World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Pessimism over latest attempts to restart peace talks in Sri Lanka

இலங்கையில் சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்கும் புதிய முயற்சிகளில் நம்பிக்கையீனம்

By K. Ratnayake
11 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

வெளியுறவு அமைச்சர் ஜான் பீட்டர்சன் தலைமையிலான உயர்மட்ட நோர்வேஜிய பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டின் ஆட்டங்கண்டுள்ள சமாதான முன்னெடுப்புகளை காப்பதற்கான சர்வதேச முயற்சிகளின் ஒரு பாகமாக இவ்வாரம் இலங்கை வந்துள்ளது. பீட்டர்சன், அவரது பிரதிநிதி விதார் ஹெல்ஜிசென் மற்றும் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெயிம் ஆகியோர், இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தமிழீழ விடுதைலப் புலிகளின் தலைவர் வி. பிரபாகரன் மற்றும் ஏனைய அரசியல் முக்கயஸ்தர்களுடன் எதிர்வரும் நாட்களில் ஒரு தொகை கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்கள்.

ஆயினும், நோர்வேயின் புதிய நடவடிக்கையானது கொழும்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னைய நடவடிக்கைகளிலும் பார்க்க வெற்றிகரமாக அமையப்போகிறது என எவரும் நம்பிக்கைகொள்ள முடியாது. செப்டெம்பரில் கொழும்பு வந்த பிரதி வெளியுறவு அமைச்சர் ஹெல்ஜிசென் எந்தவொரு உறுதியான பெறுபேறுமின்றி திரும்பிச் சென்றார். ஜப்பானின் விசேட சமாதான தூதுவர் யூசூசி அகாசியும் அண்மையில் ஐந்து நாட்களை இலங்கையில் கழித்ததுடன் பேச்சுவார்த்தைகளின்றி சர்வதேச நிதி உதவி கிடைக்கப்போவதில்லை என எச்சரித்தார். ஆனால் நவம்பர் 2 அவரது விஜயத்தின் முடிவின் போது நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில், "இரு சாராரும் சமாதான பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதை நோக்கி முதல் அடியை எடுத்துவைக்க வேண்டும்" என நம்பிக்கையின்றி தெரிவித்தார்.

நேற்று கொழும்பு வந்தடைந்த பீட்டர்சனும் கூட எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கவில்லை. அவர் கடந்த வாரம் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில்: "அண்மைய வாரங்களில் இருசாராரிடமும் இருந்து பெற்றுக்கொண்ட சமிக்ஞைகளின் அடிப்படையில் எனக்கு பெரும் எதிர்பார்ப்புகள் (சமாதானப் பேச்சுக்கள் பற்றி) கிடையாது. ஆனாலும் கடினமான நிலைமையிலும் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பது மிகவும் முக்கியமானது," என பிரகடனம் செய்தார். செவ்வாயன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விசேட தூதுவர் சொல்ஹெயிம், நிலைமையை இலகுவாக்க எம்மால் முடியும் எனக் கூறுவது கடினமானது" எனத் தெரிவித்தார்.

எச்சரிக்கையான கருத்துக்கள் மூலம் தெளிவாவது என்னவென்றால், நோர்வேஜிய பிரதிநிதிகளின் இலக்கு, இரு சராருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு ஊக்கமூட்டுவதும், அதேபோல் யுத்த நிறுத்தம் முறிவடைந்து மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்கு திரும்புவதை தடுப்பதுமாகும். 2001ம் ஆண்டு பிற்பகுதியில் ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 2002 பெப்பிரவரியில் யுத்த நிறுத்தம் கைச்சாத்திடப்பட்டதோடு, 2003 ஏப்பிரலில் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிக்கொண்டதற்கு முன்னதாக ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன.

விடுதலைப் புலிகளுக்கு நாட்டை விற்பதாக குற்றம் சுமத்திக்கொண்டு குமாரதுங்கவும் சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் இராணுவ உயர்மட்டத்தினர் உட்பட்ட அவரது பங்காளிகளும் முன்னெடுத்த தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு 2003 பூராவும் ஐ.தே.மு முகம் கொடுத்தது. அவர் பெப்பிரவரியில் அரசாங்கத்தை பதவி விலக்கியதோடு ஜே.வி.பி யை உள்ளடக்கிய அவரது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏப்பிரல் தேர்தலில் சற்றே வெற்றி கண்டது. நெருக்கடியான பொருளாதார நிலைமைகளுக்கு முகம்கொடுத்த அவர், தலைகீழாக மாறி தான் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க உறுதிகொண்டுள்ளதாக அறிவித்தார்.

எவ்வாறெனினும், கடந்த ஆறு மாதங்களாக எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. அது மட்டுமன்றி, தீவின் கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற, சாத்தியமான வகையில் இலங்கை இராணுவத்தின் சில பிரிவுகளின் ஆதரவைக் கொண்ட வீ. முரளீதரன் (கருணா) தலைமையிலான குழுவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் தொடர்கின்ற நிலமையில் யுத்த நிறுத்தம் முறிவடைவதற்கான ஆபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

அண்மைய சம்பவங்களில் இராணுவம் நேரடியாகவே தொடர்புபட்டுள்ளது. அக்டோபர் 31, கிழக்கு நகரமான திருகோணமலைக்கு அருகில் ஒரு விசேட கடற்படைப் பிரிவு விடுதலைப் புலிகளின் இரு முகாம்களை கண்டுபிடித்து அழித்ததாக கொழும்பு ஊடகங்கள் அறிவித்தன. நவம்பர் 8 அன்று கிழக்கில் கல்குடாவில் இராணுவப் படையணித் தளபதி ஒருவரின் வாகனம் தாக்குதலுக்குள்ளானது. விடுதலைப் புலிகள் முகாம்களுக்கு பொறுப்பேற்க மறுத்ததோடு கல்குடா தாக்குதல் "சமாதான முன்னெடுப்பை கீழறுக்க" விரும்பும் சக்திகளின் நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளது.

குமாரதுங்க சமாதான பேசுக்களுக்காக முயற்சி செய்யும் அதேவேளை, இராணுவம் யுத்தத்திற்கு தயார் செய்கின்றது. வைஸ் அட்மிரால் தயா சந்தகிரி, "சமீப எதிர்காலத்தில் சாத்தியமான மோதல்களை மீண்டும் கிளறிவிடும் நிலைமைக்கு முகம் கொடுக்க தயாராவதற்காகவும், எதிர்கால இராணுவ நடவடிக்கைகளுக்கு திட்டமிடவும்" ஒரு "மூலோபாய திட்டமிடல் குழுவொன்றை" நியமித்தார். இந்தக் குழு ஏற்கனவே நாட்டின் யுத்தப் பிராந்தியங்களான வடக்கு மற்றும் கிழக்கிற்கு விஜயம் செய்துள்ளதோடு தேசிய பாதுகாப்பு சபையில் கலந்துரையாடுவதற்காக சந்தகிரியிடம் ஒரு அறிக்கையையும் கையளிக்கவுள்ளது.

குமாரதுங்க அவரது ஆளும் கூட்டணிக்குள்ளும் ஜே.வி.பி யின் எதிர்ப்புகளுக்கு முகம்கொடுக்கின்றார். ஜே.வி.பி, சிங்களத் தீவிரவாத தேசாபிமான தேசிய இயக்கத்துடன் சேர்ந்துகொண்டு, பேச்சுவார்த்தைக்காக விடுதலைப் புலிகள் முன்வைத்துள்ள, வடக்கு கிழக்கில் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை அமைக்கும் கோரிக்கையை எதிர்த்து பிரச்சாரம் செய்துவருகின்றது. அக்டோபர் பிற்பகுதியில் இரத்தினபுரியில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில், ஜே.வி.பி பேச்சாளரான விமல் வீரவன்ச, இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை "தனி நாட்டிற்கான ஒரு ஆவணம்" என கண்டனம் செய்ததோடு அதன் அடிப்படையிலான எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நிராகரித்தார். அவ்வாறான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமானால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக முன்னர் ஜே.வி.பி அச்சுறுத்தியிருந்தது.

அரசியல் ஆதரவையிட்டு அவநம்பிக்கையில் இருக்கும் குமாரதுங்க, பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளில் ஏனைய அரசியல் அமைப்புகளையும் அரச சார்பற்ற நிறுவனங்களையும் சேர்த்துக்கொள்ளும் ஒரு முயற்சியாக கடந்த மாதம் சமாதானத்திற்கும் நட்புக்குமான தேசிய ஆலோசனை சபை ஒன்றுக்கு அழைப்புவிடுத்தார். ஆயினும், எதிர்க் கட்சியான ஐ.தே.மு சமூகமளிக்க மறுத்ததை அடுத்து இந்த ஒன்றுகூடல் ஒரு நிகழ்வாக இருக்கவில்லை. ஐ.தே.மு, விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் அதே வேளை, அரசியல் ஆபத்துக்கள் நிறைந்த ஒரு நிச்சயமற்ற நடவடிக்கைக்கு பொறுப்பேற்க தயங்குகிறது.

குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் (ஸ்ரீ.ல.சு.க) போலவே ஐ.தே.மு வும் சிங்களப் பேரினவாதத்தில் ஆழமாக மூழ்கிப்போயுள்ளது. ஜனாதிபதி, ஜே.வி.பி இடமிருந்தும் மற்றும் ஸ்ரீ.ல.சு.க வினுள்ளும் தோன்றியுள்ள விமர்சனங்களை தவிர்ப்பதன் பேரில், தன்னாட்சி அதிகார சபை போலவே முரண்பாட்டிற்கான இறுதி அரசியல் தீர்வு பற்றிய எந்தவொரு பேச்சுவார்த்தையும் ஒஸ்லோ உடன்படிக்கையின் வரம்பிற்குள்ளேயே இடம்பெறும் என வலியுறுத்தினார். ஆரம்ப சமாதான பேச்சுக்களின் பின்னர் 2002 டிசம்பரில் வெளியிடப்பட்ட ஒஸ்லோ பிரகடனமானது "ஐக்கிய இலங்கைக்குள் ஒரு அதிகாரப் பகிர்வு சமஷ்டி ஒழுங்கிற்கு" அழைப்பு விடுக்கின்றது.

குமாரதுங்க தன்னாட்சி அதிகார சபை பற்றிய எந்தவொரு பேச்சையும் இறுதித் தீர்விற்கான பேச்சுவார்த்தைகளுடன் பிணைத்துவிடுகின்றார். இந்த கோரிக்கை விடுதலைப் புலிகளால் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். தனது நீண்டகால தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டுள்ள விடுதலைப் புலிகள், தமிழ் சிறுபான்மையினர் மத்தியில் தனக்கான ஆதரவை பெருக்கிக்கொள்வதற்காக மேலாதிக்க பாத்திரத்தை இட்டுநிரப்பவுள்ள தன்னாட்சி அதிகார சபையை நிறுவுவதை வலியுறுத்தி வருகின்றனர். இந்த சமாதான முன்னெடுப்புகளின் இலக்கு, தீவின் ஆளும் கும்பல்களுக்கு இடையிலான ஒரு அதிகாரப் பகிர்வே அன்றி, ஒழுக்கமான வாழ்க்கை நிலைமை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான சாதாரண சிங்களத் தமிழ் உழைக்கும் மக்களின் கோரிக்கையை அடைவதல்ல.

கிழக்கில் கருணா குழு பிரிந்து சென்றமையானது தமிழர்கள் மத்தியில் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தையிட்டு வளர்ச்சி கண்டுவரும் அதிருப்திக்கு மிகத் தெளிவான அறிகுறியாகும். சமாதான முன்னெடுப்புகளிலிருந்து வரும் வருமானத்தின் பெரும் பகுதியை எடுத்துக்கொள்வதாக "வடக்கு தலைமைத்துவத்தை" குற்றம் சாட்டுவதன் மூலம் கிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்களின் எதிர்ப்பை சுரண்டிக்கொள்ள கருணா முயற்சித்தார். விடுதலைப் புலிகள் கடந்த ஏப்பிரலில் கருணா குழுவை இராணுவ ரீதியில் நசுக்கியபோதிலும் பிராந்தியத்தில் தனது முழு அதிகாரத்தையும் கைப்பற்றத் தவறியதுடன், தனது அரசியல் கட்டுப்பாட்டை ஒன்று சேர்க்க ஒரு அனுகூலமான உபகரணமாக தன்னாட்சி அதிகார சபையை கணிக்கின்றது.

விடுதலைப் புலிகள், சமாதான பேச்சுக்களுக்கான அரசாங்கத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளக் கோரும் அமெரிக்கா மற்றும் பெரும் வல்லரசுகளின் அழுத்தத்திற்கும் முகங்கொடுக்கின்றனர். விடுதலைப் புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளர் அன்டன் பாலசிங்கம், விடுதலைப் புலிகள் ஒஸ்லோ பிரகடனத்திற்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல என அன்மையில் வலியுறுத்தினார். "இலங்கை அரசாங்கம் அதனது சூழ்ச்சித்திறனுள்ள சர்வதேச கூட்டாளிகளான நிதி வழங்கும் அரசாங்கங்களுடன் சேர்ந்துகொண்டு, தனது சொந்த யோசனைகள் மற்றும் கருத்துக்களின் தொகையை விடுதலைப் புலிகள் மீது அடுக்குவதற்காக, பிரகடனம் என்ற பெயரில் பல தீர்மானங்களை சூத்திரப்படுத்தியுள்ளது" என அவர் தமிழ்நெட் இணையத்திற்கு நவம்பர் முற்பகுதியில் தெரிவித்திருந்தார்.

ஜனநாயகக் கட்சி ஜனாதிபதியிடம் அதிகளவிலான அனுதாப நோக்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டிருந்தாலும், அமெரிக்காவில் புஷ் நிர்வாகம் மீண்டும் பதவிக்கு வந்ததில் அது நொருங்கிப் போயிற்று. வாஷிங்டன் "சமாதான முன்னெடுப்புகளை" ஆதரிப்பது, அமெரிக்கா அதிகரித்துவரும் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைக் கொண்டுள்ள இந்தியத் துணைக் கண்டத்தை ஸ்திரமற்ற நிலைக்குள் தள்ள அச்சுறுத்தும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதன் பேரிலேயே ஆகும். அதே சமயம், எந்தவொரு இறுதித் தீர்விலும் விடுதலைப் புலிகளுக்கு இரண்டாந்தரமான பாத்திரம் கிட்டுவதை உறுதிப்படுத்துவதில் அமெரிக்கா அக்கறையாக உள்ளது.

நவம்பர் 3ம் திகதி இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் காட்டப்பட்ட வீடியோ செய்தியில், அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரிச்சரட் ஆர்மிடேஜ், "சுமூகமானதும் நிரந்தரமானதுமான தீர்வு ஒன்றை அடைவதற்கான சிறப்பான சந்தர்ப்பம் நழுவிச் செல்கின்றது என்றே கூற முடியும்" என எச்சரிக்கை செய்தார். விடுதலைப் புலிகளை குற்றம் சாட்டிய அவர், "பயங்கரவாதத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வேண்டும்" எனக் கோரினார். எந்தவொரு தீர்வின் போதும் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கையளிக்க வேண்டும் என ஆர்மிடேஜ் இதற்கு முன்னர் வலியுறுத்தியிருந்தார். இது பேச்சுவார்த்தைகளுக்கான அதன் பிரதான துரும்புச் சீட்டுக்களில் ஒன்றாகும்.

ஒரு தொகை உயர்மட்ட விஜயங்களின் மூலம் அமெரிக்கா இலங்கை இராணுவத்துடன் நெருக்கமான உறவை அபிவிருத்தி செய்து வருவதானது விடுதலைப் புலிகளை இலக்காகக் கொண்ட நிச்சயமான எச்சரிக்கைகளுக்கு சமனானதாகும். அக்டோபர் கடைப்பகுதியில் கொழும்பை வந்தடைந்த மூலோபாய மற்றும் கொள்கை திட்டமிடல் அதிகாரியான மேஜர் ஜெனரல் கால் ஈகென்பெரி, இலங்கையின் உயர்மட்ட அலுவலர்களை சந்திப்பதற்காக வடக்கு நகரமான யாழ்ப்பாணத்திற்கு பயணித்தார்.

அமெரிக்காவுடன் நெருக்கமான மூலோபாய உறவை ஸ்தாபித்துக்கொண்டுள்ள இந்தியா, இலங்கையுடன் பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட அண்மையில் உடன்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை இன்னமும் பகிரங்கப்படுத்தப்படாத அதேவேளை, கடந்த வருட இறுதியில் வெளியான விபரங்கள், மீண்டும் உள்நாட்டு யுத்தத்திற்கு திரும்பும் பட்சத்தில் இலங்கை ஆயுதப்படைகளுக்கு குறிப்பிடத்தக்க வைகையில் ஆதரவளிக்கும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளன. கடந்த வாரம் குமாரதுங்கவின் ஐந்து நாள் இந்திய விஜயத்தின்போது இடம்பெறும் கலந்துரையாடலில் இந்த உடன்படிக்கையும் முக்கிய இடம் வகிக்கின்றது.

இந்திய ஆயுதப்படைகளின் தளபதி என்.சீ. விஜ் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்தார். அவர் குறிப்பாக வடக்கு நகரமான வவுனியாவிற்கு சென்றதுடன், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியின் எல்லையில் ஓமந்தையில் அமைந்துள்ள இராணுவ சோதனை நிலையத்திற்கும் சென்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய விஜ், யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோதிலும் "சிப்பாய்களை சேர்ப்பதும் அவர்களின் வலிமையை அதிகரிப்பதும் தொடர வேண்டும்," என இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

இந்த விஜயமும் பிரேரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கொடுக்கல் வாங்கல்களும் விடுதலைப் புலிகளின் சார்பில் கூர்மையான பிரதிபலிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாத இறுதியில் புலிகளின் குரல் வானொலியில் உரையாற்றிய பாலசிங்கம்: "பிரேரிக்கப்பட்டுள்ள உட்படிக்கை இலங்கை ஆயுதப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமநிலையை தாக்குவதுடன், ஏற்கனவே உறுதியிழந்துள்ள யுத்தநிறுத்தத்தை மேலும் ஆட்டங்காணச் செய்யும்," எனக் குறிப்பிட்டார். வவுனியா தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான பி. சிதம்பரநாதன், இந்த "தீவில் இன்னுமொரு யுத்தத்திற்கான தயாரிப்புகள் திரைமறைவில் இடம்பெறுவதையே" அர்த்தப்படுத்துகிறது என எச்சரித்தார்.

நோர்வே பிரதிநிதிகளின் அண்மைய விஜயம் தற்போதைய முட்டுச் சந்திற்கு முடிவுகட்டி சமாதானப் பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதற்கான நிலைமை மிகவும் குறைவாகவே உள்ளது. உள்நாட்டு யுத்தத்தை நோக்கி மெதுவாக மீண்டும் வழுக்கிச் செல்லும் நிலைமை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

Top of page