World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president's call for peace talks fuels tensions in government ranks

சமாதானப் பேச்சுக்களுக்கான இலங்கை ஜனாதிபதியின் அழைப்பு அரசாங்கத் தரப்பில் பதட்டங்களை தூண்டிவிட்டுள்ளது

By K. Ratnayake
4 May 2004

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, நோர்வே அரசாங்கத்தை மத்தியஸ்த்த பாத்திரத்தை தொடருமாறு கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுப்பதன் மூலம், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இடைநிறுத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் முன்னெடுப்பதை நோக்கிய முதலாவது பரீட்சார்த்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகள் மீதான மாதக்கணக்கிலான கசப்பான தாக்குதல்களை அடுத்து எடுக்கப்பட்டுள்ள குமாரதுங்கவின் இந்தத் தீர்மானம், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினுள் (ஐ.ம.சு.கூ) ஆழமான பிளவுகளுக்கு தூபமிடும் ஆற்றலைக் கொண்ட ஒரு எதிர்பாராத திருப்பத்தைக் குறிக்கின்றது.

ஏப்பிரல் 2 நாட்டில் நடைபெற்ற தேர்தலுக்கு முன்னதாக, ஜனாதிபதியும் அவரது கூட்டாளிகளும், விடுதலைப் புலிகளுடன் முன்னாள் ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தைகளில், தேசியப் பாதுகாப்பை கீழறுப்பதாக அதை மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டி வந்ததோடு, விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்படுவதாக நோர்வேயை குற்றம்சாட்டினர். இப்போது புதிய சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம், தற்போது நடைமுறையில் உள்ள யுத்த நிறுத்தத்தை தொடரவும் மற்றும் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கவும் பெரு வர்த்தகர்களினதும் பெரு வல்லரசுகளினதும், குறிப்பாக அமெரிக்காவினதும் நெருக்குவாரத்திற்கு உள்ளாகியுள்ளது.

குமாரதுங்க, சிறுபான்மை சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தை நியமித்தவுடன், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கொலின் பவல் ஏப்பிரல் 9 அன்று ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்புகொண்டதோடு, சமாதானப் பேச்சுவார்த்தையின் தேவையையும் வலியுறுத்தினார். அவர், மே 12 வாஷிங்டனுக்கு விஜயம் செய்யவுள்ள வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருடனும் பேசினார்.

அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் ஆமிடேஜ் இலங்கையின் புதிய பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த செய்தியில், அமெரிக்கா நோர்வேயுடனும் ஏனைய உதவி வழங்கும் நாடுகளுடனும் சமாதான முன்னெடுப்புகளைப் பற்றி கலந்துரையாடும் என பிரகடனப்படுத்தியிருந்தார். சமாதான முன்னெடுப்புகளுக்கு செயலூக்கம் அளிப்பதற்காக கடந்த ஆண்டு ஏப்பிரலில் டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் வாக்குறுதியளிப்பட்ட பொருளாதார உதவியான 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பந்தயப் பணமாக வைக்கப்பட்டுள்ளன.

குமாரதுங்கவின் கடந்த வார அழைப்பிற்கு பதிலளித்த நோர்வே பிரதமர் கஜெல் மக்னே பொன்டேவிக், மத்தியஸ்தத்தை மீண்டும் தொடர்வதற்கான தனது அரசாங்கத்தின் விருப்பத்தை வெளிப்படுத்தினார். சனிக்கிழமை இலங்கை வந்த நோர்வே துணை வெளியுறவு அமைச்சர் விதார் ஹெல்கிசன் மற்றும் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெயிம் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, ஞாயிறன்று ஜனாதிபதியையும் வெளியுறவு அமைச்சர் கதிர்காமரையும் சந்தித்தது.

கலந்துரையாடலை "விரிவானதாகவும் மற்றும் ஆக்கப்பூர்வமானதாகவும்" விபரித்த ஹெல்கிசன், பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வதற்கு சிறிது காலம் எடுக்கலாம் எனவும் சுட்டிக்காட்டினார். குமாரதுங்க விடுதலைப் புலிகளுக்கு பேச்சுவார்த்தைக்கான அழைப்பை விடுத்திருக்கும் அதேவேளை, பேச்சுவார்த்தைக்கான எந்தவொரு அடிப்படையும் தெளிவின்றியே உள்ளது.

திங்களன்று சொல்ஹெய்மை சந்தித்ததை அடுத்து, விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ் செல்வன், பேச்சுவார்த்தைக்கான தமது அமைப்பின் விருப்பத்தை பிரகடனம் செய்தார். எவ்வாறெனினும், பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான எந்தவொரு புதிய நிபந்தனைகளையும் விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை சுட்டிக்காட்டிய அவர், விடுதலைப் புலிகளின் முன்னைய கோரிக்கைகளை மீண்டும் குறிப்பிட்டார்.

2001 தேர்தலில் ஐ.தே.மு வெற்றி பெற்று, 2002 பெப்ரவரியில் விடுதலைப் புலிகளுடன் ஒரு யுத்த நிறுத்த உடன்படிக்கையை கைச்சாத்திட்ட பின்னர், 2002 செப்டெம்பரில் உத்தியோகபூர்வமான சமாதான பேச்சுவார்த்தைகள் முதலாவதாக ஆரம்பித்தன. ஆயினும், 2003 ஏப்பிரலில் விடுதலைப் புலிகள் தமது ஈடுபாட்டை இடைநிறுத்திக்கொண்டதை அடுத்து பேச்சுவார்த்தைகள் கவிழ்ந்து போயின. விடுதலைப் புலிகள் தனியான தமிழ் அரசுக்கான தமது கோரிக்கையை கைவிடுவது உட்பட பல சலுகைகளை வழங்கிய போதிலும், சிறிதளவே மீண்டும் பெற்றது. வாஷிங்டன், தமது "பயங்கரவாதிகள்" பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை ஒதுக்க மறுத்ததோடு, அமெரிக்காவில் நடந்த பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வதை தவிர்த்தது.

அதேசமயம், குமாரதுங்க, "சமாதானத்தின்" தேவைக்கு உதட்டளவில் சேவை செய்த அதேவேளை, பேச்சுவார்த்தைகளுக்கு எதிரான அதிகரித்தளவிலான கூச்சல் நிறைந்த பிரச்சாரத்தை உக்கிரமாக்கினார். ஜனாதிபதி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அதேபோல் சிஹல உறுமய மற்றும் அத்தோடு இணைந்த பெளத்த பிக்குகளின் அமைப்பான ஜாதிக சங்க சம்மேளனய (ஜே.எஸ்.எஸ்) போன்ற சிங்களத் தீவிரவாத தட்டுக்கள் அணிதிரளும் மையமாக விளங்கினார். அவரது சேனாதிபதி அதிகாரங்களைப் பயன்படுத்தி, அவரும் இராணுவ உயர் மட்டத்தினரும் பேச்சவார்த்தைகளை கீழறுப்பதற்காக திட்டமிடப்பட்ட ஒரு தொடர் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் --இறுதிச் சுற்று ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர், முரண்பாடான சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் கப்பல் ஒன்றை மூழ்கடித்ததும் இதில் அடங்கும்.

பேச்சுவார்த்தைகள் வீழ்ச்சியடைந்ததை அடுத்து ஐ.தே.மு விற்கு எதிரான அரசியல் எதிர்ப்பு தொடர்ந்தது. ஜே.வி.பி மற்றும் சிஹல உறுமயவும் விடுதலைப் புலிகளுக்கு நாட்டை காட்டிக்கொடுப்பதாக விக்கிரமசிங்கவை கண்டனம் செய்ததோடு, நோர்வே தலைமையிலான சமாதான கண்காணிப்பாளர்கள் --இலங்கை கண்காணிப்புக் குழு-- பக்கச் சார்பாக நடப்பதாக குற்றம் சாட்டி அவர்களை வெளியேற்றுமாறு கோரின. இந்தத் தட்டுக்களின் அழுத்தத்தின் கீழ், குமாரதுங்க கடந்த அக்டோபரில் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜெனரல் ரிகேவ் டெலிப்செனை திரும்ப அழைக்குமாறு நோர்வேக்கு வேண்டுகோள் விடுத்தார். அவரது "நடுநிலைமை" "கடுமையான சந்தேகத்துக்குரியதாக" உள்ளதாகவும் "அப்பதவியை வகிப்பதற்கு அவர் பொருத்தமானவர் அல்ல" எனவும் ஜனாதிபதி பிரகடனம் செய்தார்.

இந்த ஐ.தே.மு விரோத பிரச்சாரம், பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அடிப்படையாக, இடைக்கால தன்னாட்சி அதிகாரசபைக்கான தனது திட்டத்தை விடுதலைப் புலிகள் கடந்த அக்டோபர் இறுதியில் வெளியிட்டதை அடுத்து உஷ்ண நிலையை எட்டியது. ஜே.வி.பி, ஹெல உறுமய மற்றும் குமாரதுங்கவின் சொந்தக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க) சில பிரிவினரும் இந்தத் பிரேரணைகள் நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான திட்டம் என கண்டனம் செய்தன. சற்றே சில நாட்களின் பின்னர், நவம்பர் 4 அன்று, ஜனாதிபதி மூன்று முக்கிய அமைச்சுக்களின் கட்டுப்பாட்டை அபகரித்துக்கொண்டதோடு, அவசரகால நிலைமையை பிரகடனம் செய்யுமளவிற்கு சென்றார். வாஷிங்டனதும் மற்றும் புது டில்லியினதும் திரைமறைவிலான அழுத்தத்தை அடுத்து பின்வாங்கினார். விக்கிரமசிங்கவுடனான இழுபறி மற்றும் பயனற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர், பெப்ரவரி 7 அன்று அரசாங்கத்தை பதவிவிலக்கிய குமாரதுங்க, ஏப்பிரல் 2 தேர்தலுக்கு களம் அமைத்தார்.

பிரிவுகள் உருவாகின்றன

குமாரதுங்க இப்போது "சமாதான முன்னெடுப்புகளுக்கான" எதிர்ப்பை பிரதிபலிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தங்கியிருக்கின்றார். இந்த சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீ.ல.சு.க, ஜே.வி.பி மற்றும் பல சிறு கட்சிகளின் கூட்டணியாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, புதிய அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையின்மையால், சிஹல உறுமய மற்றும் ஜாதிக சங்க சம்மேளனமும் தேர்தலுக்கு சற்று முன்னதாக ஸ்தாபித்த, ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நிபந்தனையுடனான ஆதரவில் தங்கியிருக்கின்றது. இதன் பெறுபேறாக, சமாதானா பேச்சுக்களை நோக்கிய ஜனாதிபதியின் மாற்றம் அவரது கூட்டணியில் இருந்தும் மற்றும் ஸ்ரீ.ல.சு.க வில் இருந்தும் தவிர்க்க முடியாதவகையில் எதிர்ப்பைத் தூண்டிவிடும்.

குமாரதுங்க நோர்வேயின் தலையீட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளதை ஹெல உறுமய ஏற்கனவே விமர்சித்துள்ளது. குமாரதுங்க, கடந்த நவம்பரில் பாதுகாப்பு அமைச்சை அபகரித்தமைக்கு காரணம் காட்டுவதற்காக, நோர்வேயின் பக்கச் சார்பை பயன்படுத்திக்கொண்டார் என ஹெல உறுமயவின் பாராளுமன்றத் தலைவர் அதுரலிய ரட்ன தேரர் நேற்று சுட்டிக்காட்டினார். ஹெல உறுமய வார இறுதியில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், "ஜனாதிபதி சமாதானப் பேச்சுக்களை நிறுத்துவதோடு இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை பிரேரணைகளையும் நிராகரித்தால்" மட்டுமே அது அரசாங்கத்திற்கு "ஆதரவளிக்கும்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பி யும் மறுப்பு தெரிவத்துள்ளது. யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்கான தீர்வை "நோர்வே ஊடாக" அடைய முடியும் என தமது கட்சி நம்பவில்லை என ஜே.வி.பி பிரச்சார செயலாளர் விமல் வீரவன்ச சண்டே ஐலண்ட் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். சில காலத்திற்கு நோர்வேயின் தலையீட்டிற்கு ஜே.வி.பி உடன்பட்டுள்ள போதிலும், இலங்கையின் "இறைமை அதேபோல் தேசிய பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படுத்த முடியாது" என்ற நிபந்தனை இருந்துகொண்டுள்ளது. இந்தியா தலையிடவேண்டும் என்ற ஜே.வி.பி யின் வேண்டுகோளை வீரவன்ச மீண்டும் விடுத்தார்.

ஜே.வி.பி சமாதான பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதை நேரடியாக எதிர்க்காத போதிலும், பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படைகள் பற்றி ஸ்ரீ.ல.சு.க விற்குள் விரிவடையும் கூர்மையான வேறுபாடுகள் உள்ளன. ஜே.வி.பி மற்றும் ஸ்ரீ.ல.சு.க விற்கிடையிலான கூட்டணி உடன்படிக்கை இரண்டு முரண்பாடான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. ஸ்ரீ.ல.சு.க, யுத்தப் பிராந்தியமான வடக்கு மற்றும் கிழக்கிற்கு மாகாண மட்டத்திலான மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதை பிரேரிக்கும் அதேவேளை, ஜே.வி.பி, அதிகாரப் பகிர்வை நிராகரிப்பதோடு விடுதலைப் புலிகளுக்கு சலுகைகள் வழங்காத மற்றும் மேலும் வரையறைக்குள்ளான பரவலாக்கத்தை பிரேரிக்கின்றது.

இந்த சமாதான முன்னெடுப்புகள், குமாரதுங்க கடந்த ஆண்டுகளாக மிக நெருக்கமாக சார்ந்திருந்த இராணுவ உயர்மட்ட பகுதியினருனான நட்பைக் கெடுக்கவும் அச்சுறுத்துகிறது. ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி யைப் போல், ஆயுதப் படைகளின் சில பிரிவுகளும் நோர்வே தலைமையிலான யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர்களை குற்றங் காண்கின்றன. கடந்த வார ஐலண்ட் பத்தரிகை, விடுதலைப் புலிகளின் யுத்த நிறுத்த மீறல்களை பற்றி கண்காணிப்புக் குழு எதுவும் செய்வதில்லை என குற்றம் சாட்டிய ஒரு இராணுவ அலுவலரை மேற்கோள் காட்டியது.

கடந்த வாரம் கிழக்கு நகரமான மட்டக்களப்பிற்கு அருகில் ஏழு விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டமையும், இராணுவத்தில் உள்ள கும்பல்கள் பேச்சுவார்த்தைகளை கீழறுப்பதற்காக மோதல்களைத் தூண்டிவிடுவதற்கான சாத்தியங்களைத் தோற்றுவித்துள்ளது. ஆயுதப் படைகளும் மற்றும் கொழும்பு ஊடகங்களும், மட்டக்களப்பு தாக்குதலுக்கான பொறுப்பை விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற கருணாவின் ஆதரவாளர்கள் மீது சுமத்துகின்றன. ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் இந்தக் கொலைகளுக்கு இராணுவம் உடந்தையாக இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளதோடு கண்காணிப்புக் குழுவின் விசாரணையையும் உத்தியோகபூர்வமாக கோரியுள்ளது.

குமாரதுங்க பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும்போது ஆளும் கூட்டணயினுள்ளும் மற்றும் இராணுவத்தினுள்ளும் பதட்டங்கள் கூர்மையடைவது நிச்சயம். அவர் இந்திய அரசாங்கத்தை பேச்சுவார்த்தைகளில் செயலாற்றலுடன் ஈடுபடுமாறு உற்சாகப்படுத்துவதற்காக வெளியுறவு அமைச்சரான கதிர்காமரை கடந்த வாரம் புது டில்லிக்கு அனுப்பி வைத்தார். விடுதலைப் புலிகள் மீது உயர்ந்த அழுத்தத்தை திணிப்பதற்காகவும் மற்றும் தமது சிங்களப் பேரினவாத நண்பர்களை அமைதிப்படுத்துவதற்காகவும் இந்தியாவின் ஆதரவை பட்டியலில் சேர்ப்பதை அவர் இலக்காகக் கொண்டுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு குறிப்பிடத்தக்களவு சலுகைகள் வழங்குவதை புது டில்லி எதிர்க்கின்றது. அத்தகைய ஒரு செயல், இந்தியாவில் உள்ள, சிறப்பாக தென் மாநிலமான தமிழ் நாட்டில், பிரிவினைவாத இயக்கங்களை ஊக்குவிக்கும் என புது டில்லி பீதிகொண்டுள்ளது.

புது டில்லியில் இருக்கும் போது, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்ற விடுதலைப் புலிகளின் உரிமை கோரலை --பேச்சுக்களுக்கான விடுதலைப் புலிகளின் பிரதான நிபந்தனை-- அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தயாராவதாக கதிர்காமர் ஐலண்ட் பத்திரிகையில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தக் கருத்துக்கள், விடுதலைப் புலிகளின் இதே நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டமைக்காக முன்னைய ஐ.தே.மு அரசாங்கத்தை கடுமையாகத் திட்டிய சுதந்திரக் கூட்டமைப்பின் தட்டுக்களில் உடன்பாடின்மைகளுக்கு சந்தேகத்திற்கிடமின்றி மேலும் எண்ணெய் வார்க்கும்.

இந்த முரண்பாடுகள், இலங்கை ஆளும் வர்க்கம் முகம் கொடுக்கும் அடிப்படை தர்மசங்கட நிலையை மீண்டும் ஒரு முறை சுட்டிக்காட்டுகிறது. இந்த யுத்தமானது பொருளாதார ரீதியில், தீவை ஒரு மலிவு உழைப்பு சொர்க்கமாக மாற்றும் கொழும்பு பெரு வர்த்தகர்களின் திட்டத்திற்கு தடையாக மாறியுள்ளது. எவ்வாறெனினும், அரசியல் ரீதியில், இந்த பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகள், ஆளும் கும்பல்கள் தசாப்த காலங்களாக அணிதிரண்டு வந்த மையப்புள்ளியும் மற்றும் யுத்தத்திற்கு முதல் காரணமாகவும் இருந்த தமிழர் விரோத பேரினவாதத்தை நேரடியாக குறுக்கே வெட்டுகிறது.

Top of page