World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraqi social crisis continues unabated as US slashes funding

அமெரிக்கா நிதி ஒதுக்கீட்டை வெட்டியதால் ஈராக்கில் சமூக நெருக்கடி தொய்வின்றி தொடர்கிறது

By Rick Kelly
20 October 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கில் ''நிவாரண மற்றும் சீரமைப்பு'' செலவினங்கள் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறையின் காலாண்டு அறிக்கை அக்டோபர் 5-ல் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில் அமெரிக்க ஆக்கிரமிப்பின் தன்மை தெளிவாக அம்பலத்திற்கு வந்திருக்கிறது. சுகாதார சேவை மற்றும் கழிப்பிட வசதிகள் அல்லது தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவற்கு ஏறத்தாழ எதுவும் செலவிடப்படவில்லை. இந்தப் பணிகளுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடும், வெட்டப்பட்டிருக்கிறது.

சென்ற ஆண்டு நாடாளுமன்றம் ஈராக் சீரப்மைப்புத்திட்டங்களுக்கு 18.4- பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்தது. அதில் 1.22-பில்லியன் டாலர்கள் மட்டுமே செலவிடப்பட்டுள்ளன. இதிலும் 623- மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்ட தொகையில் பாதிக்குமேற்பட்டது- பாதுகாப்பிற்கும், போலீஸிற்கும் நேரடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதோடு ஒப்புநோக்கும்போது சுகாதார சேவைக்கு 2-மில்லியன் தண்ணீர் வழங்கும் திட்டங்களுக்கு 19-மில்லியன், மின்சார கட்டுக்கோப்பு சீரமைப்பிற்கு 300- மில்லியன் டாலர்கள்தான் செலவிடப்பட்டுள்ளன.

இந்த புள்ளிவிவரங்களே கூட ஈராக்கில் உண்மையிலேயே செலவிடப்பட்டதை மிகப்பெருமளவில் மிகைப்படுத்தி சித்தரிப்பதாகும். வாஷிங்டனிலிருந்து இயங்கிவரும் நிபுணர் குழுவான மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையம், அண்மையில் மதிப்பிட்டிருப்பதைப்போல் ஏறத்தாழ அமெரிக்க நிதி ஒதுக்கீடுகளில் 70-சதவீதம் பாதுகாப்பு, ஒப்பந்தக்காரர்கள் காப்பீட்டு செலவினங்கள், ஊழல் மற்றும் நிர்வாக முறைகேடுகளில் முடிந்திருக்கிறது.

மிகுந்த பெருந்தன்மையோடு ஈராக் மக்களுக்கான ''சீரமைப்பு நிதி'' என்று கூறப்படுவது, உண்மையிலேயே அமெரிக்காவின் பெரிய கம்பெனி பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள் மற்றும் அமெரிக்கா நியமித்துள்ள இடைக்கால அரசாங்கத்தின் பாதுகாப்பு கட்டுக்கோப்பிற்கு விரையமாகிற பணமாகத்தான் ஆகிவிட்டது.

வெளியுறவுத்துறை அறிக்கை சென்ற மாதம் 3.46- பில்லியன் டாலர்கள் மறு ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்களை தந்திருக்கிறது. அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு வெகுஜன எதிர்ப்பை எதிர்நோக்கிக் கொண்டிருப்பதால், புஷ் நிர்வாகத்தின் நெருக்கடி பெருகியுள்ள சூழ்நிலையில் ஈராக்கிலுள்ள வாஷிங்டன் தூதரான John Negropaonte பாதுகாப்பு செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மிகப்பெருமளவில் அதிகரிக்குமாறு கேட்டிருக்கிறார். மேலும் 45,000- போலீஸ் அதிகாரிகள், 16,000 எல்லைக்காவல் அதிகாரிகள், 20- ஈராக் தேசிய காவலர் பட்டாலியன்கள் ஆகியோருக்கு பயிற்சியளிக்கவும், ஆயுதங்களை வழங்கவும் மேலும் 1.8- பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இடைக்கால பிரதமர் இயத் அல்லாவியின் பொம்மையாட்சியை தாங்கி நிற்பதற்காக இந்தத்தொகை செலவிடப்படுகிறது.

புதிய நிதி ஒதுக்கீடு பொருளாதார மேம்பாட்டை வளர்ப்பதற்காக என்று ஒதுக்கப்பட்டிருந்தாலும், ஈராக் மக்களுக்கு உதவுவதாக வேலை வாய்ப்பை பெருக்குவதற்காக அமையும் என்ற வகையில் அறிக்கையின் வாசகம் அமைந்திருந்தாலும், இந்த நடவடிக்கைகள் உண்மையிலேயே ஈராக் பொருளாதாரத்தை மேலும் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு திறந்துவிடும் வகையில் அமைந்திருக்கிறது. மிச்ச சொச்சம் இருக்கிற அரசாங்கத்துறையை தனியார்துறை பங்குபோட்டுக்கொள்வதாகவும் அமைந்திருக்கிறது. கூடுதலாக ஒதுக்கப்படும் பணம் ''தனியார்த்துறையை வலுப்படுத்தவும், வளர்க்கவும் பயன்படுத்தப்படும். இந்த நடவடிக்கைகளில் அரசாங்கத்திற்கு சொந்தமான தொழில்கள் சீரமைப்பும் தனியார் மயமாதலும் உலக வர்த்தக அமைப்பில் இடம் பெறுவதற்கான வர்த்தக கொள்கை சீர்திருத்தங்களும், வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பும், முதலீட்டுச்சந்தை மேம்பாடும் சிறிய அளவிலான கடன்வழங்கும் திட்டங்களும், சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாடும் அடங்கும்'' என்று வெளியுறவுத்துறை விளக்கம் தந்தது.

இந்த வகையில் கூடுதல் செலவினங்களை ஈடுகட்டுவதற்கு நீர்வழங்குதல், வடிகால்வசதி, மின்சார சீரமைப்புத்திட்ட ஒதுக்கீடுகள், குறைக்கப்பட்டிருக்கின்றன. கடுமையான சேதத்திற்குள்ளான, மின்சார இணைப்புக்கள் மேம்பாட்டிற்காக, ஒதுக்கப்பட்ட தொகையில் 1.1- பில்லியன் டாலர்கள் அல்லது 20- சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. அதே போன்று தண்ணீர் வழங்குதல் மற்றும் சுகாதார வசதித்திட்டங்களுக்காக மூல ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் 1.9-பில்லியன் டாலர்கள் அல்லது45- சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நடவடிக்கைகள் அமெரிக்கா தலைமையில் ஈராக்கை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளவர்களின் கிரிமினல் குற்றதன்மைகளை மேலும் தெளிவாக்குகின்ற சான்றுகளாகும். புஷ் நிர்வாகம் எப்போதுமே சாதாரண ஈராக் மக்களின் சேம நலன்கள் பற்றி கவலைப்பட்டதில்லை. ஈராக் மக்களை ''விடுவிப்பதற்கு பதிலாக'' ஹூசேன் சர்வாதிகாரத்திற்கு பதிலாக தன் சொற்படி கேட்கின்ற போலீஸ் ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளது. ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு வலுவானதும், எதிர்பாளர்களுக்கு மக்களது ஆதரவு பெருகியதும் அமெரிக்கா அதற்கு பதிலளிக்கின்ற வகையில் குறைந்தபட்ச சமூக மற்றும் தொழிற்கட்டமைப்புத்திட்டங்களையும், வெட்டிவிட்டது.

இந்த நடவடிக்கையின் அகந்தை போக்கை, வலியுறுத்திக் கூறுகிற வகையில் பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஈராக் சீரமைப்பு நிர்வாக டைக்ரக்டர் வில்லியம் டெய்லர் கருத்துத்தெரிவித்துள்ளார். தண்ணீர் சப்ளை மற்றும் மின்சாரத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ஏன் கூடுதல் பாதுகாப்பிற்காக திருப்பிவிடப்பட்டன? என்று நியூயார்க் டைம்ஸ் கேட்டதற்கு டெய்லர் வங்கிக் கொள்ளையன் வில்லிசட்டனை மேற்கோள்காட்டினார். வங்கியில் ஏன் கொள்ளையடிக்கிறாய் என்று கேட்டபோது அங்குதான் பணம் இருக்கிறது என்று அந்த கொள்ளைக்காரன் ஒரு காலத்தில் சொன்னதைப்போல் '' 3.46- பில்லியன் டாலர்கள் தேவையென்றால் அதைத்தேடிக்கொண்டிருக்கிற நாங்கள் சுகாதார, சேவையிலிருந்து அதை திருப்பிவிட முடியாது அந்த பணம் மிச்சாரத்திலும் தண்ணீர் சப்ளைத்திட்டங்களிலும்தான் இருக்கிறது'' என்று டெய்லர் பதிலளித்தார்.

ஆழமாகிக்கொண்டுவரும் மனிதநேய நெருக்கடி

சாதாரண ஈராக் மக்கள் மகத்தான சமூக நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். முதலாவது வளைகுடாப்போரில் அமெரிக்கா தலைமையிலான படைகள் திட்டமிட்டு கேந்திர தொழிற்கட்டமைப்புக்களை தாக்கியதால் நாட்டின், பொருளாதார தொழிற்கட்டமைப்புக்கள் ஏற்கெனவே சிதைந்துகிடந்தன. ஐ.நா-தடைகளால் சீரமைப்புவேலைகள் சீர்குலைக்கப்பட்டன. மற்றும் 2003-படையெடுப்பு இந்த நெருக்கடியை மேலும் பெருக்கிவிட்டது. மில்லியன் கணக்கான மக்களுக்கு அன்றாட வாழ்க்கை நடத்துவது நெருக்கடியாகிவிட்டது. சிதைந்துவிட்ட பொருளாதாரம் ஒன்றுமில்லாத சுகாதார சேவை நிரந்தர மின்சார இருட்டடிப்பு, நிரந்தர குடிதண்ணீர் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்களது அன்றாட வாழ்வே பிரச்சனையாகிவிட்டது.

ஜூன் முதலாம் தேதி ஈராக்கில் 6,000- கி.வாட் அளவிற்கு மின்சாரம் வழங்கப்படும் என்ற மந்தமான இலக்கு முன்னாள் கூட்டணி இடைகால ஆணையத்தலைவர் போல் பிரேமரால் நிர்ணயிக்கப்பட்டது. அந்த அளவிற்குக்கூட இப்போது மின்சாரம் வழங்கப்படவில்லை. வீடுகளில் தொடர்ந்து மின்சார இருட்டடிப்புக்கள் நடைபெறுகின்றன. இந்த மின்சாரத் தடைகளால் சாதாரண மக்களது வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக கோடைகாலத்தில் பாக்தாத்திலும் பிற இடங்களிலும் வெப்பம் 50- பாகை செ. கிரேட் அளவிற்கு சென்றுவிடுகிறது. மிகச்சிறுபான்மை மக்கள்தான் ஜெனரேட்டர்களை வைத்துக்கொண்டு தடையில்லாத மின்சாரத்திற்கு வழி செய்து கொள்ளமுடிகிறது.

மற்றவர்கள் அனைவருக்கும் உறுதியான ஏர்கன்டிஷன் இல்லாதது கடுமையான உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள், உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. உணவுப்பொருட்களை குளிரூட்டப் பெட்டிகளுக்குள் வைத்திருக்க முடியாத நிலையினால் மேலும் பிரச்சனைகள் எழுகின்றன. மின்சாரத்தடையினால் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பாதிக்கப்படுகின்றன. ''அடுத்தவாரம் எங்களுக்கு தேர்வு வருகிறது'' என்று ஒரு பொறியியல் மாணவர் ஐ.நா ஒருங்கிணைக்கப்பட்ட மண்டல தகவல் அமைப்பிடம் (IRIN) தெரிவித்தார். ''மின்சாரமில்லாமல் ஒரு அறையில் அமர்ந்து பணியாற்றுவதில் உள்ள சங்கடங்கள் கற்பனைக்கும் எட்டாதவை- எதிலும் கவனம் செலுத்தவே முடியாது''
மின்சார நெருக்கடியின் காரணமாக கழிவுநீரேற்று கட்டுக்கோப்பு சிதைந்துவிட்டது. பாதிக்கும் மேற்பட்ட ஈராக்கின் கழிவுநீரேற்று நிலையங்கள் இன்னும் செயல்படவில்லை என்று USAID ஒப்புக்கொண்டது. பாக்தாத் நகரிலுள்ள மூன்று கழிவு நீரேற்று நிலையங்களில் ஒன்றுமட்டுமே முழுமையாக பழுதுபார்க்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஏழைகள் வாழும் மாவட்டங்களில் சாக்கடை தெருவில் ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பாக பாக்தாத்தின் சதர் நகரத்தில் தொடர்ந்து அமெரிக்கப்படைகளுக்கும் போராளிக்குழுக்களுக்குமிடையே சண்டை நடந்து கொண்டிருப்பதால் கழிவுநீரேற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. ''ஒரு வீட்டிற்கு வெளியில் சாக்கடை ஓடிக்கொண்டிருந்தால் எப்படி நாம் உள்ளே இருப்பது, அது மிக பயங்கரமானது, கடுமையானது வெப்பத்தில் படுமோசமாக இருக்கிறது. சில நேரங்களில் இந்த நெருக்கடியிலிருந்து தப்புவதற்காக எனது பெற்றோரின் வீட்டிற்கு நான் செல்லவேண்டியிருக்கிறது'' என்று அங்கு வாழ்கின்ற ஒருவர் IRIN -இடம் சொன்னார்.

தூய்மையான தண்ணீர் கிடைப்பதிலும், இதே நெருக்கடி நிலவுகிறது. நியூயார்க் டைம்ஸில் சென்ற மாதம் வந்திருந்த தகவலின்படி 100- தண்ணீர் சப்ளை திட்டங்களுக்கு முதலில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் 4-மட்டுமே வரும் மாதங்களில் செயல்படவிருக்கின்றன. ஈராக் பொதுப்பணி மற்றும் நகரசபை அமைச்சகத்தைச் சேர்ந்த துணை அமைச்சர் Kamil Chadirji அமெரிக்கா நிதியை வெட்டியிருப்பதை ஆவேசமாகக் கண்டித்தார். ''இதனால் ஈராக்கிற்கு பயன்கிடைக்கும் என்று எவரும் நம்பவில்லை. ஓராண்டாக நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். அழகான பவர் பாய்ண்ட் ஆவணங்களை வைத்திக்கொண்டிருக்கிறோம் ஆனால் ஒரு துளி தண்ணீர் கூட கிடைக்கவில்லை'' என்று நிர்வாகம் மற்றும் நிதி விவகாரங்கள் தொடர்பான அந்தத்துணை அமைச்சர் குறிப்பிட்டார்.

ஈராக்கின் பல பகுதிகளில் 60-சதவீத மக்கள் ரசாயனப்பொருட்களும், சாக்கடையும் கலந்து தூய்மைகெட்ட தண்ணீரைத்தான் பருக வேண்டியிருக்கிறது ''பாக்தாத்திலிருந்து துவங்கி பெரும்பாலான மக்கள் இப்போது சாக்கடை கலந்த தண்ணீரையே பருவேண்டியுள்ளது'' என்று UNICEF மூத்த அதிகாரி வில்லியம் பெலோஸ் குறிப்பிட்டார்.

''இந்தப் பிரச்சனை முழுவதுமே தொழிற்கட்டமைப்பு சம்மந்தபட்டது. இந்தப் பிரச்சனையை கவனிப்பதற்கும், பழுதுபார்ப்பதற்கும் இந்த ஒன்றரை ஆண்டுகளில் பெருமளவில் தலையீடு எதுவுமில்லை'' என்று பொது மற்றும் ஆரம்ப சுகாதார டைரக்டர் ஜெனரல் டாக்டர் நிமா ஹமீத் தெரிவித்தார். எப்படி சதர் நகர மக்கள் புதுவகை Hose பைப்புக்கள் மூலம் தண்ணீர் எடுக்க வேண்டியிருக்கிறது என்பதை அந்த அதிகாரி நியூயார்க் டைம்ஸில் தெரிவித்தார். ''தங்களது வீடுகளுக்குள் தண்ணீரை இழுப்பதற்காக சிறிய மின்சார மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இதே சமுதாயங்களில் பழுதடைந்த குழாய்களில் இருந்து சாக்கடை பூமிக்குள் ஓடுகிறது, அல்லது தெருக்களில் ஒடிக்கொண்டிருக்கிறது. இப்படி ஓடுகின்ற சாக்கடை வீடுகளில் வெடிப்புக்கள், சந்து பொந்துகளில் சேர்ந்துவிடுகிறது. சாக்கடை ஈர்க்கப்பட்டு குடி தண்ணீரோடு கலந்துவிடுவதால் மஞ்சள் காமாலை நோய்கிருமி பரவிவிடுகிறது'' என்று டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இத்தகைய வாழும் நிலைகளால் நோய்கள் தொற்றிக்கொள்ளும்போது அத்தகைய மக்களுக்கு மிக அபூர்வமாகத்தான் சிகிச்சை கிடைக்கிறது. ஈராக் முழுவதிலும், நிரந்தரமான மருந்து பற்றாக்குறை நிலவுகிறது. அடிப்படை மயக்க மருந்து, நோய்தடுப்பு மருந்துகள் கிடைப்பதில்லை. மருத்துவர்கள் மகத்தான நிர்பந்தங்களுக்கிடையில் பணியாற்றி வருகின்றனர். மாதத்திற்கு அவர்களுக்கு 150- டாலர்கள்தான் வழங்கப்படுகின்றன. சிகிச்சை கிடைக்குமிடங்களில்கூட சாதாரண மக்கள் நினைதுக்கூட பார்க்கமுடியாத அளவிற்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. ''வெளியிலிருந்து மருந்துவாங்கிக்கொண்டு வருமாறு டாக்டர்கள் கூறினர், அவர்கள் 5- ஊசிமருந்துகளை வாங்கிவருமாறு சொன்னார்கள், அதில் ஒரு மருந்தைக்கூட வாங்குவதற்கு என்னிடம் பணம் இல்லை, என்ன செய்யவேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. எனது தந்தை மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார். இதுதான் அவர்கள் எங்களுக்கு உறுதிமொழி அளித்த புதிய ஈராக்கா?'' என்று அந்தப் பெண் கேட்டார்.

ஈராக்கில் திடீரென்று மரணவிகிதம் அதிகரித்திருக்கிறது, ஆண்கள் மற்றும் பெண்கள் வாழும் வயது 60-கீழ் குறைந்துவிட்டது. குறிப்பாக குழந்தைகள் போரினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்- 5 வயதிற்கும் குறைந்த 27-சதவீத குழந்தைகள் தற்போது நிரந்தரமாக சத்தூட்டம், இல்லாமல் விடப்பட்டிருக்கின்றனர். வேறு எந்த நாட்டையும் விட ஈராக்கில் 1990-க்கு பின் குழந்தைகள் இறப்புவிகிதம் அதிகரித்துள்ளது. 1999-க்கும், 2002-க்கும் இடைப்பட்டக்காலத்தில் ஓரளவிற்கு முன்னேற்றம் காணப்பட்டது ஆனால் ஆக்கிரமிப்பினால் பின்னடைவு ஏற்பட்டது. ஈராக் குழந்தைகளிடம் மன அழுத்தம் இதர உளவியல் நோய்களும் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன.

கல்விக்கட்டுக்கோப்பு சிதைந்துவிட்டதால், இளைஞர்கள் மிக மோசமாக பாதிக்கப் பட்டிருக்கின்றனர். பழுதுபார்க்கப்பட்ட கல்வி நிலையங்கள் பலவற்றில் இன்னும் தண்ணீர் மற்றும் மின்சாரம் வழங்கப்படவில்லை. பாக்தாத்தில் பாட நூல்கள் பற்றாக்குறை கடுமையாக உள்ளது, 10-மாணவர்களுக்கு ஒரு பாடநூல்தான் கிடைக்கிறது. அமெரிக்கப்படைகளுக்கும் எதிர்ப்பு போராளிகளுக்குமிடையே கொரில்லாப்போர் நடந்து வருவதால் தங்களது குழந்தைகளின் பாதுக்புக்கருதி பள்ளிகளுக்கு அனுப்பவதில்லை. எனவே பள்ளிகளில் பிள்ளைகள் வரத்து கடுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டது. அக்டோபர் 2-ல் புதிய பள்ளிப்பருவம் துவங்கியது. பாக்தாத்தில் ஒரு பள்ளியில் பதிவு செய்யப்பட்டுள்ள 1500- மாணர்களில் 700-க்கும் றைந்தவர்கள்தான் பள்ளிக்கு வந்தனர். குறிப்பாக மகளிர் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது. பெண்கல்வி மிகக்கடுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டதை ஐ.நா கோடிட்டுக்காட்டியுள்ளது.

சமூக சீரழிவின் ஒவ்வொரு அம்சமும் பொருளாதாரம் சிதைந்துவிட்டதால் அதிகரித்துள்ளது ஈராக்கியர்களிலேயே மிகச்சிறிய பிரிவினர் முக்கியமாக கிரிமினல் குற்றவாளிகள், அவர்களோடு ஒத்துழைப்பவர்கள்தான் இந்த ஆக்கிரமிப்பினால் பயனடைந்துள்ளனர். பெரும்பாலான மக்களை இந்தப்போர் மேலும் வறுமையில் மூழ்கடித்துவிட்டது. 2003-ல் 27-சதவீத மக்கள் ஒரு நாளைக்கு 2-டாலருக்கும் குறைந்த வருவாயில் காலந்தள்ளியதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. மிக அண்மைக்கால புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு எந்த முன்னேற்றமும் ஏற்படும் என்று நம்புவதற்கு இடமில்லை.

செப்டம்பர் 29-ல் ஐ.நா உணவுத்திட்ட WFP ஆய்வு வெளியிடப்பட்டது. ஈராக் மக்களில் கால்வாசிப்பேர் அல்லது 6.5- மில்லியன் மக்கள் பெருமளவில் உணவுபங்கீட்டை நம்பி இருக்கின்றனர். இந்த உணவுபங்கீட்டு முறை கைவிடப்படுமானால் மேலும் 3.6- மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலைக்கு ஆளாவார்கள். பல மக்கள் தங்களது உணவுப்பங்கீட்டு அட்டைகள், மருந்து, உடைகள் ஆகிய ஆகிய இதர அவசியத்தேவைகளுக்காக விற்றுவருகின்றனர். ''ஈராக்கின் பொதுவிநியோக முறையிலிருந்து இந்த மக்கள் ரேஷன் பெற்றுக்கொண்டிருந்தாலும், இன்னும் வாழ்க்கையை சமாளிப்பதற்கு திணறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பொதுவாக உணவு கிடைத்தாலும் பரம ஏழைக்குடும்பங்கள் வெளிச்சந்தையிலிருந்து உணவு வாங்க முடியாத நிலையில் உள்ளனர்'' என்று WFP ஈராக் இயக்குநர் Torben Due தெரிவித்தார்.

வேலையில்லாத் திண்டாட்டம் 30- முதல் 70-சதவீதமாக உள்ளது என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. வேலை கிடைப்பவர்கள் கூட தற்காலிகமாக குறைந்த ஊதியப்பணியில்தான் உள்ளனர். அமெரிக்க அதிகாரிகள் வரவேற்று ஊக்குவித்து வரும் ஈராக் அரசாங்கத் தொகுதி தொழில்கள் சிதைவினால் தொழில்முறைசார்ந்த மிகப்பெருமளவில் பயிற்சி பெற்றபல்வேறு தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு குடியேறிவிட்டனர். புஷ் நிர்வாகத்தைப் பொறுத்தவரை ''சுதந்திர சந்தையை'' நிலைநாட்டுவதுதான் அதிக கவலையே தவிர கண்ணியமான பணிகளை ஈராக் மக்களுக்குத்தந்து போதுமான அளவிற்கு பொதுசேவைகளை நிலைநாட்டுவதல்ல.

ஈராக்கில் இன்றைய நிலவரம் புஷ் நிர்வாகம் எந்த அளவிற்கு சாதாரண மக்களை துச்சமாக மதிக்கிறது என்பதை கோடிட்டுக்காட்டுகிறது. தேவைக்கும் குறைந்த திட்டமிடல் அல்லது திறமை குறைவான நிர்வாகம் அடிப்படை பிரச்சனை அல்ல, மாறாக நாட்டின் எண்ணெய் வளத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற வாஷிங்டனின் பேராசையினால் உந்தப்பட்டு தொடுக்கப்பட்ட போரின் தவிர்க்க முடியாத விளைவுதான் ஈராக் மக்கள் மீது பயன்படுத்தப்பட்டு வரும் ஒடுக்குமுறையாகும். படுமோசமான வாழும் நிலையினால் ஆக்கிரமிப்பிற்கு எதிரான உணர்வுகள் கிளறிவிடப்படுகின்றன. அதற்கு பதில் நடவடிக்கையாக அமெரிக்கா மிக அதிகமான இரத்தக்களறி ஒடுக்குமுறையை கடைபிடித்துவருகிறது.

Top of page