World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

An open letter to Michael Moore

மைக்கேல் மூருக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

28 September 2004

Use this version to print | Send this link by email | Email the author

நாடெங்கிலும் 20 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்ட போர் எதிர்ப்பு, புஷ்-விரோத பாரன்ஹீட் 9/11 திரைப்படத் தயாரிப்பாளரும், கதை எழுதுபவருமான மைக்கேல் மூர் இப்பொழுது இளைஞர்களுக்கு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோன் கெர்ரிக்கு நவம்பர் தேர்தலில் வாக்களிக்க ஊக்கம் தரும் வகையில் நாடு முழுவதும் கல்வி வளாகங்களில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இவர் தற்பொழுது மிச்சிகனில் உரையாற்றி வருகிறார். ஆன் ஆர்பரிலுள்ள மிச்சிகன் பல்கலைக் கழகம் அடங்கியிருக்கும் மிச்சிகனின் 15வது தேசிய சட்டமன்றத் தொகுதியில், பிரதிநிதிகள் மன்றத்திற்கு சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஜெரோம் ஓய்ட் எழுதியுள்ள பகிரங்கக்கடிதம் கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது. இக்கடிதம் PDF வடிவமைப்பிலும் கிடைக்கும்.

அன்புள்ள மைக்கேல் மூர்,

இந்த வாரம், எதிர்வரும் நவம்பர் தேர்தல்களில் ஜோன் கெர்ரிக்கு வாக்களிப்பதற்கு மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஊக்கம் தரும் நோக்கத்துடன், நீங்கள் நாடெங்கிலும் உள்ள மாநிலங்களில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளீர்கள். உங்களுடைய ஆதரவளார்களுக்கு நீங்கள் எழுதியுள்ள கடிதத்தில், "மந்த நிலையில் இருப்போரை தட்டி எழுப்பும் பயணம், வெறுத்துப் போயிருக்கும், சிதைந்து போயிருக்கும், நாடெராலும் தகர்க்கப்பட்டிருக்கும் மக்களை அரைமணி நேரம் நவம்பர் 2ம் தேதி வெளிவந்து, ஒரு பெட்டியில் "X" முத்திரையிட்டு வாக்குகளைப் போடுமாறும்... அதையொட்டி அமெரிக்காவும் உலகும் காப்பாற்றப்படும்" என்றும் எழுதியுள்ளீர்கள். பின்னர் நீங்கள் இந்த "X" முத்திரை கெர்ரிக்காகப் போடப்படவேண்டும் என்றும் தெளிவு படுத்தியுள்ளீர்கள்.

நீங்கள் வெளிப்படையாக ஜோன் கெர்ரிக்குப் பிரச்சாரம் செய்வது, பாரன்ஹீட் 9/11 தயாரிப்பிற்காக உங்களைப் பெரிதும் பாரட்டி வரவேற்ற எங்களில் பலருக்கு பெரும் ஏமாற்றமாக வந்துள்ளது என்பதை நான் கூறவேண்டியுள்ளது. உங்களுடைய திரைப்படம் அமெரிக்கா, மற்றும் சர்வதேச வகையில், மில்லியன் கணக்கான மக்களால், முழுமையாகப் பெரும் பாராட்டை நியாயமாகப் பெற்றுள்ளது; ஏனெனில் அவர்கள் தங்களுடைய ஈராக் போர் எதிர்ப்பு, மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் மிருகத்தனமான கொள்கைக்கு எதிர்ப்பு இரண்டையும் இப்படத்தில் வெளிப்பாடாகக் கண்டுள்ளனர்.

ஆயினும், பாரென்ஹீட் 9/11 இன் சிறந்த கூறுபாடுகள் இப்பொழுது ஜனாதிபதி தேர்தல்களில் நீங்கள் எடுத்துள்ள போக்கிற்கு முற்றிலும் முரண்பாடாக விளங்குகின்றன.

உங்களுடைய ஆவணத் திரைப்படத்தில் மிக உருக்கமான பகுதிகளில் சில, இந்நாட்டில் உள்ள சமூக பிளவுகளை நன்கு ஆராய்ந்துள்ளன; அதுவும் உங்களுடைய ஊரான மிச்சிகனில் உள்ள பிளின்ட்டை நன்கு வெளிப்படுத்தியுள்ளன. போர், பெருநிறுவனங்கள் மற்றும் ஆளும் செல்வந்தத்தட்டினரின் நலன்களுக்காக நடத்தப்படுகிறது என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். போரின் பேரழிவு விளைவுகள், இன்றும் தொடர்ந்து குண்டுவீச்சுக்களை எதிர்கொண்டு, மிக இழிவான வாழ்க்கை நிலைமைகளை கொண்டு, ஓர் வெளிநாட்டின் மிருகத்தனமான ஆக்கிரமிப்பையும் எதிர்கொண்டுள்ள, ஈராக்கிய மக்களால் மட்டும் சுமக்கப்படவில்லை என்றும், ஒரு அநீதியான, சட்டநெறிக்குப் புறம்பான ஆக்கிரமிப்பு செயலினால் கொல்லுதலுக்கும், கொல்லவும் உட்பட்டுள்ள சாதாரண அமெரிக்க உழைக்கும் மக்களாலும் சுமக்கப்படுகிறது என்பதை நீங்கள் விளக்கிக் காட்டினீர்கள்.

உங்களுடைய படத்தை முடிக்கும்போது, ஜோர்ஜ் ஓர்வெலின் மேற்கோள் ஒன்றைக் கூறியுள்ளீர்கள்; இது சமூக சமத்துவமற்ற முறையையும், முதலாளித்துவ அமைப்பையும் குற்றம்சாட்டும் வகையில் உள்ளது. "சமுதாயத்தின் ஏற்றப்படிகள் வறுமை, அறியாமை இவற்றின் அடிப்படையில்தான் சாத்தியமாக இருக்கிறது.... இப்போர் தன்னுடைய மக்களுக்கு எதிராகவே ஒரு ஆளும் குழுவால் நடத்தப்படுகிறது; இதன் நோக்கம் வெற்றி அல்ல... சமூக அமைப்பை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்பதுதான்."

ஈராக் போரின் அடிப்படைக் காரணத்தை உணர்ந்துகொள்ளுவது என்பது அமெரிக்காவிற்குள் இருக்கும் தீவிர சமுதாய விரோதப் போக்குகளை அறிதல் என்பது மட்டுமின்றி, அதனுடன் உறுதியான அரசியல் முடிவுகளுக்கு -குறிப்பாக, போருக்கு திறமான மற்றும் சக்திமிக்க எதிர்ப்பு உணர்வதற்கு "சமூகத்தின் கட்டமைப்பை" போருக்குப் பொறுப்பான முதலாளித்துவ கட்டமைப்பை, அதாவது எதிர்க்கக் கூடிய ஒரு இயக்கத்தைக் கட்டுவது தேவைப்படுகிறது. இந்த முடிவு தொடக்கக் கருத்தாய்வில் இருந்து தர்க்கரீதியாக வெளிவருகிறது. அப்படியானால், இதை ஜோன் கெர்ரிக்கு வாக்கு அளிக்கும் வகையில் எவ்வாறு தீர்வு காண இயலும்?

ஜோன் கெர்ரி, மற்றும் ஜனநாயகக் கட்சி அமெரிக்க சமுதாய அமைப்பிற்கு சவால் விடும் தன்மையை பிரதிபலிக்கவில்லை என்பதை நீங்கள் நன்கு அறிந்துள்ளீர்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஜனநாயகக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பது உண்மையென்றாலும், அத்தகைய வேறுபாடுகள் அடிப்படைத் தன்மையைக் கொண்டிருக்கவில்லை.

ஜனநாயகக் கட்சி, அதேபோல்தான் குடியரசுக் கட்சியும், பெருவணிகக் கட்சி மற்றும் சமூக சமத்துவமின்மையை பேணும் கட்சியாகும். இது சாதாரண உழைக்கும் மக்களுக்காகவும், இளைஞர்களுக்காவும் குரல் கொடுக்கவில்லை. இது ஒன்றும் கிளின்டன் நிர்வாகத்தின் சான்றும், கெர்ரியுடைய சொந்த நிலைப்பாடுமே தெளிவாக்குவது போல், போர் எதிர்ப்புக் கட்சி அல்ல.

இரண்டாம் கருத்தை ஒட்டி, நீங்கள் உங்களுடைய பயணத்தின் முதல் உரையில், இறுதியில் புஷ் நிர்வாகம் ஈராக் போரை நடத்தும் முறைபற்றித் தீவிர விமர்சனம் செய்ததைப் பற்றிக் குறிப்பிட்டு, கெர்ரியைப் புகழ்ந்துள்ளீர்கள். "கடந்த இரண்டு வார காலத்தில், கெர்ரி தவறானவர்களுக்கு செவி மடுக்காமல், தன்னையே செவிமடுத்துக் கொள்ளுகிறார்; அவர் அவராகத்தான் இருக்கிறார்." என்று கூறியுள்ளீர்கள். கெர்ரி, ஈராக் போருக்கு ஒப்புதல் அளித்து தீர்மானத்திற்கு வாக்களித்ததற்கு, நீங்கள் அமெரிக்க மக்களிடம் "கெர்ரிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்" என்றும் அவர் மாறிவிட்டார் என்றும் கூறியுள்ளீர்கள்.

ஆனால் கெர்ரியுடைய அறிக்கைகளில் இருந்தே அவர், புஷ், குடியரசுக் கட்சிக்கு குறையாத வகையில், ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு தருகிறார் என்பது மிகவும் தெளிவாக இருக்கும். அமெரிக்க இராணுவம், அதன் கைப்பொம்மை ஆட்சிக்கு ஈராக்கில் பெருகி வரும் எதிர்ப்பு, ஆளும் செல்வந்தத் தட்டுக்குள்ளேயே பெரும் கவலையை ஏற்படுத்தி இருப்பது, கெர்ரி பிரச்சாரத்தில் பிரதிபலிக்கிறது. ஆனால் ஆக்கிரமிப்பை முடிவிற்குக் கொண்டு வருவது பற்றி எந்தப் பேச்சும் இல்லை.

புஷ்ஷைப் போன்றே, கெர்ரியும் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பிற்கு ஈராக்கிய மக்கள் காட்டும் எதிர்ப்பை பற்றிப் பேசும்போது, "எதிரிகள்" எனக் கூறி கிளர்ச்சியாளர்களை "பயங்கரவாதிகள்" என்று முத்திரையிட்டுள்ளார்.

சில அமெரிக்கப்படைகளை நான்கு ஆண்டுகளுக்குள் திரும்பப் பெறலாம் என்று கெர்ரி கூறியிருப்பது, போதுமான படைகள் மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்கப் படைகளுக்குப் பதிலாக வந்து ஈராக்கிய மக்களை அடக்கினால்தான், என்ற நிபந்தனையில்தான் உள்ளது.

தற்போது நடந்துகொண்டிருக்கும் ஈராக்கிய நகரங்களின் மீதான மிருகத்தனமான குண்டுவீச்சுக்களைப் பற்றி கெர்ரி ஏதும் கூறவில்லை; இன்னும் பல்லூஜா போன்ற நகரங்களில் தோன்றியுள்ள எதிர்ப்புக்களை அடக்குவதற்காக மிகப் பெரிய அளவில் நடைபெற்று வரும் தயாரிப்புக்களைப் பற்றியும் அவர் ஏதும் கூறவில்லை. அவர் ஏதும் கூறாததற்குக் காரணம், இந்தக் கொள்கையை அவர் எதிர்க்கவில்லை என்பதால்தான்; மேலும் அவர் தன்னுடைய நிர்வாகம் ஈராக்கில் "உறுதித் தன்மையை" வளர்க்க முயற்சிகளை மேற்கொள்ளும் என்று தொடர்ந்து கூறிவருகிறார். இன்னும் பல்லாயிரக்கணக்கான ஈராக்கியர்கள், அந்நாட்டில் அமெரிக்க ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக படுகொலை செய்யப்படுவர் என்பதே இதன் பொருளாகும்.

ஜனநாயகக் கட்சி, கெர்ரியின் பிரச்சாரம் முறையான வகையில் நாடெங்கிலும் மூன்றாம் கட்சி அல்லது சுயேச்சை வேட்பாளர்கள் போரை எதிர்ப்பவர்கள், வாக்குச்சீட்டில் பதிவு செய்யப்படாத வகையில் நடைபெற்று வருகிறது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்தத் தாக்குதலின் இலக்குகளில், சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள், ரால்ப் நாடெர், இன்னும் பலரும் அடங்கியுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் சிறுபான்மையினர், உழைக்கும் மக்களுடைய வாக்குகளை நசுக்கிவிடவேண்டும் என்று குடியரசுக் கட்சியினர் மேற்கொண்டுள்ள ஜனநாயக விரோதப் போக்கிற்கு இந்த முயற்சியும் சிறிதும் குறைந்தது அல்ல. ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்கள், வறியவர்கள், இளைஞர்கள் என்று SEP வேட்பாளர்களை வாக்குச்சீட்டில் பதிவு செய்யக்கோரியிருந்த மனுவில் கையெழுத்திட்டவர்கள், தேர்தல் அதிகாரிகளால் வாக்குரிமை இழந்து நிற்கின்றனர்; ஒரு, சோசலிச, போர் எதிர்ப்பு வேட்பாளரை வாக்குச் சீட்டில் பதிவு செய்யக் கூடாது என்பதற்காக அதிகாரிகள் இவர்களுடைய கையெழுத்துக்களைத் தள்ளுபடி செய்து விட்டனர்.

உங்களுடைய ஆதரவை ஜோன் கெர்ரிக்கும், ஜனநாயகக் கட்சிக்கும் கொடுத்துள்ள வகையில், நீங்கள் உங்களுடைய கொள்கைகளையும், உங்கள் மனச்சாட்சியையும் கூட சமரசத்திற்கு உட்படுத்தியுள்ளீர்கள்.

அமெரிக்க மக்களை எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய ஆபத்து இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு புஷ் நிர்வாகம் என்பது அல்ல. அமெரிக்க மக்களை எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய ஆபத்து, இப்பொழுதுள்ள சமூக அமைப்பு முறைக்கு உண்மையான எதிர்ப்பை அமைப்பதில் அவர்கள் கண்டுள்ள தோல்வியே ஆகும்; இம்முறையின் மிகப் பெரிய புரையோடியுள்ள வெளிப்பாடுகளுள் ஒன்றுதான் புஷ் நிர்வாகம் ஆகும்.

ஒவ்வொரு தேர்தலிலும் இதே பல்லவியைத்தான் நாம் கேட்கிறோம்: குடியரசுக் கட்சியை தோற்கடிப்பதற்காக ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கவேண்டும் என்று. ஒவ்வொரு முறையும் உழைக்கும் மக்களுக்கான சுயாதீனமான கட்சியை அமைக்கும் பணி ஒத்திப் போடப்படுகிறது. இதன் விளைவு முற்றிலும் எதிர்பார்க்கக் கூடியதே: ஆளும் செல்வந்தத்தட்டின் ஆதிக்கத்திற்கு மாற்று ஏதும் இல்லை என்ற நிலையில்தான் நாம் விடப்படுகிறோம்.

திரு. மூர் அவர்களே, எளிதான தீர்வுகள் கிடைப்பதில்லை. எளிதான பிரச்சினைகளுக்கு எளிதான தீர்வுகள் கிடைக்கும்; நாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மிகவும் கடினமானவை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களுடைய கடுமையான பணியால், உங்களுக்கு உங்களை அரசியலில் வழிகாட்ட எதிர்நோக்கியுள்ள மக்கட்திரளின் ஆதரவு கிடைத்துள்ளது. அரசியல் விவாதத்தை மிக உயர்ந்த தரத்திற்குச் செலுத்தும் பெரும் பொறுப்பை இது உங்களுக்கு அளித்துள்ளது. நம்மை எதிர்கொண்டுள்ள பணிகளைப் பற்றி இந்தப் பொறுப்பை நல்ல முறையில் தீவிரமாகச் சிந்தித்து, அமெரிக்க மக்களுக்கு முழு உண்மையையும் கூற வேண்டும்.

இந்தப் பிரச்சினைகளை கவனமாக பரிசீலிக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன். இப்பொழுது நீங்கள் செய்யக் கூடிய முக்கியமான நடவடிக்கை என்னவென்றால், நான் மற்றும் SEP கட்சி போன்றவர்கள் முதலாளித்துவ இரு-கட்சி முறைக்கு ஒரு சோசலிச மாற்று அமைப்பை கட்டுதற்கு மேற்கொண்டுள்ள தற்போதைய முயற்சிகளுக்கு குரல் கொடுத்தல்தான். அத்தகைய நடவடிக்கை, அத்தகைய நடவடிக்கைதான், போர், அநீதி, சமத்துவமற்ற தன்மை இவற்றிற்கு எதிரான போராட்டத்தில் முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

உண்மையுள்ள,

ஜெரோம் ஒய்ட்,

மிச்சிகனுக்கான 15வது தேசியச்சட்ட மன்றத் தொகுதியின் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்

செப்டம்பர் 28, 2004

Top of page