World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்

US Marines occupy Haitian capital amid charges Aristide was kidnapped

அரிஸ்டைட் கடத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்களுக்கிடையில் அமெரிக்க கடற்படையினர் ஹைட்டி தலைநகரை ஆக்கிரமித்துக் கொண்டனர்

By Keith Jones
2 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

பதவியிலிருந்து இறக்கப்பட்ட ஹைட்டி ஜனாதிபதி ஜோன் பேர்ட்ரன்ட் அரிஸ்டைட் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் பல அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தங்களை அமெரிக்க இராணுவம் பலவந்தமாக ஒரு விமானத்தில் ஏற்றி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக அமெரிக்க கரீபியன் தீவு நாட்டிலிருந்து கொண்டு சென்றவிட்டதாக தெரிவித்தனர்.

அமெரிக்காவின் கீழ்சபை உறுப்பினர் சார்ல்ஸ் ரங்கேல், CNN க்கு அளித்த பேட்டியில் ''அவர் கடத்தப்பட்டதாகவும், அவர் நிர்பந்தத்தின் காரணமாகவே பதவி விலகியதாவும், அவரது விருப்பத்திற்கு மாறாகவே மத்திய ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு கடத்திச் செல்லப்பட்டிருப்பதாகவும்'' அரிஸ்டைட் குறிப்பிட்டதாக தெரிவித்தார். கலிபோர்னியா செனட் சபை உறுப்பினரான மேக்ஸின் வாட்டர்ஸ் என்பவரிடம் அரிஸ்டைட்டின் மனைவி தனது கணவர் ''பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாக தம்மிடம் கூறியதாக குறிப்பிட்டார். ஹைட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியிடம் அமெரிக்க தூரதக அதிகாரி ஒருவர், ''உடனடியாக பதவி விலகவேண்டும். இல்லையென்றால் கொல்லப்படலாம். மற்றும் ஹைட்டி நாட்டைச் சேர்ந்த பலர் கொல்லப்படுவார்கள்'' என்று கூறியுள்ளார்.

ட்ரான்ஸ் ஆபிரிக்கா (Trans Africa) என்ற தாராண்மை ஆய்வுக் குழுவின் முன்னாள் தலைவர் ரண்டல் ரொபர்ட்சன் என்பவர் அரிஸ்டைட் தனக்கு தொலைபேசியில், தான் மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் பிரான்ஸ் மற்றும் ஆப்பிரிக்கப் படையினர் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக கூறினார் என்று தெரிவித்தார். ''அது ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி என்றும் அமெரிக்கப் படையினர்களால் விமானத்தில் ஏற்றப்பட்டதாகவும், அதனை உலகிற்கு தெரிவிக்கவேண்டுமென்றும்'' அவர் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களை புஷ் நிர்வாகத்தின் தலைமை அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுக்கள் ''முட்டாள்தனமானவை'' என்றும் ''சதித் தத்துவங்கள்'' என்றும் ஜனாதிபதி மாளிகையின் அதிகாரி ஸ்கார்ட் மெக்கிலேன் குறிப்பிட்டார். ''அவர் கடத்திச் செல்லப்படவில்லை. அவரை பலவந்தமாக நாங்கள் விமானத்தில் ஏற்றவில்லை. அவரே விரும்பித்தான் விமானத்தில் ஏறினார்'' என்று வெளியுறவு அமைச்சர் கொலின் பவல், இது போன்ற கிரிமினல் நடவடிக்கைகளின் குற்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆனால், புஷ் நிர்வாகத்தின் மறுப்புக்கள் ஏற்கத்தக்க வகையில் இல்லை.

பிரெஞ்சு வானொலி நிலையமான RTL, தனது நிருபர் அரிஸ்டைடின் வீட்டிற்கு சென்றபோது, அவரது காவல்பணிப் பொறுப்பாளர் என்று சொல்லிக்கொண்டவர் தெரிவித்த தகவல் அடிப்படையில் ''அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த ஒரு முதியவரின்'' பேட்டியை ஒலிபரப்பியது. அவர் RTL வானொலிக்கு அளித்த பேட்டியில் ''அமெரிக்க இராணுவம் அரிஸ்டைட்டை கடத்திச் செல்வதற்காக அதிகாலை இரண்டு மணிக்கு வந்தது. ஆயுதங்களைக் காட்டி மிரட்டி அவரை வெளியே கொண்டு சென்றனர்'' என்று விளக்கம் தந்தார்.

மொண்டரியல் தினசரியான La Presse தனது திங்கள் வெளியீட்டில் ஒரு செய்தியை வெளியிட்டது. அதன் சிறப்பு நிருபரான மரி குளூட் (Marie-Claude Malboeuf) ஹைட்டியிலிருந்து கொடுத்த செய்தியில் ''ஹைட்டியின் முன்னாள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற தூதுவர்களின் மிரட்டல்கள் ''கடுமையாக'' இருந்தன என்றும், அவருக்கு கைவிலங்குகள் போடப்பட்டன'' என்றும் தெரிவித்தார். இந்தச் செய்தியானது, அரிஸ்டைட் இந்தக் குற்றச்சாட்டுக்களை கூறுவதற்கு முன்னால் அல்லது அந்த தகவல் பகிரங்கமாக வெளிவருவதற்கு முன்னால் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், ஹைட்டிக்கு அனுப்பப்பட்டுள்ள அமெரிக்க இராணுவம், அவரையும் போர்ட் ஓ பிரின்சிலுள்ள (Port-au-Prince) அவரது அரசாங்கத்தையும் கைப்பற்றிக்கொள்ள தயாராக உள்ள பாசிச துப்பாக்கிக்காரர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு எதுவும் செய்யாது என்று அமெரிக்க அதிகாரிகள் அரிஸ்டைட்டிடம் வெளிப்படையாக ஒரு அறிவிப்பைக் கொடுத்தனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரொன் டெலும்ஸ் (Ron Dellums) என்பவரை ஹைட்டி அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்க அரசிடம் முறையிடுவடதற்காக அரிஸ்டைட் நியமித்திருந்தார். அவரை கொலின் பவல் தனிப்பட்ட முறையில் அழைத்து ஹைட்டி ஜனாதிபதியின் சொந்த பாதுகாப்பிற்கு அமெரிக்கா உறுதிசெய்து தரமுடியாது என்று தெரிவித்துவிட்டார். அரிஸ்டைட்டின் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் சான் பிரான்ஸிஸ்கோவில் செயல்படும் ஸ்டீல் பவுன்டேசன் நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் அமெரிக்க இராணுவத்தினர்கள் ஆவர். அவர்கள் போர்ட் - ஓ - பிரின்சிலுள்ள அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்டு கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினால் அந்த நேரத்தில் அமெரிக்கா பாதுகாப்பு தருமா? என்று கேட்டனர். தர முடியாது என்றும், அவர்கள் தங்களைக் தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றும் அமெரிக்கத் தூதரகம் அறிவித்துவிட்டது.

2000 ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலை திருடிக்கொண்டு பதவிக்கு வந்த புஷ் நிர்வாகமானது, ஈராக்கில் பேரழிவுகரமான ஆயுதங்கள் இருப்பதாக பொய் சொல்லி ஈராக் மீது சட்டவிரோத ஆக்கிரமிப்பு போரில் அமெரிக்க மக்களை ஈடுபடுத்தியது. வியட்நாமில் பொதுமக்களை ஒட்டுமொத்தமாக குண்டுவீசி கொல்வதற்கு அங்கீகாரம் தந்தவர்களிலிருந்து, மத்திய அமெரிக்க நாடுகளில் கொலைப்படைகளை தூண்டிவிட்டதுவரை எண்ணற்ற ஏகாதிபத்திய ஆத்திரமூட்டல் செயல்களுக்கு பொறுப்பாக இருந்தவர்களை நிர்வாகத்தின் உயர்ந்த அதிகார பீடங்களில் நியமித்துள்ள புஷ் நிர்வாகமானது, ஹைட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை கடத்திச் செல்கிற வல்லமையை நிச்சயம் பெற்றுத்தான் இருக்கிறது. 1991 ல் அரிஸ்டைட்டை பதவியிலிருந்து இறக்கிய இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியை குடியரசுக்கட்சி ஆதரித்தது. 1994 ல் கிளிண்டன் நிர்வாகம் அவர் மீண்டும் பதவிக்கு வருவதை எதிர்த்தது. ஏனென்றால் பாதிரியார் உடுப்புகளை கைவிட்டு அரசியலில் புகுந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அரிஸ்ட்டைட் கண்டித்ததை கிளிண்டன் நிர்வாகம் மறக்கவும் இல்லை. மன்னிக்கவும் இல்லை. இருப்பினும், அரிஸ்டைட் பதவியில் இருந்த போது சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைப்படி பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளை அவர் செயல்படுத்தி வந்தாலும் அவரை அமெரிக்கா ஆதரிக்கவில்லை.

ஆனால் இறுதியாக பார்க்கும் போது அரிஸ்டைட் அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பயந்து பதவி விலகினாரா? அல்லது அமெரிக்க இராணுவ விமானத்தில் கட்டாயப்படுத்தி ஏற்றிச் செல்லப்பட்டாரா? என்பது போன்ற கேள்விகளால் ஹைட்டியில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படைத்தன்மை மாறிவிடப் போவதில்லை. புஷ் நிர்வாகம் ஹைட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்திருக்கிறது. இந்த நாட்டில் அரசியல் எதிர்ப்பாளர்கள் என்று தங்களை தாங்களே பிரகடனப்படுத்திக் கொண்டவர்களின் கழகத்தில், ஹைட்டியின் பாரம்பரிய ஆளும் செல்வந்த தட்டினர் இடம்பெற்றிருக்கின்றனர். அவர்களை டுவாவாலியர் மற்றும் கெட்ராஸ் சர்வாதிகாரங்களின் பயங்கர கையாட்கள் தலைமை தாங்கி நடத்திச் செல்கின்றனர். கலைக்கப்பட்டுவிட்ட ஹைட்டி இராணுவத்தின் முன்னாள் அதிகாரிகளும், FRAPH என்ற கொலைகாரக் குழுக்களின் தலைவர்களும் தலைமை தாங்கி கிளர்ச்சிப் படையை நடத்தி வருகின்றனர். இவர்களோடு கூட்டு சேர்ந்து புஷ் நிர்வாகம் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தியிருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக அமெரிக்க கடற்படையினர்களும், பாசிச கிளர்ச்சிக்காரர்களும் ஒரே நேரத்தில், அவர்கள் ஒருங்கிணைந்து போர்ட் ஓ பிரின்சில் செயல்பட்டு வருகிறார்கள் என்பதை சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

பெப்ரவரி மாதம் ஹைட்டியில் பாசிச கிளர்ச்சிக்காரர்கள் நடவடிக்கையில் இறங்கினர். அப்போது அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் கனடா ஆகிய நாடுகள் அரிஸ்டைட் எதிர்க்கட்சி ஜனநாயக அரங்கோடு அரசியல் உடன்பாடு செய்து கொள்ளும்வரை தாங்கள் தலையிடப்போவதில்லை என்று அறிவித்தபோதே, இந்த நாடுகளுக்கு உண்மை தெளிவாகவே தெரியும். ஹைட்டியின் எதிர்க்கட்சிகள் ஓர் அமைப்பாகக் செயல்படுவதற்கு மேற்கண்ட நாடுகள் நிதியுதவி உட்பட எல்லா உதவிகளையும் செய்தன. எனவே எதிர்க்கட்சிகள் அரிஸ்டைட்டின் பதவியை குறிவைத்தனர். அமெரிக்காவும், பிரான்சும் முன்னின்று உருவாக்கிய ஒப்பந்தம் அரிஸ்டைட்டை அதிகாரம் ஏதுமில்லாத அலங்கார பொம்மையின் அளவிற்கு தள்ளியிருக்கும். ஆனால் அந்த ஒப்பந்தத்தையே எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. வாஷிங்டனும், பாரிசும் அரிஸ்டைட் மீது பழிபோட்டன. அவர் பதவி விலக வேண்டும் என்று அழுத்தமும் கொடுத்தன.

அரிஸ்டைட் பதவியிலிருந்து அகற்றப்பட்டதும் அமெரிக்கா தலையிடுவதற்கான எல்லாத் தடைகளும் நீங்கிவிட்டன. அவர் வெளியேற்றப்பட்ட சில மணி நேரங்களுக்குள் கடற்படையின் முதலாவது படைப்பரிவு போர்ட் - ஓ - பிரின்சிலுள்ள விமான நிலையத்தை ஆக்கிரத்துக்கொண்டன. இந்தப் படைப்பிரிவு இறுதியாக 2000 அளவிற்கு உயரும். இதற்கு ஐ.நா பாதுகாப்பு சபையும் அமெரிக்கா தலைமையில் ''அமைதிகாப்புப் பணியை'' மேற்கொள்வதற்கு அங்கீகாரமளித்தது.

ஹைட்டியின் பல்வேறு சர்வாதிகார ஆட்சிகளின் கீழ் நடத்தப்பட்ட இரத்தக்களிறி ஒடுக்குமுறையில் இந்தக் கிளர்ச்சியாளர்களின் தலைவர்கள் சம்மந்தப்பட்டுள்ளார்கள் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன என்பதை நிலைநாட்டுகின்ற வகையில், நியூயோர்க் டைம்ஸ் தனது செய்திக்கு தலைப்பிட்டிருந்தது. இத்தலைப்பு, ''ஹைட்டியின் புதிய கிளர்ச்சிக்கு பழைய கொலைகார பிரச்சார முன்னாள் தலைவர்கள் தலைமை வகிக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளது. இதனால், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பவல், இவர்களின் பெயர்கள் எதையும் குறிப்பிடாமல் சில கிளர்ச்சிக்காரர்களை ''குண்டர்கள்'' என்றும், அவர்களை ஹைட்டி அரசியலில் இருந்து விலக்கிவிட வேண்டும் என்றும் கூறவேண்டிய அவசியத்திற்கு உள்ளானார்.

கிளர்ச்சிப் படைகள் ஹைட்டி அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படும் என்றும், அவை புதிதாக தொடக்கப்படும் இராணுவத்தின் முக்கிய பகுதியாக ஆகலாம் என்றும் ஒரு பேரம் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

கிளர்ச்சிக்காரர்களுக்கு உடனடியாக ஆதரவுகாட்டத் தொடங்கிய ஜனநாயக அரங்கை சேர்ந்தவர்கள் தங்களை (Front de libérationForces armées d'Haiti) விடுதலை முன்னணி ஹைட்டியின் ஆயுதப்படைகள் என்று அழைத்துக்கொண்டனர். போர்ட் ஓ பிரின்ஸ்சின் முன்னாள் மேயர் இவான்ஸ் போல் என்பவர் இப்போது முன்னணி எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவராக உள்ளார். ''அவரசரகால பாதுகாப்பு முறையை நாம் மேம்படுத்தியாகவேண்டும். முதன்மை கிளர்ச்சித் தளபதியான கே பிலிப்பின் (Guy Philippe) வரவிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன், அவருடன் விவாதிக்க வேண்டும்'' என்று La Presse என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்தார். அதேசமயம் அமெரிக்க குடிமகனும், முன்னணி தொழிலதிபரும், எதிர்கட்சி பிரதிநிதியாக உயர்ந்து நிற்பவருமான ஆன்ட்ரே அப்பைடு என்பவர் ''கிளர்ச்சிக்காரர்கள் எந்த தீர்விலும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களும் ஹைட்டி மக்கள்தான்'' என்று கூறியுள்ளார்.

திங்களன்று ஜனநாயக அரங்கின் தலைவர்கள் பிலிப் உட்பட கிளர்ச்சித் தலைவர்களை சந்தித்தனர். இவர் அமெரிக்காவில் பயிற்சிபெற்று ஹைட்டியின் போலீஸ் தலைமை அதிகாரியாக பணியாற்றியபோது கொடூரமான நடவடிக்கையை எடுத்தவர் என்று கருதப்பட்டவர். அத்தோடு 2001 ல் அரிஸ்டைட் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டவரென்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மற்றும் FRAPH என்ற கொலை வெறிக்குழுவின் இணை நிறுவனரான லூயி ஜோடல் சாம்பிளினையும் சந்தித்தனர்.

கூட்டம் முடிந்து வெளியே வந்ததும் இவான்ஸ் போல், மீண்டும் கிளர்ச்சிக்காரர்களை பாராட்டினார். குறிப்பாக பிலிப்பை பாராட்டினார். அத்தோடு அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்பியதாகவும், ஏனென்றால் ''அவர்கள் அரிஸ்ட்டைட்டை பதவியிலிருந்து நீக்குவதற்கு அனுமதித்தார்களென்றும்'' லூயி ஜோடல் சாம்பிளின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். செத்ராஸ் (CEDRAS) சர்வாதிகாரத்தின் கீழ் பயங்கர நடவடிக்கைகள் மற்றும் கொலை வெறிச்செயல்களை ஏற்பாடு செய்ததில் தனது பங்கைப்பற்றி விசாரிப்பார்கள் என்று குறித்து தனக்கு எந்தவிதமான பயமும் இல்லை என்றும் இவர் குறிப்பிட்டார்.

கிளர்ச்சிக்காரர்கள் ஹைட்டி ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க கடற்படையினர்களது கண்காணிப்பில், பாதுகாப்பில் கூட்டத்தை நடத்தினர். இப்போது ஹைட்டியிலுள்ள அமெரிக்க கடற்படை பிரிவுத் தலைவரான கேனல் டேவிட் பெர்கர் ''ஹைட்டி இராணுவத்தினர்களின் ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்கு தனக்கு எந்தவிதமான கட்டளையும் கிடைக்கவில்லை'' என்று தெரிவித்தார். ஹைட்டி தலைநகரில் அமெரிக்கா மற்றும் பிரெஞ்சுப் படைகள் ''முக்கியமான இடங்களை'' கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளன என்று தெரியவருகிறது. இதன்படி போர்ட் ஓ பிரின்ஸ்சின் மிகப்பெரும்பாலான பகுதிகள் கிளர்ச்சிக்காரர்களின் நடமாட்டத்திற்கு உட்பட்டுவிடும்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, சர்வதேச ஊடகங்கள் ஜனநாயக அரங்கின் ஒலிபெருக்கிகளாகப் பெரும்பாலும் பணியாற்றி வந்துள்ளன. அவை 2000 ம் ஆண்டுத் தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகளை மீண்டும் கூறுமளவிற்கு இதனை அதிகமாக மிகைப்படுத்திக் கூறின. ஆனால், அவர்கள் எதிர்க்கட்சிகளின் சொந்த, மிக நெடிய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை தொட்டும் பார்க்கவில்லை. மாறாக, அவர்கள் அமெரிக்காவின் ஆதரவாளர்களைப் போன்று ஹைட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை கவிழ்ப்பதில் பாசிஸ்டுகளுடன் கைகோர்த்து நின்றனர்.

இந்த அணுகுமுறைகளை ஒட்டி வெளிவந்த செய்திகளில், அரிஸ்டைட்டின் வீழ்ச்சிக்குப் பின்னர் போர்ட் ஓ பிரின்ஸ்சின் மத்தியதர வர்க்க மற்றும் செல்வந்த தட்டினர் வாழும் பகுதிகளில் நடைபெற்ற கொண்டாட்டங்களைப் பற்றி மட்டுமே தகவல்கள் வந்தன. ஆனால் கனடா ஒலிபரப்பு கூட்டுத்தாபன நிருபர் நீல் மேக்டோனால்ட் என்பவர் ஹைட்டியின் தலைநகர ஏழைகள் வாழுகின்ற பகுதிகளில் ''துக்கம் '' நிலவியதாக விவரித்தார்.

முதலில் அரிஸ்டைட்டுக்கு ஆதரவான ஆயுதந்தாங்கிய குழுக்கள் மீதான தாக்குதல்கள் பற்றியும், இரத்தம் சிந்தும் மோதல்கள் பற்றியும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டன. ஆனால் இவை, இந்த நாட்டில் அறியாமை, வறுமை, போதிய உணவு இல்லாமல் வாழும் பெரும்பகுதி மக்களை ஹைட்டியின் ஆளும் செல்வந்த தட்டினரின் ஆதிக்கத்தில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் செய்திகள் பிரசுரிக்கப்பட்டன.

Miami Herald என்ற பத்திரிகை வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் வெளியிட்ட தகவலை பிரசுரித்திருக்கிறது. இயந்திர துப்பாக்கி வைத்திருந்த அவர் ''அடிப்படை அமைதியை கொண்டுவரும் எவருடனும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்'' என்று குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

போர்ட் ஓ பிரின்ஸ் வந்து சேர்ந்ததுமே கிளர்ச்சிப்படைகளின் முதல் நடவடிக்கைகளில் ஒன்று முன்னால் இராணுவத்தினர்கள் பலரை சிறையிலிருந்து விடுதலை செய்ததாகும். அவர்களில் பலர் செட்ராஸ் சர்வாதிகாரத்தின்போது மக்கள் கிளர்ச்சியை ஒடுக்குவதில் பங்கெடுத்துக்கொண்டவர்கள். அல்லது அதற்குப் பின்னர் தேந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு எதிரான சதிச்செயல்களில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் ஆவர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை கவிழ்ப்பதில் அமெரிக்காவின் பங்களிப்பு நேரடியாக கிளர்ச்சிக்காரர்களை திரட்டாவிட்டாலும், பாசிச குண்டர்கள் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியதை இதர கரீபிய அரசாங்கங்கள் கண்டித்துள்ளன. ஏனென்றால் அந்த மண்டலத்தில் பெரிய வல்லரசுகளான அமெரிக்காவும், பிரான்சும் மிக வன்முறை மற்றும் பாரம்பரிய ஜனநாயக நெறிமுறைகளை மீறி செயல்படுமென்று அஞ்சுகின்றனர். ஜமேக்காவின் பிரதம மந்திரி மற்றும் CARICOM என்ற அமைப்பின் நடப்பு தலைவரான P.J. பேட்டர்சன் ''ஜனாதிபதி அரிஸ்டைட் நீக்கப்பட்டது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் எங்கிருந்தாலும் அவற்றிற்கு மிக ஆபத்தான முன்மாதிரியை உருவாக்கித் தந்திருக்கின்றது. கிளர்ச்சிப்படைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை தங்களது வலிமையினால் நீக்கிவிட முடியும் என்ற முன்மாதிரியை உருவாக்கியுள்ளது'' என்று கூறியுள்ளார்.

ஹைட்டியில் நடைபெற்ற சம்வங்களில் புஷ் நிர்வாகத்தின் பங்களிப்பை அமெரிக்க அரசியல் பணியாளர்கள் பிரிவுகள் கண்டித்திருக்கின்றன. ஆனால் அப்படி கண்டிப்பவர்களின் பிரதான நிலைப்பாடு இந்த நெருக்கடியில் பிரான்ஸ் தலையிட்டிருப்பது பற்றியாகும். அத்தோடு, ஹைட்டியில் ஸ்திரமின்மை அதிகரித்தால் ஏழை ஹைட்டி மக்கள் அமெரிக்காவின் புளோரிடா மாகாண கடற்கரையில் வந்து புகுந்து அங்கு நெருக்கடியை உருவாக்கிவிடுவார்கள் என்ற கவலைகளையும் இவர்கள் கொண்டுள்ளனர். நியூயோர்க் டைம்ஸ் புஷ் நிர்வாகம் பாசிச கிளர்ச்சியை தூண்டிவிட்டு ஹைட்டியில் ''ஆட்சிமாற்றம்'' செய்திருப்பதை வக்காலத்து வாங்கும் வகையில் எழுதியுள்ளது. அதில் புஷ் நிர்வாகம் தவறான தந்திரோபாயங்களை கையாண்டதாகவும் கண்டனம் செய்திருக்கிறது.

ஜனநாயகத்தையும், ஹைட்டி மக்களையும் எந்த அளவிற்கு புறக்கணிப்பு மனப்பான்மையோடு புஷ் நடத்துகிறார் என்பதை ஞாயிறன்று அவர் வெளியிட்ட பிரகடனம் தெளிவுபடுத்தியுள்ளது. அரிஸ்டைட் பதவியிலிருந்து விரட்டப்பட்டதும் நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நாட்டின் தலைவராக பொறுப்பேற்கும் விழாவிற்கு ஹைட்டியிலுள்ள அமெரிக்கத் தூதர் தலைமை வகித்தார். அப்போது ''ஹைட்டியின் அரசியலமைப்பு இயங்கிக் கொண்டிருக்கின்றதென்று'' புஷ் குறிப்பிட்டார். இதற்கு இணையான, மோசமான கருத்தை பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் டோமினிக் டூ வில்பன் தெரிவித்தார். ''வாஷிங்டனுக்கும், பாரிசுக்கும் மிகத்துல்லியமான ஒத்துழைப்பு நிலவியதன் விளைவுதான் இந்த ஆட்சி மாற்றம்'' என்று அவர் பெருமைப்பட்டுக் கொண்டார்.

See Also :

ஹைட்டியின் அரிஸ்டைட் தூக்கிவீசல்: அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு

ஹைட்டியின் "அகிம்சை வாத" எதிர்க்கட்சி போர்ட்-ஒ-பிரின்சில் ஓர் இரத்தக் களரியை விரும்புகிறதா?

வலதுசாரி தலைமையிலான கிளர்ச்சிஎழுச்சி ஹைட்டியை அதிரவைக்கிறது

 

Top of page