World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

The Australian 2004 election: the secret of Howard's "success"

2004 ஆஸ்திரேலிய தேர்தல்: ஹோவர்டின் "வெற்றியின்" இரகசியம்

பகுதி 1 | பகுதி 2

By Nick Beams
3 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஆஸ்திரேலிய கூட்டரசு தேர்தல் பற்றிய இரு பகுதி கட்டுரையில் இது முதற்பகுதி. அக்டோபர் 9ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரதம மந்திரி ஹோவர்டின் தாராளவாத-தேசிய கூட்டணி கூடுதலான பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.

ஆஸ்திரேலிய தேர்தல் முடிவடைந்து இரண்டு நாட்களுக்கு பின்னர், அக்டோபர் 11 திங்கள் அன்று, 10 வயது சிறுவர்கள் குழு ஒன்று பள்ளி முன்வராந்தாவில் பகல் உணவு நேரத்தில் குழுமியது. இரண்டு வாரங்கள் விடுமுறைக்குப் பின் அன்றுதான் பள்ளி திறந்த முதல் நாள். பொதுவாக விடுமுறை அனுபவங்களைப் பற்றிய உரையாடல்கள் அல்லது Australian Idol தொடர்பான சமீபத்திய பேச்சுக்களுக்கு பதிலாக, அப்பொழுது குழுவினரிடையே ஒரு பெரும் மெளனம் நிலவியது. அவர்களுடைய விவாதம் ஒரு முக்கிய தன்மையைக் கொண்டிருந்தது. அவை, ஜோன் ஹோவர்டினால் எப்படித் தேர்தலில் வெற்றிபெற முடிந்தது? எவ்வாறு மக்கள் அவருக்கு வாக்கு அளித்திருக்க முடியும்? அதற்கு என்ன செய்ய முடியும்? என்பது பற்றியதாகும்.

தேர்தல் முடிவைப் பற்றி மக்களிடையே இருந்த பெரும் பிளவுற்ற நிலையைத்தான் சிறுவர்களின் அக்கறை பிரதிபலித்தது; ஆஸ்திரேலியா முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் இதே கேள்விகளைத்தான் கேட்டவண்ணம் இருந்தனர். புகலிடம் கோருவோர், தஞ்சம்கோரியோர் தொடர்பான பொய்கள், ஏமாற்றுக்கள் கொண்ட அரசாங்கத்தின் பின்னணி, ஈராக் படையைடுப்பு பற்றி இல்லாதிருந்த பேரழிவு ஆயுதங்கள் காரணம் காட்டப்பட்டு கூறிய பொய்யுரைகள் இவற்றையெல்லாம் கொண்டிருந்த ஹோவர்ட் அரசாங்கத்தால் எவ்வாறு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது... அதுவும் கூட்டாட்சி செனட் மன்றத்திலும் 1970 களின் கடைசிப் பகுதிக்குப் பின்னர் கூடுதலான பெரும்பான்மையையும் வாக்குகளையும் பெற்று கட்டுப்பாட்டிற்குள் கொள்ள முடியும்?

வலதுசாரி செய்தி ஊடக வர்ணனையாளர்கள் இதற்குத் தயாராக ஒரு விடை வைத்திருந்தனர். அது ஹோவர்ட்-விரோதப்போக்கு உணர்வு, ஈராக்கியப் போர் பற்றிய அரசாங்கத்தின் பொய்யுரைகள் அனைத்தும் "கலாச்சாரமிக்க உயர்குழுவினரிடையே" மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்பதாகும். பெரும்பான்மையான "சராசரி ஆஸ்திரேலியர்கள் ஹோவர்டின் பிற்போக்குக் கொள்கைகளால் பெரிதும் கவரப்பட்டிருந்தததுடன், அரசாங்கத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டது என்றால் அது தீமைபயக்கும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அஞ்சினர் என்பது அவர்கள் கருத்து.

Sydney Morning Herald இன் கட்டுரையாளரான மிரான்டா டேவைன், பழைமைவாத புரட்சியை இயக்குதல்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், "நாஷ்வில்லேயின் நகரத்தினருக்கு அவர்களுடைய உலகப் பார்வைக்கு ஒப்ப இதற்கு அறிவுபூர்வமான விளக்கம் காண்பதற்கு வழக்கத்தை விட இன்னும் கூடுதலான நேரம் பிடிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். இதுகாறும் அவர்கள் கவலைப்பட்டதெல்லாம் வட்டிவிகித அச்சுறுத்தல் பிரச்சாரத்தை ஒட்டித்தான் இருந்திருந்தது. ஆனால் ஹோவர்டின் தேர்தல் வெற்றியின் இரகசியம், அவர் முதன் முதலில் அரசாங்கத்தை 1996இல் பழைமைவாத ஆதரவு வளர்ச்சியுற்றுக் கைப்பற்றியதில் இருந்தே தொடங்கிவிட்டது என்று இவ்வம்மையார் வலியுறுத்திக் கூறியுள்ளார். ஹோவர்ட் தன்னுடைய ஆதரவுத் தளத்தை மக்கட்தொகையில் பழைய பிரிவினருடன், இப்பொழுது முப்பது வயதிற்கும் கீழ்ப்பட்டுள்ள புதிய பழைமைவாத பிரிவினரிடையேயும் பெருக்கிக் கொண்டுள்ளார். (Sydney Morning Herald, October 14, 2004)

மேர்டோக்கின் Australian பத்திரிகையில் கொண்டுள்ள பார்வையும் இக்கருத்தில் இருந்து அதிகம் வேறுபட்டதில்லை. இதன் கட்டுரையாளர் ஜேனட் ஆல்பிரெஷ்ட்செனுடைய கருத்தின்படி, ""ஹோவர்ட்- வெறுப்பாளர்கள் தங்களுடைய மட்டைகளையும் பந்துகளையும் எடுத்துக் கொண்டு களத்தைவிட்டு நீங்கும் ஆர்வத்தைக் கொள்ளுவார்களே ஒழிய, தாராளவாத தலைவரின், அதுவும் ஆஸ்திரேலியாவிலேயே இரண்டாம் இடத்தில் நீண்ட காலம் பிரதம மந்திரியாக உள்ளவர் என்பதை எவ்வாறு விளக்குவது என்பதில் ஆர்வம் காணமாட்டார்கள். இங்குதான் ஒரு மின்னல் போன்ற நிகழ்வு உள்ளது. ஹோவர்டை பற்றிய புதிர் உண்மையில் ஒரு புதிரே அல்ல. ஒரு Whitlamite, Keatingesque தலைவர் சுமத்தியுள்ள மேலிருந்து கீழ் செல்லும் பார்வையால் இடதுசாரிகள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டிருக்கையில், நம்மில் மற்றவர்களோ எமது நோக்கமான கீழிருந்து மேற்செல்லும் பார்வையைத்தான் விரும்புகிறோம். அச்சமாக இருக்கிறதா, என்ன? ஓர் உயர்நோக்கு பொருளாதாரத்தை தனிமனிதனுக்கு கொடுங்கள். மக்களை வேலைகள், உயர் ஊதியம் பற்றிய அச்சங்களைத் தவிர்த்து, அவரவர் தம் மன வளத்திற்கு ஏற்ப வாழ்க்கையை இயக்கிக் கொள்ள விருப்பத்தை அளியுங்கள். அது ஒரு சிறிய v (வெற்றி) எழுத்துப் பார்வையாக இருக்கலாம் என்பது உண்மையே. ஆனால் அதுதான் ஹோவர்ட் வெற்றி இரகசியத்தின் சாராம்சமாகும். (The Australian, October 13, 2004).

மறுபுறத்தில் இருந்து Sydney Morning Herald இன் அரசியல் கட்டுரையாளர் ஆலன் ராம்சேயினால் எழுப்பப்பட்ட குரலாவது:

"நாம் எவ்வாறு மீண்டும் இந்தச் சிறிய, குள்ளநரித்தன்மை நிரம்பிய, நம்பிக்கைத் தன்மை அற்றவரையும் அவருடைய இழிந்த குழுவையும் மற்றொரு மூன்று ஆண்டுகளுக்கு தேர்ந்து பதவியில் இருத்தியிருக்கிறோம்? இதைவிட மோசம் என்னவென்றால், நாம் அவர்களிடம் நாட்டின் முழுப் பாராளுமன்ற முறை, அதிகாரம் இவற்றில் அதிகார உச்ச வரம்பிலும் அல்லவா நிறுத்தியுள்ளோம்? எளிதிலே, நிகழ்ச்சிகள் புலப்படுத்தியுள்ளது போல், இதை நாட்டில் உள்ள மற்றவர்கள் அனைவருடைய இழப்பிலும், நம்முடைய தேசியச் சுயமரியாதையின் இழப்பிலும் இதைச் செய்துள்ளோம்.

"கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் இந்த அரசாங்கம், மிகச்சாதாரண நடவடிக்கைகளை தவிர மற்ற பெரும்பாலான விஷயங்களில் மிகத்திறமையற்று விளங்கியுள்ளதுடன், தன் சொற்களையே இழிவுபடுத்தியுள்ளதுடன் மக்களின் நம்பிக்கையும், வாக்காளர்களின் எளிதில் நம்பும் தன்மை, அவர்கள் அறியாமை, அவர்களுடைய வரிப்பணம் இவற்றை இழிவுபடுத்தி உள்ளதுடன் இறுதியில் தங்கள் பேராசை மிகுந்த சுயநலத்தைத்தான் கொண்டிருந்தனர்.... இப்பொழுது நாம் அனைவருமே ஏமாற்றப்பட்ட சிறுபான்மையினரின் முட்டாள்தனத்திற்கான விலையை செலுத்தவேண்டியிருக்கிறது." (Sydney Morning Herald, October 11,2004).

"ஓர் இடதுசாரி" பொருளாதார சிந்தனைக் குழுவான ஆஸ்திரேலிய இன்ஸ்டிட்யூட்டின் கிளைவ் ஹாமில்டனைப் பொறுத்தவரையில், ஹோவர்ட் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தது, "இருபது ஆண்டுகள் சந்தைச் சிந்தனை மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியை ஒட்டி சுயநலம் சார்ந்து இருக்கும் குறுகிய பார்வை கொண்டுவிட்ட நவீன ஆஸ்திரேலியாவைத்தான் பிரதிபலிக்கிறது. ... தனிநபர் பேராசை சமுதாய நலன்களை எப்பொழுதும் விரட்டித்தான் விடுகிறது. பொய்களில் விளைந்த ஓர் ஆபத்தான வெளிநாட்டுப் போர் அம்பலப்படுத்தப்பட்டதும், பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலும்கூட மக்களைத் தங்களுடைய பொருளாதார பிரச்சனைகளில் இருந்து எழுப்பிவிட இயலவில்லை." (Sydney Morning Herald, October 11, 2004).

தாராளவாத கல்வியாளரான ரொபேர்ட் மன்னே, கூட்டணியினால் "மரபுவழி தொழிற்கட்சி மற்றும் இடதுசாரி-தாராளவாதி அறிவுஜீவிகளுக்கு இடையே உள்ள பிளவுகளை பயன்படுத்திக்கொள்ளுதல் எளிதாகப் போயிற்று என்றும் அதை ஒட்டி, பொதுவாக இடதுசாரிகளின் நலன்களுக்கு வெளிப்படையாக விரோதமாகவும், அக்கறையற்றும் இருக்கும் தன்னுடைய ஆஸ்திரேலிய மத்தியதர வகுப்பினருடன் உள்ள தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ள உதவியாகவும் இருந்தது என்றும், ஈராக், அரசாங்கக் கூற்றுக்களின் உண்மை, அகதிகள், (பூர்விகக்குடிகள்) நலன்களை வழங்கல் பற்றி பொருட்படுத்தாமலும், சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பை விட்டுகொடாதிருத்தல் போன்றவற்றில் தன் நிலைப்பாட்டை தனியே கொண்டிருந்தது" என்றும் குறிப்பிட்டுள்ளார். (Sydney Morning Herald, October 18, 2004).

முதலில் பார்த்தால் இந்த விளக்கங்கள் ஒன்றோடு ஒன்று முரண்பட்டவை போல் தோன்றும். உண்மையில் அவை ஒரு பொது நிலைப்பாட்டைத்தான் கொண்டுள்ளன: அதாவது திறனாயாமல் அக்டோபர் 9 இன் "உண்மைகளை" அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் வெளிப்பாடான தேர்தல் விளைவுகளையும், வாக்குகளின் போக்குகளையும் ஏற்றது என்ற நிலை தோன்றும். ஒரு புறத்தில் இருந்து இதன் பொருள் தங்களுடைய தெளிவான பார்வைக்காக மக்கள் பாராட்டப்படவேண்டும் என எடுத்துக்கொள்ளலாம்; மறுபுறத்தில் இருந்து, மக்கள் எளிதில் எதையும் நம்பிவிடும் தன்மைக்காகவும், தன்னல போக்கிற்காக கண்டனத்திற்குரியவர் என்று எடுத்துக்கொள்ளப்படலாம்.

ஆனால் மற்ற எந்தச் சமூக உண்மையைப் போலவே, தேர்தல் முடிவும் வெறும் வாக்குகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அவற்றில் இருந்து அரசியல் முடிவுகளைக் காணும் முயற்சியாக இருத்தல் கூடாது. மாறாக, இந்த உண்மைகளின் அடித்தளத்தில் இருக்கும் சமூக உண்மையின் பின்னணியை ஊடுருவுதல் இன்றியமையாததாகும். இதுதான் மார்க்சிசத்தின் இயங்கியல் பொருள்முதல்வாத முறையின் சாரம் ஆகும்.

மார்க்சிச முறையும், ஆஸ்திரேலியத் தேர்தலும்

இயங்கியல் முறை சமுதாய, அரசியல் வாழ்வின் மேலெழுந்தவாரியான-தோற்றங்களை பற்றி விமர்சன ரீதியான அணுகுமுறையுடன் முதலில் ஆரம்பிக்கின்றது. அதன் பொருள் மற்றொரு வகையான காரணங்களை தோற்றுவித்து வேறுவித அரசியல் முடிவுக்கு கொண்டுசெல்வதல்ல. நிகழ்வுகளுக்கு கூடுதலான "இடதுசாரி" தோற்றத்தைக் கொடுக்கும் கருத்தும் அல்ல; மாறாக, அவற்றிற்கு காரணமாக உள்ள உண்மைகளில் ஊடுருவிக்கண்டு நிகழ்வுகள் ஏன் அவ்வாறு தோன்றின என்பதை காண்பதே ஆகும்.

அரசியல் பொருளாதாரத்தின் முறைகள் பற்றி விவாதிக்கையில், ஆரம்பத்தில் "உண்மையானதும் அப்போது ஸ்தூலமானதுடன்" ஆரம்பிப்பது சரியாகவே தோன்றலாம், அதனால், "முழுச் சமுதாய உற்பத்தியின் செயலுக்கு அடிப்படையாகவும், காரணமாகவும் இருக்கும்" மக்கள் திரளை மதிப்பீடு செய்ய தொடங்குவது சரிபோல் தோன்றும் என்றும் மார்க்ஸ் விளக்குகிறார். ஆனால் சரியான முறையில் ஆராய்ந்து பார்த்தால் இந்த முறை சரியாக இருக்காது என்றும் அவர் விவரிக்கிறார். சமூகப்பிரிவுகளைக் கவனிக்காமல் விட்டால், மக்கள்திரள் என்பது யதார்த்தமற்ற கருத்துப் பொருளாகத்தான் இருக்கும் என்றும், வர்க்கங்களை அவை தங்கியுள்ள கூறுகளை ஆராயாமலும், குறிப்பாக கூலியுழைப்பு மற்றும் மூலதனத்தின் கூறுபாடுகளை ஆராயாமல் வர்க்கங்களை கருதமுடியாது. ஆனால், கூலியுழைப்பு, மூலதனம் இவற்றைப் பற்றி ஆராயவேண்டும் என்றால் பணத்தையும் பரிமாற்றத்தையும் தெளிவாக ஆராயப்படுதல் வேண்டும்.

"எனவே, நான் ஆரம்பத்தில் மக்கள்திரளில் இருந்து ஆரம்பித்தால், அது முழுநிலை பற்றிய குழப்பமிக்க கருத்தாக இருக்கும்; அதன்பின் நான் இன்னும் கூடுதலான உறுதியுடன், ஆாய்வுமுறையில் இன்னும் எளிதான கருத்துகளை நோக்கிச் செல்லுவேன்; கற்பனை செய்யப்பட்டிருக்கும் திட்டவட்டமானதிலிருந்து மிக எளிமையான உறுதிப்பாடு உடைய முடிவுகளை அடையும் வரை இன்னும் மெல்லிய யதார்த்தமற்ற கருத்துக்களை நோக்கியும் நகர்ந்து செல்லுவேன். அங்கிருந்து இப்பயணம் கட்டாயமாகப் பின்புறம் வந்து நான் மீண்டும் மக்கள்திரளை பற்றி ஆய்விற்கு வருவேன்; ஆனால் இம்முறை அது முழுமையைப் பற்றிய பெருங்குழப்பமாக இருக்காது; மாறாக பல திடமான முடிவுகள், உறவுகள் பற்றி வளம்மிக்க முடிவான நிலைப்பாடுகளின் தன்மையைக் கொண்டிருக்கும். ...ஸ்தூலமானது ஸ்தூலமானதாகத்தான் இருக்கும்; ஏனெனில் அது பல வரையறைகளின் கூட்டாகும்; அதனால் வித்தியாசமானவற்றின் ஒன்றுபாடாகும். இதனால் சிந்தனைப் போக்கின் வழிமுறையில் அது ஒன்றிணைப்பு போக்காக தோன்றுகின்றது. இதன் விளைவாக, உண்மையில் அது ஆரம்பபுள்ளியாக இருந்தாலும், அது ஒரு ஆரம்பபுள்ளியல்ல; ஆகவே அது அவதானிப்பிற்கும் கருதுதலுக்குமான ஆரம்பபுள்ளியாக அமையும்." (Karl Marx, Grundrisse, pp.100-1).

மார்க்சிச தத்துவவாதியான Georg Lukacs உம் இந்த வழிவகைகளின் மத்திய பிரச்சனைகளை ஆராய்ந்தார். அனைத்து அறிவும் நிகழ்வுகளில் இருந்துதான் தொடங்குகின்றன என்று அவர் எழுதினார். ஆனால் அது ஒரு ஆரம்பம்தான். உடனடியாக் கொடுக்கப்பட்டுள்ள இந்த "உண்மைகளில்" இருந்து முன்னேறுவது தேவையாகும், "அவற்றின் வரலாற்று நிபந்தனைகளை உய்த்து உணர்நது உடனடியாக கொடுக்கப்பட்டுள்ள உண்மைத்தன்மையை கைவிடும் பார்வையை மேற்கொள்ளவேண்டும்; அவையே ஒரு வரலாற்று, இயங்கியல் ஆய்வுமுறைக்கு உட்படுத்தப்படவேண்டும்."

உண்மைகள் உணர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்றால், உண்மை நிலைப்பாடுகள், அவற்றின் உட்தன்மை இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடு தெளிவாகவும், துல்லியமாகவும் அறியப்படவேண்டும். இந்த வேறுபாடுதான் உண்மையான விஞ்ஞான ஆய்வின் முதல்கட்டமாகும். மார்க்சின் சொற்களின்படி, "பொருட்களின் கண்ணுக்குதெரியும் வெளித்தோற்றம் அதன் சாரத்துடன் இயைந்து நிற்குமானால் விஞ்ஞானபூர்வமானஆய்வு பயனற்றதாகும்".

"சமூகவாழ்வின் தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகளை வரலாற்று வழிவகையின் கூறுபாடுகளாகக் கண்டு அவற்றை ஒரு முழுமையாக இணைக்கும் முறையில்தான் உண்மையைப் பற்றிய உணர்தல் உண்மையைப் பற்றிய அறிவாகக் காணமுடியும் என்ற நம்பிக்கையைக் கொள்ளும்" என்று லுகாக்ஸ் முடிவுரையாகக் கூறியுள்ளார். (Georg Lukacs, History and Class Consciousness, pp.5-8).

2004 ஆஸ்திரேலியத் தேர்தலின் முக்கிய உண்மைகளை எளிதாகச் சுருக்கிக் கூற முடியும். மொத்தக் கண்ணோட்டத்தில், தாராளவாத கட்சிக்கு ஆரம்ப வாக்குகளில் 3 சதவிகிதம் ஆதரவு பெருகியது; விருப்பவாக்குகளின் பகிர்வைக் கணக்கில் எடுத்துக்கொண்ட பின்னர் இது 2 சதவிகிதத்திற்குச் சற்று கூடுதலாக உள்ளது. தொழிற்கட்சி மொத்த வாக்குகளில் 37.63 சதவிகிதத்தை பெற்றது; இது 1931ல் இருந்து அது கொண்ட பங்கில் மிகக் குறைவானதாகும்; இதையொட்டி, தாராளவாத-தேசியகட்சிக் கூட்டணியைவிட ஒரு மில்லியன் வாக்குகள் குறைந்த நிலையை அடைந்து இருக்கிறது.

பெரிய தலைநகரங்களின் வெளிப்புறநகரத் தொகுதிகளில் தொழிற்கட்சி தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் அது தன்னுடைய தொகுதிகளை இழந்தது; அல்லது 1996ல் தாராளவாதிகளுக்கு சென்றுவிட்டிருந்த தொகுதிகளை மீட்க இயலாமற் போயிற்று. அப்பொழுது கீட்டிங்குடைய தொழிற்கட்சி அரசாங்கம் வெளியேற்றப்பட்டிருந்தது. பல தொகுதிகளிலும் கூடுதலான வகையில் 3 சதவிகிதம் தாராளவாதிகளுக்கு ஆதரவு பெருகிற்று; சில இடங்களில் சற்றுக் கூடுதலான வகையில் ஆதரவும் இருந்தது.

தேசிய அடிப்படையைக் கொண்டு பார்க்கும்போது, தாராளவாதிகளுக்கு சதவிகித உயர்விற்கும், வீட்டுக்கடன்களை அடைக்கும் வாக்காளரின் விகிதத்திற்கும் இடையே தெளிவான தொடர்பு உறவு அறியப்படமுடியும். வேறுவிதமாகக் கூறினால், வட்டிவிகிதம் பற்றிய அச்சுறுத்தல் பிரச்சாரத்தை தாராளவாதிகள் மேற்கொண்டிருந்தது முக்கியமான தாக்கத்தைத்தான் கொண்டிருந்தது.

ஆனால் இந்தத் தேர்தல் உண்மை, மிகவும் எதிர்மறையானதும், வெடிக்கும் தன்மையை உடைய சமூகப் பொருளாதார வழிவகைகளின் விளைவுதான்; இது அடகுக் கடன்கள், வீட்டு விலைக் குமிழ்கள் கடந்த பத்து ஆண்டுகளில் ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தில் மத்தியகூறுபாடுகளாக இருப்பதைத்தான் இது சுட்டிப் பிரதிபலிக்கிறது. 2002 வரையிலான ஐந்து ஆண்டுகளில், மொத்த வீட்டுக் கடன் ஆண்டு ஒன்றிற்கு 15.4 சதவிகிதம் உயர்ந்து, 2003ல் விரைவாக 20 சதவிகிதத்தை அடைந்தது. வட்டி விகித உயர்விற்கு மில்லியன் கணக்கான குடும்பங்கள் தாக்கத்திற்கு உட்படுவது மொத்த வருமானத்தில் வீட்டுக்கடனின் விகிதம் உயர்ந்துள்ளதில் இருந்து காணப்படமுடியும். 1993ல் இது 56 சதவிகிதமாக, சர்வதேச தரத்தில் ஒப்புமையில் குறைவாகத்தான் இருந்தது. ஒரு தசாப்தத்திற்குப்பின, இது இரு மடங்கிற்கும் மேலாக 125 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது.

ஹோவர்ட் அரசாங்கம் 1996இல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வீடுகளின் விலைகள் பெயரளிவில் இரு மடங்கிற்கும் மேலாக உயர்ந்து விட்டன; வருமானங்களை விட இது மிகவும் அதிகமான தன்மையுடையதாகும். இதன் பொருள் சரசாரி வீட்டின் விலை இப்பொழுது சரசாரி தனிநபர் வருமானத்தைவிட ஒன்பது மடங்கிற்குச் சமமானது ஆகும்; இந்த ஏற்றம் தொடங்கிய காலத்தில் இருந்து ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இது 6 மடங்காக இருந்தது. இதன் விளைவாக வீடுகள் வாங்குபவர்கள் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு கடனில் ஆழ்ந்துள்ளனர்; 1980 களில் வீடுகள் அடமானத்திற்குக் கொடுத்ததைவிட அதிக தொகைகளை கொடுக்கின்றனர்; அப்பொழுது வட்டி விகிதம் 17 சதவிகிதமாக இருந்தது. ஆனால், வீடுகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள பெரும் உயர்வு மலைபோன்ற கடனை உருவாக்கியுள்ளதோடு, ஏதோ செல்வப்பெருக்கு ஏற்பட்டுள்ளது போன்ற பொய்த்தோற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்தான் வாங்கப்பட்டுள்ள, குடும்பம் அதற்குரிய செலவினத்தைக் கொடுப்பதற்குப் போராடும் நிலையில், அதன் சந்தை மதிப்பு அதன் வாங்கிய விலையை விட சில நூறாயிரம் டொலர்கள் அதிகமாக இருக்கும். அதன் மதிப்பு ஹோவர்ட் அரசாங்கம் ஆட்சிக்கு 1996ல் முதன்முதலில் பதவிக்கு வந்தபோது இருந்ததைவிட இருமடங்காக ஆகியிருக்கும்.

ஆனால் இந்த உயர்ந்துள்ள செல்வம் ஒரு பணவகைக் கானல்நீராகும். இநு பொருளாதாரம் முழுவதும் விரிவடைந்ததின் விளைவு அல்ல; இது, சொத்துச் சந்தையில் கூடுதலான வரவு ஏற்பட்டிதன் விளைவாகும். சர்வதேசரீதியில் வட்டிவிகிதத்தில் சரிவு ஏற்பட்டதை அடுத்து இது தோற்றுவிக்கப்பட்டது; அதிலும் குறிப்பாக 1998ம் ஆண்டு, அமெரிக்க கூட்டரசு வைப்புக்குழு பணமாற்றுவீதபோக்கை அதிகரித்தற்கு காரணம் ஆசியப் பொருளாதார நெருக்கடி உலகச் சந்தையில் சரிவு ஏற்படாவகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதின் விளைவு ஆகும். வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் வகையில், சொத்துச் சந்தைக்குப் பணவரவு இருக்கும் வரையில், வீடுகளை வாங்குபவர்களிடம் செல்வம் பெருகியுள்ளது என்ற கற்பனையை அனுபவிப்பர்; அதே நேரத்தில் அவர்கள் அடமானத் தொகை திருப்பிக்கொடுப்பதற்குப் பெரும் அவதியுற நேரிடும். ஆனால், அமெரிக்க டொலரின் மதிப்புக் குறைதல், உலகந்தழுவிய பொருளாதாரச் சரிவு தொடங்குதல், சீனப்பொருளாதார அதிகரிப்பு குறைவு, அமெரிக்க நிதிச் சந்தைகிளில் இருந்து ஆசிய வங்கி நிதிகள் திருப்பி எடுத்துக் கொள்ளப்படல் போன்ற சில காரணிகளினால், சர்வதேச வட்டிவிகிதம் பெருகினால், வீடுகளின் விலையுயர்வு தலைகீழாக மாறிப்போய்விடும்.

வேறுவிதமாகக் கூறினால், இந்த உண்மையைப் பற்றி ஆராய்ந்தால், அதாவது ஹோவர்ட் அரசாங்கத்திற்கு தங்கள் ஆதரவை உயர்ந்த வட்டி கொடுத்துக் கடன் பெற்றுள்ள வீட்டுரிமையாளர்கள் இருக்கும் பகுதியினர் கொடுத்துள்ள முடிவைக் காணும்போது, மிகப்பெரிய சமூக அழுத்தங்கள், நிலையற்ற தன்மை ஆகியவற்றை எவ்வாறு ஏராளமான பொருளாதார எதிர்மறைகள் ஊக்குவிக்கும் வகையில் உள்ளன என்பது வெளிப்பட்டுள்ளது. இந்த அடித்தளத்தில் உள்ள சமுதாய, பொருளாதார உண்மைதான் ஹோவர்ட் தேர்தல் பிரச்சாரத்தில் நேரடி வெளிப்பாட்டைக் கொண்டிருந்தது. ஒரு புறத்தில் அவர் ஆஸ்திரேலியா வளமும், நம்பிக்கையும் நிறைந்தது என்று கூறினார். மறுபுறத்தில் வாக்காளர்களைக் கூவியழைத்த தாராளவாதிகளின் பிரச்சாரத்தின் முக்கியபகுதி ஓர் அச்சுறுத்தும் வகையிலான பிரசாரமாக, அதாவது வீடு வாங்குவோர், ஹோவர்ட் அரசாங்கம் பதவியில் மீண்டும் இருத்தப்படவில்லை என்றால் ஒரே நாளில் ஆழ்ந்த வீழ்ச்சிக்கு உட்பட்டுவிடுவர் என்று கூறப்பட்டிருந்தது.

புறநகர்ப்பகுதிகளில் வசித்து வரும் உழைக்கும் வர்க்கம், மற்றும் மத்தியதரக் குடும்பங்கள் தாராளவாதிகளின் பிரச்சாரத்திற்கு போதுமான விஷயங்களை அளித்து வந்திருந்த போதிலும், அவர்களுடைய அச்சங்கள் ஏன் ஹோவர்ட் அரசாங்கத்திற்கு ஆதரவான வாக்கு என்று மாற்றம் பெற்றது என்பதை சரியாக விளக்கவில்லை. வேறுபட்ட சூழ்நிலையில் அத்தகைய பயங்கள் அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளும் மிகப்பெரிய முறையில் நிராகரிக்கப்பதில் முடிந்திருக்கும். அரசியல் உணர்மை பொருளாதார, சமூகநிலைகளை இயந்திரரீதியில் பிரதிபலிப்பது இல்லை. அது வரலாற்று அனுபவத்தால் ஒழுங்கமைக்கப்படுகிறது. இங்குத்தான் ஹோவர்டின் வெற்றி இரகசியம் அடங்கியுள்ளது.

ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள் 35-40 வயதிற்குள் இருப்பதாக வைத்துக் கொளுவோம்; ஆஸ்திரேலிய மக்கட்தொகையின் சராசரி இப்படித்தான் உள்ளது. 1983ல் அவர்கள் முதன் முதலில் தேர்தலில் பங்கு பெற்றபோது, 1930 களுக்குப் பிறகு காணப்பட்ட ஆழ்ந்த மந்த நிலைக்கு விடைகாணும் வகையில் உழைக்கும் வர்க்கம் பிரேசருடைய தாராளவாத அரசாங்கத்தை வெளியேற்றி, ஹாக்கின் தொழிற்கட்சியைப் பதவிக்கு கொண்டுவந்த நிலையைக் கண்டனர். இதுதான் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த நடைபெற்ற பொருளாதார சமுதாய மாற்றங்களில் மிகப் பெரிய பின்விளைவை ஏற்படுத்திய நிகழ்வாகும். இதுதான் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த தொழிலாளர் இயக்கம் சிதைவு அடையத் தொடங்கியதற்கு இட்டுச்சென்றது.

தொடரும்...

Top of page