World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP replies to an appeal from ruling UNF

இலங்கை சோ.ச.க ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கிறது

By Wije Dias
12 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

கீழ்வரும் கடிதப் பறிமாற்றம், ஏப்பிரல் 2 இலங்கைப் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வலதுசாரி ஐக்கிய தேசிய முன்னணியின் (ஐ.தே.மு) முன்னணி வேட்பாளரான மிலிந்த மொரகொடவால் உலக சோசலிச வலைத் தளத்திற்கு மின்னஞ்சல் மூலம் விடுத்த அழைப்பிற்கு சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) பொதுச் செயலாளர் விஜே டயஸ் அளித்த பதிலாகும். மொரகொட, ஒரு பிரசித்தமான வங்கியாளரும் ஐ.தே.மு அரசாங்கத்தில் பொருளாதார மறுசீரமைப்பு, விஞ்ஞானத் தொழில்நுட்ப அமைச்சருமாவார். மற்றும் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட ஒரு பிரதிநிதியுமாவார். டயஸ், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் சோ.ச.க வேட்பாளர் குழுவின் தலைவரும் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினருமாவார்.

பிரியமான நண்பர்களுக்கு,

இன்று நாம் ஒரு தேவையற்றத் தேர்தலுக்கு முகம் கொடுக்கின்றோம். இந்நிலைமை மக்களின் தேவைகளை விட அதிகாரத்திற்கு முதலிடம் வழங்கியதாலேயே தோன்றியுள்ளது. நான் அரசியல் அமைப்புமுறையின் காலாச்சரத்தை மாற்றியமைப்பதற்கு உதவுவதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்னர் அரசியலுக்குள் பிரவேசித்தேன். ஆயினும், நிலைமை முன்னரை விட மோசமாகியுள்ளதையே காட்டுகிறது.

கடந்த இரண்டு வருடங்களுள், பிரதமர், நிலையான சமாதானத்துக்கான யுத்த நிறுத்தத்தையும், கிட்டத்தட்ட பயன்தரும் பொருளாதார மீட்சிக்கான முதலாவது சமிக்ஞைகளையும் எமக்கு கொண்டுவந்தார்.

அப்போது, பழைய நாகரீகத்திலான அரசியல் வெளித்தோன்றியதோடு, அதிகாரப் பேராசை மீண்டும் ஒரு முறை எழுச்சிபெற்றது.

இலங்கை மக்கள் அந்த அமைப்பு முறையில் மாற்றத்தை விரும்புகின்றனர் என நான் நம்புகின்றேன். அரசியல்வாதிகள் மக்களின் சேவகர்களாக இருப்பதையும், அரசியலுக்குள் மிதவாதத்தையும் நீங்கள் விரும்புகிறீர்கள்.

நாம் ஒரு நீண்டதும் கடினமானதுமான போராட்டத்தை எதிர்கொள்ளவுள்ளோம். அதை உங்களால் மட்டுமே வெற்றிகொள்ள முடியும். உங்களால் மிதவாதத்திற்கு வாக்களிக்க முடியும், அல்லது எங்கோ ஓரிடத்தில் உள்ள தீவிரவாதிகளை வெற்றியடையச் செய்யவும் முடியும்.

இந்தத் தீர்மானகரமான தேர்தலில், நீங்கள் மிதவாதத்திற்கு வாக்களிப்பதோடு, பிரதமர் சற்றே ஆரம்பித்து வைத்த வேலைகளுக்கும் ஆதரவளிப்பீர்கள் என நான் நம்புகிறேன்.

மிலிந்த மொரகொட,

கொழும்பு மாவட்டத்துக்கான ஐ.தே.மு வேட்பாளர், இலங்கை

பொதுத் தேர்தல் 2004

 

திரு. மொரகொட அவர்களுக்கு,

இது, நீங்கள் உலக சோசலிச வலைத் தளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் கிடைத்தது என்பதை அறிவிப்பதற்காக எழுதப்படுகிறது.

இந்தக் கடிதத்தை அனுப்புவதன் மூலம், நீங்கள் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும், தேர்தலில் ஐ.தே.மு உடன் ஒத்துழைக்கும் நவசமசமாஜக் கட்சி (ந.ச.ச.க), மற்றும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பொதுஜன முன்னணியில் அங்கம் வகிக்கும் லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க) போன்று ஒரே துணியில் வெட்டப்பட்ட கட்சியாகும் என்ற மாயையில் இருந்துகொண்டு செயற்படுவதாகவே தோன்றுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி, இந்த இரு கட்சிகளுக்கும் மற்றும் அவை ஈடுபாடுகொண்டிருக்கும் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் எதிரான சமரசமற்ற போராட்டத்தின் ஊடாகவே அபிவிருத்தி செய்யப்பட்டது. அந்தவகையில் உங்களது அழைப்பு முற்றிலும் இடம்மாறியுள்ளது. நாங்கள் உங்களது அல்லது உங்கள் கட்சியினது நண்பர்கள் அல்ல.

அவ்வாறு குறிப்பிடும் அதேவேளை, இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள துன்பகரமான நிலைமைகளுக்கு, நீங்களும் மற்றும் உங்களது கட்சியான ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு), அதேபோல் பொதுஜன முன்னணியும் பொறுப்பாளிகள் என்பதை தெளிவுபடுத்த, உங்களது மின்னஞ்சல் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியதற்காக அதை நாம் வரவேற்கிறோம்.

1948ம் ஆண்டில் சுதந்திரம் அடைந்ததில் இருந்து 56 வருடங்களாக, இலங்கை இரு பிரதான முதலாளித்துவக் கட்சிகளால் ஆளப்பட்டு வந்துள்ளது. அவை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் (ஐ.தே.க), குறிப்பாக பல சந்தர்ப்பங்களில் ல.ச.ச.க உடனும், ஏனைய கட்சிகளுடனும் சேர்ந்து, பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுமாகும் (ஸ்ரீ.ல.சு.க). அவர்கள் யுத்தத்திற்கும் மற்றும் அதன் விளைவுகளுக்கும் நேரடிப் பொறுப்பாளிகளாவர்.

இலங்கை ஆளும் கும்பல் மிக ஆரம்பத்தில் இருந்தே நனவுபூர்வமாக சிங்கள இனவாதத்தை வளர்த்து வந்துள்ளது. அது ஒரு சில செல்வந்தர்களுக்கு இலாபத்தை தேடித்தரும் திட்டங்களை முன்னெடுப்பதன் பேரில் தொழிலாள வர்க்கத்தை இன அடிப்படையில் பிரிப்பதை இலக்காகக் கொண்டிருந்தது. இது, தேசிய முதலாளித்துவம் தோண்றுவதற்கு முன்னதாகவே, பிரித்தானிய காலனித்துவ முதலீட்டாளர்களின் கட்டிப்பாட்டில் இருந்துவந்த தோட்டப்புறங்களிலும் வர்த்தகம் மற்றும் தொழிற் துறையிலும் இருந்த தொழிலாள வர்க்கம் எழுச்சிபெற்றதில் இருந்தே அவசியமாகியிருந்தது. தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியையிட்டு கடும் பீதிகொண்ட தேசிய முதலாளித்துவம், பண்டைய பெளத்த நிறுவனத்தின் ஆதரவுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம், தொழிலாளர்களை இன அடிப்படையில் வேறுபடுத்தும் வகுப்புவாத அரசியலுக்குள் தள்ளிச் செல்ல வழியமைத்தது.

இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர்களின் பிரஜாவுரிமையை பறிப்பதுடன் ஆரம்பமாகிய தமிழர்களுக்கு எதிரான வேறுபாடு, 1956ல் "சிங்களத்தை மட்டும்" உத்தியோகபூர்வ மொழியாக ஸ்தாபிப்பதன் மூலம் முழுத் தமிழ் மக்களுக்கும் எதிராக விரிவுபடுத்தப்பட்டது. சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஐ.தே.க அரசாங்கத்தை பொறிவின் விழிம்புக்கே கொண்டுவந்த 1953ம் ஆண்டு ஹர்த்தாலை (பொது வேலைநிறுத்தம்) அடுத்து, இந்த இரு முதலாளித்துவக் கட்சிகளும் பிற்போக்கு சிங்கள மேலாண்மையை தழுவிக்கொண்டது தற்செயலானதல்ல.

சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான இந்த வேறுபாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்துடன், 1972ல் முதலாவது குடியரசு அரசியலமைப்பின் மூலம் பெளத்த மதம் அரச மதமாக்கப்பட்டது. இரு பிரதானக் கட்சிகளும் பொதுவில் பங்கு போட்டுக்கொண்ட இந்த சிங்கள பெளத்த இனவாதக் கொள்கையே, உங்களதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜே.ஆர். ஜெயவர்தனவால், 1983ல் தமிழர்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தமாக அபிவிருத்தி செய்யப்பட்டது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியினதும் உத்தரவின் பேரில், திறந்த சந்தைப் பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான தொழிலாளர்களதும் மற்றும் கிராமப்புற இளைஞர்களதும் போராட்டத்தை நசுக்குவதற்கான ஒரு வழிமுறையாக பயன்படுத்தப்பட்ட, இந்த தமிழர் விரோத உள்நாட்டு யுத்தம், அதற்கே உரித்தான தர்க்கங்களைக் கொண்டுள்ளது. 20 வருடகால யுத்தமானது பெளத்த நிறுவனம் உட்பட சிங்களப் பேரினவாதத்தையும் பலப்படுத்தியதோடு மட்டுமன்றி, அரச இயந்திரத்திலும் மற்றும் இராணுவத்திலும் ஒரு தட்டினரை உருவாக்கிவிட்டுள்ளது. இவர்களது சமூக நிலைமைகளும் மற்றும் செல்வமும் அதிகரித்தளவில் யுத்தத்தின் தொடர்ச்சியோடு இணைந்திருந்தன.

இந்த அபிவிருத்திகளில் இருந்து இரண்டு தீவிர சிங்களப் பேரினவாத அரசியல் சக்திகள் இலாபம் அடைந்தன. இதில் ஒன்று, தற்போது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியாகும் (ஜே.வி.பி). மற்றையது, இந்தத் தேர்தலில் 260 பெளத்த பிக்குகளை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ள சிஹல உறுமய கட்சியாகும்.

ஐ.தே.மு அரசாங்கம் தமிழீ விடுதலைப் புலிகளுடன் கைச்சாத்திட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும், அடைத் தொடர்ந்து இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் கீழறுப்பதற்காக, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆரம்பித்துவைத்த நடவடிக்கைகளில் இருந்து இந்த இரு இனவாதக் கட்சிகளும் கூட்டாக பலமடைந்தன என்பதில் சந்தேகம் கிடையாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒரு கூட்டணியை அமைக்க விரும்பிய ஜே.வி.பி, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்தி எதேச்சதிகாரமான முறையில் பாராளுமன்றத்தை கலைக்குமாறு அழைப்பு விடுத்ததன் மூலம், குமாரதுங்கவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தன. அவர்களின் கோரிக்கைக்கு இணங்கிய குமாரதுங்க, எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜே.வி.பி உடன் சேர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பதிவுசெய்தார்.

குமாரதுங்க, வீழ்ச்சியைடந்துவரும் அவரது அரசியல் ஆதிக்கத்தை தூக்கி நிறுத்துவதற்காக, இந்த வெறிபிடித்த சிங்களப் பேரினவாத சக்திகளை பயன்படுத்திக்கொண்டார் என்பது தெளிவானதாகும். ஆனால் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், இந்த சக்திகளால் விடுக்கப்பட்டுள்ள அரசியல் அச்சுறுத்தல்களை சவால்செய்யவில்லை, ஏனெனில், உங்களது கட்சி அதன் ஆதரவு அடித்தளத்தில் பதிந்துபோயுள்ள சிங்கள இனவாதிகளைத் தழுவிக்கொண்டுள்ளதாலேயே ஆகும்.

யுத்தத்திற்கு முடிவுகட்டுவதன் ஒரு பாகமாக, 2000ம் ஆண்டில் குமாரதுங்கவால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தப் பொதியை கவிழ்ப்பதற்காக உங்களது கட்சி ஜே.வி.பி உடன் சேர்ந்துகொண்டது யாவரும் அறிந்த உண்மையாகும். ஆயினும் அந்த நெருக்கடியில் இருந்து தோண்றிய தேர்தலின் போது, யுத்தப் பேரிகை கொட்டியது ஐக்கிய தேசிக் கட்சியே ஆகும். ஆயினும் அது தோல்வியடைந்தது. ஒரு வருடத்தின் பின்னர், பயங்கரவாதத்திற்கு எதிரான பிற்போக்கு பூகோள யுத்தத்தின் முதலாவது இலக்காக, புஷ் நிர்வாகம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தனது யுத்தத்தை முன்னெடுத்தபோது, ஐக்கிய தேசியக் கட்சியானது வாஷிங்டன் தீர்மானித்த பாதையில் செல்வதற்கு தீர்மானித்தது. அதன்படி, அது யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவும், பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்களுக்காக சேவை செய்வதில் தனக்குரிய பாத்திரத்தை இட்டுநிரப்பவும் முயற்சித்தது. உங்களுடன் நெருக்கமாக ஒத்துழைக்கும் பெரு வர்த்தகர்கள் மற்றும் நிதி நிறுவனங்களும் கூட "சமாதானத்தை" கோருகின்றனர்.

பெரு வல்லரசுகளின் மெளனமான ஆதரவுடன் பெரு வர்த்தகர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற சதியின் மூலம் குமாரதுங்கவின் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது இத்தகைய ஒரு நிலைமையின் கீழேயே ஆகும். பல முக்கிய அமைச்சர்கள் கட்சி தாவி ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்துகொண்டதன் மூலம், ஒரு ஆண்டுக்குள் பாராளுமன்றத்தை கலைத்து, 2001 டிசம்பரில் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க குமாரதுங்கவை நெருக்கினர். இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணி ஆதிகாரத்திற்கு வந்தது.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றிய எந்தவொரு அக்கறையினாலும் எழுந்ததல்ல. அதேபோல், நீங்கள் சுட்டிக்காட்டியதன்படி வெகுஜனங்கள் சமாதானத்தின் பலாபலன்களை அடையவேண்டும் என்பதாலோ அல்ல. அது, தீவிலும் மற்றும் தெற்காசிய பிராந்தியத்திலும் உள்ள மலிவு உழைப்பையும் இயற்கை வளங்களையும் சுரண்டுவதிலேயே கண்ணாக இருக்கும், சர்வதேச முதலீட்டாளர்களின் இலாப தேவைகளை அடைவதற்கு குறுக்கே நிற்கும் ஒரு தடையை அகற்றுவதற்கான ஒரு தந்திரோபாயமான நடவடிக்கையே ஆகும்.

நீங்கள் உங்களுடைய கடிதத்தில், ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் பொருளாதார மீட்சியும் சமாதானமும் கொண்டுவரப்பட்டதாகவும், "அதன் பலாபலன்களை அடைய இருந்ததாகவும்" குறிப்பிடுகின்றீர்கள்.

பின்வரும் சில புள்ளிவிபரங்கள் சமாதானத்தின் பெயரளவிலான பலாபலன்கள் சென்றது எங்கே என்பதைக் காட்டுகிறது. அதி தொழில்நுட்ப ஆயுதங்களை கொள்வனவு செய்ததாலும், இராணுவத்திற்கு புதிதாக ஆள் சேர்த்ததாலும், 2001 முதல் 2002 வரையான காலத்தில் பாதுகாப்பு செலவு தொடர்ச்சியாக அதிகரித்துள்ள அதே சமயம், சமூக சேவைகளுக்கான செலவு கடுமையாக வெட்டப்பட்டுள்ளது.

இலவசக் கல்விக்காக வரவு செவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டு வந்த நிதி, 2002ல் மொத்த தேசிய உற்பத்தியில் 2.5 வீதத்தில் இருந்து 2.3 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக கிராமப்புறங்களில் 400 க்கும் அதிகமான பாடசாலைகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. இதே ஆண்டு, இலவச சுகாதார சேவைக்காக ஒதுக்கப்பட்ட நிதியும் மொத்த தேசிய உற்பத்தியில் 1.7 வீதத்தில் இருந்து 1.5 வீதமாக வெட்டப்பட்டது. இப்போது, வைத்தியரை நாடி சிகிச்சை பெறுவதற்கு மாத்திரம் தொழிலாளி ஒருவரின் ஒரு நாள் ஊதியத்தையும் விட அதிகம் செலவாகிறது.

அரசாங்க மானியம் ஒழிக்கப்பட்டமையினால், ஏழை விவசாயிகள் முன்னரை விட மூன்று மடங்கு அதிக விலை கொடுத்த உரம் வாங்கத் தள்ளப்பட்டுள்ளனர். இங்கு சுட்டிக்காட்டப்பட்டிருப்பது சமாதானம் மற்றும் "அடையப்படவிருந்த பலாபலன்கள்" என்ற போர்வையின் கீழ் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தால் உழைக்கும் மக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதல்களில் சிறிதளவேயாகும். இது மிகவும் மோசடியானதாகும்!

மறுபக்கம், சர்வதேச முதலீட்டாளர்களுடன் இணைந்துள்ள சில உள்ளூர் பெரு வர்த்தக கம்பனிகள் பெற்றுள்ள இலாபங்களின்படி, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் உண்மையில் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு சில செல்வந்தர்களை வீங்கச் செய்துள்ளது.

இலங்கையில் உள்ள பெரும் கூட்டுத்தாபனங்களில் ஒன்றான, ஹேலிஸ் லிமிடட் கடந்த வருடம் மூன்று காலாண்டுகளுக்கான வரி செலுத்திய பின்னர் 605.3 மில்லியன் ரூபாய்களை இலாபமாகப் பெற்றுள்ளது. அதில் செல்வந்த பங்குதாரர்கள் தமக்கிடையில் 367 மில்லியன் ரூபாய்களை பங்கிட்டுக்கொள்ள உள்ளனர்.

இன்னுமொரு கைத்தொழில் வங்கி நிறுவனமான செலான் வங்கி குழு 2003ம் ஆண்டில் வரி செலுத்திய பின் 1,026 மில்லியன் ரூபாய்களை இலாபமாகப் பெற்றுள்ளது. செலான் தாய் கம்பனியின் நிர்வாகப் பணிப்பாளர் அஜித் பஸ்கால் குறிப்பிட்டவாறு, செலான் வங்கியின் இலாபப் பங்கு 699 மில்லியன் ரூபாய்களாகும்.

டீ.எப்.சீ.சீ வங்கி, கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களை, முந்திய வருடத்தின் அதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் தனது இலாபத்தை 16 வீதத்தால் அதிகரித்துக்கொண்டுள்ளது.

ஹட்டன் நாஷனல் வங்கி, கடந்த வருடம் வரி செலுத்த முதல் 1,092 மில்லியன் ரூபாய்களையும் வரி செலுத்திய பின் 1,008 மில்லியன் ரூபாய்களையும் இலாபமாகப் பெற்றுள்ளது.

இந்தப் பதில் மிக நீண்டதாக அமையாமல் இருக்க, ஏனைய பல கம்பனிகள் பெற்றுள்ள இது போன்ற இலாப விபரங்களை இங்கு பட்டியலிடுவதில் இருந்து தவிர்த்துக்கொள்கிறோம். உழைக்கும் மக்கள் கடும் வறுமையில் மூழ்கிப்போயுள்ள அதேசமயம், உங்களுடைய கட்சியின் ஆட்சியின் கீழ் கடந்த இரண்டு வருடங்களாக மிகச் சிறிய எண்ணிக்கையிலான செல்வந்தர்கள் இவ்வாறே "சமாதானத்தின் பலாபலன்களை அடைந்துள்ளனர்."

இப்போது ஏற்பட்டுள்ள சமூக விளைவுகள் என்ன? இலங்கையில், தற்கொலை செய்துகொள்பவர்களின் தொகை, கடந்த ஆண்டில் மிக உயர்ந்த வீதத்தை எட்டியதை அடுத்து, உலகின் தற்கொலை நகரம் என்ற அபகீர்த்திக்குள்ளாகி உள்ளது.

சுமார் இரண்டு வருடங்களாக இழுபட்டுச் சென்ற சமாதான முன்னெடுப்புகள், இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு, அவர்களின் சொந்த நிலங்களுக்கும் வீடுகளுக்கும் திரும்பிச் செல்ல வழிவகுக்கும் மிக அடிப்படையான நடவடிக்கைகளைக் கூட இட்டுநிரப்பவில்லை. யாழ்ப்பாணக் குடா நாட்டின் மூன்றில் ஒருபங்கிற்கும் அதிகமான பிரதேசத்தை சுற்றி வளைத்துக்கொண்டு, அந்த நிலங்களின் நியாயமான உரிமையாளர்களை விரட்டியடித்து நிறுவப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்குக் கூட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் மறுத்து வந்துள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, உங்களது அரசாங்கம் வடக்கிலும் கிழக்கிலும் ஸ்தாபிப்பதற்காக வரைந்த இடைக்கால நிர்வாக சபையானது முற்றிலும் ஜனநாயக விரோதமானதும் மற்றும் இனரீதியில் வேறுபாடுகொண்டதுமாகும். ஐக்கிய தேசிய முன்னணியால் பிரேரிக்கப்பட்ட தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படாத சபையானது சிங்கள, முஸ்லீம் மற்றும் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைக் கொண்டதாக அமையவிருந்ததோடு, விடுதலைப் புலிகளுக்கு பெரும்பான்மை வழங்கப்படவிருந்தது. இது கொடூரமான யுத்தத்திற்கு வழிவகுத்து, வகுப்புவாத பதட்டங்களை அதிகரிக்கச் செய்யும் திட்டமே அன்றி, இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான திட்டமல்ல. அத்தகைய மோதல், இலங்கை இராணுவத்தை மேலும் அபிவிருத்திசெய்யப் பயன்படுத்தப்படும்.

ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சரவையின் முன்னணி அங்கத்தவர் என்ற வகையில், "சமாதான முன்னெடுப்புகள்" மற்றும் "பொருளாதார மறுசீரமைப்புகளில்" செயற்பட்டுவரும் நீங்கள், எல்லா அரசாங்கத் தீர்மானங்களிலும் பிரதமருக்கு அடுத்ததாக பிரதான பாத்திரம் வகித்துள்ளீர்கள். இப்போது நீங்கள், "அரசியல் அமைப்பு முறையில் அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்கு உதவிசெய்ய" இரண்டு வருடங்களுக்கு முன்னர் அரசியலுக்கு வந்ததாகவும், உங்களுக்கும் உங்களது கட்சிக்கும் அளிக்கப்படும் வாக்கு "மிதவாதமாக்கலுக்கான வாக்கு" எனவும் குறிப்பிடுகின்றீர்கள்.

இன்னுமொரு வெட்கக்கேடு! நீங்கள், பல கூட்டங்களில், குறிப்பாக அமெரிக்காவின் உப இராஜாங்கச் செயலாளர் ரிச்சார்ட் ஆமிடேஜ் உடன் நடத்திய சந்திப்புக்களில், வாஷிங்டன் அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இடையில் நெருக்கமான அரசியல் மற்றும் இராணுவ உறவை நிறுவிக்கொள்வதற்காக, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் சார்பிலான தரகராக செயற்பட்டது யாவரும் அறிந்ததே. மேலும், வாஷிங்டனின் கட்டளைகளின் அடிப்படையில் செயற்பட்டு, சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவின் பேரில் ஐக்கிய தேசிய முன்னணியால் நெறிப்படுத்தப்பட்ட "புத்துயிர்பெறும் இலங்கை" என்ற வேலைத் திட்டத்தை அமுல்படுத்த வழி அமைப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கும் ஜனாதிபதி குமாரதுங்கவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை ஏற்படுத்த நீங்கள் செயற்பட்டுள்ளீர்கள்.

சந்திரிகா குமாரதுங்கவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் போலவே, ஐக்கியே தேசிய முன்னணியினது முழு பொருளாதாரத் திட்டமும், தொழில், நலன்புரி சேவைகள் மற்றும் சகல உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மீதான தாக்குதல்களை உக்கிரமாக்குவதன் மூலம், நிதி மூலதனத்தின் நலன்களுக்காக சேவை புரிவதை இலக்காக்க கொண்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை எந்த அரசாங்கம் முன்னெடுத்தாலும் சமூகத் துருவப்படுத்தலின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்படுவதால், இரு முதலாளித்துவக் கட்சிகளும் தொழிலாளர் வர்க்கத்துக்கும் ஏழைகளுக்கும் எதிராக சர்வாதிகார நடைமுறைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கும். புஷ் நிர்வாகம், ஏப்பிரல் 2 தேர்தலில் தெரிவாகும் எந்தவொரு அரசாங்கத்துடனும் செயற்படத் தயாராக உள்ளதாக தெரிவித்ததன் மூலம் இந்த நடவடிக்கைகளுக்கு சமிக்ஞை விடுத்துள்ளது. ஆனால், புஷ் நிர்வாகம் தமக்கு முழு ஆதரவும் தருவதாக ஐக்கிய தேசிய முன்னணி கூறித்திரிந்ததும் குறிப்பிடத்தக்கது.

."மிதவாத அரசியலின்" யுகம், உள்நாட்டிலும் அனைத்துலகிலும் முழுமையாக ஒழிந்துவிட்டது.

ஆரம்பத்தில் இருந்தே தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை எதிர்த்து வந்ததோடு, வடக்குக் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை நிபந்தனையின்றி வாபஸ்பெறுமாறு பிரச்சாரம் செய்த ஒரே ஒரு கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமேயாகும். நீங்கள் குறிப்பிடும் நிலையான சமாதானத்திற்கான முன்நிபந்தனை இதுவேயாகும். இதையே ஐக்கிய தேசிய முன்னணியும் ஏனைய எல்லா முதலாளித்துவக் கட்சிகளும் கடுமையாக எதிர்க்கின்றன.

நாம், ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளை நசுக்கி, சிங்கள-பெளத்த ஒற்றை ஆட்சியை பலாத்காரமாக காக்க மேற்கொள்ளப்படும் சகல முயற்சிகளையும் எதிர்க்கும் அதே வேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட, இனங்களை அடிப்படையாகக் கொண்ட அனைத்துக் குழுக்களினதும் பிரிவினையான இனவாத வேலைத் திட்டங்களுக்கு எதிராகவும் போராடுகிறோம்.

தீர்க்கப்படாத ஜனநாயக உரிமைகள் பற்றிய பிரச்சனைகளுக்கான தீர்வு, உண்மையான சமூக சமத்துவத்தை நிறுவுவதுடன் இறுக்கமாகக் கட்டுண்டுள்ளது. இது தொழிலாள வர்க்கம், ஒடுக்கப்படும் மக்களின் ஆதரவுடன் அரசியல் அதிகாரத்திற்குச் செல்வதை வேண்டிநிற்கிறது.

திரு. மொரகொட, நீங்களும், நீங்கள் பரிந்துரைக்கும் ஆளும் கும்பலும் உருவாக்கிவிட்டுள்ள அழிவுகளில் இருந்து மீள்வதற்கான ஒரே வழி இதுவேயாகும். எதிர்காலத்திற்கான பாதையைத் தேடும், சிங்களத் தமிழ் தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் புத்திஜீவிகளுக்கு இதைத் தெளிவுபடுத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியதற்காக மீண்டும் ஒரு முறை உங்களுடைய மின்னஞ்சலுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் உண்மையுள்ள,

விஜே டயஸ்,

சோ.ச.க பொதுச் செயலாளர் (இலங்கை)

Top of page