எதிராளிகள் என்று கூறப்படுபவர்களுடன் அவரும் பகிர்ந்து கொள்ளும் பொதுவான தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

நீண்ட பல அரசியல் விளக்க கட்டுரைகளை விட இந்த சம்பவம் ரஷ்யாவில் இன்று இருக்கும் ஆட்சியின் தன்மையை அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அவற்றின் உத்தியோக ரீதியான கொள்கை பற்றிய வேறுபாடு எந்த அளவுக்கு இருந்தாலும், மக்களுக்கு உண்மையை சொல்லவும் அவர்களது சம்பிரதாய அரசியல் நிர்ணய சட்ட உரிமையை மதிக்கவும் அக்கறை கொண்ட கட்சிகள் எதுவும் இல்லாத ஒரு அமைப்புமுறையை அது அம்பல்ப்படுத்துகிறது. கட்டுப்பாட்டை வைத்திருப்பவர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக ஒரு தொடர்ச்சியான போராட்டத்தை நடத்துவதிலும் ரஷ்ய மக்களது உரிமைகளையும், சுதந்திரத்தையும் தற்காத்து நிற்பதற்கு தயாரிப்பு செய்வதிலும் ஆளும் செல்வந்தத் தட்டின் எந்த பகுதியினருக்கும் அக்கறை இல்லை. பொதுமக்களை எந்த அளவிற்கு அகந்தையோடும், புறக்கணிப்பு மனப்பான்மையோடும் ஆளும் குழு நடத்துகிறது என்பதை ரிப்கின் சம்பவத்தின் சூழ்ச்சித்தன்மை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

ரிப்கின் மனைவி Albina Nikolaievna, கீவ் பகுதியில் தனது கணவர் ''நோய் விடுப்பில்'' இருக்கிறார் என்று கூறப்பட்டதை அறிந்து அவர் மிகுந்த கசப்புணர்வோடு, ''ஏ தாழ்ந்த ரஷ்யாவே! இப்படிப்பட்டவர்களா உன்னை ஆள விரும்புகிறார்கள்'' என்று கேட்டார். அவரது கசப்பான வார்த்தைகளில் நமது கண்ணுக்குத்தெரிவதைவிட அதிக உண்மைகள் புதைந்துக்கிடக்கின்றன. அது ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் இவரா அல்லது அவரா என்பதல்ல. ரஷ்ய மக்களுக்கு இந்த தேர்தல்களில் தங்களுக்கென்று சொந்த வேட்பாளர்கள் இல்லை என்பதற்கும் ரஷ்ய மக்கள் தங்களது தலைவிதியைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை தங்கள் கையில் வைத்துக்கொண்டிருக்கும் எந்த உண்மையான சாத்தியமும் திருடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கும் ரிப்கின் சம்பவம் தெளிவான சான்றாகும்.

Top of page