World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Socialist Equality Party election statement

The socialist alternative in the Sri Lankan elections

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கை
இலங்கைத் தேர்தலில் சோசலிச பதிலீடு

By the Socialist Equality Party
19 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க), ஏப்பிரல் 2 தேர்தலில் ஒரு சோசலிச பதிலீட்டுக்கான பிரச்சாரத்தில் பங்குபற்றுமாறு, எமது ஆதரவாளர்கள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் உட்பட தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு அழைப்புவிடுக்கிறது.

சோ.ச.க, தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கவும், யுத்தம் மற்றும் சமூகப் பிற்போக்குத் தனத்தை எதிர்க்கவும் ஜனநாயக மற்றும் சோசலிச வேலைத்திட்டம் ஒன்றை அபிவிருத்தி செய்யவதற்காக கொழும்பு மாவட்டத்தில் 23 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சோ.ச.க வின் வேட்பாளர் குழுவுக்கு கட்சியின் பொதுச் செயலாளரும், உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினருமான, 63 வயதான விஜே டயஸ் தலைமை வகிக்கின்றார். இந்த வேட்பாளர் குழுவில் தொழிற்சாலை ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் தொழிலாளர்களதும் ஒடுக்கப்பட்ட மக்களதும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கொள்கைரீதியான போராட்டத்தில் சாதனை படைத்தவர்கள்.

சோ.ச.க பிரச்சாரமானது, தீவின் எல்லைகளுக்கு அப்பாலும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவிலும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், புதிய வடிவிலான முதலாளித்துவ சுரண்டலுக்கு இரையாக, உற்பத்தியின் பூகோள நிகழ்வுப் போக்குகளினால் இணைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆயினும் அவர்கள் இலங்கைத் தொழிலாளர்களைப் போலவே, அவர்களின் பழைய தலைமைத்துவங்களாலும் மற்றும் கட்சிகளாலும் முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளார்கள். இந்தக் காட்டிக்கொடுப்புகள், வெறுமனே ஒவ்வொரு தலைவர்களதும் மோசடி மற்றும் கோழைத்தனங்களில் மட்டுமன்றி, அவர்களின் தேசிய வேலைத்திட்டங்களிலும் வேரூன்றியுள்ளது. தேசிய அரச அமைப்புடன் கட்டுண்டு போயுள்ள அவர்கள் அனைவரும், ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக நிலைமைகளை சீரழித்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலமும், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளுக்கும் மற்றும் யுத்தத்திற்கும் எதிரான எந்தவொரு போராட்டத்தையும் எதிர்ப்பதன் மூலமும், "சந்தை சீர்திருத்தம்" மற்றும் "பொருளாதார மறுசீரமைப்பு" வேலைத் திட்டங்களை அமுல்படுத்துவதில் தமது "சொந்த" அரசாங்கத்தோடு சேர்ந்துகொண்டுள்ளனர்.

இதிலிருந்து வேறுபட்ட விதத்தில், அனைத்துலகவாதத்திற்கான போராட்டமே சோ.ச.க வின் முன்னோக்கின் நிஜ மையமாகும். நாம் எமது பிரச்சாரத்தின் ஊடாக, இலங்கையிலும் ஆசியாவிலும் உள்ள தொழிலாளர்களை, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகம் பூராவும் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்துவதன் மூலம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு பூகோளரீதியான எதிர்தாக்குதலை அபிவிருத்தி செய்ய முயற்சிக்கின்றோம்.

இந்தத் தேர்தல் ஒரு நிச்சயமான திருப்புமுனையை குறிக்கின்றது. இது, தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கத்தை வெளியேற்றுவதற்காக, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது சர்வாதிகார நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்தியதன் மூலம் மேற்கொண்ட அரசியலமைப்பு சதியின் விளைவாகவே தோன்றியது. ஆயினும், ஜனதிபதியின் நடவடிக்கைகளின் ஜனநாயக விரோத பண்பைக் கண்டனம் செய்வதற்கு, ரணில் விக்கிரமசிங்க உட்பட ஆளும் வட்டாரத்திலிருந்து ஒரு குரலேனும் எழுப்பப்படவில்லை. இது, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பாராளுமன்றத்திற்குப் புறம்பான ஆட்சி முறையை அதிகரித்தளவில் நாடும் என்ற தெளிவான எச்சரிக்கையை உறுதிப்படுத்துகின்றது. ஜனநாயக உரிமைகளை பேணுவதற்கான கணிசமானளவு இலாயக்கு ஆளும் வட்டாரத்துக்குள் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

குமாரதுங்க, மக்களால் முழுமையாக வெறுக்கப்பட்ட நாட்டின் உள்நாட்டு யுத்தத்தை முன்னெடுத்துச் சென்றதன் மூலம் பெற்றுக்கொண்ட பொருளாதார மற்றும் அரசியல் இலாபங்களின் காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை எதிர்க்கும் இராணுவத்தினதும் மற்றும் அரசியல் நிறுவனத்தினதும் தட்டுக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றார். ஐ.தே.மு வின் "சமாதான முன்னெடுப்புகளுக்கு" எதிரான அவரது இனவாத பிரச்சாரமானது, யுத்தத்தை மீண்டும் தோற்றுவிக்க அச்சுறுத்தும் அரசியல் சக்திகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாசிச ஜாதிக ஹெல உறுமயவின் பெளத்த பிக்குகளும் வேட்பாளர்களாக போட்டியிடும் அதேவேளை, குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க) சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உடன் சேர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை அமைத்துக்கொண்டுள்ளது.

விக்கிரமசிங்கவின் முன்னோக்கு இந்தப் பிற்போக்குத்தனத்தில் இருந்து குறைவானதல்ல. ஐ.தே.மு வின் "சமாதான முன்னெடுப்புகள்", தனியார்மயமாக்கம் மற்றும் பொதுத்துறை வேலைத் திட்டங்களையும், மானியங்களையும் வெட்டித்தள்ளுவதன் மூலம் தொழிலாளர்களின், விவசாயிகளின் இளைஞர்களின் மற்றும் ஏனையவர்களினதும் ஜீவனோபாயங்களை சீரழிவிற்குள் தள்ளியுள்ள "புத்துயிர் பெறும் இலங்கை" என்ற பரந்த பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுடன் நெருக்கமாக கட்டுண்டுள்ளன. இதன் விளைவாக, அதிகரித்துவரும் அரசாங்க விரோத வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு அலைகள் மூலம் ஐ.தே.மு அரசாங்கம் ஆட்டங்கண்டு போயுள்ளதோடு, இந்த நிலைமைகளின் கீழ், அரசியல் நிறுவனம் பூராவும் வளர்ச்சிகண்டுவரும் அமைதியின்மையால் கிளறிவிடப்பட்டுள்ளது.

இந்த அதிருப்திகளை தனது சொந்த குறிக்கோள்களுக்காக சுரண்டிக்கொள்வதை இலக்காகக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, தம்மை விக்கிரமசிங்கவின் கொள்கைகளின் எதிரியாக காட்டிக்கொள்கிறது. அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம், தனியார்மயத்துக்கு எதிராக அரச துறைகளை பாதுகாப்பதாகக் கூறிக்கொள்ளும் மக்கள் நலன்சார்ந்த வாய்வீச்சுக்களால் நிறைந்துபோயுள்ளது. இங்கு, 1994 தேர்தல் பிரச்சாரத்தின்போது, குமாரதுங்கவும் ஸ்ரீ.ல.சு.க வும் இதே வாக்குறுதிகளை வழங்கிய போதிலும், அதிகாரத்திற்கு வந்தபின்னர் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தியதே நினைவுக்கு வருகிறது. ஜே.வி.பி யைப் பொறுத்தமட்டில், தம்மை அடிக்கடி "சோசலிஸ்டுகளாகவும்" "மார்க்சிஸ்டுகளாகவும்" காட்டிக்கொண்ட போதிலும், அவர்கள் இலாபம் சுரண்டும் முதலாளித்துவ அமைப்பை பாதுகாக்கவும், இலங்கையை பூகோள மூலதனத்துக்கான ஒரு மலிவு உழைப்பு மேடையாக மாற்றுவதன் மூலம், சீனா, மலேசியா மற்றும் இந்தியாவுடன் ஒரு சமநிலைக்கு கொண்டுவரவும் அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர்.

லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க), கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நவ சமசமாஜக் கட்சி (ந.ச.ச.க) போன்ற "இடது" அமைப்புகளும் இதே முறையிலான மிகவும் விஷமத்தனமான பாத்திரங்களை இட்டுநிரப்புகின்றன. இவர்களது முழுப் பிரச்சாரமும், இரு பிரதான முதலாளித்துவக் கூட்டணிகளிலும் ஏதாவது ஒன்றுக்கு ஆதரவளிப்பதைத் தவிர மாற்று வழி கிடையாது என்பதை தொழிலாளர்களுக்கு புகட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்தக் கூட்டணிகள் ஜனநாயகத்தைக் கைவிட்டு, வாழ்க்கை நிலைமைகள் மீது தாக்குதல் தொடுப்பதுடன், உள்நாட்டு யுத்தத்தை மீண்டும் தொடங்குவதற்கு அச்சுறுத்துகின்ற ஒரு நிலைமையிலும் கூட, அவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள். நவ சமசமாஜக் கட்சி, ஐ.தே.மு வை "குறைந்த கெடுதியாக" வர்ணிக்கும் அதேவேளை, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆதரிப்பதோடு, அதில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டுள்ளன.

எந்தக் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றாலும், தொழிலாளர் வர்க்கம் முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் கடுமையான பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படப் போவதில்லை என சோ.ச.க வலியுறுத்துகின்றது. எந்தவொரு கட்சியும் "குறைந்த கெடுதியை" பிரதிநிதித்துவம் செய்யவில்லை. சாதாரண உழைக்கும் மக்கள் தமது சொந்த அவசியங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரே வழி, பாராளுமன்ற அரசியலின் இரும்புத் திரையை முழுமையாக தகர்த்தெறிந்து, முதலாளித்துவ வர்க்கத்தின் சகல தட்டினரிடமிருந்தும் தமது சுயாதீனத்தை உறுதிப்படுத்திக் கொள்வது மட்டுமேயாகும்.

எமது பிரச்சாரமானது, இலங்கை சமுதாயத்தின் புரட்சிகர மாற்றத்திற்காக தொழிலாளர்களதும் கிராமப்புற ஏழைகளதும் வெகுஜன இயக்கம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கான அரசியல் அடித்தளத்தை ஸ்தாபிப்பதை இலக்காகக் கொண்டதாகும். இதன் மையத் தகவமைவு கருத்துக்கள் மற்றும் கொள்கைகள் பற்றிய ஒரு கலந்துரையாடலை அபிவிருத்தி செய்வதே அன்றி, வாக்குகளை வெல்வதல்ல. தற்போதைய நெருக்கடி, பிரதமரிடமோ அல்லது ஜனாதிபதியிடமோ அல்லது அவர்களைப் போலவே பிற்போக்குத்தனம் கொண்ட அவர்களின் கட்சிகளிலோ அன்றி, உலகப் பொருளாதாரத்துடனும் மற்றும் முதலாளித்துவ இலாப அமைப்புடனும் பின்னிப்போயுள்ள அடிப்படை முரண்பாடுகளிலேயே வேரூன்றியுள்ளது.

அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பு

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பு இன்றைய உலக அரசியலின் பிரதான காரணியாக உள்ளது. வாஷிங்டன், "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்ற பதாகையின் கீழ், உலகின் பிரதான மூலோபாயப் பிராந்தியங்களில் தமது சவால் செய்யமுடியாத மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ள முயற்சிக்கின்றது. புஷ் அரசாங்கத்தின் வெளிப்படையான அச்சுறுத்தல்கள், பொருளாதார மோசடிகள் மற்றும் ஆக்கிரமிப்பு யுத்தம் ஆகியவை சக்தியின் அறிகுறிகள் அல்ல. மாறாக, ஒரு அரசின் -அமெரிக்கா- பொருளாதார மற்றும் மூலோபாய ஆதிக்கத்தை அதன் சகல எதிரிகள் மீதும் உறுதிப்படுத்துவதன் மூலம், உலக பொருளாதாரத்துக்கும் காலங்கடந்த தேசிய அரச அமைப்புக்கும் இடையிலான மிக அடிப்படையான பரஸ்பர முரண்பாடுகளை தீர்த்துக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் அவநம்பிக்கையான முயற்சிகளாகும்.

வாஷிங்டன், ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து, தெற்காசியப் பிராந்தியம் முழுவதிலும் தனது செல்வாக்கை ஸ்தாபித்துக்கொள்ள முயற்சிக்கின்றது. பிராந்தியத்திலான மோதல்கள் அதன் ஏகாதிபத்திய குறிக்கோள்களுக்கு தடையாக இருப்பதால், அவை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என புஷ் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மேசையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளன; நேபாள மன்னராட்சிக்கும் மா ஓ வாத எதிரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதே சமயம், கொழும்பு அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் "சமாதான முன்னெடுப்புகளை" தழுவிக்கொள்ளத் தள்ளப்படுகின்றன. இந்த ஆரம்ப நடவடிக்கைகளில் எதுவும் தெற்காசியாவில் உள்ள வெகுஜனங்களுக்கு "சமாதானத்தையும் ஜனநாயகத்தையும்" கொண்டுவரப் போவதில்லை. மாறாக, அவை ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்று அதன் சொந்த பூகோள-அரசியல் மற்றும் மூலோபாய பொருளாதார நலன்களை அடைவதற்கான வாஷிங்டனின் முயற்சிகளில் ஒரு பாகமேயாகும்.

இராட்சத அமெரிக்க கம்பனிகளைப் பொறுத்தளவில், பொருளாதார பந்தயத்தொகை அதிகரித்துச் செல்கின்றது. சீனாவைப் போன்று இந்தியாவும் நாடுகடந்த முதலீட்டின் பிரதான இலக்காகியுள்ளது. இந்தியாவில் காணப்படும் வெளிப்படையானதும் வரையறையற்றதுமான மலிவு உழைப்பின் அளிப்பும் மற்றும் பயிற்றப்பட்ட உழைப்பின் அளிப்பும், கணனி மென்னிய ஆய்வுக்கும், அபிவிருத்திக்கும் மற்றும் சேவைத் தொழிற்துறையினதும் துரித விரிவாக்கத்திற்கான அடிப்படைகளாகியுள்ளன. சீனா, "உலகின் வேலைத்தளத்தம்" எனப் பெயர் பெற்றுள்ள அதே வேளை, இந்தியா "உலகின் காரியாலயமாகி" வருகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, தெற்காசியாவானது வாஷிங்டனின் குறிக்கோள்களின் மையமாக விளங்கும், பிரதான வளங்கள் நிறைந்த மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கிற்கு அருகாமையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இலங்கையின் உத்தியோகபூர்வ நிறுவனத்தின் சகல பகுதியினரும், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான சட்டவிரோதமான யுத்தம் உட்பட, அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு முழுமையாக ஆரவளித்துள்ளனர். ஆளும் வட்டாரங்களின் "விவாதங்களில்" செல்வாக்குச் செலுத்தும் பிரதான விடயம் என்னவென்றால், இந்த நிலைமையை தமது சொந்த இலக்குகளுக்காக எவ்வாறு சிறந்த முறையில் சுரண்டிக்கொள்வது என்பதாகும். 2001 செப்டம்பர் தாக்குதல்களை அடுத்து, குமாரதுங்க விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசையை நோக்கித் தள்ளுவதற்காக, அமெரிக்காவின் "பயங்கரவாதம் மீதான யுத்தத்தின்" மூலம் முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தை பற்றிக்கொள்ளத் தவறியபோது, பெரும் வியாபாரிகள் ஒரு பாராளுமன்ற சதிக்கு சமமான ஒன்றை ஏற்பாடு செய்தனர். ஸ்ரீ.ல.சு.க அரசாங்கத்தின் பிரதான அமைச்சர்களில் சிலரையும், பராளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் கட்சிமாற இணங்கவைத்ததன் மூலம், முன்னைய தேர்தல் முடிவடைந்து சற்றே ஒரு வருடமாகி இருந்த நிலையிலும் ஒரு புதிய தேர்தலுக்கு வழிவகுத்தனர்.

புதிதாக அதிகாரத்திற்கு வந்த ஐ.தே.மு அரசாங்கம், உடனடியாக விடுதலைப் புலிகளுடன் ஒரு யுத்த நிறுத்த உடன்படிக்கையை கைச்சாத்திட்டதுடன், பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டது. இந்த "சமாதான முன்னெடுப்புகள்" வாஷிங்டனின் கோரிக்கைகளுக்கு அடிபணிவதை மட்டுமன்றி, இலங்கைக் கம்பனிகளின் ஆழமான நலன்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்றது. இந்த அவசியங்கள், விக்கிரமசிங்கவின் "புத்துயிர் பெறும் இலங்கை" என்ற பெயரிலான வேலைத்திட்டத்தில் நேரடியாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை, 1977ல் முதலாவதாக திறந்த சந்தைப் பொருளாதாரத்தை தழுவிக்கொண்ட நாடுகளில் ஒன்றாக இருந்த போதிலும், 20 வருடகால உள்நாட்டு யுத்தத்தின் பெறுபேறாக பின்தள்ளப்பட்டுள்ளதையிட்டு இந்த ஆவனம் கவலை தெரிவிக்கின்றது. இப்போது, அரசாங்கம் "சமாதான முன்னெடுப்புகளின்" பின்னணியுடன் இலங்கையை வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஒரு பிரதான அடித்தளமாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றது. பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட குறிப்பிட்டவாறு, ஹொங் கொங் சீனாவிற்கான நுழைவாயிலாக மாறியதைப் போன்று, இலங்கை இந்தியாவிற்கான பொருளாதார மற்றும் நிதி நுழைவாயிலாக மாறவுள்ளது.

"புத்துயிர் பெறும் இலங்கை" எனும் ஆவணமானது, தீவின் வழக்கில் இல்லாத மற்றும் அழிந்துகொண்டிருக்கும் பொது நிர்வாக வியூகங்களை நவீனமயப்படுத்துவதன் பேரில், அரசாங்க செலவுகளை குறைத்தல், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களையும், சேவைகளையும் கம்பனிகளுக்கு கொடுத்தல் அல்லது தனியார்மயமாக்கல், தொழிலாளர்களுக்கு எஞ்சியுள்ள மற்றும் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள அனைத்து நிலைமைகளையும், உரிமைகளையும் துடைத்துக்கட்டுவதையும் இலக்காகக் கொண்ட ஒரு தொகை பரந்த மறுசீரமைப்பு திட்டங்களை முன்வைத்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, அது, தென்னிந்தியாவில் ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ள புதிய உயர் தொழில்நுட்ப தொழிற்சாலைகளுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான ஒரு முன்நிபந்தனையாக, யுத்தத்திற்கு முடிவுகட்டுவதை இலக்காகக் கொண்டிருந்தது.

இதன் மூலம், இந்த "சமாதான முன்னெடுப்புகள்", விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தையாளர் சுட்டிக்காட்டியது போல், நாட்டை புதிய "புலி பொருளாதாரத்தை" நோக்கி மாற்றியமைப்பதை இலகுவாக்குவதன் பேரில், தீவின் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் முதலாளித்துவ கும்பல்களுக்கிடையில் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும் திட்டத்தை வகுத்துக்கொள்வதற்கே அன்றி, சாதாரண உழைக்கும் மக்கள் முகம்கொடுக்கும் துன்பங்களையிட்டு அக்கறை செலுத்துவதை குறிக்கோளாகக் கொண்டதல்ல.

எவ்வாறெனினும், கடந்த ஐந்து தசாப்த காலங்கள் பூராவும், தமிழர் விரோத பேரினவாதத்தை அடிப்படையாக்க கொண்டிருந்த கொழும்பு அரசியல் நிறுவனம், சமாதானப் பேச்சுவார்த்தைகளின் காரணமாக ஆழமாக பிளவடைந்துள்ளது. ஐ.தே.மு அரசாங்கம், விடுதலைப் புலிகளுக்கு அனாவசியமான சலுகைகளை வழங்குவதாக குற்றஞ் சாட்டும் ஊடகங்கள் மற்றும் அரச அதிகாரத்துவத்தின் சில பகுதியினரின் தாக்குதலுக்கு உள்ளாகியது. அதேபோல், குமாரதுங்க, இராணுவ உயர்மட்டத்தினர், பெளத்த பெரும் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு மூதலீடுகள் ஊடுருவுவதை எதிர்க்கும் வியாபாரிகள் தட்டினரின் சார்பாக செயற்படுவதன் மூலம், யுத்த நிறுத்தத்திற்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் குழிபறிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். விடுதலைப் புலிகள் "சமாதானத்திற்கான" தமது பிரேரணைகளை முன்வைத்து சில நாட்களுக்குள், குமாரதுங்க, பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று அரசாங்க அமைச்சுக்களை அபகரித்துக்கொண்டதோடு, மூன்று மாதங்களின் பின்னர் அரசாங்கத்தையும் பதவி விலக்கினார்.

இறுதி ஆய்வுகளில், "சமாதான முன்னெடுப்புகளின்" தலைவிதி, குமாரதுங்கவாலோ அல்லது அவரது இலங்கை ஆதரவாளர்களாளோ அன்றி, வாஷிங்டனிலும் உலகின் ஏனைய பிரதான நகரங்களிலுமே தீர்மானிக்கப்படும். இதுவரையிலும், விக்கிரமசிங்க அமெரிக்காவின் ஆதரவை அனுபவித்து வந்துள்ளதோடு, அது அவரின் எதிரிகள் மீது ஒரு தடையாக செயற்பட்டுவந்துள்ளது. ஆயினும், எவரும் எந்தவொரு மாயையும் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது. புஷ் நிர்வாகம், தமது திட்டங்களுக்கு "பயங்கரவாத" விடுதலைப் புலிகள் ஒரு தடையாக இருப்பதாக தீர்மானித்தால், அதற்கு எதிராக இராணுவ பலத்தை பயன்படுத்துவதை அங்கீகரிப்பதிலும், நாட்டை மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்குள் தள்ளிவிடுவதிலும் பின்வாங்கப் போவதில்லை.

"தேசிய சுதந்திரத்தின்" இறுதி முடிவு

இலங்கை அரசியல் ஒரு திருப்புமுனையை நெருங்கியுள்ளது. 1948ல் பிரித்தானிய காலனித்துவவாதிகள், இலங்கை முதலாளித்துவ வர்க்கத்திற்கு அதிகாரத்தை உத்தியோகபூர்வமாக கையளித்தது முதல் இன்றுவரை, "தேசிய சுயாதீனம்" பற்றிய முழு பரிசோதனைகளும் முழுமையாக முடிவிற்கு வந்துள்ளதை நிரூபிக்கின்றது. கடந்த 56 வருடகால வரலாறும், லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி கோட்பாட்டின் அடிப்படை கொள்கைகள் பலம்வாய்ந்த முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது: அந்தவகையில், காலங்கடந்த முதலாளித்துவ அபிவிருத்திகளைக் கொண்ட நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கம், மக்களில் பெரும்பான்மையினரின் அடிப்படை ஜனநாயக அபிலாசைகள் மற்றும் சமூகத் தேவைகளக் கூட இட்டு நிரப்ப இலாயக்கற்றுப் போயுள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே, இலங்கை பிரபுத்துவத் தட்டு, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த, மிகவும் போராளிக் குணம்கொண்ட மற்றும் துணிவான தொழிலாள வர்க்க தட்டினரை எதிர்கொண்டது. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்ட புதிய ஆளும் வர்க்கம், இலங்கையை, பிரித்தானிய இந்தியாவின் ஏனைய பிரதேசங்களில் இருந்து வேறுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியதன் மூலம், தனது செல்வந்த நிலைமைகளை பாதுகாத்துக்கொள்ள முயற்சித்தது. பிரித்தானிய காலனித்துவவாதிகளும் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களும், இந்திய துணைக்கண்டத்தில் விரிவடையும் புரட்சிகர வெடிப்புக்களில் இருந்து தீவை தனிமைப்படுத்துவதற்காக, பாக்கு நீரிணை ஊடாக ஒரு தேசிய எல்லையை வரைவதன் மூலம் மட்டுமே, ஒவ்வொருவருக்கும் பொருத்தமான அவசியங்களை சிறந்த முறையில் காத்துக்கொள்ள முடியும் என்ற உடன்பாட்டிற்கு வந்தனர்.

பல சந்தர்ப்பங்களிலும், இலங்கை முதலாளித்துவம், கீழ் மட்டத்திலிருந்து அபிவிருத்தியடைந்த அரசியல் கிளர்ச்சிகள் மற்றும் சமூக அமைதியின்மைக்கு, "பிரித்தாளும்" பழைய உபாயத்தைப் பயன்படுத்தி இனவாத பதட்டநிலைமைகளை தூண்டிவிடுவதன் மூலம் பதிலளித்தது. 1948ல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் முதலாவது சட்டம், 19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பிரித்தானிய தேயிலை மற்றும் இறப்பர் பெருந்தோட்டங்களில் வேலைசெய்வதற்காக கொண்டுவரப்பட்ட தமிழ் பேசும் தொழிலாளர்களின் பிரஜா உரிமையைப் பறித்தது. ஒரு மில்லியன் மக்கள் --ஜனத்தொகையில் 10 வீதம்-- ஒரே இரவில் அவர்கள் தசாப்த காலங்களாக வாழ்ந்த நாட்டிலேயே "அயல் நாட்டவர்களாகப்" பிரகடனப்படுத்தப்பட்டனர். 1960-64 மற்றும் 1970-77 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த, குமாரதுங்கவின் தாயாரான ஸ்ரீமா பண்டாரநாயக்கவின் ஸ்ரீ.ல.சு.க அரசாங்கம் ஐ.தே.க வின் கொள்கைகளை மேலும் முன்னெடுத்தது. புதுடில்லி உடனான ஒரு உடன்பாட்டின் கீழ், இலட்சக்கணக்கான தமிழர்கள், சில சந்தர்ப்பங்களில் பலாத்காரமாகவும் தென்னிந்தியாவில் உள்ள தரம் குறைந்த முகாம்களுக்கு நாடுகடத்தப்பட்டதோடு, சிலர் இன்னமும் அவற்றில் உயிர் வாழ்கின்றனர்.

1940கள் மற்றும் 1950களிலும் ல.ச.ச.க வின் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தமிழர் விரோத பேரினவாதத்தை உறுதியாக எதிர்த்து வந்த அதேவேளை, 1964 அளவில், அவர்கள் தேசியவாத அரசியலின் அழுத்தத்திற்கு அடிபணிந்துபோனதுடன், பண்டாரநாயக்கவின் கூட்டரசாங்கத்துடன் இணைந்துகொண்டனர். இந்த பெரும் காட்டிக்கொடுப்பு, இனவாதத்தின் தடையில்லா அபிவிருத்திக்கு ஊக்கமூட்டியதுடன், இனரீதியிலான எதிர்ப்பையும் மற்றும் பிரிவினைவாதத்தையும் தழுவிக்கொண்ட --தெற்கில் ஜே.வி.பி, வடக்கில் விடுதலைப் புலிகள் போன்ற-- குட்டி முதலாளித்துவ நிலைப்பாடுகள் வெளித்தோன்றுவதற்கும், அதிலிருந்து உள்நாட்டு யுத்தத்திற்கான அடித்தளத்தை உருவாக்கியதற்கும் நேரடிப் பொறுப்பாகும்.

1971ல் அதிருப்திகண்ட சிங்கள கிராமப்புற இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த ஜே.வி.பி, ஸ்ரீ.ல.சு.க தலைமையிலான கூட்டரசாங்கத்திற்கு எதிரான ஒரு கிளர்ச்சியை ஏற்பாடு செய்தது. பண்டாரநாயக்க, கிளர்ச்சியை அடக்குவதற்காக மட்டுமன்றி, பரந்த அதிருப்தியை நசுக்குவதற்காகவும் பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்தினார். அவரது ஆதரவை மீண்டும் தூக்கி நிறுத்துவதற்காக, அவர் வியாபாரம், கல்வி மற்றும் அரசதுறை தொழில்களில் சிங்களவர்களுக்கு சார்பான ஒரு தொகை பேதமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்த நடவடிக்கைகள், பெளத்தத்தை அரச மதமாகவும் மற்றும் சிங்களத்தை உத்தியோகபூர்வ மொழியாகவும் மாற்றும் இனவாத அரசியலமைப்பை நிறுவுவதன் மூலம் உச்சகட்டத்தை அடைந்தன.

தமிழர்களுக்கு மத்தியில் பரந்த ஆத்திரத்தை தூண்டிவிட்ட பண்டாரநாயக்கவின் வேலைத்திட்டம், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஐ.தே.க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. ஜெயவர்தன, தேசியப் பொருளாதார ஒழுங்கை கைவிட்டு, பொருளாதாரத்தை வெளிநாட்டு முதலீட்டுக்காக திறந்துவிடுவதை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்தார். இது அதிகரித்துவரும் எதிர்ப்பை வெளிக்கொணர்ந்ததை அடுத்து, பண்டாரநாயக்கவின் வழியில் பிரதிபலித்த அவர், சிங்கள பேரினவாதத்தை தூண்டிவிட்டதோடு ஜனநாயகவிரோத நடவடிக்கைகளையும் அமுல்படுத்த்தினார். அவர் 1978ல் பரந்த ஜனாதிபதி அதிகாரங்களைக் கொண்ட ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகம் செய்தார். ஐந்து வருடங்களின் பின்னர், 1983ல், ஐ.தே.க குண்டர்கள் தமிழர் விரோத படுகொலைகளை தூண்டிவிட்டதோடு, அது இரு தசாப்தங்களாக தொடர்ந்த உள்நாட்டு யுத்தம் வெடிப்பதற்கு வழிசமைத்தது.

1987ல், உள்நாட்டில் வளர்ச்சிகண்டுவந்த வர்க்கப் போராட்டங்களுக்கும் மற்றும் இந்தியாவின் அழுத்தத்திற்கும் முகம் கொடுத்த ஜெயவர்தன, யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்கான பேச்சுவார்த்தைக்கு முயற்சித்தார். அவர், வடக்கு கிழக்கிற்கு இந்திய "சமாதானப் படையை" அழைத்துவருவதற்காக புதுடில்லியுடன் ஒரு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். அவர்களின் பணி, விடுதலைப் புலிகள் நிராயுதபாணிகளாக்கப்படுவதையும், புதிய மாகாண சபை கட்டமைப்பிற்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட முறையையும் மேற்பார்வை செய்வதாகும். ஆனால் விளைவு அழிவுகரமானதாக இருந்தது. வடக்கில், இந்தியப் படைகள் விடுதலைப் புலிகளுடன் மோதலுக்கு வந்தன. தெற்கில், இந்திய-இலங்கை உடன்படிக்கை ஒரு கூர்மையான அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்தது. ஐ.தே.க, தொழிலாளர் வர்க்கத்தை பயமுறுத்துவதற்காக, பேரினவாதப் பிரச்சாரமொன்றைக் கட்டவிழ்த்து விட்டிருந்த ஜே.வி.பி யின் சேவையை ஆரம்பத்திலேயே பயன்படுத்திக் கொண்டது. தனது குறிக்கோளை அடைந்தவுடன், தனது கூட்டாளியான ஜே.வி.பி மீது பாய்ந்து விழுந்த அரசாங்கம், ஜே.வி.பி யின் உயர்மட்டத் தலைவர்களை படுகொலை செய்வதன் மூலமும், அதனை அடுத்து, ஜே.வி.பி யின் ஆதரவாளர்களை துடைத்துக்கட்டும் சாக்குப் போக்கின் கீழ், தெற்கில் கிராமப்புற எழுச்சிக்கு எதிரான மனிதப்படுகொலை இயக்கமொன்றை முன்னெடுத்தது.

சாதாரண மக்களைப் பொறுத்தளவில், இந்த அழிவு அதி விசாலமானதாகும். முழு ஜனத்தொகை இன்னமும் 20 மில்லியனை எட்டாத நாட்டில், 1971ல் 20,000 கிராமப்புற இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, அடக்குமுறைக் காலகட்டமான 1980களின் பிற்பகுதியில், 60,000 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். உள்நாட்டு யுத்தம் மேலும் 60,000 உயிர்களைப் பலிகொண்டுள்ளதோடு அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்தப் புள்ளிவிபரங்கள், ஆளும் வர்க்கமும் அதன் தேசியவாத முன்னோக்கும், இலங்கை மக்களுக்கு திருப்திகரமான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகளைக் கூட வழங்க இலாயக்கற்றுப் போயுள்ளதை நிரூபிக்கப் போதுமானவையாகும்.

உள்நாட்டு யுத்தமும் சோசலிசமும்

ஆரம்பத்தில் இருந்தே உள்நாட்டு யுத்தத்தை உறுதியாக எதிர்த்து வந்த ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமுமே ஆகும். நாம், உண்மையான மற்றும் நிலையான சமாதானத்தை உருவாக்குவதற்கான ஒரே வழியாக வடக்குக் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவப் படைகளை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் வெளியேற்றுமாறு கோருகிறோம். யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்கான தனது வேலைத் திட்டத்தை அபிவிருத்தி செய்வதில், சோ.ச.க ஒரு சவால் செய்யமுடியாத கொள்கையால் வழிநடத்தப்படுகிறது: அது, தொழிலாளர் வர்க்கம் முதலாளித்துவக் கட்சிகளில் இருந்தும் மற்றும் முதலாளித்துவ அரசில் இருந்தும் தனது அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிதம் செய்துகொள்வதாகும்.

விக்கிரமசிங்கவின் அல்லது குமாரதுங்கவின் அனுசரணையின் கீழ் சமாதானத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கை ஒரு மாயையாகும். அதற்கு மாறாக, தொழிலாளர்கள் ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.ல.சு.க வுடன் கட்டுண்டிருக்கும் வரை, சாதாரண இலங்கையர்கள் எப்பொழுதும் யுத்த அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க வேண்டி வரும் என்பதையே கடந்த 50 வருடகால அனுபவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே ஒரு நிலையான தீர்வை வழங்க முடியும். அது, மிக வறுமையான கிராமப்புற மக்களுக்கு அழைப்பு விடுப்பதோடு, சகல வடிவங்களிலுமான வகுப்புவாதம், பேரினவாதம் மற்றும் பிரிவினைவாதங்களையும் பொதுவில் நிராகரிப்பதன் ஊடாக, தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களை ஐக்கியப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமே இது சாத்தியமாகும்.

சோ.ச.க, ஆயுத பலத்தால் ஒற்றை ஆட்சியை பாதுகாப்பதை எதிர்க்கின்றது. இத்தகைய கொள்கை, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பது மட்டுமன்றி, தவிர்க்க முடியாத வகையில் இராணுவவாதத்தின் செல்வாக்கிற்கு வழிவகுப்பதோடு, நாடு முழுவதும் ஜனநாயக உரிமைகளுக்கு குழிபறிக்கின்றது.

அதே சமயம், ஒரு தனியான முதலாளித்துவ தமிழீழ அரசுக்கான விடுதலைப் புலிகளின் கோரிக்கையையும் சோ.ச.க எதிர்க்கின்றது. இந்தக் கோரிக்கையின் மூலம் முன்வைக்கப்படுவது, தமிழ் மக்களின் நலன்கள் அல்ல. மாறாக பீ.எல்.ஓ, ஏ.என்.சீ, மற்றும் ஐ.ஆர்.ஏ போன்ற ஏனைய தேசிய இயக்கங்களின் முதலாளித்துவ தலைவர்களைப் போல், தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்காக பூகோள மூலதனத்துடன் தனது சொந்த உறவை ஸ்தாபிதம் செய்துகொள்ள முயற்சிக்கும், தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களேயாகும். விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்குக்கான கட்டுப்பாட்டை பொறுப்பேற்றால், அது, தமிழ் தொழிலாளர்களின் நேரடி செலவில், பரஸ்பரம் சாதகமான உடன்பாட்டை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, பூகோள முதலீட்டாளர்களுக்கு உடனடியாக அழைப்பு விடுக்கும்.

அதே போல், "சமாதானக்" கொடுக்கல் வாங்கல்களின் ஒரு அங்கமாக பிரேரிக்கப்பட்டுள்ள பலவிதமான அதிகாரப் பகிர்வுத் திட்டங்களையும் சோ.ச.க எதிர்க்கின்றது. இந்தத் திட்டங்களில் இரண்டு பொதுத் தன்மைகள் காணப்படுகின்றன: அவை இனவாதமும், ஜனநாயக உரிமைகள் பற்றிய அலட்சியமுமாகும். அவர்கள் அனைவரும், வடக்குக் கிழக்கில், பூகோள மூலதனத்தின் கட்டளைகளை அமுல்படுத்துவதில் கொழும்பு அரசாங்கத்துடன் கூட்டாக செயற்படும், தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படாத, இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இடைக்கால நிர்வாக சபையை அமல்படுத்துவதில் ஈடுபாடுகொண்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் பிரேரணையின்படி, இந்த நிர்வாக சபைக்குள், தனது அமைப்பிற்கு பெரும்பான்மையும், ஐந்துவருட காலத்திற்கு, அனைத்து அதிகாரிகளையும் நியமிப்பது மற்றும் விலக்குவது, மாவட்டக் குழுக்களை நியமிப்பது அல்லது கலைப்பது உட்பட வடக்குக் கிழக்கு பிரதேசங்களில் நிர்வாகம் சம்பந்தமான பரந்த அதிகாரங்கள் குறிப்பாக உத்தரவாதம் செய்யப்படுகின்றது. அதே சமயம், முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களுக்கு இடையில் பிரிவினையை நிறுவனமயப்படுத்துவதானது, தவிர்க்க முடியாத வகையில் எதிர்கால பதட்ட நிலைமைகளுக்கும் மோதல்களுக்கும் அடித்தளமிடும்.

நிஜமான ஜனநாயகத் தீர்வுக்காக அடித்தளமிடுவதன் பேரில், அரசியலமைப்பு ஒன்றை வரைவதையும், தீர்க்கப்படாத சகலவிதமான ஜனநாயக உரிமைகள் பற்றிய பிரச்சினைகளை தீர்ப்பதையும் இலக்காக் கொண்ட அரசியலமைப்புச் சபை ஒன்றை கூட்டுமாறு சோ.ச.க சிபார்சு செய்கின்றது. சோ.ச.க வின் பிரேரணைகள், குமாரதுங்க, இந்தத் தேர்தலின் பின்னரும் அமுல்படுத்த விரும்பும், 1972 மற்றும் 1978 அரசியலமைப்பை வரைவதற்காக மேற்கொள்ளப்பட்ட சிடுமூஞ்சித்தனமான பயிற்சிகளுடன் பொதுவான எதையும் கொண்டிருக்கவில்லை. சாதாரண உழைக்கும் மக்களால், அவர்களுக்காகவே வெளிப்படையாகவும் மற்றும் ஜனநாயக முறையிலும் தேர்வுசெய்யப்பட்ட ஒரு பிரதிநிதிகள் சபையாலேயே, உண்மையாகவே பெரும்பான்மையான மக்களின் நலன்களை வெளிப்படுத்தும் ஒரு புதிய அரசியலமைப்பை வரைய முடியுமே ஒழிய, மக்களின் முதுகுக்குப் பின்னால் செயற்படும் முதலதாளித்துவ அரசியல்வாதிகளின் கும்பல்களால் அல்ல.

அரசில் இருந்து மதத்தை வேறுபடுத்தாமல், உண்மையான ஜனநாயகத்தை ஸ்தாபிதம் செய்வது என்பது சாத்தியமற்றதாகும். இது, பெளத்தத்தை அரச மதம் என்ற ஸ்தானத்தில் இருந்து கீழிறக்குவதையும், மத அமைப்புக்களுக்கான அரச நிதிகளை இல்லாமல் செய்வதையும் அர்த்தப்படுத்துகிறது. இது, பெருந்தோட்டங்களில் உள்ள தமிழ் மக்களின் உரிமைகளை பறிப்பதை தொடர்ந்து முன்னெடுக்க உதவும், சட்டரீதியான தடைகள் உட்பட, சகலவிதமான ஒடுக்குமுறையான மற்றும் பேதமைகளை உருவாக்கும் சட்டங்களையும், அவற்றோடு சேர்த்து, வெகுஜன பாதுகாப்புச் சட்டம், அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றையும் ஒழித்துக்கட்டவும் வேண்டுகோள் விடுக்கின்றது.

ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசுகள்

இந்தியத் துணைக்கண்டத்தில், வெவ்வேறு தேசிய அரசுகளின் ஆட்சியாளர்களாக பல தேசிய முதலாளிகளின் கைகளுக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொடுத்த, சுதந்திரத்திற்குப் பிந்திய ஒழுங்குகள், தொழிலாளர் வர்க்கத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அழிவைத் தவிர வேறு எதையும் பெற்றுக்கொடுக்கவில்லை. ஆளும் தட்டுக்கள், கடந்த 50 வருடங்களாக, தேசிய மற்றும் பிராந்திய மோதல்களைத் தூண்டிவிடுவதன் மூலமே, தமது ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல முயற்சித்து வந்துள்ளனர். இந்த வழிமுறை, இரு அணுவாயுதச் சக்திகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் தற்போதைய முரண்பாடுகளில் இருந்து மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

முதலாளித்துவ ஆளுமையின் கீழான தேசிய சுயாதீனத்தின் மூலம், ஏகாதிபத்திய ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிடவில்லை. அது வெறுமனே ஒரு உருவக மாற்றமேயாகும், என்ற ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் ஆய்வு நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்திற்கு, யுத்தத்திற்குப் பிந்திய எழுச்சியின்போது, மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார அபிவிருத்தியின் மூலம், எல்லாவித்திலுமான முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு, தொடர்ந்தும் பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றங்கள் பற்றிய எதிர்பார்ப்புக்களை கொண்டிருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தமையினால், இந்த உண்மை ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு தெளிவின்றி இருந்தது. ஆயினும், கடந்த 20 வருட காலங்கள் பூராவும், உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் மாற்றங்கள் --பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தி முன்னெடுப்புகள்-- தேசிய பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் முழுமையாக முடிவிற்கு வந்துள்ளன.

துணைக்கண்டம் பூராவும் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள், சொற்களால் தெளிவுபடுத்த முடியாத வறுமை நிலைக்குள் இழுத்துத் தள்ளப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், தமது பிரதிவாதிகளுக்கு எதிராக, இலாபத்தை பொதிசெய்ய போட்டியிடுவதற்காக, ஒவ்வொரு தேசிய மற்றும் பிராந்திய குழுக்கள் மீது செயற்படும் கடுமையான அழுத்தமானது, உடன்பிறந்தோரையும் கொலை செய்யும் ஒரு தொடர்ச்சியான மத, இன மற்றும் பிரிவினைவாத பதட்டங்களை தூண்டிவிட்டுள்ளது.

தெற்காசிய ஐக்கிய சோசலிச குடியரசுகளின் ஒரு அங்கமாக, ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசுகளுக்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே, இந்தப் பிராந்தியத்தில் உள்ள எல்லா மக்களினதும் முழு பொருளாதார மற்றும் கலாச்சார அபிவிருத்தியையும் உறுதிப்படுத்த முடியும். பூகோள உற்பத்தி சக்திகளின் நிலையான அபிவிருத்தி, இப்போது வறுமை, பட்டினி மற்றும் ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டும் வெற்றிகரமான இலக்கை சாத்தியமாக்கியுள்ளது. அதே சமயம், இந்த உற்பத்திச் சக்திகளை, தேசிய அரசினதும் மற்றும் இலாபம் சுரண்டும் அமைப்பினதும் வரம்பிலிருந்து விடுவித்துக்கொண்டு, முழு மனித குலத்தினதும் அவசியங்களை இட்டுநிரப்புவதன் பேரில் பயன்படுத்த முடியும். இது நியாயமாகத் திட்டமிடப்பட்டுள்ள பூகோள சோசலிச பொருளாதாரத்தின் அபிவிருத்திக்கான ஒரு பொதுப் போராட்டத்தில், பிராந்தியம் பூராவும் மற்றும் அனைத்துலகிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதை வேண்டிநிற்கிறது. சோ.ச.க இந்த முன்னோக்கிற்காகவே போராடுகின்றது. சோ.ச.க, சோசலிச புரட்சிக்கான உலகக் கட்சியான, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியாகும்.

ஆழமடைந்துவரும் சமூக சமத்துவமின்மை

1940 களிலும் 1950களிலும், தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களின் பெறுபேறாக, இலவசக் கல்வி, சுகாதார சேவை, ஓய்வூதியம் மற்றும் நலன்புரி சேவைகளை வழங்கும், ஆசியாவிலேயே மிகவும் முன்னேற்றமான நலன்புரி அரசு என பெருமைப்பட்டுக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்கு கிட்டியிருந்தது. ஆனால் கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்குள், ஆட்சிக்கு வந்த ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.ல.சு.க அரசாங்கங்களால், இந்த வெற்றிகள் மேலும் மேலும் சீரழிக்கப்பட்டன.

விக்கிரமசிங்கவின் "புத்துயிர் பெறும் இலங்கை" ஆவணத்தில் அடங்கியுள்ள உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களும் கூட, முதலாளித்துவ ஆளுமை பற்றி தெளிவான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது.

* ஜனத்தொகையில் 25 வீதத்திற்கும் 40 வீதத்திற்கும் இடைப்பட்டவர்கள் நிரந்தர மற்றும் தற்காலிக வறுமையால் வாடுகின்றனர். ஒரு நாளுக்கு 2 அமெரிக்க டொலர் வருமானத்தை, அவசியமான குறைந்தபட்ச வரையறையாக எடுத்துக்கொண்டால், நூற்றுக்கு 45 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள். பெரும்பாலான மக்கள் விவசாயத்திலும், மீன்பிடியிலும் தங்கியுள்ள கிராமப்புற மாகாணங்களான ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் வறுமையின் வீதம் 50 வீதத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

* கிராமப்புற மாகாணங்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவர்களுக்கு மின்சார வசதி கிடையாது. அரைவாசிப்பேருக்கு தண்ணீர் வசதி அல்லது சுகாதாரமான மலசலகூட வசதி கிடையாது. நாட்டின் ஜனத்தொகையில் 29 வீதத்தினருக்கு மாத்திரமே குழாய் நீர் கிடைக்கும் அதே வேளை, கழிவுப் பொருட்களை அகற்றும் வசதி, கொழும்புத் தலைநகரில் மட்டுமே பரந்தளவில் உள்ளது.

* பிரதானமாக, சுமார் 300,000 இளம் கிராமப்புற பெண் தொழிலாளர்கள், தமது குடும்பத்தைப் பராமரிப்பதற்காக பணம் அனுப்புவதன் பேரில், நாட்டின் துணி மற்றும் ஆடைத்தொழில் துறையின் உழைப்பு முகாம்களில் உழைக்கின்றனர். மேலும் 400,000 ஆண்களும் பெண்களும் தமது குடும்பங்களுக்கு பண உதவி செய்வதற்காக, நாடுகடந்த மலிவு உழைப்புத் தொழிலாளர்களாக மத்திய கிழக்கில் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு உழைக்கின்றார்கள். ஏனைய குடும்பங்கள், எந்தவொரு மாற்றுத் தொழிலுமின்றி ஆயுதப்படைகளில் சேர்ந்துகொண்ட 200,000 இளைஞர்கள் மற்றும் யுவதிகளில் தங்கியுள்ளனர்.

* தேசியளவிலான புள்ளிவிபரங்களில் உள்ளடக்கப்படாத யுத்தப் பிராந்தியமான வடக்கு கிழக்கில், ஜனத்தொகையில் 40 வீதமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இன்னமும் பலர், பற்றாகுறையான, சுகாதாரமற்ற நிலைமையில் உள்ள மற்றும் அவசியமான வசதிகளற்ற அகதி முகாம்களில் உயிர்வாழ்கின்றார்கள். மூன்றில் ஒரு பகுதியில் இருந்து, அரைவாசிவரையான வீடுகள் சேதமாகியுள்ளன அல்லது முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. 12 குடும்பங்களில் ஒரு குடும்பத்தில் இருந்தாவது ஒருவர் யுத்தத்தின் நேரடி விளைவாக கொல்லப்பட்டுள்ளார். மிக வறுமையான குடும்பங்களில் இந்த வீதம் ஏழில் ஒன்றாக உள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி, 5 வயதுக்கு கீழ்ப்பட்ட அனைத்து சிறுவர்களிலும், நூற்றுக்கு 27 வீதமானவர்கள் மெலிந்துபோயுள்ளதோடு 50 வீதமானவர்கள் நிறை குறைந்தவர்களாக உள்ளனர்.

* உத்தியோகபூர்வ வேலையற்றோர் வீதம் அதிகரித்துக்கொண்டுவரும் அதேவேளை, வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களில் 95 வீதமானவர்கள் "உழைக்கும் ஏழைகளாகும்". குறைந்த சம்பளத்திற்கு கூடிய நேரம் வேலை செய்யும், போதுமான இடமின்றி சுகாதாரமற்ற நிலைமைகளின் கீழ் வாழும், தமிழ் பேசும் தோட்டத்தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்களும் இதில் அடங்குவர். கொழும்பில், அமெரிக்க டொலர் 30க்கும் 60க்கும் இடையிலான மாதவருமானம் பொதுவானதாகும்.

சமூக விரிசலின் அடுத்த பக்கமாக, பிரதான வங்கிகள் மற்றும் கம்பனிகள் குறிப்பிடத்தக்க இலாபங்களை அடைந்துள்ளன. கடந்த ஆண்டின் மூன்று காலாண்டுகளுக்கு, இலங்கை ஹேலிஸ் கூட்டுத்தாபனம், வரிசெலுத்திய பின்னர் 605.3 மில்லியன் ரூபாய்களை இலாபமாகப் பெற்றுள்ள அதேவேளை, டீ.எப்.சீ.சீ வங்கி 16 வீதத்தால் இலாபமடைந்துள்ளது. 2003ம் ஆண்டில் செலான் வங்கி குழு, வரி செலுத்திய பின்னர் 1.026 பில்லியன் ரூபாய்களை இலாபமாகப் பெற்றுள்ளது. பெரும்பாலான கம்பனிகள் எந்தவொரு வரியும் செலுத்துவதில்லை. பதிவுசெய்யப்பட்டுள்ள 32,000 கம்பனிகளில் 9,000 கம்பனிகளின் வரி விபரங்கள் மாத்திரமே உள்ளன. அவற்றில் 2,850 கம்பனிகள் மட்டுமே வரி செலுத்தியுள்ளன.

1990களில் பொருளாதார வளர்ச்சி 5.1 என்ற சாதாரண மட்டத்தில் இருந்த போதிலும், "அது வறுமை நிலைமையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தத்" தவறிவிட்டது என "புத்துயிர்பெறும் இலங்கை" என்ற ஆவணம் ஏற்றுக்கொண்டுள்ளது. வேறு வசனங்களில் குறிப்பிட்டால், "பொருளாதார வளர்ச்சி வெளித்தூண்டுதல் இன்றி வறியவர்களுக்காக சொட்டுச் சொட்டாகவேனும் கசியவில்லை." இது, தசாப்தம் பூராவும், ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.ல.சு.க அரசாங்கங்களின் கீழ், கூட்டாக அமுல்படுத்தப்பட்ட சந்தை சீர்திருத்த வேலைத்திட்டத்தின் மூலம், சமூக சமத்துவமின்மை மேலும் அதிகரித்துள்ளதை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்கு சமமானதாகும்.

ஐ.தே.மு வின் கொள்கைகளால் தாக்குதலுக்குள்ளாகி இருப்பது தொழிலாளர்களே என்பது, ஆச்சரியத்திற்குரிய விடயமல்ல. "இலங்கையை ஆசியாவில் அதிகளவு வீதத்திலான பொதுத் துறை ஊழியர்களைக் கொண்ட நாடாக மாற்றியதன் மூலம்", உழைப்புப் படையில் 17 வீதமானவர்கள் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனங்கள் உட்பட்ட, பொதுத்துறையில் தொழில் செய்வதாக "புத்துயிர் பெறும் இலங்கை" குறிப்பிடுகிறது. குமாரதுங்கவின் கீழ் அமுல்படுத்தப்பட்ட கம்பனி மயமாக்கம் மற்றும் தனியார் மயமாக்க கொள்கையை துரிதப்படுத்துவதன் மூலம், இந்த நிலைமையை ஈடுசெய்ய ஐ.தே.மு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இப்போதே ஆயிரக்கணக்கான தொழில்கள் அழிக்கப்பட்டுள்ளதோடு, துறைமுகம், புகையிரதம், மின்சாரம், அரச வங்கி மற்றும் ஏனைய துறைகளிலும் திட்டமிடப்பட்டுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் போது, மேலும் பெருந்தொகையான தொழில்கள் அழிக்கப்படும். கடந்த நவம்பரில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில், 2004ல், 100,000 அரசாங்கத் தொழில்களும், 2006ல், மேலும் 200,000 தொழில்களும் வெட்டித்தள்ளப்படுவதற்கான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு துறையும் "சந்தை சக்திகளுக்காக" திறந்துவிடப்படுகிறது. 2002ல் பொது சுகாதார சேவைக்கான அரசாங்க செலவானது, மொத்த தேசிய வருமானத்தில் 1.7 வீதத்தில் இருந்து 1.5 வீதமாக குறைக்கப்பட்டது. பொதுக் கல்விக்கான செலவு 2.5 வீதத்தில் இருந்து 2.3 வரை குறைக்கப்பட்டது. இந்த சேவைகளில் தனியார் சேவைகளை திணிப்பதற்காவே இந்த வெட்டுக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, ஆசிரியர் பயிற்சி தனியார் ஏஜன்ஸிகளுக்கு ஒப்பந்தம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 2004ல், 300 பாடசாலைகள் "நடைமுறை சாத்தியமற்றது" எனப் பிரகடனப்படுத்தப்பட்டு கதவடைக்கப்பட்டுள்ளன. ஐ.தே.மு அரசாங்கம் சிறு விவசாயிகளுக்கான உர மானியங்களை வெட்டித் தள்ளியுள்ளது. அதன் மூலம், இந்த அத்தியாவசியமான விவசாயப் பொருளின் ஒரு மூட்டையின் விலை, ஒரேயடியாக ரூபாய் 350ல் இருந்து ரூபா 950 வரை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தமது ஜீவனோபாயம் அழிவுறுவதைக் கண்டதுடன், இது கிரமாப்புறங்களில் தற்கொலை செய்துகொள்பவர்களின் தொகையையும் அதிகரிக்கச் செய்தது.

தொழிலாள வர்க்கத்திற்கான சோசலிச வேலைத் திட்டம்

சோ.ச.க, சிறுபான்மை செல்வந்தர்களின் இலாபப் பொதியை நிரப்புவதையோ, அல்லது பரந்தளவிலான தனியார் மூலதனத்தை ஒன்றிணைப்பதையோ முன்வைக்கவில்லை. மாறாக, பொதுவில் மக்களின் தேவைகளை இட்டுநிரப்புவதை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறையை முன்வைக்கின்றது. அத்தகைய ஒரு சமுதாய மாற்றத்திற்கான பொருளாதார அஸ்திவாரத்தை தொடக்கிவைப்பதற்காக, நாம், அனைத்து பெரும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை தேசியமயமாக்கல், சுதந்திர வர்த்தக வலயத்திற்குள் இயங்கும் நிறுவனங்கள் உட்பட, பரந்தளவிலான கைத்தொழில் மற்றும் உற்பத்தி கூட்டுத்தாபனங்கள் அனத்தையும் பொது உடமையின் கீழும் பொதுக் கட்டுப்பாட்டின் கீழும் இயங்கும் தொழிற்துறைகளாக மாற்றுவது மற்றும் அனைத்து தீர்க்கமான இயற்கை வளங்களையும் பொது உடமையின் கீழும் பொதுக் கட்டுப்பாட்டின் கீழும் கொண்டுவருமாறு பரிந்துரைக்கின்றோம்.

* அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் சிறந்த ஊதியத்துடனான தொழில்

வேலையின்மை தற்போதைய பொருளாதார ஒழுங்குக்கே உரித்தான வியாதியாகும். இங்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது இளைஞர்களாகும். 14 - 18 வயதுக்கிடையிலான வேலையற்றோர் வீதம், இப்போது நூற்றுக்கு 36 என்ற மட்டத்தில் உள்ள அதேவேளை, 19 - 25 வயதினருக்கிடையிலான வேலையற்றோர் வீதம் 30 ஆக உள்ளது. இது, 30,000 க்கும் 40,000 க்கும் இடைப்பட்ட தொகை என மதிப்பிடப்பட்டுள்ள பல்கலைக்கழக பட்டதாரிகளின் --மொத்தத்தில் முழுப் பரம்பரையினதும்-- திறமையும் சக்தியும் விரயமாகிக்கொண்டிருக்கின்றன. அதே சமயம், 5 - 17 வயதுக்கிடைப்பட்ட கிட்டத்தட்ட ஒரு மில்லியன் சிறுவர்கள், வறுமையில் வாடும் தமது குடும்பங்களை வாழவைப்பதற்காக, பலவிதத் தொழில்களில் ஈடுபடத் தள்ளப்பட்டுள்ளார்கள். இவர்களில் பாதிபேர் 15 வயதுக்கு குறைந்தவர்களாகும்.

ஊதியக் குறைப்பின்றி, வேலை நேரத்தை வாரத்திற்கு 30 மணித்தியாலமாக குறைப்பதன் மூலம் வேலைவாய்ப்பை விரிவுபடுத்த வேண்டும் என சோ.ச.க முன்மொழிகின்றது. நியாயமான சம்பளத்துடனான லட்சக்கணக்கான தொழில்களை உருவாக்கவும், உடனடித் தேவையாவுள்ள பொது வீட்டுத்திட்டம், பாடசாலை, ஆஸ்பத்திரி, வீதி மற்றும் நீர்விநியோகத்தைக் கட்டியெழுப்பவும், விசேடமாக யுத்தத்தால் அழிவுற்றுள்ள வடக்கு கிழக்கு பிரதேசத்தில், பொதுநல நடவடிக்கைத் திட்டங்களுக்காக பில்லியன் கணக்கான ரூபாய்கள் செலவு செய்யப்பட வேண்டும்.

நியாயமான ஊதியம் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வந்துள்ளது -- இந்த வீழ்ச்சி, 1999-2002 காலகட்டத்தில் தனியார்துறை ஊழியர்கள் மற்றும் விவசாய ஊழியர்கள் மத்தியில் நூற்றுக்கு 10 வீதத்தை கடந்துள்ளது. சகல தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூபா 10,000 வரையான உடனடி சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என சோ.ச.க பிரேரிக்கின்றது. அத்தோடு, இந்த சம்பளம் வாழ்க்கைச் செலவுப் புள்ளிக்கேற்ப தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட வேண்டும்.

சகல விதத்திலுமான சிறுவர் உழைப்புச் சுரண்டலையும் இளைஞர்களையும் பெண்களையும் இரவு வேலைகளில் ஈடுபடுத்துவதையும் நிறுத்த வேண்டும் என நாம் கோருகிறோம். சகல இளைஞர் யுவதிகளுக்கும், அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்காக, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொழிற்பயிற்சித் திட்டங்களில், அவசியமான உபகரணங்கள் அடங்கிய கலாச்சார மற்றும் விளையாட்டு வசதிகள் வழங்கப்பட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு சம ஊதியம், முழு சம்பளத்துடனான கர்ப்பகால விடுமுறை உறுதிப்படுத்தப்படுவதோடு, அவசியமான உபகரணங்கள் மற்றும் பயிற்றப்பட்ட சேவையாளர்கள் சகிதம் சிறுவர் பராமரிப்பு வசதிகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

* உயர் தரத்திலான இலவசக் கல்வி

இளைஞர்கள் தமது திறமைகளையும் சிருஷ்டி திறனையும் முழுமையாக அபிவிருத்தி செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தற்போது, கல்விமுறையானது சமத்துவமின்மையால் சிதைவுற்றுள்ளது -- தொழிலாள வர்க்க மற்றும் கிராமப்புற சிறுவர்களுக்கு, அவசியமான வசதிகளற்ற மற்றும் குறைந்த அலுவலர்களைக் கொண்ட பாடசாலைகளில் கல்வி கற்கத் தள்ளப்பட்டுள்ள அதேவேளை, செல்வந்தர்களின் புத்திர புத்திரிகள் பணம் செலுத்தி பெறக்கூடிய முன்னேற்றமான வளங்கள், விதிமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை அனுபவிக்கின்றனர். சோ.ச.க அரசாங்க கல்வியை சகல துறையிலும் பரந்த அளவில் இலவசமாக வழங்குமபடி கோருகின்றது. அக்கல்வி உயர் தரம் கொண்டதாகவும் பல்கலைக் கழகம் வரையிலும் இலவசமாகவும் கிடைக்க வேண்டும். இன்றுள்ள பாடசாலைகளும் கல்வி நிலையங்களும் விஞ்ஞான ஆய்வு கூடங்களையும் கணனி வசதிகளையும் நவீன "ஓடியோ-விசுவல்" கல்வி முறை தொழில்நுட்பம் கொண்டதாகவும் விளங்க வேண்டும்.

* இலவசமானதும் முதல்தரமானதுமான சுகாதார பணிகளும் நலன்புரி சேவைத் திட்டமும்

வைத்திய விஞ்ஞானத்தில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான அபிவிருத்திகளுக்கு மத்தியிலும் இலங்கை மக்கள் பெரிதும் தடைசெய்யக் கூடிய நோய்களுக்கு தொடர்ந்தும் பலியாகின்றனர். சுகாதார வேலைத்திட்டங்களில் அரசாங்கத்தின் வெட்டுக்கள் காரணமாக மலேரியா, வாந்திபேதி, கூவக்கட்டு போன்ற நோய்கள் நாடு பூராவும் அதிகரித்துள்ளன. ஒரு டாக்டரின் மருந்துச் சிட்டைக்காக 300 ரூபா செலவாகிறது. பல தொழிலாளர்கள் மருந்துகளை வாங்க இலாயக்கற்றவர்களாக உள்ளனர். ஒரு அரசாங்க ஆஸ்பத்திரியில் ஒரு இருதய சத்திர சிகிச்சைக்காக ஒரு வருடத்துக்கும் மேலாக காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. ஆனால் ரூபா. 300,000 செலுத்தக் கூடியவர்கள் இதனை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நினைத்த மாத்திரத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

சோ.ச.க நவீன கருவிகள் பொருத்தப்பட்டதும் பயிற்சி பெற்ற ஆளணி கொண்டதுமான அரசாங்க ஆஸ்பத்திரிகளையும் சிகிச்சை நிலையங்களையும் அபிவிருத்தி செய்யக்கோருகின்றது. அதன் மூலம் சகலருக்கும் உயர்தரமான சுகாதார சிகிச்சைகள் கிடைக்க வேண்டும். மகளிருக்கு கருக்கலைப்பு உரிமை வழங்கப்பட வேண்டும்.

வறுமை, போதியளவு ஆகாரமின்மை மற்றும் மந்த போசனமும் மேலும் பரவிவருகின்றது. 2000 ஆண்டில், நாடு பூராவும் உள்ள 5 வயதுக்கு குறைவான பிள்ளைகள் மத்தியில் வளர்ச்சி குன்றிய நிலைமை 13.5 சதவீதமாகவும், பலவீனம் 14 சதவீதமாகவும் மற்றும் குறை எடை 29.4 சதவீதமாகவும் இருந்தது. தாய்மார் மந்தபோசனமும் கடுமையாக உள்ளது; 35 வீதமான கர்ப்பிணிப் பெண்கள் குருதிச் சோகையால் பீடிக்கப்படுவதோடு, நிறை அதிகரிப்பானது தேவையான அளவை விட மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகிறது. அரசியல் குறிக்கோள்களுக்காக பரந்தளவிலான துஷ்பிரயோகத்திற்குள்ளாகும், தற்போதைய மட்டுப்படுத்தப்பட்ட வசதிகள், அனைவரதும் தேவைக்கேற்ற வகையில் போதிய ஆதாயத்தை உறுதிப்படுத்தும் பொது நல மற்றும் ஓய்வூதிய வேலைத் திட்டத்தின் மூலம் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

* சகல குடும்பங்களுக்கும் கண்ணியமான வீட்டு வசதி

பல குடும்பங்கள் தண்ணீர், மின்சாரம், கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தரங்குறைவான வீடுகளில் வசித்து வருகின்றன. வீட்டு வாடகைகள் மக்களில் பெரும்பான்மையானவர்களின் கைக்கு எட்டாதளவுக்கு உயர்ந்துள்ளது. கொழும்பு நகர எல்லைக்குள் 51 சதவீதமான சனத் தொகையினர் சேரி வீடுகளில் வாழ்கின்றனர். அரசாங்கம் பெரும் வர்த்தகர்களுக்கு காணிகள் வழங்கும் பொருட்டு இந்த ஏழை மக்ளை சேரிகளில் இருந்து கலைக்கின்றது. இந்தப் பிரச்சினைக்கான அவர்களின் தீர்வு அதுவே.

சோ.ச.க சகல குடும்பங்களுக்கும் அவசியமான சகல வசதிகளையும் கொண்ட தாக்கிப் பிடிக்கக் கூடிய அரசாங்க வீடமைப்புகளை அமைக்கும்படி அழைப்பு விடுக்கின்றது. வாடகைக் கட்டுப்பாட்டு முறை அமுல் செய்யப்படுவதோடு முறைகேடான நிலச்சுவாந்தார்கள் இலாபம் சம்பாதிப்பதைத் தடுக்கவும் வேண்டும். காலியான வீடுகளும் மாடி வீடுகளும் ஏழைக் குடும்பங்களுக்கு நியாயமான வாடகையில் வழங்கப்பட வேண்டும்.

* சிறிய விவசாயிகளின் வாழ்க்கைச் சுமைகளைப் போக்கு

காணிகளுக்கான அவசியம் நாடுபூராவும் பெரிதும் சிக்கலான பிரச்சினையாக தோன்றியுள்ளது. உத்தியோகபூர்வமான புள்ளிவிபரங்களின்படி பெரும்பான்மையான விவசாயிகள் -72 வீதத்தினர்- 1.6 ஹெக்டருக்கும் குறைவான காணிகளையே கொண்டுள்ளனர். இதில் கிட்டத்தட்ட 7 வீதத்தினர் எதுவித காணியும் இல்லாதவர்கள்.

நிலமற்ற சிங்கள ஏழைகள் முகம் கொடுத்துள்ள நெருக்கடிகளை யூ.என்.பி.யும் பொதுஜன முன்னணியும் சுரண்டிக்கொண்டுள்ளன. இவை வடக்கில் வன்னியிலும் கிழக்கிலும் தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் இடங்களில் வேண்டும் என்றே அவர்களை குடியேற்றத் திட்டங்களில் குடியமர்த்துகின்றனர். இக் கொள்கை இனவாதப் பதட்ட நிலைமையை உக்கிரமாக்கியுள்ளது. அனைத்து இடங்களில் உள்ள விவசாயிகளும் உற்பத்தி செலவு அதிகரிக்கும் போது உற்பத்தி பண்டங்களின் விலைகள் பெருமளவு வீழ்ச்சி காண்பதன் காரணமாக "கத்தரிக்கோல் நெருக்கடிக்குள்" அகப்பட்டுப் போயுள்ளனர்.

சோ.ச.க. இனக்குழுவை கணக்கில் கொள்ளாமல் சகல காணியற்ற விவசாயிகளுக்கும் அரச காணிகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோருகின்றது. ஏழை விவசாயிகளும் மீனவர்களும் பெற்ற பழைய கடன்கள் இரத்துச் செய்யப்படும் அதேவேளை, வங்கிக் கடன்கள் விவசாய உபகரணங்கள், உரம், இரசாயன திரவியங்கள் ஆகியன சகல ஏழை விவசாயிகளுக்கும் இலகுவான கடன் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். கமத்தொழிலில் ஈடுபடும் குடும்பங்களின் கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை ஊர்ஜிதம் செய்யும் வகையில் விவசாய உற்பத்திப் பொருட்களின் விலைகள் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.

சோசலிசமும் இலங்கைத் தொழிலாள வர்க்கமும்

சோசலிச சமத்துவக் கட்சி, இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பின்பற்றிவரும், அனைத்துலக சோசலிச இயக்கத்தின் உயர்ந்த பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது, சமத்துவம் அனைத்துலகவாதம் உட்பட, மனித குலத்தை ஒடுக்குமுறையிலிருந்தும் வறுமையிலிருந்தும் முழுமையாக விடுதலைபெறச் செய்வதை இலக்காகக் கொண்டதாகும்.

1917ல், விஞ்ஞான சோசலிச வேலைத் திட்டத்தால் வழிநடத்தப்பட்ட ரஷ்யாவின் வெகுஜன இயக்கம், முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து சோவியத் ஒன்றியத்தை ஸ்தாபிதம் செய்தது. மிகவும் பரந்த அனைத்துலக சோசலிச இயக்கத்தின் ஒரு அங்கமான ரஷ்யப் புரட்சி, அத்தகைய இயக்கத்தின் எழுச்சியை துரிதப்படுத்தியிருந்த போதிலும், ஏனைய இடங்களில் இடம்பெற்ற புரட்சிகரப் போராட்டங்களின் தோல்வியானது பிரமாண்டமான அழுத்தங்களை தோற்றுவித்தது. அது, முதலாவது தொழிலாளர் அரசு தனிமைப்படுத்தப்பட்டதில் இருந்தும், ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான ஒடுக்குமுறையான அதிகாரத்துவ இயந்திரத்தின் தோற்றத்திலும் அதன் வெளிப்பாட்டைக் கண்டது. போல்ஷவிக் கட்சியின் அனைத்துலகவாதத்தைக் கைவிட்ட ஸ்ராலின், "தனிநாட்டில் சோசலிசம்" என்ற மார்க்சிச விரோத முன்னோக்கை அபிவிருத்தி செய்தார். ஸ்ராலினிச அதிகாரத்துவம், இந்த தேசியவாத கோட்பாட்டின் அடிப்படையில், அக்டோபர் புரட்சியைக் காட்டிக்கொடுத்து, தொழிலாளர்களின் ஜனநாயகத்தை நாசம் செய்து, உண்மையான மார்க்சிஸ்டுகளை ஒழித்துக்கட்டியதோடு, உலகம் பூராவும் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத்தை நிலைகுலையச் செய்தார். 1991ல், ஸ்ராலினிசத்தினதும், ஏகாதிபத்தியத்துடன் அது முன்னெடுத்த ஒத்துழைப்பும், சோவியத் ஒன்றியத்தை வீழ்ச்சியின் உச்சகட்டத்திற்கே இட்டுச் சென்றதுடன் முதலாளித்துவத்தையும் புனருத்தாரணம் செய்தது.

எமது இயக்கமானது, சோசலிச அனைத்துலகவாதத்திற்கான போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்த சிறந்த, மிகவும் துணிவுமிக்க மற்றும் தூரதிருஷ்டி மிக்க தொழிலாள வர்க்க பிரதிநிதிகளின் மரபுரிமையை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்தப் பாரம்பரியத்தின் மிகப்பெரும் சிருஷ்டி கர்த்தா ரஷ்யப் புரட்சியின் தலைவர்களில் ஒருவரான லியோன் ட்ரொட்ஸ்கியாகும். அவர், ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்புகளுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தியதோடு, 1938ல் நான்காம் அகிலத்தை ஸ்தாபிப்பதன் ஊடாக அனைத்துலக தொழிலாளர் இயக்கத்தின் மறுபிறப்பிற்கு அடித்தளமிட்டார்.

இந்த வரலாற்றுப் போராட்டமானது இலங்கையிலும் மற்றும் தெற்காசியாவிலும் உள்ள தொழிலாளர் வர்க்கத்துள் ஆழாமாக வேரூன்றியிருந்தது. 1940களில், ஸ்ராலினிசத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கியால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள், இந்திய போல்ஷவிக் லெனினிஸ்ட் கட்சியை ஸ்தாபிப்பதில் பிரதான பாத்திரம் வகித்ததோடு, அவர்கள், இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள தொழிலாளர் வர்க்கத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஒரு ஜனநாயக மற்றும் சோசலிச முன்னோக்கை அபிவிருத்தி செய்வதற்காக, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படைகளில் முழுக் கவனத்தையும் செலுத்திவந்தனர். இந்த முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டிருந்த ட்ரொட்ஸ்கிஸ்டுகள், யுத்தத்திற்குப் பின்னர், லண்டனால் கொழும்பில் உள்ள உள்ளூர் முதலாளித்துவ வர்க்கத்திடம் கையளிக்கப்பட்ட போலிச் "சுதந்திரத்தை" நிராகரித்ததோடு, இந்தியத் துணைக்கண்டத்தை அழிவுகரமான முறையில் இன அடிப்படையில் பிரிப்பதையும் எதிர்த்தனர்.

தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக போல்ஷவிக் லெனினிஸ்ட் கட்சியும் (பி.எல்.பி.ஐ), லங்கா சமசமாஜக் கட்சியும் (ல.ச.ச.க) முன்னெடுத்த அரசியல் போராட்டமும், சகல வடிவிலான இனவாதத்தையும் வகுப்புவாதத்தையும் அவை தீர்க்கமாக எதிர்த்தமையும், 1940 களிலும் 1950 களிலும் இலங்கைத் தொழிலாளர்கள் பெற்ற வெற்றிகளுக்கு காரணமாகின. ல.ச.ச.க இலங்கையில் உள்ள ஒடுக்கப்பட்டவர்களுக்கும் மற்றும் குறிப்பாக தெற்காசியாவிலும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக உருவெடுத்தது. இன்று இலங்கை தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், ல.ச.ச.க அனைத்துலகவாதத்தை கைவிட்டதில் இருந்தும் மற்றும் 1964ல் அதன் காட்டிக்கொடுப்பில் உச்சநிலையை எட்டிய உள்ளூர் முதலாளித்துவத்தின் இனவாத அரசியலுக்கு அது அடிபணிந்ததில் இருந்தும் நேரடியாக ஊற்றெடுக்கின்றது.

சோ.ச.க வின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸட் கழகம் (பு.க.க), ல.ச.ச.க தேசிய சந்தர்ப்பவாதத்தை நோக்கி சரிந்ததற்கு எதிரான நேரடியான அரசியல் போராட்டத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (நா.அ.அ.கு) இலங்கைக் கிளையாக 1968ல் ஸ்தாபிக்கப்பட்டது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும், சோசலிச சமத்துவக் கட்சியும் மூன்றரை தசாப்தங்களாக, சகல வடிவிலான பேரினவாதம், வேறுபாடுகள் மற்றும் ஒடுக்குமுறைகளை சளையாது எதிர்த்ததோடு, தொழிலாள வர்க்கத்தின் மற்றும் கிராமப்புற ஏழைகளின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடிய அதேவேளை, சகல வடிவிலான தேசியவாத அரசியலால் தோற்றுவிக்கப்படும் ஆபத்துக்களையும் தத்துவார்த்த அடிப்படையில் தெளிவுபடுத்த போராடியது.

இலங்கையிலும் மற்றும் பிராந்தியம் பூராவும் உள்ள தொழிலாளர் வர்க்கம் எதிர்கொண்டுள்ள சவாலானது, உயர்ந்த சோசலிச மரபுகளையும், பீ.எல்.பி.ஐ மற்றும் ல.ச.ச.க முன்னெடுத்த ஆரம்பகால போராட்டங்களைத் தூண்டிய கருத்துக்களையும் புத்துயிர் பெறச்செய்து, அபிவிருத்தி செய்வதாகும். இந்தப் பணியை இட்டுநிரப்ப இந்தியாவிலும் இலங்கையிலும் இடம்பெற்ற முக்கிய போராட்டங்கள் உட்பட, இருபதாம் நூற்றாண்டு முழுவதிலும் சர்வதேச தொழிலாளர் வர்க்கம் பெற்ற மூலோபாய அனுபவங்களின் படிப்பினைகளை உள்ளீர்த்துக்கொள்ளவது அவசியமாகும்.

நாம், நிலையான சமாதானத்தின் உடனடித் தேவையையும், சமுதாயத்தை சோசலிசப் பாதையில் மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தையும் ஏற்றுக்கொள்ளும் அனைவரையும், எமது தேர்தல் பிரச்சாரத்திற்கு பங்களிப்பு செய்யுமாறு அழைக்கின்றோம். எமது வேட்பாளர்களையும் மற்றும் கூட்டங்களையும் பகிரங்கப்படுத்துமாறும், எமது தேர்தல் கால வெளியீடுகளை விநியோகிப்பதோடு அவற்றை கலந்துரையாடுமாறும், மற்றும் நா.அ.அ.கு வின் இணைய மையமான உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களை பரந்தளவில் ஊக்குவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, எமது வேலைத்திட்டத்தையும் முன்னோக்கையும் ஏற்றுக்கொள்ளும் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்துகொள்ளுமாறும், அதை தொழிலாளர் வர்க்கத்திற்கான புதிய அரசியல் கட்சியாக கட்டியெழுப்புமாறும் அழைப்புவிடுக்கிறோம்.

Top of page