World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Political earthquake in India

Hindu supremacist BJP falls from power

இந்தியாவில் அரசியல் பூகம்பம்

இந்து மேலாதிக்கவாத பிஜேபி பதவியை இழந்தது

By Keith Jones
15 May 2004

Use this version to print | Send this link by email | Email the author

இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியல் மற்றும் பொருளாதார கட்டுக் கோப்பிற்கு அதிர்ச்சியூட்டுகின்ற வகையில், இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதாக்கட்சியும் (பிஜேபி) அதன் தேசிய ஜனநாயக முன்னணி (தேஜமு) கூட்டணியும் அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட்டன. வியாழன் அதிகாலை, இந்தியாவின் 14-வது பொதுத் தேர்தலில் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கிய சிலமணி நேரத்திற்குப் பின்னர், பிஜேபி தலைமையிலான தேஜமு தோல்வியை ஒப்புக்கொண்டது மற்றும் மாலையில், 1998 முதல் பிரதமராக பணியாற்றிவரும் அட்டல் பிஹாரி வாஜ்பாய் தனது பதவி விலகலை சமர்ப்பித்தார்.

பொருளாதார வளர்ச்சியில் திடீரென்று உருவாகிவிட்ட பூரிப்பு நிலை, பாக்கிஸ்தானுடன் மேற்கொண்ட சமாதான முயற்சிகளுக்கு பொதுமக்களிடையே ஏற்பட்ட உற்சாகம் மற்றும் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியில் நிலவிய குழப்பம், ஆகியவற்றால் தனது பெரும்பான்மையை அதிகரித்துக் கொள்ள முடியும் என்று திட்டமிட்டு, பிஜேபி முன்கூட்டியே, பொதுத் தேர்தல்களுக்கு ஏற்பாடு செய்தது. இந்த வகையில் அக்கட்சி பெரு வர்த்தக நிறுவனங்களாலும் கார்ப்பொரேட் ஊடகங்களாலும் வலுவாக ஊக்குவிக்கப்பட்டது.

பிஜேபி பேரணிகளில் மிகக் குறைந்த அளவிற்கே மக்கள் திரண்டனர் மற்றும் பல கட்டங்களாக, நடைபெற்ற வாக்குப் பதிவுகளின்போது நடத்தப்பட்ட, பல்வேறு கருத்துக் கணிப்புக்களில், அரசாங்கத்திற்கு பொது மக்களின் வலுவான எதிர்ப்பு இழையோடிக்கொண்டிருப்பது கோடிட்டுக் காட்டப்பட்டது. ஆனால் வியாழக்கிழமை வரை ஊடகங்கள், தேஜமு அதிக உறுப்பினர் எண்ணிக்கையைப் பெறும் என்றும், பிஜேபி காங்கிரஸை விட அதிக உறுப்பினர்களை தக்கவைத்துக்கொள்ளும் என்றும் ஊடகங்கள் வலியுறுத்திக் கூறிக்கொண்டிருந்தன.

உண்மையிலேயே, தேஜமு -க்கு, கலைக்கப்பட்ட மக்களவையில் 300-க்கு அதிகமான, உறுப்பினர்கள் இருந்தனர். இப்போது, அதன் எண்ணிக்கை 186 -ஆக குறைந்து விட்டது. இது காங்கிரஸ் தலைமையிலான பலகட்சி கூட்டணியை விட 30 உறுப்பினர்கள் குறைவாகும். பிஜேபி - கட்சியைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் 1999 தேர்தலில் பெற்றிருந்ததைவிட 49 உறுப்பினர்களை குறைவாகப் பெற்றிருக்கிறது. 182-லிருந்து 133-ஆக குறைந்துவிட்டது. 1991-96 மக்களவைக்குப் பின்னர், முதல் தடவையாக, காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் பிஜேபியை விட அதிகமான உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்கின்றனர்.

1991-ல் நரசிம்மராவின் காங்கிரஸ் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட "தாராள மயமாக்கல்" பொருளாதார வேலைத்திட்டத்தை, தேஜமு-வின் ஆறாண்டுகால ஆட்சியில், முடுக்கிவிட்டு பரவலாக்கியதால், "இந்தியா ஒளிர்கிறது" என்ற பிஜேபி-தேஜமு கூற்றுக்களை மிகக் கடுமையாக தள்ளுபடி செய்கின்ற வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன. பிஜேபி -ன் தீவிரமான இந்து மேலாதிக்கவாத செயற்திட்டத்தையும் வாக்காளர்கள் தள்ளுபடி செய்திருக்கின்றனர். குஜராத்தில் பிஜேபி மாநில அரசாங்கம் 2002, பெப்ரவரி - மார்ச்சில், முஸ்லீம்களுக்கெதிரான, படுகொலைக்கு தூபம் போட்டது. அதற்குப் பின்னர் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், அந்தப் படுகொலைகளைப் பயன்படுத்தி பெரும் வெற்றி பெற்றது, ஆனால், தற்போது பிஜேபி மக்களவையில் அதன் குஜராத் பிரதிநிதிகளை பெருமளவிற்கு இழந்திருக்கிறது. 26 குஜராத் மக்களவை உறுப்பினர்களில் 14 பேர்தான் அக்கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் பாராம்பரிய ஆளும் கட்சியான காங்கிரஸ், புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைக்கிறது. காங்கிரஸ் கட்சியும் அதன் தேர்தல் கூட்டணிக் கட்சிகளும் செயல் பெரும்பான்மைக்கு 55 இடங்களை குறைவாகப் பெற்றிருந்தாலும், இடதுசாரி அணியின் 62 உறுப்பினர்களின் ஆதரவு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. அந்த இடது முன்னணியின் தேர்தல் கூட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆல் தலைமை வகிக்கப்படுகிறது. காங்கிரசின் சமூக மற்றும் பொருளாதார வேலைத் திட்டம் பிஜேபி-ஐ போன்றவைதான் என்றாலும் ஸ்ராலினிஸ்ட்டுகள், காங்கிரஸ் தலைமையிலான அரசை ஆதரித்தாக வேண்டும் என்று கூறுகின்றனர். ஏனெனில், பிஜேபி-தேஜமு இந்தியாவின் "மதச்சார்பற்ற ஜனநாயகத்தை" சிதைத்துவிடாது தடுப்பதற்கு ஒரே வழி காங்கிரஸ் தலைமையிலான அரசை ஆதரிப்பது தான் என்று ஸ்ராலினிஸ்டுகள் கூறுகின்றனர்.

புதிய 14-வது மக்களவையில் பல்வேறு வகைப்பட்ட மாநில மற்றும் சாதிக் கட்சிகள் மொத்தமாக 75 இடங்களை பிடித்திருக்கின்றன, இவர்களை காங்கிரசின் பக்கம் இழுத்து வருகின்ற முயற்சிகளில் ஸ்ராலினிஸ்ட்டுகள் முக்கிய பங்களிப்பு செய்து வருகின்றனர். "இணைந்துகொள்ள விரும்புபவர்கள் அனைவரையும் மதச்சார்பற்ற அணிக்கு வருமாறு அழைக்கவேண்டும்" என்று சிபிஐ(எம்) பொதுச்செயலாளரும், காங்கிரசுடன், அதன் கூட்டணிக் கட்சிகளுடன் மற்றும் எதிர்கால நண்பர்களுடன் உடன்பாட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருபவரும், வழிகாட்டியுமான ஹர்கிஷன் சிங் சுர்ஜித் குறிப்பிட்டார். குறைந்தபட்ச பொது செயல் திட்டம் என்று கூறப்படும் அடிப்படையில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைய ஸ்ராலினிஸ்டுகள் மிகுந்த ஆர்வத்தோடு உள்ளனர். ஏனென்றால் புதிய மக்களவையின் முழுமையான ஐந்தாண்டு காலத்திற்கு நிலையான கூட்டணியை நடத்த முடியும் என்று எடுத்துக்காட்டுவதற்காக ஆகும்.

அரசாங்க தொழில் பிரிவுகள் மூடப்பட்டது மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டது, சமூக நல திட்டங்களில் கொண்டுவரப்பட்ட வெட்டுக்கள், தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உயர்வு மற்றும் இதற்கெல்லாம் மேலான பொதுவான பொருளாதார பாதுகாப்பற்ற நிலை, வறுமை மற்றும் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றால் உருவான துன்பங்களை தொடர்ந்து பொதுமக்களிடம் நிலவிய அதிருப்தியை திட்டமிட்டு காங்கிரஸ் கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது. ஆண்டிற்கு 100-நாட்களாவது ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினருக்காவது வேலைக்கு காங்கிரஸ் அரசாங்கம் உறுதி செய்து தரும் என்று அக்கட்சி அளித்துள்ள மக்கள் விருப்பு உறுதிமொழிகளில் ஒன்று கூறுகிறது.

அதே நேரத்தில் காங்கிரஸ் பெரு வர்த்தக அமைப்புக்களில் ஏற்றுமதி அடிப்படையிலான வளர்ச்சி மூலோபாயத்திற்கு முழு ஆதரவு தெரிவித்திருக்கிறது. அந்த மூலோபாயம், தனியார்மயம், பொருளாதார நெறிமுறைகளில் தளர்வு, காப்பு வரிகள் வெட்டு, பொது சேவைகள் குறைப்பு, மற்றும் கம்பெனி வரிக் குறைப்பு ஆகிய நடவடிக்கைகள் மூலம் இந்தியாவை நாடுகடந்த நிறுவனங்களுக்கு மலிவு ஊதிய சொர்க்கமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.

காங்கிரஸ் தலைவரும் பிரதமர் பொறுப்பேற்க இருப்பவருமான சோனியா காந்தி, வெள்ளிக்கிழமையன்று இந்திய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அவசர உறுதிமொழி அளித்திருக்கிறார். இந்தியாவில் தேசிய பொருளாதார நெறிமுறை திட்டத்தில் மிச்சம் மீதமிருப்பதையும் ஒழித்துக்கட்டவும் அத்தோடு சம்மந்தப்பட்ட குறைந்தபட்ச சமூகநலத் திட்டங்களை கைவிட்டுவிடுவதாகவும் உறுதியளித்திருக்கிறார். "காங்கிரசும் எனது கணவரும், அதற்குப் பின்னர், காங்கிரஸ் அரசாங்கங்களும், பொருளாதார சீர்திருத்தங்களை தொடக்கின. அவை முன்னெடுத்துச் செல்லப்படும்`` என்று சோனியா காந்தி நிருபர்களிடம் தெரிவித்தார்.

பெரு வர்த்தக நிறுவனங்களின் பொருளாதார சீர்திருத்த செயற்திட்டங்களை மேலும் வலியுறுத்துகின்ற வகையில் சோனியா காந்தி பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பியான முன்னாள் நிதியமைச்சர் மன்மோகன் சிங்கை கூட்டணிக் கட்சிகளோடும், கூட்டணி சேரவிருக்கின்ற கட்சிகளோடும் குறைந்தபட்ச பொது வேலைத்திட்டங்களை உருவாக்குவதற்கான குழுவின் தலைவராக நியமித்திருக்கிறார். ``முதலீட்டாளர்கள் வளர்ச்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குகின்ற கொள்கைகளை கடைபிடிக்கும்`` என்று வெள்ளிக்கிழமை மாலை சிங் உறுதியளித்துள்ளார்.

பெரு வர்த்தக நிறுவனங்கள் அவற்றின் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் மீது எல்லா வகையான நம்பிக்கையையும் வைத்திருக்கின்றன, அதன் விருப்பங்களுக்கு விட்டுக் கொடுக்கும் என்று கருதுகின்றன மற்றும் இடதுசாரி அணியினர் பொருளாதார சீர்திருத்தங்களை கண்டிப்பது பெரும்பாலும் சொற்சிலம்பம் தான் என்பதை அங்கீகரித்துள்ளனர். தேர்தல் முடிவுகள் பற்றி கருத்துத் தெரிவித்த இந்திய தொழில் கூட்டமைப்புத் தலைவர் ஒய்.கே.மோடி, இடதுசாரிகளால் எந்தப் பிரச்சனையும் வரும் என்று தான் நினைக்கவில்லையென்றும், மேற்கு வங்காளத்தில் இடதுசாரி முன்னணி அரசாங்கம் காங்கிரஸ் மற்றும் பிஜேபி-ஐ போன்று பொருளாதாரக் கொள்கைகளை கடைபிடித்து வருவதாகவும் குறிப்பிட்டார். அவரது கருத்துக்களை பிர்லா குழு தலைவரான எஸ்.கே.பிர்லா வழிமொழிந்திருக்கிறார், மேற்கு வங்காள ஆட்சியை பொருளாதார "சீர்திருத்த ஆதரவு" அமைப்பென்று கூறியிருக்கிறார்.

ஆனால் இந்திய ஆளும் வர்க்கத்தின் தொலைநோக்கும், நிதான சிந்தனையும் படைத்த பிரதிநிதிகள் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருக்கும் இடைவெளியால் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். மேட்டுக்குடிடியினரின் கொள்கை பொதுக் கருத்து முன்னோக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கும் இந்திய உழைக்கும் மக்களது எதிர்பார்ப்புகளுக்குமிடையே மிகப்பெரும் இடைவெளி நிலவுவதை இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. அரசியல் நிர்வாக கட்டுக்கோப்பு மக்களது எதிர்ப்பு கண்டு கூனிக்குறுக வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அந்த அளவிற்கு பொருளாதார "சீர்திருத்த" வேலைத் திட்டத்திற்கு மக்களிடையே எதிர்ப்பு உருவாகியுள்ளது.

வேலையில்லாத் திண்டாட்டமும் அரைகுறை வேலைகளும் 20 சதவீதமென்று மதிப்பிடப்பட்டிருக்கின்ற நிலைமையில், கோடிக்கணக்கான மக்கள் தூய்மையான தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்ற நிலையில், மூன்றில் ஒரு பகுதி மக்கள் "முற்றிலும் வறுமையில்" தள்ளப்பட்டுள்ள நிலையில், கடன் சுமையாலும், பஞ்சத்தினாலும் அண்மை ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான சிறு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலைகளில் பிஜேபி இந்தியா "ஒளிர்கிறது" என்று கூறி வந்தது மிகப்பெரும்பாலான மக்களது நிலையை அலட்சியப்படுத்தும் போக்கையே காட்டியது.

பதிலடி கொடுக்கும் "மற்றொரு இந்தியா"

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் பிஜேபி-ம், அதன் தேஜமு கூட்டணிக் கட்சிகளும் தோல்வியடைந்திருக்கின்றன, பொருளாதார சீர்திருத்தங்களை கண்டிக்கின்ற கட்சிகள் தங்களது தொகுதிகளைக் கைப்பற்றுவதற்கு பொதுவாக வாக்காளர்கள் ஆதரவு தந்திருக்கின்றனர்.

இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தில் பொருளாதார சீர்திருத்தத்திற்கெதிரான வாக்குகளால் சமாஜ்வாதி அல்லது சோசலிஸ்ட் கட்சி மற்றும் பீஹாரில் ராஷ்டிரிய ஜனதாதளம் பயனடைந்திருக்கிறது.

இடதுசாரி அணியின் தேர்தல் ஆதரவு பிரதானமாக மேற்கு வங்காளம், கேரளம், மற்றும் திரிபுராவிலிருந்து வருகிறது. இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தத் தேர்தலில் அந்த மூன்று மாநிலங்களிலும் இடதுசாரி அணியினர் 62 பேர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். 1999 தேர்தலைவிட இது 20 உறுப்பினர் அதிகமாகும். மேற்கு வங்காளத்தில் பிஜேபி-க்கும் அதன் மேற்கு வங்க கூட்டணிக் கட்சியான திரிணாமுல் கட்சிக்கும் எதிரான வாக்குகளால் பயனடைந்தது, காங்கிரஸ் அல்ல, இடதுசாரி அணி தான். கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மிக வேகமாக செயல்படுத்தி வருகிறது, அங்கு 20 மக்களவைத் தொகுதிகளில் 18-ல் இடதுசாரி அணி வெற்றி பெற்றிருக்கிறது, காங்கிரசிற்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.

பொதுமக்களது ஆத்திர உணர்வின் ஆழத்தை வெளிப்படுத்துகின்ற வகையில் மூன்று தென்னிந்திய மாகாணங்களில் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன. வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பங்களில் பூரிப்பான வளர்ச்சி மையமாக ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆகியவை கருதப்பட்டன. இரண்டு மாநிலங்களில் ஒரே நேரத்தில் சட்டசபைத் தேர்தல்களும் நடத்தப்பட்டன.

ஆந்திராவில் பிஜேபி-ன் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி சட்டசபைத் தேர்தலில் படுதோல்வியடைந்தது. காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 226 தொகுதிகளில் வென்றது. ஆளும் தெலுங்கு தேசம் 47 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. ஒன்பது ஆண்டுகள் ஆந்திராவின் முதலமைச்சராக பணியாற்றி வந்த TDP தலைவரான சந்திரபாபு நாயுடு உலக வங்கியின் அன்பிற்கு பாத்திரமானவர், மின்சாரத்தை தனியார் உடைமையாக்க தயாரானார் மற்றும் உலக வங்கியின் தொழிற்கட்டுக்கோப்பு சீரமைப்புக்களை மேற்கொள்ள முன்வந்தார். தன்னை ஆந்திராவின் CEO என்று அழைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைந்தார். பிஜேபியோடு தெலுங்கு தேசமும் சேர்ந்து ஆந்திராவின் 42 மக்களவைத் தொகுதிகளில் 5-இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது.

தமிழ்நாட்டில் பிஜேபி-யும் அதன் கூட்டணிக் கட்சியான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அல்லது அ.இ.அ.தி.மு.க-வும் 39 மக்களவைத் தொகுதிகளில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. தற்போது அ.இ.அ.தி.மு.க. தமிழ்நாடு மாநில அரசை நடத்தி வருகிறது. அந்த அரசாங்கம், பின்பற்றி வருகிற முதலீட்டு ஆதரவு கொள்கைகள் குறிப்பாக சென்ற ஆண்டு மாநில அரசு ஊழியர்கள் 2,00,000 பேர் வேலை நிறுத்தம் செய்தபோது அதனை உடைக்க அவசரச் சட்டங்கள், கருங்காலிகள், பரந்த அளவில் வேலை நீக்கங்கள் இவற்றைப் பயன்படுத்தியதை பெரு வர்த்தக நிறுவனங்கள் மிகப்பெருமளவில் போற்றிப் புகழ்ந்தன.

கர்நாடகத்தில் காங்கிரஸ் மாநில அரசாங்கம் இந்தியாவை வெளிநாட்டு முதலீடுகளுக்கான காந்த சக்தியாக மாற்றுவதற்கு வலுவான அடிப்படையில் செயல்பட்டு வந்தது. சட்டசபைத் தேர்தலில் பிஜேபி-யிடம், குறிப்பாக பிஜேபி-க்கு எதிரான மிச்சமிருக்கும் சோசலிஸ்ட் கட்சியான ஜனதா தளத்திடம் (மதச்சார்பற்றது) தோல்வியடைந்தது. கர்நாடகத்தில் ஐக்கிய ஜனதா தளமும், பிஜேபி-யும் சிறுபான்மை அரசை அமைக்க முடியாமல் ஜனதாதளம் (மதச்சார்பற்றது) தடுக்குமானால், அப்போது காங்கிரஸ் கட்சி கூட்டணி அரசில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு உண்டு.

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குவியலாக நகரப் புறங்களிலேயே காணப்பட்டது. வேளாண்மை இந்திய தொழிலாளர்களில் பாதிக்கு மேற்பட்டோர் சார்ந்துள்ள தொழில் ஆகும், அது முடக்கப்பட்டுவிட்டது. நிதியாதாரங்கள் பெரு வர்த்தக நிறுவனங்கள் கோரிய நெடுஞ்சாலைகள் அமைப்பு மற்றும் தொழிற் கட்டமைப்புத் திட்டங்களுக்காக வேளாண்மையிலிருந்து திருப்பிவிடப்பட்டிருந்தது.

இந்திய செல்வந்த தட்டினரின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு கிராமங்களின் இயல்நிகழ்ச்சியாக மட்டுமே இருக்கவில்லை. பிஜேபி-ம் அதன் கூட்டணிக் கட்சிகளும் இந்தியாவின் பிரதான நகரப்பகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளன. கல்கத்தா, பம்பாய், சென்னை, மற்றும் தொழில்நுட்ப நகரமான ஹைதராபாத் ஆகியவற்றிலும் தோல்வி கண்டிருக்கின்றன. தில்லியின் 7 மக்களவை தொகுதிகளில் தெற்கு தில்லி, மத்திய தர வகுப்பு தொகுதியில் மட்டுமே பிஜேபி வெற்றி பெற்றிருக்கிறது.

காங்கிரசின் பங்களிப்பு

இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் வரலாற்று அடிப்படையிலான கட்சி காங்கிரஸ் ஆகும். இந்திய முதலாளி வர்க்கத்தின் செயற்திட்டங்களுக்கு இந்திய மக்களை முடிச்சுப் போடுகின்ற சோசலிச மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சொற்சிலம்பத்தை நடத்தி வந்ததுதான் அக்கட்சியினால் விளைந்த பயனாகும்.

எம்.கே.காந்தியின் கீழ், காங்கிரஸ் பிரிட்டிஷாரை உடன்பாட்டு பேச்சுக்கு வர நிர்பந்தம் கொடுப்பதற்கு ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வெகுஜன இயக்கத்தை உருவாக்க தொழிலாளர்-விவசாயிகள் அதிருப்திக்கு வேண்டுகோள் விடுத்தது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் இந்திய மக்களது வெகுஜன எழுச்சி கட்டுமீறி சென்றுவிடக்கூடும் என்று உணர்ந்து, இந்தியாவில் முதலாளித்துவ ஆட்சியை நிலைப்படுத்துவதற்காக உடனடியாக காங்கிரஸ் கட்சி பிரிட்டிஷாருடன் விரைவாக ஒரு ஒப்பந்தத்திற்கு வர முயன்றது. இந்த நடவடிக்கையின் காரணமாக காங்கிரஸ் கட்சி இந்திய துணைக் கண்டத்தை மத அடிப்படையில் பிரிப்பதற்கு சம்மதித்தது, அதை செயற்படுத்தியது.

ஜவஹர்லால் நேருவின் ஆட்சியின்போது காங்கிரஸ் கட்சி மிகக்குறைந்த அளவிற்கு நிலச்சீர்திருத்தம் மற்றும் இதர சீர்திருத்தங்களை கொண்டு வந்தது. 1991-வரை இந்திய அரசாங்கங்கள் கடைப்பிடித்து வந்த பரவலான அரசுத் தொழில்கள் மற்றும் இறக்குமதிக்கான மாற்றுத் தொழில்கள் என்ற அடிப்படையில் தேசிய முதலாளித்துவ வளர்ச்சித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொதுமக்களது ஆதரவை பெறுவதற்காக சோசலிச சொற்சிலம்பங்களை நடத்தி வந்தன.

2004 தேர்தல்களைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வெகுஜனங்களின் கவனத்தைத் திசை திருப்பி கட்டுப்படுத்தும் என்று பெரு வர்த்தக நிறுவனங்கள் எதிர்பார்க்கும் என்பதில் வியப்பில்லை. ஆனால் அரசியல் மற்றும் சமுதாய இயக்கவியல் இப்போது வேறுபட்டதாக உள்ளது.

காங்கிரஸ் கட்சியானது, அதன் பழைய அமைப்பின் வெறும் கூடாகத்தான் உள்ளது. அது ஊழல் மலிந்த அரசியல் இயந்திரம் அந்தக் கட்சிக்கும் பொதுமக்களுக்மிடையே நிலவி வந்த உறவுகள் நீண்ட நெடுநாட்களுக்கு முன்னரே மக்கி மறைந்துவிட்டன. இந்தத் தேர்தல் முடிவுகளைக் கண்டு காங்கிரஸ் தலைமையும் பிஜேபி-யைப் போன்று அதிர்ச்சியடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஒன்றை தெளிவாக உணர்ந்து கொண்டுதான் களத்தில் இறங்கியது. ஊடகங்களும், பெரு வர்த்தக நிறுவனங்களும், பிஜேபி-ஐ கொழுக்கச்செய்தபோது, காங்கிரஸ் அதன் பிரச்சாரத்தை குழப்பத்திலும் உற்சாகம் இல்லாமலும் தான் தொடக்கியது. 1999 தேர்தலைவிட மிகக்குறைந்த அளவிற்கு ஆதரவு வளரும் என்று தான் எதிர்பார்த்தது. ஏனென்றால், 1999 தேர்தல் முடிவுகள் அதன் வரலாறு காணாத படுமோசமானவை. இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலைகளில் காங்கிரஸ் கட்சி அணிகளை செயல்நடவடிக்கைகளில் உற்சாகப்படுத்த தனது நட்சத்திர வேட்பாளர், ராகுல் காந்தியை களத்தில் இறக்கியது. அவரது ஒரே அரசியல் தகுதி அவரது தாயார் சோனியா காந்தியைப் போன்று நேரு - காந்தி, அரசியல் வம்சத்தின் குடும்ப உறவு என்பது ஒன்று தான்.

இந்தியாவின் அடுத்த அரசாங்கத்தை காங்கிரஸ் தலைமை வகித்து நடத்தும் என்றாலும், 1984 தேர்தலுக்குப் பின்னர், அக்கட்சி மக்களவையில் பெரும்பான்மை பெறவில்லை. தொடர்ந்து வந்த நான்கு தேர்தல்களில் மக்களவையில் கால் பகுதிக்கு குறைந்த இடங்களைத் தான் பெற்றது. அது ஆட்சிக்கு வருவதற்கு தேவையான வாக்குகளை இடதுசாரி அணிதான் திரட்ட வேண்டிவரும்.

மேலும், காங்கிரஸ் கட்சி பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிரான மக்களது உணர்வு வெளிப்பாட்டின் சின்னமாக இன்றைய தினம் விளங்குகிறதென்றால் அதற்குரிய ஆதரவையும் சட்டபூர்வமான அங்கீகாரத்தையும் ஸ்ராலினிஸ்ட்டுகள் கட்டுப்பாட்டிலுள்ள இடதுசாரி முன்னணி தான் வழங்கியுள்ளது.

சமூக கொந்தளிப்புக்களுக்கு வித்திட்ட தேர்தல்

இந்திய முதலாளித்துவ வர்க்கம் சுதந்திரத்திற்கு பிந்திய தேசிய செயல்திட்டத்தை நிலைநாட்ட தவறிவிட்டதாலும், இந்தியாவை உலக முதலாளித்துவத்திற்கான மலிவு ஊதிய மையமாக மாற்றும் முயற்சியினாலும் உருவாக்கப்பட்டுள்ள சமுதாய சீரழிவு பெருகிவரும் சமுதாய மற்றும் அரசியல் நெருக்கடியை உருவாக்கிவிட்டது.

புதிய காங்கிரஸ் அரசாங்கம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கித்தருமென்றும், சிறிய விவசாயிகள் மற்றும் பொது சமூக சேவைகளுக்கு ஆதரவு தரும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், காங்கிரஸ் தலைமை தேர்தல் முடிந்து சில மணி நேரத்திற்குள்ளேயே பெருவர்த்தக நிறுவனங்களின் தாராளமயமாக்கல் பொருளாதார சீர்திருத்த செயல் திட்டங்களை பிஜேபி விட்ட இடத்திலிருந்து தொடரப்போவதாக அறிவித்திருக்கிறது.

எந்த நேரத்திலும் சீனாவின் பொருளாதார நீர்க்குமிழி பூரிப்பு அல்லது அமெரிக்க அரசாங்கத்தின் விரைந்து பெருகி வரும் வர்த்தக மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறைகள் வெடித்துச் சிதறி சர்வதேச பொருளாதார நெருக்கடி மிகப்பெருமளவில் உருவாகக்கூடும் என்ற சூழ்நிலையில் இந்தியா உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தோடு அதிக நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இப்போது ஏற்படும் பொருளாதார நெருக்கடியில் இந்தியா 1997-98 கிழக்காசிய பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டது போல, பகுதி அளவில் பாதிக்கப்படாது, முழுமையாக பாதிக்கப்படலாம்.

தேர்தலுக்கு முந்திய இந்திய பொருளாதாரம் பற்றிய மூடியி-ன் பொருளாதார ஆய்வு விடுத்துள்ள எச்சரிக்கையில் அடுத்த இந்திய அரசாங்கம் பெருகி வரும் பட்ஜெட் பற்றாக்குறையினால் செலவினங்களை மிகக் கடுமையாக வெட்ட வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. இது பற்றி மறைமுகமாக குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் தேர்தல் அறிக்கை காங்கிரஸ் அரசாங்கம் "செலவினங்களில் கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்டும்" என்று குறிப்பிட்டிருந்தது.

எனவே தேர்தல் முடிவுகள் சமூகக் கொந்தளிப்புக்களில் புதிய காலகட்டத்தை சுட்டிகாட்டுவதாக அமைந்திருக்கிறது.

அப்படியிருந்தும் பொதுமக்கள் இடதுசாரி பக்கம் திரும்பிக் கொண்டிருக்கும்போது, ஸ்ராலினிசக் கட்டுக்கோப்பு மேலும் திட்டவட்டமாக வலுதுசாரி பக்கம் திரும்பி காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் பங்கெடுத்துக்கொள்ளக்கூடும் என்றும் ஆதரிக்கும் நிலைக்கும் வந்திருக்கிறது. இந்து மேலாதிக்கவாத பிஜேபி-ஐ முறியடிக்க வேண்டுமென்றால் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரிய கட்சியோடு கூட்டணி சேர வேண்டும் என்பதை ஸ்ராலினிஸ்டுகள் நியாயப்படுத்தி வருகின்றனர். தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரை பெருகி வரும் சமூக நெருக்கடிக்கு தங்களது சொந்த தீர்வை முன்னெடுத்து செல்வதிலிருந்து தடுக்கப்படுவதால், காங்கிரஸ் அரசாங்கத்தின் பெரு வர்த்தக சீர்திருத்த செயல் திட்டம் ஸ்ராலினிஸ்டுகள் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டு வருவதால், அது வகுப்புவாத சாதிய மற்றும் மாநில அடிப்படையிலான இயக்கங்கள் உள்பட சமூக பிற்போக்குத்தனம் மேலும் வளர்வதற்கே வழிவகுக்கும், அது உழைக்கும் மக்களே ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்கின்ற நிலையைத்தான் ஏற்படுத்தும்.

இந்திய மற்றும் சர்வதேச முதலாளித்துவம் மற்றும் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றிற்கு எதிராக நடத்தப்படுகின்ற போராட்டத்தை ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் மற்றும் வகுப்புவாத பிற்போக்குத்தனத்திற்கும் எதிராக நடத்தப்படும் போராட்டத்திலிருந்து தனிமைப்படுத்திவிட முடியாது. இந்திய தொழிலாள வர்க்கம் தங்களை பெரு வர்த்தகத்தின் காங்கிரசோடு பிணைத்து வைப்பதற்கு இடதுசாரி முன்னணி மேற்கொண்டுள்ள முயற்சிகளை கட்டாயம் புறம்தள்ள வேண்டும், தங்களை உழைப்பாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் நடத்துகின்ற போராட்டத்தில் தலைமையில் இருத்த வேண்டும். மேலும் இந்திய மக்களது போராட்டத்தை முதலாளித்துவத்திற்கு எதிரான உலகப் போராட்டத்தோடு ஒருங்கிணைத்து அவர்களது ஜனநாயக உரிமைகளுக்கும், சமூக விடுதலைக்குமான ஒருங்கிணைந்த ஏற்புடைய மூலோபாயத்தை உருவாக்க வேண்டும்.

See Also :

இந்தியா: காங்கிரஸ் ஆட்சிக்கு வர ஸ்ராலினிஸ்டுகள் ஊக்குவிப்பு

இந்தியா: சாதகமற்ற தேர்தல் கணிப்பிற்குப் பதிலாக இந்து மேலாதிக்க வாதத்தை முன்னிலைப்படுத்தும் பிஜேபி

இந்தியத் தேர்தல்
பிஜேபி-ன் "இந்தியா ஒளிர்கிறது" பிரச்சாரம்: கற்பனையும் உண்மையும்

இந்தியத் தேர்தல்கள்: காங்கிரஸ் கட்சியின் சீரழிவும் சரிவும்

Top of page