World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Ivory Coast: protests erupt vs. French military strikes

ஐவரி கோஸ்ட்: வெடிக்கும் எதிர்ப்புக்களும், பிரெஞ்சு இராணுவத் தாக்குதல்களும்

By Ann Talbot
9 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த வார இறுதியில் தன்னுடைய முன்னாள் மேற்கு ஆப்பிக்கக் குடியேற்ற நாடான ஐவரி கோஸ்ட்டின் விமானப்படையை பிரான்ஸ் முற்றிலுமாக அழித்துள்ளது. இதில், மடிந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் அறியப்படவில்லை.

நவம்பர் 6 சனிக்கிழமை மாலை பிரெஞ்சு இராணுவம் அபிட்ஜான் விமான நிலையத்தைத் தாக்கி இரண்டு சூகோய்-25 போர் விமானங்களையும், மூன்று தாக்குதல் ஹெலிகொப்டர்களையும் அழித்தது. ஞாயிறன்று மேலும் இரண்டு இராணுவ ஹெலிகொப்டர்களும் அபிட்ஜானில் அழிக்கப்பட்ட்டன.

நாட்டின் வடக்கில் உள்ள Bouke நகரத்திற்கு அருகில் உள்ள பிரெஞ்சு இராணுவத் தளம் ஒன்றை ஐவரி கோஸ்ட் படைகள் தாக்கியதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்சின் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றன. இத்தாக்குதலில் ஒன்பது பிரெஞ்சு இராணுவத்தினரும் ஒரு அமெரிக்க ஆலோசகரும் கொல்லப்பட்டனர். 31 பேர் காயமுற்றதாகவும் கூறப்படுகிறது. பிரெஞ்சுத் தளத்தின் மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டதானது, ஒரு தவறான நிகழ்வு என ஐவரி கோஸ்ட் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நடைபெற்ற ஒரு சில மணி நேரத்திற்குள்ளேயே பிரான்சின் ஜனாதிபதி ஜாக் சிராக், ஐவரிக் கோஸ்ட்டின் மிகவும் சிறிய விமானப் படையை அழித்து விடுமாறும், விமான நிலையத்தைக் கைப்பற்றி விடுமாறும் தானே நேரடி உத்தரவைப் பிறப்பித்தார். அத்தோடு, பிரான்ஸ் உடனடியாக 300 மேலதிக படையினரையும், அருகில் உள்ள நாடான கபோனில் தயாராக இருந்த மூன்று மிராஜ் ஜெட் போர் விமானங்களையும் அனுப்பி வைத்தது. இதனைவிட இன்னும் கூடுதலான பிரெஞ்சுப் படைகள் Yakoussoukro வின் அரசியல் தலைநகரில் இருந்து அனுப்பப்பட்டது. அங்கிருந்து 20 இராணுவ வாகனங்கள் அபிட்ஜானுக்கு சென்று கொண்டிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. ஏற்கனவே அந்த நாட்டில் பிரான்ஸ் 4,000 படையினர்களை நிறுத்தி வைத்துள்ளது. ஐவரி கோஸ்ட்டில் தற்போது ஐ. நா வின் ஆதரவுடன் மொத்தமாக 10.000 ஆயிரம் வெளிநாட்டுப் படைகள் உள்ளன

"ஜாக் சிராக்கின் தலையில் ஐவரி கோஸ்ட் பிரான்சிற்கு வெளியிலுள்ள ஒரு பிராந்தியமாகிவிட்டது என்ற கருத்து புகுந்துவிட்டது" என்று தேசிய சட்டமன்ற சபாநாயகரான மமடு குலிபலி (Mamadou Koulibaly) நாட்டின் தொலைக்காட்சி ஒன்றிக்கு தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு ஹெலிகொப்டர்கள் அபிட்ஜன் மீது பறந்து சென்று, அதிரவைக்கும் எறி குண்டுகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை தெருக்களில் கூடிய மக்கள் மீது வீசித் தாக்கின. கவச வாகனங்களில் இருந்த தரைப் படையினர் தொழிலாள வர்க்கம் மற்றும் வியாபார நிலையங்கள் உள்ள பகுதிகளில் உள்ள இளைஞர்களை, விமான நிலையத்தை இணைக்கும் பாலத்தில் இருந்து துரத்தியடித்தனர். பாலத்தின் கீழ் துப்பாக்கிகள் ஏந்திய படகுகள் நிலைகொண்டிருந்தன. இத்தாக்குதலின்போது மூன்று பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஞாயிறு இரவு அபிட்ஜனில் சண்டை தொடர்ந்தும் நடந்து வந்ததுடன், மிகக் கூடுதலான வலிமையைப் பயன்படுத்தியும் கூட பிரெஞ்சுப் படைகளால் நகரத்தைத் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை. எதிர்ப்பாளர்கள் வீதிகளில் எரியும் தடைகளை ஏற்படுத்தியும் பிரெஞ்சுக்காரர்களின் சொத்துக்களையும் சூறையாடினர். ஐவரி கோஸ்ட்டில் 14,000 ம் பிரெஞ்சு மக்கள் இருக்கின்றனர். "நாம் போரில் இருக்கிறோம். பிரான்ஸ் எங்களைத் தாக்கியது" என்று ஒரு ஆர்ப்பாட்டக்காரர் அரச தொலைக்காட்சிக்கு கூறினார்.

சில ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த நிலைமையை அல்ஜீரியச் சுதந்திரப் போருடன் ஒப்பிட்டுப் பேசினர். "அல்ஜீரியாவில் நடந்ததைப் போல் இவர்களை எரித்துவிடுவது நல்லது. அவர்கள் வெள்ளையர்களை எரித்தனர். எனவேதான் அவர்கள் மதிக்கப்பட்டனர்" என்று ஒருவர் கூறியதாக அசோசியேடட் பிரெஸ் செய்தி ஸ்தாபனம் தெரிவித்தது.

"இன்றைய நிகழ்வுகள் ஒரு திருப்புமுனையைக் குறிக்கின்றன. நாங்கள் இங்கு செய்யப்போவதை ஒப்பிட்டால் வியட்நாம் ஒன்றுமில்லை என ஆகும்" என மமடு குலிபலி கூறியதாக BBC தெரிவிக்கிறது.

பிரெஞ்சு மக்கள் ஓர் ஆடம்பர உணவு விடுதியின் மேல்தளத்தின் வழியாகவும் அபிட்ஜனில் உள்ள குடியிருப்புப் பகுதிகளின் உயர்தளங்களில் இருந்தும் விமானம் மூலம் வெளியேற்றப்பட்டனர். தன்னுடைய வீட்டின் கூரைப்பகுதியை எரிபொருட்கள் கொண்டு இளைஞர்கள் தாக்கத் தொடங்கியபோது, தான் எவ்வாறு விரைந்து ஒரு ஹெலிகாப்டருக்குள் நுழைந்து தப்பினேன் என்று அவர்களில் ஒருவர் விவரித்தார். "என்னிடத்தில் இப்பொழுது காலணிகள், ஜீன் உடை, ஒரு சட்டை மற்றும் என்னுடைய திருமண மோதிரம் ஆகியவைதான் உள்ளன. மீதி அனைத்தும் போய்விட்டது" என்று அவர் தெரிவித்தார்.

பிரெஞ்சு இராணுவத் தளத்திற்கு அருகில் பிரெஞ்சு மக்கள் வசிக்கும் பகுதிக்குள் சீற்றம் நிறைந்த இளைஞர்கள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. "நாங்கள் அனைவருமே பெரும் பீதியில் உறைந்து, ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறோம்" என்று அங்கு வசிக்கும் ஒருவர் நிருபர்களுக்குத் தொலைபேசியில் தெரிவித்தார். எரியூட்டப்பட்ட இரண்டு பள்ளிகளில் இருந்து வெளிவரும் புகை மண்டலம் தொலைவிலிருந்து நன்கு தெரிவதாகவும், தக்களுடைய வீடுகளும் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளன என்றும் பிரெஞ்சுக் குடும்பத்தவர்கள் தெரிவித்தனர். ஆனால், இதன்போது இறப்பு பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

ஞாயிறு இரவு மின்வசதி, மற்றும் தொலைபேசி வசதிகள் யாவும் பிரெஞ்சுத் தூதரகத்தில் துண்டிக்கப்பட்டன. BBC உட்பட சர்வதேச வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகள் கேட்க முடியவில்லை.

பிரெஞ்சு வெளிநாட்டு அமைச்சரான மிஷேல் பார்னியே பிரெஞ்சுத் தொலைக்காட்சிக்கு தெரிவித்தபோது, ஐவரி கோஸ்ட் ஜனாதிபதி பாக்போதான் (Gbagbo) "அனைத்து நிகழ்வுகளுக்கும் சொந்தப் பொறுப்பைக் கொண்டுள்ளார்" எனக் கூறியுள்ளார். மேலும் இந்த வன்முறை "விளங்கிக் கொள்ளமுடியாதது, நியாயமற்றது" என்றும் அறிவித்தார்.

உண்மையில், இந்த வன்முறையில் விளக்கப்பட முடியாதது ஏதும் இல்லை. தன்னுடைய முன்னாள் காலனி நாட்டிற்கு எதிராக "அடக்கி ஆளும் படையை'' பிரான்ஸ் அனுப்பியதன் விளைவுதான் இது என்று வாஷிங்டன் போஸ்ட் கூறியிருக்கிறது.

பிரான்சினுடைய இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா.வின் பாதுகாப்புக்குழு ஆகியவற்றின் ஆதரவு கிடைத்துள்ளது. ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் அவசரக் கூட்டம் ஒன்று, ஐவரி கோஸ்ட் மக்களின் எதிர்ப்பை அடக்குவதற்கு பிரான்சின் படைகள் "தேவையான நடவடிக்கைகளை" மேற்கொள்ளலாம் என்ற அனுமதியைக் கொடுத்துள்ளது.

ஐவரி கோஸ்ட் ஜனாதிபதி லோரான்ட் பாக்போவிடம் ஐ.நா.வின் தலைமைச் செயலரான கோபி அன்னன் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரியுள்ளார். சர்வதேச சமூகத்திற்குத் தங்கள் இறைமையைக் காக்க வேண்டும் என்று ஐவரிக் கோஸ்ட் மக்களின் முறையீட்டிற்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைதான் இது.

ஐ.நா.வின் அமெரிக்கத் தூதர் பிரான்சின் நடவடிக்கைகள் "முற்றிலும் பாதுகாப்புக் குழுவின் கருத்துக்களுக்கு உட்பட்டுத்தான் உள்ளன" என்று கூறியுள்ளார். பிரெஞ்சு மக்கள் மற்றும் பிரெஞ்சுப் படைகளைக் காக்கும் உரிமை பிரான்சிற்கு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

ஐவரி கோஸ்ட்டில் தன்னுடைய மற்றும் பிற அயல்நாட்டு மக்களைத் தீமைக்குட்படுத்தும் வகையில் பிரெஞ்சு அரசாங்கம் செயல்பட்டுள்ளது என்பதை அசட்டை செய்யும் வகையில் இந்த சர்வதேச ஆதரவு அறிக்கைகள் இருக்கின்றன. விமான நிலையத்தைக் கைப்பற்ற, விமானப் படையை அழித்த வகையில், பிரான்ஸ் ஒரு சிறிய, வறிய நாட்டின்மீது தாக்குதலைத் தொடுத்துள்ளது. ஐவரி கோஸ்ட் அரசாங்கத்தின் படைகள் ஒரு பிரெஞ்சு இராணுவத் தளத்தை தாக்கியுள்ளன என்ற காரணத்தை வைத்து, பிரான்ஸ் செய்தவற்றை நியாயப்படுத்த முடியாது. இந்த நடவடிக்கையின் கடுமை முற்றிலும் பொருந்தாத் தன்மை கொண்டுள்ளதுடன் ஒரு முறைகூட பிரான்ஸ், தனது தூதரக முயற்சிகளைப் பயன்படுத்தி உண்மையில் அந்நாட்டு அரசாங்கம் கூறுவதுபோல், ஐவரி கோஸ்ட் படைகளின் குண்டுத் தாக்குதலானது தற்செயலா என்பதை அறிந்து கொள்ளக்கூட முற்படவில்லை

லோரான்ட் பாக்போவின் அரசாங்கத்திற்கும் வடக்கில் இருந்த எதிர்ப்புப் படைகளுக்கும் இடையே இருந்து வந்த உள்நாட்டுப் போர்நிறுத்தத்தை மீறி பிரெஞ்சுப் படைகளின் மீது அதன் விமானப்படை குண்டு வீசிவிட்டது. இதனால் பிரான்சிற்கு தன்னுடைய பரந்த, வலிமை மிகுந்த படைகளைச் செயல்படுத்தும் உரிமை கிடைத்துவிடாது. மேலும், ஐ.நா. தீர்மானங்கள் எதற்கும் தேவை என்று பொதுவில் வலியுறுத்தும் சிராக், ஐவரி கோஸ்ட்டின் விமானங்களைச் சுட்டுத் தரையில் வீழ்த்தியபோது அவரிடம் ஐ.நா.வின் பாதுகாப்பு ஆணை எதுவும் கிடையாது.

சிராக்கின் செயல்கள் அப்பட்டமான ஏகாதிபத்திய வலிமையை உறுதிப்படுத்தும் வெளிப்பாடு ஆகும். மீண்டும் பிரான்சின் ஆதிக்கத்தை அதன் முன்னாள் காலனி மீது வலியுறுத்துவதற்கும், பாக்போ மேற்கு நாடுகளின் பொருளாதார, அரசியல் ஆணைகளுக்கு முற்றிலும் இணங்கவேண்டும் என்பதை உறுதி செய்யவும்தான் இச் செயற்பாடு நிகழ்ந்துள்ளது.

முன்பு செல்வச் செழிப்புடன் விளங்கிய இந்த நாட்டின் CFA பிராங் நாணயத்தின் மதிப்பை பிரான்ஸ் ஒருதலைப்பட்சமாக குறைத்தது. அத்தோடு, பொருளாதாரக் கொள்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையை ஏற்கவேண்டும் எனச் செய்தபின்னர் இந்த நாடு பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது. உலகின் மிகப்பெரிய கொக்கோ ஏற்றுமதி நாடாக ஐவரி கோஸ்ட் இருந்தாலும், அதன் விலை வீழ்ச்சியுற்றுள்ளதால் அதிலிருந்து கிடைக்கும் வருமானம் குறைந்துவிட்டது. இதனால், இன மற்றும் சோவனிஸ்ட் இயக்கங்களுக்கு தக்க துணையாக வறுமையும், வேலையின்மையும் உள்ளன.

பிரான்ஸ் தன்னுடைய மேற்கு ஆப்பிரிக்க காலனிகளில் இருந்து, ஐவரி கோஸ்ட்டை புறம்பாக உருவாக்கியது. இப்பகுதியின் வளங்களைப் பிரிக்கும்போது, ஒப்புமையில் வளம் கூடிய கூடுதலான கிறிஸ்தவ மக்கள் இருக்கும் ஒரு நாட்டையும், அதைச் சுற்றிலும் ஏழை முஸ்லிம் நாடுகள் இருக்கும்படியாகவும் பிரான்ஸ் வேண்டுமென்றே ஏற்பாடு செய்திருந்தது. முஸ்லிம் நாட்டுக் குடிமக்கள் ஐவரி கோஸ்ட்டில் இருந்த கொக்கோ தோட்டங்களில் வேலை நாட வேண்டியிருந்தது.

லோரன்ட் பாக்போ தனது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள, சிடுமூஞ்சித்தனமான முறையில் முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை பயன்படுத்திக் கொண்டுள்ளார். 1960. 1970 களில் அண்டை நாடான புர்கினா பாசோவில் (Burkina Faso) இருந்து வந்த குடியேற்றத் தொழிலாளர்களை இலக்காகக் கொண்டு, நாட்டின் பொருளாதாரச் சரிவிற்கு அவர்களைப் பலியாடுகள் போலக் காட்டினார். ஐ.நா.வின் மனித வளர்ச்சிக் குறியீட்டில் 2002 ம் ஆண்டு, மொத்த 177 நாடுகளில் 156 வது இடத்தில் இருந்த ஐவரி கோஸ்ட், 2004 ம் ஆண்டு 163 ம் நாடாக வீழ்ச்சியடைந்துள்ளது.

2000 ம் ஆண்டில் பாக்போ வடக்கே தளம் கொண்டிருந்த அரசியல்வாதியான அலசன் ஊத்ராவை (Alassane Outarra) ஜனாதிபதித் தேர்தலில், அவருடைய பெற்றோர் ஐவரி கோஸ்ட்டில் பிறக்கவில்லை என்று காரணம் காட்டி ஒதுக்கிவிட்டபோது உள்நாட்டுப்போர் வெடித்தது. பிரெஞ்சு அரசாங்கம் அப்படியிருந்தும் பாக்போவினுடைய தேர்தலை அங்கீகரித்தது. ஏனென்றால் இந்த முன்னாள் தொழிற்சங்கத் தலைவர், பிரெஞ்சு சோசலிசக் கட்சியுடனும் லியோனல் ஜோஸ்பனுடனும் தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்பதினாலாகும்.

அப்போதிருந்து, பாக்போ தன்னுடைய ஆட்சியை மிகவும் மிருகத்தனமான முறைகளைக் கையாண்டு தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு மார்ச் மாதம் அரசாங்கப் படைகள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்த 120 மக்களைக் கொன்றுள்ளது. அத்துடன், கானாமல்போனதாக கருதப்படும் கீ ஆந்திரே கைபர் (Guy-Andre Kiefer) என்ற பிரெஞ்சு-கனடியச் செய்தியாளர் ஒருவரை அரசாங்க ஆதரவு இராணுவ முகாம் ஒன்றிற்கு கொண்டு சென்று சித்திரவதை செய்யப்பட்டு, அவர் இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரெஞ்சு அரசாங்கம் பாக்போவினுடைய ஆட்சிக்காலம் முழுவதும், அவரது ஊழல்களுக்கு ஒத்துழைப்புத் தந்துள்ளது. இதனால், பல பிரெஞ்சு நிறுவனங்கள் இலாபமடைந்துள்ளன. ஆனால், பாக்போ வடக்கே இருப்பவர்கள் உட்பட, இணைந்து அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதை பலமுறை நாசப்படுத்திவிட்டாதால் உறவுகள் மேலும் சீர்குலைந்தன. 2004 ன் துவக்கத்தில் அவர் பிரான்சுக்குச் சென்று வந்த பின் நிலவிய ஒரு குறுகிய கால சமரசத்திற்குப் பின், அவர் மீண்டும் வடக்கிலுள்ள எதிர்ப்பு படைகள் மீது சில வாரங்களின் முன்பு தாக்குதலை தொடுத்தார். இதன்போதுதான் பிரெஞ்சுத் தளம் மீதான தாக்குதலும் நடாத்தப்பட்டது.

பாக்போ தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் கூட, வெளித் தலையீட்டினால் பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஹைட்டியின் ஜனாதிபதி அரிஸ்டைட் போன்று அவரது பதவியும் அகற்றப்படவேண்டும் என்று வடக்கே இருக்கும் எதிர்ப்புத் தலைவர்கள் கோரியுள்ளனர். இந்த மாற்றுத் திட்டத்தை ஏற்கும் போக்கை பிரான்ஸ் ஏற்றுக்கொண்டது போல் தோற்றமளித்தது. அதை ஒட்டித்தான் விமான நிலையம் கைப்பற்றப்பட்டதும், பாக்போவின் விமானப் படை தகர்க்கப்பட்டதும் நிகழ்ந்துள்ளன.

சிராக் அரசாங்கம் ஆணவத்துடன் மீண்டும் ஐவரி கோஸ்ட்டில் காலனித்துவ முறைக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள முயன்று வருகிறது. இது அமெரிக்கா பல்லுஜாவைத் தாக்கிக் கொண்டிருக்கும்போது, உலகத்தின் செய்தி ஊடகங்கள் அதனைக் குவிப்பாகக் கொண்டுள்ள நேரத்தில் நடந்துள்ளது. பாரிசின் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தால் அதற்கேற்ப தக்க ஆதரவு நடவடிக்கைகளை பிரான்சில் இருந்து வாஷிங்டன் ஐயத்திற்கிடமின்றி எதிர்பார்க்கும்.

ஐவரி கோஸ்ட் எண்ணை வளம் மிகுந்த நாடல்ல. ஆயினும் கூட அது மூலோபாய வகையில் இப்பகுதிக்கு முக்கியமாக இருந்து பிரான்சிற்கு மேற்கு ஆப்பிரிக்காவில் காலூன்ற வகை செய்கிறது. இங்கு இங்கிலாந்து ஏற்கனவே சியாரா லியானில் (Sierra Leone) தன்னை மீண்டும் நிலைப்படுத்திக் கொண்டுள்ளது. அமெரிக்காவோ, தனது மிகப் பரந்த நலன்களை உலகச் சந்தைத் தேவைகளுக்கு முக்கியமானவையாக உள்ள எண்ணை வயல்களில் கொண்டுள்ளது.

கடந்த காலத்தில் புஷ் நிர்வாகத்துடன் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் இருந்த போதிலும் இப்பொழுது பிரெஞ்சு அரசாங்கம் தன்னுடைய புதிய காலனி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் ஆதரவை நாடியுள்ளது. ஐவரி கோஸ்ட்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறிதும் ஈராக்கிய ஆக்கிரமிப்பில் இருந்து வேறுபட்டிருக்காத நிலைமையில், பிரான்சின் வெளிநாட்டுக் கொள்கை வாஷிங்டனுடையதில் இருந்து கணிசமாக வேறுபட்டு உள்ளது என்று எவரேனும் நினைத்தால், அந்தக் கற்பனைத் தோற்றத்தில் அவர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவர். இந்த நிகழ்விற்குப் பின், அவசரமாகக் கூட்டப்பட்ட ஐ.நா. பாதுகாப்புக் குழுக் கூட்டம், இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்குச் சட்ட நெறியை அளித்துவிட முடியாது. அதேபோன்று, அமெரிக்க அரசாங்கம் பல்லுஜா நகரத்தைத் தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கும் நடவடிக்கையில் இருக்கும்போது, ஐ.நா.வில் உள்ள அமெரிக்கத் தூதரின் ஆசியும் இதற்குச் சட்ட நெறியைத் தந்துவிட முடியாது.

See Also:

ஐவரி கோஸ்ட்: இரண்டாண்டுகள் பிரான்சு மற்றும் ஐக்கிய நாடுகள் ஆக்கிரமிப்பு

Top of page