World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Socialist Equality Party presidential candidate Bill Van Auken addresses WSWS-SEP conference

"A voice for the international working class in the 2004 US elections"

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பில் வான் ஓகென் WSWS-SEP மாநாட்டில் பேருரையாற்றுகிறார்

"2004 அமெரிக்கத் தேர்தல்களில் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கான குரல்"

18 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

மார்ச் 13-14 ல் மிச்சிகன் அன் ஆர்பரில், உலக சோசலிச வலைத் தளமும், சோசலிச சமத்துவ கட்சியும் இணைந்து "2004 அமெரிக்கத் தேர்தல்: ஒரு சோசலிச பதிலீடு" என்ற தலைப்பில், நடத்திய மாநாட்டில், ஜனாதிபதி வேட்பாளரான பில் வான் ஒகெனுடைய கருத்துக்களை இன்று பிரசுரம் செய்துள்ளளோம். இந்நிகழ்ச்சியின் ஒரு சுருக்கக் குறிப்பு, மார்ச் 15லும் (ஆங்கிலத்தில்), WSWS சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவரும் அமெரிக்க SEP-யுடைய தேசியச் செயலாளருமான டேவிட் நோர்த்தின், மாநாட்டின் ஆரம்ப உரை மார்ச் 17-அன்றும் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பெற்றன. வரும் நாட்களில் SEP யின் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜிம் லோரன்ஸ் ஆற்றிய உரை உட்பட, இந்த முக்கிய அரசியல் நிகழ்ச்சி பற்றிய செய்திச் சேகரிப்பை, தொடர்ந்து வெளியிட உள்ளோம்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்காக ஒரு அரசியல் குரலையும், வேலைதிட்டத்தையும் வழங்குவதற்காக, சோசலிச சமத்துவக் கட்சி, 2004 தேர்தலில், தலையீடு செய்கிறது. இந்த பிரச்சாரம் முழுவதிலும் அமெரிக்க உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள பெரும் பிரச்சினைகளை, அவர்களுடைய போராட்டத்தை, உலக முதலாளித்துவத்திற்கு எதிரான பூகோளம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களது போராட்டத்துடன் ஒன்றிணைப்பதை ஆரம்பிக்கும் ஒரு கொள்கை மற்றும் வேலைத்திட்டத்திற்கு வெளியே தீர்வுகள் இல்லை என்பதை வலியுறுத்துவோம்.

நம்முடையை தேர்தல் அரங்கம், அமெரிக்க கொள்கைகளின் தாக்கம் உலகின் 6.3 பில்லியன் மக்கள்மீதும் இருப்பதை எடுத்துக் கொண்டால், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இக்கோளத்தில் இருக்கும் அனைத்து உழைக்கும் மக்களும் பங்கு கொள்ளுமாறு இருக்கவேண்டும் என்று கூறுவது முற்றிலும் பொருத்தமே என்ற கருத்தை முன்வைக்கிறது.

உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன், மில்லியன் கணக்கிலான மக்கள், வாஷிங்டனுடைய ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு, அதைப்பற்றி எதையும் கூறக்கூட முடியாமலேயே இருக்கும் நிலையில் காணப்படுகின்றனர். அமெரிக்க அரசாங்கம், அமெரிக்காவை தளமாகக் கொண்ட வங்கிகள், நாடுகடந்த நிறுவனங்கள் ஆகியவை எடுக்கும் முடிவுகள், இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா இவற்றிலுள்ள பெரும் மக்கட்தொகையினருக்கு பொருளாதார இழப்புக்களைக் கொடுத்து, பசியையும் கொடுக்கின்றன; போருக்குக் கெடுவைக்கும் பென்டகனுடைய விதிகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஈராக், ஆப்கானிஸ்தான், ஹைட்டி இன்னும் பலப்பல இடங்களில் இறப்பிற்கு உட்பட வைக்கின்றன.

எங்கள் கட்சி இந்தப் பிரச்சினைகளை, எங்கள் பிரச்சாரத்தின் மையத்தில் வைக்கும். இந்தத் தலையீட்டின் மூலம், ஐரோப்பா, தெற்கு ஆசியா, ஆஸ்திரலேயா, கனடா ஆகிய பகுதிகளில் உள்ள எங்கள் தோழர்களுடன் இணைந்து, தொழிலாள வர்க்கத்தை சுதந்திரமாக அரசியல் அணிதிரட்டலின் அடிப்படையில், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உண்மையான உலகளாவிய இயக்கத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த ஆண்டுத்தேர்தல், அமெரிக்க இராணுவவெறியின் உலகந்தழுவிய வெடிப்பின் நிழலில் நடைபெறுகிறது. இரண்டரை ஆண்டுகளில் இரண்டு போர்களில் ஈடுபட்டபின்னர், புஷ் நிர்வாகம் இப்பொழுதோர் ஆட்சிக் கவிழ்ப்பிற்குப்பின், அதன் அவநம்பிக்கைத்தனத்துடனும், மிருகத்தனத்துடனும் ஹைட்டியை ஆக்கிரமித்துள்ளது; இதற்கு ஒப்புமை கூறவேண்டும் என்றால், ஐரோப்பாவில் ஹிட்லர் ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட குண்டர் வழிமுறைகளைத்தான் கூறமுடியும்.

பழைய சர்வாதிகாரங்களின் நன்கு அறியப்பட்டுள்ள கொலைகாரர்கள், சித்திரவதை செய்பவர்கள், இவர்களின் தலைமையில் துப்பாக்கி ஏந்தியவர்கள் சிஐஏ யினால் ஆயுதங்களும் பண உதவியும் அளிக்கப்பட்டு, நாட்டில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிகாரிகள் நாட்டின் தேர்ந்து எடுக்கப்பட்ட ஜனாதிபதி ஜீன் பெர்ட்ராண்ட் அரிஸ்டைட் இந்தக் குண்டர்களால் கொலைசெய்யப்படப் போவதாக அச்சுறுத்தினர். அவரைப் பின்னர் துப்பாக்கி முனையில் ஓர் விமானத்தில் இருத்தி, ஆப்பிரிக்காவிற்கு அழைத்துச்சென்று அங்கு வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். இவையெல்லாம் ரிச்சர்ட் செனியின் சொற்களில், "அரிஸ்டைட் அவருக்கு வழங்கப்பட்டிருந்த நல்வரவுக்காலத்தைக் கடந்து விட்டார்" என்று நியாயப்படுத்தப்பட்டுள்ளன.

இது உலகளவில், மீண்டும் தலைதூக்கியுள்ள ஏகாதிபத்தியம், காலனித்துவம் இவற்றின் தெளிவான வெளிப்பாடு ஆகும். தான் யாரை வேண்டுமானாலும் பதவியைவிட்டு வெளியேற்றலாம், ஒரு பகுதியை ஆக்கிரமிக்கலாம், அங்கு தன்னுடைய கைப் பொம்மை அரசாங்கங்களைப் பதவியில் இருத்தலாம் என்ற உரிமைகளைத் தனக்குத்தானே வாஷிங்டன் வழங்கிக் கொண்டுள்ளது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானத்திலும் தலையீடுகள் செய்தது, உலகெங்கிலும் ஜனநாயகத்திற்காக நடத்தப்படும் புனிதப்போரின் பகுதிகளே எனக்கூறும் புஷ் நிர்வாகத்தின் நகைப்பிற்கிடமான தன்மையை இவற்றைவிட வேறு எதுவும் தெளிவாக அம்பலப்படுத்த முடியாது.

இந்த மீண்டும் எழுச்சி பெற்றுள்ள ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எப்படிப் போரிடுவது? இந்தப் போருக்கான எதிர்ப்பு இயக்கத்தை, ஜனநாயகக் கட்சியின் வரம்பிற்குள் வேலியிட்டு வளைத்துவிடலாம் என்ற முயற்சியை மேற்கொண்டுள்ளவர்கள், அடுத்த குருதிதோயும் போர்த் தயாரிப்புக்களுக்குத்தான் உதவுகின்றனர்.

நாங்கள் இந்தத் தேர்தலில் பங்கு பெறுவது, சொல்லப்போனால் ஜனநாயகக் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியும் பங்கு பெறுவது என்பது, ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷை வெள்ளை மாளிகையைவிட்டு வெளியே அனுப்பவேண்டும் என்ற தற்பொழுது முக்கியமாகக் கருதப்படும் காரியத்தை திசை திருப்புவதற்காக என்று கூறுகின்றவர்களுக்கு மாறாக, எந்தத் தயக்கமும் இல்லாமல், இத்தேர்தலில் எங்களது பிரச்சாரம் மிக முக்கியமான காரணி என்றும், புஷ் நிருவாகத்திற்கு எதிராக உண்மையாகப் போராடுவதற்கு ஒரே கருவி என்றும் நாங்கள் அக்கூற்றுக்கு பதிலளிக்கின்றோம். ஜனநாயகக் கட்சிக்காக வாக்குகள் சேகரிப்பவர்கள், அது போரையோ அல்லது அடக்குமுறையையோ எதிர்க்க ஒரு வழிவகையாக்கூடும் என்று கருதுபவர்கள், தங்கள் நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கின்றனர் அல்லது முழு நனவுடன் ஏமாற்றிக் கொண்டு இருக்கினறனர். நாங்கள் வருங்காலத்தைத் தயாரித்துக் கொண்டு இருக்கிறோம், இந்த நவம்பர் தேர்தலில் இருகட்சிகளில் எது வெற்றிபெற்றும் என்பதனை கருத்திற்கொள்ளாது, தொழிலாள வர்க்கத்திற்கு தேவைப்படும் அரசியல் ஆயுதங்களைத் தயார் செய்து வருகிறோம்.

"புஷ்ஷைத் தவிர வேறு யாராயினும்"

எல்லா அரசியலும், "புஷ்ஷைத் தவிர வேறு யாராயினும்" என்ற மந்திரத்திற்குக் கீழ்ப்படுத்துதல் வேண்டும் என்ற கூற்றை நாங்கள் நிராகரிக்கிறோம், ஜனாதிபதித் தேர்தலில் ஒரு ஜனநாயக வெற்றியானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிப்படைப்போக்கில் மாற்றத்தைக் கொண்டு வராது என்பதையும் வலியுறுத்துகிறோம். அம்மாறுதல் ஒரு சமூகப் புரட்சியின் மூலம்தான் அடையப்படும்.

சில கேள்விகளை இங்கு முன்வைப்போம்: கடந்த மூன்று ஆண்டுகளாக வாஷிங்டனால் தொடரப் பட்டுள்ள போத்தன்மை நிறைந்த வெளிநாட்டுக் கொள்கை, வெள்ளை மாளிகையை, தேர்ந்தெடுக்கப்படாமல் கைப்பற்றியுள்ள ஒரு குற்றவாழிக் கூட்டம் போருக்கு வளைந்து கொடுத்ததன் விளைபொருள் மட்டும்தானா? அல்லது வாஷிங்டனின் அதிகாரத்தின் நெம்புகோல்களை எப்படியோ இயக்கும் சக்தியைக் கொண்டுவிட்ட, புதிய கன்சர்வேடிவ் எனப்படும் ஒரு குழு தன்னுடைய மனச் சமநிலையிழந்த கோட்பாடுகளை நடைமுறைப் படுத்துவதால் ஏற்பட்டுள்ள விளைவு என்று விளக்கம் கொடுப்பதா? வேறுவிதமாகக் கூறினால், அமெரிக்க இராணுவவெறியின் வெடிப்பு, ஆக்கிரமிப்புப் போர்களைத் துவக்கியுள்ளதும் அதன் விளைவாக வந்த காலனித்துவப் பேரரசுபோன்ற விளைவுகளும், இந்த குற்றஞ்சார்ந்த கூட்டம் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுவிட்டால் அகற்றப்பட்டுவிடக்கூடிய மனமாறாட்ட நிகழ்ச்சிகளா?

மாஸாச்சுசெட்சின் செனட்டர், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜான் கெர்ரிக்கு ஆதரவு கொடுத்து, நியாயப்படுத்த அவருக்குப் பின் அணிதிரண்டுள்ள பல இடது என்று அழைக்கப்படும் அமைப்புக்களால்கூட ஏற்கப்பட்டுள்ள இத்தகைய கருத்தாய்வை, நாம் நிராகரிக்கின்றோம்.

அரைகுறைக் கல்வியுடைய, பிறர் துன்பத்தில் இன்பம் காணும், புஷ்ஷின் எழுச்சி, ஈராக் போருக்கு முன் சோவியத் ஒன்றியத்தின்மீது அணுவாயுத யுத்தம் செய்யவேண்டும் என்று வாதிட்டிருந்த வுல்போவிச், பேர்ல் போன்ற கூறுபாடுகள் கொண்டுள்ள செல்வாக்கு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆழமாகிவரும் மற்றும் படிமுறைரீதியான நெருக்கடியின் அடையாளமே ஒழிய, காரணம் இல்லை.

ஈராக்கின்மீதான போரும் அதை ஆக்கிரமித்ததும், தனியான காலனித்துவ நிகழ்வு அல்ல. அதுபோல், "பயங்கரவாதத்தின்மீதான போர்" என்பது, புஷ், செனி, ஆஷ்கிராப்ட் ஆகியோருடைய காய்ச்சல் கண்டுள்ள மூளையின் செயற்பாடுகளும் அல்ல. மாறாக, ஈராக்மீதான போர், ஆக்கிரமிப்பு, ஆப்கானிஸ்தானில் நடைபெறும் போர், அமெரிக்க இராணுவவாதம் உலகந்தழுவிய முறையில் வெடித்துள்ளது, அடிப்படை சுதந்திரங்களின்மீதான முழுத்தாக்குதல்கள் ஆகியவை, அமெரிக்க சமுதாயத்தையும் அதன் அரசியல் அமைப்பையும் உடைத்துக்கொண்டிருக்கும் ஆழ்ந்த, கடும் குரோதமுடைய முரண்பாடுகளின் வெளிப்பாடுகளே ஆகும்.

இறுதி ஆய்வுகளில், யுத்தம் என்பது முதலாளித்துவ அமைப்பானது இந்த தீர்க்கமுடியாத முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான, குறிப்பாக, உலகப் பொருளாதாரத்திற்கும், தேசிய-அரசுமுறைக்கும் இடையே இருக்கும் மோதலைத் தீர்ப்பதற்கான முயற்சியாகும்

ஈராக்குடனான போர் துவங்கி ஓராண்டு முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்தப் போரைப் பொறுத்தவரையில், அமெரிக்க மக்கள் தங்கள் விருப்பத்தைச் செயல்படுத்தமுடியாமல் போவதற்கு, அதைப் பற்றிய எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்குக்கூட, இந்த வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் எந்த வழிவகையும் வழங்காது என்பதற்கான அனைத்து முயற்சியையும் அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டு மேற்கொண்டுள்ளது.

அமெரிக்க நலன்களுக்காக, நடத்துகொண்டிருக்கும் ஆக்கிரமிப்பும், கூடுதலான அமெரிக்க, ஈராக்கியர் மரணங்களும் தொடரவேண்டும் என்ற வலியுறுத்தலில் இருகட்சிகளும் உடன்பட்டுள்ளன. இந்த தற்பொழுதைய நிர்வாகம், அமெரிக்க மக்களிடம் பொய்கூறி அவர்களையும் ஒரு குற்றஞ்சார்ந்த போரில் இழுத்து, அதனை நடத்தியது, அது ஜனநாயகக் கட்சிக்கும், செய்தி ஊடகத்திற்கும் கிட்டத்தட்ட விவாதத்திற்குரிய குறிப்பாகப் போய்விட்டது.

உண்மையில், அமெரிக்க அரசுத்துறை செயலாளர், காலின் பவல், பேரழிவு ஆயுதங்கள் பற்றிய பிரச்சினையில் நிர்வாகம் பொய்கூறியதா என்பதைப்பற்றித் தேர்தலில் எந்த விவாதமும் கூடாது என்று முறையிட்டுக்கொண்டிருக்கிறார். அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளின் மன உறுதிக்கு, தவறான காரணங்களால் புஷ்ஷின் நிர்வாகம் ஒரு சட்ட விரோதமான போரைத் துவக்கியது எனப் பேசுதல், தெரிந்த வெளிப்படையாயினும், கெடுதல் என்று வாதிட்டுள்ளார். அமெரிக்க ஆண்களும் பெண்களும் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளவர்களைப் பற்றிய நல்வாழ்வைப் பற்றிய அக்கறையினால்; அவர்களில் 560 பேர் மடிந்திருந்தாலும் கூட, பல்லாயிரக்கணக்கில் காயமுற்றிருந்தாலும், உறுப்புக்களையிழந்திருந்தாலும், அல்லது மன அளவில் பாதிக்கப் பட்டிருந்தாலும், வாழ்க்கை முழுவதும் இத்தகைய தழும்புகளை அவர்கள் கொண்டாலும், அந்த பெரும் அக்கறையின் உந்துதலால், பவல் இவ்வாறு கூறவில்லை.

ஆயிரங்களின் பதின்மடங்கு ஈராக்கிய ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் போரில் கொல்லப் பட்டது பற்றி, நிர்வாகத்தின் மிக நெருங்கிய ஆதரவாளர்கள் இப்பொழுது பேரழிவு ஆயுதக் காரணத்தினால் நிகழ்ந்தது என்பது தேவையற்றது என்ற கருத்தை ஒப்புக்கொள்கின்றனர், இந்த இரு முதலாளித்துவக் கட்சிகளின் ஜனாதிபதித் தேர்தல் விவாதங்களில் இது ஒரு குறிப்பைக் கூடப் பெறவில்லை.

எந்தச் சிறந்த முறையைக் கையாண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை உலக அரங்கில் முன்னேற்றுவிக்கலாம் என்ற தந்திர உத்திகளைப் பற்றிய பிரச்சினைகள்தான் குடியரசுக் கட்சியையும் ஜனநாயகக் கட்சியையும் பிரிக்கின்றன. அமெரிக்க இராணுவ வலிமையைப் பயன்படுத்தி, அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களையும், வங்கிகளையும், நாட்டின் மிக்குயர் செல்வம் கொழித்தோர் இன்னும் பெருங்குவிப்புக் காண வகைசெய்தல் தேவை என்ற அடிப்படை அமெரிக்க அயலுறவுக் கொள்ளகையின் மிக அத்தியாவசியப் பிரச்சினையில், இரு கட்சிகளும் அடிப்படை ஒற்றுமையைக் கொண்டுள்ளன.

ஈராக்கைப் பொறுத்தவரையிலான அமெரிக்க அயல்நாட்டுக் கொள்கையின் வரலாறு பற்றிய விரிவான விவாதம் மட்டுமே, ஒரு முழு மாநாடு தேவை என்ற நிலையைக் கொண்டுள்ளது. ஆனால் ஒரு மேம்போக்கான கண்ணோட்டம் கூட, ஓராண்டிற்கு முன் தொடங்கப்பட்ட போர், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் நிர்வாகங்கள் ஒரு கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டிருந்த நீண்ட காலக் கொள்கையின் உச்சக் கட்டம் என்பதைத் தெளிவுபடுத்தும்.

காட்டர் மற்றும் கிளின்டனின் நிர்வாகச் சான்றுகள்

1970 களின் இறுதியில் கார்ட்டர் நிர்வாகத்தைப் பார்த்தோமானால், அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி, 1973 அரேபிய எண்ணெய்ப் புறக்கணிப்பு, 1979 ஈரானியப் புரட்சி என்ற இரட்டை அதிர்ச்சிகளுடன் இணைந்து, பொதுவாக ஒரு இராணுவ வலிமையைப் பெருக்கும் முறையும், குறிப்பாக பாரசீக வளைகுடாப்பகுதியில் நேரடி அமெரிக்க இராணுவத்தலையீட்டின் திட்டங்களுக்கும் எழுச்சிபெற வகை செய்தன.

மனித உரிமைகளுக்குப் பாடுபடும் அமைதியை விரும்பும் கிறிஸ்தவர் என்று இப்பொழுது சித்தரிக்கப்படும் பழைய ஜனாதிபதிதான், அமெரிக்க முதலாளித்துவத்திற்கு பாரசீக எண்ணெய் வளத்திற்கு தடையற்ற வரத்து இருக்கவேண்டும் என்று அனைத்து எண்ணெய் வயல்களையும் கைப்பற்றுவதற்குத் தேவையான விரைவுப் படை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டவர் ஆவார். அதேபோல், சிஐஏ-ஆதரவுடனான போரை ஆப்கானிஸ்தானில் கொண்டுவந்து அது மில்லியன் உயிர்களைப் பலிகொண்டு அந்நாட்டை நாச அழிவிற்கு உட்படுத்தியதைக் கண்காணித்து, இப்பொழுது அமெரிக்காவின் "பயங்கரவாதத்தின் மீதான போர்" உடைய முக்கிய விரோதிகள் எனக்கருதப்படும், அதே இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளுக்கு ஆயுதங்களையும், நிதியையும் அளித்திடக் காரணமாக இருந்தவர்.

இதற்கு அடுத்த ஜனநாயக நிர்வாகம், பில் கிளின்டனால் தலைமை தாங்கப்பட்டது, அந்நாடு உணவு, மருந்துகள், மற்ற முக்கிய பொருட்களைப் பெறமுடியாமல் தடைவிதிக்கப்பட்டிருந்ததற்கு, அதன் விளைவாக குறைந்தது 1 மில்லியன் ஈராக்கியர்கள் இறப்பிற்கு, அதில் பாதிக்கு மேல் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது, இவற்றுக்குக் காரணமான பொருளாதாரத்தடைகள் ஈராக்கிலிருந்து அகற்றப்படுவதை, அவர் பிடிவாதத்துடன் தடுத்து விட்டார். பின்னர் நிகழ்ந்த போர் போலவே, அமெரிக்கா தடைகளைத் தொடரவேண்டும் என்று வலியுறுத்திய காரணம் பேரழிவு ஆயுதங்கள் அல்ல, அமெரிக்க இலாப நலன்களே ஆகும். வாஷிங்டன், தன்னுடைய ஐரோப்பியப் போட்டியாளர்கள், ஈராக்கிய எண்ணெய் இருப்புக்களில் ஆதிக்கம் மிகுந்த நிலையை அடையக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது. மேலும் இது அப்பகுதியில் அமெரிக்க மேலாண்மையை நிறுவுவதற்கு இராணுவத் தலையீட்டிற்கு தயார் செய்ய முற்பட்டது.

சோவியத் ஒன்றியம் தகர்ந்துவிட்ட வசதியினாலும், கிளின்டன் நிர்வாகத்தின்கீழ், "ஆட்சி மாற்றம்" என்னும் கொள்கைவழி துவக்கப்பட்டது. குடியரசுக் கட்சியினர் கிளின்டனை தீயகருத்துக்கள் உடையவராக வர்ணித்தாலும், புஷ் நிர்வாகம் தன்னுடைய ஈராக்கியக் கொள்கைகள், முன்பு பதவியில் இருந்தவருடைய கொள்கையின் தொடர்ச்சி என்பதைச் சுட்டிக்காட்டுவதில் களைப்படையவே இல்லை.

அமெரிக்க உலக ஆதிக்கம், அதற்கெதிரான பொருளாதாரப் போட்டியாளர்களுக்கு எதிராக நிலைநிறுத்தப்படவேண்டும், உலகின் எண்ணெய் அளிப்பைத் தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்கவேண்டும் என்பதை வலிந்து செயற்படுத்துவதற்கான முக்கிய கருவிதான் அமெரிக்க இராணுவ ஆற்றலைப் பயன்படுத்தல் என்ற, அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டின் அரசியல் ஒருமித்தக் கருத்தைத்தான் இரண்டு முக்கிய கட்சிகளின் கொள்கைகளும் பிரதிபலிக்கின்றன.

DLC உடைய முன்னோக்கு

கெர்ரி இணைந்துள்ள Democratic Leadership Council (DLC) என்னும் குழுவினால் வரையப்பட்டுள்ள தொடர்ச்சியான ஆவணங்களைப் படித்தால், ஒரு கெர்ரி நிர்வாகம் பதவிக்கு வந்தால் எவ்விதக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் என்பதைப் பற்றிய தோற்றம் புலனாகும்.

பெரும்பாலான அவரது ஜனநாயகக் கட்சிப் போட்டியாளர்களிடமிருந்து, DLC உடைய நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்ட வகையில் கெர்ரி தன்னை தனித்துக் காட்டிக்கொண்டார்; அதாவது, ஜனநாயகக் கட்சி முற்றிலும் உள்நாட்டுப் பொருளாதாரச் சமூகப் பிரச்சினைகளின்மீது கவனக்குவிப்பு மட்டுமே கொண்டிராமல், புஷ் நிர்வாகத்தைத் தேசியப் பாதுகாப்பு என்ற பிரச்சினையிலும், வலது புறத்தில் இருந்தாக்க வேண்டும் என்பது அந்த நிலைப்பாடு ஆகும்.

"முன்னேற்றமான சர்வதேசியம்: ஜனநாயகக் கட்சியின் தேசியப் பாதுகாப்பு மூலோபாயம்" என்ற தலைப்பில் முக்கிய பத்திரம் புஷ் நிர்வாகத்தின் முடிவில்லாத "பயங்கரவாதத்தின்மீதான போர்" என்ற வரம்பைத்தான் தழுவியுள்ளது. அது கூறுகிறது: "பனிப்போர் போலவே, இன்று நாம் எதிர்கொண்டுள்ள போராட்டம், சில ஆண்டுகள் மட்டுமல்ல, சில பத்தாண்டுகள் தொடரும். மறுபடியும், அமெரிக்கா உலகில் இருக்கும் சுதந்திர மற்றும் ஜனநாயக சக்திகளைத் திரட்டி இந்தப் புதிய அச்சுறுத்தலைத் தோற்கடித்து, சிறந்த உலகத்தை அமைக்கவேண்டும்."

இந்த ஆவணம் "ஜனநாயகவாதிகள் உலகத்தித்தின் மிக உயர்ந்த தொழில்நுட்பம் வாய்ந்த முன்னேறிய இராணுவத்தைத்தான் பராமரிப்பார்கள், உலகில் எப்பகுதியிலும் நம்முடைய நலன்களைப் பாதுகாக்க, அதைப் பயன்படுத்துவதற்குச் சிறிதும் தயக்கம் காட்ட மாட்டோம்" என்று பிரகடனப்படுத்தி, புஷ் நிர்வாகத்தின் முன்கூட்டியே தாக்கும் போர்க் கொள்கைநெறியை வெளிப்படையாக அரவணைக்கிறது. அது மேலும் கூறுவதாவது: "பேரழிவு ஆயுதங்கள் பயன்படுத்தப்படமுடியாமல் முன்கூட்டியே தாக்கும் இராணுவமுறையைப் பயன்படுத்துவது மட்டும் இல்லாமல், ஜனநாயகக் கட்சியினர் அத்தகைய பேரழிவு ஆயுதங்களை சில நாடுகள் பெறுவதையும், கொள்ளுவதையும் தடுப்பதில் கவனக்குவிப்பு காட்டும்."

இராணுவச் செலவினங்கள் பிரச்சினைபற்றி ஆவணம் உறுதிகூறுவதாவது: "இடதுகளின் இடைவிடாக் குறைகூறதலான அமெரிக்கா, இராணுவத்திற்கு அதிகம் செலவழிக்கிறது என்பதை நாங்கள் நிராகரிக்கிறோம். பென்டகன் செலவுகளைக் குறைக்கும் நேரமல்ல இது." இவ்வாறு கூறப்படுவது, அமெரிக்கா ஆண்டுதோறும் போர்ச்செலவிற்காக, உலகில் இதற்கடுத்தாற்போல் இராணுவச் செலவு செய்யும் 25 நாடுகளின் மொத்தச் செலவைவிட கூடுதலாக, அமெரிக்க போர் இயந்திரத்திற்காக செலவிடுதல் அரை டிரில்லியன் டாலர்களை நெருங்கிக் கொண்டு இருக்கும் போது பேசப்படுகின்றது. வாஷிங்டன் டைம்ஸ் கடந்த வாரம் குறிப்பிட்டுள்ளதுபோல், குடியரசுக்கட்சியினர்கூட, தற்பொழுதைய இராணுவச் செலவின் அளவு--றேகன் காலத்தில் 1980களில், மிகப்பெரிய அணுவாயுத வலிமைப்பெருக்கத்திற்கு செலவு செய்யப் பட்டதைவிடக்கூடுதலானது-- இது பொருளாதார அடிப்படையில் இன்று இயலாத காரியமாகும் என்று குடியரசுக் கட்சியின் சட்டமியற்றுபவர்கள் முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

மேலும் இந்த ஆவணம் உலகளாவிய ஏகாதிபத்தியத் தலையீடு பற்றிய இராணுவ மூலோபாயத்தைப் பற்றி "இராணுவத்தை மாற்றியமைத்து, இன்னும் திறமையுடன் பயன்படுத்துதல்" என்ற தலைப்பில், ஒரு பிரிவில் நெஞ்சை உறைய வைக்கும் தகவல்களை விரிவாகக் கூறுகிறது.

"ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் நடைபெற்ற போர்கள், மிகக் கூடுதலான தொலைவில் நம்முடைய ஆற்றலைக் காட்டும் வகையில் வலிமையை நாம் அதிகரித்தாக வேண்டும் என்று காட்டியுள்ளன."

"அடுத்தத் தலைமுறை துல்லிய வெடிபொருட்கள்; ஆளில்லா விமானங்கள், நீண்ட தொலைவு திறமையுடன் இயங்கும் குண்டுவீசும் விமானங்கள்; எடைகுறைந்த, நகரக்கூடிய, கூடுதலான மரணத்தைக் கொடுக்கும் தரைப்படைக்கான சக்திகள், குறிப்பாகச் சிறப்பு நடவடிக்கைகளுக்காக; ஒரு புதிய தலைமுறை கடற்படைக் கப்பல்கள், பெரிய, கூடுதலான துல்லியத்துடன் தொலைப் போர்ப் பகுதிகளையும் சுட்டு எரிக்கும் திறன் கொண்டவை" ஆகியவற்றில் முதலீடு தேவை என்று ஆவணம் அழைப்பு விடுக்கிறது.

ஆப்கானிஸ்தானத்திலும், ஈராக்கிலும் நடவடிக்கைகள் விரிவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் கூட, இந்த ஆவணம் அமெரிக்கா வடகொரியாவை, "அது மீண்டும் அணுவாயுதங்கள் உற்பத்தியில் ஈடுபட்டால், தன் நலன்களுக்காக அதனின்றும் பாதுகாத்துக் கொள்வதற்கு" அச்சுறுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.

இறுதியாக, "நம்முடைய நாட்டைக் காப்பதற்காக மிக இன்றியமையாத காலம் கடந்துள்ள அவசர உணர்வை ஜனநாயகக் கட்சியினர் கொண்டுவருவர். அதிகாரத்துவத் தேக்கத் தன்மையும், நுனிப்புல்மேயும் நனவும் அமெரிக்காவில் உள்நாட்டு உளவுத்துறை அமைப்பை ஏற்படுத்தவிடாமல் தடுப்பதை நாங்கள் அனுமதியோம்" என்று இந்த ஆவணம் கூறுகிறது.

இந்த அறிக்கையைப் பற்றி விமர்சிக்க எங்கு தொடங்குவது? அமெரிக்க மக்களை இடைவிடாமல் இரண்டரை ஆண்டுகளாக, புதிய பயங்கரவாதத் தாக்குதல் வரவுள்ளது என்ற அச்சத்தில் ஆழ்த்தியுள்ள புஷ் நிர்வாகத்தால் தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலைமையில், இந்த "காலம் கடந்துள்ள அவசர உணர்வு" என்று அழைப்பது இன்னும் பீதியைக் கிளப்பிவிட்டுள்ளது. இதேபோல்தான், "உள்நாட்டு உளவுத்துறை அமைப்பு" அல்லது அரசியல் போலீஸ் என்ற கருத்திற்கான அழைப்பும் உள்ளது.

இதுகாறும் அத்தகைய அமைப்பு வெளிப்படாததற்குத் தடை "நுனிப்புல்மேயும் நனவு" அல்ல; வாட்டர் கேட்டிற்குப் பிறகு -- அந்தச் சகாப்தத்தில் சிஐஏ உடைய கறைபடிந்த செயல்களும் போரெதிர்ப்பு இயக்கத்தைப் பற்றிய அரசியல் வேவுபார்ப்புக்களும், கெர்ரியும் அதில் ஒரு பங்கைக் கொண்டிருந்தார் -- கொண்டுவரப்பட்ட சட்டபூர்வமான தடைகள்தாம் காரணம். புஷ் நிர்வாகம் அதிகமாக இத்தடைகளை அகற்றிவிட்டது; இப்பொழுது ஜனநாயக வாதிகள் அதை முற்றிலும் தகர்த்துவிடவேண்டும் என்று கருதுகின்றனர்.

அடக்குமுறையின் சமூக வேர்கள்

இந்தக் கூடுதலான உள்நாட்டுக் கண்காணிப்பிற்கும், தடையற்ற போலீஸ் அதிகாரங்களுக்குமான கோரிக்கைக்கு உண்மை ஆதாரம் என்ன? அமெரிக்க இலக்குகளான பூகோள மேலாதிக்கத்தின் நீண்டகால விழைவிற்கு செப்டம்பர் 11 பயன்படுத்தப்பட்டது போலவே, புதிய பயங்கரவாத அச்சுறுத்தல் என்ற பயம் எழுப்பப்பட்டு, உள்நாட்டு அடக்குமுறைக்கு போலிக்காரணமாக வந்து, உண்மையான காரணமான அமெரிக்கச் சமுதாயத்தைப் பிளந்துகொண்டிருக்கும் ஆழ்ந்த முரண்பாடுகளை மறைக்கிறது.

அனைத்துப் பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளிலும், அமெரிக்கா மிகுந்த அளவில் சமுதாயச் சமத்துவமற்ற நிலையில் இருக்கிறது. இந்த நாட்டில், 13,000 செல்வம் கொழிக்கும் குடும்பங்களின் வருமனம், மிக ஏழ்மையிலுள்ள 20 மில்லியனை விட அதிகமானது ஆகும். இந்த முன்னோடியில்லாத செல்வக் குவிப்பு, சமுதாயத்தில் சிறப்பாக விளக்கப்படும் ஒரு சிலரது குழுஆட்சியையும், இருகட்சி நடைமுறையையும் ஏற்படுத்தி அதன் மூலம் செல்வத்தையும், சலுகைகளையும் துய்க்கும் ஒரு மிகச்சிறிய செல்வந்தத் தட்டு காப்பாற்றப்படுகிறது. இந்த சமுதாயத்தின் இத்தன்மையும், இந்த அரசியலின் தன்மையும், ஜனநாயக உரிமைகளுடன் முற்றிலும் இயைந்து இருக்கமுடியாது; அதன் காப்பிற்கு போலீஸ் அரசாங்க முறைகள்தாம் தேவை.

இதுதான் இடதுகள் மற்றும் தாராண்மைவாதிகள் என "புஷ்ஷைத் தவிர யாராயினும்", "எப்படியும் புஷ்ஷைத் தோற்கடியுங்கள்" என்ற கோஷங்கள் எழுப்புவர்களுடைய உண்மையான நிலை ஆகும். ஜனநாயகக் கட்சியின் வெற்றி ஒரு புதிய சர்வதேச அமைதி, ஜனநாயகம் இவற்றைக் கொண்டு வரும் என்ற கருத்து ஒரு வெளிப்படையான மோசடியாகும். கிளின்டன் நிர்வாகமே, அது ஆட்சியில் இருந்த எட்டு ஆண்டுக் காலத்தில், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தில், அமெரிக்க இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விடவும் அதிக அளவு தலையீடுகளை, சோமாலியா, ஹைட்டி, பழைய யூகோஸ்லாவியா, இவற்றிற்கு அனுப்பியதுடன் ஈராக், ஆப்கானிஸ்தான், சூடான் ஆகியவற்றின்மீது விமானக் குண்டு வீச்சுக்களையும் நடத்தியுள்ளது என்பது நினைவிற்கொள்ளப்பட வேண்டும்.

புஷ்ஷின் தோல்வி காலத்தை 2000க்கு பின்னோக்கி இட்டுச் செல்லும் என்ற கருத்துருவும் கூட ஒரு பிரமை ஆகும். அமெரிக்க ஏகாதிபத்தியம், புதிய முறையில் உண்மைகளை நிறுவியுள்ளது; புதிய அமெரிக்கப் பேரரசின் சொற்களில் கூறவேண்டும் என்றால், எண்ணெய் வளமுள்ள பாரசீக வளைகுடா, காஸ்பியன் வளப்பகுதிகள் ஆகியவற்றில் நிலத்தில் பூட்சுகளைப் பதித்துள்ளதுடன், இப்பொழுது அப்பாதையிலிருந்து பின்வாங்காது.

கெர்ரியுடைய ஜனநாயகத் தலைமைக் குழுவினால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள தடையற்ற இராணுவமுறைத் திட்டம், இன்னும் கூடுதலான அளவிற்கு இருக்கும், வரவிருக்கும் போட்டியாளர்களுக்கு இடையே பூசல்களை ஏற்படுத்தும். இத்தகைய விரோதப் போக்கினால் விளைந்துள்ள தவிர்க்கமுடியாத தர்க்கம், சர்வதேச தொழிலாள வர்க்கம் தலையிட்டு ஏகாதிபத்தியத்தை முடிவிற்குக் கொண்டு வந்தால் ஒழிய, இன்னும் கூடுதலான இரத்தம் பெருகும் போர்களையும், இறுதியில் முடிவு காணும் அணுவாயுத இறுதிப் போராட்டக் களத்தையும்தான் கொண்டுவரும்.

அனைத்து அமெரிக்கப் படைகளும், ஈராக், ஆப்கானிஸ்தான், எஞ்சியுள்ள மத்திய கிழக்கு, மத்திய ஆசியப் பகுதிகளிலிருந்து, இப்பொழுது ஹைட்டியில் இருந்தும், உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை, சோசலிச சமத்துவக் கட்சி தன்னுடைய வேலைத்திட்டத்தின் மையத்தில் வைத்துள்ளது. தக்க காரணமின்றிப் போரில் ஈடுபடுவோர், அதைத் தூண்டிவிட்டவர்கள், சட்ட விரோத ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும் போர்க்குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும். பென்டகன் போர் இயந்திரம் அகற்றப்படவேண்டும் என்றும், அதன் பேரழிவு ஆயுதங்கள் அப்புறப்படுத்தப்படவேண்டும் என்றும், மிகப் பெரிய முறையில் ஆயுங்களுக்காகச் செலவிடப்படும் நிதி, அடிப்படைச் சமுதாயப் பிரச்சினைகளான வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சுகாதார வசதி, கல்வி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் எந்த இடங்களில் எல்லாம் மக்களுடைய வாழ்க்கை நாசமுற்றதோ, அங்கெல்லாம் மறு சீரமைப்புக்களுக்கும் செலவழிக்கப்பட வேண்டும் என்று கோருகிறோம்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் தோற்கடிக்கப்படவேண்டும் என்பது உலகப் பிரச்சினை என்பதை உணர்வதுடன், அது ஒவ்வொருநாட்டின் தொழிலாளர்களும் ஒரு பொதுத் திட்டத்தின் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட மூலோபாயத்தின் அடிப்படையில் ஒன்றுபடுத்தப்படுவதின்மூலம்தான் தீர்க்கப்படமுடியும் என்பதையும் அறிகிறோம்.

போருக்கெதிரான எதிர்ப்புக்கள்

ஒராண்டிற்குச் சற்று முன்னர், உலகம் முழுவதும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் 10 மில்லியன் மக்களை தெருக்களில் போராடவைத்தன. அதன் பரப்பு மற்றும் சர்வதேச ஒற்றுமையின் அர்த்தத்தில் உலகவரலாற்றில் அதுபோன்ற உலகளாவிய எதிர்ப்புக்கள் நடத்தப்பெற்றதே கிடையாது. அந்நேரத்தில் நியூயோர்க் டைம்ஸ், அபூர்வமான தெளிவுக் கணத்தில், இந்த பெரும் மக்கட்தொகையின் வெளிப்பாடு, "இரண்டு பெரிய சக்திகள் - அமெரிக்க அரசாங்கம் மற்றும் உலக மக்கள் கருத்து என்று" ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிரிடையானவற்றின் தோற்றத்தை சமிக்கை காட்டியது என்று ஒத்துக் கொண்டிருந்தது.

இத்தகைய பெரும் மக்கள் எதிர்ப்பிற்குப் பிறகும் ஈராக்கியப் படையெடுப்பு நடைபெற்றதானது எதிர்ப்பு மட்டும், அதன் ஆற்றலினால் போரை நிறுத்த முடியாது என்பதை நிரூபித்துவிட்டது. வேறு ஒரு முன்னோக்கு தெளிவாகத் தேவைப்படுகிறது. இப்பொழுதைய அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரத்தில் இரண்டு புதிய மாற்றுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. முதலில், இந்த மக்கள் இயக்கத்தை ஜனநாயகக் கட்சியின் பின்னே சேர்த்துப் பின்னர் அதன் குடலைப் பிடுங்கி மடியச் செய்தல் என்பது உள்ளது.

இத்தேர்தலில் நம் கட்சியின் தலையீடு ஒரு எதிரிடை முன்னோக்கைக் கொடுக்கிறது; அது முழு நனவுடன் முதலாளித்துவ சமூகத்திற்குள்ளே இருக்கும் புறநிலை சக்திகள் எவ்வாறு மிகப்பெரிய சர்வதேச எதிர்ப்புக்களைக் கொண்டுவந்தன என்பதை வெளிப்படுத்துதல் ஆகும். கடந்த கால் நூற்றாண்டாக தோன்றி வந்துள்ள முதலாளித்துவ உற்பத்தியின் பூகோள ஒருங்கிணைப்பை உக்கிரப்படுத்துவதில் அவை காணக்கிடக்கின்றன. இந்ந்நிகழ்ச்சிப் போக்கு சமூக சமத்துவமின்மையை தீவிரப்படுத்தியுள்ள அதேவேளை, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புறநிநிலை ஒற்றுமையையும் வலுப்படுத்தியுள்ளது.

இப்புறநிலை ஒற்றுமை அரசியல் நனவுபெறுமாறு செய்தாக வேண்டும். அமெரிக்காவில் சமூக சமத்துவம் என்பது, சர்வதேச நிறுவனங்களும், வங்கிகளும், இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் உலகின் ஒவ்வொருபகுதியிலும் உழைக்கும் மக்களை அடக்கிச் சுரண்டிக்கொண்டு இருக்கும் வரை அடையப்படமுடியாதது ஆகும். மேலும், பழைய காலனித்துவ நாடுகள் மற்றும் ஒடுக்கப்படும் நாடுகளில் இருந்து, வறிய நிலை, போர் இவற்றிலிருந்தும் விடுதலை பெறுதல் என்பது, ஏகாதிபத்தியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொதுப் போராட்டத்தில் அமெரிக்க தொழிலாள வர்க்கத்துடன் கூட்டு வைப்பதன் மூலம்தான் அடைய முடியும்.

அமெரிக்கத் தேர்தல்களில் முன் வைக்கப்படும் இந்த பிரச்சினைகள் உலகப் பிரச்சினைகள் ஆகும் மற்றும் இவற்றிற்கு உலகத் தீர்வு தேவைப்படுகிறது. சோசலிச சமத்துவக் கட்சியால் தொடுக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சாரம், உலகம் முழுவதிலும் போருக்கு எதிரான தாக்குதலாகவும் மற்றும் சமுதாயத்தை சோசலிச மறு ஒழுங்கமைப்பு செய்வதன் ஒரு பகுதியாக, உலக ஏகாதிபத்தியத்தின் இதே மையத்திலும் இங்கு, தொழிலாள வர்க்கத்தின் மிகவும் நனவான பகுதியை அரசியல் நிலைமைகளில் தலையீடு செய்வதற்கான வழிமுறைகளாக கட்டாயம் ஆகவேண்டும்.

இம்மாநாட்டிற்கு வந்துள்ள ஒவ்வொருவரையும் சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து, சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில், உழைக்கும் மக்களின் ஒரு புதிய மக்கள் இயக்கத்தைக் கட்டி அமைப்பதற்காக, இதன் மூலம் உலகை மாற்றுவதற்காக 2004 தேர்தல்கள் அளிக்கும் வாய்ப்பைப் பற்றிக் கொள்ளுமாறு நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

See Also :

உலக சோசலிச வலைத் தளம் - சோசலிச சமத்துவக் கட்சி மாநாட்டின் ஆரம்ப அறிக்கை
2004 அமெரிக்க தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் மூலோபாயம்

Top of page