World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The diplomacy of imperialism: Iraq and US foreign policy

Part three: The Iraqi Baath Party, from its origins to political power

ஏகாதிபத்தியத்தின் இராஜதந்திரம்: ஈராக்கும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும்

மூன்றாம் பகுதி: ஈராக்கின் பாத் கட்சியின் தோற்றுவாயிலிருந்து, அரசியல் அதிகாரம் பெற்ற வரை

By Joseph Kay
16 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கின் வரலாறு, அதன் அமெரிக்காவுடனான உறவுகள் பற்றிய தொடர் ஆய்வுக் கட்டுரைகளில் இது மூன்றாவது பகுதியாகும். முதல் கட்டுரை மார்ச் 12 (ஆங்கிலப்பதிப்பு), நாட்டின் சமுதாய உறவுகள் பற்றியும் அதன் வரலாறு 1950கள் வரையிலும் விவரித்தது. இரண்டாம் கட்டுரை (ஆங்கிலத்தில்) மார்ச் 13 வெளிவந்தது; இதில் போருக்குப் பின் ஈராக்கின் வரலாறு விவரிக்கப்பட்டு 1963 பாத் கட்சி வழி நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு வரை கூறப்பட்டது. இன்றைய கட்டுரை, பாத் கட்சியின் வரலாற்றையும், 1970களில் அதன் ஆட்சியின் தன்மையையும் ஆராய்கிறது.

பாத் கட்சியின் தோற்றம்

பாத் ("மறுமலர்ச்சி") கட்சி 1960 களில் இறுதியாக ஆட்சிக்கு வந்ததே, நீண்டகால வரலாற்று வளர்ச்சியின் விளைவு ஆகும். 1930 களின் பிற்பகுதியில், மைக்கேல் அப்ளாக் (Michel Aflaq) என்பவர் தலைமையில் சில சிறிய குழுக்களை ஒன்று சேர்த்து இணைத்து அது அமைக்கப்பட்டது. இதன் செல்வாக்கு ஆரம்பத்தில் சிரியாவில்தான் இருந்தது; ஆனால் நாளடைவில், எகிப்து, யேமன், ஈராக் என மற்ற அராபிய நாடுகளிலும் இதன் செல்வாக்கு பரவியது.

அப்ளாக்கின் சிந்தனை வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருந்துடன், ஐயத்திற்கிடமின்றி 1930, 1940 களில் பல அராபிய இளைஞர்களின் அரசியல் வளர்ச்சியைப் பிரதிபலித்தது. அப்ளாக் பிரான்சில் கல்வி பயின்றிருந்தார்; அங்கு 1920களின் கடைசியில் மார்க்ஸ், லெனின் உடைய சிந்தனைகளை எதிர்கொண்டார். 1944ம் ஆண்டு அப்ளாக்கும், மற்றொரு ஆரம்பகாலத் தலைவரான சலா அல் டின் பிட்டார் (Salah al Din Bitar) என்பவரும் எழுதியுள்ள ஒரு குறிப்பின்படி, "நாங்கள் சிந்தனையின் மூலமும் அறிவியல் மூலமும், பொதுவாக உலகத்தையும் மற்றும் குறிப்பாக அரேபியர்களையும் துன்பத்திற்குள்ளாக்கும் அனைத்து அரசியல், சமூக பிரச்சனைகளுக்கும், ஒரு புதிய, அருமையான, வியத்தகு விளக்கமான சோசலிசம் என்ற கோட்பாட்டை அடைந்துள்ளோம்."[1]

ஆனல்,1930களில் ஸ்ராலினிசம், மற்றும் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டிக் கொடுப்புக்கள் அவர்களை கம்யூனிசக் கட்சியிலிருந்து வேறுபுறம் திருப்பிவிட்டது. இந்தக் காலகட்டத்தில்தான், பிரான்சில் மக்கள் முன்னணி (Popular Front) இருந்து, பிரான்சின் கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிஸ்ட் பிரதம மந்திரி லியோன் ப்ளூமின் (Leon Blum) தலைமையிலான முதலாளித்துவக் கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தது. இது நடைமுறையில் சிரியா உட்பட பிரெஞ்சு ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தொழிலாள வர்க்கத்தின் நலன்கள் கம்யூனிஸ்ட் கட்சியினால், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் வெளியுறவுக் கொள்கையின் நலன்களுக்கு கீழ்ப்பணியவைத்துவிடுவதாகும்.

அப்ளாக்கும், பிடாரும் "சோவியத் ஒன்றியம் ஒரு தேசியவாத அரசாகக மாறிக்கொண்டு வருவதற்கும் "அது சர்வதேசக் கம்யூனிசத்தைக் கைவிட்டது" பற்றியும் பல குறிப்புக்களை, தாங்கள் ஒரு புதிய இயக்கத்தைத் கட்டி எழுப்புவதற்குக் காரணமாக காட்டினர்.

அவர்கள் அமைத்த இயக்கம்தான், 1952க்குப் பிறகு முறையாக அராபிய பாத் சோசலிஸ்ட் கட்சி, அப்பகுதியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் முதலாளித்துவ தேசியவாத கட்சிகளுக்கு உண்மையான மாற்றீடு ஒன்றையும் கொடுக்கவில்லை. ஆரம்பத்திலிருந்தே அது பல முரண்பாடுகளைக் கொண்டிருந்த அமைப்பாக இருந்ததுடன், பரந்த மக்களின் சோசலிச அபிலாசைகளை, அராபிய முதலாளித்துவத்திற்கும், தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே நலன்களில் எவ்வித அடிப்படை வேறுபாடுகளும் இல்லை என்று கூறிய அராபிய வாதத்துடன் இணைத்தது.

இந்த முரண்பாடுகள் கட்சி முன்வைத்திருந்த மூன்று கருத்துக்களில் வெளிப்படுத்தப்பட்டது: "ஒற்றுமை, சுதந்திரம், சோசலிசம்". இந்த மூன்று கருத்துகளில் முதலாவதில், அப்ளாக்கினால் விவரமாக, "(நாட்டின்) அனைத்து மக்களுடைய வேறுபாடுகளும் பொருளற்றவையும், பிழையானதும் ஆகும்; அராபியர் உணர்மை எழுச்சிபெறும் அளவில் இவையெல்லாம் மறைந்துவிடும்." எனக் குறிப்பிடப்பட்டது.[2]

ஆயினும்கூட, சோசலிசத்தின் சிந்தனைகள், தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ வர்க்கத்துடன் உள்ள அடிப்படை வேறுபாட்டை, குறைந்த அளவு பொருளாதார வளர்ச்சி இருக்கும் நாடுகளில் கூட உணர்ந்தால்தான் அடையப்படமுடியும்.

தேசிய முதலாளித்துவத்தின் நோக்கம், எகிப்தின் நாசர், ஈராக்கின் காசிம் அல்லது பாத் கட்சியினாலேயோ கூட வெளிப்படுத்தப்பட்டாலும் கூட, ஏகாதிபத்தியத்திடம் நல்ல முறையில் நலன்களைக் பெற வேண்டுவதாக இருந்தது. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நலன்களுக்கு, ஏகாதிபத்தியத்தையும் அது அடிப்படையாகக் கொண்டிருக்கும் முதலாளித்துவம் இவற்றைத் தூக்கி எறிதல் வேண்டும். உழைக்கும் மக்களை சுரண்டுதல், பகுதியில் நிலவும் சமூக சமத்துவமின்மை, மக்களுடைய தேசிய அபிலாசைகள் அடக்கப்படுதல் ஆகியவை முற்றிலும் சமூக உறவுகள் மாற்றப்பட்டால்தான் முடிவிற்கு வரும்; இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு தேசிய முதலாளித்துவத்தால் இயலாது என்பது மட்டும் அல்லாமல், இயல்பாகவே அதைச் செய்து முடிக்கவும் தயாராக இருக்காது.

நடைமுறையில், எப்பொழுது பாத் கட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் -- அது சிரியாவில் 1950-களின் பிற்பகுதியிலும், ஈராக்கில் 1960-களிலும் வந்தது -- அது தேசிய முதலாளித்துவத்தின் ஆதிக்கத்திற்கு தொழிலாள வர்க்கம் கீழ்பட்டிருக்கவேண்டும் என்ற "ஒற்றுமைக்காக", சோசலிசத்தை கைவிட்டிருந்தது.

அதிகாரத்திற்கு வருதல்

பாத் கட்சி முக்கியத்துவமானதாக எழுச்சியடைந்தமை, அரசியல் அளவில் கலவையாக இருந்த அமைப்பில் ஆழ்ந்த பிளவுகளை தோற்றுவித்தது. கட்சியின் ஒரு பகுதி இடதுசாரி நிலைப்பாட்டைக் கொண்டு, சிரியாவில் 1963 அக்டோபர் நடைபெற்ற கட்சியின் ஆறாம் தேசிய காங்கிரசில், குறுகிய காலத்திற்கு ஏற்றம் பெற்றது. இந்த சக்திகள் "சோசலிச திட்டமிடுதல்", "விவசாயிகள் கூட்டுப்பண்ணை முறையில் விவசாயம் நடத்துதல்", "உற்பத்தி முறையை தொழிலாளர் ஜனநாயகமுறையில் கட்டுப்படுத்துததல்" போன்றவற்றிற்கு அழைப்பு விடுத்தனர். அவர்கள் கட்சியை சோசலிச அடிப்படைகளையும், தொழிலாள வர்க்கத்தின் பரந்த மக்கள் கொடுத்துள்ள வாக்குறுதிகளை கைவிடுவதாககவும் குற்றம் சாட்டினர்.

ஈராக்கிய கட்சி, வலதுசாரி இராணுவ அதிகாரிகளினால் பிரதிநிதித்துவம் கொண்டிருந்தது. அவர்கள் இடது பிரிவைச் சேர்ந்தவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் முயற்சில் ஈடுபட்டு தங்கள் கட்டுப்பாட்டை பலப்படுத்தலாயினர். இந்தப் பிளவு, "பாத் கட்டுப்பாட்டிற்குள் இருந்த தொழிலாளர்களின் பொது தொழிற்சங்கம் (General Union of Workers) இந்த நேரத்தில், ''கட்சியைக் காட்டிக்கொடுத்த முதலாளித்துவ தலைகளை நசுக்கவேண்டும்,' மூலதனம் கொண்டு பணத்தை நாட்டைவிட்டு அகற்றிக்கொண்டு செல்லுபவர்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவேண்டும், தொழிற்சாலைகள் உடனடியாக சமூகமயமாக்கல் படவேண்டும், விவசாயம் கூட்டுப்பண்ணை முறைக்கு கொண்டுவரப்படவேண்டும் " என்பதற்காக வெளியே வந்திருந்த சமயம் அதிகரித்தது. [3]

வலதுசாரியினர் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டது வேறொருவிதத்திலும் முக்கியமானது: அது கட்சிக்குள் சதாம் ஹுசைன் எழுச்சி பெற்ற முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. ஹுசைன் அப்பொழுதுதான், 1963 நாடுகடத்தப்பட்டதிலிருந்து மீண்டு வந்து, கட்சியில், அக்மது ஹசன் பக்கருக்கு அடுத்த இடத்தைப் பிடிந்திருந்தார். இவருடைய உயர்வு, குறிப்பாக ஹுசைனின் சொந்த நகரமாகிய திக்ரிட்டிலிருந்த பெரிய அதிகாரிகளின் கூட்டத்தின் இராணுவச் செல்வாக்கு கட்சியில் பெருகியதுடன் நெருக்கமாகப் பிணைந்து இருந்தது. சதாம் ஹுசைன் 1963 காங்கிரசில் இடது பிரிவைத் தாக்கியதில் ஒரு முக்கியப் பங்கைக் கொண்டிருந்தார்.

பாத் கட்சியில் இவர் கொண்டிருந்த பங்கினால், அமெரிக்க, பிரிட்டிஸ் ஏகாதிபத்தியங்களுக்கு இவர்பால் ஈர்ப்பு ஏற்பட்டதில் வியப்பு இல்லை. வருங்காலச் சர்வாதிகாரியுடைய வாழ்க்கை குறிப்பு 1969இல் பாக்தாத்தில் பிரிட்டிஷ் தூதரகத்தில் எழுதப்பட்டது. இதில், "ஹுசைன் முதன் முதலில் 1959 பாத் கட்சித் தலைமையினால் தேர்ந்தெடுக்கப்பட்டபோது [காசிமின் கொலையில் பங்கு பெறுவதற்காக] முக்கியத்துவம் அடைந்தது."

இது மேலும் அவருடைய அந்தஸ்தின் எழுச்சி பற்றிக் குறிப்பிடுகிறது: "நவம்பர் 1963-க்குப் பின்னர், பாத் கட்டுப்பாட்டின் பகுதியின் இடைக்கால பொதுச் செயலாளர். பின்னர் தன்னை கட்சியின் கோட்பாடுகளை முக்கிய இயற்றுபவர் என்று பின்னணியில் நிலைநிறுத்திக்கொண்டு, படிப்படியாக 1969 இல் வெளிச்சத்திற்கு வந்தார். RCC யில் (புரட்சிகர அதிகார சபை-Revolutionary Command Council) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார், துணை ஜனாதிபதியாக நவம்பர் 1969இல் நியமனம் பெற்றார்; அப்பொழுதே அவர் ஈராக்கிய பாத் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகவும் உறுதிப்படுத்தப்பட்டார்." [4]

ஒரு குறிப்பிடத்தக்க வர்ணனையில் பிரிட்டிஷார் அவரை, "ஒரு நல்ல கவனத்தை ஈர்க்கும் இளைஞர். ஆரம்பத்தில் கட்சித் தீவிரவாதி என்று கருதப்பட்டவர், ஆனால் பொறுப்பு அவரைக் கரையவைத்துவிடும்." அதாவது பிரிட்டிஷ் இவருடன் தொடர்பு நல்ல முறையில் கொள்ளலாம் என்று அபிப்பபிராயப்பட்டனர். பல மோதல்களும், விரிசல்களும் இருந்தபோதிலும் கூட, அமெரிக்காவும் இதே கருத்தைத்தான் 1970 களிலும் 1980 களிலும் கொண்டிருந்தது.

1960 களில் இந்தக்கட்சி பெற்ற வெற்றி ஒன்றும் உண்மையான மக்கள் ஆதரவினால் அல்ல; இது தன்பக்கம் இராணுவத்தில் இருந்த போதுமான முக்கியமான அதிகாரிகளை இழுத்துக்கொண்டுவிட்ட முயற்சியினால்தான் முடிந்தது. அவர்களில் பலரும் திக்ரிட்டிலிருந்து வந்தவர்கள்.

இக்காலகட்டத்தில், கட்சி திக்ரிட் பகுதியிலிருந்து வந்திருந்த சன்னி முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருந்தது. பெரும்பாலன ஷியிட்டு ஆதரவாளர்கள், குறிப்பாகத் தெற்கத்திய, வறுமை மிகுந்த மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள், 1963ம் ஆண்டு, ஷசாடி எனப்படும் அலி சலிஹ் (Ali Salih) உடைய தலைமையில் இடது பிரிவுடன் சென்றுவிட்டனர். (ஷாடி சிறிது பின்னர் புரட்சிகர தொழிலாளர் கட்சி எனப்படும் ஒரு கட்சியை உருவாக்கினார். இதுவும் விரைவில் இல்லாதுபோனது).

கட்சியின் தலைமை பெயரளவிற்கு பக்ரின் கைகளில் இருந்தாலும்கூட, சதாம் ஹுசைன், உளவுத்துறை, போலீஸ் அமைப்பினுள் பெரும் செல்வாக்கைக் கொண்டிருந்தார். புதிய ஆட்சியில் பெருகிய முறையில் ஹுசைன்தான் அதிகாரத்தின் நெம்புகோல்களைப் பயன்படுத்தி வந்தார். அடக்குமுறையையும், அச்சுறுத்தலையும் தன்னுடைய ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு, கட்சிக்கு உளவுத்துறையின் மீதான அதிகாரம் மிகவும் முக்கியமானது. தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக தன்னைத் திரட்டிக்கொள்ள மேற்கொள்ளும் எந்தச் சிறிய நடவடிக்கையின் அடையாளமும் வன்முறையை எதிர்கொண்டது; பொதுவாக சதாம் ஹுசைனுடைய தேசியப் பாதுகாப்புப் பிரிவின் சிறப்புப் படைகள் இந்தப் பணியைச்செய்தன.

இதன் ஜனநாயக விரோதமான வழிவகைகள் இருந்தபோதிலும், பாத் ஆட்சி முற்றிலும் பிற்போக்கான அரசாங்கமாக இருக்கவில்லை. அது முதலாளித்துவ தேசிய அரசாங்கமாக, மற்ற நாடுகள் எவ்வாறு அமெரிக்க, சோவியத் ஒன்றிய பிளவைப் பயன்படுத்தி தங்கள் பகுதியிலுள்ள சமூக முரண்பாடுகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தினவோ, அதேபோல் செய்து வந்தது.

இது விவசாயிகள் நலமுறும் வகையில் சில சீர்திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்தது, பெரும் நிலச்சுவான்தார்கள் வைத்திருக்கக்கூடிய நிலப்பரப்பின் மீது கட்டுப்பாடு கொண்டு வந்து, கொள்ளையடிக்கப்பட்டுச் சேகரிக்கப்பட்டிருந்த உபரி நிலங்களுக்கு இழப்புத்தொகை கொடுப்பதை நிறுத்தியது. சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தையும், கல்வியையும் கிராமப் பகுதிகளிலும், கொண்டு வந்தது; விலைவாசிகளைக் கட்டுப்படுத்துவதற்காக ரொட்டிக்காக அரசாங்க உதவித்தொகைகள் கொடுக்கப்பட்டது. அரசாங்கம் சமூக பாதுகாப்பு நலத்திட்டங்களையும், இயலாமை ஏற்பட்டால் கொடுக்கப்படும் நன்மைகளை நகரங்களில் இருந்த தொழிலாளர்களுக்கும் கொண்டு வந்தது.

இந்தச் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பணம் கொடுப்பதற்கும், மேலே எண்ணெய் நிறுவங்களலிருந்து சற்று சுதந்திரமடைவதற்கும், ஆட்சி தன்னுடைய அரசாங்கம் நடத்திவந்த எண்ணெய் நிறுவனத்தின் மீதான பங்கை அதிகரித்தது. 1972 ஏப்ரலில் இது வடக்கு ருமைலா (North Rumailah) எண்ணெய் நிலங்களிலிருந்த எண்ணெய் எடுக்கும் தேசியத்திட்டத்திற்காக சோவியத் ஒன்றியத்திலிருந்து கடன் வாங்கியது. ஈராக் பெட்ரோலிய நிறுவனம் என்னும் வெளிநாட்டு நிறுவனத்தின் பயமுறுத்தலுக்கும், தொந்தரவுகளுக்கும் விடை கொடுக்கும் வகையில், அரசாங்கம் அந்த நிறுவனத்தினை அவ்வாண்டு ஜூன் மாதம் தேசியமயமாக்கியது. ஈராக்தான் ஒரு மேற்கத்திய எண்ணெய் நிறுவனத்தினை தேசியமயமாக்கிய முதல் அராபிய நாடு ஆகும்.

எண்ணெய் வருவாய் இப்பத்தாண்டுகாலத்தில், 1972ல் 75 மில்லியன் டொலரிலிருந்து 1975ல் 8 பில்லியன் டொலராகவும், 1980ல் 26.3 பில்லியன் டொலராக பெரிதும் உயர்ந்தது. இந்த வருவாய்கள் பொதுப்பணிகளை விரிவாக்கவும், இராணுவ, பாதுகாப்புக் கருவிகளைப் பெருக்கிக் கொள்ளவும் அரசாங்கத்திற்கு உதவியது.

தொடரும்......

குறிப்புகள்:
1. Dilip Hiro, The Longest War, Routledge, New York, 1991. p. 30
2. Ibid., pp. 71
3. Ibid., pp. 262-3
4. Lawrence Freedman and Efraim Karsh, The Gulf Conflict: 1990-1991, Princeton University Press, Princeton, 1993, pp. 5-6

See Also :

முதல் பகுதி: ஈராக்கிய முடியாட்சியும், சமூக முரண்பாடுகளின் வளர்ச்சியும்

இரண்டாம் பகுதி: ஈராக்கியத் தேசிய இயக்கங்கள், நிரந்தரப் புரட்சி, மற்றும் பனிப்போர்

Top of page