World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Socialist alternative in the 2004 Australian election

Support the Socialist Equality Party campaign

2004 ஆஸ்திரேலிய தேர்தலில் ஒரு சோசலிச மாற்றீடு

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தை ஆதரிப்பீர்

Statement by the SEP
6 September 2004

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சி (ஆஸ்திரேலியா) எமது ஆதரவாளர்களையும் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களையும், அக்டோபர் 9- 2004 கூட்டரசுத் தேர்தலில் நம்முடையை பிரச்சாரத்தில் சேருமாறு அழைப்பு விடுகிறது. ஒரு சுயாதீனமான அரசியல் குரலை தொழிலாள வர்க்கத்திற்காக வழங்குவதற்கும், போர், சமூக பிற்போக்கு மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் ஆகியவற்றை ஒரு சோசலிச முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்துடன் எதிர்த்து போராடுவதற்கும் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய மற்றும் சர்வதேச சோசலிச இயக்கத்தில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை வகிக்கும், தேசிய செயலாளரும், உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினருமான நிக் பீம்ஸ் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழு ஒன்றை சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. சட்ட மன்ற மேல்பிரிவிற்கு (செனட்டிற்கு) பீம்ஸூடன் டெர்ரி குக் நியூசெளத் வேல்ஸில் வேட்பாளராக நிற்கின்றார். மன்றத்தின் கீழ் பிரிவாகிய பிரதிநிதிகள் அவைக்கு மேற்கு சிட்னி தொகுதியான வெர்ரிவாவில் மைக் ஹெட்டும், தென்கிழக்கு தொகுதியான கிங்போர்ட்-ஸ்மித்தில் ஜேம்ஸ் கோகனும் போட்டியிருகின்றனர். மெல்பர்னுடைய வடக்குப் புறநகரமான பாட்மனில் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளராக பீட்டர் பைர்ன் இருப்பார்.

ஸ்பெயின், தென் கொரியா, கனடா மற்றும் அமெரிக்காவின் நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் உள்ளது போலவே, 2004 ஆஸ்திரேலியத் தேர்தலிலும் மத்திய கேள்வியாக ஈராக் போரும் அதன் விளைபயன்களுமே உள்ளன. செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதலின் துயரத்தை ஒரு சாக்குபோக்காக பயன்படுத்தி, அமெரிக்கா தன்னுடைய இராணுவ வலிமையைப் ஆயத்தப்படுத்தி, "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பெயரில் பூகோள ஆதிக்கத்தை பாதுகாக்க முற்பட்டுள்ளது. முழு அரசியல் ஸ்தாபனங்களும் பிரச்சினையை மறைக்க முயற்சி செய்து வருகையில், ஈராக்கின் மீதான குற்றம் சார்ந்த படையெடுப்பும், அதை ஆக்கிரமித்தலும் ஒரு புதிய தடையற்ற காலனித்துவத்திற்கும், பெரும் வல்லரசுகளின் போட்டிக்குமான ஒரு புதிய கால கட்டத்தை திறந்துவிட்டதை சமிக்கை காட்டுகின்றன. பிரிட்டனாலும், ஆஸ்திரேலியாவினாலும் ஊக்குவிக்கப்படும் அமெரிக்கா, மாபெரும் எண்ணெய் இருப்புகளின் மீது கட்டுப்பாட்டை பாதுகாக்கவும், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா இவற்றின் மூலோபாய ஆதிக்கத்தை அமெரிக்கா வலிமைபடுத்திக்கொள்ளவும், ஒரு சுதந்திரமான நாட்டையும் அதன் மக்களையும் அடிமைபடுத்தியுள்ளது.

மில்லியன் கணக்கில், முன் கண்டிராத வகையில் பூகோளரீதியான கண்டனங்களை மக்கள் போருக்கு எதிராக காட்டியுள்ளனர். ஈராக்கிய மக்கள் தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பில் இருந்தும், கொள்ளையடிக்கப்படுவதில் இருந்தும் காப்பதற்கு மேற்கொண்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளை, வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் பெருமுயற்சியுடன் அழிக்க எடுத்துக்கொண்டுள்ள செயல்பாடுகள் அதிகமான சீற்றத்தையும் வெறுப்பையும் பெருக்கியுள்ளன. ஆனால் தாராளவாத மற்றும் தொழிற் கட்சிகள், செய்தி ஊடகத்துடன் சேர்ந்துகொண்டு, தேர்தல் பிரச்சாரத்தில் இந்த எதிர்ப்புப் பிரச்சினை குறுக்கிடாமல் காத்திட உறுதி பூண்டுள்ளனர்.

தொழிற் கட்சி, ஹோவர்ட் அரசாங்கத்திற்கு ஒரு மாற்றானது என்று எவரும் நப்பாசை கொள்ளத்தேவையில்லை. தாராளவாத-தேசிய கூட்டணி போலவே, தொழிற்கட்சி முழுமனத்துடன் புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான போருக்கு" ஊக்கமளித்து, ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதத் தடைக்கு ஆதரவளித்து, ஈராக்மீது போர் தொடுத்தலை நியாப்படுத்தும் வகையில் கூறப்பட்ட அனைத்து பொய்களுக்கும் ஒப்புதல் அளித்தது. இக்கட்சி அமெரிக்கத் தலைமையிலான போருக்கு கூறியுள்ள ஒரே எதிர்ப்பு, இது ஐ.நா.வின் கொடியின் கீழ் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான்.

போரை எதிர்க்கும் வெகுஜன வாக்காளர் தளத்தை ஈர்க்க முயற்சிக்கும் வகையில், தொழிற்கட்சித் தலைவர், மார்க் லாதம், வலதுசாரி அரசாங்கம் மார்ச் மாதம் ஸ்பெயினில் அதிர்ச்சித் தோல்வி அடைந்த பின்னர், ஈராக்கில் இருந்து ஆஸ்திரேலியப் படைகள் கிறிஸ்மஸ தினத்தில் திரும்ப அழைக்கப்படும் என்று பெரும் நிபந்தனைகளுடன் கூடிய உறுதி மொழியை அளித்தார். ஆனால் 140,000 அமெரிக்கப் படைகள் தொடர்ந்து ஈராக்கை ஆக்கிரமிப்பது பற்றியோ அல்லது சித்திரவதை உட்பட பல குற்றஞ்சார்ந்த நடத்தைகளை பயன்படுத்தி ஈராக்கிய மக்களை அச்சுறுத்துவதற்கும் பயமுறுத்துவதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதனையும் வெளிப்படுத்தப்படவில்லை. ஆரம்பத்தில் இருந்தே, தொழிற்கட்சி வாஷிங்டனுடைய நவீன-காலனித்துவ நிகழ்ச்சி நிரலுக்கு முற்றிலும் இணக்கமாகத்தான் நடந்து வந்துள்ளது.

பசுமை கட்சியினரைப்போலவே, துருப்புகளை வெளியேற்றுவது தொடர்பான லாதமுடைய வாதமும், தூய்மையாக தந்திரரீதியான கருத்தைத்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன் அடிப்படை நோக்கம் "பயங்கரவாதத்தின் மீதான போரை" நாட்டிற்கு அருகில், அதாவது ஆஸ்திரேலியாவின் சொந்த கணிசமான நவீன-காலனித்துவ திட்டத்தை ஆசிய-பசிபிக் பகுதிகளுக்குள் துரிதப்படுத்த வேண்டும் என்பது ஆகும். ஹோவார்ட் அரசாங்கம் இந்த பிராந்தியத்தில் மேற்கொண்டுள்ள, குறிப்பாக கிழக்கு தீமோர் மற்றும் சொலோமன் தீவுகளில் தலையிடுவதின் இராணுவ துணிகரச்செயலை செயல்படுத்துவதற்கு பின்னால் பசுமைகளும், தொழிற்கட்சியும் முற்றிலும் சரணடைந்துவிட்டன. ஹோவார்டின் வார்த்தை ஜாலங்களுக்கு மாறாக, ஈராக்கில் அமெரிக்க வெற்றிக்கான நோக்கங்களை போலவே, இவையும் "மனிதாபிமான" அடிப்படையைக் கொண்டவை அல்ல.

ஆஸ்திரேலிய உள்நாட்டு அரசியல் விவாதங்களில் வாஷிங்டனுடைய அசாதாரணமான தலையீட்டிற்கு தொழிற்கட்சி தலைவரின் பதில், இக்கட்சி புஷ்ஷின் கொள்கைகளுக்குச் சவால் விடும் என்று எவரேனும் சிறிதளவு நம்பிக்கை கொண்டிருந்தாலும் அதை புதைக்கச்செய்துவிட்டது. அமெரிக்க ஜனாதிபதி புஷ், துணை ஜனாதிபதி செனி, வெளியுறவு அமைச்சர் பவல், துணைச் செயலர் ஆர்மிடேஜ் மற்றும் அமெரிக்க தூதர் ஷீயிபெர் (Schieffer) ஆகியோர் வெளிப்படையாகவே, "விரும்புவோரின் கூட்டணியில்" இருந்து ஆஸ்திரேலியா விலகுவது "ஒரு பேராபத்து", "கற்பனைக்கும் அப்பாற்பட்டது", அமெரிக்க-ஆஸ்திரேலிய நட்புறவிற்கு ஓர் அச்சுறுத்தல் என்று அறிவித்த பின்பு, லாதம் அவர்களது நோக்கத்திற்கு அடிபணிந்துவிட்டார். வாஷிங்டனுக்கு உரத்த குரலில் எப்பொழுதும் ஆதரவு கொடுத்துவந்த, தொழிற் கட்சியின் பழைய தலைவரான கிம் பீஜிலியின் முடங்கியுள்ள அரசியல் வாழ்வு விரைவில் புத்துயிர் பெற்று-- "குண்டுவீச்சாளர் பீஜ்லி" ("Bomber Beazley") என்ற அடைமொழி பெற்றுள்ள இந்த வலதுசாரி இராணுவவாதி--- புதிய நிழல் பாதுகாப்பு அமைச்சராக இருத்தப்பட்டார். அதேநேரத்தில், ஈராக்கில் தொடர்ந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு, மற்றும் அமெரிக்கா எதிர்வரும் முன் கூட்டி தாக்கும் போரில் ஈடுபட்டாலும் அதற்கு ஆதரவு என்ற இரு கருத்துக்களுக்கும் தொழிற்கட்சி ஆதரவு இருக்கும் என்று, முறையான வகையையும் மீறி அவற்றின் பிணைப்பை லாதம் உத்தரவாதம் அளித்துள்ளார்.

லாதமின் இழிந்த தன்மைக்கு, ஆஸ்திரேலியச் செய்தி ஊடகத்தால், "ஒரு மகத்தான திட்டம்" என்று தொடர்ந்து வர்ணிக்கப்பட்டு வரப்பட்டது. இதன் காரணம்? செய்தி ஊடகப் பிரபுக்களைப் பொறுத்தவரையில், இது ஈராக்கியப் போரைத் தேர்தல் செயற்பட்டியலில் இருந்து திறமையுடன் அகற்றிவிட்டது.

உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளைப் பொறுத்தவரையில் இரண்டு பெரிய கட்சிகளும் பெரிதும் உடன்பாடு கொண்டுள்ளன. முன்கண்டிராத வகையில் ஜனநாயக உரிமைகள்மீது கான்பெரா நடத்தும் தாக்குதல்களை தொழிற்கட்சி முழுமையாக ஆதரித்துள்ளது, அதேநேரத்தில், லாதமின் சமூக நிகழ்ச்சி நிரல் ஹோவார்டை விடவும் பிற்போக்குத் தன்மையைக் கொண்டிருக்கிறது. "தனி நபர் கூடுதலான பொறுப்பைக் கொள்ளவேண்டும்" என்று இவர் விடுத்துள்ள அழைப்புக்கள், மிக வறியவர்கள், மற்றும் சமுதாயத்தில் மிகவும் தாக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் அரசாங்கத்தின் கடமையை முற்றிலும் துறந்துவிடுவதற்கு அடிப்படையாகப் போய்விட்டது. இரண்டு தலைவர்களுமே, நிதிச் சந்தையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றிவதில் சமமான ஆர்வத்தைக் காட்டுவதையும், சமூக பணிச்செலவுக் குறைப்புக்களின் மூலம் வரவுசெலவுத் திட்ட உபரித் தொகையைக் காண்பதிலும் பெரும் ஆர்வம் கொண்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய ஒவ்வொரு மாநிலத்திலும் தொழிற்கட்சி அதிகாரத்தில் இருக்கும் நிலையில், கட்சியின் கொள்கைகள் வெளிப்பார்வைக்கு முழுமையாக வந்துள்ளன. பொதுத் தொழிற்துறை தனியார்மயமாக்குதல், பல்லாயிரக் கணக்கான பொதுத் துறை வேலைகளை தகர்த்து விட்டது, பள்ளிகள், மருத்துவமனைகள் இவற்றிற்கான உதவிகளைக் அகற்றிவிட்டது, போக்குவரத்து, மின்சாரம், நீர் வசதி என்ற அத்தியாவசிய வசதிகளைக் குறைத்தல் போன்றவற்றிற்கு நேரடியான பொறுப்பை மாநில தொழிற்கட்சி அரசாங்கங்கள் கொண்டுள்ளன. தன்னுடைய போட்டியாளர்களுடன் கடுமையான முறையில் ஒவ்வொரு மாநிலமும் முதலீட்டை ஈர்ப்பதற்காக சமுதாயச் செலவுகளை குறைத்து, வணிகத்திற்கு நிதியம் அளிக்கும் வகையில் நடந்து வருகிறது. ஹோவார்டிற்குச் சவால் விடும் கருத்தில் இருந்து மிகத் தொலைவில்தான் தொழிற்கட்சி பிரதம மந்திரிகள் கூட்டாட்சி தன்னுடைய பொருளாதார மறுசீரமைப்பு செயற்பட்டியலை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு மிக நெருக்கமாக ஒத்துழைத்து வந்துள்ளனர்.

அதிகாரபூர்வமான அரசியல் வடிவமைப்பிற்குள் வேறு மாற்றத்திற்கு வழியில்லை என்ற நிலை, சோசலிச சமத்துவக் கட்சிப் பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. விவாதங்களை ஒடுக்கிவிட்டு, தேர்தல் பிரச்சாரத்தை வெற்று "ஒலிக் குவியலின்" பரிமாற்றமாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி விட்ட முழு அதிகார நடைமுறைக்கும் எதிராக, நாம் சாதாரண மக்களை எதிர்நோக்கியுள்ள அனைத்து முக்கியப் பிரச்சினைகளும் மிகப் பரந்த விவாதங்களுக்கு உட்படுவதை ஊக்குவிக்க விரும்புகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய பிரச்சாரத்தின் தன்மை கருத்துகளைப் பற்றியதே ஒழிய, வெறும் வாக்குகளைப் பற்றியது அல்ல. மற்ற பெரிய கட்சிகளைப் போல் அன்றி, எங்களுடைய நோக்கங்களையும் இலக்குகளையும் நாங்கள் மறைக்கவில்லை. ஒரு சோசலிச மூலோபாயத்தை அடிப்படையாகக் கொண்டு, இரு கட்சி முறையில் இருந்து அடிப்படையாக அரசியலில் முறித்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துவதுடன், சலுகைகள் நிறைந்த சிலருடைய இலாபங்களுக்காக என்று இல்லாமல், பெரும்பான்மையான மக்களின் சமுதாயத் தேவைகளுக்காக சமூகத்தை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும் என்று நாங்கள் வாதிடுகிறோம்.

உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களை பொது சோசலிச மூலோபாய அடிப்படையில் இணைக்கப்பதே எங்களுடைய வேலைதிட்டத்தின் முக்கிய பகுதியாக இருக்கிறது. சர்வதேசியம் என்பது அற்பமான ஒரு கற்பனாவாத கருத்தியல் அல்ல, அது ஓர் உடனடியான நடைமுறைத் தேவையாகும். இராணுவவாத எழுச்சியை எதிர்த்து நிற்றல் அல்லது பூகோள பெரு நிறுவனங்களின் சூறையாடும் செயற்பாடுகளை எதிர்த்து நிற்றல் இவற்றிற்கு தேசிய தந்திரங்களின் பயனற்ற தன்மையை ஏற்கனவே பலரும் உணர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு ஈராக்கியப் போருக்கு எதிராக நிகழ்ந்த முன்கண்டிராத கண்டனங்கள், இந்த சர்வதேச ஒற்றுமைக்காகப் பாடுபடவேண்டிய இன்றியமையாத தன்மையை வெளிப்படுத்தியது மட்டும் இல்லாமல், ஐரோப்பாவில் உள்ள அமெரிக்காவின் போட்டி நாடுகளின் அரசாங்கங்கள் அல்லது ஐ.நா. போன்ற நிறுவனங்களை நம்புவதின் பயனற்ற தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளன. தொழிலாள வர்க்கம் பூகோள ரீதியாக திருப்பித் தாக்குவதை நடத்துவதற்கு புதிய அமைப்புக்கள் தேவைப்படுகின்றன என்பதோடு, சமூக சமத்துவமின்மை, போர்--- இவற்றின் அடிப்படைக் காரணங்களான முதலாளித்துவ இலாப முறையை முற்றிலும் தகர்ப்பதற்குத் தேவையான, நன்கு திட்டமிடப்பட்டுள்ள அரசியல் முன்னோக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக தேவைப்படுகிறது.

சர்வதேசிய போராட்டம்தான் எங்களுடைய முக்கியமான பணி என்று நாங்கள் கருதுகிறோம். சோசலிச சமத்துவக் கட்சியின் ஆஸ்திரேலியத் தேர்தல் பிரச்சாரம், அதன் ஆசிய, வட அமெரிக்க, ஐரோப்பிய சகோதரக் கட்சிகளுடன், சேர்ந்து ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உலகந்தழுவிய இயக்கத்தை அமைப்பதற்கான வேலைதிட்ட அடிப்படையை நிறுவ முற்படுகிறது - இத்திட்டம் தேசியவாதம், பேரினவாதம் மற்றும் மதம், இனம், உட்பிரிவுகள், பால் வேறுபாடு என்ற வகைகளில் எத்தகைய தனித்த முறையிலாவது வேறுபாட்டைக் காணும் அரசியல் வடிவங்களை முற்றிலும் நிராகரித்து, சமுதாயத்தை புரட்சிகரமாக மாற்றுவதற்கு போராடுவதாகும். இத்தகைய போராட்டத்தின் இன்றியமையாத முன் நிபந்தனை, முதலாளித்துவ பாராளுமன்ற அரசியலின் கட்டமைப்பிலிருந்து தொழிலாள வர்க்கம் முழுமையாக சுயாதீனம் அடைவதற்கான போராட்டமே ஆகும். ஹோவார்ட் அரசாங்கத்திற்கு, தொழிற்கட்சி அல்லது பசுமைகள் "குறைந்த தீமை" யைப் பிரதிபலிப்பவை என்ற கருத்தை நாங்கள் அழுத்தமாக நிராகரிக்கிறோம். உழைக்கும் மக்களுடைய நலன்களை ஆஸ்திரேலியாவிலோ உலகின் வேறு பகுதியிலோ முன்னேற்றுவிப்பதற்கு இந்த தேர்தல் எவ்விதத்திலும் உதவாது. எனவேதான் "முன்னுரிமை பேர" நலன்களைக் காணும் வகையில் எவ்விதமான உடன்பாட்டையும் நாங்கள் கொள்ள விரும்பவில்லை.

இத்தகைய மாற்றம் தேவை என்று அங்கீகரிக்கும் அனைவருக்கும், நாங்கள் சோசலிச சமத்துவக் கட்சியுடன் தொடர்பு கொள்ளுமாறும், எங்கள் பிரச்சாரத்தில் பங்கு பெறுமாறும், சோசலிச சமத்துவக் கட்சியின் கொள்கைகளை பரப்பும் வகையில் எங்கள் தேர்தல் அறிக்கைகளை உங்கள் பகுதியில் விநியோகிக்குமாறும் அழைப்பு விடுகிறோம்.

அமெரிக்க இராணுவவாதமும் ஈராக்கியக் போரும்

ஈராக்கின் மீதான அமெரிக்கப் போர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். 1920, 1930 களுக்குப் பின்னர் உலகம் இவ்வாறு ஒரு முழுநாட்டையும் அதன் இயற்கை வளங்களையும் கைப்பற்றும் வகையிலான அப்பட்டமான முயற்சியைக் கண்ணுற்றதில்லை. "முன்கூட்டி தாக்கும் போர்" என்னும் புஷ் நிர்வாகத்தின் கோட்பாடும், அதன் இரக்கமற்ற முறையில் மாபெரும் இராணுவ வலிமை பயன்படுத்தப்படுதலும், நாஜி ஆட்சியின் பிரச்சாரம், வழிவகைகள் ஆகியவற்றை பாரியளவில் ஒத்துள்ளது, அந்த ஆட்சி ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் வரலாற்று வலிமையற்ற நிலையைக் கடப்பதற்கு உலகத்தைக் கைப்பற்றுதல் என்ற மூலோபாயத்தில் மேற்கொண்டிருந்தது.

செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதில் அளிக்கும் முறையில் ஆப்கானிஸ்தான், ஈராக்கியப் படையெடுப்புக்கள் நடைபெற்றன எனச் சித்தரிக்கும் வகையில் புஷ்ஷும் செய்தி ஊடகமும் முயன்றுள்ளன. ஆனால் பரந்த முறையின் அமெரிக்கச் செயற்திட்டமான, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா இவற்றின் எண்ணெய் வளம் நிறைந்த பிராந்தியங்களில் அமெரிக்க ஆதிக்கம் என்ற திட்டமும், ஈராக்கைக் கைப்பற்றுதல் என்பதும் பத்து ஆண்டுகாலமாகவே அமெரிக்காவின் திட்டத்தில் உள்ளன. 1991ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் பொறிந்ததில் இருந்தே, அதனுடைய போட்டி நாடுகள் பிடிப்பதற்கு முன்னரே வாஷிங்டன் தன்னுடைய இராணுவ மேலாண்மையைப் பயன்படுத்தி அமெரிக்க பூகோள மேலாதிக்கத்தை ஸ்தாபித்தல் அவசியம் என்று வெள்ளை மாளிகையில் இப்பொழுது பொறுப்புள்ள அதி தீவிர வலது-சாரிப் பிரிவினர் கூச்சலிட்டு வந்துள்ளனர். செப்டம்பர் 11 சோக சம்பவங்களை சுரண்டிக்கொண்டு தன்னுடைய நீண்ட நாள் திட்டங்களை நடைமுறைப் படுத்த புஷ் நிர்வாகம் இழிமுறையில் இறங்கியது.

ஈராக்கியப் படையெடுப்பு பொய்களின் அடிப்படையில் அமைந்தது ஆகும். பேரழிவு ஆயுதங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை, சதாம் ஹுசைனின் மதச் சார்பற்ற அரசிற்கும் அல் கொய்தாவிற்கும் இடையே தொடர்பு இருந்ததாக எந்த நிரூபணமும் ஆகவில்லை. மலர்கள் தூவப்பெற்று, மகிழ்ச்சி நிலையில் அமெரிக்க இராணுவம் ஈராக்கால் வரவேற்கப்படவில்லை. பாக்தாத்தில் நிறுவப்பட்டுள்ள அரசாங்கம் "ஜனநாயகமானதல்", இது அமெரிக்க இராணுவம், போலீஸ்-அரசு முறை இவற்றை சார்ந்து, ஈராக்கிய மக்கள் தங்கள் நாட்டின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் பெருகிக் கொண்டுள்ள எழுச்சியை அடக்கும் தன்மையை முற்றிலும் கொண்டுள்ள, நியமிக்கப்பட்டுள்ள கைப்பாவை அரசாங்கமே ஆகும்.

வாஷிங்டனுடைய கொள்ளைக்கூட்டத்தன்மை ஒரு தனிநபரான புஷ் அல்லது வெள்ளை மாளிகை வலதுசாரியின் சதி செயல்களின் விளைவு மட்டும் அல்ல. மாறாக, அமெரிக்க முதலாளித்துவத்தின் தீர்க்கப்பட இயலாத பொருளாதாரச் சமூக முரண்பாடுகளில் இருந்துதான் இவை எழுந்துள்ளன. இறுதி ஆய்வில், இது பூகோள-ரீதியாக ஒன்றிணைக்கும் உலக பொருளாதாரத்திற்கும் உலகம் தேசிய அரசுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள அடிப்படை முரண்பாடுகளைக் கடக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாட்டின் ஆதிக்கம், அதாவது அமெரிக்காவின் ஆதிக்கம் உலகம் முழுவதும் நிறுவப்படவேண்டும் என்ற தன்மையுடைய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வன்முறை வெடிப்பின் முயற்சியே ஆகும்.

"நீங்கள் எங்களுடன் உள்ளீர்கள், அல்லது எங்களுக்கு எதிராக உள்ளீர்கள்" என்ற புஷ்ஷின் உலகத்திற்கான இறுதி எச்சரிக்கை, ஒருதலைப்பட்சமாக அமெரிக்க நலன்களை மேற்கொள்ளுதல், அதன் விளைவுகளைப் பற்றிப் பொறுப்பற்ற தன்மையின் அலட்சியப்போக்கு என்ற அமெரிக்க நிர்வாகத்தை சுருக்கமாகக் கூறியிருக்கிறது. அனைத்து அரசாங்கங்களும் தங்கள் மூலோபாயங்களையும், கூட்டணிகளையும் மறு மதிப்பீடு செய்ய இது கட்டாயப்படுத்தியுள்ளது. தன்னுடைய ஆசிய, ஐரோப்பிய போட்டியாளர்களின் முக்கிய மூலோபாய, பொருளாதார நலன்களை வாஷிங்டன் காலில் போட்டு மிதிக்கும் அதேநேரத்தில், மற்றும் ஒரு ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான பாரியவிளைவுகளை கொண்ட மோதலுக்கும் விதைகளை தூவி விடப்பட்டுள்ளன.

நவம்பர் மாதம் புஷ் தோற்கடிக்கப்பட்டாலும், அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் வளைவரை பாதையில் (போக்கில்) அடிப்படையான மாற்றம் ஏதும் இருக்காது. ஜோன் கெர்ரியின் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் நிர்வாகம் அமெரிக்கப் படைகளை ஈராக்கில் இருந்து திரும்பிப் பெறாது. ஈராக்கியப் போருக்காகக் கெரி வாக்களித்துள்ளதோடு, அந்நாட்டில் அமெரிக்கா தோல்வியடைவது என்பது "நினைத்தும் பார்க்கமுடியாதது" என்றும் பலமுறையும் அறிவித்துள்ளார். புஷ்ஷைப் பற்றி அவர் என்ன குறைகளைக் கூறினாலும், தந்திரோபாய தன்மையில்தான் அவருடைய கருத்துவேறுபாடுகள் இருக்கும். முந்தைய ஜனநாயக வேட்பாளர் ஹோவார்ட் டீன் கூடுதலான அளவிற்கு போரெதிர்ப்பு உணர்வுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற கருத்தையொட்டி ஆளும் செல்வந்த தட்டால் அதை மாற்றும் வகையில் மிக நேர்த்தியான வகையில் கையாளப்பட்ட அகற்றும் பிரச்சார முறை அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதின் விளைவுதான் கெர்ரி ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளாராக ஜனநாயகக் கட்சியால் நிறுத்தப்பட்டார்.

ஓர் அமெரிக்கத் தேர்தல் நடைபெறுமா என்பதுகூட உறுதியில்லை. அமெரிக்க இராணுவவாதம் வெளிநாடுகளில் மேற்கொண்டதின் ஒரு விளைபயனாக அமெரிக்காவிற்குள்ளேயே ஒப்பிட்டுப் பார்க்கமுடியாதளவு ஜனநாயக உரிமைகளின்மீதான தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. சித்திரவதைக்கு உட்படுத்துதல், ஒருதலைப் பட்சமான வகையில் விசாரணையின்றிச் சிறையில் அடைத்தல் என்பவை உட்பட, ஒரு போலீஸ் அரசாங்க நடவடிக்கைகள் என்றுதான் கூறக் கூடிய வகையில், "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற கருத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலாளித்துவ ஜனநாயக கட்டமைப்பிற்குள் அடக்க முடியாத வகையில் அமெரிக்காவிற்குள் செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே பெருகியுள்ள சமுதாயப் பிளவினால் விளைந்துள்ள மிகத் தீவிரமான நெருக்கடிகளில்தான் இந்தப் போக்குகள் வேரூன்றியுள்ளன.

ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பையும், இந்த முழுமையான குற்றம் சார்ந்த நடவடிக்கையின் ஹோவார்ட் அரசாங்கத்தின் பங்குகளையும் சோசலிச சமத்துவக் கட்சி கண்டனத்திற்கு உட்படுத்துகிறது. ஆஸ்திரேலிய, அமெரிக்க, வெளிநாட்டு துருப்புக்கள் அனைத்தும் உடனடியாக நிபந்தனையற்ற முறையில் திரும்பப் பெறவேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம். ஆப்கானிஸ்தான், ஈராக் படையெடுப்புக்களில் கைதுசெய்யப்பட்டவர்கள், இதையொட்டி குவாண்டநாமோ வளைகுடா, டீகோ கார்சியா மற்றும் பல அமெரிக்கச் சிறைகளிலும், உலகெங்கிலும் காவல் முகாம்களில் வாடும் கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்.

புஷ், பிளேயர், ஹோவார்ட் உட்பட, ஆப்கானிஸ்தான், ஈராக் இவற்றிற்கெதிரான தூண்டுதல் அற்ற படையெடுப்பை மேற்கொண்ட அனைவரும் போர்க்குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கோருகிறோம். போரின் பாதிப்பினால் அவதிக்குள்ளாகியுள்ள ஈராக்கிய மக்களுக்கு இழப்பீட்டுத் தொகையைக் கூட்டணி வல்லரசுகள் கொடுக்கவேண்டும் என்று கோருவதுடன் கூட்டு நாடுகளைச் சேர்ந்த கொல்லப்பட்ட, காயமுற்ற வீரர்களின் குடும்பங்களுக்கும் தக்க இழப்புத் தொகையைக் கொடுக்கவேண்டும் என்றும் கோருகிறோம். பெரும் வல்லரசுகளின் இராணுவ இயந்திரம் அகற்றப்படவேண்டும், அணுவாயுதக் கிடங்குகள் அழிக்கப்படுதல், பேரழிவு ஆயுதங்களைத் தகர்த்தல், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க, மற்ற நாடுகளுடைய வெளிநாடுகளிலில் நிறுவப்பட்டுள்ள இராணுவத் தளங்களும் நீக்கப்படவேண்டும் என்றும் கோருகிறோம். மிகப்பெரிய பூகோள இராணுவ சாதனங்கள், அவற்றின் போரிடும் ஆற்றல் கொண்ட தொழில் நுட்பம் ஆகியவை சமுதாயத்திற்கு பயன்படக்கூடிய உற்பத்தி முறைக்கு உபயோகிக்கப்படவேண்டும் என்றும் கோருகிறோம்.

ஆஸ்திரேலியாவும் பசுபிக்கும்

புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான போருக்கு" ஹோவார்ட் அரசாங்கம் கொடுக்கும் ஆதரவில் ஒரு முக்கிய காரணம் ஆசிய-பசிபிக் பகுதியில் ஏகாதிபத்திய அரசுகளிடையே உள்ள போட்டி கூர்மையடைந்துள்ளதாகும். 19ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்தே-----1901ம் ஆண்டு ஆஸ்திரேலியத் தேசிய-அரசு தோற்றுவிக்கப்படும் முன்பே, ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கம் தன்னுடைய இயல்பான வலுவற்ற இராணுவ தன்மையைக் கடக்கும் வகையில், தான் பசிபிக் பகுதியில் தன்னுடைய பேரவாக்களை அடைவதற்கும், மூலோபாய, இராஜதந்திர வகையிலான உதவிகளை உலகின் ஆதிக்கம் செலுத்தும் வல்லரசிற்கு அளித்து வந்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு, ஆஸ்திரேலியா பிரிட்டனையும், பிரிட்டிஷ் பேரரசையும் அத்தகைய நோக்கத்துடன் பார்த்தது. 1860களில் நியூசிலாந்தில் தோன்றிய மெளரி (Maori) எழுச்சியை அடக்க உதவுவதற்கும், சூடானில் 1885 இல் பிரிட்டனின் அதிரடிப்படைகளுக்கு உதவுவதற்கும், 1889 லிருந்து 1902 வரை தென்னாபிரிக்காவில் நடைபெற்ற போரில் (Boer War) பிரிட்டிஷ் படைகளுக்கு உதவியாகவும், சீனாவில் 1900 நடைபெற்ற பொக்சர் எழுச்சியை (Boxer Rebellion) நசுக்குவதற்கும், ஆஸ்திரேலிய காலனித்துவ படைகளை அனுப்பிவைத்து உறுதுணையாக இருந்தனர். இதற்குப் பிரதிபலனாக பசிபிக்கில் இவர்கள் காலனித்துவத்தைக் கையாள்வதற்கும், 1884ம் ஆண்டு பாப்புவாவை இணைத்துக் கொள்ளுவதற்கும், முதல் உலகப் போருக்குப் பின்னர் ஜேர்மனிய நியு கினியப் பகுதியை ஆஸ்திரேலியக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் பிரிட்டிஷாரின் முழு ஆதரவு கிடைத்தது.

இரண்டாம் உலகப் போரின் நடுவில், ஜப்பானியரின் தாக்குதலில் 1942ல் சிங்கப்பூர் வீழ்ச்சியுற்று, பிரிட்டனால் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு மேற்கொள்ளப்பட முடியவில்லை என்ற நிலையில், ஆஸ்திரேலிய ஆளும்வர்க்கம் அமெரிக்காவை நோக்கி திரும்பியது. தன்னுடைய பூகோள-அரசியல் நலன்களை பாதுகாக்க, அமெரிக்க கூட்டணியை இப்பொழுது அது நோக்குகிறது. இதற்குப் பதிலாக, ஆஸ்திரேலியப் படைகளை, அமெரிக்கப் படைகளுக்கு உதவும் வகையில் 1950களில் கொரியாவிற்கும், 1960களில் வியட்நாமிற்கும் அனுப்பி வைத்தது. ஆனால் கடந்த இரு தசாப்தங்களில், ஆளும் வர்க்கம் இருதலைக் கொள்ளிபோல் தவிக்கிறது; இராணுவ, மூலோபாய முறைகளைப் பொறுத்தவரையில் வாஷிங்டனின் தயவை நம்பியிருக்கும் நிலையில், அதனுடைய வர்த்தக பொருளாதார நலன்கள் பெருகிய முறையில் ஆசியாவுடன் பிணைந்துள்ளன.

குளிர்யுத்தம் முடிந்த பின் பெரிய சக்திகளிடையே நெருக்கடிகள் தீவிரமடைந்ததை ஒட்டி இதை நேர்த்தியான சமன்படுத்தும் பணி கூடுதலான முறையில் பாதிப்பிற்குள்ளாயிற்று. ஒரு புறத்தே, ஓரளவு சிறு நாடுகளில் இருந்துகூட வரும் பிராந்திய நிலைப்பாட்டை சவால்களை எதிர்கொள்ள, அமெரிக்க ஆதரவு தனக்குத் தேவை என்பதை ஆஸ்திரேலிய ஆளும் செல்வந்த தட்டு நன்கு உணர்ந்துள்ளது. மறு புறத்தே, ஆஸ்திரேலிய, அமெரிக்க நலன்கள் எப்பொழுதுமே இயைந்து நிற்கும் என்று கூறுவதற்கு இல்லை. பிரச்சனைக்குரிய சீனாவின் விடயத்தில் வெளிப்பட்டுள்ளதுபோல் இது வேறு எதிலும் தெளிவாக வெளிப்படவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில், மிகப்பெரிய அளவில் அயல் மூலதன பாய்ச்சலினால் சீனா "உலகத்தின் தொழிற் பட்டறையாக" மாற்றப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியப் பொருளாதாரம் இதனால் முக்கிய நன்மைகளைக் கண்டுள்ளது; ஏனெனில் இது சீனாவிற்குத் தேவையான மூலப்பொருள் தேவையினால் இலாபத்தைக் காண்கிறது. ஆனால் அமெரிக்காவில் உள்ள மிகத் தீவிர வலதுசாரியினர், எவ்வாறாயினும், சீனாவை ஆபத்து நிறைந்த வருங்காலப் போட்டி நாடு என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே உறவில் ஏதேனும் பதட்டங்கள் பெருகுமேயானால்,-- உதாரணத்திற்கு தைவான், வட கொரியா அல்லது வேறு பிரச்சினையாயினும் --அது கான்பெராவை சீனா, அமெரிக்கா இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு செய்துவிடும்.

1996ல் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து, ஹோவார்ட் அனைத்து வெளியுறவுக் கொள்கைகளிலும் அமெரிக்க கூட்டணியின் முதன்மை இடத்தை வலியுறுத்தி வந்துள்ளார். அமெரிக்க வங்கி, மற்றும் பெரு நிறுவனங்களின் துண்டுதலின் விளைவாகத் தோன்றிய, 1997-98 ஆசிய நிதி நெருக்கடியைத் தொடர்ந்து, இந்தோனேசியாவில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற தன்மையை சுரண்டிக்கொண்டு, ஆக்கிரோஷமான முறையில் அந்த பிராந்தியத்தில் ஹோவார்ட் தலையிட்டார். கிழக்கு தீமோரின் நெருக்கடி தீவிரமடைந்ததை அடுத்து, ஹோவார்ட் வியட்நாமிற்குப் பிறகு மிக அதிகமான படைகளை அமெரிக்கா அனுப்பவேண்டும் என்பதற்கு பிரச்சாரம் செய்தார், அப்பொழுதுதான் தீமோர் கடல் எண்ணெய், எரிவாயு இருப்புக்கள் ஆகியவை ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதற்கான உறுதியை, இதன் போட்டியாளர்களுக்கு எதிராக, அதுவும் குறிப்பாக போர்த்துக்கலுக்கு எதிராக வழங்க முடியும் என்று இவர் வாதிட்டார். இந்த இராணுவத் தலையீட்டை கிழக்கு தீமோர் மக்களுடைய துயரங்களுக்கு விடிவு காண்பதற்கான "மனிதாபிமானச் செயல்" என்று அரசாங்கம் மோசடியான முறையில் நியாயப்படுத்தியது, சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவும் நேட்டோவும் கொசவோ மக்களுக்குத் தொண்டு என்ற பெயரில் யூகோஸ்லேவியா மீது குண்டுவீச்சு நடத்தியதை நியாயப்படுத்தியதை ஒத்ததுதான் இச்செயலும் ஆகும்.

இந்த நவீன-காலனித்துவ செயலில் கண்ட "வெற்றியை" அடுத்து, ஹோவர்ட் ஒரு புதிய "கோட்பாட்டை" வெற்றிக் களிப்புடன் வரையறுத்தார்; இதன்படி ஆஸ்திரேலியா, ஆசிய-பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் "துணைக் காப்பாளர்" என்ற முறையில் நடந்துகொள்ளும் என்பதேயாகும் அது. ஆசியப் பகுதி முழுவதும் விளைந்த சீற்றமான ஆர்ப்பாட்டங்களை அடுத்து, பின்வாங்கும் வகையில் பொது அறிக்கையை வெளியிடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டாலும், ஹோவார்ட் தன்னுடைய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரையில் இந்தக் "கோட்பாட்டின்பால்" உறுதியான பற்றைக் கொண்டுள்ளார்.

ஈராக்கிய படையெடுப்பை தொடர்ந்து உடனடியாக, பசிபிக் பகுதியில் கான்பெர்ரா தன்னுடைய நடவடிக்கைகளை அதிகரித்தது. சொலோமன் தீவுகளை குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் பெரும் பாதுகாப்புடன் வாழக்கூடிய திறன் கொண்டவை என்று அறிவித்தபின், ஹோவர்ட் அரசாங்கம் தன்னுடைய இரண்டாம் இராணுவ தலையீட்டை அப்பிராந்தியத்தில் மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்தது. போட்டியாளர் பிரான்ஸ் முன்வந்து கொடுத்த "உதவியை" நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் நிராகரித்து தங்களுடைய பசிபிக் பகுதியின் வலுவற்ற அண்டை நாடுகளை மிரட்டும் வகையில் "விருப்பமுடையோர் கூட்டு" என 2,000 போலீஸ், படைவீரர், அதிகாரிகள் தொகுப்பைத் திரட்டி சிறிய தீவு நாட்டின் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றின. கிழக்கு தீமோரைப் போலவே, தீவுகளின் வறிய நிலையில் உள்ள மக்களின் நலன்களைப் பற்றிய அக்கறை ஏதும் நோக்கமாகக் கொண்டவை இல்லை. கடந்த ஓராண்டாக, ஆஸ்திரேலிய நிதி, சிறைகள், போலீஸ், நீதிமன்றங்களுக்கென செலவிடப்படுகின்றதே ஒழிய, பாடசாலைகள் மற்றும் மருத்துவ மனைகளுக்காக அல்ல. இம்முறையின் நன்மைகளை அதிகம் பெறுபவை பெரும் ஆஸ்திரேலிய நிறுவனங்களான GRM International போன்றவையாகும்; இது சிறைத் துறையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. இது ஆஸ்திரேலியாவிலேயே மிகப் பெரும் செல்வந்தரான கெரி பாக்கரின் நிறுவனமாகும்.

கிழக்கு தீமோர், சொலோமன் தீவுகள், பரந்த திட்டத்தின் ஒரு பாகமாகும். பாப்புவா நியூகினியா மற்றும் பசிபிக் தீவு நாடுகளான நெளரு போன்றவற்றில் கான்பெரா இப்பொழுது தன் பார்வையைத் திருப்பி உள்ளது; உதவித் தொகைகளைக் வெட்டிவிடுவோம் என்ற மிரட்டல் முறைமூலம் பிராந்திய அரசாங்கங்கள் தங்கள் நலன்களை ஆஸ்திரேலியப் பொருளாதார, நிர்வாக மற்றும் இராணுவ ஆதிக்கத்திற்கு உட்படுத்தும் முயற்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.

எவ்வாறாயினும், ஆஸ்திரேலிய ஆளும் வட்டங்களுக்குள் ஹோவர்டின் வெளியுறவுக் கொள்கைக்கு ஏக மனதான ஆதரவு இல்லை. ஆஸ்திரேலியப் பெருநிறுவன நலன்களைப் பொறுத்தவரை, வாஷிங்டன் கொண்டுள்ள ஒருதலைப்பட்ச முறையின் உட்குறிப்புக்களைப்பற்றி, அதிலும் குறிப்பாக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், குறிப்பிடத் தகுந்த தட்டுக்கள் ஆழ்ந்த கவலையைக் கொண்டுள்ளன. கட்சியின் பழைய தலைவர் ஜோன் வால்டெர், பழைய பிரதம மந்திரி மால்கோம் பிரேசர் போன்ற தாராளவாத கட்சியிலேயே முக்கியமான நபர்கள், வெளிப்படையாகவே ஹோவார்டை எதிர்த்து, வெளியுறவுக் கொள்கையில் கூடுதலான சுதந்திரத் தன்மையைக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஈராக்கின் புதைசேறு கூடுதலான முறையில் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சிப் பிரிவைக் கடந்த இந்த நெருக்கடிகள், இராணுவம், பொதுப் பணித் துறை, நீதித் துறை என்று முழு அரசாங்கக் கருவியிலும் படர்ந்து, தீவிரமும் அடைந்துள்ளன.

ஆனால் ஹோவர்டை எதிர்க்கும் எந்தப் பிரிவும் இப்பிராந்தியத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கம்தான் இந்தப் பொறுப்பை தோளில் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவேதான் கான்பெராவின் நவீன-காலனித்துவத் தலையீடுகளை சோசலிச சமத்துவக் கட்சி ஐயத்திற்கிடமின்றி எதிர்ப்பதோடு, கிழக்கு தீமோர், சொலோமன் தீவுகள், மற்றும் அப்பகுதியில் உள்ள பிற பிராந்தியங்களில் இருந்தும் ஆஸ்திரேலிய, மற்றும் வேறு வெளி நாடுகளின் படைகளும் போலீசும் உடனடியாகத் திருப்பப் பெற வேண்டும் என்றும் கோருகிறது.

இப்பொழுதுள்ள நிலைக்குப் பதிலாக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒன்றிணைப்பை அடிப்டையாகக் கொண்ட ஒரு சோசலிச வெளியுறவுக் கொள்கை தேவை என்ற கருத்தை நாங்கள் முன்மொழிகிறோம். "மூன்றாம் உலக" மக்களைச் சுரண்டுவதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் தொழிற்துறையில் முன்னேறியுள்ள நாடுகளின் வளங்களும் தொழில் நுட்பமும் பயன்படுத்தப்படக் கூடாது; அவை அனைத்து உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், மக்கள் கெளரவமான வாழ்க்கைத் தரத்தைக் அடைவதற்கும், உலக வரலாற்றில் முதல் தடவையாக, உண்மையான சமூக சமத்துவத்தை ஏற்படுத்தும் நிலைமையைக் கொள்ளுவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.

எதிர் சூழ்ந்துள்ள பொருளாதார நெருக்கடி

ஆஸ்திரேலிய ஆளும் வட்டாரத்திற்குள் உள்ள பிளவுகள், கூடுதலான முறையில் ஆபத்திற்கு உட்பட்டுள்ள ஆஸ்திரேலியப் பொருளாதார நிலையினாலும் கொழுந்துவிட்டு எரிகின்றன. கடந்த எட்டு ஆண்டுகளாக, ஹோவார்ட் அரசாங்கம், தன்னுடைய நிலையை "பொருளாதாரத்தைத் தேர்ந்த முறையில் கையாளுபவர்கள்" என்று உயர்த்திக் கொண்டும், ஆசிய நிதி நெருக்கடியை நாடு சமாளிக்கமுடிந்தது தங்கள் ஆற்றலினால் என்று இறுமாப்பு பேசியும், இடை விடாமல் ஒரே மந்திரமான "அனைத்து அடிப்படைகளும் உறுதியாக உள்ளன" என்று கூறிக் கொண்டு வருகிறது. ஆனால் கூடுதலான கவனத்தைக் கொண்டுள்ள பொருளாதார நிலை விமர்சகர்கள், சிறப்பான பொருளாதாரப் புள்ளி விவரங்கள், மற்றும் ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தின் தோற்ற உயர்வு சீட்டுக் கட்டுக் கட்டிடத்தின் நிலையில்தான் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

20 ஆண்டுகளாக பொருளாதார மறுசீரமைப்பிற்கு பின்னர், இன்னும் கூடுதலான முறையில் ஆஸ்திரேலிய பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்துடன் நெருக்கமாக இணைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) உடைய சதவிகிதத்தில் வர்த்தகம் 1980களின் தொடக்கத்தைவிட இருமடங்காகி உள்ளது, அதாவது கிட்டத்தட்ட 27 சதவிகிதத்தில் இருந்து 44 சதவிகிதமாகியுள்ளது. இதே காலக் கட்டத்தில், ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்திற்கு 17 லிருந்து 30 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து பாயும் முதலீடு, சொத்துச் சந்தைகளில் காணப்படும் செழுமைகளை சாதகமாக பயன்படுத்தி, கூடுதலானளவில் அமெரிக்காவிற்கும், பொதுவாக ஆஸ்திரேலியாவிற்கு வெளியேயும் சென்றுள்ளது.

ஆஸ்திரேலியாவின் தேசியப் பொருளாதார நெறிமுறையின் உடைவு உலகப் பொருளாதாரத்தினுள் இயங்கிக் கொண்டிருக்கும் ஆழமான போக்கின் ஒரு உபவிளைவாகும். 1970களின் பொருளாதார, அரசியல் எழுச்சிகளும், குறைந்து வந்த இலாப விகிதங்களும், பெரிய முதலாளித்துவ மையங்களில் உள்ள பெரிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியைக் கடல் கடந்து கொண்டுசென்றன. ஏனெனில் அவ்வகையில் மூலப் பொருட்களும், தொழிலாளர் ஊதியமும் குறைவான விலைக்கு கிடைப்பதால், இலாபம் பெருகும். ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தை வலுப்படுத்துவதற்கு பதிலாக, உற்பத்தி முறையில் உலகந்தழுவிய தன்மை, உலகப் பொருளாதாரத்தின் உறுதியற்ற தன்மைகளுக்கு இது இரையாகக் கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள அனைத்து மாறுதல்களும் ஒரு புறம் இருக்க, ஆஸ்திரேலியா மிக அதிகமான முறையில் மூலப் பொருட்களை, குறிப்பாக வட கிழக்கு ஆசியாவிற்கு ஏற்றுமதி செய்வதை நம்பவேண்டி உள்ளது. சீனாவிலோ, இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த முறையில், ஆசிய ஏற்றுமதிகளின் இறுதியிடமான அமெரிக்காவிலோ ஏதேனும் சரிவு நிலை ஏற்படுமாயின், அது ஆஸ்திரேலிய பொருளாதாரத்தின்மீது திருப்பித் தாக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.

ஆஸ்திரேலிய பொருளாதாரத்தின் வெளிப்படுத்தப்பட்ட தன்மை இன்னும் கூடுதலான முறையில் அது எவ்வாறு மலைபோன்ற கடன்களில் ஆழ்ந்துள்ளது என்பதால் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. கடந்த இரு தசாப்தங்களில், மொத்த வெளிநாட்டுக் கடனான 19 பில்லியன் டாலர், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதத்திலிருந்து 517 பில்லியன் டாலர் அல்லது 74 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. வெளிநாட்டுக் கொடுக்கவேண்டிய தொகை (மொத்தக்கடனும், வெளிநாட்டவரின் உரிமைச் சொத்து மதிப்பும் சேர்ந்தது) இப்பொழுது ஒரு டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகப் போய்விட்டது. இந்த மாபெரும் கடன்களுக்கு வட்டி கொடுப்பதற்குக் கூட ஒரே வழி, தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டும் விகிதத்தை இன்னும் அதிகரிப்பதாகத்தான் உள்ளது.

ஆஸ்திரேலியாவின் வளர்ச்சி விகிதங்கள், ஹோவார்ட் மற்றும் அவருடைய மந்திரிகளின் திறைமையின் விளைவினால் ஏற்பட்டுவிடவில்லை. மாறாக, அமெரிக்கா, பிரிட்டன் போன்றே, குறைந்த வட்டி விகதங்கள் நிலச்சொத்துக்கள் மதிப்பை வளர்த்து, நுகர்வோர் செலவினக் குமிழ் மேம்போக்காகப் பார்த்தால் பொருளாதார செழிப்பு இருப்பது போல் தோற்றம் அளிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், வங்கிகளும், மற்ற நிதி நிறுவனங்களும் 82 பில்லியன் டாலர் வணிகத்திற்கும் 345 பில்லியன் டாலர் வீட்டுப் பொருட்களுக்கும் நிகராக வழங்கியுள்ளன. 1998 லிருந்து 2003 வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீட்டுச் செலவு விகிதம் மாபெரும் வகையில் 39 சதவிகிதத்திற்கு உயர்ந்தது--- இது பிரிட்டன், அமெரிக்கா என்ற "ஆங்கில-சாக்சன் கடன் அதிசயத்தை" விட இருமடங்காகும்.

ஆனால் எச்சரிக்கை மணிகள் ஏற்கனவே அடிக்க தொடங்கிவிட்டன. லண்டனை தளமாகக் கொண்டுள்ள Economist சஞ்சிகை, மே மாதத்தில், "1990 களில் குறைந்துவிட்ட நிலையில் இருந்த ஆஸ்திரேலியாவின் இருப்புக் கணக்குப் பற்றாக்குறை மீண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதம் என உயர்ந்துள்ளது; இது அமெரிக்காவினுடையதை விட அதிகமாகும். நுகர்வோர் செலவினம் வருமானத்தைவிட விரைவாகப் பெருகிவிட்டதால், மக்களின் சேமிப்பு வீழ்ச்சியடைந்துவிட்டது. ஆஸ்திரேலியாவில் இப்பொழுது எதிரிடை சேமிப்பு விகிதம்தான் இருக்கிறது. இல்லங்கள் மிக அசாதாரண முறையில் கடன் வாங்கும் முறையைக் கொண்டு, கடந்த பத்து ஆண்டுகளில் அமெரிக்காவை விட இருமடங்கு கடன்கள் அதிகரித்துள்ளன. ஆஸ்திரேலிய செழுமை நிலைக்கு நடு-இரவு அடிப்பதைக் கடிகாரம் காட்டுகிறது; கீழே சரியும் நாட்கள் அதிக தூரத்தில் இல்லை என்பது புலனாகிறது" என எச்சரித்துள்ளது.

இதேபோல், Melbourne Age பத்திரிகை மிகுந்த கவலையுடன் ஜூன் மாதம் பின்வருமாறு குறிப்பிட்டது: "வெளிநாடுகளில் இருந்து, முதலீடு செய்வதற்கு என்று இல்லாமல், வீடுகளின் விலைகளை உயர்த்துவதற்கும், நுகர்வோர் செலவினங்களை அதிகரிப்பதற்கும்தான் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம். ...கடன்கள் ஒரு நாள் திருப்பிக் கொடுத்தே தீரப்பட வேண்டும். திருப்பிக் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்ற நினைப்பில் கடன் வாங்குவது கேலிக் கூத்தும், பொறுப்பற்ற தன்மையும் நிறைந்ததாகும். அதே போல்தான் ஆஸ்திரேலியா, ஒவ்வொரு ஆண்டும் கடன்தொகையில் வாழ்ந்து கொண்டே போகலாம் என்று நினைப்பதும் கேலிக்கூத்தும், பொறுப்பற்ற தன்மையும் ஆகும். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பண வரவு நின்றுவிடும், நம்முடைய வாழ்க்கைத்தரம் வீழ்ச்சி அடைந்து விடும், அந்நிலையை நாம் ஏற்க முடியாது."

பொருளாதார வர்ணனையாளர்கள், "நாம்", "நம்முடைய வாழ்க்கைத் தரங்கள்" என்று ஆழ்ந்த நெருக்கடிக்கு அனைவரும் பொறுப்பு போலவும், அனைவரும் தங்கள் தோள்களில் வலியைச் சுமக்க வேண்டும் என்பது போலவும் பேசி வருகின்றனர். உண்மையில், சாதாரண மக்கள் தங்களுடைய வாழ்வின் தரம், போக்கு பற்றிய பொருளாதார வழிவகைகள், கொள்கைகள் பற்றி அவர்கள் நிர்ணயிக்கும் வகையில் ஏதும் சக்தியற்று உள்ளனர். ஆனால் ஏதேனும் சரிவு ஏற்படுமேயானால் இந்தச் சுமை முழுவதும் தவிர்க்க முடியாமல் அவர்கள் மீதுதான் சுமத்தப்படும். ஏற்கனவே இருபது ஆண்டுகளாக காட்டுமிராண்டித்தனமான பொருளாதாரச் மறுசீரமைப்பின் அவலத்தினால் அவதியுற்றிருக்கும் சமுதாயத்தில் வலிமையற்ற, பாதிப்பிற்குட்படும் மக்கள்தான் இன்னும் கூடுதலான முறையில் பாதிப்பிற்கு உட்படுவர்.

"ஹோவர்டும் "இனவாதசீட்டும்"

ஆஸ்திரேலியாவின் உறுதியற்ற வருங்காலப் பொருளாதாரம் பற்றி ஏற்கனவே பெருநிறுவனங்களின் நிர்வாகக் குழுவினர் கொண்டுள்ள கவலை, தன்னுடைய "சந்தைச் சீர்திருத்தச் செயற்பட்டியல்" சரிவர நடக்கவில்லை என்ற பெருகிய திகைப்பையும் ஏமாற்றத்தையும் ஆளும் செல்வந்த தட்டிற்குள் மிக அதிகமாகக் கொள்ள வைத்துள்ளது. "சர்வதேச அளவில் போட்டித்தன்மைக்குத்" தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் ஹோவர்ட் தோல்வியுற்றுள்ளார் என்ற கருத்துத்தான் பொதுவாக நிலவி வருகிறது. நிதித் தகவல் பற்றிய ஊடகம், சமுதாய நலன்களுக்காகச் செலவிடப்படும் தொகைகள் குறைக்கப்படவேண்டிய தேவை பற்றியும், Telstra வை முற்றிலும் தனியார்மயமாக்க வேண்டும் என்பது பற்றியும், செய்தி ஊடகத்தின் மீது கட்டுப்பாடுகளைத் தகர்க்க வேண்டும் என்றும், தொழிலாளர்களை விருப்பப்படி வேலைக்கு அமர்த்துக் கொள்ளவது, அகற்றவது என்பது பற்றியும், "பணம் கொடுத்துத்தான்" சுகாதாரம், கல்வி இவற்றைப் பெறவேண்டும் என்ற தேவைகள் பற்றி வாடிக்கையாக எழுதத் தலைப்பட்டுள்ளன.

ஆனால், தங்களுடைய நலன்களுக்கும், அபிலாசைகளுக்கும் முற்றிலும் எதிரிடையாக இருக்கும் வேலைதிட்டங்களுக்கு வாக்காளர்களிடம் இருந்து எவ்வாறு ஆதரவு பெறுவது என்று உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படைப் பிரச்சினையைத்தான் தாராளவாத-தேசிய கூட்டும் எதிர்கொண்டுள்ளது. நீண்ட கால நன்மைகளுக்காகக் குறுகிய காலத்திற்குத் தியாகம் செய்யவேண்டும் என்று கூறுப்படும் என்ற உழுத்துப்போன திட்டத்தை எவரும் இப்பொழுது நம்புவது இல்லை. முழுமையான தடையற்ற சந்தைமுறைக்கு ஆதரவாக வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்திருந்த கடைசி ஆஸ்திரேலிய அரசியல் வாதி தாராளவாத தலைவரான ஜோன் ஹாசன் ஆவார்: இவரோ பொருள்கள், பணிகள் மீது வழங்குதல் வரி (GST) விதிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டதற்காக, தோற்பதற்கே வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட 1993 தேர்தலில் தோற்றுப்போனார்.

கடந்த இருபது ஆண்டுகளில், தாராளவாத, மற்றும் தொழிற்கட்சி அரசியல் வாதிகள், தங்களுடைய செயற்பட்டியலில் இருப்பதை மறைப்பதற்கு பொதுமக்களை ஏமாற்றும் தந்திரத்தை பலவிதமாகவும் கையாள்கின்றனர். ஆனால் இந்த வழிவகைக்கும் உறுதியான வரம்புகள் இருக்கின்றன. பெரும்பாலான மக்கள் இப்பொழுது இரு பெரிய கட்சிகளையும் வெறுப்பதோடு, முழு அரசியல் நடைமுறையில் இருந்தும் தாங்கள் விரோதப்படுத்தப்பட்டுவிட்டதாகத்தான் உணர்வைக் கொண்டிருக்கின்றனர். தேர்தல்கள் எந்தப் பிரச்சினையையும் தீர்க்காதவை என்றும், பாராளுமன்ற சட்டங்கள் அனைத்தும் ஒரு சிறிய, ஆனால் சக்திவாய்ந்த பெருநிறுவனக் செல்வந்த தட்டின் நலன்களுக்காக மட்டும் இயற்றப் படுகின்றன என்பதையும் பெரும்பாலான மக்கள் அறிந்து கொண்டு விட்டனர். கட்டாயமாக வாக்குகள் போடப்படவேண்டும் என்ற முறை மட்டும் இல்லாவிடில், ஆஸ்திரேலியத் தேர்தல்களிலும் வாக்குப் போடாதவர் விகிதம், அமெரிக்கா இன்னும் பல இடங்களில் இருப்பது போல் அல்லது இன்னும் கூடுதலாக உயர்ந்து விடும்.

மில்லியன் கணக்கான மக்கள் ஹோவார்டை எதிர்த்தும், அவருடைய அரசாங்கம் பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று விரும்பினாலும், தொழிற் கட்சிக்கோ அதன் புதிய தலைவர் மார்க் லாதமிற்கோ மக்களிடையே உற்சாகம் இல்லை. 1983 லிருந்து 1996 வரை நடந்த 13 ஆண்டு கால தொழிற்கட்சி அரசாங்கம், உள்ளூர், சர்வதேச முதலாளித்துவத்திற்குத் தான் நம்பகமாக இருப்பேன் என்று நிரூபிப்பதற்குத் தான் எதையும் செய்யத் தயங்காது என்பதைத்தான் தொழிற்கட்சி தெளிவுறவும், உறுதியாகவும் நிரூபித்துள்ளது. றீகன் மற்றும் தாட்சரால் தொடக்கப்பட்ட தடையற்ற சந்தை முறையின் தாக்குதல் அமெரிக்கா, பிரிட்டன் இவற்றில் இருந்ததுபோல் அன்றி, ஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சிதான் பழைய கட்டமைப்பான தேசியப் பொருளாதார நெறிமுறையை தகர்த்து, தொழிற்சங்கங்களுடன் கொண்டிருந்த உடன்படிக்கையின் கீழ், எத்தனையோ தசாப்தங்கள் பாடுபட்டு தொழிலாள வர்க்கம் பெற்றிருந்த வாழ்க்கைத் தர நலன்களை முறித்து அழித்துவிட்டது.

சிறிதும் வெட்கம் கொள்ளாமல் வங்கிகள், பெரு நிறுவனங்கள் இவற்றின் செயல்பட்டியலான "சுதந்திர சந்தைக்கு" ஆதரவைத் தரும் ஹோவார்ட் 1996ம் ஆண்டுத் தேர்தலை வென்றதே, தொழிற்கட்சியின் கொள்கைகளை எதிர்த்துப் "போராடியவர்களின்" தலைவர் என்று தன்னைப் போலியாகக் காட்டிக் கொண்டுதான். ஆனால் பதவிக்கு வந்த பின்னர், அவருடைய அரசாங்கம் உடனடியாக தொழிற் கட்சி அரசாங்கத்தைப் பின்பற்றி, பொதுக் கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி இவற்றின் மீதான செலவினங்களைக் காட்டு மிராண்டித்தனமாகக் குறைத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. அகதிகளைச் சிறையில் அடைத்ததல் இருந்து, பல்கலைக்கழகம், GST இவற்றிற்குக் கட்டணம் வசூலித்ததும், Telstra வைத் தனியார் மயமாக்கியது என்று, இவருடைய அரசாங்கத்தின் ஒவ்வொரு செயலும் தொழிற் கட்சியால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது அல்லது அதனால் ஆரம்பிக்கப்பட இருந்தது.

தன்னுடைய அரசாங்கத்தின் புகழ் கூடுதலாக மங்கத் தொடங்கியவுடன், ஹோவார்ட், தன்னுடைய கொள்கைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்பும் வகையில் புலப்பெயர்ந்தோர், தேசியப் பாதுகாப்பு இவற்றில் உள்ள பாதுகாப்பற்ற நிலை, அச்சங்கள் பற்றி உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் முயற்சியை கொண்டுள்ளார். 2001ம் ஆண்டுத் தேர்தலுக்கு முன்பு, தோல்வியைத்தான் தழுவ வேண்டும் என்றிருந்த நிலையில், இராணுவத்தைப் பயன்படுத்தி, ஆஸ்திரேலியாவிற்குப் "படகின் மூலம் வரும் மக்களை" தடுக்கும் வகையில் செயல்பட்டார். அந்தப் பிரச்சாரம் முழுவதிலும், அவர் அகதிகளைப் பற்றி அவர்களுடைய குழந்தைகளைக் கடலில் வீசியெறிவதாக நிறையப் பொய்கள் கூறியும், SIEV X என்று அழைக்கப்பட்ட படகில் இருந்த அபாயத்திலிருந்த 150 குழந்தைகள் உட்பட, 353 பேர்கள் ஆஸ்திரேலியாவிற்கும் இந்தோனிசியாவிற்கும் இடையேயான சர்வதேச நீர்ப்பகுதிக் கடலில் மூழ்கி இறப்பதற்கான சூழ்நிலையையும் உருவாக்கினார். அதே நேரத்தில், செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களைப் பயன்படுத்தி பெரும் பீதியையும் மனக் குழப்பத்தையும், இரு கட்சியின் நலன்கள் என்னும் முறையில் தொழிற் கட்சியின் முழு ஆதரவையும் கொண்டு செயலாற்றினார்.

2001 தேர்தலுக்குப் பிறகு, ஹோவர்ட் இத்தகைய தந்திரங்களின் பால் கூடுதலாகப் பற்றுக் கொண்டு செயலாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களில், "பயங்கரவாத-எதிர்ப்பு" என்ற பெயரில் தொடர்ந்து பலரைச் சிறைபிடித்து, பெரும்பான்மையானவர்கள் நாட்டின் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்கள்மீது இந்த முறையைச் செலுத்தி அவற்றை பெரிதும் விளம்பரப்படுத்தவும் தன் அரசாங்கக் கருவியைப் பயன்படுத்தினார். இந்தப் பட்டியலில் ஒரு 21 வயது சிட்னி மருத்துவம் பயிலும் மாணவரான இஷர்-உல்-ஹக், அப்பொழுது பயங்கரவாதிகள் பட்டியலில் இல்லாத ஒரு அமைப்பில் இருந்து பயிற்சி பெற்றதாகக் காட்டப்பட்டு சிறையில் அடைத்ததும் அடங்கும். முன் கருத்துக்கள், அச்சம் என்பவை ஹோவார்டின் மறுதேர்தல் பிரச்சாரத்தின் முக்கியக் கூறுபாடாக உள்ளன என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

லாதமின் ஏற்றம்

ஹாக், கீட்டிங் இவர்களுடைய செல்வாக்கில் இருந்த ஆண்டுகளின் விளைவுகளில் இருந்து தொழிற்கட்சி எழுந்திருக்கவே முடியவில்லை. உறுப்பினர்களின் எண்ணிக்கை சரிந்ததுடன், கட்சி தொழிலாள வர்க்கத்தின் எந்த முக்கியப் பிரிவின் தீவிர ஆதரவையும் கொண்டிருக்கவில்லை. ஆஸ்திரேலிய அரசியல் வாழ்வில் முக்கிய பங்கை 19ம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து கொண்டிருந்த தொழிற்சங்கங்கள் இப்பொழுது சிறிதும் பயனற்றவை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன.

1996ம் ஆண்டு கட்சி பாரிய தோல்வியைத் தழுவிய பின்னர் தொழிற்கட்சி தலைவராக வந்திருந்த பீஜ்லே (Beazley) ஓரளவு கீட்டிங்குடைய சந்தைச் சார்பு கொள்கையில் இருந்து விலகுவது போல் தோற்றம் அளித்து, "தொழிற்கட்சி வேர்களுக்கு" கட்சி திரும்புவது போல் காட்டிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் பூகோள ரீதியான உற்பத்தி முறையினால், தொழிற் கட்சியின் பழைய வேலைதிட்டமான தேசியச் சமூக சீர்திருத்தங்கள் முற்றிலும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன. பீஜ்லேயின் கொள்கைகள், பொது வரிக் கொள்கையை பின்வாங்கியது என அவர் பெரிதும் முழக்கமிட்டிருந்தது போல், வெற்றுச் சொற் பூச்சுக்களாகத்தான் இருந்தன. 2001 தேர்தல்களில் ஹோவார்டுடன் முக்கிய வேறுபாடுகளைக் களைந்துவிடவேண்டும் என்று வேண்டுமென்றே முயற்சிகளைக் கொண்டு, அரசாங்கத்தின் "எல்லைப் பாதுகாப்பு" கொள்கையையும் அதன் விளைவான அகதிகள் மீதான முழுமையான தாக்குதலையும் ஆதரித்தார்.

பீஜ்லேக்குப்பின் வந்த சைமன் க்ரேன் (Simon Crean) இதேபோன்ற தந்திரங்களைத்தான் கையாண்டார். மிக மோசமான அளவிற்கு அவர் புகழ் சரிந்த பின்னர், பல முயற்சிகளுக்குப் பிறகும் எந்த முன்னேற்றமும் இழிநிலையில் இருந்து வெளிவருவதற்கு இல்லாமல் போனபோது, ஆளும் வட்டாரங்களுள் தொழிற்கட்சி அரசியல் சக்தி என்ற முறையில் அனைத்தையும் இழந்து விட்டது என்ற கருத்தும், இரு-கட்சி முறையின் உறுதிக்கே ஆபத்து என்ற கருத்தும் தோன்றியது. தொழிற் கட்சி இல்லாவிடில், ஆளும் வர்க்கம் தன்னுடைய செயற்பட்டியலை நிறைவேற்றும் வகையில் ஒரு பிரிவை எதிர்த்து இன்னொன்றைத் தூண்டிவிடும் வகையைக் கையாள முடியாமற் போய்விடும் தொழிற் கட்சி இல்லாவிடில் தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கி அடக்குவதும் இயலாமல் போய் விடும்; அதிருப்தி, மனக்குறைகள் ஆகியவை புதிய ஆபத்தான வடிவங்களைப் பெறக் கூடும். செய்தி ஊடகத்தின் முக்கிய பிரிவுகள் சைமன் க்ரேன்க்கு எதிராக அவர் உறுதிநிலையைக் குலைக்கும் வகையில் பிரச்சாரத்தை நடத்தி, டிசம்பர் 2003ல் லாதம் தொழிற் கட்சியின் புதிய தலைவராக இருத்தப்பட்டார். இதனுடைய நோக்கம் தொழிற் கட்சிக்கான ஆதரவை மீண்டும் நிலைநிறுத்து, ஹோவர்டையும் பொருளாதார மறுசீரமைப்பிற்காகப் புதிய தாக்குதல்களை மேற்கொள்ளத் தூண்டி விடுதலும் ஆகும். .

ஒரு புது முகம் என்பதைத் தவிர, பெருநிறுவனங்களுடைய கணிப்பின்படி, லாதமுடைய முக்கியமான தகுதி அவருடைய பிற்போக்கான சமூக செயற்பட்டியல் ஆகும். பீஜ்லே, சைமன் க்ரேனை போல் இல்லாமல், லாதம் வெளிப்படையாகவே கீட்டிங்குடைய பொருளாதாரமுறை நியாயப்படுத்தலைத் தழுவியவர் ஆவார். 1996ம் ஆண்டு கட்சி தோற்றதில் இருந்தே, இவர் செய்தி ஊடகப் பிரபுக்களால், "அடுத்த அலை" பொருளாதாரச் சீர்திருத்தத்தைச் சாதிக்கக் கூடியவர் என்ற தோற்றத்தைப் பெற்றிருந்தார். முர்டோக் மற்றும் பெயர்பாக்ஸ் ஊடகங்களில், பத்தி பத்தியாக லாதம் "தனிநபர் பொறுப்பு", "தானே ஏற்பாடு செய்துகொள்ளுதல்" இரண்டும் கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்புப் பணிகளுக்குத் தேவை என்ற கருத்தை வலியுறுத்தியதுடன், செல்வந்தர்களுக்கு அவர்களுடைய சாதனைகளுக்காக வரிகளில் வெட்டுக்கள் மூலம் ஊக்கம் கொடுக்கப்படவேண்டும் என்றும் எழுதி வந்தார்.

தான் வெற்றி பெற்றவுடன் நிகழ்த்திய உரையில் லாதமுடைய சுதந்திர சந்தையில் தனிமனித சுதந்திரம் சுருக்கமாகக் கூறப்பட்டது: "வாய்ப்புக்கள் என்ற ஏணியின் படிகளில் மக்கள் ஏறும் வகையில் மேல் நோக்கிச் செல்லும் ஒரு சமுதாய அமைப்பில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ...கடின உழைப்பை நான் நம்புகிறேன். அந்த முயற்சிக்குத்தக்க வெகுமதியும் கிடைக்கும் என்றும் நம்புகிறேன்" என்று அவர் அறிவித்தார். சமத்துவமுறை என்ற போர்வையில், சமுதாயம் பொதுத் தேவைகளுக்காக ஏற்பாடு செய்யவேண்டியதில்லை என்ற கருத்தை அவர் கொண்டிருந்தார்: தனி நபர்கள் தங்களைத் தாங்களே, சூழ்நிலை, திறன்கள் எப்படி இருந்தாலும், காப்பாற்றிக் கொள்ளவேண்டும். அவருடைய முன்னோக்கின்படி, மீண்டும் முதலாளித்துவம் என்ற காட்டின் விதிகளுக்குதான் திரும்பவேண்டும்; செல்வந்தர்களுக்கு வெகுமதி அளித்து, சமூகத்தின் மிக நலிந்த பிரிவுகள் உட்பட, எஞ்சிய பகுதியினரை, "வாய்ப்புக்கள் என்ற ஏணியில்" ஏறமுடியாததற்காக அவர்கள் மீது குறைகள் கூறுதலும், தவறுகளைச் சுமத்துவதும் இக்கருத்தின் இயல்பான கூறுபாடு ஆகும். "இடதுகள்" என்று அழைக்கப்படுவோர் உட்பட ஒவ்வொரு தொழிற் கட்சியும், லாதமுடைய வலதுசாரிச் செயற்பட்டியலை எதிர்ப்பிற்கு முணுமுணப்புக் கூடக் காட்டாமல் தழுவினர். செய்தி ஊடகத்தில் இவரைப் புகழ்ந்து உயர்த்திய நிலையைக் கண்ணுற்ற அவர்கள், அதிகாரத்தையும் கைப்பற்றக் கூடும் என்ற நம்பிக்கையைக் கொண்டனர்.

அரசாங்கத்தின் மே மாத ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்குத் தன்னுடைய கருத்தைத் தெரிவிக்கும் வகையில், லாதம், ஹோவார்டுடன் சேர்ந்து கொண்டு அதிகபட்ட ஊதியம் பெறுபவர்களுக்கு மகத்தான அளவு வரிச்சலுகைகள் கொடுக்கும் சட்டங்களுக்கு ஆதரவைக் கொடுத்தார். பின்னர், தான் "நிதி வகையில் மிகப் பொறுப்புடையவர்" என்பதை பெரு வணிகத்திற்குக் காட்டிக்கொள்ளும் வெளிப்படையான முயற்சியில், மருந்துகள் நலத் திட்டத்தின் கீழ் குறைக்கப்பட்ட விலைகளில் கிடைத்த மருந்துகள் 20 சதவிகிதம் உயர்த்தப்படுவதற்கு தொழிற் கட்சி முன்பு தெரிவத்திருத்த எதிர்ப்புக்கள் அனைத்தையும் கைவிட்டார். இந்நடவடிக்கையினால் பெரிதும் அவதிக்கு உட்பட்டவர்கள் ஏழைகள், அதிலும் ஆண்டு ஒன்றுக்கு முக்கியமான மருந்துகளுக்காகக் கூடுதலாக $875 செலவு செய்ய இயலாத மிகவயதானவர்கள், ஊனமுற்றவர்கள், நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் ஆகியோராவர்.

தேர்தல் நெருங்கி வரும்போது, தொழிற் கட்சி தன்னுடைய தேர்தல் வாய்ப்புக்களை உயர்த்திக் கொள்ளும் முறையில், புகழ்பெற்ற இசைப் பாடகரும் பழைய அணுவாயுதக் கலைப்புக் கட்சியின் தலைவருமான பீட்டர் காரெட்டைத் தனக்கு அணிதிரட்டிக்கொண்டது. அமெரிக்க இராணுவ, ஒற்றர் தளங்கள் ஆஸ்திரேலியாவில் இருப்பதற்கும், அகதிகளை முகாமில் சிறையில் அடைப்பதற்கு எதிர்ப்பை வன்மையாக முன்பு தெரிவித்திருந்த காரெட் "இடதின்" மற்ற பலரைப் போலவே லாதமின் விசுவாசத்திற்குரியவர்களில் ஒருவராகப் போய் விட்டார். இப்பொழுது அமெரிக்கத் தளங்கள் தேவை என்றும், கட்டாயமாக அகதிகள் முகாமில் அடைக்கப்படவேண்டும் என்றும் தொழிற் கட்சியினால் 1990-களில் தொடக்கப்பட்ட முயற்சிகள் தொடர வேண்டும் என்றும் கூறுகிறார். தொழிலாள வர்க்கத்தின் அதன் ஆதரவுத் தளம் சரிந்துவிட்டது என்பதைத்தான், கட்சி இவரை "ஒரு நட்சத்திர வேட்பாளராக" முன்வைக்க மேற்கொண்டு செய்யும் செலவினங்கள் மீண்டும் உயர்த்திக் காட்டுகின்றன.

ஆஸ்திரேலிய சமூக நெருக்கடி

அதிகாரபூர்வமான "சமத்துவம் நிறைந்த" ஆஸ்திரேலிய என்ற கற்பனையுரைக்கு மாறாக, செல்வம், வருமானம் இவற்றின் பங்கீட்டில் அதிர்ச்சி தரக்கூடிய வேறுபாடுகள் உள்ளன. தாராளவாதிகள், தொழிற்கட்சி என்று எவையானாலும், தொடர்ந்திருந்த அரசாங்கங்களின் கொள்கைகள் இந்த வேறுபாடுகள் குறைவதற்குப் பதிலாகப் பரவுவதற்கும், வறியவர்க்கும் செல்வந்தர்களுக்கும் இடையே உள்ள மாபெரும் பிளவிகளுக்கும் பொறுப்பாக இருக்கின்றன. ஓர் ஆய்வின்படி, 1995-96 லிருந்து 2000-2001 வெளிக் கொணரப்பட்ட பங்கிட்டுக் கொள்ளக்கூடிய வருமானத்தின் மொத்தத்தில் பாதி பகுதி அதிகரிப்பு, மக்கட்தொகையில் உயர்மட்ட 20 சதவிகிதத்தினரைத்தான் சென்று அடைந்து உள்ளது; அடிமட்ட 20 சதவிகிதத்தினர் 4 சதவிகித உயர்வை மட்டுமே கொண்டனர்.

2000ம் ஆண்டில், மக்களின் மிக அதிக செல்வம் படைத்த 1 சதவிகிதத்தினர், செல்வத்தின் 13 சதவிகிதத்தைக் கொண்டிருந்தனர்; மிக வறியவர்களான 50 சதவிகிதத்தினர் 7 சதவிகிதத்தையே கொண்டிருந்தனர். இந்த ஆண்டு, மிக அதிக செல்வம் படைத்த 200 தனிநபர்களின் மொத்த வருமானம் 71.5 பில்லியன் டாலராக, 2003 லிருந்து 13 சதவிகிதம் அதிகமாக உயர்ந்தது. இந்தச் சமத்துவமற்ற நிலை, அடுத்த மூன்று தசாப்தங்களில், ஆஸ்திரேலியாவின் மிக ஏழ்மையான 50 சதவிகித்தினர் செல்வத்தில் கொள்ளக் கூடிய பங்குகளை இன்னும் மூன்றில் ஒரு பங்கு குறைத்து விடும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

கிட்டத்தட்ட 4.1 மக்கள், அதாவது மொத்தத்தில் கால் பகுதியினர், வறுமைக் கோட்டிற்குக் கீழே வசிக்கின்றனர். இவற்றில் 21 சதவிகித இல்லங்களும், அதாவது 3.6 மில்லியன் மக்கள் வாரம் 400 டாலருக்கும் குறைவான வருமானத்துடன் வாழ்கின்றனர். உண்மை ஊதியத்தின் நிலை எந்த அளவிற்குத் தாழ்ந்து விட்டது என்றால், ஒரு மில்லியன் மக்களுக்கும் மேலானவர்கள் இப்பொழுது "உழைக்கும் ஏழைகள்" என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளனர், அதாவது இந்த இல்லங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வயது வந்தோர் வேலையில் இல்லை என்ற கணக்கு ஆகும் இது. அவர்களுடைய செலவுகளுக்கு, குடும்பத்தில் உள்ள இரு வயதுவந்தோரும் உழைத்தாக வேண்டும்; இது அவர்களையும், அவர்களுடைய குழந்தைகளையும் பெருகி வரும் அழுத்தத்திற்கு உட்படுத்தி விடும். .

வேலையற்ற தொழிலாளர்களை மதிப்புக் குறைவான, பாதுகாப்பற்ற வேலைகள் செய்யுமாறு கட்டாயப்படுத்தும் முயற்சியின் மூலமாகத்தான் அதிகாரபூர்வமான வேலையின்மை விகிதம் சமீப ஆண்டுகளில் 6 சதவிகித்திற்கு அண்ணளவாக காட்டப்படுகிறது. கடந்த 16 ஆண்டுகளில் தோற்றிவிக்கப்பட்டுள்ள வேலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை தற்காலிகமானவை; குறிப்பிட்ட நேரங்கள், வேலைப்பாதுகாப்பு, விடுமுறை, மருத்துவ விடுப்பு ஆகியவை இவற்றிற்குக் கிடையாது. 2002 இல் இத்தகைய தற்காலிய வேலையில் உள்ளோர் எண்ணிக்கை மொத்த வேலைபார்ப்போரில் 27.3 சதவிகிதமாக இருந்தது. "மறைக்கப்பட்டுள்ள வேலையற்றோரை" (Hidden unemployed) கணக்கில் எடுத்துக் கொண்டால், உண்மையில் வேலையற்றோர் எண்ணிக்கை 12 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

* வீட்டு நெருக்கடி: கடந்த பத்து ஆண்டுகளில் வீட்டின் விலைகள் இரண்டு மடங்கு அதிகமாகியுள்ள நிலையில், உழைக்கும் மக்கள் தங்களுக்கென்று சொந்த வீடு வாங்க முடியாத கடின நிலை உருவாகியுள்ளது. "வீடுகளின் அழுத்தம்" உயரும் செலவினங்களும் அதிகப்படுத்தியுள்ளன; வருமானத்தில் 30 சதிவிகிதம் வீட்டு வசதிக்கே போய்விடுகிறது. குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு வீடுகள் கிடைப்பது அரிதாகி விட்டது. பொது வீட்டு வசதிக்காகக் கூட்டரசு செலவழிக்கும் தொகை 1993-94 லில் இருந்து 2002-03 இல் 20 சதவிகிதம் குறைந்து விட்டது. நியூ செளத் வேல்சில் மட்டும் பொது வீட்டு வசதிக்காகக் காத்திருக்கும் பட்டியலில் 90,000 மக்கள் உள்ளனர். தேசிய அளவில் குறைந்தது 100,000 பேர் வீடின்றி இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

* சுகாதாரப் பாதுகாப்பு: அரசாங்கத்தின் "MedicarePlus" என்ற திட்டம் மருத்துவப் பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகை என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், உண்மையில் இது பொது சுகாதாரப் பாதுகாப்பு முறையை குறைமதிப்பிற்குட்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது இது "பாதுகாப்பு வலை" என்று முன்வைக்கப்படுகிறது; அதாவது, தனியான காப்புத் தொகை கட்ட முடியாதவர்களுக்குக் குறைந்த வசதிகள் என்ற நிலை புகுத்தப்பட்டுள்ளது. 1996ம் ஆண்டில் இருந்து, பொது மருத்துவர்கள், இலவச ஆலோசனை கூறுபவர்களின் ("மொத்தக் கட்டணம் என வசூலிப்போர்) எண்ணிக்கை 80.6 சதவிகிதத்தில் இருந்து 70 சதவிகிதத்திற்கும் குறைவாகப் போய்விட்டது. சுகாதாரத்துறைப் பொருளாதார வல்லுனர்கள் இந்த விகிதம் விரைவில் 40 ஆகக் குறைந்து விடும் என்று கூறியுள்ளனர். பொது சுகாதார முறையில் நீண்டகாலமாக குறைந்த செலவினங்கள்தான் என்றாலும், அரசாங்கம் ஆண்டு ஒன்றுக்கு உதவித்தொகையாக 3.7 பில்லியன் டாலரைத் தனியார் சுகாதாரக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது.

நோயையும், துன்பங்களையும் தடுக்கும் வகையில் தொழில்நுட்பம் இருக்கும் இக்காலத்தில், விரைவில், இலவசமாக உயர்ந்த சுகாதாரப் பாதுகாப்பு என்பது அடிப்படைத் தேவையும், சமுயாயத் தேவையும் ஆகும். ஆயினும்கூட, பொது மருத்துவமனைகளை வாடிக்கையாக் கைவிட்டுவிடும் முறை என்பது பல்லாயிரக்கணக்கான மக்கள் வாரங்கள், மாதங்கள், ஏன் ஆண்டுகள்கூட, அடிப்படை வசதிகளுக்காகக் காத்திருப்பது அல்லது பெறாமலேயே போய்விடுவம் நிலையை உருவாக்கியுள்ளது. இவற்றில் முக்கிய சிகிச்சையான கதிர்சிகிச்சை(radiotherapy) போன்றவை புற்று நோயாளிகளுக்கு அளிப்பது மறுக்கப்படுவது அடங்கும்; இதற்குக் காரணம் போதிய இயந்திரங்களோ அல்லது தக்க பயிற்சி பெற்ற பணியாளர்களோ இல்லாதது ஆகும்.

*èTMM: குறைந்த வருவாய் உடைய குடும்பங்களுக்கு பொதுக்கல்வி என்பது இரண்டாந்தரமுடையதாக மாற்றப்பட்டு வருகிறது. ஹோவர்ட் ஆட்சியில், பொதுப் பள்ளிக்கான நிதியத்தில் இருந்து Enrolment Benchmark Adjustment என்ற முறையில் (வருகைப்பட்டியல் சான்றில் சரிக்கட்டுதல்) தனியார் பள்ளிகளுக்கு பெரும் உதவித் தொகைகள் கொடுக்கப்படுகின்றன; இதில் மிக உயர்ந்த மட்டத்தினர் நடத்தும் பள்ளிகளும் அடங்கும். இந்த நிதிச்சுமை இருந்தபோதிலும், பல குடும்பங்களும் தங்கள் குழந்தைகளை மட்டமான வசதிகள், குறைந்த பணியாளர்கள் உள்ள பொதுக் கல்வி முறையில் இருந்து திரும்பப் பெறும் கட்டாயத்தில் உள்ளனர். விரும்பியபடி இப்பொழுது தனியார் பள்ளிகள்தாம் பெரிய அளவில் நாடப்படுகின்றன; 52 சதவிகிதத்தினர்தான் பொது உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர்; சில ஆண்டுகளுக்கு முன்வரை கூட இது 70 சதவிகிதத்திற்கும் மேலாக இருந்தது.

சந்தை நோக்கத்தை கொண்ட கல்வியின் ஒரு பகுதியாக, தரப்படுத்தப்பட்ட சோதனைக்குட்பட்ட கட்டுப்பாடுகள் பள்ளிகளைக் குறைந்து விட்ட நிதியங்களுக்குப் போட்டியிட வைத்துள்ளது; இதற்கு மாணவர்கள் தேர்வில் பெற்ற முடிவுகள் அடிப்படையாக இருக்கிறது. அறிவு, உடல் நலம், கலையுணர்வு, படைப்பாற்றல் என்று மாணவர்களின் பல திறன்களையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிராமல், கல்வி பெரும் கட்டுப்பாட்டிற்குள், குறுகிய எல்லையைக் கொண்டு, படித்தல், எழுதுதல், கணக்குப் போடுதல் ஆகியவற்றில் உள்ள திறைமை "வெற்றியின்" அடையாளமாகக் கொள்ளப்படுகிறது.

மூன்றாம் நிலைக் கல்விக்கான உரிமையும் இதேபோன்ற தாக்குதல்களுக்கு உட்பட்டுள்ளது. 2003 உயர்கல்விச் சீர்திருத்தச் சட்டம் பல்கலைக் கழகங்கள் முழுக் கட்டணம் செலுத்திப் படிப்போரின் எண்ணிக்கையை மொத்தத்தில் 35 சதவிகிதம் இருக்கலாம் என்று உயர்த்தி, மற்ற அனைத்து மாணவர்களின் கட்டணத்தை 25 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. TAFE கல்லூரிகளில் கட்டணங்கள் இதேபோல் உயர்த்தப்பட்டு, சில இடங்களில் 300 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

* பூர்விகக் குடிகள்: ஆஸ்திரேலியாவின் பழங்குடியினரின் மிக மோசமான வாழ்க்கத் தரம், முழு ஆளும் செல்வந்த தட்டிருக்கும் ஒரு பெரும் அவமானகரமான குற்றச்சாட்டைப் பிரதிபலிக்கிறது. பழங்குடி மக்களுடைய ஆயுட்கால எதிர்பார்ப்பு இப்பொழுது ஆண்களுக்கு 56 வயது, பெண்களுக்கு 63 என்று உள்ளது; இது பர்மா, பாப்புவா நியுகினியா, கம்போடியாவில் உள்ளதைவிடக் குறைவானதாகும். ஒவ்வொரு நடவடிக்கையிலும் பூர்வீகக் குடியினர் ஆஸ்திரேலியச் சமுதாயத்திலேயே மிகவும் நசுக்கப்பட்ட தன்மையில் உள்ளனர். மொத்த மக்கட்தொகையில் 2.4 சதவிகிதம்தான் உள்ளனர் என்றாலும், இவர்கள் தற்பொழுதைய சிறையில் உள்ளோர் எண்ணிக்கையில் 20 சதவிகிதமாக, 1993ல் 15 என்பதில் இருந்து, உயர்ந்து நிற்கின்றனர்.

* இளைஞர்கள்: குறைந்த ஊதிய, பாதுகாப்பற்ற வேலை என்பதில் ஏற்பட்டுள்ள உயர்வு, இளைஞர்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. ஜூன் 2004ல், அதிகாரபூர்வ வேலை இன்மை, 15-24 வயதில் உள்ளோரில் 11.8 சதவிகிதமாக, மொத்த வேலைபார்ப்போர் தொகுப்பில் இருமடங்காக உயர்ந்து விட்டது. 15-19 என்ற வரம்பில் இந்த விகிதம் 22.3 என்று உள்ளது; சில தொழிலாள வர்க்கம் வாழும் பகுதிகளில் இது 30 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களில் சரிவு என்பது மனப் பாதுகாப்புத் துறை, மற்ற சமுதாயப் பிரச்சினைகளான போதை மருந்து, குடிபோதை ஆகியவற்றை மிக உயர்ந்த அளவிற்குத் தொடர்புபடுத்திவிடும். இளைஞர்களிடையே மரணத்திற்கு இரண்டாவது பெரிய பொதுக்காரணமாக இருப்பது தற்கொலையாகும்; இதன் விகிதம் 1970 - 1995 காலக்கட்டத்தில் இரு மடங்காகிவிட்டது.

*சிறைகள்: பெருகி உயரும் சமுதாயச் சமத்துவம் அற்ற நிலையினால் தோன்றும் சமுதாய நெருக்கடிகள் கூடுதலான அடக்குமுறையினால் எதிர்கொள்ளப்படுகின்றன. கடந்த பத்து ஆண்டுக் காலத்தில், ஒவ்வொரு முக்கிய கட்சியும் மற்றவற்றை "சட்டம், ஒழுங்கு" திட்டங்களில் கூடுதலான கண்டிப்பைக் கொள்ளுவதாகக் கூறி வரும் பிரச்சாரத்தைக் காண்கிறோம். 1993ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் 16,000 கைதிகள் இருந்தனர். 2003 ஐ ஒட்டி இந்த எண்ணிக்கை வியப்படையும் வகையில் 23,500 க்கு உயர்ந்துவிட்டது. அதே நேரத்தில் இதற்குக் காரணமாகும் குற்றங்களுக்கு இடமளிக்கும் அடிப்படை சமுதாயக் காரணங்கள் முற்றிலும் அசட்டை செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக, 2003ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று நியூ செளத்வேல்சில் உள்ள நான்கு கைதிகளில் மூவர் மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரிவிக்கிறது.

* அடிப்படைக் கட்டுமானங்கள்: மின்சாரம் வழங்குதல், சாலைகள், இரயில் பாதைகள், பொதுப் போக்குவரத்துத் துறை, தண்ணீர், கழிவுநீர் வசதிகள் போன்ற பெரும்பாலான ஆஸ்திரேலியச் சமுதாய அடிப்படைக் கட்டுமானங்கள் சிதைவின் விளிம்பில் உள்ளன. பெரிய நகரங்களான சிட்னி போன்றவற்றில் வசிக்கும் மக்கள் நிரந்தரமாக தண்ணீர் பற்றாக் குறையையும், பாதுகாப்பு, நம்பிக்கைத்தன்மை அற்ற பொது போக்குவரத்தை முறைகளையும்தான் கொண்டுள்ளனர். சிறு நகரப் பகுதிகள் நிலச்சிதைவினால் பாதிப்பிற்குட்பட்டுள்ளன; நகரங்களோ சுற்றுப்புற மாசு என்ற தன்மையினால் மூச்சுத் திணறுகின்றன.

*சுற்றுச் சூழல்: ஒவ்வொரு துறையிலும் ஹோவர்ட் அரசாங்கம் உழைக்கும் மக்களின் தேவையான சுத்தமான, பாதுகாப்பான சூழ்நிலையின் தேவைகளை, இலாப முறையின் கட்டளைக்கேற்ப தாழ்த்தியுள்ளது. அமெரிக்காபோலவே, ஆஸ்திரேலியாவும் கியோடோ ஒப்பந்தத்தின் எளிமையான தேவைகளான கண்ணாடிவளர்ப்பு கூடங்களில் எரிவாயு உற்பத்தியைக் குறைத்து உலகம் சூடாகும் தன்மையின் ஆபத்துக்களைக் குறைப்பதற்கு மறுத்துவருகிறது. வாஷிங்டன் போலவே, கான்பெராவும் தொழில் துறையின் துணை உற்பத்தியான நச்சுப் பொருட்களான அறியப்பட்டுள்ள கார்சினோஜென், டியாக்சின் ஆகியவற்றைக் கட்டுப்படும் சட்டங்களைத் தளர்த்திவிட்டு, இவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவின் (EPA) கண்காணிப்புப் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டன.

ஜனநாயக உரிமைகளும் தாக்குதலுக்கு உட்படுதல்

வெளிநாடுகளின்மீது போர் தொடுத்தலுக்கு இணையாக உள்நாட்டில் அரச இராணுவவாதம் பெருகி வருகின்றது. செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களைப் பயன்படுத்தி, ஹோவார்ட் அரசாங்கம், ஒரு போலீஸ் அரசு கட்டமைப்பை நிறுவுவதற்கான முயற்சியில் உறுதியுடன் ஈடுபட்டது. ஒரு தலைப்பட்சமான சிறைவைத்தல், குற்றம் நிரூபிக்கப்படம் வரை நிரபராதி எனக் கொள்ளுதல், எக்கருத்தையும் தெரிவிக்காதிருத்தல், குற்றம் சாட்டுவோர்தான் அதை நிரூப்பிக்கவேண்டும் என்ற கடமை, போன்ற நீண்ட கால, மற்றும் அடிப்படை உரிமைகள் அகற்றப்பட்டு விட்டன. "பயங்கரவாதம்" என்பது மிகப் பரந்த முறையில் வரையறுக்கப்பட்டு, அரசியல் செயல்பாடு, எதிர்ப்புக்கள், வேலைநிறுத்தங்கள், மறியல்கள், தெரு ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றையும், ஆயுள் தண்டனைக்குரியதாகி குற்றவியல் தண்டனையாகியுள்ளன. நிர்வாக அதிகாரத்தின் மூலம், அரசாங்கம் அரசியல் கட்சிகளை விரைவில், அவை பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டி, அதன் ஆதரவாளர்களை சிறையில் அடைக்க முடியும்: இத்தகைய நடவடிக்கைகள் 1950ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியை சட்ட விரோதமாக்கும் முயற்சியில் மென்சியீஸ் (Menzies) அரசாங்கம் கொண்ட முயற்சிகளையும் விட அதிக அளவிற்குச் சென்றன.

அரசியல் போலீஸ் சக்தியான ASIO, முன்பு நினைத்தும் பார்க்க முடியாத அதிகாரங்களை, அதாவது, குற்றச் சாட்டுக்கள் அல்லது விசாரணை இன்றி ஒரு வார காலத்திற்கு இரகசியக் காவலில் வைத்தல் போன்றவற்றைப் பெற்றுள்ளது. குறிப்பிட்ட தனி நபர்கள் இரவும் பகலும் கண்காணிக்கப்படக் கூடும், அவர்களுடைய வீடுகளும், கணினிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படக் கூடும், தங்கள் குடும்பத்திற்கோ, செய்தி ஊடகத்திற்கோ தகவல் தெரிவிக்கும் உரிமையும் மறுக்கப்பட்டு, அவர்கள் விசாரணைக்குக் காவல் நிலையங்களுக்கு இழுத்துச் செல்லப்படக் கூடும். பயங்கரவாதச் செயல் புரிவதாகவோ, அவற்றிற்கு பரிவு உணர்வு காட்டுகின்றனர் என்றோ கூட அழைத்துச் செல்லப்படுபவர்கள் இருக்க வேண்டியதில்லை. அரசாங்கமும் அதன் துறைகளும் இவர்களிடம் பயங்கரவாதத்தைப் பற்றித் தகவல் இருக்கிறது என்று உறுதியாகக் கூறினால் போதும்--- இது பயங்கரவாதச் செயல் நடைபெறாவிட்டாலும், திட்டமிடப்படாவிட்டாலும், துறையினரால் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும். கேள்விகளுக்குக் கட்டாயம் பதில் சொல்ல வேண்டும், இல்லாவிடில் ஐந்து ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்படும், குற்றம் சாட்டப்பட்டுவிட்டால் போலீசார் அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு இன்னும் 24 மணி நேரம் கூடுதலாக எடுத்துக்கொள்ளலாம். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை (ஜாமீன்) கொடுப்பதற்கு இப்பொழுதுள்ள ஆதரவான நிலை அகற்றப்பட்டு விட்டது; "அசாதாராண சூழ்நிலையில்தான்" அது வழங்கப்படலாம்.

"ஒத்துழைத்திருக்கக்கூடும்" என்ற முறையில் கூட மற்ற சட்டங்கள் இயற்றப்பட்டு, போலீஸுக்கு நபர்களை ஒரு பயங்கரவாத ஆதரவாளர் எனக் குற்றம் சாட்டப்பட்டவரைத் தெரிந்திருந்தாலும் கூட கைது செய்து குற்றம் சாட்ட அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. "பயங்கரவாதி" என்று கருதப்படும் ஒரு நபரை எவரேனும் சந்தித்தாலோ, அவருடன் பேசினாலோ, தொடர்பு கொண்டலோ, 25 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம். "தேசியப் பாதுகாப்பை"க் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, பயங்கரவாதி தொடர்புடைய வழக்குகளில் நீதிமன்றங்கள் பகிரங்க விசாரணை செய்யாமல், அளிக்கப்பட்ட சாட்சியங்களைப் பற்றி தகவல் அளிக்காமலும், அரசாங்க சாட்சிகளை விசாரிக்கத் தடை விதித்தலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய வக்கீல்கள் அதிகாரபூர்வமாக பாதுகாப்புத் துறைகளிடமிருந்து ஐயத்திற்கிடமில்லாதவர் என்ற சான்றைக் கொண்டவராக இருக்கவேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர், அவர்களுடைய வக்கீல்கள்கூட விசாரணையில் ஒரு பகுதியில் பங்கு பெறக் கூடாது என நிர்ணயித்தல் போன்ற கடும் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்த ஜனநாயக-விரோத நடவடிக்கைகள் ஒவ்வொன்றிற்கும், பொதுமக்களுடைய வலுவான எதிர்ப்புக்கிடையேகூட, தொழிற்கட்சி தன்னுடைய ஆதரவைக் கொடுத்துள்ளது. அதிகாரபூர்வ அரசியல் நடைமுறைக்குள்ளேயே, மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பிற்காக எவ்விதமான ஆதரவுத்தளமும் இல்லை என்ற நிலையைத்தான் இந்த அடிப்படை உண்மை உயர்த்திக் காட்டுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டால், தாராளவாதிகளைவிட தொழிற் அரசாங்கம் ஒன்றும் குறைவான கருணையற்ற தன்மையைக் காட்டப்போவது இல்லை. ஆஸ்திரேலிய தொழிற்கட்சி, அரசாங்கம் செய்து கொண்டிருப்பது போதாது என்றும், புஷ்-நிர்வாகத்தின் முன்மாதிரியில் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ஒன்றை அமைத்து ASIO மற்றும் பல பாதுகாப்புத் துறைகளையும் ஒருக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்று வாதிட்டுள்ளது. மாநிலங்களில் உள்ள தொழிற்கட்சி நிர்வாகங்கள் ஹோவார்ட் விரும்பும் அரசியல் அமைப்புவகை அதிகாரங்களை, பயங்கரவாதச் சட்டங்களுக்காகக் கொடுத்துள்ளதோடு, தங்களுடைய சட்டங்களையும் பயன்படுத்தி முன்கண்டிராத வகையில் போலீசிற்கு அதிகாரங்களை வழங்கியுள்ளன.

ஆஸ்திரேலியாவிலும், சர்வதேச முறையிலும் ஜனநாயக உரிமைகளின்மீதான தாக்குதல் இறுதியில், சமூக வாழ்வில் பெருகிய முறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் மிகப் பெரிய சமத்துவமற்ற நிலைப்பாடுகளில் வேரூன்றியுள்ளன. இவை விரைவில் அரசியல் சமுதாய பதட்டங்களை ஏற்படுத்துவதுடன், அவை பழைய வடிவ ஆட்சி கட்டமைப்பினால் அடக்க முடியாமல் உள்ளது.

டேவிட் ஹிக்ஸ் மற்றும் மம்தா ஹபீப் இருவரும் நடத்தப்பட்ட முறை, ஆளும் செல்வந்த தட்டு இப்பொழுது சரி என்று ஏற்றுக் கொண்டுள்ள நடவடிக்கைகளின் தன்மையைப் பற்றி எச்சரிக்கை விடுக்கிறது. இரண்டு ஆஸ்திரேலியக் குடிமக்களை "எதிரி-போரில் ஈடுபட்டவர்கள்" எனக் குற்றம் சாட்டி, கியூபாவில் உள்ள குவாண்டநாமோ வளைகுடாவில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குச் சிறையில் வைப்பதற்கு ஹோவார்ட் அரசாங்கும் விருப்பத்துடன் அனுமதித்துள்ளது. இது ஜெனிவா போர்க்காலக் காவல் உடன்பாடுகளுக்கு முற்றலும் விரோதமானது ஆகும். அமெரிக்க இராணுவம் பாக்தாத்தில் இழிவுபுகழ்பெற்ற அபுகிரைப் சிறையில் கையாண்ட சித்திரவதை முறைகளே இவ்விருவருக்கும் நடைபெற்றது என்பதற்குப் பெருகிய முறையில் ஆதாரம் கிடைத்தும், இந்த அரசாங்கம் தன்னுடைய குடிமக்களை திரும்ப தம் தாய்நாட்டிற்கு அனுப்பிவைக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளவில்லை; உலகிலேயே அப்படிக் கேட்காத அரசாங்கம் இது ஒன்றுதான்.

அரசியலில் கொண்டுள்ள அதிருப்தியை பிற்போக்காகத் திசை திருப்புவதில் அரசாங்கம் கொண்டுள்ள முயற்சிகள், புகலிடம் கோருவோர் பலவிதத்திலும் குற்றம் சாட்டப்பட்டும், அடிப்படைச் சட்ட, ஜனநாயக உரிமைகளையும் இழந்து நிற்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளன. அகதிகள் மீது போர்க்கப்பல்கள் குண்டு வீச்சை நடத்துகின்றன; அவர்கள் தொலைவிலுள்ள பசிபிக் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர், விசாரணையின்றியும், காலவரம்பு இல்லாமலும் சிறையில் அடைக்கப்பட்டு, மனிதாபிமானம் அற்ற முறையில் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டு சட்ட உதவி, பரிகாரங்களைத் தேடுவதற்கும் தடை செய்யப்படுகின்றனர்.

உண்மையான அரசியல் மாற்றீட்டை வாயடைக்கும் வகையில், ஜனநாயகவாதிகள், பசுமைகள் ஆதரவுடன் தொழிற்கட்சி, தாராளவாத கட்சிகள், ஐக்கியப்பட்டு ஜனநாயக விரோதத் தடைகளைக் முன்னுக்கு கொண்டுவந்துள்ளன, அவை புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்துகொள்ளுதலை தடைக்கு உட்படுத்தும் நோக்கத்தைக் கொண்டு, தற்போது இருக்கும் கட்சிகள்மீதும் பரந்த மேற்பார்வையைச் திணித்துள்ளன. பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத ஓர் அரசியல் கட்சி தன்னுடைய பெயரை வாக்குச் சீட்டில் பதிவு செய்ய விரும்பினால் தன்னுடைய உறுப்பனர்களில் 500 பேரின் பெயர்கள், முகவரிகள் இவற்றை அரசாங்க அதிகாரிகள் இடத்தில் கொடுக்கவேண்டும். நீண்ட கால வரலாறான அரசியல் எதிர்ப்பாளர்கள் மீதான அரசியல் கண்காணிப்பு, தொல்லைகொடுத்தல்கள், ஆத்திரமூட்டல்கள் இவற்றைக் கருத்திற்கொள்ளும்போது-----அதிலும் அரசாங்கம் சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் ஆகியோரை எவ்விதம் நடத்தியது என்பதைப் பார்க்கும்போது, தற்போதைய நடவடிக்கை சிறு அரசியல் கட்சிகள், அவற்றின் உறுப்பினர்கள், தேர்தல் வேட்பாளர்கள், அவர்களுக்கு வாக்களிக்க விரும்பும் மக்கள் ஆகியோர் அனைவருடைய ஜனநாயக உரிமைகள் மீதான மூர்க்கதான தாக்குதலாகும்.

பெளலின் ஹான்சனைச் சிறையில் அடைத்ததின் முக்கியத்துவத்தை இங்குத்தான் காண்கிறோம். இவ்வம்மையாரின் பிற்போக்கான அரசியல் ஒரு புறம் இருக்க, இருக்கும் இரு-கட்சி அரசியல் நடைமுறையை உறுதியற்றதாக்குவதற்கு எந்த அச்சுறுத்தலையும் கொடுக்கும் அரசியல் அமைப்பு எதையும் குற்றம் சார்ந்த தன்மை உடையது எனக் கூறுவதற்கு இது ஒரு முன்னோடியாக இருக்கவேண்டும் என்பதைத்தான் அச்சிறையடைப்பு இலக்காகக் கொண்டிருந்தது.

அரசாங்கத்தின் ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல் பலவித வடிவங்களை எடுத்துள்ளது, கலையுணர்வின் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை அடக்கும் முயற்சிகளும் இதில் அடங்கும். "சமுதாய அறநெறி" என்ற கோஷத்தை எழுப்பி, ஹோவார்ட் அரசாங்கம், கிறிஸ்தவ அடிப்படைவாதிகளுடைய தீவிர வலதுசாரித் தளத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. குற்றம் எனக் கருதப்படக்கூடிய தகவலை இணையதள வசதி அளிப்போர் கொடுப்பதைத் தடை செய்யும் வகையில் அபராதம் விதித்தல் அல்லது அவற்றை மூடிவிடும் அதிகாரத்தை ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்திற்குக் கொடுக்கும் சட்டம் ஒன்றை அரசாங்கம் 1999ல் இயற்றியது. திரைப்பட, இலக்கிய தரம் பிரிக்கும் அலுவலத்தில் (Office of Film and Literature Classification -OFLC) பிற்போக்குவாதிகளை நியமித்து அவர்கள் வெளிப்படையாக பால் உணர்வைக் காட்டும் படங்களான Baise-moi, Salo, Ken Park ஆகியவற்றைத் தடைசெய்ததையும் அரசாங்கம் ஆதரித்தது. இந்த கலைப்படைப்புக்களை தடைசெய்யும் முயற்சிகள் விஞ்ஞான துறைகளிலும் இணையாக நடத்தப்பட்டன; அவற்றில் ஹோவார்ட் மிகக் கடுமையான முறையில் முக்கிய தண்டுகலங்கள் (Stem cell) பற்றிய ஆய்வினைத் தடுக்க முற்பட்டுள்ளார்.

ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு, சோசலிசப் போராட்டத்துடன் பிரிக்கமுடியாமல் பிணைந்தது ஆகும். கடந்தகாலத்திற் பெற்ற ஜனநாய பயன்கள், வாக்களித்தல், தேர்தல் உரிமைகள், குடி உரிமைகள் இவற்றை சோசலிச சமத்துவ கட்சி விட்டுக்கொடுக்காது பாதுகாக்கிறது. வேலைநிறுத்தங்கள், மறியல்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்கள் அனைத்தும், மற்றும் தேசிய, இன பின்னணி, சமய, பால் வேறுபாடு சார்ந்த, பாலியல் விருப்பத்திற்கு எதிரான என்பவை, திருப்பப் பெறவேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். பல காவல் முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோருகிறோம். அனைத்துவிதமான புலப்பெயர்ந்தோர்களுக்கும் கட்டுப்பாடு, தடைகள் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என அழைப்பு விடுகிறோம். தொழிலாளர்கள் எங்கு வேண்டுமானாலும் வாழும், வேலை செய்யும் உரிமை, அவர்கள் முழு குடியுரிமைகள், அனைத்துச் சமுதாய நன்மைகளையும் பெறுதல் என்பவை அவர்களுக்கு இருக்கவேண்டும். விரும்பினால் தடையின்றி கருச்சிதைவு செய்து கொள்ளும் உரிமை மகளிருக்கு வழங்கப்படவேண்டும்.

சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்று பெயரளவிற்கு உள்ள கருத்து, கூடுதலான சமூக மற்றும் பொருளாதார சமத்துவமற்ற முறையைக் கொண்டுள்ள தன்மைக்கு, மிகவும் வேறுபாடான முறையில்தான் ஜனநாயக உரிமைகள் பற்றிய கருத்துப் படிவம் விரிவாக்கப்பட வேண்டும். நீதிமன்றத்திற்கு முறையிடும் உரிமையும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிக்கும் உரிமையும், அன்றாட வாழ்வின் ஒவ்வொரு கூறுபாடு, எவர் வேலையில் அமர்த்தப்படுவர், எந்த விதிகளுக்கு உட்படுவர், எவருக்கு அடிப்படை சமுதாய உரிமைகளாக கல்வி, சுகாதார வசதி, குழந்தைகள், முதியோரைக்காத்தல் போன்றவை உண்டு என்பவற்றை, ஒரு நிதி செல்வராட்சி நிர்ணயிக்கும்போது பயனற்றவையாகப் போய்விடுகின்றன. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கற்பனையுரையின் முன்பு, சட்ட முறை அதை நியாப்படுத்தி அதன் ஆதிக்கத்தை இறுதியில் போலீஸ், இராணுவ, பாதுகாப்பு நிறுவனங்களின் மூலம் செயல்படுத்தவும் செய்கிறது.

தங்களுடைய அன்றாட வாழ்வின் சூழ்நிலைகள், பொருளாதாரம் பற்றிய முடிவுகளை எடுத்தல் இவை சாதாரண மக்களின் உண்மையான கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதுதான் உண்மையான ஜனநாயகத்தின் தேவையாகும். உற்பத்திமுறை, ஊதியங்கள், தொழிலிடத்தில் பாதுகாப்பு, மற்றும் உழைக்கும் நிலைமைகள் ஆகியவை உழைக்கும் மக்களின் ஜனநாயகசக்தியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும். பெருநிறுவனங்களின் கணக்குப்புத்தகங்கள் தொழிலாளர்களின் ஆய்விற்கு உட்பட வேண்டும், பெருநிறுவனத் தலைமைமீது அனைத்து ஊழியர்களும் ஜனநாயக முறையில் கட்டுப்பாட்டைக் கொள்ளவேண்டும் என்பதுதான் இதன் பொருள் ஆகும். இறுதியில், உண்மையான ஜனநாயகம் என்பது உழைக்கும் மக்கள் சோசலிசத்திற்கான போராட்டத்தில் நல்ல முறையில் தகவல் அறிந்து, தங்கள் கருத்துக்களைக் கூறும் வகையில் அரசியல் முறையில் அணிதிரட்டப்படுவதின் மூலம்தான் சாதிக்கப்பட முடியும்.

ஒரு சோசலிச வேலைத்திட்டம்

உற்பத்திமுறையைத் தனியார் முழு உரிமையாகக் கொண்டு தடையற்ற முறையில் பெருநிறுவன, தனிச் சொத்துக் குவிப்பை அடிப்படையாகக் கொண்டுள்ள ஒரு பொருளாதார முறையினால், தற்கால சமுதாயத்தின் சிக்கல்கள் நிறைந்த சமுதாயத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட முடியாதவையாகும். நாய்-நாயைக் உண்ணுவது போன்ற தனியார் இலாப உற்பத்தி முறையைக் கையாளுதல் பாரிய வீணடிப்பு, மாபெரும் வணிகச் சரிவுகள், உள்-கட்டுமானங்களில் தீவிர நிலைமுறிவுகள், அழிவுதரும் மந்த நிலைகள் இவற்றைத்தான் ஏற்படுத்தும். மனிதாபிமானம் மிகுந்து, சுற்றுச் சூழ்நிலைக்கு இசைந்த, புத்திசாலித்தனமான சமுதாயத்திட்டம்தான், மனித நாகரிகமே தழைத்து உயிர் வாழ்வதற்கு இன்றியமையாததாகும்.

பெரும்பான்மையான மக்களின் நலன்கள் அடிப்படையில் சமுதாயத்தை மறுசீரமைக்கும் ஒரு வேலைதிட்டத்தைத்தான் சோசலிச சமத்துவ கட்சி முன்னெடுக்கிறது. பொது செத்துடமையும் ஜனநாயகக் கட்டுப்பாடுமுள்ள அடிப்படையில், ஒரு புதிய பொருளாதார முறை தோற்றவிக்கப்படவேண்டும் என்று நாங்கள் வாதிடுகிறோம். தனியார் இலாபம் என்று இல்லாமல், தேவைக்கான உற்பத்தி முறை, மற்றும் சமுதாய வாழ்வினை அமைக்கும் கொள்கையாக இருக்க வேண்டும்; அப்பொழுதுதான் இப்பொழுதுள்ள மிகச் சிறந்த முறையிலான மனித, தொழில் நுட்ப வளங்கள் அனைவருக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தையும், பாதுகாப்பான சுற்றுச் சூழலையும் தரும்.

*பொது சொத்துடைமை: அனைத்து மிகப்பெரிய தனியார் உரிமையில் உள்ள தொழில் துறை, சுரங்க, விவசாய பெருநிறுவனங்கள், மற்றும் வணிக, நிதிய நிறுவனங்கள் பொது சொத்துடமை நிறுவனங்களாக மாற்றப்படவேண்டும் என்று நாங்கள் வாதிடுகிறோம்; சிறிய பங்குதாரர்களுக்கு முழு இழப்பீட்டுத் தொகையும், பெரிய பங்குதாரர்களுக்கு இழப்புத் தொகை பற்றிய விவரங்கள் பொது உடன்பாட்டில் அமைக்கப்படலாம். இதேபோல், விமானப் பணிகள், தொலைத்தொடர்புகள், தனியார்மயமாக்கப்பட்டுள்ள பொதுப் பயன்பாட்டு வசதிகள் ஆகியவை பொது சொத்துடமைகளாக்கப்பட்டு அனைத்து முக்கிய தேசிய வளங்களும் பொதுக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும் என்று சோசலிச சமத்துவ கட்சி முன்மொழிகிறது.

சிறிய அல்லது நடுத்தர வணிகங்கள், குடும்பப் பண்ணைகள் இவற்றைத் தகர்த்துவிடவேண்டும் என்ற பொருளை இது தராது; இவையே இப்பொழுது பெருநிறுவனங்கள், பெரு வங்கிகள் இவற்றின் செயற்பாடுகளினால் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன. திட்டமிட்ட பொருளாதார முறையை நிறுவுதலை இவற்றிற்கெல்லாம் போதிய கடன் வசதி, கூடுதலான உறுதிபடைத்த பொருளாதார நிலைகள் இவற்றை அவை பொருத்தமான ஊதியங்கள், பணியிட வசதிகள் இவற்றைக் கொடுக்கும் வரை வழங்கும்.

*வேலைகள்: அனைவருக்கும் நல்ல ஊதியம், உத்தரவாதமுள்ள வேலைகள் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, நாடு முழுவதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில், மிகப் பெரிய பொதுப்பணித் வேலைதிட்டங்கள் ஸ்தாபிக்கப்படவேண்டும். வேலைகளை ஏற்படுத்தி, தொழிலாளர்களை இன்னும் முழுமையாக அரசியல், பண்பாட்டு வாழ்வில் பங்கு பெறுவதற்காக, வேலை வாரம் 30 மணி நேரம் என்று, ஊதியக் குறைப்பின்றிச் செயல்படுத்தப்பட வேண்டும். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஓர் ஆண்டில் குறைந்தது ஐந்து வாரங்களாவது விடுமுறை கொடுக்கப்பட வேண்டும்

*சமுதாயப் பாதுகாப்பு: மலிவுத் தொழிலாளர் வேண்டும் என்பதற்காக ஏழ்மைநிலையில் இருப்பவரையும், வேலையற்றோரை சுரண்டுதலுக்கு முற்றுப்புள்ள வைக்க வேண்டும். ஒவ்வொரு உழைக்கும் நபருக்கும் நல்ல ஊதியம், பாதுகாப்பான வேலை, ஒரு குடும்பத்தை வசதியில் வளர்க்கப் போதிய வருமானம் என்று உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். சமூகநல உதவி பெறுவோருக்கான வேலை (work-for-the-dole) என்று உள்ள திட்டங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு சமுதாய நலன்கள், தர வாழ்விற்குத் தேவை என்ற வரம்பிற்கு உயர்த்தப்பட வேண்டும். வீடுகளை விட்டு அகற்றுதல், கடன்களை முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்காகக் கொடுக்கப்படும் தொல்லைகள், மின்சாரவசதி, எரிவாயு வசதி, நீர் வசதி, தொலைபேசி வசதி இவற்றை வேலையற்றோருக்குத் துண்டித்தல், அல்லது நலன்கள் பெறுவோருக்குத் துண்டித்தல் போன்றவை சட்ட விரோதமாக்கப்பட வேண்டும்.

*சமூக சேவைகள்: பொது மருத்துவ மனைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், குழந்தை காப்பு நிலையங்கள் ஆகியவற்றின் தரத்தை உயர்த்தவும், விரிவாக்கவும், பணியாளர்கள் நியமிக்கப்படவும் பில்லியன் கணக்கில் செலவு செய்யப்பட வேண்டும்; அப்பொழுதுதான் இவை சமீபத்திய தொழில்நுட்ப தரங்களைக் கொண்டு அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும். பொது வீட்டு வசதியை விற்று விடும் முயற்சி கைவிடப்பட வேண்டும்; புதிய உயர்தர வீட்டுப் பிரிவுகள் கட்டப்படவேண்டும், வாடகை, வீட்டுக் கட்டணங்கள் குறைக்கப்பட்டு, எந்தத் தொழிலாளரும் தன்னுடைய ஊதியத்தில் இருந்து 20 சதவிகிதத்திற்கு அதிகமாகாமல் அதற்குச் செலவிடக்கூடாது என்று இருக்க வேண்டும்.

*முதியோர்கள்: அனைத்து முதியோர்களும் கெளரவத்துடன் வாழ வேண்டும்; தேவையான நிதி, சமூக ஆதரவுகள், இலவசப் போக்குவரத்து, சுகாதார வசதிகள், நாகரிகமான குடியிருப்பு, பொழுபோக்கு இவற்றைக் கொண்டிருக்க வகை வேண்டும். வயதான பெற்றோர்களைப் பராமரிக்கும் குடும்பங்களுக்கு தாராளமான உதவித்தொகைகள் வழங்கப்பட வேண்டும்; அனைத்து செவிலியர் வீட்டுக் கட்டணங்களும் அகற்றப்பட வேண்டும்.

*இளைஞர்கள்: அனைத்து இளைய வயதினருக்கும் தரம் உயர்ந்த பயிற்சி, கல்வி இவை வேண்டும் என்றும் பின்னர் மிகப் பெரிய அளவில் வேலைப்பயிற்சிக்கான வசதிகள் அளிக்கப்படவேண்டும் என்ற திட்டத்தை நாங்கள் முன்வைக்கிறோம். இரவு நேரப் பணியும், சுழற்சி முறை வேலைத்திட்டமும் இளைஞர்களுக்கு தவிர்க்கப்பட வேண்டும். குறைந்த வேலைநேர மணிகள் கொண்ட, அதே நேரத்தில் முழு ஊதியம் உள்ள வாரம் இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்; அப்பொழுதுதான் அவர்கள் பொழுதுபோக்கு, கலாச்சார நடவடிக்கைகளில் கவனம் கொள்ள முடியும்.

*வரி விதிப்பு: செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள பிளவை அகற்றுவதற்கும், பொதுப் பணி, வேலைகள் இவற்றை விரிவுபடுத்துவதற்கும் தேவையான இருப்புக்களுக்காக, நாங்கள் வளர்ச்சி விகித வரிமுறை வேண்டும் என்றும், உழைக்கும், மத்திய தர வர்க்கத்தினருக்கான வரிகள் குறைக்கப்படவேண்டும் என்றும் செல்வந்தர்பால் கூடுதலான வரிகள் விதிக்கப்படவேண்டும் என்றும் கோருகிறோம். பொருட்கள், பணிகள் இவற்றின்மீதான பிற்போக்குத் தன்மையுடைய வரி நீக்கப்பட வேண்டும் என்றும், அவற்றுடன் பெருநிறுவனங்கள் மேற்கொள்ளும் சட்டத்தில் உள்ள விரிசல்களை பயன்படுத்துதலும், கணக்குமுறை தில்லுமுல்லுகளும் அகற்றப்படவேண்டும் என்றும் வாதிடுகிறோம்: ஏனெனில் இவ்வகையில் அவை தங்களுடைய இலாபங்களில் மிகமிகச் சிறிய அளவேதான் வரிகளாக கட்டுகின்றன. நிலச் சொத்துக்கள், செல்வத்தின்மீதான நேரடி வரிவிதிப்புமுறை போன்றவை மீட்கப்படவேண்டும்.

*கலாச்சாரம்: கலையும், பண்பாடும் மலர்தல் சோசலிசத்தின் இன்றியமையாத கூறுபாடு என்று சோசலிச சமத்துவக் கட்சி கருதுகிறது. கலைகள், ஓவியக் காட்சிகள், அருங்காட்சியகங்கள், இசைக் குழுக்கள், திரை, நாடக அரங்குகள், அதேபோல் நூலகங்கள், தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றிற்கு பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு தேவை என்று நாங்கள் கோருகிறோம். ஒரு சமுதாயத்தின் அறிவு சார்ந்த மற்றும் அறநெறி வளர்ச்சிக்காக, மக்கட்தொகையின் ஒவ்வொரு பிரிவும் இசை, நடனம், நாடகம், கலை இவற்றைக் கேட்க, காண இலவசமாக அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் வாய்ப்பைப் பெறவேண்டும். கலைகளுக்கான உதவித் தொகைகள், அளிப்புக்கள் இவற்றிற்கான இறுதி முடிவுகள் அரசியல் வாதிகள், அதிகாரத்துவத்தினரிடம் இருந்து அகற்றப்பட்டு, கலைஞர்கள், பாடகர்கள் மற்ற பண்பாட்டுத் துறையினரின் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

ஒரு சமீபத்திய ஆய்வின்படி, ஆஸ்திரேலியாவில் உள்ள 45,000 கலையை பிழைப்பாக கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வதாகத் தெரிகிறது---- ஒன்று அவர்கள் வேலையின்றி உள்ளனர் அல்லது மிகக் குறைந்த பகுதி நேர வேலையில் உள்ளனர். ஒரு கெளரவ வாழ்க்கைக்கு தேவையான ஊதியம் அவர்களுக்கு உறுதியளிக்கப்பட வேண்டும், அவர்கள் தங்களுடைய கலையை வளர்க்கத் தேவையான கருவிகள், இயந்திரங்கள் ஆகியவை தடையின்றிக் கொள்ள உறுதியளிக்கப்பட வேண்டும். அறைகூவல் விடும், திறனாய்ந்த வகை கலைப் படைப்புக்களுக்கு ஊக்கம் கொடுக்க மறுக்கும் சமுதாயம், அறிவுஜீவித மற்றும் கலாச்சாரத்தில் பாரிய சரிவை நோக்கிச் செல்லும்.

*விஞ்ஞான ஆராய்ச்சி: இயற்கையின் அடிப்படை வழிவகையை அறிந்து கொள்ளவும், சமுதாயத்தில் அனைவருக்கும் உள்ள திறனை வளர்ப்பதற்கும், முழுமையான, சுகாதாரமான, பாதுகாப்பான வாழ்வை வழங்குவதற்கும் விஞ்ஞான, தொழில்நுட்ப துறைகளில் பரந்த விரிவாக்க ஆராய்ச்சி இன்றியமையாதது ஆகும். இப்பொழுது, ஆராய்ச்சி பெருநிறுவன இலாபங்கள், அரசாங்கத்தின் அதிகார சக்தியைப் பெருக்கும் வகை இவற்றை மேம்படுத்தத்தான் நடக்கிறது. சமூக பயன்களுக்கு பதிலாக, தனியார் இலாபத்திற்குத்தான் ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கள் பண்டம் போல் பயன்படுத்தப்படுகின்றன. உற்பத்தித்துறையில் மற்ற கூறுபாடுகளைப் போலவே விஞ்ஞான ஆராய்ச்சியும் உண்மையான உழைக்கும் மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

* பேச்சு சுதந்திரம்: ஓர் உண்மையான ஜனநாயகத்திற்கு செய்தி ஊடகம், அரசியல் கருத்துக்களை வெளியிடுதல் என்பவை உண்மையான சுதந்திரத்துடன் இருக்க வேண்டும். மக்களுக்கான செய்தித் தொடர்பு நிறுவனங்கள் பெருகிய முறையில் கையளவு எண்ணிக்கையுள்ள செய்திப் பிரபுக்கள், பெருநிறுவனங்கள் இவர்களிடம் இருந்து, அரசாங்கம், பெரு வணிகம் இவற்றின் பிரச்சாரக் கருவியாக செயல்பட்டு, பொய்களையும், தவறான தகவல்களையும் அள்ளி வழங்குகின்றன. செய்தி ஊடகத் தனிஉரிமைகளை இல்லாதொழித்து அவை பொது உரிமையாகவும், பொதுக் கட்டுப்பாட்டிற்குள் இயங்குபவையாகவும் இருந்து மாற்றுக் கருத்துக்களும் அனைவரும் கேட்கவும், வெளியிடவும் செய்யக்கூடிய முறை, ஜனநாய முறையிலான நெறி என்று இருக்க வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வாதிடுகிறது.

தொழிலாள வர்க்கம்தான் அறிவுபூர்வமான, நல்லிணக்கமுடைய சமுதாயத்தை நிறுவும் திறனைக் கொண்டுள்ள ஒரே ஒரு சமூக சக்தி. இதில் அனைத்து ஊழியர்களும், அலுவலக பணியாளர்கள், தொழில் வல்லுனர்கள், கலைஞர்கள், அறிவுஜீவிகள், அதேபோல் தொழிற்துறை, பணித்துறை தொழிலாளர்கள் என்று அனைவரும் அடங்குவர். "மறைந்து கொண்டிருக்கிறது" என்று பல செய்தி ஊடகங்களும், உயர் கல்விக் கழகங்களும் கூறிக் கொண்டிருந்தாலும், தொழிலாள வர்க்கம் உலகளாவிய முறையில் விரிவாகப் பெருகிக் கொண்டிருக்கிறது; இதன் தொகுப்பில் நூற்றுக்கணக்கான மில்லியன்களில் ஆசிய, இலத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க அரை-காலனித்துவ நாடுகளின் பழைய விவசாயிகள், ஆலைகளிலும், மூர்க்கமான சுரண்டல் நிலையங்களிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்காக பணியில் கட்டாயமாக உழைக்க வேண்டிய கட்டாயப்படுத்தவர்களும் உள்ளனர்.

ஒரு சோசலிச மாற்றீட்டில் புதிய வெகுஜன அரசியல் இயக்கத்தை தோற்றுவிக்க சோசலிச சமத்துவ கட்சி போராடி வருகிறது. இதுதான் 2004 தேர்தலில் நாங்கள் தலையிடுவதின் முக்கிய நோக்கமாகும். உழைக்கும் மக்களுடைய சமூக, பொருளாதார நலன்களைப் பிரதிபலித்து, தங்கள் வாழ்க்கையை பாதிக்கும் முடிவுகளின் மீதான ஜனநாயகக் கட்டுப்பாட்டை பெரிதும் விரிவுபடுத்தும் வகையில், ஒரு தொழிலாளர் அரசாங்கம் நிறுவப்படவேண்டும் என்று நாங்கள் வாதிடுகிறோம். எங்களுடைய பிரச்சாரத்தின் நோக்கம் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை உயர்த்தி, அந்த வழியில் அதை வர்க்க நனவானதாக்க மாற்ற துணைபுரிந்தும் அரசியல்ரீதியாக சுயாதீனமான சக்தியாக மாற்றுவதுமாகும்.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக

பொருளாதார, சமூக, அரசியல் முழு சுதந்திரமும் தொழிலாள வர்க்கத்திற்குக் கிடைக்க வேண்டும் என்பதற்கு முக்கிய முன் நிபந்தனை, அது முதலாளித்துவ அரசியலின் அனைத்து வடிவமைப்புக்களில் இருந்தும் தனித்துச் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதுதான். இதன் பொருள் தொழிற் கட்சியில் இருந்து மட்டுமின்றி, பராம்பரிய தொழிலாளர் கட்சிகள் அனைத்தில் இருந்தும், பல்வேறு "மூன்றாம் கட்சி", "தீவிர" அமைப்புக்கள் எவ்வகையாயினும் சரி, தொழிற் கட்சிக்கு வக்காலத்து வாங்கி, இலாப முறைக்கு எதிராகப் போராடுவதைத் தடைசெய்யும் அனைத்து அமைப்புக்களில் இருந்தும், நனவுபூர்வமாக முறித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

1890ல் அது தோன்றிய காலத்தில் இருந்தே, ஆஸ்திரேலிய தொழிற் கட்சி ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தின், தேசிய அரசிற்கு முக்கிய தூணாக விளங்கி வந்துள்ளது. ஒவ்வொரு பெரிய அரசியல் நெருக்கடியிலும், ஆளும் வர்க்கம் தன்னுடைய தொழிற்கட்சி சேவகர்களைத்தான் நம்பியிருந்தது. தொழிற்கட்சிதான் இரண்டு உலகப் போர்களின் போதும் ஆட்சியில் இருந்தது, பெருமந்த நிலையின் தொடக்கத்திலும் ஆட்சில் இருந்தது, மேலும் 1980 களில் "சுதந்திர சந்தையை" செயற்பட்டியலையும் தொடக்கி வைத்தது. இதன் "வெள்ளை ஆஸ்திரேலியா" இனவாத தொடக்க வேலைத்திட்டம், இன்று தொழிற் கட்சியால், புகலிடம் கோருவோரை கட்டாயமாக சிறைப்படுத்த வேண்டும் என்பதற்கு வெளிப்படையான ஆதரவையும் கொடுத்துள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே, தொழிற் கட்சி இலாப முறைக்கு எதிரான புரட்சிகர எண்ணம் எதையும் எதிர்த்தே வந்துள்ளது. "சோசலிச நோக்கம்" என்ற மட்டுப்படுத்தப்பட்ட திட்டத்தைக் கூட ரஷ்ய புரட்சிக்குப் பின் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியைத் தடைசெய்யும் நோக்கத்தில் 1921ல்தான் ஏற்றது. உண்மையில், இதன் தலைவர்கள் எப்பொழுதுமே சோசலிசத்தை ஒரு அடைய முடியாத கற்பனை உலகு என்று உதறித் தள்ளியிருக்கின்றனர், மேலும் போலியான, தீமையான தோற்றமாகிய ஆளும் வர்க்கம் பாராளுமன்றச் சட்டத்தின் மூலமும் தொழிற்சங்க தீவிரத்தன்மையின் மூலமும் பெரும் சலுகைகள் கொடுக்கக் கட்டாயப்படுத்தமுடியும் என்பதையும் வளர்த்து வந்துள்ளது.

1950களிலும், 1960களிலும், அந்தப் பொய்த்தோற்றம் உண்மைபோல் வெளிப்பட்டிருந்தது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக போரையும், பெருமந்த நிலையும் கண்டிருந்த தொழிலாள வர்க்கத்தால் எதிர்கொள்ளப்பட்ட நிலையில் முதலாளித்தவ அரசாங்கங்கள் ஆஸ்திரேலியாவிலும், சர்வதேச அளவிலும், தொடர்ச்சியான சீர்திருத்தச் சட்டங்களை இயற்றின. ஆனால் 1970களில், போருக்குப் பிந்தைய பொருளாதார உயர்நிலை சரிந்தது. வீழ்ச்சி காணும் இலாப விகிதங்களை சமாளிக்கும் வகையில், பெரிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி முறையை, மலிவான தொழிலாளர், மலிவான மூலப்பொருட்கள் என்று கிடைக்கும் இடங்களில் கொள்ள தலைப்பட்டு, உலக மயமாக்கின. மூலதனத்தை ஈர்க்க வேண்டும் என்ற கருத்தில் எல்லா இடங்களிலும் அரசாங்கங்கள் மூலதனச் செயற்பாடுகளின் மீது இருந்த தடைகள் அனைத்தையும் அகற்றத்தலைப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் சமுதாய நிலையில் பெரும் சரிவுகளை ஏற்படுத்தின-----இத்திட்டம் ஹாக்-கீடிங் அரசாங்கங்களினால் தொடக்கப்பட்டு, ஹோவர்ட் அரசாங்கத்தால் தொடரப்பட்டது.

வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், அல்லது போரின் புறம் சாய்ந்து நிற்கும் தன்மை ஆகியவற்றை, தொழிற் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து மாற்றிவிட முடியும் என்று நம்புவது ஏமாற்றமானதேயாகும். தொழிற்சங்கங்களை நம்புவதும் அதுபோலத்தான். இவற்றின் உயரதிகாரிகள் நம்பிக்கையற்ற தன்மையைக் கொண்டு இருப்பதோடு, அவர்களுடைய முக்கிய புறநிலையானது, தங்கள் உறுப்பினர்களால் சுதந்திரமான முயற்சி மேற்கொள்ளப்படுவதை நசுக்குவதேயாகும், இந்த அமைப்புக்கள் தொழிலாளர்களுக்கு சலுகைகள் வாங்கித்தரவேண்டும் என்று கூட இப்பொழுது முயலுவதில்லை. மாறாக, "சர்வதேச அளவில் போட்டித்தன்மைக்காக", வேலையளிப்போருக்குச் சலுகைககள் கொடுக்குமாறு தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். பொருளாதாரத் தேசியவாதம், பாதுகாப்புவாதம் ஆகியவற்றின் பெயரில் முறையீடு செய்து, தொழிற்சங்கங்கள் ஆஸ்திரேலியத் தொழிலாளர்களை தங்கள் பெருநிறுவன முதலாளிகளுக்கு தாழ்ந்து நடக்குமாறும், அவர்களை உலகெங்கிலும் உள்ள தங்கள் வர்க்க சகோதர, சகோதரிகளிடம் இருந்து பிரிக்கவும் முயலுகின்றனர்.

ஹோவார்ட் அரசாங்க மற்றும் தொழிற் கட்சியின் கீழ் இருந்தது போலவே தொழிற்சங்கங்களின் பங்கு துரோகத்தன்மையை கொண்டுள்ளது. சீற்றமுற்ற தொழிற்சங்கத் தொழிலாளர்கள், மாணவர்கள், மற்ற எதிர்ப்பாளர்கள் ஆகியோர் கூட்டணியின் முதல் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்துப் பாராளுமன்றத்தை முற்றுகையிடுகையில், ஆஸ்திரேலிய தொழிற்சங்க சபை (ACTU), அந்த முற்றுகைக்கு எதிரான அதிகாரபூர்வ கண்டனத்தில் சேர்ந்ததுடன், உடனடியாக அரசாங்கத்தின் கொடூரமான வெட்டுகளுக்கு எதிராக தான் கொண்டிருந்த குறைந்தபட்ச பிரச்சாரத்தையும் நிறுத்தி விட்டது.

அப்பொழுதில் இருந்தே தொழிற்சங்கங்கள் ஹோவார்ட்டின் கொள்கைக்கு வரும் எந்த எதிர்ப்பையும் தடுத்து விடுகின்றன. புலப்பெயர்ந்தோர், அகதிகள் இவர்களுடைய உரிமைகளைக் காப்பதற்கு முற்றிலும் மாறாக, தொழிற்சங்க அதிகாரிகள் சட்ட விரோதத் தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களை விசாரிக்க ஊக்கப்படுத்தவும், சில நேரங்களில் நேரடியாகவே அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்து நாட்டை விட்டுத் துரத்தவும் முயன்றுள்ளனர். ஹோவார்ட போலவே, தொழிற்சங்கங்களும் வேலை அழிப்பு, வாழ்க்கைத்தரம் மீதான தாக்குதலில் தமது சதியிலிருந்து மக்களுடைய கவனத்தைத் திசை திருப்ப இனவெறியைக் கிளப்புகின்றனர். ஈராக்கியப் போருக்கும் முன்பு, சில "இடது" அதிகாரத்துவத்தினர் போரெதிர்ப்பு விமர்சகர் போல் காட்டிக் கொண்டனர். ஆனால் ஆஸ்திரேலியப் படைகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பப்பட்ட பின்னர், மொத்தமாகவே தொழிற்சங்கத்தினர் அனைவரும் இராணுவப் பொருட்களை நிறுத்தும் வகையில் தொழில் துறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கருத்தை நிராகரித்தனர்.

தொழிற் கட்சி, தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தை எவ்விதத்திலும் காப்பதில் தோல்வியுற்ற நிலை, தனிப்பட்ட நபர்களின் துரோகத்தன்மையினால் விளைந்துள்ளது அல்ல. இது அனைத்து தேசிய சீர்திருத்தவாத வேலை திட்டங்கள், முன்னோக்குகள் இவற்றின் வீழ்ச்சியிலிருந்து விளைந்ததாகும்.

இது மேலும் எதிர்ப்பு அரசியலின் திவாலை கோடிட்டுக் காட்டுகிறது. பசுமைகள், சோசலிஸ்ட் கூட்டு (Socialist Alliance) என்ற பிழையான பெயரைக் கொண்ட மற்ற "தீவிரவாதக்'' குழுக்கள் போன்றவை அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை எதிர்ப்பவர்கள் ஆவர். இறுதி ஆய்வில், அவர்களுடைய நோக்கம், தொழிற் கட்சி அல்லது ஆட்சியிலிருக்கும் இடதுகளுக்கு அழுத்தம் கொடுப்பது ஆகும். அவர்களுடைய கருத்து வேறுபாடுகள் எவையாயினும், அவர்கள் பெருகி வரும் எழுச்சிப்பாங்கு, குறிப்பாக இளைஞர்கள் இடையே இருப்பதை, அமைதியாகச் செல்லக் கூடிய பாராளுமன்ற இருகட்சி முறைக்கு திருப்ப முயலுகின்றனர்; இதற்கு உதவியாக உலகத்தின் பெரும் சிக்கல்கள் அனைத்தும் முதலாளித்துவத்தின் வரம்பிற்குள் தீர்க்கப்பட்டுவிட முடியும் என்ற கட்டுக்கதையையும் கூறுகின்றனர்.

இந்தத் தேர்தலில் இந்த அமைப்புகள் ஒன்று சேர்ந்து "ஹோவார்டை தவிர எவரேனும்" என்று கோஷமிடுகின்றன. வேறுவிதமாகக் கூறினால், ஒரு தொழிற் கட்சி அரசாங்கம், இரண்டாம் விருப்ப வாக்குகளின் உதவியுடன் மீண்டும் வரவேண்டும் என்று அவை வாதிடுகின்றன; ஆஸ்திரேலிய தொழிற்கட்சியின் வரலாற்றுக்குப் பின்பும், அது தாராளவாதிகளை விடக் "குறைந்த தீமை" யாக உள்ளது என்று இவை வலியுறுத்துகின்றன. சோசலிச சமத்துவக் கட்சி இந்தக் கூற்றுக்கள் அனைத்தையும் நிராகரிக்கிறது. "குறைந்த தீமை" என்பது ஒரு உறுதியான வர்க்க நலனைத்தான் அளிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக அது தொழிலாள வர்க்கத்தை இப்பொழுதுள்ள அதிகாரபூர்வ அரசியல் வடிவமைப்பு பொறிக்குள் சிக்க வைத்து, அதை தன்னுடைய முக்கிய பணியான, தனக்கென்று ஒரு சுயாதீனமான கட்சியை நிறுவுதலை மேற்கொள்ள இயலாமல் செய்துவிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புரிதலின் அடிப்படையில்தான், சோசலிச சமத்துவக் கட்சி தொழிற்கட்சிக்கு அல்லது "இடது" என்று கூறிக்கொள்ளும் எந்த மாற்றுக்களுக்கும் வாக்குச் சீட்டுக்களில் முன்னுரிமை வழங்காது.

பசுமைக்கட்சியை பொறுத்தவரையில் அவர்கள் எந்த விதத்திலும் தொழிலாள வர்க்கத்துடைய நலன்களைப் பற்றி உச்சரிப்பதேயில்லை. அவர்களுடைய சமீபகாலத்திய செல்வாக்கு இரண்டு காரணங்களால் வந்தவை: முதலில், "மூன்றாம் கட்சி" என்ற முறையில் ஜனநாயகக்கட்சி ஹோவார்டின் GST வரியை செனட்டில் ஆதரித்தை அடுத்து மதிப்பிழந்த நிலைமையும், இரண்டாவதாக, இது முக்கியத்துவமானதும் ஆகும், அவர்கள் ஈராக் போருக்குக் காட்டும் எதிர்ப்புமாகும். பசுமைகள் போரெதிர்ப்பாளர்கள் என்ற கருத்து அவர்களுக்கு இளைஞர்கள், மற்றும் விரோதப்படுத்தப்பட்டுவிட்ட, முக்கியத்துவம் வாய்ந்த, தொழிற்கட்சியின் வாக்குகளைப் பெரும் தளமாகக் கொடுத்துள்ளது. ஆனால் இரு பெரிய கட்சிகளுக்கும் மாற்றாக, பசுமைகள் தீவிர முன்போக்கான கட்சியினர் என்ற தோற்றத்தைக் கொடுத்தாலும் அவர்களுடைய திட்டங்கள் சிறிய, குறைந்த வகையில் உலகப் போட்டியை கொண்டுள்ள, தேசியம் சார்ந்த வணிகத்தின் நலன்களைத்தான் பிரதிபலிக்கின்றன. பொப் பிரெளன், பிரதம மந்திரி பதவிக்கு வெளிப்படையாக லாதமிற்கு ஆதரவைக் கொடுத்ததோடு, பெருவணிக நலன்களைப் பொறுத்த வரை, ஹோவார்டை விட, லாதம் சுற்றுச் சூழல் அக்கறைகளைக் கூடுதலாகக் கொள்வார் என்ற போலி நம்பிக்கைக்கு ஊக்கத்தையும் கொடுத்துள்ளார்.

லாதமைப் போலவே, பிரெளன் ஆஸ்திரேலிய படைகள் ஈராக்கில் இருந்து திருப்பப் பெற வேண்டும் என்று கூறுகிறார்; ஆனால் இது முற்றிலும் தேசிய அடிப்படையில் உள்ளது. "நம்முடைய பிராந்தியத்தின் பாதுகாப்பிற்காக நம்முடைய படைகளைத் திருப்பிக் கொண்டுவரவேண்டும்" என்று கடந்த ஏப்ரல் மாதம் அவர் அறிவித்தார். இதே காரணம்தான் ஹோவார்டின் நவீன-காலனித்துவ முறையிலான இராணுவத் தலையீடு கிழக்கு தீமோர் மற்றும் சொலோமன் தீவுகளில் நடைபெற்ற போது பசுமைகளின் ஆதரவிற்குப் பின்னணியாக இருந்தது.

பசுமைகள் பதவி வகித்தபோதெல்லாம், 1980களில் டாஸ்மேனியாவில் தொழிற்கட்சியுடன் கூட்டாக இருந்தபோது, அல்லது இன்று ஜேர்மனியில் உள்ளது போல், அவர்கள் வெகு விரைவில் தங்களுடைய முற்போக்குக் கருத்துக்கள், சமாதான வெற்றுப் பேச்சுக்களை இவற்றை தேர்தல் வாக்குறுதிகளுடன் மறந்து விடுகின்றனர். டாஸ்மேனியாவில் அந்த மாநில வரலாற்றிலேயே மிகப் பெரிய வேலை வெட்டுக்கள் ஏற்படுத்துவதற்கு அவர்கள் உறுதுணையாக இருந்தனர். ஜேர்மனியில் அவர்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் முதல் தடவையாக ஜேர்மன் படைகள் வெளிநாடுகளில் பயன்படுத்துவதற்கு ஆதரவு கொடுத்தனர்.

சோசலிஸ்ட் கூட்டு, (Socialist Alliance) பல "சோசலிஸ்ட்" அமைப்புக்கள் ஒன்று சேர்ந்த ஒரு பொருத்தமற்ற கூட்டணியாகும்; இது, 1960 களிலும், 1970ன் முன் பகுதியிலும் இருந்த வியட்நாம் நடவடிக்கைகளுக்கு எதிரான காலகட்டத்தில் முக்கியத்துவத்தை அடைந்தது. சோசலிசத்தை சம்பிரதாய முறையாகக் கொண்டாலும், அவர்கள் அதனுடைய மையக் கருத்தாய்வை நிராகரித்துள்ளனர்; அதாவது தொழிலாள வர்க்கம் சுயாதீனமான அரசியல் அமைப்பைக் கொள்ளவேண்டும் என்பதையாகும். இதன் விளைவாக ஏதேனும் ஒரு முதலாளித்துவ கட்சியின் பின்பு இவர்கள் சார்ந்து உள்ள நிலையைப் பார்க்கிறோம். இந்தத் தேர்தலில் சோசலிஸ்ட் கூட்டு, பசுமைகள், ஆஸ்திரேலிய தொழிற்கட்சி என்ற இரு அமைப்புக்களின் பின் தொடர்ந்து, ஈராக்கியப் போருக்கான எதிர்ப்பிற்கு பாராட்டி தொழிற்கட்சி இடது புறம் நகர்த்தப்படலாம் என்றும் பசுமைகள் கூறிவருகின்றனர்.

பசுமைகளைப் போலவே, சோசலிஸ்ட் கூட்டில் உள்ள குழுக்கள் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத் தலையீடு கிழக்கு தீமோரில் நடந்ததற்கு ஆதரவு தெரிவித்தன; "படைகளை கொண்டு செல்" என்று பிரச்சாரம் செய்து கொண்டு, இவை ஹோவார்ட் படைகள் அனுப்பியதை வெற்றிவிழாவாகக் கொண்டாடின. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கிழக்கு தீமோர் இன்னும் உலகத்தின் மிக வறிய நாடுகளில் ஒன்றாக, தீமோர் கடல் எண்ணெய், எரிவாயு முதலியவை ஆஸ்திரேலியாவின் "விடுதலை கொடுத்தவர்களால்" பெரும் பகுதி மறுக்கப்பட்ட நிலையில்தான் இருக்கின்றது. சோஷலிஸ்ட் கூட்டு, ஈராக்கில் ஆஸ்திரேலிய படைகள் இருப்பதை எதிர்த்த போதிலும், கிழக்கு தீமோரில் "படைகளை கொண்டுசெல்" என்பதுதான் ஆஸ்திரேலியா வெளிநாடுகளில் இராணுவத் தலையீடுகளினால் வியட்நாம் காலத்திற்குப் பின் பெற்ற கறையை போக்க உதவியது.

இந்த அனுபவங்களில் இருந்து திறனாய்ந்த படிப்பினைகளைக் கற்க வேண்டும். "குறைந்த தீமை" அரசியல் என்பவை உழைக்கும் மக்களைப் பொறுத்தவரையில் ஆபத்தான பொறியாகும். இருகட்சி முறையைச் சீர்திருத்தவும் முடியாது, அதன் நலன்கள், தேவைகளைப் பெற அதற்கு அழுத்தமும் கொடுக்க முடியாது. அயராமல், பொறுமையுடன், கொள்கையளவில் நடத்தப்பட்டுப் போராடி, ஒரு சுயாதீனமான, பரந்த வெகுஜன சோசலிச கட்சியை நிறுவுவதைவிட வேறு எந்த வழியும் கிடையாது. இந்தக் கருத்துருதான் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் அச்சாணியாக அமைந்துள்ளது.

சோசலிசமும் தொழிலாள வர்க்கமும்

சர்வதேச சோசலிச இயக்கத்தின் மாபெரும் விடுதலைக்கான மரபுகளில் சோசலிச சமத்துவக் கட்சி தன்னுடைய அடித்தளத்தைக் கொண்டுள்ளது. சோசலிசம் என்றால் சமத்துவம், மனித ஒருமைப்பாடு மற்றும் அடக்குமுறை, தேவை இவற்றில் இருந்து விடுதலை என்ற பொருள் ஆகும். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் மனித குலத்தில் உற்பத்தித் திறன் இவற்றில் ஏற்பட்டுள்ள மகத்தான முன்னேற்றத்தின் அடிப்படையில் இந்த இலக்குகள் முற்றிலும் சாதிக்கப்படக் கூடியவையே ஆகும்; இவை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவான உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வேலைதிட்டத்திலும் மற்றும் அதன் வலைத் தள மையமான உலக சோசலிச வலைத் தளத்திலும் உள்ளனங்கியுள்ளன.

1917 அக்டோபர் புரட்சி ஒரு பரந்தபட்ட மக்கள் இயக்கத்தின் முன்னோக்காக வந்து, முதலாளித்துவத்தை வீழ்த்தி, சோவியத் ஒன்றியத்தை முதல் தொழிலாளர்களின் நாடாக நிறுவியதன் மூலம் விஞ்ஞான சோசலிசமான மார்க்சிசம் தன்னுடைய சாத்தியமான தன்மையை நிரூபித்தது. போல்ஷிவிக்குகளின் தலைமையில் நடத்தப்பட்ட இந்தப் புரட்சி ஒரு பரந்த சர்வதேச தொழிலாளர் இயக்கத்துடன் பிணைந்து நின்று ஊக்கம் பெற்று, முதலாளித்துவத்தின் கொள்ளைகாரத்தனத்திற்கு எதிரானதாக நடந்தது. மற்றைய நாடுகளைப் போலவே ஆஸ்திரேலியாவிலும் சோசலிஸ்டுகள், எட்டு மணி-நேர உழைக்கும் நாள், வாக்குரிமை, கட்டாய இராணுவசேவைக்கு எதிரானவை போன்ற ஒவ்வோர் முக்கிய அரசியல் போராட்டத்திலும் முன்னணியில் நின்றனர்.

ஆனால், எல்லா இடங்களிலும் சோசலிசப் புரட்சிகள் தோல்வியுற்றமை, முதல் தொழிலாளர்களின் ஏழ்மையான, போரினால் தாக்கப்பட்ட பொருளதாரத்தைக் கொண்டிருந்த நாட்டை தனிமைப்படுத்தி, சலுகை பெற்ற ஜோசப் ஸ்ராலின் தலைமையிலான அதிகாரத்துவத்தின் எழுச்சிக்கும், பின்னர் அதன் வெற்றிக்கும் காரணமாகியது. ரஷ்ய புரட்சி அடிப்படையாகக் கொண்டிருந்த சர்வதேச முன்னோக்கை ஸ்ராலினிஸ்டுகள் கைவிட்டு, அதற்கு மாறாக மார்க்சிச-விரோதமான "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" என்ற கருத்தை ஏற்றனர். இந்த தேசியப் பார்வை சோவியத் ஜனநாயகத்தை அழித்த ஒரு அடக்குமுறைமிக்க அதிகாரத்துவத்திற்கு கருத்தியல் அடித்தளத்தை வழங்கியதுடன், சோசலிசத்தை அடிப்படையாக கொண்ட எதிர்ப்பை நசுக்கி, உலகெங்கிலும் தொழிலாளர்களின் புரட்சிப் போராட்டங்களை அழித்தது. இந்தக் காட்டிக் கொடுத்தல்கள் 1991ல் உச்சக் கட்டத்தை அடைந்து, கிரெம்ளினில் ஸ்ராலினுக்குப் பின் வந்தவர்கள் சோவியத் ஒன்றியத்தை அழித்து முதலாளித்துவ புனருத்தானத்திற்கும், அதனை தொடர்ந்த பேரழிவுகளுக்கும் ஏதுவாயிற்று.

தொழிற்கட்சி, தொழிற்சங்கம், ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் இவற்றிற்கெதிராகவும் சோசலிசத்திற்கு ஆதரவாகவும் இருந்த மிகத்தைரியமான, பெருந்தொலைநோக்குடைய தொழிலாள வர்க்கத்தின் பிரதிநிதிகளின் பாரம்பரியத்தில் சோசலிச சமத்துவக் கட்சி தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. இது 1923ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்ட சர்வதேச இடது எதிர்ப்பு, சர்வதேச தொழிலாள இயக்க மறுபிறப்பிற்காக ட்ரொட்ஸ்கியால் 1938ல் நிறுவப்பட்ட உலக சோசலிச புரட்சிக்கான கட்சியான நான்காம் அகிலத்தினது பாரம்பரியத்தையும் உள்ளடக்கியுள்ளது.

1972ம் ஆண்டு, சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான சோசலிச தொழிலாளர் கழகம், இந்த சர்வதேச முன்னோக்கை வளர்ப்பதற்கும், நிலைநிறுத்துவதற்காகவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஆஸ்திரேலியப் பிரிவாகத் தோற்றுவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் சோசலிச தொழிலாளர் கழகத்திற்கும் சோசலிச சமத்துவக் கட்சிக்கும் ஒரு நீண்ட மதிப்பிற்குரிய வரலாறு உண்டு. எங்களுடைய செய்தித்தாளான Workers News, ஒரு தனித்த சுயாதீனமான சோசலிச ஆய்வையும் முன்னோக்கையும் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பெரிய போராட்டங்களிலும் தலையிட்டு, ஜனநாயக உரிமைகளை பாதுகாத்ததுடன், 20ம் நூற்றாண்டில் உலகெங்கிலும் உள்ள சர்வதேச உழைக்கும் மக்களின் அனுபவங்களின் மூலோபாயங்களின் படிப்பினைகளை தத்துவார்த்தரீதியில் தெளிவுபடுத்தியும் வந்துள்ளது. 1998ல் இருந்து சோசலிச சமத்துவ கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவில் இருக்கும் சகோதர கட்சிகளுடன் ஒருங்கிணைந்து உலக சோசலிச வலைத் தளத்தை பராமரிப்பதிலும் தன் பங்கைக் கொண்டுள்ளது.

போர், சமூக சமத்துவமின்மை, பிற்போக்குத் தன்மை இவற்றிற்கு எதிரான உண்மையான மாற்றீட்டின் வளர்ச்சியை விரும்புவோர் அனைவரையும் எங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக பங்கு பெற அழைப்பு விடுக்கின்றோம். எமது வேட்பாளர்களை பிரபலப்படுத்தவும், பொதுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யவும், நம்முடைய தேர்தல் பிரச்சாரக் கருத்துக்களை தங்கள் நண்பர்கள், சக ஊழியர்கள் ஆகியோருடன் எமது தேர்தல் அறிக்கைகளை விவாதிக்குமாறும், எமது தேர்தல் நிதிக்கு நன்கொடைகள் வழங்குமாறும், அத்துடன் மிகப் பரந்த முறையில் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர் வட்டத்தை அதிகரிக்க ஊக்கம் தரும் வகையில் உதவுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, எமது வேலைதிட்டத்துடனும் முன்னோக்குடனும் உடன்பாடு கொள்வோர் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து, அதை தொழிலாள வர்க்கத்தின் புதிய அரசியல் கட்சியாக கட்டியெழுப்ப முன்வருமாறு அழைப்புவிடுக்கின்றோம்.

Top of page