World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraq WMD report proves Bush, Democrats lied to justify Iraq war

ஈராக் போரை நியாயப்படுத்த ஜனநாயகக் கட்சியினரும், புஷ்ஷும் சொன்ன பொய்யை, ஈராக்கின் பேரழிவுகரமான ஆயுதங்கள் தொடர்பான அறிக்கை நிரூபிக்கிறது

By the Editorial Board
8 October 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக் ஆய்வு குழுவின் (ISG) தலைவரான Charles Duelfer அக்டோபர் 6 இல் வெளியிட்டுள்ள அறிக்கையானது, ஒரு ஜனாதிபதி அல்லது ஒரு நிர்வாகத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆளும் தட்டினரையே குற்றம் சாட்டுவதாக அமைந்திருக்கிறது. ஈராக்கிடம் பேரழிவுகரமான ஆயுதங்கள் இருப்பதாக, மூன்று அமெரிக்க நிர்வாகங்களான ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளை சார்ந்த மற்றும் அமெரிக்க ஊடகங்கள் கிளிப்பிள்ளைகள் போல் அப்படியே வெளியிட்ட அந்தக் கூற்றுக்கள் அப்பட்டமான பொய்கள் என்று அந்த அறிக்கை உறுதிப்படுத்தியிருக்கிறது.

தன்னிடம் பேரழிவுகரமான ஆயுதங்கள் இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றி ஈராக் அரசாங்கம் உண்மையை கூறியது. ஐக்கிய நாடுகள் சபையின் பரிசோதகர்களான முகமத் அல்பரடே மற்றும் ஹென்ஸ் பிளிக்ஸ் பேரழிவுகரமான ஆயுதங்கள் குவிக்கப்பட்டிருப்பது, அல்லது அணு ஆயுதங்கள் நடவடிக்கை தொடர்பாக எந்த விதமான சான்றும் இல்லை என்ற உண்மையை கூறினார்கள். ஈராக் தனது பேரழிவுகரமான ஆயுதங்கள் தயாரிக்கும் ஆற்றலை நீண்டகாலத்திற்கு முன்னரே அழித்துவிட்டது என்ற உண்மையை முன்னாள் ஆயுத பரிசோதகர் Scott Ritter கூறியிருந்தார்.

அமெரிக்க அரசாங்கத்தின் பொய்களை கண்ட கோடிக்கணக்கான மக்கள் உலகம் முழுவதிலும் பலபத்துநாடுகளில் அமெரிக்கப் படையெடுப்பிற்கு எதிராக பேரணிகளை நடத்தியது சரிதான். Goebbels இன் வழிமுறைகளை பின்பற்றி ''பெரிய பொய்யை'' திரும்பத்திரும்ப சொல்லி அதையே மெய்யாக்கும் கலையை, மேற்கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் குற்றம்மிக்க சதிச்செயல் புரிந்த குற்றச்சாட்டிற்கு இலக்காகியுள்ளது.

1991 இலேயே ஈராக் தனது இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை அழித்துவிட்டது என்றும் அதற்குப் பின்னர் திரும்ப அத்திட்டத்தை செயல்படுத்தவில்லை என்றும் Duelfer அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அந்நாட்டிடம் அணு ஆயுதங்களை தயாரிக்கும் திட்டம் இல்லாததுடன், அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு தேவைப்படுகின்ற உற்பத்தி தொழில் நுட்பங்களையோ அல்லது, மூலப்பொருட்களையோ அபிவிருத்திசெய்வதற்கு அந்த நாடு எதையும் செய்யவில்லை. அதற்கு மாறாக அமெரிக்க ஆதரவோடு விதிக்கப்பட்ட பொருளாதார முற்றுகையினால்--- மிக பாரதூரமான தாக்கம் ஏற்பட்டு ஒரு மில்லியன் ஈராக்கியர்கள் மடிகின்ற நிலை ஏற்பட்டது, அவர்களில் பாதி குழந்தைகள் மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்கள் கிடைக்காததால் மடிந்தனர்---- எந்த வகையான இராணுவ ஸ்தாபனங்களையும் உருவாக்குகின்ற ஆற்றல் படிப்படியாக இல்லாதுபோய்விட்டது.

ஈராக் ஆய்வுக்குழு 1200 இற்கு மேற்பட்ட ஆய்வாளர்களை CIA கட்டளைப்படி அணிதிரட்டி அமெரிக்க படையெடுப்பை தொடருவதற்கு முன்னான 15 மாதங்கள் ஈராக் முழுவதிலும் சோதனை செய்தது. ஆயுதங்கள் கையிருப்பு, ஆயுதத்தயாரிப்பு தொழிற்சாலை, இரகசிய ஆய்வுக்கூடங்கள் அல்லது புஷ் -நிர்வாகம் கூறிய எந்த இதர வசதிகளும் இல்லை என்பதை அது கண்டுபிடித்தது. ஈராக் ஆய்வுக்குழு திரட்டியுள்ள சான்றுகள் அனைத்தும் வெள்ளை மாளிகை, பென்டகன், வெளிவிவகாரத்துறை மற்றும் CIA என்பன ஈராக் படையெடுப்பிற்கு முன்னர் வெளியிட்ட அறிக்கைகள் அனைத்தையும் பொய் என்று நிரூபித்துள்ளன.

* ஈராக்கிடம் தீவிரமான அணு ஆயுதங்கள் தயாரிப்புத்திட்டம் எதுவுமில்லை. ''ஈராக்கிடம் அணுவை -பிளக்கும் பொருட்களோ அல்லது அணு ஆயுத ஆராய்ச்சியோ அது தொடர்பான நடவடிக்கைகளோ 1991 இற்கு பின் இல்லை. அத்தகைய நடவடிக்கைகளில் அந்நாடு மீண்டும் ஈடுபட்டதற்கான வெளிப்படையான அறிகுறிகள் இல்லை'' என்று ஈராக் ஆய்வுக்குழு புலனாய்வு வெளிப்படுத்தியதாக Duelfer குறிப்பிட்டார்.

* ஈராக் அதிகாரிகள் குறிப்பட்டபடி, சிறிய இராணுவ ராக்கெட்டுகளை தயாரிப்பதற்காகும், செறிவூட்டும் யூரேனியத்தை உருவாக்குவதற்கு ஈராக் அலுமினிய குழாய் இறக்குமதி செய்யவில்லை.

*1991 இற்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து யுரேனியத்தை வாங்குவதற்கு ஈராக் முயற்சிக்கவில்லை. ஒரு ஆபிரிக்க வர்த்தகர் யுரேனியம் வழங்க முயன்றபோதுகூட ஐக்கிய நாடுகள் தடைகளை மேற்கோள்காட்டி அதை ஏற்றுக்கொள்ள ஈராக் மறுத்துவிட்டது.

* பாக்தாத்திற்கு தெற்கே ''சிவப்பு கோடு'' எதுவுமில்லை. படையெடுத்து வரும் அமெரிக்க துருப்புக்களுக்கெதிராக இரசாயன ஆயுதங்கள் அடங்கிய பேரழிவுக்குரிய ஆயுதங்களை ஏவிவிடுவதற்காக அந்த ''சிவப்புகோடு'' போடப்பட்தாக கூறப்பட்டது.

* அமெரிக்க அதிகாரிகள் கூறிய நடமாடும் வாகனங்கள் நடமாடும் உயிரியல் ஆயுத தயாரிப்பு ஆய்வுக்கூடங்கள் அல்ல. ஈராக்கியர்கள் கூறியதைப்போல் அவை வானிலை ஆவிக்கூண்டிற்காக (balloons) பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனை ஏற்றுகின்ற கருவிகள்.

Duelfer ஐக்கிய நாடுகள் பரிசோதகர்கள் குழுவின் துணைத்தலைவராக ஆறு ஆண்டு ஈராக்கில் பணியாற்றியவர், அவர் ஈராக் ஆய்வுக்குழுவுக்கு தலைமை தாங்க வேண்டுமென்று புஷ்ஷின் வெள்ளை மாளிகையோடு மிகநெருக்கமான நட்புறவு கொண்ட CIA தலைமை நிர்வாகி ஜோர்ஜ் டெனட் தேர்ந்தெடுத்தார். அவர் ஈராக் ஆய்வுக்குழுவின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதல்களுக்கும், ஈராக்கிற்குமிடையில் உறவு நிலவுவதாக வலியுறுத்தியவர். ஆனால் தனது அறிக்கையை தாக்கல் செய்வதற்கு புதன்கிழமையன்று செனட் சபையின் ஆயுத சேவைகள் குழு முன்னர் தோன்றி ஈராக் தொடர்பாக ''நாங்கள் அனைவரும் தவறு செய்துவிட்டோம்'' என்று குறிப்பிட்டார்.

சதாம் ஹூசேனின் ஈராக், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு ஓர் அச்சுறுத்தலாக உள்ளது என்ற கூற்றை நியாயப்படுத்துவற்கு தாங்கள் பயன்படுத்திக்கொள்வதற்காக ஏதாவதொரு சாக்குப்போக்கு கிடைக்காதா என்பதற்காக ஈராக் ஆய்வுக்குழு அறிக்கையை புஷ் நிர்வாக அதிகாரிகள் தேடிப்பார்த்தார்கள். அரசுத்துறை துணை செயலர் ரிச்சார்ட் ஆர்மிடேஜ் குறிப்பிட்டபடி சதாம் ஹூசேனிடம் ஆபத்தான ஆயுதங்களை தயாரிக்கும், ''ஆற்றலும் நோக்கமும்'' இருந்தது என்ற கூற்றுக்களை அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஐ.நா தனது பொருளாதாரத் தடைகளை நீக்குகின்ற நேரத்தில் சதாம் ஹூசேன் இரசாயன, உயிரியல் மற்றும் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு நோக்கத்தை கொண்டிருந்தார் என்று Duelfer ஊகித்திருந்தாலும், அத்தகைய ஊகங்களை நிரூபிக்கின்ற வகையில் திட்டங்களோ அல்லது இதர சான்றுகளையோ ஈராக் ஆய்வுக்குழுவால் கண்டுபிடிக்கவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். தயாரிப்பு ''திறமையைப்'' பொறுத்தவரை அந்த அர்த்தத்தில் ஈராக் மட்டுமல்ல, ஓரளவான தொழிற்துறை வளர்ச்சியுள்ள வேறு எந்த நாட்டிலும் விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் இருப்பார்களானால் அந்த நாட்டில் அதற்கேற்ற வளங்களும், வசதிகளும் இருக்குமானால் அதனால் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முடியும்.

ஆக்கிரமிப்பு போருக்கு எவ்வாறு தயாரிப்பு நடைபெற்றது

1991 பாரசீக வளைகுடா போருக்குப்பின்னர் ஈராக் வழக்கத்திற்கு மாறாக ஆயுதங்கள் தயாரிப்புத் திட்டத்தை வெளிப்படையாக கைவிட்டுவிட்டது என்பது ஈராக் ஆய்வுக்குழு கண்டு பிடித்துள்ள மிக முக்கியமான அம்சமாகும். 1980 முதல் 1988 வரை நடைபெற்ற ஈரான்- ஈராக் போரில் பயன்படுத்துவதற்காக ஹூசேன் ஆட்சி ஆரம்பத்தில் அமெரிக்காவின் தூண்டுதலால் இரசாயன ஆயுதங்களை தயாரித்தது. அப்போது அமெரிக்காவின் கையாளாகவே ஹூசேன் செயல்பட்டார். அமெரிக்காவின் முக்கிய கூட்டாக அந்த பிராந்தியத்தில் செயல்பட்டுவந்த ஈரான் மன்னர் ஷா வின் ஆட்சியை தூக்கியெறிந்த இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சியை தாக்குவதற்கு அவ்வாறு அவர் பணியாற்றினார்.

ஈரானிய படைகளுக்கெதிராக இரசாயன ஆயுதங்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும், அமெரிக்க அதிகாரிகள் ஈராக்கிற்கு இராணுவ புலனாய்வு மற்றும் இராஜதந்திர உதவிகளை முடுக்கிவிட்டனர். தற்போது அமெரிக்காவின் பாதுகாப்பு செயலராக பணியாற்றிவரும் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் 1983-84 இல் ஈராக்கிற்கான சிறப்புத்தூதராக பணியாற்றி இரண்டுமுறை பாக்தாதிற்கு விஜயம் செய்து றீகன் நிர்வாகத்தின் ஆதரவு தொடர்ந்து சதாம் ஹூசேனுக்கு கிடைக்கும் என்று மீண்டும் உறுதியளித்தார்.

அமெரிக்கத்துருப்புக்கள் 1991இல் குவைத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான ஈராக் படைவீரர்களை கொன்று குவித்து விரட்டியடித்த பின்னர், சதாம் ஹூசேன் ஐ.நா-வின் கண்டிப்பான ஆயுதங்கள் சோதனையை ஏற்றுக்கொண்டு, ஐ.நா ஆயுத பரிசோதனையாளர்கள் உடனடியாக இரசாயன ஆயுதங்கள் தயாரிப்பு வசதிகளையும், அணு மற்றும் உயிரியல் ஆயுதங்கள் தயாரிக்கும் ஆராய்ச்சி திட்டங்களையும் ஒழித்துக்கட்டினார். கடைசியாக இருந்த ஆராய்ச்சி அமைப்பு 1996ல் அழிக்கப்பட்டுவிட்டதாக ஈராக் ஆய்வுக்குழு அறிக்கை தெரிவிக்கிறது.

அப்படியிருந்தும் 1990 கள் முழுவதிலும் ஈராக்கிடம் பேரழிவுகரமான ஆயுதங்கள் இருப்பதாகவும், ஐ.நா ஆயுத ஆய்வாளர்களுக்கு ஒத்துழைப்பு தருவதற்கு மறுத்து வருவதாகவும் குற்றம்சாட்டி அதையே காரணமாகத் தொடர்ந்து கூறி அந்த நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும், அமெரிக்காவின் நடவடிக்கையை நியாயப்படுத்தினார்கள். நீண்டகாலமாக இடைவிடாது எடுத்துவைக்கப்பட்ட இந்த மோசடி முதலாவது புஷ் நிர்வாகத்தில் தொடங்கி, எட்டாண்டுகளுக்கு (1993 முதல் 2001 வரை) கிளிண்டன் நிர்வாகம் அதையே நீடித்தது. இரண்டாவது புஷ் நிர்வாகம் அந்த விவகாரத்தை முடிவிற்கு கொண்டுவரும் வகையில், ஈராக் மீது படையெடுத்து அந்த நாட்டை பிடித்துக்கொண்டது.

பேரழிவுகரமான ஆயுத மோசடி 1991ஆம் ஆண்டில் தொடங்கியது தற்செயலாக நடந்ததல்ல. அந்த வருடத்தில்தான் சோவியத் ஒன்றியம் சிதைந்தது. 1991 பெப்ரவரியில் முடிவடைந்த பாரசீக வளைகுடாபோரின் போது கூட பாக்தாத்தின் மீது படையெடுத்துச்சென்று அந்த எண்ணெய் வளமிக்க நாட்டை தன் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவர மூத்த புஷ் நிர்வாகம் தயங்கியதற்கு காரணம் அப்போது சோவியத் யூனியன் இருந்ததுதான். சோவியத் யூனியன் பாத்திஸ்ட் ஆட்சியோடு நீண்டகால உறவுகளை நிலைநாட்டி வந்த வலுவான இராணுவ எதிரியாகும்.

1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் சிதைந்தது, அமெரிக்க ஏகாதிபத்தியம் இராணுவ பதிலடிகிடைக்கும் என்பது பற்றியோ அல்லது ஈராக்கிற்கு சோவியத் உதவி கிடைக்கும் என்பது பற்றியோ இனி அஞ்சவேண்டிய அவசியமில்லை என்று நிலை ஏற்பட்டது. அமெரிக்க ஆளும் தட்டினருக்குள், மிக வேகமாக ஒரு பொதுக்கருத்து உருவாயிற்று. அதாவது ஈராக்கின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றி மத்திய கிழக்கின் உயிர்நாடியான பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத்தையும் அரசியல்ரீதியாகவும் காலூன்றச் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்தக் காரியத்தை எப்படி சிறப்பாக செய்வது என்பதில் பல்வேறு வகைப்பட்ட கருத்துக்கள் நிலவிவந்தன. முதலாவது புஷ் நிர்வாகம் அமெரிக்க தரைப்படை போரையும், மத்தியகிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பை நிலைநாட்டுவதிலும் கவனமாக இருந்தார். முதல் வளைகுடாப்போரில் ஏற்பட்ட இராணுவத் தோல்வி பொருளாதார தடைகளை மற்றும் அமெரிக்காவின் மறைமுக மற்றும் நேரடி நடவடிக்கைகள் மூலம் சதாம் ஹூசேன் ஆட்சி வீழ்ச்சியடைந்துவிடும் என்றும் தான் கூறுகின்றபடி ஆடுகின்ற ஒரு ஆட்சியை அமெரிக்கா ஏற்படுத்திவிட முடியுமென்று மூத்த புஷ் நிர்வாகம் நம்பியது. இதேவேளையில் குர்திஸ்க்கள் மற்றும் ஷியைட்டுக்களின் எழுச்சிக்கள் எதிராக ஈரான் பக்கம் ஈராக் சாய்ந்தது விடும் என்ற பயத்தின் காரணமாக சதாம் ஹூசேனுக்கு அமெரிக்கா ஆதரவு தந்தது.

சதாம் ஹூசேனுக்கு எதிராக எதிர்பார்க்கப்பட்ட இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்ததும், முதலாவது வளைகுடாப் போர் முடிவுபற்றி அதிருப்தி கொண்டிருந்த அமெரிக்காவின் ஒரு பிரிவினர் ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்துச் சென்று பிடித்துக்கொள்ள வேண்டுமென்ற தங்களது முடிவை வலியுறுத்த தொடங்கினர். 1992 இல் பாதுகாப்பு செயலராக இருந்த ரிச்சர்ட் செனி கட்டளைப்படி அவருக்குக்கீழ் பணியாற்றி வந்த போல் வுல்போவிச் (Paul Wolfowitz) மத்திய கிழக்கில் நீண்டகால அடிப்படையிலான இராணுவத் தலையீட்டிற்கு முதலாவது திட்டங்களை வரைந்தார்.

புதிய அமெரிக்க நூற்றாண்டுத் திட்டம் போன்ற நவீன-பழமைவாத குழுக்கள் கூறிவந்த வேலைதிட்டத்தின் முதல் நகல்தான் அந்த ஆவணம். அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு தடைக்கல்லாக இருக்கிறது என்று கருதப்படும் எந்த நாட்டிலும் ''ஆட்சி மாற்றத்தை'' உருவாக்கி அமெரிக்க மேலாதிக்கத்தை உலகம் முழுவதும் உருவாக்குவதற்கு அந்த கொள்கை அழைப்பு விடுத்தது.

முதலாவது புஷ் நிர்வாகத்தின் மூலோபாயத்தை தீவிரப்படுத்துகின்ற முறையில் கிளிண்டன் செயல்பட முயன்றார். அவரது நிர்வாகம் திரும்பத் திரும்ப ஏவுகணைத் தாக்குதல்கள், இரண்டு சிறிய அளவிலான இரத்தக்களரி குண்டுவீச்சுத் தாக்குதல்கள், ஐ.நா ஆய்வாளர்கள் மூலம் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள், பொருளாதார தடையை நிலைநாட்டியமை, ''விமானங்கள் பறக்காத'' மண்டலங்களை உருவாக்கியமை, சதாம் ஹூசேனை கொலை செய்வதற்காக ஐ.நா ஆய்வாளர்களிடையே CIA ஏஜெண்டுகளை ஊடுருவச்செய்தது போன்றவற்றை செய்தது. இப்போது அமெரிக்கா நியமித்துள்ள இடைக்கால ஈராக் பிரதமர் அயத் அல்லாவி 1990களின் நடுவில் மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகள், கிளிண்டன் அங்கீகாரமளித்த பல்வேறு ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள், CIA மேற்கொண்ட பகிரங்க பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்காவின் அதிகாரபூர்வமான கொள்கை ''ஆட்சி மாற்றம்தான்'' என்பதை உறுதிப்படுத்துகின்ற வகையில் ஈராக் விடுதலை சட்டத்திலும் (Iraq Liberation Act) கிளிண்டன் கையெழுத்திட்டார்.

பொருளாதாரத்தடை நடவடிக்கைகள் செயற்படத் தொடங்கியதும் அமெரிக்காவின் போட்டி நாடுகளான பிரான்சும், ரஷ்யாவும், ஈராக்கில் தங்களது அரசியல் மற்றும் எண்ணெய் நலன்களை தீவிரமாக பின்தொடர, அமெரிக்க ஆளும்தட்டினர் போர் புரிவதுதான் விரும்பத்தக்கது என்ற நிலைக்கு அதிகளவில் திரும்பினர். புஷ் நிர்வாகம் 2001 ஜனவரியில் பதவிக்கு வந்தபோது, படையெடுத்து அந்த நாட்டை ஆக்கிரமித்துக் கொள்ளவேண்டும் என்று கூறி வந்தவர்கள் ஆட்சிக்கு வந்தனர். 9/11 நடக்கும்போது அந்த படையெடுப்புத்திட்டம் தயாராகிகொண்டு வந்தது. 9/11-சம்பவம் மிகவும் மர்மமான சூழ்நிலைகளில் நடைபெற்றன அவை இன்னும் விளக்கம்தரப்படா நிலையிலேயே உள்ளன-- அந்த சம்பவம் அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு சாக்குப்போக்கை தந்தது. அதை கையில் எடுத்துக்கொண்டு தங்களது திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்னேற்பாடுகளை செய்தார்கள்.

ஆரம்பத்திலிருந்தே, தனது சூறையாடும் நோக்கங்களை மூடிமறைப்பதற்காக அமெரிக்கா பேரழிவுகரமான ஆயுதங்களை பயன்படுத்திக் கொண்டது. அது ஒரு வசதியான திசைதிருப்பும் விடயமாக அமைந்துவிட்டது. ஆத்திரமூட்டல்களையும், இராணுவத் தாக்குதல்களையும் அந்த நாட்டையே அழிப்பதற்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை வலியுறுத்துவதற்கும் இப்படி எல்லா சந்தர்ப்பங்களிலும் பேரழிவுகரமான ஆயுதங்களை காரணமாக பயன்படுத்திக்கொண்டது. பொதுமக்களை பயமுறுத்தவும், குழப்பவும், ஈராக்கிற்கெதிரான ''முன்கூட்டிய'' போரை ஏற்றுக்கொள்ள செய்வதற்கு இது சேவை செய்தது.

ஆனால் பேரழிவுகரமான ஆயுத பொய் பிரச்சாரம் அந்தப் போருக்கான பொதுமக்கள் ஆதரவை திரட்டுவதில் 9/11 க்கு பின்னரும் கூட வெற்றிபெற முடியவில்லை. அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும், வெகுஜன எதிர்ப்பு உருவாயிற்று அதற்கு நடுவில் படையெடுப்பு நடத்தப்பட்டது. 2003 மார்ச்சில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் ----உடனடியாகவோ, ஒன்றிணைந்த அல்லது மிக ஆபத்தான அளவிற்கோ அச்சுறுத்தல் அல்ல என்பதை அறிந்தேயிருந்தனர்.

ஈராக்கிய போர்: ''ஒரு தவறல்ல'', ஒரு குற்றமாகும்

இந்த வரலாறு சுட்டிக்காட்டுவது என்ன? ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் திடீரென்று நேர் வழியிலிருந்து விலகியதால் இந்த படையெடுப்பை நடத்திவிட்டார் என்று அர்த்தம் ஆகாது. இந்தப் படையெடுப்பு கடந்த தசாப்தங்களுக்கு மேலாக மூன்று நிர்வாகங்களின் கீழ் அவை குடியரசு மற்றும் ஜனநாயகக்கட்சிகளால் உருவாக்கப்பட்ட கொள்கையை கடைபிடித்து வந்ததன் விளைவாக எழுந்தது தான். ஜனநாகக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரி நிலைநாட்டி வருவதைப்போல் அந்து முடிவு ''ஒரு தவறல்ல''. அது படுமோசமான குற்றம்: ஒரு திட்டமிடப்பட்ட கொள்கையை குற்றவியல் அடிப்படையில் பின்தொடர்கிறார்கள், இச் செயலுக்கு அமெரிக்க ஆளும் தட்டு முழுவதும் பொறுப்பாக்கப்பட வேண்டும்.

Duelfer அறிக்கை ஈராக்கில் பேரழிவுகரமான ஆயுதங்கள் இல்லை என்று நிலைநாட்டினாலும் அமெரிக்க அதிகாரிகள் அப்படியிருப்பதாக நம்பினார்கள், அதன்படி செயல்பட்டார்கள். புஷ் நிர்வாகத்தின் முடிவான ஈராக் மீது படையெடுத்ததை கடைசிவரை தாங்கி நிற்கும் வாஷிங்டன் போஸ்ட் ஏற்றுக்கொள்கின்றனர், இந்த அறிக்கை வெளியிடப்பட்ட தலையங்கத்தில் பேரழிவுகரமான ஆயுதங்கள் தொடர்பாக புஷ் தவறுசெய்திருந்தாலும், அவருக்கு கிடைத்த புலனாய்வு தகவலைக் கொண்டு போருக்கு செல்வது என்ற முடிவை எடுக்கின்ற கட்டயாம் அவருக்கு ஏற்பட்டது என்று எழுதியுள்ளது.

இது மற்றொரு பொய்யாகும். பிரச்சனை எப்போதுமே அங்கு ஒருபோதும் இல்லாத பேரழிவுகரமான ஆயுதங்கள் பற்றியது அல்ல. அல்லது ஈராக் ஒரே அச்சுறுத்தலாக இருக்கிறது என்று புஷ் நிர்வாகத்திற்கு உண்மையான பயமுமில்லை. மாறாக ஈராக் மீது படையெடுக்க வேண்டுமென்று சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு அந்த நாடு அடிப்படையிலேயே பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது என்ற உண்மையை கணக்கிட்டே செய்திருக்கிறார்கள்.

ஈராக்கிடம் வலிமை எதுவுமில்லை அந்த அளவிற்கு உறிஞ்சப்பட்டுவிட்டது, பொருளாதாரத் தடைகளால் சீரழிந்துவிட்ட அந்த நாடு கடுமையான முறையில் இராணுவ அடிப்படையில் எதிர்ப்புகாட்ட முடியாது எனவே அந்த நாட்டை பிடித்துக்கொள்வதற்கு இதுதான் பொருத்தமான நிலை என்று தெரிந்தே புஷ் நிர்வாகம் படையெடுத்துச்செல்ல முடிவு செய்தது. ஈராக்கின் மிகப்பெரிய பரவலான எண்ணெய் வளத்தை தன்கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் அமெரிக்க துருப்புக்களை மத்திய கிழக்கின் மையத்தில் ஒரு மூலோபாய முக்கியத்துவ இடத்தில் நிறுத்தவேண்டும். அதன்மூலம் ஐரோப்பிய மற்றும் ஆசியா ஆகிய இருதரப்பு போட்டிநாடுகளுக்கு மேலாக தனக்கு திட்டவட்டமான அனுகூலம் கிடைக்குமென்ற சூறையாடும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது.

இது முழுமையான அர்த்தத்தில் ஒரு போர் குற்றமாகும். நூரன்பேர்க் விசாரணையில் நிலைநாட்டப்பட்டுள்ள முன்மாதிரியின்படி, ஆக்கிரமிப்புப்போருக்கான திட்டமிடுவது மற்றும் முன்னேற்பாடுகளை செய்வது மனித இனத்திற்கு எதிரான குற்றமாகும். இன்றையதினம் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் அத்தகைய திட்டங்களை தீட்டிமுன்னேற்பாடுகளை செய்த சான்றுகள் ஏராளமாக உள்ளன. 2001 செப்டம்பர் 11 இற்கு முந்திய மாதங்களில் எடுத்துக்காட்டாக, செனி நடாத்திய இரகசிய எரிபொருள் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் அமெரிக்காவின் முன்னிலை எரிபொருள் நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் ஈராக் எண்ணெய் கிணறுகளின் வரைபடங்களை வைத்துக்கொண்டு எப்படி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய எண்ணெய் தொழிற்துறைகள் அவற்றை பங்கு போடுவது என்பதை விவாதித்திருக்கிறார்கள்.

தற்போது கெர்ரி என்னதான் ''தவறான போர், தவறான இடத்தில் தவறான நேரத்தில் நடந்திருக்கிறது'' என்று வேடம் கட்டிக்கொண்டு ஆடினாலும், ஈராக் சூறையாடப்பட்டதில் ஜனநாயகக்கட்சி பங்காளியாகவும், உடந்தையாகவும் செயல்பட்டிருக்கிறதே தவிர எதிரியாக செயல்படவில்லை. பில் கிளிண்டனின் ஜனநாயகக்கட்சி நிர்வாகம் ஈராக் மக்களை எட்டாண்டுகள் பட்டினியில் வாட்டியிருக்கிறது, குண்டு வீசி தாக்கியிருக்கிறது, கொன்று குவித்திருக்கிறது, புஷ் நிர்வாகத்தின் போர் பிரச்சாரத்திற்கான அடிப்படைக் கட்டுக்கதைகளை வழங்கி வந்திருக்கிறது. படையெடுப்பு தொடங்கிய பின்னர் கிளிண்டனும், அவரது மனைவி செனட்டர் கிலரி கிளிண்டனும் ஈராக் மீது படையெடுத்ததையும், தொடர்ந்து ஆக்கிரமிப்புச்செய்து கொண்டிருப்பதையும் உறுதியாக ஆதரித்து நிற்கின்றனர்.

கெர்ரியும் கூட அவரது சகவேட்பாளர் ஜோன் எட்வார்ஸுடன் சேர்ந்து 2002 அக்டோபரில் நாடாளுமன்றத்தில் போருக்கு ஆதரவான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு வாக்களித்திருக்கின்றனர். இந்தத் தீர்மானத்தை புஷ் செயல்படுத்த கருதியிருக்கிறார் என்று முழுமையாக அறிந்த பின்னரும், அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

Duelfer அறிக்கை வந்திருப்பதை தொடர்ந்து தற்போது ஜனநாயகக் கட்சிக்காரர்கள் தங்களை போரிற்கு அப்பால் இருப்பதாக காட்ட புதிய முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். செனட் புலனாய்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள முன்னணி ஜனநாயகக் கட்சிகாரரான John D. Rockefeller IV அந்த அறிக்கை ''மிகுந்த பாதிப்பை'' ஏற்படுத்தக்கூடியது என்று கூறியுள்ளார்.

''சதாம் ஹூசேனிடம் ஆயுதங்கள் திட்டம் உண்மையிலேயே இருந்தனவா அல்லது அத்தகைய ஆயுதங்களை தயாரிப்பதற்கான வல்லமை அவரிடம் இருந்ததா என்பதைக்கூட கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் அத்தகைய ஆயுதங்களை தயாரிப்பதற்கு எண்ணியிருந்தார் என்று அமெரிக்க மக்கள் நம்ப வேண்டும் என்று நிர்வாகம் விரும்பி ஈராக் மீது படையெடுப்பை நியாயப்படுத்தியது. உண்மையிலேயே அந்த நாட்டின் மீது நாம் நடையெடுத்துச் சென்றோம், பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்திருக்கிறார்கள், ஈராக் என்றைக்குமே நமக்கு பயங்கரமான அல்லது வளர்ந்து வரும் ஆபத்தாக இருந்ததில்லை'' என்று John D. Rockefeller ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்.

இப்போது போரை விமர்சிப்பவர்கள் என்று நாடகமாடுகின்ற முயற்சியில் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் சமாதானம் கூற முடியாத உடன்பாடுகாண முடியாத முரண்பாடுகளுக்குள் சிக்கித் தவிக்கிறார்கள். போர் நடத்தப்பட்டது ஒரு ''தவறு'' என்று அவர்கள் அறிவித்துவிட்டு அதே நேரத்தில் அதை வெற்றிகரமாக கொண்டு செலுத்த உறுதியளிக்கின்றனர். அவர்கள் குடியரசுக் கட்சிக்காரர்களோடு சேர்ந்துகொண்டு வெளிநாட்டு ஆக்கிரமிப்பிற்கு எதிராக போரிட்டு கொண்டிருகின்ற ஈராக்கிய மக்களை ''பயங்கரவாதிகள்'' என்றும் ''எதிரிப்படைகள்'' என்றும் முத்திரை குத்தி அவர்களை நசுக்கியாக வேண்டுமென்று கூறிவருகிறார்கள்.

ஈராக்கில் ஆழமாகிக்கொண்டு வருகின்ற சீரழிவு அமெரிக்காவின் ஆளும் தட்டினருக்கும், அவர்களது அரசு இயந்திரத்திற்கும் மிகக்கடுமையான நெருக்கடியை தூண்டிவிட்டிருக்கிறது. எனவேதான் திடீரென்று கெர்ரி பிரச்சாரத்தின் போக்கு மாற்றப்பட்டு போர் தொடர்பாக அதிக விமர்சனப் போக்கை காட்டிக்கொண்டு வருகிறார்கள், பல இராணுவ புலனாய்வு சாதன உயர்மட்டங்களில் இருந்து மடைதிறந்த வெள்ளம்போல் வந்த அறிக்கைகளில் புஷ்ஷின் பொய்கள் ஒன்றன்பின் ஒன்றாக அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன. Duelfer அறிக்கை மிகக்கடுமையான விமர்சன தன்மையும், அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்ற நேரமான அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருக்கும் நேரமும் புஷ் நிர்வாகத்திற்கு மிக உயர்ந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும். இது இந்த முரண்பாட்டின் தீவிரத்தையும், ஆழத்தையும் கோடிட்டுக்காட்டுகிறது.

எவ்வாறாயினும், அமெரிக்க தொழிலாள வர்க்கம் ஏகாதிபத்தியவாதிகளுக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த கன்னை மோதல்களில் எந்த தரப்பின் பின்னாலும் செல்லமுடியாது. புஷ் அல்லது கெர்ரி இவர்களில் யார் ஜனாதிபதி பதவியை வென்றெடுத்தாலும், அடுத்த வெள்ளை மாளிகையில் பதவிக்கு வருபவர் ஏகாதிபத்தியத்தை விசுவாசமாக காத்துநிற்பவராகத்தான் இருப்பதுடன், ஈராக்கிலும் மத்தியகிழக்கு முழுவதிலும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதில் விட்டுக்கொடுக்காத உறுதிகொண்டவராகத் தான் இருப்பார்.

அமெரிக்க உழைக்கும் மக்கள் முன்னர் உள்ள பணி என்னவென்றால் சுயாதீனமான பரந்த வெகுஜன அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவது. இது ஏகாதிபத்திய போரையும், இப்போருடன் தங்கள் நலன்கள் தவிர்க்கமுடியாதவாறு பிணைந்திருக்கும் அமெரிக்க ஆளும் தட்டில் உள்ள பெருநிறுவன அதிபர்களையும், கோடீஸ்வரர்களையும் எதிர்ப்பதாக இருக்கவேண்டும். இந்த முன்னோக்குக்காகத்தான் சோசலிச சமத்துவக் கட்சி 2004 தேர்தல் பிரச்சாரத்தில் போராடுவதுடன், மற்றும் தவிர்க்க முடியாதவாறு தொடரவுள்ள பரந்த அரசியல் போராட்டத்திற்கு தயாரிப்பு செய்கின்றது.

Top of page